Followers

Search Here...

Thursday, 13 February 2020

மஹாலக்ஷ்மி யாரிடம் தங்குவாள்? யாரை விட்டு விலகுவாள்? தெரிந்து கொள்வோமே...

ஸ்ரீ கிருஷ்ணர், துவாரகை என்ற ஆச்சரியமான நகரத்தை உருவாக்கி, ராஜ்யம் செய்து கொண்டிருந்தார்.
சத்யபாமாவுக்கு, அவள் அரண்மனையில் செல்வங்கள் கொட்டி இருந்தாலும், 'போதவில்லையே!' என்று எப்பொழுதும் குறைப்பட்டு கொண்டாள்.
"இன்னும் கொஞ்சம் செல்வம் சேர்ந்தால் நன்றாக இருக்குமே!!" என்று கூட தோன்றியது.




சாஷாத் நாராயணனின் அவதாரமான கிருஷ்ணனுக்கு மனைவியாக இருந்தும், 
பெரிய அரண்மனையில் இருந்தும், 
'சத்யபாமா' இப்படி குறைபட்டு கொண்டாள்.
மஹாலக்ஷ்மியே ருக்மிணி தேவியாக அவதரித்து இருந்தும்,
'ருக்மிணி அனுக்கிரகம் தனக்கு வேண்டாம்' என்று நினைத்தாள்.

'ருக்மிணியின் அரண்மனையில் செல்வங்கள் நிறைந்து இருப்பது போல, தன்னிடம் இல்லையே!!'
என்று அசூயைபட்டாள் சத்யபாமா.
ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து, "மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டாள்.

சத்யபாமாவிடம் கிருஷ்ணரும்,
"சரி, அப்படியென்றால் மஹாலக்ஷ்மியை ஸ்தோத்திரம் செய்து அவள் கடாக்ஷம் பெறுவோம்"
என்று, பரப்ரம்மமாகிய ஸ்ரீ கிருஷ்ணரே, க்ஷீராப்தியில் இருக்கும் மஹாலக்ஷ்மியை ஸ்தோத்திரம் செய்து தரிசனம் தர பிரார்த்தித்தார்.

கிருஷ்ண பரமாத்மா கூப்பிட்டும், மஹாலக்ஷ்மி வராமல் இருப்பாளா?...

தாமரை பூவின் மேல் அமர்ந்தபடி, இரண்டு கைகளிலும் தாமரை மலரை வைத்துக்கொண்டு,
மஹாலட்சுமி காட்சி தந்தாள்.
சாமானிய மனிதனை போல லட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி விட்டு, கிருஷ்ண பரமாத்மா, ச்ரத்தையுடன் இரு கைகளையும் கூப்பி வணங்கி நிற்க... சத்யபாமாவும் ஸ்ரீகிருஷ்ணருடன் சேர்ந்து வணங்கினாள்.

ஸ்ரீ கிருஷ்ணர் நாராயணனின் அவதாரம் தானே!!
அவரின் பத்னி தானே மஹாலக்ஷ்மி!!
மஹாலக்ஷ்மிக்கு ஸ்ரீ கிருஷ்ணர் நாராயணன் என்று தெரியாதா?
கிருஷ்ண பரமாத்மா, எதற்கு வணங்கினார்?... என்ற கேள்வி நமக்கு எழலாம்.

ஒரு சமயம் அர்ஜுனனை வைகுண்டமே அழைத்து கொண்டு சென்று விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.
பரவாசுதேவன் நாராயணனை, ஸ்ரீ கிருஷ்ணர் நமஸ்கரித்தார்.
ஏன் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னையே நமஸ்கரித்தார்? 
ஸ்ரீ கிருஷ்ணர் நமஸ்கரிக்கவில்லையென்றால், தனக்கு பின்னால் நிற்கும் அர்ஜுனன் மரம் போல நிற்பான் என்று, தானே நமஸ்கரிக்க, அர்ஜுனனும் பரவாசுதேவனை நமஸ்கரித்தான்.

ராமபிரான், தன் அர்ச்ச அவதாரமான ஸ்ரீரங்கநாதரை வணங்கியதும் இதன் காரணமே...

நாம் அவரிடம் எப்படி பழக வேண்டும்? என்பதையும் தானே காட்டுகிறார்.

அதுபோல, இப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணர், மஹாலக்ஷ்மியை பார்த்து கை குவித்துக்கொண்டு,
"அம்மா.... நீ ஒரு இடத்தில் ஸ்திரமாக இருக்கமாட்டேன் என்று இருக்கிறாயே!!
திடீரென ஒருவனை கோடீஸ்வரனாக செய்துவிடுகிறாய்..
திடீரென ஒருவனை தரித்திரனாக செய்துவிடுகிறாய்...
ஒரு இடத்தில் இல்லாமல் ஓடி ஓடி போய் விடுகிறாயே!!
ஒரே இடத்தில் ஸ்திரமாக நீ இருக்க கூடாதா?"
என்று கிருஷ்ண பரமாத்மா கேட்க,

உடனே ஸ்ரீதேவி சொல்கிறாள்,
"நான் ஒருவனிடம் வருவதற்கு காரணம் இருக்கிறது..
எதற்காக நான் ஒருவனிடம் வருகிறேன் என்று சொல்கிறேன்..

நான் வந்தால், 'தான தர்மம் செய்வானே!' என்பதற்காக வருகிறேன்.
இப்படி ஆசையோடு நான் வந்த பிறகு, இவன் என்ன செய்கிறான் தெரியுமா?




முதலிலாவது கொஞ்சம் தான தர்மம் செய்து கொண்டிருந்தவன்,
நான் செல்வங்களை அள்ளி கொடுத்த பின், கொஞ்சம் செய்து கொண்டிருந்த தான தர்மத்தையும் விட்டு விடுகிறான்.
அது மட்டுமல்ல, 
என் கடாக்ஷத்தால் கிடைக்கும் செல்வங்களை கொண்டு,
எவர்கள்  'சூதாடு'கிறார்களோ!
எவர்கள்  'மது பானம்' அருந்துகிறார்களோ!
எவர்கள்  'ஜீவ ஹிம்சை' செய்கிறார்களோ!
இவர்கள் வீட்டில் நான் தங்குவதில் எனக்கு பிரியமில்லை.
மேலும்,
எவன் 'வேசி வீட்டுக்கு' செல்கிறானோ!
எவர்கள் 'பொய் சாட்சி' சொல்கிறார்களோ!
எவர்கள் 'பேராசையுடன்' இருக்கிறார்களோ!
எவர்கள் 'லோபியாக' (கஞ்சன்) இருக்கிறார்களோ!
இவர்களிடத்தில் நான் இருப்பதை விரும்ப மாட்டேன்.




மேலும்,
எவர்கள் பிறருடைய சொத்தை அபகரிக்க நீதிமன்றத்திலேயே நேரத்தை செலவழிக்கிறார்களோ!
எவர்கள் மற்றவர்களை பார்த்து அசூயை (பொறாமை) படுகிறார்களோ!
அவர்களிடத்திலும் நான் இருப்பதை விரும்பாமல் சென்று விடுவேன்.
மேலும்,
எவர்கள் பிறருடைய ஏழ்மையை பார்த்து சந்தோஷப்படுகிறார்களோ!
எவர்கள் தன்னிடம் உள்ள செல்வங்களை நினைத்து கர்வப்பட்டு கொள்கிறார்களோ!
எவர்கள் தற்புகழ்ச்சியே செய்து கொள்கிறார்களோ!
அவர்களிடத்தில் இருந்தும் நான் சென்று விடுகிறேன்.

தானம் வாங்க தகுதி இல்லாதவனுக்கு யார் அள்ளி கொடுகிறார்களோ!
யாருக்கு தானம் கொடுப்பது நியாயமோ அவர்களுக்கு தானம் கொடுக்காமல் யார் தள்ளுகிறார்களோ!
சாதுக்கள், மகாத்மாக்கள் விஷயத்தில் யார் தர்மம் செய்யவில்லையோ!
தெய்வங்கள் விஷயத்தில் யார் தர்மம் செய்யவில்லையோ!
தர்மங்கள் விஷயத்தில் யார் தர்மம் செய்யவில்லையோ!
அவர்கள் வீட்டில் நான் தங்குவதில்லை.

மேலும்,
எவர்கள் சோம்பேறிகளோ!
எவர்கள் நாதீகர்களோ!
எவர்கள் தன் ஆசாரத்தை, தர்மத்தை செய்வதில்லையோ!
அவர்கள் வீட்டில் நான் தங்குவதில்லை.
மேலும்,
விசேஷமாக சொல்கிறேன்...
யார் விஷ்ணுவிடம் குறிப்பாக த்வேஷம் காட்டுகிறார்களோ!
யார் விஷ்ணுவின் அடியார்களை கிண்டல், கேலி என்று த்வேஷிக்கிறார்களோ!
அவர்களை விட்டு உடனேயே விலகி விடுவேன்."
என்று மஹாலக்ஷ்மி சொன்னாள்.
செல்வமே இல்லாமல், ஏழையாக இருந்தும், மஹாலக்ஷ்மி சாநித்யம் இருந்ததால், குசேலன் ஏழ்மை நிலையிலும் ஒரு குறையும் தோன்றாமல், நிம்மதியாக இருந்தார்.




சத்யபாமா "ருக்மிணி கடாக்ஷம் வேண்டாம்' என்று நினைத்ததால், 
செல்வம் குவிந்து கிடந்தும், ஸ்ரீ கிருஷ்ணரே கணவனாக அமைந்தும், போதவில்லையே என்ற மனகுறையுடன் இருந்தாள் சத்யபாமா.
இது மஹாபாரதத்தில் நடந்த சம்பவம்.

சத்யபாமா "ருக்மிணி கடாக்ஷம் வேண்டாம்' என்று நினைத்ததால், விஷ்ணுவின் பக்தையை வெறுத்ததால், சத்யபாமாவுக்கே இப்படி மனக்குறை ஏற்பட்டது என்று கவனிக்க வேண்டும்.

மஹாலக்ஷ்மி தாயார் இப்படி சொல்ல, ஸ்ரீ கிருஷ்ணர் பேசினார்..
"அம்மா... நீ இப்பொழுது என்ன காரணத்தால் நீ ஒருவன் வீட்டில் நிலையாக இருப்பதில்லை என்று சொன்னாய்.
இனி,
நீ எந்த வீட்டில் ஸ்திரமாக இருப்பாய் என்றும் சொல்ல வேண்டும்"
என்று கிருஷ்ண பரமாத்மா கேட்க,
மஹாலக்ஷ்மி சொல்ல ஆரம்பித்தாள்...
"எவனிடத்தில் நன்னடத்தை இருக்கிறதோ!
எந்த வீட்டில் தான தர்மங்கள் நடக்கிறதோ!
எந்த வீட்டில் சாதுக்களுக்கு மரியாதை இருக்கிறதோ!
அந்த வீட்டில் நான் சாஸ்வதமாக இருப்பேன்.

எந்த வீடு பசுஞ்சாணியால் மெழுக்கப்பட்டு, வாசலில் அலங்காரமாக கோலங்கள் போட்டு, சுத்தமாக இருக்கிறதோ!
எந்த வீட்டில் துளசி செடியோ, வில்வ மரமோ இருக்கிறதோ!
அந்த வீட்டில் நான் இருக்க ஆசைப்படுவேன்.

எந்த வீட்டில் சுமங்கலியான பெண்கள் நிறைய இருக்கிறார்களோ!
அந்த சுமங்கலியாக இருக்கும் பெண்கள், எந்த வீட்டில் மாலை வேளையில் முத்து போல அழகான தீபம் ஏற்றி வைக்கிறார்களோ!
அந்த வீட்டில் நான் இருப்பேன்.
எந்த வீட்டில் பகவானை ஆராதனை செய்யும் மணி ஓசை தினமும் கேட்கிறதோ!
எந்த வீட்டில் என் பதியான விஷ்ணுவுக்கு பூஜை தினமும் நடக்கிறதோ!
எந்த வீட்டில் வைஷ்ணவனுக்கு அன்ன தானம் நடக்கிறதோ!
அந்த வீட்டில் நான் இருப்பேன்.
எந்த வீட்டில் வேத மந்திரங்கள் சொல்லப்படுகிறதோ!
எந்த வீட்டில் ஸ்தோத்திர பாடங்கள் நடக்கிறதோ!
எந்த வீட்டில் அங்கு உள்ளவர்கள் யாரிடத்திலும் விநயமாகவும், அன்புடனும் பழகுகிறார்களோ!
அந்த வீட்டில் நான் இருப்பேன்.

எந்த வீட்டில் இருப்பவர்கள் மற்ற சொந்தங்களை பார்த்து பொறாமை, அசூயை அடையாமல் இருக்கிறார்களோ!
எந்த வீட்டில் ஒருவருக்கு ஒருவர் ப்ரேமையுடன் (அன்புடன்) இருக்கிறார்களோ!
அந்த வீட்டில் நான் இருப்பேன்.

எந்த வீட்டில், ஒரே கூச்சலும், சண்டையும், துக்கமும், அழுகையும், ஒப்பாரியும் இருக்கிறதோ!
அந்த வீட்டில் எனக்கு இருக்க பிடிக்காது. உடனேயே சென்று விடுவேன்.

சுருக்கமாக சொல்கிறேன்...
எந்த வீட்டில் தினசரி விஷ்ணு பூஜை நடக்கிறதோ!
அந்த வீட்டில் நான் மிகவும் சமதோஷமாக வாசம் செய்கிறேன்"
என்று மஹாலக்ஷ்மி சொல்லி அணுகரஹம் செய்து விட்டு மறைந்தாள்.




"மஹாலக்ஷ்மி யாரிடம் தங்குவாள்? யாரை விட்டு விலகுவாள்?"
என்பதை, மஹாலக்ஷ்மியின் திருவாயாலேயே, கிருஷ்ணரும், சத்யபாமாவும் கேட்ட பின்,
ஸ்ரீ கிருஷ்ணர், சத்யபாமாவை பார்த்து,
"கேட்டாயா சத்யபாமா! மஹாலக்ஷ்மி சொன்னது போல நாமும் நடக்க வேண்டும்.
அப்பொழுது தான் நமக்கும் நிறைந்த செல்வம் உண்டாகும்"
என்று உபதேசித்தார்.

சத்யபாமாவுக்கு, ருக்மிணி தேவி குறையே இல்லாமல் இருப்பதற்கு காரணம் புரிந்தது.
ருக்மிணியிடம் இருந்த பொறாமையை விலக்கி கொண்டாள், சத்யபாமா.


Wednesday, 5 February 2020

பாசுரம் (அர்த்தம்) - தாயே தந்தை என்றும் - திருமங்கையாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருப்பதியில் ஸ்ரீனிவாசபெருமாள், 'நமக்காகவே எப்பொழுதும் நின்று கொண்டே காத்துக்கொண்டிருக்க',

நாமோ, "நேரம் கிடைக்கவில்லை, தலை போகிற காரியம் இருக்கிறது" என்று திருமலை போகாமல் இருப்பதற்கு, காரணங்கள் சொல்லி கொண்டு இருக்கிறோம்.




திருமலையப்பனிடம் கொஞ்சம் தலையை காண்பித்து விட்டு வந்தாலும், தலை போகும் காரியத்தையும் சாதிக்க வைத்துவிடுவாரே!!
தலையும் போகாமலும் காப்பாற்றி விடுவாரே பெருமாள் !!

அல்ப பலன் முதல் மோக்ஷம் வரை தர, சங்கல்பம் செய்து, அர்ச்ச அவதாரம் எடுத்த திருமலையப்பனை காண்பதை விட, வேறு என்ன சாதனை நாம் செய்ய வேண்டும்?

"வாழ்நாள் முழுவதும், ஏதேதோ காரணத்தை சொல்லிக்கொண்டே, கோவிலுக்கு போகாமல், பெருமாளை சரணம் அடையாமல் இருக்கும் நம்மை போன்றவர்கள்,
எதிர்பாராவிதமாக ஒரு நாள் திருமலையப்பனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டால், பெருமாளிடம் என்ன சொல்லி சரணாகதி செய்ய வேண்டும்?"
என்று திருமங்கையாழ்வாரே, பாசுரம் மூலமாக, நமக்கு சொல்லி தருகிறார்.

தாயே தந்தை என்றும்,
தாரமே, கிளை மக்கள் என்றும்,
நோயே பட்டு ஒழிந்தேன் !!
நுன்னை காண்பது ஓர் ஆசையினால்,
வேயேய் பூம்பொழில் சூழ்,
விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்து அடைந்தேன்,
நல்கி ஆள் என்னை கொண்டருளே !!
-- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)

நாம் பிறந்தநாளாக, நம்மை காண்பதற்கு, திருமலையில் அரச்சா திருமேனியுடன் ஸ்ரீனிவாச பெருமாள் காத்து கொண்டு இருக்கிறார்.

பல காரணங்கள் சொல்லி, வராமல் இருக்கும் நாம், ஒருநாள் திடீரென்று திருமலைக்கு வருமாறு நேர்ந்து விட,
பக்தன், 'ஏன் இத்தனை தாமதமாக வந்தேன் என்று பெருமாளிடம் பேசுவது போல' இந்த பாசுரத்தை திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

பெருமாள், பக்தனிடம்,
"நல்ல இளமையான பால்ய வயதிலேயே, உடம்பில் தெம்பு இருக்கும் போதே, திருமலை ஏறி வந்து இருக்கலாமே?"
என்று கேட்க,
பக்தன் உண்மையை சொன்னான்..
'பாசம் என்ற நோய் (மாயை) தன்னை தொற்றியதால், பெருமாளை பார்க்க இத்தனை வருடங்கள் ஆகி விட்டது' என்று சொல்லும்படியாக பாசுரம் அமைந்துள்ளது.

பெருமாளை பார்த்து,
"வாஸ்தவம் தான். இளமையான வயதிலேயே வந்திருக்கலாம்!!.
ஆனால்,
 எனக்கு வயதான அப்பா அம்மா.
நான் தான் அவர்களை பார்த்து கொள்ள வேண்டும்.
என் மனைவி ஒழுங்காக பார்த்து கொள்ள மாட்டாள்.




ஒரு சமயம், என் அப்பாவுக்கு உடம்பு முடியாமல் போய் விடும்.
ஒரு சமயம், என் அம்மாவுக்கு உடம்பு முடியாமல் போய் விடும்.
இப்படியே அந்த சமயங்களில், 
நான் திருப்பதி வர முடியாமல் போய் விட்டது.
பிறகு, 
பெற்றோர்கள் பரமபதம் அடைந்த பின், திருப்பதி கிளம்பலாம் என்றால், 'குடும்ப பொறுப்பு' வந்துவிட்டது.
குழந்தைகள், அம்மாவிடம் கூட போகாமல், "அப்பா.. அப்பா..." என்று எப்பொழுதும் என்னையே சுற்றி சுற்றி வருகின்றனர்.




நான் குழந்தைகளை பார்த்து கொள்ளவில்லையென்றால், என் மனைவி 'உங்களை கட்டிக்கொண்டு இப்படி மாரடிக்கிறேனே' என்று என்னை திட்டுகிறாள்.
இப்படிப்பட்ட நிலையில் நான் எப்படி திருப்பதி வருவது?

உங்களுக்கு நேரம் ஒதுக்கி உங்களை தரிசிக்க முடியாமல், எனக்கு ஏதாவது வியாதி வந்துகொண்டே இருக்கிறது.

அப்படி என்ன வியாதி உனக்கு என்று கேட்கிறீர்களா?? 
பிறந்தது முதல், 
அப்பா என்ற ஒரு வியாதி, 
அம்மா என்ற ஒரு வியாதி, 
மனைவி என்ற ஒரு வியாதி, 
பிள்ளைகள் என்று ஒரு வியாதி.
இப்படி பலவிதமான 'பாசம் என்ற வியாதிகளை' காரணம் சொல்லி சொல்லி, இப்பொழுது எனக்கு வயதும் ஆகிவிட்டது.
'திருமலை போகவேண்டும்' என்ற நினைவு மட்டும் எப்பொழுதும் இருக்கிறது.

'கடமையை செய்து முடிக்க வேண்டும்.
கடமையை செய்து முடிக்க வேண்டும்'
என்று சொல்லிக்கொண்டே இவ்வளவு நாள் காரணங்கள் சொல்லி உங்களிடமிருந்து தப்பித்தேன்.

உண்மையில் கடமை காரணமா?
என் பக்தி குறைவு காரணமா?
ஸ்ரீனிவாசா, உங்களுக்கு உண்மை தெரியுமே!!

'கடமை கடமை' என்ற போர்வை போர்த்திக்கொண்டு நான் உங்களை இது நாள் வரை ஏமாற்றினேன்.

இன்று, 
எல்லாவற்றையும் எப்படியோ விட்டு விட்டு, உங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசையால், ஒரு வழியாக ஓடி வந்து விட்டேன்.
இங்கு வந்து, இந்த திருமலையை பார்த்தால், 
எத்தனை குளிர்ச்சியாக இருக்கிறது?
ஏழு மலைகளும் எத்தனை அழகாக இருக்கிறது?
இத்தனை ஆச்சர்யமான திருமலையில், ஒரு நாய் புகுந்து விட்டதே?

'நாய் புகுந்து விட்டதே!! சீ சீ.. ஓடு' 
என்று சொல்லி துரத்தி விடாமல், அந்த நாய்க்கும் கொஞ்சம் எச்சில் இலையை போடுவது போல, எப்படியோ திருமலைக்குள் புகுந்து விட்ட என்னையும், ஸ்ரீனிவாச பெருமாளே!! நீங்கள் அழைத்து அருள் செய்ய வேண்டும்."
என்கிறார் திருமங்கையாழ்வார்.

இதையே
திருவேங்கடவா
நாயேன் வந்து அடைந்தேன்,
நல்கி ஆள் என்னை கொண்டருளே !!
என்கிறார்.

பிறந்தது முதல் பெருமாள் பக்கமே போகாமல்,
தாய், தந்தை, மனைவி, மக்கள் என்று பலரிடம் பாசம் வைத்து,
ஒரு நாள் கூட,
நாராயணன் மீது பாசம் வைக்காமல்,
பெருமாள் கோவிலில் கூட கால் வைக்காமல் இருந்து விட்டு,
திடீரென்று ஒரு நாள்,
திருமலைக்கு வந்து 
"நாராயணா அருள் செய்ய வேண்டும் (நல்கி ஆள் என்னை கொண்டருளே)" என்று கேட்டால்,
"இது என்ன நியாயம்?!!
கொஞ்சம் கூட மதிக்காத இவனுக்கு ஏன் பெருமாள் அருள் செய்ய வேண்டும்?"




பெரியவாச்சான் பிள்ளை போன்ற ஆச்சாரியர்கள் இதற்கு விளக்கம் கொடுக்கும் போது,
"நமக்கு தாய் தந்தை மனைவி மக்கள் மேல் பாசம் என்ற நோய் உள்ளது போல,
பெருமாளுக்கு தன் அம்சமான 'ஜீவனிடம் அளவுகடந்த பாசம்' என்ற நோய் எப்பொழுதும் உண்டு.
பரமபதத்தை விட்டு, நாராயணன் திருமலைக்கு வந்து நிற்பதே, நம்மை எல்லாம் எப்படியாவது திருமலைக்கு வரச்செய்து, தன் தரிசனத்தை கொடுத்து, மோக்ஷம்  கொடுத்து அருள வேண்டும் என்பதற்காக தான்.

ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தை காட்டி, பல காரணங்கள் சொல்லி பெருமாளிடம் வராத ஜீவனையும், பெருமாள் உகப்புடன் ஏற்று அருள் செய்வார் என்று காட்டுகிறார்.

திருமலைக்கு சென்று பெருமாளை தரிசிப்போம்.


Tuesday, 4 February 2020

பாசுரம் (அர்த்தம்) - சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் - பெரியாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். வைஷ்ணவன் ஏன் சிவன் கோவிலுக்கு வருவதில்லை? தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பாசுரம்

சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய்
உலகு தன்னை வாழநின்ற நம்பீ! 
தாமோதரா! சதிரா!
என்னையும், என் உடைமையையும்
உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் 
இனி என்திருக்குறிப்பே
-- திருமொழி (பெரியாழ்வார்)

பெரியாழ்வார், திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளை பார்த்து பேசுகிறார்.




"உலகமெல்லாம் வாழும்படியாக, திருமலையில் வீற்று இருக்கும் திருவேங்கடமுடையானே !!
கற்புள்ள (பதிவ்ரதை) ஒரு பெண், 'தன் கணவனே கண் கண்ட தெய்வம்' என்று இருப்பாள், 'மனதாலும் வேறு ஒரு ஆணை ஏறெடுத்தும் பார்க்காமல்' இருப்பாள்.
அது மட்டுமில்லாது,
பிற ஆண்கள் தன்னை பார்க்க நேர்ந்தாலும், 'இவள் வேறொருவனுக்கு சொந்தமானவள்' என்று உணர, கழுத்தில் தாலியும், காலில் மெட்டியும், நெற்றி உச்சியில் குங்குமமும் அணிந்து கொள்கிறாள்.
ஒரு பதிவிரதையான பெண், எப்படி தன்னையும் (மனது), தன் உடைமையையும் (உடல்), தன் கணவனுக்கே!! என்று ஒழுக்கத்துடன் இருக்கிறாளோ,
அது போல,
பெருமாளே!! ப்ரம்ம தேவன் முதல் என் வரை அனைவரையும் படைத்தவர் தாங்கள்.
நான் உங்களுடைய சம்பந்தம் உடையவன். உங்களை சேர்ந்தவன். 
எப்படி ஒரு பதிவ்ரதை, 
மனதாலும் கணவனையே நினைத்து கொண்டிருப்பாளோ, 
மற்றவர்கள் பார்த்தாலும் இவள் மணமானவள் என்று அறிந்து கொள்ள தன் கணவன் கட்டிய தாலியை அணிந்து கொண்டே இருப்பாளோ,
அது போல,
நானும் என் மனதில் உங்களுக்கு மட்டுமே இடம் கொடுத்து,
உங்கள் சக்கரத்தையும், சங்கையும் என் உடைமையான இந்த உடலில் முத்திரை இட்டு கொண்டு, 
உங்கள் பாதுகையையே என் நெற்றி திலகமாக இட்டு கொண்டு, 
துளசி மாலை அணிந்து கொண்டு,
'ஒரு ஸதி (மனைவி), தன் பதி தன்னை காப்பார்' என்ற இருப்பது போல, 'ஸதியான நான், நாயகனான உங்கள் அருளையே நோக்கி, உங்களுக்கே ஆட்பட்டு இருப்பேன்... இது என் முடிவே" என்கிறார்.

இதையே,
என்னையும் என் உடைமையையும்
உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனி என்திருக்குறிப்பே
என்கிறார் பெரியாழ்வார்.

இங்கு,
'என்னை' என்று தன் ஆத்மாவை குறிப்பிடுகிறார்.
'உடைமை' என்று தன் உடலை குறிப்பிடுகிறார்.

'ஒரு பதிவ்ரதையின் (கற்புக்கரசி) நிலையே வைஷ்ணவனின் நிலையும்' என்று காட்டுகிறார் பெரியாழ்வார்.

மனதால் கூட அந்நிய புருஷனை நினைக்க மாட்டாள் - ஒரு பதிவிரதை.

பாரத மண்ணில் மட்டுமே அத்தகைய பதிவ்ரதைகள் இன்றும் உள்ளனர்.







ஒரு பதிவ்ரதையை பார்த்து,
"இது என்ன அநியாயம்... உன் புருஷனை மட்டுமே நினைக்கிறாய்!!
உன் புருஷனை போலவே பக்கத்து வீட்டு புருஷனும் நல்லவன் தான்.. 
ஏன் நீ அந்த புருஷனை பார்க்காமல் இருக்கிறாய்?"
என்று ஒழுக்கமுள்ள ஒருவன் கேட்பானா??...
'ஒழுக்ககேட்டின்' மொத்த உருவமான ராவணன்,
பிராம்மண ரிஷி குலத்தில் பிறந்தவனாக இருந்தும்,
ஒழுக்கமே உருவான தன் தம்பி விபீஷணன் இருந்தும்,
பேடித்தனமாக ராமபிரானை அப்புறப்படுத்தி விட்டு,
சீதையை தூக்கி வந்து விட்டு,
"ராமனை நினைத்து கொண்டு இருக்கிறாயே!! 
அவனை விட பராக்ரமும், குபேர செல்வமும், அழகும் கொண்ட என்னை ஏற்றுக்கொள்" என்று வெட்கமில்லாமல் கேட்டான்.
மஹா மட்டமான ராவணனை, ஏறெடுத்தும் பார்க்க விரும்பாத சீதை, "விலங்குக்கு சமமானமான இவன் புல் திங்கட்டும்" என்று அவன் எதிரில் ஒரு புல்லை பிடுங்கி போட்டாள் என்று பார்க்கிறோம்.

பக்தியில் பதிவ்ரதைகளின் தர்மமே தலை சிறந்தது.
அதுவே வைஷ்ணவ சித்தாந்தம் கூட.

ஏன் ஒரு தீவிர வைஷ்ணவன் சிவன் கோவிலுக்கு வருவதில்லை? 
சிவன் மட்டும் தெய்வமில்லையா? சிவ த்வேஷமா?
என்று சில அறிவு குறைந்தவர்கள் கேட்பார்கள்.

'வீண் பிடிவாதத்தால் சிவன் கோவிலுக்கு வர மாட்டேன்' என்று வைஷ்ணவன் சொல்வதில்லை.
ஒரு வைஷ்ணவன் 'வேறு கோவிக்குக்கு போகாமல் இருப்பதற்கு த்வேஷம் காரணமில்லை'.
ஒரு வைஷ்ணவன் 'வேறு கோவிக்குக்கு போகாமல் இருப்பதற்கு பதிவ்ரதா தர்மமே காரணம்'.

ஒரு பதிவிரதை வேறு ஒரு புருஷனை பார்க்க கூசுவது போல,
வைஷ்ணவன் இன்னொரு தெய்வத்தை பற்றி பேச்சு காதில் விழும்போது கூசி நிற்கிறான்.
இதற்கு, த்வேஷம் காரணமில்லை. பதிவ்ரதா தர்மமே காரணம்

ஒரு பதிவிரதையை பார்த்து, இன்னொரு புருஷனை பற்றி என்ன புகழ்ந்து சொன்னாலும் எடுபடாதது போல, 
உண்மையான வைஷ்ணவன் வேறு தெய்வங்களை மனதாலும் நினைப்பதில்லை. 

ஒரு பதிவ்ரதைக்கு எப்படி கணவன் மட்டுமே உலகமோ,
அது போல,
வைஷ்ணவனுக்கு பெருமாள் மட்டுமே உலகம். 

ஒரு பதிவ்ரதை, எப்படி மற்ற புருஷர்களை தன் கணவன் இடத்தில் வைத்து பார்க்க ஆசைப்படமாட்டாளோ, அது போல, 
வைஷ்ணவன், பெருமாளை தன் மனதில் இருந்து இறக்கி விட்டு, வேறு ஒரு தெய்வத்தை ஏற்று கொள்ள மாட்டான்.

பதிவிரதைகள், 'மற்ற புருஷர்களை பற்றி தவறாகவோ, நல்லதாகவோ கூட பேச தயங்குவார்கள். தனக்கு சம்பந்தமில்லாத விஷயம்' 
என்று தன் கணவனை பற்றியே நினைத்து கொண்டிருப்பார்கள்.
அது போல,
வைஷ்ணவனும், மற்ற தெய்வங்களை பற்றி உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசுவது கிடையாது.

ராவணனை போன்ற ஒழுக்ககேடானவன், ராமபிரான் இடத்தில் தன்னை ஸ்தாபிக்க நினைத்தால், ஒப்பீடு செய்ய துணிந்தால்,
இதை கேட்க முடியாத ஆத்திரத்தில், சில சமயங்களில் பதிவிரதைகளும் பிற புருஷனை தாழ்த்தி பேசும்படியாக நேருகிறது.
அது போல,
வைஷ்ணவனிடம் சென்று பிற தெய்வத்தை பற்றி ஒப்பீடு செய்யும் போது, கூசி நிற்கும் வைஷ்ணவன், 'தன் பெருமாளோடு வேறு ஒரு தெய்வத்தை பேசுகிறானே!' என்று ஆத்திரப்பட்டு, தான் பெருமாளை சேர்ந்தவன் என்று பாடம் புகட்ட, அந்நிய தெய்வத்தை குறை சொல்லும்படியாக நேர்ந்து விடுகிறது.

அவரவர் இஷ்ட தெய்வங்களே, அவரவர்களுக்கு நாயகன்.
அதுவே உண்மையான பக்தி.
அதுவே உண்மையான திட பக்தி.




பத்வரதா தர்மமான வைஷ்ணவ தர்மத்தில், 'ஹனுமானுக்கு' உயர்ந்த ஸ்தானம் கொடுக்கப்பட்டு உள்ளது..

வைஷ்ணவர்கள், பெருமாளை வணங்குகிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.
சைவர்கள், சிவபெருமானை வணங்குகிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.
ஹனுமானுடைய பக்தி பதிவிரதை தர்மத்தில் மிக சிறந்தது.
பரமபதத்தை விட்டு, நாராயணன் ராமபிரானாக பூலோகத்தில் அவதரித்தார்.
அதே நாராயணன், ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்த போதும், 
ஹனுமான் 'ஸ்ரீ கிருஷ்ணரை ராமபிரான் இடத்தில்  ஏற்றுக்கொள்ளவில்லை'.
அது மட்டுமா!!

ராமபிரானே "நான் சாக்ஷாத் நாராயணன். வைகுண்டம் புறப்பட போகிறேன்.. வருகிறாயா?" என்று கேட்டதற்கு,
"நாராயணனே இவருக்கு அந்நிய புருஷனாக தோன்ற, நான் ராமபிரானின் தியானத்திலேயே பூலோகத்தில் இருக்கிறேன். வைகுண்டம் கூட வேண்டாம்" என்று சொல்லிவிட்டார்.

கணவன்,
வீட்டில் ஒரு விதமான ஆடை அணிந்து கொண்டும்,
வேலைக்கு செல்லும் போது அதற்கான ஆடைகள் அணிந்து கொண்டும் இருப்பான்.
எந்த ரூபத்தில் இருந்தாலும், மனைவிக்கு அவன் கணவன் தானே!!..
ஒரு வைஷ்ணவன் இப்படி தான் பெருமாளை பார்க்கிறான்..

தன் பெருமாள் தான் , ஸ்ரீரங்கத்தில் ஒரு ரூபத்தில், திருப்பதியில் ஒரு ரூபத்தில், தன் வீட்டில் சின்ன விக்கிரக ரூபத்தில், நாராயணனே ராமராக, கிருஷ்ணராக, நரசிம்மமாக, பரசுராமராக இருக்கிறார்
என்று அனைத்து ரூபத்தையும் சேவிக்கிறான் வைஷ்ணவன்.

ஆஞ்சநேயர் 'வைஷ்ணவர்களில் உத்தம வைஷ்ணவர்'.

சில மனைவிகள், ஆபிஸ்க்கு ஏற்ற அலங்காரத்தில் கணவன் இருந்தால், அவன் பக்கமே திரும்ப மாட்டாள். அவர் ஏதோ வேலையாக இருக்கிறார் என்று இருந்து விடுவாள்.
வீட்டில் சாதாரண உடையுடன் இருக்கும் போது மட்டுமே உரிமையுடன் பேசுவாள்.
அது போல,
'ராமபிரான் தான் கண்ணன், அவரே தான் நாராயணன்' என்று தெரிந்தாலும், ஹனுமான், பெருமாள்  ராமபிரானாக வந்தால் தான் ஏற்று கொள்வார்.

இந்த 'திட பக்தியின் காரணமாகவே, வானர ஜாதியில் பிறந்தாலும், வைஷ்ணவர்கள் இவரை ஜாதி பார்க்காமல் வைஷ்ணவர்களில் உத்தமர்' என்று கொண்டாடுகின்றனர்.

ஒரு வைஷ்ணவன்,
உடைமையான தன் உடலில் கோபியும், தோள்களில் சங்கு சக்கர முத்திரை இட்டு கொள்வதற்கு காரணம், இந்த பதிவ்ரதா தர்மமே!!

உடலில் வைஷ்ணவன் போல திருமண் காப்பு இட்டு கொண்டு, 
மனதில் வேறு தெய்வ சிந்தனை இருப்பது என்பது,
தாலி கட்டி கொண்டு, மனதில் வேறு ஒரு புருஷனை நினைப்பது எப்படியோ அது போன்றாகும்..

ஆதலால் தான், பெரியாழ்வார்
"எனக்கும்" "என் உடைமைக்கும்" என்று மனதையும், உடலையும் சொல்லி, 'இந்த இரண்டிலுமே பெருமாளின் சக்கரத்தை ஒற்றிக்கொண்டு இருக்கிறேன்' என்று திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளிடம் ஆத்ம சமர்ப்பணம் பூரணமாக செய்கிறார்.

பெருமாளின் சொத்தான நாம்,
ஜென்ம ஜென்மங்களாக பிறந்து இறந்து கொண்டு இருந்தாலும்,
இன்றுவரை மோக்ஷம் அடைய வேண்டும் என்ற நினைவே இல்லாமல்,
பெருமாளிடம் பக்தியே செய்யாமல்,
அவர் பக்கமே திரும்பி பார்க்காமல்,
எங்கோ பரதேசி போல அலைந்து கொண்டிருந்த போது,
ஒரு நாள், நம்மை எதிர்பாராவிதமாக திருமலைக்கு வர செய்து, தடுத்து நிறுத்தி, தன் திருவடியை காட்டி,
"நீ என்னை சேர்ந்தவன். எனக்கு ஆட்பட்டவன் நீ"
என்று "தான் இருப்பதை" புரிய வைத்து, தன்  சாமர்த்தியத்தால் எம்பெருமான் நம்மை பிடித்து விடுகிறார்.
பெருமாளின் இந்த சாமர்த்தியத்தை எண்ணி "சதிரா" என்று அழைக்கிறார், பெரியாழ்வார்.

"சதிரா" என்றால் சாமர்த்தியசாலி என்று பொருள்.

"தாமோதரா! சதிரா!"
என்று பெருமாளை அழைக்கிறார்.

நலகூபுர, மணிக்ரீவ என்ற தேவர்கள் சாபத்தால் மரமாக போய் விட்டார்கள்.
தான் தேவன் என்பதை மறந்து, மரமாகவே இருந்து கொண்டிருந்தார்கள்.
'தான் யார்?' என்று தெரியாமலேயே, இவர்கள் இருந்து கொண்டு இருக்க,

இவர்களை, உரலை இழுப்பது போல,
தாமோதர கண்ணன், தன் சாமர்த்தியத்தால் மரத்தை சாய்க்க,
"தேவர்கள் வெளிப்பட்டு, தான் யார் என்ற உண்மையை உணர்ந்து", தேவலோகம் சென்றனர்.

இப்படி 'தான் யார்?' என்று தெரியாமலேயே,
யார் யாரையோ எஜமானன் என்றும்,
யார் யாரையோ தெய்வம் என்றும்,
நம்பி அலைந்து கொண்டிருக்கும் நம்மையும்,
அந்த தாமோதரன் தன் சாமர்த்தியத்தால் வளைத்து பிடித்து, தன் அருகில் வைத்து கொண்டு, மோக்ஷ வரை தந்து விடுவார் என்பதால்,
"தாமோதரா சதிரா" என்று திருமலையப்பனை அழைக்கிறார்.


Monday, 3 February 2020

பாசுரம் (அர்த்தம்) - எம்மனா! என் குல தெய்வமே! என்னுடைய நாயகனே! - பெரியாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பாசுரம் (அர்த்தம்) : திருப்பதி பெருமாள்

எம்மனா!!
என் குல தெய்வமே!!
என்னுடைய நாயகனே!!
நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை
இவ்வுலகினில் யார் பெறுவார்?
-- திருமொழி (பெரியாழ்வார்)




பெரியாழ்வார், திருமலையில் உள்ள ஸ்ரீனிவாசபெருமாளை 3 அழகான பெயர்கள் சொல்லி கூப்பிடுகிறார்...
முதலில்,
  • "எம்மனா!!" என்று கூப்பிடுகிறார்.
பிறகு,
  • "என் குலதெய்வமே!!" என்று கூப்பிடுகிறார்.
பிறகு
  • "என்னுடைய நாயகனே!!" என்று உரிமையுடன் கூப்பிடுகிறார்.

இந்த 3 நாமங்களின் உள் அர்த்தம் தெரியாமல் போனாலும், இந்த சொற்களே இனிக்கிறது...

அர்த்தம் தெரிந்து கொண்டால், தினமும் இந்த 3 நாமத்தை திரும்ப திரும்ப சொல்ல ஆசை வந்து விடும் நமக்கு.
'பெரியவாச்சான் பிள்ளை (உபேயம், உபாயம், பர தெய்வமாக),
ஆளவந்தார் (ஞான விரோதி, ஆஸ்ரய விரோதி, மோக்ஷ விரோதி), 
உடையவர் ஸ்ரீராமானுஜர் (தேக அபிமானம் கழிந்து, அன்ய ஷேசத்துவம் கழிந்து, ஸ்வஸ் ஸ்தாதந்திரியமும் கழிந்து)
போன்ற ஆச்சார்யர்கள் 'இந்த மூன்று சொற்களின் (எம்மனா, என் குலதெய்வமே, என்னுடைய நாயகனே) அர்த்தத்தை பலவாறு ரசிக்கிறார்கள்' என்றும் பார்க்கிறோம்.

மரணத்தை ஒருவன் பார்த்தாலேயே "உடல் வேறு ஆத்மா வேறு" என்ற ஞானம் (அறிவு) கொஞ்சம் பகுத்தறிவு உள்ளவனுக்கும் வந்து விடும்.
ஆதலால்,
"உடல் வேறு ஆத்மா வேறு" என்று நினைப்பது மட்டுமே உண்மையான ஞானம் என்று நினைக்கக்கூடாது.. அது மட்டுமே ஞானம் இல்லை.

"நான் ஜீவன் (ஆத்மா)! நான் பகவானுடைய தாஸன்!"
என்று நினைப்பதே 'உண்மையான ஞானம்' என்கிறார்கள் நம் ஆச்சார்யர்கள்.

"உடல் நானில்லை, ஜீவனே நான். ஜீவனாகிய நான் ஒரு தனித்த பொருள்" என்று பகவானை விலக்கி விட்டு,
"தான் ஆத்மா, தான் சுதந்திரமானவன்" என்று நினைத்து கொள்வதே உண்மையான ஞானத்துக்கு விரோதம் தான்.
இப்படி நினைப்பதே "ஞான விரோதம்" என்கிறார்கள் நம் ஆச்சாரியர்கள். (அத்வைதம்)

(அத்வைதம் என்ன சொல்கிறது? விஷிஸ்டாத்வைதம் என்ன சொல்கிறது?) மேலும் அறிய இங்கே படிக்கவும்.

"எம்மனா" (எம்பெருமான்) என்ற சொல்லுக்கு
"உடல் நானில்லை, ஜீவனே (ஆத்மா) நான். ஜீவனாகிய நான் ஒரு தனித்த பொருள் இல்லை. நான் சுதந்திரமானவன் இல்லை. நான் பகவானின் தாஸன்"
என்று அர்த்தம் காட்டுகிறார்கள், நம் ஆச்சாரியர்கள். (விசேஷ அத்வைதம்)

ஆதலால்,
"எம்மனா" (எம்பெருமான்) என்று சொல்லும் போதே,
நமக்கு "ஞான விரோதமான அத்வைத புத்தி ஒழிந்து விடும்" என்கிறார்.




அது போல,
"என் குலதெய்வமே" என்று சொல்லும்போதே,
நமக்கு "ஆஸ்ரய விரோதமான புத்தி ஒழிந்து விடும். பெருமாளை ஆஸ்ரயிக்க வேண்டும் என்ற புத்தி ஏற்படும்" என்கிறார்.
அது போல,
"என்னுடைய நாயகனே" என்று சொல்லும்போதே,
நமக்கு "மோக்ஷ விரோதமான புத்தி ஒழிந்து விடும். வெறும் சுதந்திரம் (விடுதலை) மட்டும் பெறாமல், வைகுண்டம் (வீடு) என்ற நம் சொந்த வீட்டுக்கு (மோக்ஷம்) போக வேண்டும் என்ற புத்தி ஏற்படும்" என்கிறார்.




மேலும்
நாம் இந்த பிறவியில் அடைய வேண்டியது (உபேயம்) எது?
(What should we achieve?)
என்ற கேள்விக்கு,

"எம்மனா" (எம்பெருமான்) என்று சொல் மூலம்,
"நாம் அடைய வேண்டியவர் (உபேயம்), நம்முடைய பகவான் நாராயணனே"
என்ற தெளிவு ஏற்படுத்துகிறார், பெரியாழ்வார்.
"எம்மனா" என்ற சொல்லுக்கு "நான் அவருடையவன். அவருடைய சொத்து" என்று பொருள்.

நாம் அடைய வேண்டியது ("உபேயம்") யார் என்று தெரிந்து விட்டது.சரி...
ஆனால்,
பெருமாளை அடைய வேண்டிய வழி (உபாயம்) என்ன?
என்ற அடுத்த கேள்விக்கு,

"என் குலதெய்வமே" என்ற சொல் மூலம்,
"நாம் பெருமாளை அடைய வேண்டிய வழி (உபாயம்), அவரையே நம் குல தெய்வமாக கொள்வது தான்"
என்ற தெளிவை நமக்கு ஏற்படுத்துகிறார் பெரியாழ்வார்.

"பெருமாளை குலதெய்வமாக நீ ஆக்கிக்கொண்டால், 
நீ மட்டுமல்ல, உன் பரம்பரையில் பிறந்த அனைவருமே, 
அவர்கள் பிறவியில் அடைய வேண்டியதான (உபேயம்) பெருமாளை அடைந்து விடுவார்கள்"
என்கிறார் பெரியாழ்வார்.
"குலதெய்வமாக வெங்கடேசபெருமாளே அமைந்தவர்களுக்கு, வைகுண்டம் போகும் வழியையும் காட்டி, அடையும் லட்சியமாகவும் பெருமாளே இருந்து, மோக்ஷம் வரை துணையாகவே இருக்கிறார்" என்கிறார் பெரியாழ்வார்.

"யாருக்கு குலதெய்வமாக வெங்கடேசபெருமாள் அமைந்தாரோ!, அவர்களே பாக்கியவான்" என்கிறார் பெரியாழ்வார்.
மஹாபாரதத்தில் திரௌபதி "கோவிந்தா..." என்று தன் குலதெய்வமாக பெருமாளை வரித்து கொண்டதற்காக, அவளுடைய பேரன் பரிக்ஷித் கர்ப்பத்திலேயே அழிய வேண்டும் என்று அஸ்வத்தாமன் நினைத்தும், திரௌபதி என்ற பக்தைக்காக அவள் குலத்தை அழிய விடாமல் ரக்ஷித்தார் பெருமாள்.

குலதெய்வமாக இருந்து, நாமும் நம் பரம்பரையும், மோக்ஷம் போகும் வரை, நம் கூட இருந்தே ரக்ஷிக்கிறார்.

"என்னுடைய நாயகனே" என்ற சொல் மூலம், "பரதெய்வம் நாராயணனே"
என்ற தெளிவு ஏற்படுத்துகிறார் பெரியாழ்வார்.

உலகத்தில்,
சிலருக்கு இஷ்ட தெய்வமாக (உபேயமாக) "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார்.
அவர்கள் பெருமாளை "எம்மனா" (எம்பெருமான்) என்கிறார்கள்.

இன்னும் சிலருக்கு குல தெய்வமாக (உபாயமாக) "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார். 
அவர்கள் பெருமாளை "என் குல தெய்வமே" என்கிறார்கள்.

சிலருக்கு பர தெய்வமாக "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார். அவர்கள் பெருமாளை  "என்னுடைய நாயகனே" என்கிறார்கள்.

"தனக்கோ உபேயமாகவும் (இஷ்டதெய்வம்), உபாயமாகவும் (குலதெய்வம்), பரதெய்வமாகவும், 
மூன்று சம்பந்தத்துடன் பெருமாள் இருக்கிறாரே!"
என்ற பெருமிதமடைந்து பாடுகிறார் பெரியாழ்வார்,




பரதெய்வமாக இருக்கும் நாராயணனே, தனக்கு குலதெய்வமாகவும் இருக்கிறார். தனக்கு இஷ்டதெய்வமாகவும் இருக்கிறார்.
பெருமாள், 
என்னையும், என் பரம்பரையையும் ரக்ஷிக்கிறார் என்கிற போது,
என்னை பற்றியும் எனக்கு கவலையில்லாமல்
என் குடும்பத்தை பற்றியும் கவலையில்லாமல்
என்னை உங்கள் திருவடியை ஆச்ரயித்து கொண்டு இருக்குமாறு செய்து கொண்டு, நீங்கள் என்னை சுகமாக வைத்துக்கொண்டு, ரக்ஷிக்கிறீர்களே !!
உம்மிடத்தில் எனக்கு பரிபூரணமான ப்ரேமை உண்டாகும் படி செய்து, எப்பொழுதும் உங்கள் தொண்டுக்காகவே என்னை ஆக்கி,
என்னை வெளி உலக காரியங்களில் இங்கும் அங்கும் போக விடாமல் தடுத்து,
நீங்கள் என்னை பரிபாலிக்கும் அழகும்,
உங்கள் கருணைக்கு பாத்திரமாக இருக்கும் என் நிலையும்,
எனக்கு கிடைத்த நன்மையை (பாக்கியத்தை) போல, இவ்வுலகினில் யார் பெறுவார்? 
என்று என்கிறார் பெரியாழ்வார்.
அதையே,
நின்னுள் உள்ளேனாய்ப் பெற்ற நன்மை
இவ்வுலகினில் யார் பெறுவார்?
என்று பெருமிதம் அடைகிறார்.

நாமும் வெங்கடேச பெருமாளை, பரதெய்வமாகவும், குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் கொள்வோம்.
சர்வ மங்களத்தையும் திருப்பதி பெருமாளே, நமக்கும் நம் பரம்பரைக்கும் அருள்வார். 


குருவே துணை !



Saturday, 1 February 2020

பாசுரம் (அர்த்தம்) - திருவுக்கும் திருவாகிய செல்வா - திருமங்கை ஆழ்வார் தேவாதிராஜ பெருமாளை (தேரழுந்தூர்) பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருமங்கையாழ்வார் தேர்அழுந்தூரில் உள்ள தேவாதிராஜ பெருமாளை மங்களாசாசனம் செய்து, தன்னை காப்பாற்றுமாறு சரணடைகிறார்.

திருமங்கை ஆழ்வார் "அர்ச்சா திருமேனியையே" பெருமாளின் அவதாரமாக அனுபவிப்பவர்.





அற்புதமான பாசுரம்..
அனைவரும் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டிய பாசுரம். .

திருவுக்கும் திருவாகிய செல்வா!!
தெய்வத்துக்கு அரசே!!
செய்ய கண்ணா!!
உருவச் செஞ்சுடராழி வல்லானே!!
உலகுண்டவொரு வா!!
திருமார்பா!!
ஒருவற்காற்றி உய்யும் வகையென்றால்
உடன் நின்று ஐவர் 
என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட!!
அஞ்சி!! நின்னடைந்தேன்!!
அழுந்தூர் மேல்திசை நின்ற
அம்மானே!!
-- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)

பாசுரத்தின் அர்த்தம் :

மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் யாருக்கு கிடைக்கிறதோ!! அவர்களுக்கு குறைவில்லாத செல்வம் கிடைக்கிறது.
எல்லோருக்கும் மங்களம் கொடுப்பவள் மஹாலக்ஷ்மி.

செல்வம் மட்டுமல்ல,
உலகில் நாம் காணும் அழகும், பொலிவும், அனைத்து மங்களமும் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷமே..

நமக்கு சர்வ மங்களத்தை தரும், திருவாகிய மஹாலக்ஷ்மி தனக்கு மங்களம் கிடைக்க, திருவாகிய நாராயணனை சரணடைந்து அவருக்கு பாத சேவை செய்து கொண்டிருக்கிறாள்.
திருவாகிய மஹாலக்ஷ்மியே தனக்கு வேண்டிய செல்வத்தை, அழகை, தன் பதியான திருவாகிய திருமாலிடம் பெறுகிறாளே !! பெருமாளே "செல்வமாக" இருக்கிறாரே!!
என்று பெருமாளின் பெருமையை நினைத்து திருமங்கையாழ்வார்
'திருவுக்கும் திருவாகிய செல்வா' என்கிறார்.
அழகுக்கெல்லாம் அழகர்,
பொலிவுக்கெல்லாம் பொலிவு உடையவர்,
செல்வதுக்கெல்லாம் செல்வமாக இருப்பவர்,
சர்வ மங்களத்துக்கும் மங்களத்தை தருபவர்,
மகாலட்சுமிக்கு பதியாக இருப்பவர்,
தானே பெரும் நிதியாக (செல்வமாக) இருப்பவர், 
எம்பெருமான் நாராயணன்.

அப்படிப்பட்ட பெருமைமிகுந்த பெருமாள் தன் எதிரே நின்று, திரு அழுந்தூர் என்ற திவ்ய தேசத்தில் தேவாதிதேவனாக காட்சி கொடுக்க, 'எனக்கு நிதியே' என்று கொஞ்சுவதை போல, "திருவுக்கும் திருவாகிய செல்வா' என்கிறார் திருமங்கையாழ்வார்.

மேலும்,
"தெய்வத்துக்கு அரசே" என்ற பதத்தை கொண்டு, தெய்வத்துக்கும் தெய்வமாக (தேவாதிராஜன்) பெருமாள் இருக்கிறார் என்று பூரிக்கிறார்.

தேவர்களுக்கு இந்திரன் (தலைவன்) யார்?
இந்திரன் (தலைவன்/அரசன்) என்ற சொல் யாரை குறிக்கிறது?
என்ற கேள்வியை 'இந்திர ப்ராணாதி கரணம்' என்ற வேதாந்தத்தில் ஒரு கேள்வியாக கேட்டு, அதற்கு பதில் சொல்கிறது.







"இந்திரன் யார்?" என்று இப்படி கேள்வி கேட்டு, இந்திரன் என்ற பெயரில் பலர் உள்ளார்களே!!.. என்று கேள்வி கேட்டு, முடிவும் சொல்கிறது...

மனிதர்களுக்கு (நரன்) தலைவனை "நரேந்திரன்" என்று சொல்வார்கள்.
தேவர்களுக்கு தலைவனை "தேவேந்திரன்" என்று சொல்வார்கள்.
சுரர்களுக்கு தலைவனை "சுரேந்திரன்' என்று சொல்வார்கள்.
மிருகங்களுக்கு தலைவனை "ம்ருகேந்திரன்" என்று சொல்வார்கள்.
யார் அனைவருக்கும் தலைவனோ அவரையே "இந்திரன்" என்று சொல்வார்கள்.

'இவர் இவருக்கு தலைவன், இவருக்கு இவர் தலைவனில்லை' என்று இல்லாமல்,
'நரன், தேவன்...' என்று விசேஷம் இல்லாமல், அனைவருக்கும் தலைவனாக இருக்கும் நாராயணனே 'இந்திரன்' என்று முடிக்கிறது வேதாந்தம்.
உப தெய்வங்களான இந்திரன், ப்ரம்மா, ருத்ரன், மனு போன்றவர்களுக்கெல்லாம் "அரசர்" என்ற பெருமையுடைய பரம்பொருள் அல்லவா, என் கண் முன்னே இருக்கிறார்!!
என்றதும்,
திரு அழுந்தூர் தேவாதிராஜ பெருமாளை பார்த்து
"தெய்வத்துக்கு அரசே"
என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.

தேவேந்திரனுக்கு மட்டும் அரசனல்ல (தேவராஜன் மட்டுமல்ல),
உலகில் தெய்வங்கள் என்று இருக்கும் அனைவருக்கும் அரசனாக இருக்கிறார் என்பதால்,
இந்த பெருமாளுக்கு "தேவாதிராஜன்" என்று பெயர் கொடுத்தார்.

மேலும்,
செய்ய கண்ணா!
உருவச் செஞ்சுடராழி வல்லானே!
உலகுண்ட ஒருவா!
திருமார்பா!
என்றெல்லாம் உங்களை எப்பொழுதும் பாடி மகிழ ஆசைப்படுகிறேன்!!
ஆனாலும், 
'என்னை பக்தி செய்ய விடாமல், என் கூடவே பிறந்த 5 சத்ருக்கள் உங்களிடம் நேரம் செலவழிக்கவே விடாமல் தடுக்கிறார்களே!!'
என்று புகார் சொல்கிறார்.

ருக்மிணி ஸ்ரீ கிருஷ்ணரை மணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாள்.
ஆனால்,
இவளுடன் கூட பிறந்த 5 சகோதரர்களான 'ருக்மி, ருக்மரதன், ருக்மபாஹு, ருக்மகேசன், ருக்மமாலி' ஆகிய ஐவருமே ருக்மிணியை, ஸ்ரீ கிருஷ்ணரிடம் சேர விடாமல் தடுத்தார்கள்.

5 பேரையும் அடக்கி, ருக்மிணி ஆசைப்பட்டது போலவே, வந்து மணந்து கொண்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.
இந்த
அது போல,
'தன்னுடன் பிறந்த 'கண், காது, மூக்கு, நாக்கு, தோல்' என்ற இந்த 5 சத்ருக்கள், பெருமாளிடம் நேரம் செலவிடவே அனுமதிப்பதில்லை' 
என்று தன் குறையை பெருமாளிடம் சொல்லி, 
'இந்த சத்ருக்களிடமிருந்து மீட்டு, தன்னிடம் சேர்த்து கொள்ள வேண்டும்' என்று ப்ரார்திக்கிறார்.

பெருமாளை கொஞ்சம் பார்ப்போம் என்று கோவில் சந்நிதி முன் நின்றால் கூட, 'கண்' பெருமாளை பார்க்காமல் அங்குமிங்கும் பார்க்கிறது...
சரி, ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி உபன்யாசம் கேட்கலாம் என்று உட்கார்ந்தால், 'காது' உபன்யாசத்தை கேட்க மறுத்து, ஏதேதோ கேட்க ஆசைப்படுகிறது...

"இப்படி என்னுடன் பிறந்த இந்த ஐவருமே, ருக்மிணி பிராட்டிக்கு அமைந்த சகோதரர்களை போல, கிருஷ்ண பக்தி செய்ய தடுக்கிறார்களே!!
இவர்கள் கொஞ்சம் கூட ஓயாமல் (no rest/ஒழியாது) என்னை பக்தி செய்ய விடாமல் தடுக்கிறார்களே!!"
என்று தன் உடன் பிறந்த இந்த ஐவரை பற்றி புகார் சொல்வது போல,
"உடன் நின்று ஐவர்
என்னுள் புகுந்து ஒழியாது" என்கிறார்.

"இப்படி என்னை பெருமாளிடம் பக்தி செய்ய விடாமல், இந்த கண்ணும், காதும், நாக்கும், மூக்கும், தோலும் என்னை
அருவித் தின்றிட, இவர்களிடமிருந்து என்னை நான் விடுவிக்க சக்தி இல்லாமல், உன்னிடம் பக்தி செய்ய முடியாமலேயே இருந்து விடுவேனா!! என்று அஞ்சி,
திருஅழுந்தூர் மேல்திசை நின்ற
அம்மானே (எம்பெருமானே), உன்னிடம் ருக்மிணி பிராட்டி சரண் அடைந்தது போல நின்னடைந்தேன்"
என்று பாடுகிறார் ஆழ்வார்.




உபரிஜரவசு என்ற அரசன் தன் ஆகாய விமானத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது, அவன் ஆகாய தேர், இந்த ஊரில் நின்று போக, அவருடைய தேர் இங்கு அழுந்தியதால், இந்த ஊருக்கு தேர் அழுந்தூர் என்ற பெயர் ஏற்பட்டது..

உபரிஜரவசுவுக்கு, பெருமாள் கண்ணனாக நின்று கொண்டு, ஒரு கையால் பசுவை (ஆ) கட்டிக்கொண்டு (மருவி) காட்சி கொடுத்ததால், இந்த பெருமாளுக்கு ஆமருவியப்பன் என்று பெயர்.
மயிலாடுதுறை அடுத்து உள்ளது தேரழுந்தூர் என்ற இந்த திவ்யதேசம்.
மூலவர் பெயர் : தேவாதிராஜன்
உத்சவர் : ஆமருவியப்பன்