Followers

Search Here...

Friday, 3 January 2020

பாசுரம் (அர்த்தம்) - முழுசி வண்டாடிய தண் துழாயின் - திருமங்கை ஆழ்வார். காஞ்சியில் அஷ்டபுஜ பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அனைத்து படைப்புக்கும், உயிர்களுக்கும் ஆதிமூலமாக (root) இருக்கும் ஸ்ரீமந் நாராயணன் கஜேந்திரனை காக்க, எட்டு கைகளுடன், எட்டு ஆயுதங்கள் ஏந்தி வந்தார் காஞ்சிபுரத்தில்.




கஜேந்திரனை முதலையிடமிருந்து காப்பாற்ற ஒரு சக்கரமே போதும்!!
இருந்தாலும் 8 கைகளுடன் வந்து தரிசனம் கொடுத்தாரே பெருமாள்?!
உண்மையில், பெருமாள், தன் அஷ்ட மஹிஷிகளுடன் கஜேந்திரனுக்கு  தரிசனம் தரவே 8 கைகளுடன் வந்தாராம்.
"அர்ச்ச அவதாரமே பெருமாள். அர்ச்ச அவதாரமே போதும்" என்று இருந்தவர் திருமங்கை ஆழ்வார்.

அவர் காஞ்சிபுரம் வந்து அஷ்ட புஜனாய் இருக்கும் பெருமாளை கண்டதும், தானே "பரகால நாயகி" என்ற பெண்ணாகி விட்டார்.

பெருமாள் தன் 8 மஹிஷிகளுடன்,   தன் எதிரே தரிசனம் கொடுக்க,
"அடடா.. யார் இவர்? இவர் போல நாம் யாரையுமே பார்த்ததில்லையே!! ஏற்கனவே 8 மஹிஷிகளுடன் இருக்கும் இந்த பெருமாள், மங்கையான தன்னையும் கரம் பிடிக்க பார்க்கிறாரே!!"
என்று தானும் ஒரு மங்கையாகவே ஆகி, பெருமாளை பார்த்து சொக்கி போய்விட்டார்.
"பெருமாள் எப்படி அவருக்கு காட்சி கொடுக்கிறார்?" என்ற தன் அனுபவத்தை அப்படியே நமக்கும் பாசுரமாக கொடுக்கிறார்.

பாசுரம் மிகவும் அழகானது..




முழுசி வண்டாடிய தண் துழாயின்
மொய்மலர் கண்ணியும்,
மேனி அஞ்சாந்து இழுசிய கோலம் இருந்தவாறும்
எங்ஙனஞ் சொல்லுகேன்!! ஓவிநல்லார் எழுதிய தாமரை என்ன கண்ணும்
ஏந்தி எழில் ஆகமும்
தோளும் வாயும்,
அழகிய தாம் இவர் யார் கொல் என்ன
அட்ட புயகரத் தேன் என்றாரே

பெருமாள் எப்படி அவருக்கு காட்சி கொடுக்கிறார்? என்ற தன் அனுபவத்தை அப்படியே நமக்கும் கொடுக்கிறார்.

பெருமாள் கழுத்தில் துளசி மாலை இருப்பதை, முதலில் கவனித்த பரகால நாயகியாக இருக்கும் திருமங்கை ஆழ்வார், "தண் துழாய்" என்று வர்ணிக்கிறார்.

பெருமாள் அணிந்திருந்த துளசி மாலையிலிருந்து, நறுமணம் எங்கும் பரவி இருந்ததாம்.
பெருமாள் கழுத்தில் இருந்ததாலேயே துளசி துளியும் வாடாமல், பச்சைபசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியை தந்ததால், "துழாய்" என்று மட்டும் சொல்லாமல் "தண் துழாய்" என்ற பதத்தை சொல்லி, "நல்ல தன்மையுடன் கூடிய துளசி மாலையை பெருமாள் அணிந்து இருக்கிறார்" என்று கவனிக்கிறார் ஆழ்வார்.

துளசி மாலையுடன்,
5 விதமான பூக்களை கொண்டு, கண்டு கண்டாக கட்டிய (மொய் மலர் கண்ணி) ஒரு அழகான வைஜயந்தி மாலையும் அணிந்து இருந்தாராம் பெருமாள்.
பெருமாள் அணிந்து இருந்த துளசி மாலையின் நறுமணமும், 5 வித பூக்களால் கட்டப்பட்ட வைஜயந்தி மாலையையும் பார்த்து விட்டு, தேன் குடிக்கும் ஆவலில், அந்த பூக்களின் மகரந்தத்தில் வண்டுகள் ரீங்காரமிட்டு ஆடிக்கொண்டு (முழுசி வண்டாடிய) இருப்பதை பார்த்து விட்டாளாம் இந்த பரகால நாயகி.

இந்த மாலையே இந்த நாயகியின் மனதை மயக்க,
அடுத்ததாக பெருமாள் மேனி எப்படி இருக்கிறது? என்று பார்த்தாளாம்.

கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிக்கு செல்லும் போது, சந்தனம் கொடுப்பார்கள்.
பொதுவாக நாம், சந்தனத்தை தொடுவோம், அதிகபட்சம் கொஞ்சம் நெற்றியில், கொஞ்சம் கைகளில், மார்பில் பூசி கொள்வோம்.

அஷ்ட புஜமாக இருக்கும் இந்த பெருமாளும் சந்தனம் பூசி கொண்டு இருந்தாராம்.. ஆனால் நம்மை போன்று, கொஞ்சம் நெற்றியில், கைகளில் மட்டும் பூசிக்கொண்டு இருக்க வில்லையாம்.
அங்கே இங்கே என்று நாகரீகமாக கை, நெற்றி என்று மட்டும் பூசி கொள்ளாமல், அவர் இஷ்டத்துக்கு முதுகு, கழுத்து என்று வேண்டிய இடத்திலெல்லாம் சந்தனத்தை இழுசி கொண்டு, சந்தன குழம்பு போல நறுமணத்துடன் நின்று கொண்டு, காட்சி கொடுக்க,
"மேனி அஞ்சாந்து இழுசிய கோலம் இருந்தவாறும்"
என்று வர்ணிக்கிறார்.




வெளி பொருட்களான துளசி மாலையும், வைஜயந்தி மாலையும், சந்தனமும் எப்படி இருந்தது? என்று கவனித்து வர்ணித்துக்கொண்டு இருந்த பரகால நாயகி, அவர் மேனி எப்படி இருக்கிறது? என்று சற்று கவனிக்க,
"அந்த திவ்யமான பெருமாளின் திருமேனி அழகை எப்படி சொல்வேன்?" என்று வியந்து,
"எங்ஙனஞ் சொல்லுகேன்?" என்ற சொக்கி நிற்கிறார்.

ப்ரம்மாவின் ஸ்ருஷ்டியில் படைக்கப்பட்ட நம்மையே நன்றாக கவனித்தால் ஏதாவது ஒரு சிறு குறையாவது தென்படும்.
முதுகு லேசாக கூனி இருக்கும்,
புருவங்கள் அழகாக இருக்காது,
ஒரு கண் இன்னொரு கண் போலவே இருக்காது.. இப்படி ஏதாவது ஒரு குறை ப்ரம்ம படைப்பில் இருக்குமாம்.

ஆனால், இந்த பரகால மங்கையின் முன் நின்று காட்சி கொடுக்கும் இவரை பார்த்தால், சாமுத்ரிகா லக்ஷணம் தெரிந்த ஒரு நல்ல ஓவியன் (ஓவிநல்லார் எழுதிய) இவ்வளவு நீளம் கை, இவ்வளவு நீளம் கால், விரல் என்று குறையே இல்லாமல் எழுதிய ஓவியம் போல, அமைப்பாக இருந்தாராம்.

சாமுத்ரிகா லக்ஷணம் இவரை பார்த்து தான் எழுதப்பட்டதோ என்று வியக்கும் அளவுக்கு, அப்படி ஒரு அழகுள்ள இவரின் மேனியை பார்த்து,
தாமரை போன்ற கண்களை, ஓவியத்தில் எழுதியது போல,
ஓவியத்தில் எழுதியது போல மார்பும்,
(என்ன கண்ணும், ஏந்தி எழில் ஆகமும், தோளும் வாயும்)
ஓவியத்தில் எழுதியது போல தோளும்,
ஓவியத்தில் எழுதியது போல வாயும், கொண்ட பெருமாளை கண்டு,
"இப்படி அழகாக ஒருத்தர் இருக்க முடியுமா? யார் இவர்?" என்று, பரகால நாயகி சொக்கி நின்று கேட்க,
(அழகிய தாம் இவர் யார் கொல் என்ன)
பெருமாளே தன்னை "அஷ்டபுஜன்" என்று அறிமுகப்படுத்தி கொண்டு,
(அட்ட புயகரத் தேன் என்றாரே) தன்னை ஆட்கொண்டார்
என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

காஞ்சிபுரம் சென்று அஷ்டபுஜ பெருமாளை தரிசிக்கும் போது, திருமங்கை ஆழ்வார் பாடிய இந்த பாசுரத்தை அவசியம் சேவிக்க வேண்டும்.
மேலும் பாசுரம் அர்த்தத்துடன் அறிந்து கொள்ள "கதியேல் இல்லை நின் அருள் அல்லது"




Sunday, 29 December 2019

விசிஷ்டாத்வைதம் என்றால் என்ன? 'நானும், ஈஸ்வரனும் வேறல்ல' என்று சொல்லும் அத்வைத ஞானி ஆதி சங்கரர், பஜகோவிந்தம் இயற்றி, "அந்த பரந்தாமனை ஜீவன் பஜிக்காமல் போனால், மோக்ஷம் உனக்கு கிடைக்காது" என்று அத்வைத விரோதமாக ஏன் சொன்னார்? ஆதி சங்கரர் எண்ணத்தை அறிந்து கொள்ள வேண்டாமா?

விசிஷ்ட (விஷேச) அத்வைதம் என்றால் என்ன?
விசிஷ்டாத்வைதம்அத்வைதம் + அதில் சொல்ல மறந்த ரகசியமான, கூடுதலான ஒரு 'விசேஷ தத்துவத்தை' சேர்த்து சொல்கிறது.

தெரிந்து கொள்வோம், இதன் 'விசேஷ தத்துவ' ரகசியத்தை. 
தெரிந்து கொள்வோம், ஆதி 'சங்கரர்' எண்ணத்தை.
தெரிந்து கொள்வோம், 'விசிஷ்டாத்வைத' தத்துவத்தை



"சரீரமே நான்" என்று நினைப்பது அஞானம் (அறிவீனம்).

இறந்த பின், உடல் மறைந்து விடுவதில்லை. பிரேத உடல் கண்ணனுக்கு எதிரே கிடக்கிறது.
ஆனால் "அதனுள் இதுநாள் வரை பிரவேசித்து இருந்த ஏதோ ஒன்று வெளியேறி விட்டது" என்று மட்டும் நமக்கு புரிகிறது.

உடலில் இதுநாள் வரை பிரவேசித்து இருந்த அந்த ஒன்றுக்கு தான் "ஆத்மா" என்று பெயர் சொல்கிறது வேதம்.
பொதுவாக "ஜீவாத்மா" என்று சொல்வோம்.

"உடல் தான் நான்" என்றால், 'இது நாள் வரை பேசிக்கொண்டு இருந்த இந்த உடல், இறந்தபின் எழுந்திருக்கவில்லையே!!' என்ற கேள்வி எழுகிறது.

கொஞ்சம் புத்தி உள்ளவன் கூட, மரணத்தை பார்த்த பின்,
"சரீரமே நான்" என்று நினைக்க மாட்டான்.

நம் சனாதன வேதம், "சரீரம் நான் அல்ல, உள்ளிருக்கும் ஆத்மாவே நான்" என்று தெளிவை நமக்கு முதலில் கொடுக்கிறது.
மேலும்,
"ஜீவனும், ஈஸ்வரனும் வேறல்ல... உடலுக்குள் இருந்த ஜீவாத்மாவும், எங்கும் நிறைந்த பரமாத்மாவும் உண்மையில் ஒன்று தான்" என்ற அத்வைத சித்தாந்தத்தை 'ஆதி சங்கரர்' உலகுக்கு வேதத்தை கொண்டு வெளிப்படுத்தினார்.

"நான் பகவானுடைய தாஸன்" என்ற ஞானம் இல்லாமல், "நான் ஒரு தனித்த தத்துவம். நான் சுதந்திரமானவன்" என்று நினைப்பதே உண்மையான ஞானத்துக்கு (மெய்அறிவுக்கு) விரோதம் தான்.

"நான் பகவானுடைய தாஸன்" என்று உணர்வதே உண்மையான ஞானம் (அறிவு).

வேதத்தின் அத்வைத சித்தாந்தத்தை உலகத்துக்கு காட்டிய ஆதி சங்கரர்
"நான் சரீரம் அல்ல, ஆத்மாவே நான் என்ற அத்வைத நிலையிலேயே இருந்தார். 
உள்ளிருக்கும் ஜீவாத்மாவும், பரமாத்மாவும் உண்மையில் ஒன்று தான் என்று அத்வைத சித்தாந்தத்தை பல உதாரணங்கள் கொடுத்து விளக்கினார்".


ஆதி சங்கரர், "ஜீவனும், பரமாத்மாவும் ஒன்று தான்" என்று சொன்ன போதிலும், "மோக்ஷம் அடையவேண்டுமானால் பரமாத்மாவாகிய ஸ்ரீ கிருஷ்ணனை பஜிக்க வேண்டும் என்று பஜ கோவிந்தம் பாடினார்" என்று பார்க்கிறோம்.

பஜ கோவிந்தம் 'ஜீவனையும், பரமாத்மாவையும் பிரித்து காட்டுகிறது'. மேலும்,
'ஸ்ரீ கிருஷ்ணரை வணங்காமல், ஜீவனுக்கு மோக்ஷம் (பிறவாநிலை) கிடைக்கபோவதே இல்லை' என்று முடிவாக சொல்கிறார் ஆதி சங்கரர்.
இதை கவனிக்க வேண்டும்.

ஏன் அத்வைத விரோதமாக ஆதி சங்கரர் இப்படி சொன்னார்? என்ற ரகசியத்தை நாம் அறியாதவரை, ஆதி சங்கரர் 'அத்வைதத்தை மட்டும் தான் வெளிப்படுத்தினார்' என்றே சொல்லிக்கொண்டு இருப்போம்.

ஆதி சங்கரர் வேதத்தை முழுதும் அறிந்தவர்.. சிவபெருமான் அவதாரம்.
ஆதி சங்கரர் உண்மையில் அத்வைதம் மட்டுமே சொன்னாரா? இல்லை, வேதத்தின் முழு முடிவான விசிஷ்டாத்வைத மார்க்கத்தை தான் கடைபிடித்தாரா? என்ற ரகசியம், பஜ கோவிந்தம் ஏன் பாடினார்? என்ற ஆராய்ச்சியில் மட்டுமே நமக்கு விளங்கும்.

பஜகோவிந்தம் அர்த்தத்துடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்

ஆதி சங்கரர் இதயத்தை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள்,
"பரமாத்மாவும் தானும் ஒன்று தான்" என்று ஆதி சங்கரர் சொன்ன அத்வைதத்தை மட்டும் எடுத்து கொண்டு, அங்கேயே நின்று விடுகிறார்கள். 
"ஈஸ்வரனையும், ஜீவனையும் பிரித்து, பஜ கோவிந்தம் ஏன் பாடினார்?" என்ற காரணத்தை இவர்கள் அறிந்து கொள்ள போவதில்லை.

இப்படி நின்று விடுவதால், "ஈஸ்வரனும் நானும் வேறல்ல. இரண்டும் ஒன்று தான். நானும் கடவுள் தான்" என்று நினைத்து விடுகிறார்கள்.
"தான் சுதந்திரமான ஆத்மா" என்று நினைத்து விடுகிறார்கள்.

இப்படி அரைகுறையாக ஆதி சங்கரர் சொன்னதை  புரிந்து கொண்டவர்கள்,
"ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று தான்" என்று சொன்ன ஆதி சங்கரர்,
"பின்பு ஏன் பரமாத்மாவையும் ஜீவாத்மாவையும் பிரித்து, த்வைதமாக காட்டி, ஜீவாத்மாவாகிய நாம் மோக்ஷம் அடைய அந்த பரந்தாமனை பஜிக்க வேண்டும் என்று பாடினார்?"
என்பது புரிந்து கொள்ள முடியாத விஷயமாகவே போகிறது.



இது ஆதி சங்கரர் பிழை அல்ல.
அத்வைத நிலையில் உள்ள ஆதிசங்கரர், "எந்த இடத்தில் அத்வைதத்துக்குள் த்வைதம் இருப்பதை கண்டார்?" என்றும் சரியாக புரிந்து கொள்ள முடியாததே காரணம்..

"பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று தான்" என்ற அத்வைத சித்தாந்தம் சத்தியம் என்றாலும்,
"எந்த இடத்தில் அத்வைதத்தில் த்வைதம் தெரிகிறது?" என்ற ரகசியத்தை விளக்கி சொல்ல வந்ததே "விசிஷ்டாத்வைதம்".

விசிஷ்டாத்வைதமே உண்மையில் 'ஆதி சங்கரர்' காட்டினார்.
அவர் "அத்வைதத்தில் விசேஷ தத்துவமாக த்வைதம் இருப்பதை கண்டதால் தான்" பஜ கோவிந்தம் நமக்கு கொடுத்தார்.

இந்த ரகசியம் பலருக்கு புரியாமல் இருந்த சமயத்தில், 
'ஆதி சங்கரர் காட்டிய விசிஷ்டாத்வைத மார்க்கத்தை', 
'வேதத்தின் உண்மையான அபிப்பிராயத்தை', 
பிற்காலத்தில் அவதரித்த "ஸ்ரீ ராமானுஜர்" தன் அவதார காலத்தில் வெளிப்படுத்தினார்.

ரகசிய அர்த்தத்தை அறிந்து கொள்வோம்:

அத்வைதம் "பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று தான்.. இரண்டும் வேறல்ல" என்று காட்ட, சில உதாரணங்களை நமக்கு காட்டி விளக்குகிறது.

1. "கடலும், அலையும் போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று" என்று சொல்கிறது அத்வைதம்.
"கடல் தான் அலையாக தெரிகிறது" என்பதால், 'அலை வேறு, கடல் வேறு' என்று அறிவுள்ளவர்கள் நினைக்க மாட்டார்கள்.
அது போல,
"பரமாத்மாவே தான் ஜீவாத்மாவாக தெரிகிறார்" என்பதால், 'ஜீவன் வேறு, பரமாத்மா வேறு' என்று ஞானிகள் நினைக்கமாட்டார்கள் என்கிறது அத்வைதம்

2. "பிம்பமும் (object) பிரதிபிம்பமும் (mirror image) போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று" என்று சொல்கிறது அத்வைதம்.
ஒரு கண்ணாடி முன் நிற்கும் போது, நம்முடைய பிம்பமே, பிரதிபிம்பமாக தெரிகிறது..
நகர்ந்து விட்டால், பிரதிபிம்பமும் மறைந்து விடும்.

"பிம்பம் தான் பிரதிபிம்பமாக தெரிகிறது" என்பதால், 'பிம்பம் வேறு, பிரதிபிம்பம் வேறு' என்று அறிவுள்ளவர்கள் நினைக்க மாட்டார்கள்.
அது போல,
"பரமாத்மாவே தான் ஜீவாத்மாவாக தெரிகிறார்" என்பதால், 'ஜீவன் வேறு, பரமாத்மா வேறு' என்று ஞானிகள் நினைக்கமாட்டார்கள் என்கிறது அத்வைதம்

3. "அதிஷ்டானமும் (real) ப்ரமையும் (illusion) போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று" என்று சொல்கிறது அத்வைதம்.
கயிறை பார்த்து, சில சமயம் பாம்பு என்று நினைக்கிறோம்.
கவனித்து பார்த்தால்,  அது பாம்பு(illusion) அல்ல, கயிறு (real) தான் என்று அறிந்து கொள்கிறோம்.
"அதிஷ்டானம் தான் ப்ரமையை போல காட்சி கொடுத்தது" என்பதால், 'அதிஷ்டானம் வேறு, ப்ரமை வேறு' என்று அறிவுள்ளவர்கள் நினைக்க மாட்டார்கள்.
அது போல,
"பரமாத்மாவே தான் ஜீவாத்மாவாக தெரிகிறார்" என்பதால், 'ஜீவன் வேறு, பரமாத்மா வேறு' என்று ஞானிகள் நினைக்கமாட்டார்கள் என்கிறது அத்வைதம்

4. "மஹாகாசமும், கடாகாசமும் போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று" என்று சொல்கிறது அத்வைதம்.
எங்கும் இருக்கும் ஆகாசமே, ஒரு ஒரு குடத்துக்குள், சிறு ஆகாசமாக தன்னை காட்டி கொள்கிறது.
அந்த குடம் உடைந்து போனால், குடத்துக்குள் இருந்த ஆகாசம் (கடாகாசம்), எங்கும் உள்ள ஆகாசத்தில் (மஹாகாசத்தில்) கலந்து விடுகிறது.

"மஹாகாசம் தான் கடாகாசமாக தெரிகிறது" என்பதால், "கடாகாசம் வேறு, மஹாகாசம் வேறு" என்று அறிவுள்ளவர்கள் நினைக்க மாட்டார்கள்.
அது போல,
"எங்கும் நிறைந்த பரமாத்மாவே, இந்த உடல் என்ற குடத்துக்குள் ஜீவாத்மாவாக தெரிகிறார்" என்பதால், 'ஜீவன் வேறு, பரமாத்மா வேறு' என்று ஞானிகள் நினைக்கமாட்டார்கள் என்கிறது அத்வைதம்






இப்படி மேற்சொன்ன உதாரணங்களை காட்டி, "பரமாத்மாவும், ஜீவாத்மாவும் வேறு போல தோன்றினாலும், உண்மையில் ஒன்று தான்" என்று விளக்குகிறது அத்வைதம்.

அஞானிக்கு அத்வைத சித்தாந்தம் "நானும் கடவுளே" என்ற சிந்தனையை விதைக்கிறதோ? என்று தோன்றலாம்.

"ஈஸ்வரனும் ஜீவனும் வேறல்ல" என்று அத்வைதம் காட்டி அருளிய ஆதி சங்கரர், "ஜீவாத்மாவாகிய நாம் மோக்ஷம் அடைய அந்த பரந்தாமனை பஜிக்க வேண்டும் என்று த்வைதமாக ஏன் பாடினார்? என்ற காரணத்தை தெரிந்து கொள்வோம்.

உண்மையில், மேற்சொன்ன அத்வைத உதாரணத்திலேயே, பேதம் ஒளிந்து இருக்கிறது...
அத்வைதத்தில் த்வைதம் ஒளிந்து இருக்கிறது.

அத்வைதத்தில் த்வைதம் விசேஷமாக ஒளிந்து இருப்பதை கண்டதால் தான், 
ஆதி சங்கரர் "நாமும் பரமாத்மாவும் ஒன்று தான் என்றாலும், ஜீவாத்மாவாகிய நாம் பரந்தாமனை வணங்கினால் தான் மோக்ஷம் கிடைக்கும்" 
என்று பஜ கோவிந்தம் இயற்றி நமக்கு கொடுத்து பேருபகாரம் செய்தார் என்று புரியும்.

"பரமாத்மாவும் நாமும் ஒன்று தான்" என்றாலும், "மோக்ஷம் அடைய நாம் பரமாத்மாவிடம் பக்தி செய்தே ஆக வேண்டும்" என்ற விசேஷ அர்த்தத்தை, 
ஆதி சங்கரரின் உண்மையான அபிப்ராயத்தை, வெளிக்காட்ட, பிற்காலத்தில் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர்,
"விசிஷ்ட  அத்வைதம்" என்ற வேதத்தின் முழுமையான அபிப்பிராயத்தை ஸ்ரீ ராமானுஜர் உலகுக்கு வெளிப்படுத்தினார்.

விசிஷ்ட அத்வைதம் என்ன சொல்கிறது? என்று கவனிக்கும் போது, அத்வைத சித்தாந்தத்தை வெளிக்காட்டிய ஆதிசங்கரர், ஏன் த்வைதமாக பஜ கோவிந்தம் பாடி, பக்தி செய்ய சொன்னார்? என்று புரிந்து கொள்ள முடியும்.

1. கடலும், அலையும் போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று என்று சொல்கிறது அத்வைதம். இது சத்தியம் தான்.
ஆனாலும், இந்த உதாரணத்தோடு நிறுத்தி விடுவதால், 'கடலும், அலையும் வேறல்ல, இரண்டும் ஒன்று தான்' என்ற அத்வைதம் மட்டும் நமக்கு வெளிப்படுகிறது.
இதில் ஒரு உண்மை ரகசியமாகவே உள்ளது.
"கடலும் அலையும் வேறல்ல" என்பது உண்மைதான்.
ஆனால்,
"கடல் அலையை உருவாக்கியதா? அலை கடலை உருவாக்கியதா? 
கடலுக்கு அலை ஆதாரமாக உள்ளதா? அலைக்கு கடல் ஆதாரமா?
ஆதாரம் எது? கடலா? அலையா?"
என்று மேலும் ஒரு கேள்வி கேட்கும் போது தான்,
ஆதி சங்கரர் ஜீவாத்மாவாகிய நம்மை ஏன் பக்தி செய்ய சொன்னார்? என்பது விளங்கும்.

அலைக்கு ஆதாரம் கடல். ஆனால் கடலுக்கு ஆதாரம் அலை அல்ல.
இந்த உண்மையை கவனிக்கும் போது, "அலையை உருவாக்க காரணமாக இருந்தது கடல்" என்ற உண்மை விளங்கும்.
அது போல,
"பரமாத்மாவாகிய கடல், ஜீவாத்மாவாகிய அலைக்கு ஆதாரமே தவிர,
ஜீவாத்மாவுக்கு ஆதாரம் பரமாத்மா இல்லை" என்ற உண்மை வெளிப்படும்.
"ஜீவாத்மாவுக்கு ஆதாரம் பரமாத்மா இல்லை" என்ற உண்மை புலப்படும் போதே "ஜீவாத்மாவை உருவாக்க காரணமாக இருந்தது பரமாத்மாவே" என்ற உண்மை விளங்கும்.

இந்த உண்மை அறியப்படும் போது, "அலை போன்ற நம்மை உருவாக்காமல் இருக்க, தன்னையும் கடலோடு சேர்த்து கொள்ள, கடல் போன்ற பரமாத்மாவிடம் பக்தி செய்வது ஒன்றே வழி. 
அலைக்கு ஆதாரமான கடல் நினைத்தால், அலை இல்லாமல் செய்ய முடியும் (ராமேஸ்வரத்தில் அலை கிடையாது). 
அது போல, 
பரமாத்மா என்ற கடல் நினைத்தால், ஜீவாத்மாவாகிய நம்மை பிரித்து அலையாக காட்டாமல், தன்னோடு சேர்த்து கொள்ள முடியும்" என்பது நமக்கு புரியும்.

அத்வைத நிலையை நாம் அடைய, பரமாத்மாவின் கருணை நமக்கு அவசியமாகிறது.

ஈஸ்வரன் என்ற கடல், நமக்கு கருணை செய்யாதவரை, நாம் அலை போல தெரிந்து கொண்டே தான் இருப்போம்.  பிறவி கடலை தாண்டவே முடியாது.



அவர் நமக்கு கருணை செய்ய, அவர் நம்மிடம் பக்தியை (அன்பை) எதிர்பார்க்கிறார். 
தன்னிடம் கடலோடு கடலாக சேர ஆசைப்படுகிறானா? என்று பக்தியை எதிர்பார்க்கிறார். 
நமக்கு அந்த ஆவல் (பக்தி) உண்டானால், 
பரந்தாமன் நமக்கு ஆதாரமாக இருக்கிறார் என்ற ஞான உண்டானால், 
அலை போன்ற உருவத்தை மறைத்து, கடலோடு கடலாக ஆக்கி கொண்டு விடுகிறார் (அத்வைதம்).


"அத்வைத நிலையை (ஈஸ்வரனோடு கலந்து விட்ட நிலை) அடைய, ஜீவனாக இருக்கும் வரை, நாம் பக்தி செய்தே ஆக வேண்டும்!!" என்ற தீர்ப்பை, ஆதி சங்கரர் பஜகோவிந்தத்தில் காட்டி விடுகிறார்.

பஜகோவிந்தம் அர்த்தத்துடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்
"அலை போன்று தனியாக இருக்கும் நம்மை, கோவிந்தன் என்ற கடலுடன் சேர்த்து கொள்ள, த்வைத நிலையில் உள்ள நாம் அந்த பரந்தாமனை பக்தி செய்வது ஒன்றே வழி" 
என்ற விஷேச ரகசியத்தை ஆதி சங்கரர் அறிந்ததால் தான், "பஜ கோவிந்தம்" இயற்றி, ஜீவாத்மாவாகிய நம்மை பக்தி செய்து, பரமாத்மாவின் கருணையை பெற்று மோக்ஷம் அடைய வழி காட்டினார்.

ஆதி சங்கரர் உண்மையில் காட்டிய வழி "விஷிஷ்ட அத்வைதமே"

அதே போல,
2. பிம்பமும் (object) பிரதிபிம்பமும் (mirror image) போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று என்று சொல்கிறது அத்வைதம்.

"பிரதிபிம்பத்துக்கு பிம்பம் ஆதாரமா? பிம்பத்துக்கு பிரதிபிம்பம் ஆதாரமா?ஆதாரம் எது?" என்ற கேள்வி எழும் போது, பிரதிபிம்பத்துக்கு ஆதாரம் பிம்பமே என்ற உண்மை நமக்கு புரிகிறது.
பிரதிபிம்பம் தெரிவதற்கு காரணமே, பிம்பம் இருப்பதால் தான் என்ற உண்மை புரிகிறது.
பிரதிபிம்பம் இல்லாமல் போனாலும், பிம்பம் இருக்கும் என்ற உண்மையும் புரிகிறது.

இந்த உதாரணத்தின் படி பார்த்தால்,
ஆதாரம் எது? என்ற கேள்வி ஏழும் போது தான், நமக்கு ரகசியங்கள் விளங்குகிறது.
பிம்பம் (ஈஸ்வரன்) மாயை என்ற கண்ணாடி முன் நிற்காமல் இருந்தால், பிரதிபிம்பம் (ஜீவன்) உருவாகாது என்ற உண்மை புரிகிறது.
ஜீவனாகிய நம்மை உருவாக்காமல் இருக்க வேண்டும் என்றால், அவர் நினைத்தால் மட்டுமே சாத்தியம்.
அவர் நம்மை உருவாக்காமல் இருக்க செய்ய வேண்டுமென்றால், நாம் அவரிடம் பக்தி செலுத்துவது ஒன்றே வழி. 
இதை அறிந்த ஆதி சங்கரர், "ஜீவாத்மாவாகிய நாம் பரந்தாமனை வணங்கியே ஆக வேண்டும்" என்று பாடுகிறார்.

அதே போல,
3. அதிஷ்டானமும் (real) ப்ரமையும் (illusion) போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று என்று சொல்கிறது அத்வைதம்.

ப்ரமைக்கு அதிஷ்டானம் ஆதாரமா? அதிஷ்டானத்துக்கு ப்ரமை ஆதாரமா?ஆதாரம் எது? என்ற கேள்வி எழும் போது, "ப்ரமைக்கு ஆதாரம் அதிஷ்டானமே" என்ற உண்மை நமக்கு புரிகிறது.
கயிறு இல்லாமல், இந்த ப்ரமை கூட ஏற்படாது..
இல்லாத ஒன்றை (ஜீவன்) இருப்பதாக காட்டுவதும் பரமாத்மாவே.

இந்த ரகசியத்தை அனுபவத்தில் கொண்டவர், ஆதி சங்கரர்.

இந்த உண்மை அறியப்படும் போது, ப்ரமை போன்ற நம்மை உருவாக்காமல் இருக்க, அதிஷ்டானம் போன்ற பரமாத்மாவிடம் பக்தி செய்வது ஒன்றே வழி என்று புரிந்து விடும்.
புலன்களை கொடுத்து (மாயை), ப்ரமை போன்ற நம்மை உருவாக்கி லீலை செய்பவரும் அவர் தான் என்ற உண்மை புரியும்.

அதே போல,
4. மஹாகாசமும், கடாகாசமும் போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று என்று சொல்கிறது அத்வைதம்.

மஹாகாசத்திற்கு கடாகாசம் ஆதாரமா? கடாகாசத்திற்கு மஹாகாசம் ஆதாரமா? ஆதாரம் எது? என்ற கேள்வி எழும் போது, கடாகாசத்துக்கு ஆதாரம் மஹாகாசமே என்ற உண்மை நமக்கு புரிகிறது.
வெளியில் எங்கும் உள்ள ஆகாசம் (பரமாத்மா) தான், பானைக்குள்ளும் சிறிய ஆகாசம் (ஜீவன்) போல தெரிகிறதே தவிர, 
பானைக்குள் இருக்கும் ஆகாசம், வெளி ஆகாசத்தை உருவாக்கவில்லை.

இந்த உடம்புக்குள் புகுந்த சிறிய ஜோதியே ஜீவன்.
இந்த உடம்பு என்ற பானை உடையும் போது, தான் ஜீவனல்ல என்ற உண்மையை உணர்கிறான்.



இந்த உடம்பை கொடுத்து ஜீவனாக தெரிய செய்வது அந்த பரமாத்மாவே.
நமக்கு (கடாகாசம்) ஆதாரமான பரந்தாமனை (மஹாகாசம்) பக்தி செய்யாமல், அவரிடம் சேர்ந்து விட ஆசை இல்லாமல் இருக்கும் வரை, நம்மை மனித உடலிலோ, மிருக உடலிலோ, மரங்களிலோ புகுத்தி ஜீவனாக பிரித்து காட்டி லீலை செய்கிறார்.

நாமும் அவரும் வேறல்ல என்ற அத்வைத நிலையை நாம் அடைய, மோக்ஷத்தை அடைய, 
"அந்த பரந்தாமனை பக்தி செய்வது ஒன்றே வழி" என்பதால், ஆதி சங்கரர் பஜகோவிந்தம் இயற்றி நம்மிடம் தந்து விட்டார்.

பிற்காலத்தில் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர், விஷிஷ்ட அத்வைதத்தை ப்ரகாசப்படுத்தி, "நாம் அத்வைத நிலையை (அலைகள் ஒடுங்கி கடலுடன் அடங்க) அடைய, முதலில் அந்த பரந்தாமன் நாராயணனை பஜித்து, அவர் கருணைக்கு பாத்திரமாக வேண்டும். அவர் கருணையின் மூலமே நம்மை மீண்டும் பிறக்க செய்யாமல் தன்னுடன் சேர்த்து கொள்வார்" என்ற ரகசியத்தை உலகுக்கு வெளிப்படுத்தினார்.

கடல் போன்ற "பரந்தாமன்", அலை போன்ற "நம்மை" படைக்கிறார்.
கடல் தான் அலையை உருவாக்குகிறது.

கடல் போன்ற பரந்தாமனும், அலை போன்ற தானும் ஒன்று தான் என்று அத்வைத அறிவுடன் இருந்து, அலையாக இருக்கும் வரை எது நடந்தாலும் வைராக்யத்தோடு இருந்து விட்டால் மட்டும், அலை (சம்சாரம்) ஓய்ந்து விடாது.

அத்வைத ஞானத்தில், அலை போன்று இருக்கும் நாம், அத்வைத அறிவுடன் இருக்க வேண்டுமே தவிர அத்வைத அனுபவத்துடன் இருந்தால், இந்த உலகில் உள்ள மற்ற அலைகளுடன் வாழ முடியாது.
இது தேவையற்ற துயரமே..
சுகப்ரம்மம் போன்ற சில ஞானிகள் மட்டுமே இப்படி வாழ்ந்தனர். வாழ முடியும்.

அத்வைத அனுபவம் நமக்கு தேவையே இல்லை.
அலை போன்ற ஜீவனாக பிறந்து இருக்கும் நாம், அத்வைத அறிவுடன் (ஞானம்) இருந்தாலேயே போதுமானது.

இந்த அலையை ஓய வைத்தால், அலையும் கடல் ஆகி விடுகிறது. ராமேஸ்வரத்தில் காணும் கடல் போல.
இது அத்வைத அனுபவம்.
இந்த அத்வைத அனுபவம் நமக்கு மோக்ஷம் கிடைத்த பிறகே உண்மையில் கிடைக்கும்.

கடல் மனது வைத்தால் தான் அலை ஏற்படுத்தாமல் இருக்க முடியும்.

மோக்ஷம் கொடுக்க, கடல் போன்ற பரந்தாமன் மனம் குளிர வேண்டும்.
நம்மை மீண்டும் மீண்டும் அலையாக உருவாக்காமல், அலை ஓயவேண்டும் என்றால், அவர் நம் மீது கருணை செய்தே ஆக வேண்டும்.

அவர் கருணை செய்ய, அலை போன்ற நாம் "அலை போன்ற இந்த பிரிந்த உருவத்தை, மாய உருவத்தை வெறுக்க வேண்டும். சம்சாரத்தில் அலையாக அடி வாங்குவதை வெறுக்க வேண்டும்.
இந்த அலையை ஓய வைக்கும் சக்தி, அந்த கடல் போன்ற பரந்தாமனுக்கே உண்டு என்ற உண்மையை உணர வேண்டும்.

இந்த உண்மை அறியப்படும் போது, ஜீவன் பக்தி செய்ய முடிவு செய்கிறான். பரமாத்மாவின் கருணையை எதிர்பார்க்கிறான்.

அலை போன்று வாழும் வாழ்க்கையை எதிர்கொள்ளவும் தயாராகிறான்.
அத்வைத அறிவு உள்ள இவனின் நோக்கம், அத்வைத அனுபவத்தை மோக்ஷத்தில் பெறுவதே என்றாலும், அலை போன்ற தன்னை ஓய செய்ய தன்னால் ஆகாது என்று தெளிவு பெறுகிறான்.
வாசுதேவ கிருஷ்ணனை சரண் அடைகிறான்.

இந்த நிலையில் ஆதி சங்கரர், "கோவிந்தனை பஜித்து, அத்வைத அனுபவத்தை தரும் மோக்ஷத்தை அவர் கருணையால் பெற்று கொள்" என்று பஜ கோவிந்தம் நமக்கு கொடுத்தார்.

ஆதி சங்கரரை வெறும் அத்வைதி என்று மட்டும் நினைப்பதை விட, அவர் விஷிஷ்டாதவைத் தத்துவத்தை தான் நமக்கு காட்டினார் என்று புரிந்து, கிருஷ்ண பக்தி செய்வோம்.

ஸ்ரீ ராமானுஜர் சொன்ன விசிஷ்டாத்வைதமே, ஆதி சங்கரரும் சொல்கிறார். 
ஆதி சங்கரரை "அத்வைதி" என்று மட்டும் சொல்வதை தவிர்த்து, பஜகோவிந்தம் அளித்த ஆதி சங்கரரும் விசிஷ்டாத்வைதமே (அத்வைதம் + விஷேச தத்துவம்) சொல்கிறார் என்ற உண்மையை அறிவோம்.
கிருஷ்ண பக்தி செய்வோம். 
அவர் கருணையால், மோக்ஷம் அடையும் போது, அத்வைத நிலையில் பரந்தாமனுடன் இரண்டற கலந்துவிடுவோம்.

வாழ்க ஸ்ரீ ராமானுஜர் புகழ், வாழ்க ஆதி சங்கரர் புகழ்.
வாழ்க ஹிந்து தர்மம். 

வாழ்க ஹிந்துக்கள்.


Thursday, 26 December 2019

தீபாவளி அன்று திவசம் செய்கிறார். "பெருமாளே கதி "என்று வாழ்ந்த பக்தனுக்கு "தானே உறவு" என்று காட்டிய சாரங்கபாணி பெருமாள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?

"சிரார்த்தம் என்பதை முக்கியமான பந்துக்கள் (உறவுகள்) மட்டுமே செய்யலாம்"
என்று சாஸ்திரம் சொல்கிறது..




நம் அனைவருக்குமே பந்துவாக (உறவாக) இருக்கிறார் பெருமாள்.

"அனாதை" என்று யாருமே சொல்லிக் கொள்ள கூடாது.
"நம் அனைவருக்குமே நாதனாக பெருமாள் இருக்கிறார்" என்று திடமாக நம்ப வேண்டும்.
பொதுவாக கோவில்களில் வசந்தோத்சவம், பிரம்மோற்சவம் என்றெல்லாம் பெருமாள் பல உற்சவங்கள் செய்து கொள்கிறார் என்று பார்க்கிறோம்...

"சிரார்த்த உத்சவம்" செய்யும் பெருமாளை கேள்விப்பட்டு இருக்கிறோமா?...

அனைவருக்கும் தானே உறவு என்று, 
சிரார்த்தம் செய்யும் பெருமாள் திருகுடந்தையில் (கும்பகோணம்) இருக்கிறார்.
தெரிந்து கொள்ள வேண்டாமா?
திருகுடந்தையில் உள்ள சாரங்கபாணி பெருமாள் சிரார்த்த உத்ஸவம் செய்து கொள்கிறார்..

திருக்குடந்தையில் திரும்பிய பக்கமெல்லாம் கோவில்கள்..

ஒரு சமயம், ஒரு பக்தன் அந்த கோவிலுக்கு போகலாமா, இந்த கோவிலுக்கு போகலாமா என்று அங்குமிங்கும் பார்த்து, கடைசியில் ஆராவமுதன் கோவில் எல்லா கோவிலை விட பெரிதாக இருப்பதாக அவனுக்கு தோன்ற, அங்கேயே அவனுக்கு ஈடுபாடு உண்டானது...

உஞ்சவ்ருத்தி எடுத்தாவது 'கோபுரம் கட்ட வேண்டும்' என்று நினைத்தான் அந்த பக்தன்.
"பைத்தியக்காரா.. இது உன்னால் ஆகுமா?" என்று பலர் பேசினர்..
"என் ஜென்மாவில் இது ஒன்றே வேலை" என்று சொல்லிவிட்டான் அவன்.




அதி ஆச்சர்யமாக, கோவில் கோபுரம் கட்டப்பட்டு, சம்ரோக்ஷனையும் அவன் காலத்தில் ஆகி விட்டது.

இப்படி கோவிலுக்கு திருப்பணி செய்வதே லட்சியம் என்று வாழ்ந்த அந்த பக்தனுக்கு, விவாஹம் செய்து கொள்ள வேண்டிய வயது தாண்டிவிட்டது...
கல்யாண வயதை தாண்டிய இவனுக்கு பெண் கொடுக்க யாரும் தயாரில்லை..
தன் இளமை காலத்தை கோபுரம் கட்டுவதிலேயே செலவழித்து விட்டான்.

இனி மனைவி மக்கள் கிடையாது, குடும்பம் கிடையாது, என்பதால், "இனி வாழும் காலத்தை பெருமாளுக்கு பூ கட்டி கொண்டே காலத்தை கழித்து விடுவோம்" என்று கோபுர வாசலிலேயே இருந்து கொண்டு வந்தான்..

பசிக்கு, கோவிலிலேயே பிரசாதம் வாங்கி கொள்வான்..
குடும்பம் தனக்கு இல்லை என்று சொல்லிக்கொள்ள மாட்டான்.
"சாரங்கபாணி தான் தன் பிள்ளை.." என்று சொல்லி கொள்வான்.
இப்படியே வாழ்க்கை போய் கொண்டு இருந்தது...
வயதாகி கிழவனாகி விட்டான்.

ஒரு சமயம், தீபாவளி அன்று கோவில் வாசலிலேயே உயிர் பிரிந்து விட்டது..
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், தீபாவளி அன்று அவரவர் வீட்டில் எண்ணெய் தேய்த்து, கங்கா ஸ்நானம் செய்து புது துணி கட்டி கொள்ள ஆசைப்படுவார்களா? இல்லை, ஒரு அனாதை பிரேதத்துக்கு நெருப்பு போட வருவார்களா?...




இவரோ அனாதை பிரேதம்.
இவருக்கு சொந்தம் என்று யாருமே வந்தது கிடையாது.

அவரவர்கள் அவர்கள் காரியத்தை பார்த்து கொண்டு இருந்தனர்.
ஒரு சிலர், "அப்புறம் பார்த்து கொள்ளலாம்" என்று சொல்லி சென்று விட்டனர்.

அப்பொழுது அங்கு ஒருவன், "அப்பா... அப்பா..  போய்ட்டியா.. அப்பா.. அப்பா... போய்ட்டியா" என்று வயிற்றிலும், மார்பிலும் அடித்து கொண்டு, கதறி அழுது கொண்டு வந்தான்..
அவர் பிரேத சரீத்தை பார்த்து, விழுந்து புரண்டு கதறி அழுதான்.
அவரது உடலைத் தன் மடியில் போட்டுக் கொண்டு அழுதான்.

அங்கு இருந்தவர்களுக்கு பெரும் ஆச்சர்யம்..
"அடடா... இந்த கிழவனுக்கு சொந்தம் இருக்கு போல இருக்கே..
நாம் ஏதோ இவர் அனாதை என்றல்லவா நினைத்தோம்...
இவருக்கு நெருப்பு போட ஆள் இருக்கிறார்கள் போல இருக்கே.." என்றதும் அங்கு பலர் கூடிவிட்டனர்.

அனைவரும் வந்த பையனை சமாதானம் செய்து, அவன் தகப்பன் தகனத்துக்கு வேண்டிய உதவிகள் செய்ய, 
சக்கரபடி துறையில் அவருக்கு நெருப்பு போட்டு விட்டு, காவிரி நதியில் ஸ்நானம் செய்து விட்டு, வந்து உட்கார்ந்தான்..

மறுநாள் காலை, தகப்பனை இழந்து இருக்கும் இந்த பையன் சாப்பிட்டானோ என்னவோ என்று நினைத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்க்க வர, அந்த பையனை எங்கு தேடியும் காணவில்லை.
அன்றைய ராத்திரி, அர்ச்சருக்கும், கோவில் நிர்வாகிக்கும்  சாரங்கபாணி பெருமாள் சொப்பனத்தில் வந்து, "என் அப்பாவுக்கு நெருப்பு போட நானே தான் வந்தேன்..
நெருப்பு போட்டால் மட்டும் போதாது. வருடாவருடம் சிரார்த்தம் செய்ய வேண்டும்.
இனி நம் கோவிலில் ஒவ்வொரு தீபாவளியும் சிரார்த்த உத்ஸவம் நடக்கட்டும்." என்று சொல்லிவிட்டார்.

"பெருமாளே கதி "என்று வாழ்ந்த அந்த பக்தனுக்கு "தானே பந்து" என்று காட்டினார் பெருமாள்.

அன்றுமுதல், தீபாவளி அன்று, ஸ்ரீசாரங்கபாணி பெருமாளின் திருக்கரங்களில் தர்ப்பை பவித்ரம் அணிவித்து, ச்ராத்த சமையல் செய்து, 2 ஸ்ரீவைஷ்ணவர்களை அழைத்து, அன்னம் கொடுத்து, சிரார்த்த உத்ஸவம் நடத்தி கொள்கிறார் பெருமாள்.

எந்த கோவிலிலும் இல்லாத உத்ஸவம் இது. சாரங்கபாணி பெருமாள் செய்து கொள்கிறாரே!!
பகத்வத்சலன் அல்லவா பெருமாள்.

"பக்தனுக்காக எதுவும் செய்வேன்" என்றல்லவா பெருமாள் இங்கு சிரார்த்த உத்ஸவம் செய்து கொள்கிறார்.

தன் பக்தனை என்றுமே கைவிடாதவர் பெருமாள்..
"தன் பக்தன் என்றுமே அனாதை இல்லை. பக்தனுக்கு தானே பந்து (உறவு)" 
என்று நிரூபித்த பெருமாள் அல்லவா திருக்குடந்தையில் வீற்று இருக்கும் சாரங்கபாணி.

திருக்குடந்தை என்ற கும்பகோணத்தில், பக்தவத்சலனாக உள்ள சாரங்கபாணி பெருமாளை "தீபாவளி" அன்று சேவிக்கும் பாக்கியம் பெறுவோம்.

ஹிந்துவாக வாழ்வதே நமக்கு பெருமை.
நம் தெய்வங்கள் நம்மிடம் உறவு காட்டும் அழகை உணர, நாம் அவரிடம் வைத்து இருக்கும் அன்பே அடிப்படை என்று உணர வேண்டும்.

அன்பிற்கு குழந்தை வசமாகும்.. பரதெய்வமான நாராயணனும் வசமாகிறார்.


Saturday, 21 December 2019

நமக்கு மந்திர ஸித்தி ஆக என்ன செய்ய வேண்டும்? ஹிந்துக்கள் தெரிந்து கொள்வோமே..

புரஸ்சரணம் என்றால் என்ன?
நாம் குருவிடம் உபதேசமாக பெற்ற மந்திரங்கள் நமக்கு ஸித்தி ஆவதற்கு "புரஸ்சரணம் (புரச்சரம்) என்கிற முறையை கடைபிடிக்க வேண்டும்" என்று சாஸ்திரம் வழி காட்டுகிறது.




உதாரணத்திற்கு, திருவஷ்டாக்ஷர மந்திரத்தையோ, தாரக மந்திரமான "ராம" நாமத்தையோ, அதில் ஸித்தி பெற்ற குருவிடம் நாம் உபதேசம் பெற்ற பின்,
அந்த மந்திரத்தை அக்ஷரத்திற்கு லக்ஷம் ஜபம் செய்ய வேண்டும். 
உதாரணத்திற்கு,
தாரக மந்திர (ராம) ஜபம் லட்சம் தடவை சொல்லும் போது, 2 எழுத்துள்ள தாரக மந்திரம், மொத்தம் சேர்த்து 2 லட்சம் ஆகிறது..

ஜபம் செய்த பின்,
2,00,000/10= 20,000 தடவை, தாரக மந்திரம் சொல்லி அக்னியில் "ஹோமம்" செய்ய வேண்டும்.

ஹோமம் செய்த பின்,
20,000/10 = 2,000 தடவை தாரக மந்திரம் சொல்லி தீர்த்தம் விட்டு "தர்ப்பணம்" செய்ய வேண்டும்.

தர்ப்பணம் செய்த பின்,
2,000/10 = 200 தடவை தாரக மந்திரம் சொல்லி தீர்த்தத்தை தன் தலை மேல் தெளித்து "மார்ஜனம்" செய்ய வேண்டும்.
மார்ஜனம் செய்த பின்,
200/10 = 20 "வேத பிராம்மணர்களுக்கு" அல்லது நாம் சொல்லும் "வேத மந்திரத்தில் ஸித்தி ஆன" 20 பேருக்கு போஜனம் செய்ய வேண்டும்.

இப்படி செய்யும் முறையே "புரஸ்சரணம்" என்று சொல்லப்படுகிறது...
இந்த முறையில் உபதேசம் பெற்ற மந்திரம் சொல்லப்படும் போது, நமக்கு அந்த மந்திர ஸித்தி உண்டாகும்.. அதன் சம்பந்தமான தெய்வ காட்சிகள் கூட கிடைக்கும்.

இந்த சாதனைகள் செய்யும் நேரத்தில்,
அதிகம் பேச கூடாது..
கோபம், காமம் கூடவே கூடாது.. பொறுமை அவசியம்.
புளிப்பு, இனிப்பு, காரம் உணவில் சேர்க்க கூடாது..
ஒரே இடத்தில் இருந்தே செய்ய வேண்டும்..
கோவில், தன் வீட்டில், புண்ய க்ஷேத்ரத்தில் செய்யலாம்.
மந்திர ஸித்தி அடைய லட்சியவாதியாக இருக்க வேண்டும்.

"தெய்வம் கருணையே வடிவானவர், சுலபமானவர்" என்று ஒரு புறம் சொல்கிறது வேதம்...
மற்றொரு இடத்தில்,
"தெய்வ அணுகிரஹம் கிடைக்க, அக்ஷரத்திற்கு லக்ஷம் ஜபம் செய்ய வேண்டும், பிறகு புரஸ்சரணம் முறையில் ஹோமம், செய்ய வேண்டும்" என்றும் சொல்கிறதே!!..
"இப்படி செய்தால் தான் பகவான் நமக்கு அருள் புரிவாரா?..." என்ற கேள்வி நமக்கு எழலாம்..

நம் முயற்சியே இல்லாமல் பகவான் கருணையை வர்ஷித்து கொண்டு தான் இருக்கிறார்..
நாத்தீகனுக்கு கூட, காமம், கோபம், பேராசை கொண்டவனுக்கு கூட, கோவிலில் அர்ச்ச அவதாரமாக உள்ள பெருமாள் வீதி உலா என்று தானே புறப்பட்டு, மதியாதார் வீட்டுக்கு முன் கூட வந்து நிற்கிறார்.. தரிசனத்தை தகுதி பாராட்டாமல் தருகிறார்..
அர்ச்ச அவதாரமாக இருக்கும் போது, பெருமாள் தன் பெருமை அறியாமல், சுலபமாக தான் இருக்கிறார். அனைவரும் பார்த்து விடுகின்றனர்.







14 வருடம் ராம தரிசனத்துக்காக காத்து இருந்தார், பரதன்...
பல துன்பங்களை சகித்து கொண்டு, கடைசியில் நரசிம்மமாக தரிசனம் பெற்றான் பிரகலாதன்.
பல வருடங்கள் காத்து இருந்து, ராம தரிசனம் பெற்றாள் சபரி.
80 கோடி ராம ஜெபம் செய்து, ராமபிரானை நேரில் தரிசித்தார் தியாகராஜர்.
எல்லையில்லா பெருமை உடைய பெருமாளை தரிசிக்க, எத்தனை முயற்சி செய்தாலும் தகுமே...

இந்த உலகில், அல்ப விஷயத்தை அடைவதற்கே, எத்தனை முயற்சி செய்கிறோம்..
மோக்ஷமே கொடுத்து விடும் பகவானை தரிசிக்க, இந்த சாதனைகள் ஒன்றும் கஷ்டமில்லையே... 

அக்ஷரத்திற்கு லட்சம் ஜபித்து, முறையாக புரஸ்சரண ஹோமம் செய்தால் தான் பகவான் கருணை செய்வார் என்று இல்லை..

மந்திர ஸித்தி பெற்ற குரு, நமக்கு உபதேசம் செய்ததற்கே, அந்த மந்திரத்தின் அதிபதியான தேவதை நம் மீது கருணை காட்டி விடுகிறார்கள் என்பது உண்மைதான்.
குருவின் மகத்துவமே, நமக்கும் தெய்வ அருள் கிடைக்க செய்து விடும்.

உதாரணத்திற்கு, ராம தரிசனம் பெற்ற, ராம நாமத்தில் ஸித்தி ஆன ஒரு குரு, நமக்கு தாரக மந்திரத்தை உபதேசம் செய்த போதே, குருவின் சிபாரிசு பெற்ற நமக்கு மறு ஜென்மம் கிடையாது என்று நிச்சயிக்கப்பட்டு விடுகிறது.
மோக்ஷ வாசலை திறந்து விட்டு விடுகிறார் பரமாத்மா நாராயணன்..

"குருவின் உபதேசமே தனக்கு மோக்ஷத்தை நிச்சயம் கொடுத்து விடும்" என்ற ஆன பிறகு,
எதற்காக அக்ஷரத்திற்கு லக்ஷம் ஜபம் செய்ய வேண்டும்? 
பிறகு எதற்கு புரஸ்சரணம் ஹோமம், செய்ய வேண்டும்? 
என்று கேட்க தோன்றலாம்...
ஒரு தந்தை (குரு), தன் பெண்ணை (நாம்) ஒரு நல்ல வரனுக்கு (பரமாத்மா) மணம் செய்து கொடுக்கிறார்.
கணவன், இவளை தன் மனைவி என்ற காரணத்துக்காகவே, கட்டாயம் தன் வீட்டுக்கு கூட்டி கொண்டு தான் செல்ல போகிறான்.

இருந்தாலும்,
அந்த பெண் தன்னை பார்த்து அவன் ஆசைப்படும் விதமாக தன்னை அழகாக அலங்கரித்து கொள்கிறாள்.
அவள் "தன்னை தான் அலங்கரித்து கொள்கிறாள்" என்றாலும், இதைப்பார்த்து கணவன் சந்தோஷப்படுவான் என்பதால் தானே அப்படி செய்து கொள்கிறாள்.
அது போல,
குருவின் கருணைக்கு பாத்திரமாகி, குரு மூலம் மந்திர உபதேசமும் பெற்று விட்டால், பெருமாளின் வீடான மோக்ஷம் நமக்கும் சொந்தம் ஆகி விடும்..  பெருமாள் நம்மையும் கேள்வி இல்லாமல் ஏற்றுக்கொண்டு விடுகிறார்.. சந்தேகமே இல்லை.
பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து மீட்க பட்டு விடுவோம் என்பதில் ஐயமே இல்லை...
குருவின் கருணையால், குரு செய்த மந்திர உபதேசத்தால், நமக்கு மோக்ஷம் நிச்சயம் என்பதற்காக,
மீதி நாட்களை சும்மா இருந்து, தினமும் மற்றவர்களை போலவே நாமும் சாப்பிட்டு, தூங்கி பொழுதை போக்கி இந்த ஜென்மத்தை முடித்து கொண்டால், குரு கிருபையால் மோக்ஷம் கிடைத்து விடும்... ஆனாலும் நமக்கே பெருமாள் முன் நிற்க கூசுமே.. நம்மையே நமக்கு பிடிக்காமல் போகுமே..

ஒரு பெண் தன் கணவனை காணும் முன், அவன் ஆசையோடு தன்னை பார்க்க வேண்டுமே என்று தன்னை அலங்கரித்து கொள்வது போல,
மோக்ஷம் என்ற வீட்டுக்கு குருவின் கருணையால் போகப்போகும் நாமும், அந்த பரமாத்மா நம்மையும் ஆசையாக காண வேண்டுமே!! என்ற ஆவலில் நம்மை அலங்கரித்து கொள்ளும் முறையே புரஸ்சரணம்.
நெற்றியில் திருமண், வாயில் எப்பொழுதும் குரு உபதேசித்த பகவானின் நாமம், மனதில் எப்பொழுதும் பகவானின் சிந்தனை, தினமும் நாம் செய்யும் காரியங்களை பார்த்து பகவான் "சபாஷ்" போடும் படியாக வாழ்ந்து, கடைசியில் இந்த உடலை இந்த மண்ணில் விட்டு விட்டு சென்றால்,
மோக்ஷ வாசலில் நம் வருகைக்காக பெருமாள் காத்து இருந்து, ஆசையோடு அழைத்து செல்கிறார்..




இவ்வாறு அக்ஷரத்திற்கு லட்சம் மந்திர ஜபம் செய்யப்பட்டு, புரஸ்சரண ஹோமம் செய்யும் போது, குருவின் கருணையால், பகவான் ப்ரீதி அடைந்து, அந்த மந்திரம் நமக்கு ஸித்தி அகும்படி செய்கிறார்.

மந்திர ஸித்தி அடைந்தவன், மற்றவர்களுக்கு செய்கிற ஹோமம் ஒரு சில ஆவர்த்தி ஆனாலும் நல்ல பலன் கொடுக்கும்..
அந்த மந்திரத்தின் தேவதை தன் சக்திக்கு உட்பட்ட அனைத்து அணுகிரஹத்தையும், ஸித்தி பெற்றவனுக்கு தரும்..

உப தேவதைகளை விட்டு, பரமாத்மா நாராயணன் ப்ரீதி அடையும் மந்திரங்களில் ஸித்தி ஆனவர்கள், மோக்ஷத்துக்கே தகுதி பெறுகிறார்கள். அவர்களே மகான்கள்..

வாழ்க ஹிந்து தர்மம்..
ஹிந்துவாக பிறக்க வாய்ப்பு கிடைத்ததே மகா பாக்கியம்...

போலி மதங்களில் உள்ளவர்களும், ஹிந்து தர்மத்தில் ஈர்க்கப்படுகிறார்கள்...

Friday, 13 December 2019

பிரபந்தங்கள், பதிகங்கள், பஜகோவிந்தம், கந்த ஷஷ்டி கவசம் சொல்லி பிரார்த்தனை செய்வதற்கும், வேத மந்திரங்களை சொல்வதற்கும் வித்யாசம் உண்டா? தெரிந்து கொள்ள வேண்டாமா?

தெய்வ சாந்நித்யம்:
"ருத்ரம், புருஷ சூக்தம்" போன்ற வேத மந்திரங்கள், சரியாக உச்சரிக்க படும்போது,
தெய்வங்கள் அந்த இடத்தில் தன் சாந்நித்யத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

"தெய்வ சாந்நித்யம்" அதிகம் உள்ள இடத்தில், எளிதாக "தெய்வ அருள்" பாமரனுக்கும் கிடைத்துவிடும்.



தெய்வ அருள்:
ஆழ்வார்கள் பாசுரங்களும், நாயன்மார்கள் பதிகங்களும் பாடும் போது,
தெய்வத்தை நாம் ஸ்துதி (போற்றி) செய்வதால், பக்தனுக்கு பக்தி வளர்கிறது..
தெய்வ அருள் (அனுக்கிரஹம்) கிடைக்கிறது.


4000 திவ்ய பிரபந்தங்கள் "வேதத்துக்கு ஈடானது" என்று கூறுகிறார்கள் பெரியோர்கள்.

"தமிழ் மறை" என்று திவ்ய பிரபந்தத்தை கூறுகிறார்கள் பெரியோர்கள்.

வேதத்தை அறிந்த, சர்வ சாஸ்திரமும் கரை கண்ட 'ஸ்வாமி வேதாந்த தேசிகர்', 
கடைசியாக ஆழ்வார்கள் தமிழில் அருளிய "திவ்ய பிரபந்தங்களை" எடுத்து படிக்கும் போது,
'தான் கற்ற வேதத்தின் சாரம் அனைத்தும் 4000த்தில் அடங்கி இருப்பதை கண்டு பிரமித்தார்' என்று அறிகிறோம். 
"தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே" என்று திவ்ய பிரபந்தத்தை வேதத்துக்கு நிகராக உயர்த்தி பேசுகிறார்.
"மறையில் (வேதத்தில்) தெளியாத அர்த்தங்கள் எல்லாம், பிரபந்தங்கள் மூலம் தெளிந்தது" என்று திவ்ய பிரபந்தத்தின் பெருமையை உரைக்கிறார் தேசிகர் என்று அறிகிறோம்.

அதே போல, யதி ராஜரான "ராமானுஜர்", 
திவ்ய பிரபந்தத்தை அனைத்து வைஷ்ணவ கோவில்களிலும் பெருமாளுக்கு முன் பாட வேண்டும் என்று, பெரும் சீர்திருத்தம் செய்தார். 
"திவ்ய பிரபந்தம் கேட்காத பெருமாள் கோவில் உலகில் இல்லை" என்ற அளவுக்கு தமிழ் மொழியில் உள்ள "திவ்ய பிரபந்தத்தை" உலகெங்கும் பரப்பினார்.

இப்படி "திவ்ய பிரபந்தத்தை பெருமாள் முன் கட்டாயம் பாட வேண்டும்" என்று தமிழை முன் நிறுத்தினார் ராமானுஜர்.

வேதத்துக்கு நிகரான 'திவ்ய பிரபந்தத்தை பெருமாளே உகந்து கேட்கிறார்' என்றதும், 
அதற்காக, உடனே ராமானுஜர்,
"இனி வேத மந்திரங்கள் ஓத வேண்டாம்.. பூஜை விதிகளை மாற்றுங்கள். திவ்ய ப்ரபந்தமே போதும்!!" என்று சொல்லி விடவில்லை.
இதை நாம் கவனிக்க வேண்டும்.. 
இதில் உள்ள ரகசியத்தை அறிந்து கொள்ள முயற்சிக்கவேண்டும்..

வேதமும், திவ்ய ப்ரபந்தமும் இரண்டையும் அறிந்தவர் ராமானுஜர். 
இரண்டுக்கும் உள்ள வேற்றுமையை அறிந்தவர்.. 

"ஸ்துதி வேறு, மந்திரங்கள் வேறு" என்ற வேற்றுமையை அறிந்தவர் ராமானுஜர்.
"ஸ்துதி (prayer) வேறு, மந்திரங்கள் வேறு" என்ற வேற்றுமையை  நாமும் உணர வேண்டும்..
"திவ்ய ப்ரபந்தமோ, பதிகங்களோ, கந்த சஷ்டி கவசமோ, கந்த குரு கவசமோ, அபிராமி அந்தாதியோ" மந்திரங்கள் அல்ல.. 
இவை அனைத்துமே "தெய்வத்தை பற்றிய ஸ்துதிகள், பாடல்கள்".

"ருத்ரம், புருஷ சூக்தம்" போன்ற வேத மந்திரங்கள், தெய்வத்தை பற்றிய ஸ்துதிகள், பாடல்கள் அல்ல.. 




'ருத்ரம்' போன்ற வேத மந்திரங்கள் உச்சரிக்க படும் போது, அந்த வேத ஒலிகள், சிவபெருமானை போற்றி பாடவில்லை.
மாறாக,
ஏகாதச ருத்ரர்களையே (11 ரூபத்தில் உள்ள சங்கரனை) அங்கு ஆவிர்பவிக்க செய்கிறது. 
சிவபெருமானை போற்றி பாடும் வெறும் பாடல் அல்ல 'ருத்ரம்' போன்ற வேத மந்திரங்கள்.
சிவபெருமானையே ஆவிர்பவிக்க செய்கிறது ருத்ரம்' போன்ற வேத மந்திரங்கள்.
இந்த வேற்றுமையை நாம் உணர வேண்டும்.




'புருஷ சூக்தம்' போன்ற வேத மந்திரங்கள் உச்சரிக்க படும் போது, அந்த வேத ஒலிகள், ப்ரம்ம தேவனை படைத்த, உலக சிருஷ்டிக்கு காரணமான மூலமான பரமாத்மா நாராயணனை வெறுமனே போற்றி பாடுகிறது என்று நினைக்க கூடாது.
மாறாக, பரமாத்மா நாராயணனையே அங்கு ஆவிர்பவிக்க செய்கிறது.
நாராயணனை போற்றி பாடும் வெறும் பாடல் அல்ல 'புருஷ சூக்தம்' போன்ற வேத மந்திரங்கள்.
நாராயணனை ஆவிர்பவிக்க செய்யும் வேத மந்திரங்கள் இவை என்று அறிய வேண்டும்.

நாராயணனை, போற்றி பாடப்படும் திவ்ய ப்ரபந்தமும்,
நாராயணனை, ஆவிர்பவிக்க செய்யும் வேத மந்திரமும் 
ஒன்று என்று நினைக்க கூடாது.
இந்த வேற்றுமையை ஹிந்துக்கள் நாம் உணர வேண்டும்.

தமிழில் அர்ச்சனை செய்தால் கடவுளுக்கு புரியாதா?
என்று கேட்பது வீண் பிடிவாதம்..
மனிதர்களுக்கு இடையே உள்ள காழ்ப்புணர்ச்சியை, தெய்வத்திடம் நாம் காண்பிக்க கூடாது. 
2000 வருடத்துக்கு முன்பேயே, பெருமாள் தமிழ் பிரபந்தங்களை கேட்டு கொண்டு தான் இருக்கிறார். 
ஊமை தன் மனதில் பிரார்த்தனை செய்தாலும் புரிந்து கொள்கிறார்.
காழ்ப்புணர்ச்சியை ருத்ரம்' போன்ற வேத மந்திரங்கள் மீீது காண்பிக்க கூடாது. 

தெய்வ சாந்நித்தியம் வேத மந்திரங்களால் மட்டுமே ஏற்படுகிறது.
தெய்வ சாந்நித்தியம் உள்ள கோவில்களில்,
நாம் போய் நின்று"கோவிந்தா.. கோவிந்தா..." என்று ஸ்துதி செய்தால் கூட, நினைத்த காரியங்கள் நிறைவேறுகிறது.

தெய்வத்துக்கு எந்த மொழியும் தடையில்லை.. ஊமை பாஷையும் அறிந்தவர் அவர்.
ஆனால், நாம் செய்யும் பிரார்த்தனைகள் பலிக்க, அந்த தெய்வங்கள் தன் சாந்நித்யத்தை காட்ட, வேத மந்திரங்கள் அவசியம். 

வேதத்தை ஒதுக்கி, வழிபடும் இடங்களில், தெய்வ சாந்நித்யம் குறைகிறது. 

ஹிந்து தர்மத்தின் மீது பொறாமை கொண்டவர்கள், 'வேத மந்திரங்கள் கோவிலில் ஒலிக்க கூடாது' என்று பெருமுயற்சி செய்கின்றனர். 
கோவிலை காப்பது ஹிந்துக்களின் கடமை.

வேத மந்திரங்கள் கோவிலில் ஒலிக்க செய்வது ஹிந்துக்களின் கடமை.

கோவிலில் 'பாசுரங்கள், பதிகங்கள், கந்த சஷ்டி கவசம்' பாடுவதும் நமக்கு உள்ள கடமை.

இதை ஹிந்துவாக பிறந்த எவரும் மறக்க கூடாது. 





ஹிந்து கலாச்சாரத்தை கெடுத்து, தன் போலி தெய்வங்களை பாரத மண்ணில் விதைக்க முயலும் கீழ்தரமானவர்களை ஒடுக்க வேண்டியது, ஒவ்வொரு ஹிந்துவுக்கும் கடமை.


"ஸ்துதி வேறு, மந்திரங்கள் வேறு" என்ற வேற்றுமையை நாமும் உணர வேண்டும்..

கோவிலில், "ருத்ரம், புருஷ சூக்தம்" போன்ற வேத மந்திரங்கள் ஓதி அர்ச்சகர்கள், தெய்வ சாநித்தியம் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.. அர்ச்சகர்கள் பார்த்து கொள்கிறார்கள்.
கோவிலில் "பாசுரங்கள், பதிகங்கள், பஜனைகள் பாடி" பக்தர்கள் தன் பக்தியை வெளிப்படுத்தி, தெய்வ சாந்நித்யம் நிறைந்த அந்த இடத்தில், தெய்வ அனுகிரஹத்தை பெற முயற்சிக்க வேண்டும்.

'வேத மந்திரங்கள் கூடாது, பாசுரங்கள், பதிகங்கள் மட்டுமே சொல்ல வேண்டும், தமிழில் போற்றி பாட வேண்டும்' 
என்று சொல்ல சொல்லி அர்ச்சகரை தடுக்க கூடாது.

"தெய்வ சாநித்யத்தை" வேத மந்திரங்களால் நிலைக்க செய்வது, அர்ச்சகர்கள் கடமை.
"தெய்வ அருளை" பாடல்கள் மூலம் ஸ்துதி (prayer songs) செய்து பெற வேண்டியது நம் கடமை.. 

தமிழில் உள்ள பக்தி பாடல்களை, பாசுரங்களை பாட தான், 'நாம்' இருக்கிறோம். மறக்க கூடாது.

கோவிலுக்கு சென்று ஏதாவது பாட 'நாம்' ஆசைபட வேண்டும்.
கோவிலுக்கு சென்று  'நமோ நாராயணா, சிவாய நம, முருகா போற்றி' என்றும், பாசுரங்களை, பதிகங்களை 'நாம்' ஸ்துதி செய்ய வேண்டும்.

வெறும் மரம் போல தெய்வத்துக்கு முன் நின்று விட்டு வெளியே செல்வது, கோடீஸ்வரனிடம் சென்று 1 ரூபாய் பிச்சை வாங்குவது போல ஆகும்.  


கோவிலுக்கு செல்லும் நாம், அர்ச்சகர் என்ன சொல்ல வேண்டும்? என்று சொல்வதை விட, நாம் என்ன சொல்ல வேண்டும்? என்று கவனிக்க வேண்டும்.

அர்ச்சகர் தெய்வ சாந்நித்யம் குறையாமல் வேத மந்திரங்களை சொல்ல வேண்டும்.
பக்தர்களான நாம், தெய்வ அனுகிரஹத்தை பெற அவரை போற்றி பாட வேண்டும். 
இதற்காக தானே, நமக்கு இத்தனை பக்தி பாடல்களை நமக்கு சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் கொடுத்து இருக்கிறார்கள். 
சிந்திக்க வேண்டாமா ஹிந்துக்கள்??.