Followers

Search Here...

Sunday, 22 April 2018

உலகத்தில் தர்மம் எதை ஆதாரமாக கொண்டு நிற்கிறது? தர்மத்தின் நான்கு கால்கள் என்ன? பரீக்ஷித் கலி புருஷன் சரித்திரம். தெரிந்து கொள்ள வேண்டாமா?

துவாபர யுகம் முடிந்து, கலியுகம் ஆரம்பம் ஆகியிருந்த ஸமயம்.
பரிக்ஷித்து மன்னன் ஆட்சியில் இருந்தார். 

பரிக்ஷித்து, உலகத்துக்கே பேரரசனாக இருந்தார்.
பரிக்ஷித்து, அபிமன்யுவின் மகன்.
அபிமன்யு அர்ஜுனனின் மகன்.
அர்ஜுனனின் மனைவி சுபத்ரா.
சுபத்ரா கிருஷ்ணரின் தங்கை.




பரிக்ஷித்து மன்னன், ஒரு நாள் தனது நாட்டில் ரதத்தில் பவனி வந்து கொண்டிருக்கும் பொழுது, சரஸ்வதி நதிக்கரையில் ஒரு பசு மாட்டையும் , மூன்று கால்களும் வெட்டப்பட்டு ஒற்றைக் காலுடன் கண்ணீர் வடித்த நிலையில் ஒரு காளையையும் கண்டார்.
ஒற்றைக் காலில் நிற்கும் காளையை, ஒருவன் தடி கொண்டு அடிப்பதனையும் கண்டார்.

அவன் பார்ப்பதற்கு 'மன்னன் போன்று வேஷம்' போட்டிருந்தாலும், அவன் அரச குலத்திலிருந்து வந்தவன் போல் இல்லை. 

ஒரு அரசன் இது போன்று பசுவையும், காளையையும் துன்புறுத்த மாட்டான்.

கையில் காண்டீபம், வில் ஏந்திய பரிக்ஷித்து மன்னன் காளை இருக்கும் இடம் சென்றார்.
கடும் கோபம் கொண்டு அடித்தவனை பார்த்து கர்ஜித்தார் -
"என்னுடைய ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தில், இது போன்று அப்பாவி உயிர்களை இரக்கமில்லாமல் கொலை செய்ய முற்பட்ட நீ யார் ? பார்ப்பதற்கு ஒரு தேவன் போன்று ஆடை உடுத்தி இருந்தாலும், நீ செய்யும் செயலை கண்டால் நாகரீகம் தெரியாத காட்டு மிராண்டி போன்று இருக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ணரும், அர்ஜுனரும் இங்கு இல்லை என்கிற தைரியத்தில் இது போன்று அப்பாவி காளையை அடிக்க துணிந்தாயோ? குற்றவாளியான நீ கொல்லப்பட வேண்டியவன்."

இப்படி சொல்லிக் கொண்டே அருகில் உள்ள பசுவின் உதவியோடு நின்று அழுது கொண்டிருந்த காளையை நோக்கி பேசலானான் -
"மூன்று கால்களையும் இழந்து, இந்த பசுவின் துணை கொண்டு நிற்கும் நீ, உண்மையிலேயே ஒரு காளை தானா, அல்லது இந்த சோக காட்சியை காண வைக்க வேண்டும் என்று காளை ரூபத்தில் உள்ள ஒரு தேவனா?
இந்த உலகம் முழுவதும் என் ஆட்சி பரவி உள்ளது. இது நாள் வரை, ஒருவரும் இது வரை இது போன்று கஷ்டப்படவில்லை, கண்ணீர் வடிக்கவும் இல்லை."

அருகில் இருந்த பசுவை பார்த்து,
"ஹே பசு மாதா, என்னுடைய ஆட்சியில் ஒருவரும் துன்பப்பட மாட்டார். நான் உயிருடன் இருக்கும் வரை, நீ எந்த விதத்திலேயும் கவலை பட தேவை இல்லை. இந்த கொலைகாரனை பார்த்து பயப்படாதே ! ஒரு உயிரை துன்புறுத்திய குற்றத்திற்கு அவனுக்கு மரணமே தண்டனை. அதை அரசனான நானே அவனுக்கு தருவேன்."

அருகில் இருந்த காளை பக்கம் திரும்பி
"நீ எந்த விதமும் தவறு செய்தவன் போன்று தெரியவில்லை. இது போன்ற கீழ் தரமான காரியங்களை ஸ்ரீ கிருஷ்ணர் இருந்த இந்த பூமியில் ஒருவரும் செய்யமாட்டர். இப்படி இருக்க உன் மூன்று கால்களையும் யார் வெட்டினார்கள்?
ஏன் அழுது கொண்டிருக்கின்றாய்?
ஏன் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருக்கின்றாய்?
உனது மற்ற கால்கள் என்னவானது?
உன்னை இவன் ஏன் அடிக்கின்றான்?
நீ சரியான காரணம் கூறினால், இவனை நான் கொன்று விடுகின்றேன்.
எனது அரசாட்சியில்,இது மாதிரியான கொடுமைகள் நிகழ்வதனை நான் அனுமதிக்க முடியாது. என் எதிரிலே உன்னை அடித்ததனால், இவனை கொல்வதே சரி ..."
என்று தனது கூரிய இடை வாளை கையில் எடுத்தான் மன்னன்.

ஆச்சரியப்படும் விதமாக,
அந்தக் காளை பேச ஆரம்பித்தது.

"உயர்ந்த பாண்டு மன்னன் குலத்தில் இருந்து வந்த நீயும் உயர்ந்த குணம் கொண்டிருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

உங்களின் உயர் பண்பினால் தான், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் உங்களுடன் நட்பு கொள்ள ஆசை பட்டு வந்தார்.

உயர்ந்த குணம் உள்ள மன்னா! துன்பம் ஒருவனுக்கு வரும் போது, அதற்கு உண்மையான காரணத்தை நாம் அறிய முடியாது.

தன் துன்பங்களுக்கு
1. சிலர், "தானே" காரணம் என்று சொல்கிறார்கள்.
2. சிலர், விதியென்று சொல்கிறார்கள்.
3. மற்றவர்கள் அவரவர் செய்த கர்மங்களின் பலன் என்று சொல்கிறார்கள்.
4. மற்றவர்கள் இயற்கை என்றும்
5. சிலர் இது போன்ற கேள்விகளுக்கு கொடுக்கப்படும் எந்த பதிலும் காரணமாக இருக்க முடியாது என்று சொல்கிறார்கள் ....

இவைகளில் எது சரி?
துன்பங்களுக்கு காரணம் என்ன என்று நீ நினைக்கிறாய்?"
என்று மன்னன் கேட்ட கேள்விக்கு பதில் உரைக்காமல் திருப்ப பதில் கேள்வி கேட்டது.




பொதுவாக ஒருவன் துன்பத்தில் இருக்கும் போது, ஆறுதலாக ஒருவன் வரும் போது, உடனே தன் சோக கதையை சொல்லி அழுது புலம்பி, ஆறுதல் தேட, உதவி தேட நினைப்பவர்கள் தான் உலகத்தில் உண்டு.

இப்படி இருக்க, இந்த காளை காப்பாற்ற மன்னன் வந்தும், காக்க வேண்டும் என்று கேட்காமல், ஒரு ஞானியை போன்று பேசியது மன்னனுக்கு ஆச்சர்யம் அளித்தது.

ஒரு விலங்கு பேசியதும் ஆச்சர்யம் அளித்தது.
மன்னன், தன்னிடம் பேசுவது சாதாரண காளை அல்ல என்பதனை உணர்ந்தான்.

மேலும், தர்ம தேவதையே காளையாய் வடிவம் கொண்டு வந்துள்ளது என்பதனையும் உணர்ந்தான்.

பூமி மாதாவே பசுவாய் வடிவம் கொண்டு வந்துள்ளது என்பதனையும் உணர்ந்தான்.

"காளை உருவில் இருக்கும் தர்ம தேவதையே, நீ இப்படி பேசியதற்கு காரணம் புரிகிறது.
குற்றம் செய்தவனும், குற்றம் இவன் செய்தான் என்று காட்டிக் கொடுப்பவனும், உண்மையில் அனைவரது உள்ளேயும் அந்த பகவான் உள்ளார் என்று அறியாமையால் தான் செய்கின்றனர்.

அதனால் தான் நான், "யார் உன்னை துன்பப் படுத்தினார்கள்?" என்று கேட்டதற்கு

"இவன் தான்" என்று கூற மறுக்கிறாய்.

நீ தர்ம தேவதை என்று உணர்ந்தேன்.

இந்த உலகத்தில் தர்மம் நான்கு கால்கள் கொண்டு தான் நிலை பெற்று இருக்கிறது என்று அறிவேன்.

சத்ய யுகத்தில் உனக்கு "தவம், நன்னடத்தை, இரக்கம், உண்மை" என்ற நான்கு கால்களுடன் இருந்தாய்.

பின்பு காலம் செல்ல செல்ல, தற்பெருமை, ஆசை, அகங்காரம் இந்த மூன்றின் காரணமாக, நீ உன்னுடைய மூன்று கால்களான "தவம், நன்னடத்தை, இரக்கம்" போன்றவற்றை இழந்து, "உண்மை" என்ற காலுடன் மட்டும் இந்த கலியில் நிற்கிறாய் என்று உணர்ந்தேன்.

அதனையும் பொய் என்ற பிரம்பு கொண்டு அடித்து, ஒரு காலையும் பறிக்க முயல்பவன் "கலி புருஷன்" என்றும் அறிந்தேன்.
"பூமி" என்ற பசுவும் செய்வதறியாது கவலை மிகக் கொண்டு பார்த்துக் கொண்டு நிற்கிறது என்றும் அறிந்தேன்."
இவ்வாறு தர்மம் தேவனையும், பூமி மாதாவையும் சமாதானப் படுத்திய மன்னன், சினம் கொண்டு, தன் வாளை உருவி, கலி புருஷனை நோக்கி கொல்ல முனைந்தார்.

இதனால் அரச வேடத்தில் இருந்த "கலி புருஷன்" பயங்கொண்டு, தன் நிஜ ரூபத்தில் பரிக்ஷித்து மன்னன் காலில் விழுந்து மன்றாடினான்.




1. ஏழைகளும்,
2. தஞ்சம் புகுந்தவர்களும்,
3. பாராட்டப்பட வேண்டியவர்களும்
ஒரு அரசனால் கனிவாக காப்பாற்ற படவேண்டியவர்கள்.

இதை அறிந்த பரிக்ஷித்து மன்னன், காலில் விழுந்த கலி புருஷனை பார்த்து சொன்னார்

"என் காலில் விழுந்து விட்டதால் நீ உயிருக்கு பயப்பட வேண்டாம். ஆனால் உயிர் ஹிம்ஸை செய்யும் நீ, பண்பாடு இல்லாதவன். இங்கு உள்ள அனைவரும், தெய்வம் எங்கும் எதிலும் இருக்கிறார் என்று அறிந்தவர்கள்.

காற்று உள்ளும் புறமும் எங்கும் உள்ளது போல, அவர் இல்லாத இடம் இல்லை. அதனால் எந்த உயிரையும் ஹிம்சிக்க மாட்டார்கள்.

இப்படி இருக்க, உன்னை போன்றோர் இந்த உலகத்தில் இருப்பது பெரிய தீங்கு.
நீ உடனே இந்த உலகத்தை விட்டு சென்று விடு"
கை கூப்பிய வண்ணம் கலி புருஷன்
"உலகில் கலியுகம் துவங்கிவிட்டதால் கலி புருஷனாகிய நான், இறைவனின் கட்டளையால் நானும் இருந்தாக வேண்டியவனாகிறேன்.

உங்கள் அரசாட்சியின் கீழ் நான் உங்களுக்கு அடி பணிகிறேன்.
என்னால் ஒரு போதும் மக்களுக்கும் தீங்கு விளையாது. ஓ மன்னனே! நான் சில இடங்கள் நிரந்தரமாக தங்க, தாங்கள் தயை கூர்ந்து அனுமதிக்க வேண்டும்." என்று கேட்டார்.

அதற்கு மன்னன் "சூதாட்டம் (பொய்), மது, விபச்சாரம், பிராணிகள் கொல்லப்படும்" இடம் ஆகிய இடங்களில் தங்க அனுமதிக்கின்றேன் என்றார்.

கலி புருஷன் மேலும் ஓரிடம் வேண்டும் என்று கேட்டார்.

மன்னன் "பேராசை (தங்கம்) கொண்ட இடத்திலும்" நீ தங்கிக் கொள்ளலாம் என்றார்.

பொய் சொல்லுதல், மது அருந்துதல், கொலை செய்தல், பேராசை, காமம் கொண்டு தவறு இழைத்தல் ஆகியன கலியின் குணங்களாயின.
இதுவே பஞ்ச மகா பாவங்கள் ஆகும்.
இதில் ஒன்று செய்தால் கூட கலி புருஷன் ஆட்கொள்வான்.
"நேர்மையாக வாழ விரும்புபவன்" இந்த ஐந்தையும் தவிர்த்து வாழும் போது, அவனுக்கு கலியின் தாக்கம் உண்டாகாது என்றும், இறைவன் அருள் கிட்டும் என்பதனை உணரவேண்டும் என்றார் மன்னன்.




தக்க உரையினால் காளைக்கு ( நீதி தேவதைக்கு ) இழந்த மூன்று கால்கள் திரும்பக் கிடைத்தன.

பசு வடிவில் நின்று கொண்டிருந்த பூமி மாதாவும், அரசனின் பதிலுரையால் திருப்தி அடைந்து மறைந்து விட்டது.

ஸ்ரீ கிருஷ்ணர்,
"எப்பொழுதெல்லாம் தர்மம் வீழ்ச்சி அடைகிறதோ அப்பொழுது எல்லாம் நான் அவதாரம் செய்கிறேன்" என்கிறார்.

தர்மம் எப்பொழுது வீழ்ச்சி பெரும் என்ற கேள்விக்கு, இந்த நிகழ்ச்சி நமக்கு விடை கொடுக்கிறது.

தர்மம் என்ற மேடை, "தவம், நன்னடத்தை, இரக்கம், உண்மை" என்ற நான்கு கால்களுடன் நிற்கிறது.
இந்த தர்மத்தின் மீது தான் தலைவனாக நிற்கிறார் "பெருமாள்". 
எந்த கோவிலிலும், நம் வீட்டிலும் உள்ள தெய்வ விக்ரஹங்கள் உள்பட ஒரு மேடை மீது நிற்பது இதனை தான் விளக்குகிறது.

எதிலும் காரணம் இல்லாமல் ஒரு ஹிந்து செய்ததாக இல்லை.
"தெய்வத்தை வழிபடும் போது" இதையே தியானிக்க வேண்டும்.

மனிதனின் "கடமை" இந்த நான்கு கால்களான
1. தவம் (மன கட்டுப்பாடு),
2. நன்னடத்தை,
3. இரக்கம்,
4. உண்மை
போன்றவற்றை கடை பிடிப்பதே.

அதனால் தான் தெய்வத்திடம் காலில் விழுந்து வணங்குவது என்ற பழக்கம் நமக்கு உள்ளது.
இந்த நான்கை கடை பிடிப்பவன், தர்மத்தை கடை பிடிப்பவன் ஆவான்.

தர்மத்தை காப்பவனுக்கு இறை அருள் கிட்டும். தர்மம் தலை காக்கும்.

கலியில் மூன்று கால்கள் இழந்த நிலையில் இருந்த தர்ம தேவன், மறைமுகமாக சொல்வது என்ன?

இனி வரும் மனிதர்கள் தவம், நன்னடத்தை, இரக்கம் குன்றி காணப்படுவர்.

ராவணன், ஹிரண்யகசிபு, கம்சன் போன்ற பொல்லாதவர்கள் கூட போன யுகங்களில் தவம் செய்யும் வலிமையுடன் இருந்தனர். பல ஆண்டுகள் உடலை வருத்தி, ப்ரம்ம தேவனையும், சிவனையும் நேரில் காணும் வலிமை கொண்டிருந்தனர்.

பொதுவாக தவம் செய்பவர்கள் உடலையும், புலன்களையும் அடக்கும் சக்தி உள்ளவர்கள்.

இனி இந்த கலியில் தவம் மிகவும் குன்றி போகும். புலன்களை அடக்குவது முடியாத காரியமாகி போகும்.

ஏகாதசி போன்ற நாளில், ஒரு நாள் கூட சுத்த பட்டினி இருக்க முடியாதவர்களாக, சக்தி அற்றவர்களாக இருப்பர்.

மூன்று வேளை சாப்பிட்டாலும், இன்னும் பசி என்பர், சோம்பேறிகளாக இருப்பர்.
இனி இந்த கலியில் நன்னடத்தையும் (தூய்மை) மிகவும் குன்றி போகும். கோவிலுக்கு குளித்து விட்டு தான் செல்ல வேண்டும், அசுத்தமான காலங்களில் பெண்கள் வீட்டில் வேலை செய்யாமல் ஓய்வு எடுக்க வேண்டும், ஆண்கள் வீட்டு வேலைகளை இந்த சமயங்களில் செய்யலாம். தினமும் வாசலையும், வீட்டையும் சுத்தமாக தானே வீட்டில் உள்ளவர்கள் செய்ய வேண்டும். மன தூய்மை வேண்டும், புறத் தூய்மையும் வேண்டும். இவை எல்லாம் இனி இந்த கலியில் கெடும் என்று உணர்த்தினார். கலி ஆரம்பித்து 5000 வருடங்களே ஆகியுள்ள நிலையில் இதன் தாக்கம் இப்போதே உள்ளது. கலி யுகத்தின் மொத்த வருடமோ 4,32,000 வருடங்கள். இனி இன்னும் எப்படி எல்லாம் கெடும் என்று தெரிகிறது.

இனி இந்த கலியில் இரக்கம் என்ற குணமும் கெட்டு போகும். பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் உயிருடன் இருக்கும் போது மட்டுமின்றி, இறந்த பின்பும் நன்றி உணர்வுடன், தான் உயிருடன் இருக்கும் வரை திவசம் செய்த இவர்கள் குடும்பத்தில் வரும் மனிதர்கள், இருக்கும் போதே அனாதையாக தாய் தந்தையை விட்டு விட்டுவர்.




பண மோகம் தலை விரித்தாடி, தன் சொந்தங்கள் கஷ்டப் பட்டாலும் பார்த்து கொண்டு தான் இருப்பர்.

இருக்கும் போதே தாய், தந்தைக்கு சோறு போடாதவன், கொல்லி வைக்காதவன், திவசம் மட்டும் செய்து விடுவானா? தன் குறையை மறைக்க நாத்தீகமும் பேசுவான். சாஸ்த்திர பொய் என்று பேசி தன்னை நியாயப்படுத்த முனைவான்.

முதலாளிக்கு தொழிலாளியிடம் இரக்கம் இருக்காது. தொழிலாளிக்கு முதலாளியிடம் இரக்கம் இருக்காது. பணம் ஒன்றே அனைவருக்கும் குறிக்கோள் என்று இருப்பர்.
இப்படி மூன்று கால்களும் (தவம், நன்னடத்தை, இரக்கம்) தேய்ந்து போகும் என்பதை கலியின் ஆரம்பத்திலேயே தர்ம தேவன் உரைத்தான்.

உண்மை என்ற ஒரு கால் மட்டும் இந்த கலியில் இன்னும் உயிர் வாழ்கிறது என்று தர்ம தேவன் உணர்த்தினார்.

உண்மை இந்த உலகில் உள்ளதா என்று நமக்கு கேள்வி எழும்.

இந்த உண்மை நம்மை மட்டும் குறித்து பேசப்படவில்லை. மனிதன் தவம், நன்னடத்தை, இரக்கம் போன்றவற்றை இழந்து மனித சமுதாயத்துக்கும், தேவர்களுக்கும், பூமிக்கும் செய்யாத கேடுகள் எல்லாம் செய்த போதிலும், பூமி மாதாவும், தேவர்களும் அந்த நாராயணருக்கு பயந்து, தன் கடமையை பொறுத்து கொண்டு செய்வார்கள் என்பதை இது உணர்த்துகிறது. உண்மை என்ற சத்தியம் இவர்களால் கலியில் நிலைக்கும்.

மனிதன் விடி காலையில் எழுந்திருக்கிறானா, சூரிய தேவனுக்கு, சோம தேவனுக்கு, குரு தேவனுக்கு, சுக்ரன், சனீஸ்வரனுக்கு, அங்காரகம் (செவ்வாய் தோஷம்) தேவனுக்கு, புதன் தேவனுக்கு நன்றி சொல்கிறானா, உண்மையாக தான் இருக்கிறானா என்று எதிர் பார்க்காமல், சத்தியத்திற்கு கட்டுப்பட்டு தேவர்கள் தன் கடமை செய்வர்.

பூமியில் எங்கும் வெடி வைத்தும், குழி தோண்டியும், பூமியை வைத்து பணம் சம்பாதித்தும் இந்த கலியில் பூமி மாதாவை ஹிம்சிப்பர். இருந்தும் பொறுமை காத்து, நில நடுக்கம், விளைச்சல் இல்லாமல் செய்து உணவு பஞ்சம் செய்யாமல் பூமி மாதா தன் சத்தியத்தின் வழி நடப்பாள்.




சில இடங்களில் அசம்பாவிதம் காண்பது, நம்மை எச்சரிக்கவே !

சூரிய தேவன் இன்றுவரை தன் நிலையில் இருந்து நம் அருகில் வராமல் இருப்பதே அவர் தன் சத்தியத்தில் இருக்கிறார் என்று தெரிகிறது. இதையே தர்ம தேவன் ஒரு கால் மட்டும் கலியில் இருப்பதாக காட்டினார்.



Saturday, 21 April 2018

"ஒப்பில்லாத" என்று கூறும் போது - ஆழ்வார் நிலை எப்படி இருந்தது?

ஒப்பில்லாத பெருமாள் என்றால் பொதுவாக நாம் நினைப்பது, அவர் மிகவும் உயர்ந்தவர், தன்னிகர் இல்லாதவர் என்று.

ஆழ்வார் தன் பாசுரத்தில் "ஒப்பில்லாத" என்று கூறி கதறுகிறார். ஒப்பில்லாதவன் என்று கூறி, பெருமாள் உயரந்தவர் என்று சொல்லும் போது பெருமை படாமல் ஏன் ஆழ்வார் கதறுகிறார்?




ஆழ்வாரின் நிலை:
நரசிம்மருக்கு பிரகலாதன் ஒப்பு. 

"ஒப்பு" என்றால் பகவான் செய்யும் கருணைக்கு, ஒப்பாக பக்தன் பக்தி செய்வான்.
 

ராமருக்கு ஹனுமான் ஒப்பு.
கிருஷ்ணருக்கு கோபிகைகள் ஒப்பு.
 

இப்படி ஒப்பாக இருப்பதனாலேயே, பெருமாள் அவர்களை கண்டாலே ப்ரீதி கொள்கிறார்.

யாருக்குமே தனக்கு ஒப்பாக இருப்பவரையே பிடிக்கும்.

தன்னை விட குறைந்த அந்தஸ்த்தோ, படிப்போ, குலமோ இருந்தால் பழக கூட மாட்டர்.

பிரகலாதனும், கோபிகைகளும், ஹனுமனும் வந்து நின்றால், பெருமாளுக்கு ஒப்பாக இருக்கும். பெருமாள் பிரசன்னமாவார். அது நியாயம்.




எந்த விதத்திலேயும் ஒப்பு இல்லாத நிலையில், உன் கருணையை மட்டும் எதிர்பார்த்து, எந்த தைரியத்திலோ வந்து விட்டேன்.

வந்த பின் தான் தெரிகிறது, நான் எந்த விதமும் உனக்கு ஒப்பு இல்லையே என்று.
இதை நினைத்து,
ஆழ்வார் "ஒப்பில்லாத" என்று கூறும் போது தன் நிலை நினைத்து கதறுகிறார்.

Friday, 13 April 2018

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்கள் என்ன?. கிருஷ்ணணே பகவான்

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்களை விஷ்ணு புராணம் சொல்கிறது.
1. பூர்ணமான ஐச்வர்யம்
2. பூர்ணமான தர்மம்
3. பூர்ணமான புகழ்
4. பூர்ணமான ஸ்ரீ
5. பூர்ணமான வைராக்யம்
6. பூர்ணமான மோக்ஷம்

இந்த ஆறும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இருந்ததை இனி பார்ப்போம்.

1. பூர்ணமான ஐச்வர்யம் : (Complete Power to create, maintain, destroy)
  • படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மாவை போல, வத்ஸா பஹரண லீலை செய்து, பிரம்மாவை போல படைத்தது,
  • அழிக்கும் தொழிலை செய்யும் ருத்திரனை போல, பாணாஸுர யுத்தத்தில் ருத்திரனை வென்று, பாணாஸுரனை வதம் செய்தது,
  • வைதீகன் பிள்ளைகளை மீட்டதில் விஷ்ணுவையும் அடக்கினதாலும்,
  • இந்திரனை கோவர்த்தன லீலை செய்து தோற்கடித்தும்,
  • ஸாந்தீபனியின் பிள்ளையை யமனிடம் மீட்டதும், 
ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான ஐச்வர்ய ஸ்வரூபம் என்று தெரிகிறது.

2. பூர்ணமான தர்மம் :  (Stand by Dharma)
  • அதர்மம் செய்த கம்சன், நரகாசுரன், பாணாசுரன், ஜராசந்தன், கௌரவர்கள் அனைவரையும் அழித்து, தர்மத்தை நிலை நாட்டி
  • யுதிஷ்டிரனை ஆட்சியில் அமர்த்தியதில், 
ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான தர்ம ஸ்வரூபம் என்று தெரிகிறது.

3. பூர்ணமான புகழ் : (Fame beyond boundary)
  • ஸ்ரீமத் பாகவதம், மஹா பாரதம், ஸ்ரீமத் பகவத் கீதை போன்ற என்றும் நிலைக்கும் பிரமாணங்களே 
பூர்ணமான புகழ் கொண்டவர் ஸ்ரீ கிருஷ்ணர் என்று தெரிகிறது.




4. பூர்ணமான ஸ்ரீ :  (Complete Wealth)
  • மஹாலக்ஷ்மி ஸ்ரீகிருஷ்ணருக்கு ருக்மிணியாக சேவை செய்தாள் எனில், ஸ்ரீ கிருஷ்ணரை விட பூர்ணமான ஸ்ரீமான் யார்? 
  • செல்வம் கொழித்த தேசமாக இருந்தது துவாரகை.
    ஸ்ரீ கிருஷ்ணரை நம்பியதாலேயே பெரும் செல்வம் அடைந்து, பேரரசனும் ஆனார் தர்மபுத்திரர். 
  • ஏழை பிராம்மணன் குசேலர் என்ற சுதாமா, ஸ்ரீ கிருஷ்ணரை பார்க்க சென்றதற்கே அவர் பெரும் செல்வந்தனாக ஆனார் என்ற நிகழ்ச்சிகளே 

ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான ஸ்ரீமான் என்று தெரிகிறது.

5. பூர்ணமான வைராக்யம் :
  • ஷோடச ஸ்திரீ ஸஹஸ்ரேசன் ஆயினும், அநாதி ப்ரம்மச்சாரி என்று ஸ்ரீ கிருஷ்ணரை, ப்ரம்மச்சாரியான பீஷ்மரும், சுகரும் சொல்லும் போதே பூர்ணமான வைராக்யம் ஸ்வரூபமாக கொண்டவர் ஸ்ரீ கிருஷ்ணர் என்று தெரிகிறது. 
  • பிறக்கும் போதே தாயும், தந்தையும் சிறையில், தனக்கு முன் பிறந்த குழந்தைகள் அனைவரும் கொலை செய்யப்பட்ட சோகம், கோகுலத்தில் வளரும் போதே குழந்தையாக இருந்ததில் இருந்தே கொலை செய்ய பல வித முயற்சி, பல விதத்தில் ஜராசந்தன் போன்றவர்களால் யாதவர்கள் இன்னல் போன்றவை ஏற்பட்டும், ஸ்ரீ கிருஷ்ணர் எந்த நிலையிலும் மனம் தளராத தீரனாகவும், மகிழ்ச்சி குறையாதவனாகவும், சம நிலையில், புலம்பல் இல்லாமல், அழுகை இல்லாமல், அனைத்து கஷ்டங்களையும் எளிதாக சமாளித்து, மற்றவர்களும் இவரால் பயன் பெறும் வகையில் பூர்ணமான வைராக்ய ஸ்வரூபமாக இருந்தார். 
  • பகவத் கீதை முழுவதுமே ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான வைராக்கியம் உடையவர் என்று உணர்த்துகிறது.

6. பூர்ணமான மோக்ஷம்:
  • மோக்ஷம் என்ற வைகுண்டம் நாராயணர் மட்டுமே கொடுக்க கூடியது. 
  • எந்த புண்யத்தாலும் சம்பாதிக்க முடியாத மோக்ஷம் என்ற வைகுண்டத்தை
  • எந்த தகுதியும் இல்லாத பூதனை போன்ற அல்பத்திற்கும் தன் சங்கல்பத்தில் (விருப்பத்தில்) வைகுண்டம் கிடைக்கச் செய்தார்.
பகவான் என்ற சொல்லின் 6 அர்த்தங்களையும் கண்ணன் காண்பித்தான்.

நாராயணரின் விபவ அவதாரத்தில், இந்த ஆறும் நிரம்ப அவதாரம் செய்தது ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே.

கையை தூக்கி நோயே விலகு, பிசாசே ஓடு என்று இந்த்ரஜாலம் செய்வதும், நதியில் நடப்பதும், நதியை கடக்க முயலும் போது நதி வழி விடுவதும் அனைத்தும் ஒரு யோக கலையே.

நம் தமிழ் நாட்டில் குட்டி முனிவர் அகத்தியர் கடல் நீரை அள்ளி தன் கமண்டலத்தில் அடக்கி விட்டார்.
ராவணன் பத்து தலைகளுடன், யமனையும் சேர்த்து அடிமை செய்து விட்டான்.
வசிஷ்டர் தன் தண்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான போர் படைகளை உருவாக்கி, விஸ்வாமித்திரர் அரசனாக இருந்த போது சண்டை இட்டார்.




இப்படி சாகசங்கள், ஆச்சரியங்கள், மருத்துவன் செய்ய கூடிய சிகிச்சைகள் செய்யும் இவர்களை மூடத்தனமாக பகவான் என்று ஹிந்துக்கள் கூறவில்லை.
ஞானி, மஹாத்மா, முனி, ரிஷி, ஸாது, அரசன் என்று மதிப்பு கொடுத்தனர்.

அகத்தியர், பதஞ்சலி போன்ற பெரும் முனிகளை, மதித்தனர்.
ஆனால் பகவான் என்று சொல்லவில்லை.

இந்த 6ம் ஸ்ரீ கிருஷ்ணருக்கு இருப்பதால், முழு முதல் பகவான் கண்ணனே

"பகவான்" என்ற பெயருக்கு உரிமையாளன் யார்?

பொதுவாக, எந்த தெய்வத்தையும் "பகவான்" என்று சொல்லி ஆனந்தப்படுகிறோம்.

புத்தரை கூட சிலர் "புத்த பகவான்" என்று சொல்வதுண்டு.

"பகவான்" என்ற மதிப்பு மிக்க அடையாளத்தை அனைத்து தெய்வங்களும் பயன்படுத்தினாலும், ஆழ்ந்து கவனிக்கும் போது, எந்த தெய்வம் "பகவான்" என்ற பெயருக்கு உண்மையில் உரிமையாளர் என்று தெரிந்து விடும்.

ஒவ்வொரு தேவதைக்கும் புராணம் சொல்லப்பட்டு இருக்கிறது.

சிவபெருமானை பற்றி சொல்லும் புராணத்திற்கு "சிவ புராணம்" என்று பெயர் உள்ளது.

கணேசனை பற்றி சொல்லும் புராணத்திற்கு "கணேச புராணம்",
முருகனை பற்றி சொல்லும் புராணத்திற்கு "கந்த புராணம்" என்று பெயர் உள்ளது.

இப்படி ஒவ்வொரு தெய்வத்தின் புராணமும் அவரவர் பெயர்களை கொண்டிருக்க,
ஸ்ரீ கிருஷ்ணனை பற்றி சொல்லும் புராணத்திற்கு "கிருஷ்ண புராணம்" என்று இல்லாமல், அவர் பெயரை கூட பயன்படுத்த அவசியமில்லாமல், "பாகவதம்" என்று பெயர் உள்ளதை கவனிக்க வேண்டும்.

தேவியை பற்றி சொல்லும் புராணத்திற்கு கூட "தேவி பாகவதம்" என்று தேவியின் அடையாளத்தை சேர்த்து தான் பெயர் உள்ளது. 

ஆனால், ஸ்ரீ கிருஷ்ண சரித்திரத்தை சொல்லும் போது, கிருஷ்ணன் என்று சொல்லக்கூட அவசியமில்லாமல், "பாகவதம்' என்று தனித்து நிற்கிறது.

புராணங்கள் மட்டும் தான் இப்படி உள்ளது என்றில்லை.. உபதேச க்ரந்தங்களும் இப்படியே இருக்கிறது.

ருத்ரன் உபதேசித்த கீதைக்கு "ருத்ர கீதை", "சிவ கீதை" என்று பெயர்.
கணேசன் உபதேசித்த கீதைக்கு "கணேச கீதை" என்றும்,
எமன் உபதேசித்த கீதைக்கு "எம கீதை" என்றும் பெயர் உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார் என்றதும், "கிருஷ்ண கீதை" என்று தானே இருக்க வேண்டும்...

ஆனால், ஸ்ரீ கிருஷ்ணனே "பகவான்" என்பதால், அவர் உபதேசித்த கீதைக்கு மட்டும் "பகவத் கீதை" என்று பெயர் ஏற்பட்டது.

அது மட்டுமல்ல,
மஹாபாரதத்தில் மற்ற இடங்களில் ஸ்ரீ கிருஷ்ணர் சகஜமாக பேசும் இடங்களில் "ஸ்ரீ கிருஷ்ணன் பேசுகிறார்" என்றே காண்கிறோம். 
அர்ஜுனன் பேசும் போது கூட, "அர்ஜுன உவாச" (அர்ஜுனன் பேசுகிறான்) என்றே பகவத் கீதையில் உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணர், உபதேசிக்கிறார் என்றதும், "கிருஷ்ண உவாச" என்ற பதத்தை பயன்படுத்தாமல், "பகவான் உவாச... பகவான் உவாச... பகவான் உவாச..." என்று கீதை முழுக்க "பகவான் பேசுகிறார்... பகவான் பேசுகிறார்..  பகவான் பேசுகிறார்" என்று இருப்பதை காண்கிறோம்.

பகவான் பேசும் கீதையை படிக்க யாருக்கு தான் ஆசை ஏற்படாது. 

கிருஷ்ண சரித்திரம் "பாகவதம்' என்றும்,
அவர் உபதேசம் செய்தால் "பகவத் கீதை" என்றும்,
அவர் பேசுனால், "பகவான் உவாச" என்றும் பார்க்கும் போது "பகவான்" என்ற பெயருக்கு உரிமையாளன் யார் என்று தெளிவாக நமக்கு தெரிகிறது.

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்கள் சேர்த்து சொல்லப்படுகிறது. 

இந்த 6ம் ஒரு சேர பெற்றவர் ஸ்ரீ கிருஷ்ணர் ஒருவரே. 

ஸ்ரீ கிருஷ்ணரே "பகவான்"



மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் இவை ஏற்பட காரணம் என்ன?

மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் இவை ஏற்பட காரணம் என்ன?

Spiritual Answer:

பொதுவாக நாத்தீகன் தனக்கும் மேல் ஒரு பரமாத்மா இருக்கிறார் என்று அறியாமல், எல்லாம் தன் முயற்சியால் நடக்கும் என்று நினைப்பான்.
அவனுக்கு மீறி இருக்கும் பல விஷயங்கள், மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் போன்றவற்றை கொடுக்கும்.

இந்த பயம், கவலை இவர்களில் சிலருக்கு நோய் உண்டாக்கும், சிலருக்கு சோம்பறித்தனத்தை கொடுக்கும். சிலருக்கு தீவிரவாதம், கோபம் போன்ற குணத்தை கொடுக்கும்.




இது போன்ற கவலைகள் நாம் அடைவதே ஒரு நாத்தீக லட்சணம்.

மகா சக்தி வாய்ந்த பகவான் உங்களை மட்டுமின்றி உலகையே காக்க வல்லவன் என்று தெரிந்தும், கவலை பட கூடாது.

நம்மையும் வழி நடத்த கடவுள் இருக்கிறார் என்ற அறியும் நிலையில் நீங்கள் இருந்தால், எந்த நிலையிலும் முயற்சியும் கை விடமாட்டீர்கள், கவலையும் பட மாட்டீர்கள்.

கவலைகள் பல இருந்தாலும், தியானம் உடனே சிலருக்கு கை கூடுவதற்கு காரணம் இந்த தைரியம் தான்.

கவலைகள் பல இருந்தாலும், சோர்ந்து போகாமல் தன் கடமையை உற்சாகத்துடன் தொடர்ந்து செய்பவர்கள் இந்த தைரியத்தில் தான்.




யோகிகள், சாதுக்கள் சோம்பேறிகளாய் இல்லாமல் இருப்பதற்கு காரணம் இந்த தைரியத்தில் தான்.

எந்த வறுமையிலும் தன் முயற்சியை விடாமல் இருப்பவர்களும் இந்த தைரியத்தில் தான்.

நாத்தீக குணத்தை விட்டு விடுவதாலேயே, மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் போய் விடும். 
 
இந்த தைரிய மன நிலையில் அமர்நது கொண்டு, கட்டை விரலின் நுனியும், மோதிர விரலின் நுனியும் சேர்த்து, பிராணாயாமம் மெதுவாக, நிதானமாக 30 நிமிடம் தினமும் செய்தாலே உயர் ரத்த அழுத்தம் என்ற நோயே அண்டாமல் போகும்.

அதர்ம புத்தி ஒழிய வேண்டும் என்றால் அனைவரும் ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை தினமும் தியானிக்க வேண்டும்

சத்தியம் (வாக்கு கொடுத்தால் அதில் உண்மையாக இருப்பது)

"சத்தியம்" என்ற தர்மம், இன்றைய இந்தியாவில் உள்ள மக்களிடம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

"நாளை 10 மணிக்கு உங்களை பார்க்க வருகிறேன்" என்று ஒரு இன்றைய இந்தியன் சொன்னால், இவன் சத்தியத்தை நம்ப முடிவதில்லை.

இன்று, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்த சத்தியத்தை உயிராக மதிக்கின்றனர்.
இந்தியாவில் இதற்கு மதிப்பு குறைகிறது.

சத்தியத்தை மதிக்கும் நாடு எப்பொழுதுமே பிரகாசம் அடையும் என்பது இந்த நாடுகள் எப்படி வலிமையாக இருக்கிறது என்று பார்க்கும் போதே தெரிகிறது.

சத்தியத்துக்காக வாழ்ந்த ராமர் பிறந்த நாட்டில், இந்த தர்மம் வீழ்ந்ததற்கு காரணம் என்ன ? 
ராமர் போன்ற சத்தியத்தில் நின்றவர்கள் சரித்திரத்தை நாம் மறந்ததே இதற்கு காரணம்.

சத்தியத்தில் நிற்கும் மக்களே, நாட்டை உயர்த்த முடியும்.
இனி இந்தியா முன்னேற ஒவ்வொரு இந்தியனும் முதலில் கடைப்பிடிக்க வேண்டியது சத்தியமே !

சரி,
எப்படி இந்தியாவில் பொய் பேசும் பழக்கம் அதிகமாய் போனது?

பொய் பேச தேவை இல்லை என்ற இடத்தில் கூட, வெகு சாதாரணமாக இப்பொழுது பொய் பேசுகின்றனர். இது ஏன்?



எப்படி இந்த சத்தியம் என்ற தர்மம் இந்தியர்களிடம் இப்போது மலிந்து காணப்படுகிறது ?

Root cause Analysis :
இஸ்லாமியர்களின் 1000 வருட ஆதிக்கத்தில் இருந்தும் கூட, ஹிந்துக்களிடம் சத்தியம் அழியாமல் தான் இருந்துள்ளது.

ஆனால், சத்தியமாக இருக்க வேண்டும் என்ற பண்பு படிப்படியாக கிறிஸ்தவர்களின் ஆட்சியில் இருந்து குறைய தொடங்கி, இப்பொழுது விடுதலை அடைந்த பின்பும், ஹிந்துக்கள் தன் குணமாக வைத்திருந்த இந்த சத்யம் (உண்மையாக இருத்தல்) இன்று குன்றி போய் உள்ளது என்பதே உண்மை.

"சத்யம் ஏவ ஜயதே" ( "Truth Alone Triumphs") என்று இன்றும் இந்தியா சொல்லிக் கொண்டாலும், இந்தியாவில் யாவருமே பொய் சொல்ல மனம் அஞ்சாததால், அரசன் முதல் பொது மக்கள் வரை பொய் பேச இன்று தயங்குவதில்லை.
நீதிமன்றத்தில் உள்ள ஏராளமான வழக்குகள் இதற்கு சாட்சி.

இந்த சத்தியத்தை உயிராக கொண்டவர் ஸ்ரீ ராமர்.
ராமரிடம் அன்பு உள்ளவன் பொய் பேச அஞ்சுவான். 
சத்தியத்தில் இருப்பான்.

இஸ்லாமியர்கள் காலம் வரை, ஹிந்துக்கள் பெரும்பாலும் அவரவர்கள் உயிராக மதிக்கும் தெய்வத்தை வைத்தோ, தாய் தந்தை மீதோ ஒரு சபதம் செய்து வாணிகமோ, உடன்படிக்கையோ செய்து கொண்டனர்.

இப்படி செய்த சபதம், வாய் மொழியாக இருந்தாலும், பெரும்பாலும் ஜெயித்துள்ளது. 

அரசன் வரை, செல்லும் வழக்குகள் மிக குறைவு அந்த காலங்களில்.

அப்படி வரும் வழக்கும், சில நாட்களில் தீர்வு காணப்பட்டு விடும்.
இது எப்படி சாத்தியமானது?

இந்த சபதமே யார் குற்றவாளி என்பதை காட்டி விடும் சக்தி கொண்டதாக இருந்தது.

பெரும்பாலும் குற்றம் செய்தவன், தன் தாய் மீதோ, தன் ப்ரியப்பட்ட தெய்வத்தின் மீதோ சபதம் செய்த பின், பொய் சொன்னதில்லை. பொய் சொல்ல தயங்குவான்.

இந்த சபதம் உள்ளுக்குள் சென்று மனதை தொடுவதால், ஹிந்துக்கள் முதலில் "சபதம் செய்", பின் பத்திரம், பட்டா போன்றவை எழுதிக் கொள்ளலாம் என்றனர். 

கிறிஸ்தவர்களின் ஆட்சி ஆரம்பித்ததில் இருந்து, பத்திரம், பட்டா போன்றவை மிக முக்கியம் என்று கொண்டு வரப்பட்டு, "சபதம் செய்" என்பது காணாமல் போனது.

நம் ஹிந்து தெய்வங்களின் மீது இருந்த த்வேஷ புத்தியே, இதற்கு காரணம்.

செய்யும் சபதம் ஹிந்துக்களின் தெய்வமாக இருந்தால், எப்படி இவர்கள் நம்பிக்கையை கெடுக்க முடியும்?
தங்கள் மதத்தை பரப்புவது மட்டுமே நோக்கம் கொண்ட இவர்கள், இது போன்று தெய்வத்தின் பெயரால் என்று சபதம் செய்ய அனுமதித்தால், 1000 வருடம் இஸ்லாமியர்கள் ஆட்சியில் மழுங்கி போன ஹிந்துக்கள் விழித்து கொள்ள வழி வகுக்கும்.
தன் மதத்தை பரப்ப இயலாமல் போகும் என்று கணித்து, அதனால் லீகல் சிஸ்டம் என்பதை மட்டுமே முக்கியப்படுத்தி, இவர்களின் தெய்வ நம்பிக்கை பயன் அளிக்கும் என்று தெரிந்தாலும், இதனை தந்திரமாக நம் வழக்கத்தில் இருந்து அகற்றினர்.

சபதம் செய்பவனுக்கு, மனதால் ஒரு வித சஞ்சலம் / நெருடல் ஏற்படும். இந்த சபதம் செய்யும் பழக்கம், காணாமல் போனதும், பத்திரத்தில் கை ரேகை பதித்தாலும், கை எழுத்தே போட்டாலும், "இது என் கை எழுத்து இல்லை" என்று தைரியமாக பொய் சொல்ல ஆரம்பித்தனர்.

பொய் சொல்ல பயந்த நீதி மன்றத்தில், இன்று சகஜமாக பொய் சொல்கின்றனர்.

நீதிபதிகள் ஒரு வழக்கை முடிக்க பல வருடங்கள் ஆகிறது.
இதனால். யார் உண்மை சொல்கின்றனர், யார் பொய் சொல்கின்றனர் என்பது கண்டு பிடிக்க முடியாது போய், ஒரு வழக்கு முடிய பல வருடங்கள் எடுக்கிறது.

உண்மையை நிலைநாட்ட எங்கும் பயன் படுத்தப்பட்ட சபதம் செய்யும் முறை, இன்று நீதி மன்றத்தில் மட்டும் இன்றும் உள்ளது.

இன்றும் ஹிந்துக்கள் கீதையை கொண்டோ,
பிற மதத்தில் மாறிய/மாற்றப்பட்ட ஹிந்துக்கள் அவர்களின் நூலையோ கை வைத்து சபதம் செய்கின்றனர்.

இந்த சபதம் செய்யும் பழக்கம், சகஜமாக ஒவ்வொரு வீட்டிலும், வீட்டில் சண்டை என்றால் ஊர் பஞ்சாயத்தில் என்று இந்த சபதம் என்ற மனோவியல் கொண்டே பல தீர்க்க படாத வழக்குகள் அரசன் வரை சொல்லாமலேயே அந்த காலத்தில் எளிதாக தீர்த்துள்ளனர்.

இன்றோ, அரச பதவியில் இருக்கும் அதிகாரி முதல் வீட்டில் உள்ள குழந்தை வரை பொய் பேச பயப்படுவதில்லை.

பத்திரத்தில் கையெழுத்தோ, சாட்சியை கண்டோ, கொலை செய்யவோ, திருடவோ இவர்களுக்கு (நமக்கு) பயமில்லை.

பணம் இருந்தால் தப்பிக்க வழி தேடுவோம் என்று தான் நினைக்கின்றனர்.

இந்த அதர்ம புத்தி ஒழிய வேண்டும் என்றால், அனைவரும் ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை தினமும் தியானிக்க வேண்டும். 



தந்தை செய்த சத்தியத்துக்கு தான் 14 வருடம் காடு செல்ல கூட தயார் என்று சென்ற ஸ்ரீ ராமர் இந்த நாட்டில் இருந்தவர் என்பதை நாம் மறக்க கூடாது.

14 வருடங்கள் வட இந்தியாவில் இருந்து ராமேஸ்வரம் வரை இவர் கால் தடம் உள்ளது என்பதை மறக்க கூடாது.

ராமர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த வால்மீகி என்ற ஒரு வேடுவ குலத்தில் பிறந்த ரிஷி, நம் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பதையும் மறக்க கூடாது.

ராமர் ராவணனை தேடி வரும் பொழுது, நம் தமிழ் நாட்டில் இருந்த அகத்திய தமிழ்முனிவர் தன்னிடம் இருந்த அத்தனை அஸ்திரங்களையும் தந்தார் என்பதையும் மறக்க கூடாது.

சத்தியத்தால் மட்டுமே நாட்டுக்கு மதிப்பு. 
இந்த தர்மமே அமெரிக்கா, ஜப்பான் மக்களிடம் காணப்படுகிறது.
 

"நாளை பார்க்க வருகிறேன்" என்று ஒரு ஜப்பான்காரன் சொன்னால், கட்டாயம் வருவான் என்று சொல்லலாம்.

இது அடிப்படை குணமாக இருந்த சமயத்தில், இந்தியன் மதிப்பு மிக்கவனாக இருந்தான்.
சரித்திரத்தில், வாஸ்கோடகாமா இந்தியாவை நோக்கி வந்தான்.
இந்தியர்கள் அந்த காலங்களில் கை நீட்டி கேட்பவர்களாக இல்லை.

இப்பொழுது எதற்கு எடுத்தாலும் இந்தியன் அமெரிக்காவையும், ஜப்பானையும் எதிர்பார்க்கும் நிலை வந்ததற்கு காரணம், இந்த சத்தியத்தை நாம் விட்டதே மூலகாரணம்.

ஸ்ரீ ராமர் வழியில் செல்ல செல்ல சத்தியம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வளரும்.

நாடு சத்தியத்தில் நிற்கும். மதிப்பு தானாக பெருகும்.

"சத்யம் ஏவ ஜயதே" ( "Truth Alone Triumphs") என்று சொல்லும் வாக்கு உண்மையாகும்.