Followers

Search Here...

Thursday, 26 October 2017

தெய்வம், நாம் தவறு செய்தாலும் உடனே "அறிவுரை சொல்லி திருத்தாமல், கோபப்படாமல்" எப்படி இருக்கிறார்?... தெரிந்து கொள்வோம்

வைஷ்ணவ குணம் :
ஒரு சமயம் ஸ்ரீ ராமானுஜர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று இருந்தார்.
அந்த சமயம், ராமானுஜர் மனைவிக்கும், அவர் குரு நாதர் "பெரிய நம்பி்"யின் மனைவிக்கும் கிணற்றில் தண்ணீர் எடுக்கும் போது, மனஸ்தாபம் ஏற்பட்டு, வாய் தகராறு ஆகிவிட்டது. 

இதனால், பெரிய நம்பி்யிடம் அவர் மனைவி சென்று, நடந்ததை கூறி, வருத்தப்பட்டாள்.
மேலும், "நாம் இங்கு இருப்பதை விட ஸ்ரீ ரங்கம் சென்று விடலாம்" என்றாள்.

பெரிய நம்பிக்கும் ஸ்ரீ ரங்கநாதரை பார்த்து பல நாள் ஆகி விட்டதால், "சரி" என்று கிளம்பினார்.

இந்த விஷயம் எதுவும் அறியாத ஸ்ரீ ராமானுஜர் கோவிலில் இருந்து கிளம்பி தன் குருவின் க்ருஹம் பூட்டி இருப்பதை அறிந்து. நடந்ததை விசாரித்து அறிந்து கொண்டார்.

மிகவும் மனம் வருந்தினார். 

"தன் குரு தன்னிடம் சொல்லிக்கொள்ளாமல் செல்லும் அளவிற்கு அபசாரம் நிகழ்ந்ததே" என்று மனம் வருந்தினார்.
ஆனால் "இதற்கு காரணம் தன் மனைவி" என்று கோபப்படவும் இல்லை, மனதில் கோபமும் ஏற்படவில்லை. 




"இப்படி குரு பத்தினியிடம் சண்டை செய்யலாமா?
இவர்கள் இப்படி வருத்தப்பட்டு காஞ்சிபுரத்தை விட்டு செல்லும் அளவுக்கு செய்யலாமா?"
என்று எந்த வித கேள்வியும் ஸ்ரீ ராமானுஜர் தன் மனைவியிடம் கேட்கவும் இல்லை.
நடந்து விட்ட நிகழ்வுக்கு தனக்குள்ளேயே வருத்தப்பட்டார்.

மனைவியிடம் கோபப்பட வேண்டாம், சரி,
மனைவி, 'தன் குருநாதரிடம் எப்படி நடக்கவேண்டும்? எது நல்லது, எது தவறு?' 
என்பதையாவது ஸ்ரீ ராமானுஜர் சொல்லி திருத்தலாமே! அதுவும் அவர் செய்யவில்லை.

ராமானுஜர் கோபமும் படவில்லை, தானாக அறிவுரையும் சொல்லவில்லை. 

இதுவே வைஷ்ணவ குணம். 

இந்த குணம் ஸ்ரீ வைஷ்ணவரான  ராமானுஜரிடம் இருந்தது ஆச்சரியமில்லை...
இது சாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணின் அர்ச்ச அவதார குணமுமாகவும் இருக்கிறது.

ஸ்ரீ ராமானுஜருக்கு 'கோபம் எப்படி வராமல் போனது?'
ஸ்ரீ ராமானுஜர் "ஏன் சொல்லி திருத்தவில்லை?'

பொதுவாக யாருக்குமே, மற்றவர் அறிவுரை (advice) சொன்னால் பிடிக்காது. 
அறிவுரை சொன்னதற்காகவே, நம்மை விட்டு விலகி விடுவார்கள். 
விலகுவதால் இருவருக்கும் நஷ்டம் தானே ! 

தான் தவறு செய்தாலும், அதை தவறு என்று கூட உணராதவனிடம்,  அறிவுரை சொல்வதால், மேலும் உறவில் விரிசல் ஏற்படும். 

அறிவுரையை ஏற்று திருத்திக்கொள்வதை விட்டு விட்டு, அறிவுரை சொன்னவர் மேல் கோபப்பட்டு, அவர் பக்கமே இனி போக மாட்டான்.

தன் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி, மற்றவர்கள் இல்லாத போது, கோபம் வருகிறது.
நமக்கு கோபம் வருவதற்கு முக்கிய காரணமே இது தான்.

எதிர்பார்த்தது கிடைக்காததால், ஏற்படும் கோபத்தை, யாவரும் தவிர்க்க வேண்டும். 

நம் மனமே சில நேரங்களில், நமக்கு பிடிக்காததை செய்து விடுகிறது, 
அந்த சமயத்தில், நம்மை பார்த்து நமக்கே கோபம் ஏற்படும். 
இப்படி இருக்க, 
மற்றவர்களிடம் நாம் எதிர்பார்ப்பது கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு என்று தெரியும் போது, கோபப்படுவது அநாவசியம்.

இதனை அறிந்தவன், மற்றவர்கள் செயலை பார்த்து, கோபம் எப்பொழுதும் அடைய மாட்டான். 




பல வித மக்கள், உறவினர்கள் நமக்கு உண்டு.
ஒவ்வொருவர் முகமும் விதவிதம். ஒரே மாதிரியாக இல்லை. 

முகம் கூட ஒன்றாக இல்லை, என்று இருக்கும் 
போது நாம் நினைப்பது போல அனைவரும் இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது அவசியமில்லாதது.
 
ஒவ்வொருத்தருக்கும் ஒரு குணம், ஒரு எண்ணம் உண்டு. 

இதனை சம புத்தியுடன் பார்த்தாலே, நமக்கு யாரிடமும் கோபம் வராது. 

நமக்கு எதிராக இருந்தாலும், உலகம் பல விதமானது என்ற தெளிவு பிறக்கும்.

இந்த சம புத்தி, ஸ்ரீமந்  நாராயணனுக்கும் உள்ளது. 

தன்னை பார்க்க வரும் பக்தனை எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி பார்க்கிறார். 
இவன் என்னிடம் திடபக்தி செய்கிறானா? 
இவன் ஒழுக்கம் உள்ளவனா? 
நல்லவனா? 
என்று எதையும் இவர் எதிர்பார்ப்பதில்லை.



கோவிலுக்கு உள்ளே நுழையும் அனைவரையும் ஆசையோடு பார்க்கிறார். 

என்னை 'கல்' என்று பார்க்கிறானே? நான் இவனை மாமிச மலை என்றா பார்க்கிறேன்! 
ஒழுக்கம் இல்லாமல் வாழ்ந்து என்னிடம் வருகிறானே?! 
என்று ஒருபோதும் கோபப்படுவதில்லை பெருமாள்.

மேலும்
அறிவுரை சொல்லி உடனே திருத்தவும் முயற்சி செய்வது இல்லை. 

'நாம் ஏதாவது அறிவுரை என்று சொல்லி, அதன்படி நடக்க முடியாமல் போனால், இதையே காரணமாக கொண்டு, நம்மை விட்டு சென்று விடுவானோ'
என்ற கவலை பெருமாளுக்கு உண்டு.

'நம்மை விட்டு இவன் சென்று விட்டால், இவனுக்கு கிடைத்த ஸத்சங்கமும் இவனுக்கு போய் விடும். 
ஸத்சங்கம் போய் விட்டால், இவன் மீண்டும் ஸத்சங்கம் கிடைத்து வைகுண்டம் அடைய பல ஜென்மங்கள் ஆகி விடும். 
கிடைத்த ஸத்சங்கமே இவனுக்கு ஒழுக்கத்தையும், நம்மிடம் திடபக்தியையும் கொடுக்கும்'
என்ற காரணத்தால், பெருமாள் தன் பக்தனாக இருந்தாலும் உடனே அறிவுரை சொல்லி திருத்தாமல் இருக்கிறார். 

"இவன் நம்மிடம் வந்து கொண்டு இருப்பதே சீக்கிரமாக ஞானத்தை கொடுக்கும்" என்று இருக்கிறார்.

நாம் செய்யும் எந்த அபச்சாரத்தையும் சம நோக்குடன் பார்த்துக்கொண்டு, கோபப்பட்டு விடாமல், அறிவுரையும் செய்யாமல், நம்மை தன் கூடவே வைத்துக்கொள்ளும் நோக்கில் மட்டும் இருக்கிறார்.

நமக்கு அறிவுரை சொன்னால் உண்மையில் கேட்கும் மனம் வரும்வரை, பெருமாள் நமக்கு அறிவுரை வழங்க பொறுமையாய் தாயை போன்று இருக்கிறார்.

திட நம்பிக்கையுடன், உண்மையான சரணாகதி செய்யும் வரை நாம் செய்யும் அபசாரங்களை பொறுத்து கொள்கிறார்.

தவறு செய்பவனை, நாம் அறிவுரை மூலமோ, கோபம் கொண்டோ திருத்த நினைத்தால், பொதுவாக அவர்கள் நம்மை விட்டு விலகி விடுவர். அவர்களுக்கு நம்மை பிடிக்காமல் போய் விடும். 

இதனால் நஷ்டம் நமக்கும் தான்.

குருவே துணை.

Friday, 13 October 2017

அன்புக்கும், பாசத்துக்கும் என்ன வித்தியாசம்?

அன்பை விட பாசம் தாழ்ந்தது.

அன்புக்கும், பாசத்துக்கும் என்ன  வித்தியாசம்?


ஸ்ரீராமர், தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்துக்கு கட்டுப்பட்டு, 14 வருடம் காட்டுக்கு சென்றார்.

தன்னால் தான், இந்த நிலை ராமருக்கு வந்தது என்று மனம் வருந்தி, தம்பி பரதன் அழுதார்.

காட்டுக்கு சென்று, ராமரை அயோத்தி வந்து நாட்டை ஆளுமாறு கேட்டு கொண்டார். பிடிவாதம் செய்தார். தனக்கு இந்த பழி வேண்டாம் என்று பாவத்திற்கு அஞ்சினார்.
வேண்டுமென்றால் ராமர் நாட்டை ஆளும் போது, தான் 14 வருடம் காட்டில் வாழவும் தயாராக இருந்தார். வராவிட்டால் உயிர் தியாகம் செய்வேன் என்று பிடிவாதமும் செய்தார்.

கடைசியாக ஜனகர் அங்கு வந்து, பிரேமை (அன்பு) என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? என்று விளக்கி,
ப்ரேமைக்கும், பாசத்திற்கும் உள்ள வித்தியாசத்தை பரதனுக்கு உணர்த்தி,
அவருக்கு பிரேமையின் உண்மையை புரிய வைத்தார்.

பிரேமையை விட பாசம் தாழ்ந்தது என்றும் உணர வைத்தார்.

ஜனகர் : பரதா, நீ ராமரிடம் வைத்துள்ள அன்புக்காக எதை தியாகம் செய்ய துணிவாய்?

பரதன் : மிகவும் உயர்ந்தது உயிர். என் உயிரையே கூட ராமருக்காக தியாகம் செய்வேன்.

ஜனகர் : உயிரை தியாகம் செய்வது எளிது. ஆனால் உயிரை இழக்காமல், அவருக்காக வாழ்வதே நிஜமான அன்பு (பிரேமை).
பரதா, ராமருக்காக நீ செய்யும் தியாகம் மிக உயர்ந்தது.
ஆனால், இப்போது நீ செய்யும் இந்த தியாகத்தை விட, நீ அன்பு செய்யும் ராமருக்கு உன் தியாகம் மகிழ்ச்சி ஏற்படுத்துமா? என்று யோசித்துப் பார்.

அவர் விருப்பம் இல்லாமல் நீ செய்யும் எந்த செயலும், தியாகம் ஆகாது. உண்மையான அன்பு இல்லை.

உண்மையான அன்பு என்பது, நீ அன்பு வைத்து இருப்பவரின் விருப்பப்படி வாழ தூண்டும்.
நீ இப்பொழுது செய்யும் தியாகம் பாசத்தினால் வந்தது.
பாசத்தில் சுய நலம் மட்டுமே இருக்கும்.

அன்பில் (ப்ரேமையில்) மற்றவருக்காக வாழ தோன்றும்.




நீ உண்மையான அன்பு ராமரிடம் கொண்டுள்ளதால், ராமரிடமே சென்று 'நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேள்.
அவர் விருப்பம் என்னவோ அப்படியே செய்.
அவர் எதை விரும்பவில்லையோ அதை செய்யாதே !
இது தான் நீ ராமருக்கு காட்டும் உண்மையான அன்பு.
என்று சொல்லி முடித்தார் சீதையின் தந்தை ஜனகர்.

அது வரை தான், 'தன் தியாகம்' என்று பாச வலையில் இருந்த பரதர், அன்பின் உயர்வை உணர்ந்தார்.
ராமர் என்ன சொல்கிறாரோ, அதை பின் தொடர்வதே உண்மையான அன்பு என்று உணர்ந்து, ராமரின் சொல் படி 14 ஆண்டு அயோத்தியை ஆள ஒப்புக் கொண்டு, உயிர் தியாகம் செய்வேன் என்ற பிடிவாதத்தை கைவிட்டார்.
பாசத்திலிருந்து விடுபட்டு, பரதர் அன்புக்கு அடிமையானார்.
ராமர் விருப்பப்படி வாழ்ந்தார்.
ராமர் பரதனை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்:
யாரிடத்திலும் அன்பு செய்ய வேண்டும்.
பாசம் கூடாது.

பாசம், சுயநலமாக செயல்கள் செய்ய தூண்டும்.
அன்பு, தான் துயரப்பட்டாலும், மற்றவனுக்காக உழைக்க தூண்டும்.

சுயநலம் இல்லாதது அன்பு.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka  

Wednesday, 11 October 2017

கைகேயி கேட்ட வரம்... ராம ராஜ்ஜியம் என்றால் என்ன ?

கைகேயி கேட்ட வரம்:

  1. ராமர் 14 வருடம் காடு செல்ல வேண்டும்.
  2. பரதன் நாட்டை ஆள வேண்டும்.




பரதன் ஒரு நாளா ? 14 வருடமா? காலம் முழுவதுமா?
என்று அவள் குறிப்பாக கேட்கவில்லை.

ராமர் இதற்கு கட்டுப்பட்டு 14 வருடம் காடு சென்றார்.
அவரை பொறுத்தவரை, "மீண்டும் அயோத்தி வர வேண்டும், ஆள வேண்டும்" என்கிற எண்ணம் கூட இல்லை.
கைகேயி "இத்தனை வருடம் பரதன் நாட்டை ஆள வேண்டும்!!" என்று கேட்கவில்லை என்றாலும் கூட, ராமரை பொறுத்தவரை "பரதனே ஆளட்டும்" என்று தான் இருந்தார்.
மீண்டும் அயோத்தி வரும் எண்ணம் இருந்ததா!! என்று கூட தெரியவில்லை.

பரதன் "காட்டை விட்டு மீண்டும் ஆள வாருங்கள்" என்று சொன்ன போது, ராமருக்கு, பரதன் தந்து ஏற்றுக் கொள்வதில் அவருக்கு தடை இல்லை. ஆனால், ராமரை தடுத்தது கைகேயியின் முதல் வரம் தான்.
ஆனாலும் "பரதனே அயோத்தியை இனி ஆளட்டுமே" என்று தான் இருந்தார்.

ராமர் இப்படி மனதில் நினைத்து 14 வருடம் கழித்து திரும்பிய பின், ஒருவேளை தன்னையே எப்போதும் ஆள சொல்வாரோ!! என்ற பயத்தில் தான் பரதன், ராமர் முன் "நீங்கள் 14 வருடம் முடிந்து அயோத்தி திரும்பி, பட்டாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் நான் அக்னி பிரவேசம் செய்து விடுவேன்" என்று பரதன் சபதம் செய்தார்.

14 வருடம் முடிந்த நிலையில், ராமர் புஷ்பக விமானத்தில் வந்து கொண்டிருக்க, பரதன் இதற்குள்ளாக, அக்னியை மூட்டிவிட்டார்.
அந்த சமயத்தில் "ஜெய் சீதாராம்" என்று வந்து இறங்கிய ஹனுமான், தன் கையாலேயே எரிந்து கொண்டிருந்த அக்னியை அணைத்து "ராமர் வருகிறார். அயோத்தி வந்து ஆட்சி புரிய வருகிறார்" என்றார்.

சாஸ்திரம் "கையால் அக்னியை அணைக்க கூடாது" என்கிறது.
சாஸ்திரம் அறிந்த ஹனுமான் இப்படி செய்யலாமா ?
சாஸ்திரம் சில சமயங்களில் இது போன்று அனுமதிக்கிறது.
உதாரணமாக
சபதம் செய்யும் போது இப்படி கையால் அணைக்க அனுமதிக்கிறது.

ஹனுமான் உண்மையில் பரதன் முன், அந்த அக்னியை கையால் அணைத்து "ராமர் அயோத்தி வந்து ஆட்சி புரிய வருகிறார்" என்று சபதம் செய்தார்.

இப்படி இரு பக்தர்கள் "பரதனும், ஹனுமனும்" செய்த சபதம் பொய் போக கூடாதே என்று கட்டுப்பட்டு, அயோத்தி வந்து மகிழ்ச்சியுடன் ஆட்சியை ஏற்றார்.



ராமர், ராவணனை கொன்ற பின், விபீஷணனுக்கு இலங்கையின் எல்லையில் இருந்து கொண்டே அவருக்கு பட்டாபிஷேகம் செய்தார்.

அன்பினால் விபீஷணன் நாட்டுக்குள் வந்து ஸ்நானம் செய்து, கொஞ்சம் சாப்பிட்டு விட்டு செல்லலாமே என்று விண்ணப்பிக்கிறார்.
ராவணனை கொன்றதினால், ராமரே இலங்கைக்கு அரசன்.
இருந்தாலும், அந்த அரச பதவியை அப்படியே விபீஷணனுக்கு கொடுத்து விட்டார்.
அங்கிருந்து ஒரு சிறு செல்வத்தை கூட எடுத்து செல்லவும் அவர் விரும்பவில்லை.
நாட்டை கைப்பற்றிய கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் நம் நாட்டு செல்வத்தை எப்படி சூறையாடினார்கள் என்று இந்திய சரித்திரத்தை பார்க்கும் போது தான், ராமரின் உயர்ந்த குணம் இதில் நமக்கு தெரியும்.

"ஒரு முறை இலங்கைக்குள் வந்து விட்டு செல்லுங்கள்" என்று விபீஷணன் கேட்க, ராமர் அதற்கு "நான் எடுத்துக்கொண்ட ஒரு காரியம் முடிந்து விட்டால், அதற்கு பின் ஒரு க்ஷணம் கூட அங்கே காரணம் இல்லாமல் இருப்பதில்லை. நான் வந்த காரியம் முடிந்து விட்டது. இனி இப்பொழுதே அயோத்தி செல்ல வேண்டும், பரதன் காத்துக்கொண்டிருப்பான்" என்றார். இதில் கூட ராமரின் தலைமை பண்பு தெரிகிறது.

ராம ராஜ்ஜியம் என்றால் என்ன ?
ராமாயணத்தை படிக்கும் போது,
"ராமர் ஆட்சியில் அமர்ந்தது கடைசியில் தானே" என்று நமக்கு தோன்றும்.
ராமர் ஆட்சியில் அமர்ந்த பின் எப்படி ஆட்சி செய்தார்?
என்பதை வைத்து மட்டும் ராம ராஜ்ஜியம் ஒவ்வொரு நாட்டுக்கும் தேவை என்று பேசப்படுகிறதா? என்ற கேள்வியும் நமக்கு எழும்.

ராமர் இளவரசனாக, மேலும் காட்டில் 14 வருடம் இருந்த காலத்தில் கூட ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தார்.



அரசன் ஆவதற்கு முன்பே அவரிடம் அத்தனை சிறந்த குணங்களும் இருந்தது.
நான் நல்லவனாக இருப்பேன், 
சத்தியத்தில் இருப்பேன்,
தாய் தந்தை சொல்படி நடப்பேன், 
யாரிடமும் அன்பாக இருப்பேன், 
என் தர்ம விதிப்படி எப்பொழுதும் இருப்பேன். 
மற்றவர்களும் அவர்கள் தர்மபடி இருக்க செய்வேன். 
தர்மத்தை மீறுபவர்களை என் க்ஷத்ரிய தர்ம படி தண்டிப்பேன். 
கொடுத்த வாக்கை காப்பேன்.
இப்படி பல குணங்கள் ராமருக்கு இருந்தது.

தன் தந்தை சபதத்தை காக்க, பிள்ளையான ராமர் 14 வருடம் காட்டுக்கு சென்றார்.
இதை கண்கூடாக பார்த்தனர் மக்கள்.
சத்தியத்துக்கு இப்படி மரியாதை செய்தவர், 14 வருடம் கழித்து வந்து ஆட்சியை நடத்தினால், மக்கள் அனைவரும் சத்தியத்துக்கு கட்டுப்படாமலா இருப்பார்கள்?

ராம ராஜ்ஜியம் ஒரு அரசனை மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனையும் தர்ம வழியில் வாழ தூண்டும்.

ஸ்ரீ ராமரை பற்றி ஆஞ்சநேயர்


ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமரை பற்றி:
ஒருவர் சிறந்த
1. புத்திசாலியாகவும்,
2. மிகுந்த பலசாலியாகவும்,
3. சுறுசுறுப்பாகவும்,
4. மிகவும் புகழ் பெற்றவராகவும்,
5. புலன்களை அடக்கியவராகவும்,
6. மகா தைரியசாலியாகவும்,
7. பயம் அறியாத சுத்த வீரனாகவும்,
8. ஆரோக்யம் உடையவராகவும்,
9. சிறந்த கல்வி தேர்ச்சி பெற்றவராகவும்,
10. சிறந்த பேச்சுத்திறமை உள்ளவராகவும்
ஒரு சேர காண முடியாது.



இதில் நமக்கு, ஏதாவது ஒன்று இரண்டு இருந்தாலே, கர்வம் தலைக்கு மேல் ஏறி விடும்.

இவை அனைத்தையும் ஒரு சேர கொண்டவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்,

ஆனால் இவரோ, "ராமருக்கு நான் தாசன்" என்று கர்வமே இல்லாமல், கை குவித்து நிற்கிறார்.
ஸ்ரீ ராமரை அந்த பரவாசுதேவன் "நாராயணன்" என்று உணர்ந்து இருந்தார்.

இத்தனைக்கும் ஸ்ரீ ராமர், தான் ஒரு ராஜ குடும்பத்தை சேர்ந்தவன். அயோத்தி அரசர், தசரதனின் மகன். ஒரு மனிதன் என்று சொல்லிக்கொண்டார்.
இது போதாது என்று, ஸ்ரீ ஆஞ்சநேயரை துணைக்கு வேறு அழைத்துக்கொண்டார்.


வயதிலும் மூத்தவரான, ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமரை பகவான் என்று எப்படி உணர்ந்தார்?

மாயாஜாலம், மருத்துவம், பலம்  இவற்றையெல்லாம் வைத்து, யாரையும் பகவான் என்று சொல்ல கூடாது. சாஸ்திரம் பகவானின் குணங்கள் என்ன என்று சொல்கிறது.

நோய் தீர்ப்பவர் கடவுள் என்று நினைத்தால், எல்லா மருத்துவரும் கடவுள் என்று சொல்ல வேண்டியது தான்.

கடவுளை பலத்தாலோ, மாயாஜாலத்தாலோ, கண்டு பிடிக்கமுடியாது. கண்டு பிடிக்கவும் கூடாது.
போலி மதங்கள் இப்படி ஏமாற்றியே தான் மக்களை ஏமாற்றி வளர்ந்தன. ஏமாற்றுகின்றன.

சாதாரணமாக, ஒரு மனிதன் தன்னை தாழ்த்தி கொள்ள, "நான் நாய் போன்று நன்றியுடன் இருப்பேன்" என்று சொல்லுவான்.
கொஞ்சம் உயர்வாக தன்னை எண்ணும் போது "நான் கடவுள்" என்பான்.

மனிதர்களை விட உயர்ந்தவர்கள் தேவர்கள். தேவர்களை பொறுத்தவரை, மனித பிறவியே தாழ்ந்த பிறவி.
தேவர்களையும் விட உயர்ந்த லோகத்தில் இருப்பவர்கள், ரிஷிகள்.
அவர்களுக்கும் மேல் லோகத்தில் இருப்பவர் ப்ரம்மா.
இவை அனைத்தையும் படைத்தவர் பரவாசுதேவன்.

மனிதர்களில் சிலர் "நான் கடவுள்" என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுவது போல, பரவாசுதேவன், ஸ்ரீ ராமனாக அவதாரம் செய்து, "நான் மனிதன்" என்று சொல்லிக்கொள்ள ஆசைப்பட்டார். மனிதனாக தர்ம வழியில் வாழ்ந்து காட்ட, அவதாரம் செய்ததால், யார் கேட்டாலும், "நான் மனிதன்" என்று சொல்லிக்கொண்டார்.

முடிந்தவரை, தான் மனிதனாகவே இருக்க முயற்சி செய்தார். ஆனாலும், இவரின் வேடம் யாரிடமும் பலிக்கவில்லை.

ஸ்ரீ ஆஞ்சநேயரிடமோ, சீதையிடமோ, சகோதரர்களிடமோ, சபரியிடமோ, பெற்றோர்களிடமோ, விஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகத்தியர், போன்ற ரிஷிகளிடமோ, மாரீசன், கும்பகர்ணன் விபீஷணன் போன்ற அரக்கர்களிடமோ கூட  பலிக்கவில்லை. இன்று வரை இவர் சரித்திரம் நமக்கு தேவைப்படுகிறது.

இவர் "நான் மனிதன்" என்று சொன்னாலும் இவர்கள் யாவரும் இவரை அந்த பரவாசுதேவன் என்று அனைவரும் உணர்ந்து இருந்தனர்.

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்களை விஷ்ணு புராணம் சொல்கிறது.
1. பூர்ணமான ஐச்வர்யம்
2. பூர்ணமான தர்மம்
3. பூர்ணமான புகழ்
4. பூர்ணமான ஸ்ரீ
5. பூர்ணமான வைராக்யம்
6. பூர்ணமான மோக்ஷம்
ஸ்ரீ ஆஞ்சநேயர் இந்த லக்ஷணங்களை ஸ்ரீ ராமரிடத்தில் கண்டார்.

ஸ்ரீ ஆஞ்சநேயரிடம், "ஸ்ரீ ராமர் பகவான் என்று தெரிந்தும், நீங்கள் மட்டும், அவரிடம் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீ ராமர் எப்படி இருப்பார்? எப்படி பழகுவார்?" என்று கேட்டால்,

ஸ்ரீ ஆஞ்சநேயர் சொல்கிறார்,
"ஸ்ரீ ராமரை பார்க்கும்போதே பகவான் என்று நமது ஆத்மா உணரும். அவரின் கண்கள் கருணை என்ற குளிர்ச்சியை வர்ஷிக்கும். நமக்கு பார்க்கும் போதே குளிர்ச்சியாக இருக்கும்.
பார்க்கும் போதே நம் மனம் சாந்தி அடையும்.
பேதம் பார்க்காமல் அனைவரிடமும் சமமாக  பழகுவார்.
நம் குறையே அவர் கண்ணுக்கு தெரியாது.
நம்மில் இருக்கும் ஒரு சிறு நிறையையும் பெரிதாக நினைத்து அன்போடு பழகுவார். கருணையே வடிவமாக கொண்டிருப்பார்.
நீல வர்ணமாக இருக்கும் ஸ்ரீ ராமரை பார்த்தாலே, அனைவருக்கும் அவரிடம் போய் பேசலாமா? பழகலாமா? என்று ஆசை வரும்.
அவரும் நம்மிடம் ஆசையாக பழக முன் வருவார். ஆனால், நான் அவரிடம் நெருங்கி பேசலாம் என்று முயற்சி செய்யும் போது, அவரின் எண்ணிலடங்கா பகவத் குணங்கள் என்னை ஒரு ஜீவன் என்று உணர்த்தி விடுகிறது.
பரமாத்மாவிடம் நெருங்கும் ஜீவன், தன்னை தாசன் என்று உணர்வது போல, ஸ்ரீ ராமரை நெருங்கும் போதெல்லாம் நான் தாசன், அவர் பரவாசுதேவன் என்ற நினைவு வந்து விடுகிறது. நான் ராம தாசன் ஆகி விடுகிறேன்.

ஒருவேளை நமக்கு தெரிந்த 1000 நற்குணங்கள் யாவும் ஸ்ரீ ராமரிடம் உள்ளதா என்று பார்க்க முயற்சித்தால், அதைவிட அதிகமான நற்குணங்கள் கொண்டு இருப்பார். குணக்கடலாக இருக்கிறார்.



பொதுவாக கடலை காணும் போது, மனிதர்களுக்கு ஏதோ புரியாத சந்தோஷம் உருவாகிறது.
சிலருக்கு பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் நீந்தலாம் என்றும் தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் பயணம் செய்யலாம் என்று தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் முங்கி குளிக்கலாம் என்று தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் உள்ளே சென்று முத்து எடுக்கலாம் என்று தோன்றுகிறது.
ஆனால் யாருமே, கடலை முழுவதும் அறிந்தவர்கள் இல்லை.

அதே போல, ஸ்ரீ ராமரின் குணம் என்ற கடலை கண்டு ஆனந்தப்பட்டு அருகில் வருபவன், கடல் அருகே வந்து அதன் கம்பீரத்தை, பலத்தை பார்த்து, அப்படியே கரையில் நின்று விடுவது போல, அவர் அருகில் சென்ற பிறகு  அமைதியாக நின்று விடுகிறேன்.
பார்ப்பதற்கு கடல் போல குளிர்ச்சியாக இருக்கிறார். அவரின் தரிசனம் மட்டுமே திருப்தி அளிக்கிறது" என்றார் ஹனுமான்.

Tuesday, 3 October 2017

தவறு செய்தாலும் பரிகாரம் கேட்காத உத்தமர்கள் - பரிக்ஷித், தசரதர்.. நல்லவர்கள் சில சமயம் செய்யும் தவறை, நாம் ஒரு போதும் சொல்லி காட்ட கூடாது


தவறு செய்தாலும், துக்கம் வந்தாலும், பரிகாரம் (பாவ மன்னிப்பு) கேட்காத பக்தன்:

கலி ஆரம்ப சமயம்:
வேட்டையாட சென்ற பரீக்ஷித், ஏதோ  ஒரு கோபத்தில் சமீகர் என்ற ரிஷி மீது, அங்கு இருந்த செத்த பாம்பை அவர் கழுத்தில் போட்டு விட்டு, சென்று விட்டார்.


ரிஷியின் 7 வயது மகன்  ஸ்ருங்கி இதை பார்த்து, 'இப்படி செய்தவன் 7ஆம் நாள் தக்ஷகன் என்ற பாம்பு கடிக்க கடவது' என்று சபித்துவிட்டான்.

அரண்மனை சென்றிருந்த பரீக்ஷித் "இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டோமே! அர்ஜுனனின் பேரன், அபிமன்யு மகனாக, ஸ்ரீ கிருஷ்ணரை குல தெய்வமாக கொண்ட இந்த பரம்பரையில், நாம் பிறந்து, எப்படி இப்படி ஒரு காரியம் செய்தோம்?
தன் தாத்தா 'தர்மபுத்திரர் யுதிஷ்டிரர்' அரசாண்ட இந்த அரசாட்சியில், நாம் இப்படி ஒரு அதர்ம காரியத்தை செய்து விட்டோமே!
மக்கள் தவறு செய்தால், அரசன் தண்டனை கொடுப்பான். அரசனான நானே செய்த இந்த குற்றத்துக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?
இந்த அரசனுக்கு, பகவானே, நீயே தகுந்த  தண்டனை கொடு"
என்று மிகவும் மனம் வருந்தி கேட்டுக் கொண்டார்.

இந்த சமயம், அங்கு வந்த சமீகரின் சிஷ்யர்
'7ஆம் நாள் தக்ஷகன் என்ற பாம்பு கடிக்க கடவது என்று சமீகரின் மகன் உங்களை சபித்துவிட்டார், இதை உங்களுக்கு தெரிவித்து விட சொன்னார்'
என்று சொல்லிவிட்டு சென்றார்.


கலியில், சில சமயங்களில் மிகவும் நல்லவர்களும், சில தவறு செய்து விடுவார்கள்.

இவர்கள் நல்லவர்களாக இருப்பதால், இப்படி செய்தோமே!! என்று பிறகு  வருந்தவும் செய்வாரகள். இது கலியின் தோஷம்.

ஆகையால், நல்லவர்கள் சில சமயம் செய்யும் தவறை, நாம் ஒரு போதும் சொல்லி காட்ட கூடாது.

இவர்கள் பொதுவாக எத்தனை நல்லவர்களாக இருந்தார்கள் என்று நினைத்து, கலியில் சில சமயம் நல்லவர்களின் புத்தியும், அவர்களையும் மீறி செயல் படுத்த செய்து விடும் என்று அவர்கள் தவறுகளை நம் மனதில் நிறுத்தி  கொள்ளாமல், தள்ளி விட வேண்டும்.

இப்பொழுது ஒரு கேள்வி!
சபித்த விஷயத்தை எதற்காக தன் சிஷ்யர்களை விட்டு உடனே சொல்ல சொன்னார்? சொல்லாமல் இருந்திருக்கலாமே?




இதற்கு காரணம், சாபம் பலித்தால், இன்னும் 7 நாளில் அரசன் மடிந்து விடுவான்.
அரசன் இல்லாத நாடு என்ன நிலையாகும்?? மக்கள் கஷ்டப்படுவார்கள். நல்லவர்களை  காத்த அரசன் போனால், தீயவர்கள் பெருகுவார்கள். அதர்மம் பெருகும்.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான், சமீகர் விஷயத்தை உடனே பரீக்ஷித்திடம் சொல்ல சொன்னார்.

பொதுவாக உலகில் அனைவருக்கும் துன்பம் வருகிறது.
துன்பத்திற்கு  காரணம், அவன் இந்த ஜென்மத்திலோ, போன ஜென்மங்களிலோ செய்த கர்மாவே, செயல்களே காரணம்.

தெரிந்தோ தெரியாமலோ, அகலிகை போன்ற, நலகூபுர போன்ற தேவர்கள் கூட சில சமயம் தவறு செய்து சாபத்தை வாங்கினர். 

சாபம் கொடுத்தவர்களிடமே இவர்கள் சென்று, பரிகாரம் கேட்டு, அந்த சாபத்திலிருந்து தப்பித்து உள்ளனர். 
அகலிகை 'கல்லாக போ' என்று சபிக்கப்பட்டதும், பரிகாரம் கேட்க, ஸ்ரீ ராமரின் பாத தூளி பட்டால், சாபம் விலகும் என்று பரிகாரத்தை அறிந்தாள்.

இப்படி சாபத்துக்கு பரிகாரம் உண்டு என்பதால், ஒரு வேளை, பரீக்ஷித் மகாராஜன் பரிகாரம் கேட்டால், பரிகாரம் சொல்லி காப்பாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் தான், சமீகர் தன் சிஷ்யனை அனுப்பி வைத்தார்.

சரித்திரத்தை ஆதியில் இருந்து பார்க்கும் போது, தான் செய்த தவறுக்கு, வரும் கஷ்டத்தை, சாபத்தை, பரிகாரம் கேட்காமல் ஏற்றுக்கொண்டவர்கள் இருவர் மட்டுமே!!

  1. ஒருவர், ஸ்ரீ ராமரின் தந்தை 'தசரதர்',
  2. மற்றொருவர், 'பரீக்ஷித்'.

வேட்டையாட வந்த தசரதர், "யானைதான் தண்ணீர் குடிக்கின்றது" என்று நினைத்து, ஒலி வந்த திசை நோக்கி அம்பு விட்டார்.
ஆனால், தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த ஸ்ரவனன் என்ற 16 வயது சிறுவனை தவறுதலாக அம்பு எய்து கொன்றுவிட்டார்.


"தான் செய்த தவறுக்கு பகவானே ஒரு தண்டனை தரட்டும்" என்று நினைத்த தசரதர், அவர் நினைத்தது போலவே, ஸ்ரவனனின் கண் தெரியாத அவர் தந்தை, "எப்படி நாங்கள் எங்கள் குழந்தையை இழந்து, உயிரை விட போகிறோமோ, அதே போல, நீயும் உன் பிள்ளைகளை இழந்து உயிரை விடுவாய்" என்று சபித்தார்.


"செய்த தவறுக்கு, சரியான தண்டனை கிடைத்தது" என்று, தசரதரும் அவரிடம் பரிகாரம் கேட்கவில்லை.
அதே போல, இங்கு பரீக்ஷித் மகாராஜனும் பரிகாரம் கேட்கவில்லை.

"உயிரே போகும் துக்கம் வந்தாலும், இதற்கு தெய்வம் தான் காரணம், தெய்வம் உதவி செய்யவில்லை" என்று உண்மையான பக்தன் சொல்ல மாட்டான்.
மாறாக,
"இது என் கர்மத்துக்கான வினை" என்று மேலும் பகவானை நெருங்குவான், பக்தி செய்வான்.

"உயிரே போகும் துக்கம் வந்தும், பகவானை குறை சொல்லாமல், பக்தி செய்தவர்" பரீக்ஷித் மகாராஜன்.
இதுவே நமக்கு பாடம்.

சமாதானம் அடைய முடியாமல், மனம் வருந்திக் கொண்டிருந்த பரீக்ஷித், "தனக்கு இப்படி ஒரு தண்டனை தகும்" என்று ஏற்றுக்கொண்டார்.

"உடனே தக்ஷகன் கடித்து சாகாமல், தனக்கு 7 நாள் அவகாசம் கொடுத்து இருக்கிறாரே!!" என்று மகிழ்ந்து, அப்படியே ராஜ்யத்தை மந்திரிகளிடமும், தன் மகன் ஜனமேஜெயனுக்கு விட்டு விட்டு, கங்கை நதி ஓரம் வந்து அமர்ந்தார்.

அங்கு வந்த ரிஷிகள், ஒவ்வொருவராக, நடந்த விஷயத்தை பற்றி விசாரிக்க முயல, பரீக்ஷித் விசாரிப்பதை  நிறுத்தச்சொன்னார்.

பொதுவாக, ஒருவனுக்கு துக்கம் வரும் போது, தன் கஷ்டத்தை பற்றி குறைந்த பட்சம் யாராவது விசாரிப்பார்களா?? என்று எதிர்பார்ப்பார்கள். இது இயற்கை.

இறந்தவன் வீட்டில் சென்று, துக்கம் விசாரிப்பார்கள்.
துக்கம் விசாரிப்பதால், இறந்தவன் வரப்போவதில்லை.

விசாரித்தால், துக்கத்தில் உள்ளவனுக்கு ஒரு மன ஆறுதல் கிடைக்கும்.

ஞானி போன்ற வைராக்ய நிலையில் இருந்த பரீக்ஷித்துக்கு, இப்படி ரிஷிகள் வந்து விசாரிப்பது தேவைப்படவில்லை.

"இந்த சாபம் தனக்கு ஏற்பு உடையது தான்" என்று துக்கம் அடையாமல், இனி இந்த 7 நாளில் என்ன செய்ய வேண்டும்? எதை உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டும்?
என்ற கேள்வியுடன் அமைதியாக அமர்ந்திருந்தார்.

வந்த ரிஷிகள், பரீக்ஷித்தின் பக்குவ நிலையை பார்த்து,
'நாங்கள் இவரை சாந்தமாக ஆக்க விசாரிக்க வந்தால், இவரோ, 7ஆம் நாள் மரணம் என்று தெரிந்தும், சாந்தமாகவே இருக்கிறாரே' 
என்று ஆச்சர்யப்பட்டனர்.

ரிஷிகள் கூட்டம், பரீக்ஷித் மகராஜனை சூழ்ந்து அமைதியாக அமர்ந்தனர்.

மனிதராக பிறந்தவன் உண்மையில் எதை தெரிந்து கொள்ள வேண்டும்? என்ற கேள்வியுடன் இருந்த பரீக்ஷித் மகாராஜனை பார்க்க வ்யாசரின் புத்திரர் 'சுகர்' வந்தார்.
7 நாளும் பாகவதம் சொன்னார்.
பாகவதம் கேட்டதனாலேயே பரீக்ஷித் முக்தி பெற்றார்.

குருவே துணை