Followers

Search Here...

Showing posts with label Samyag. Show all posts
Showing posts with label Samyag. Show all posts

Monday, 20 August 2018

யாரை குருவாக ஏற்றுக்கொள்ள கூடாது? இரண்டு ஞானிகள் உண்டு! சாஸ்திர ஞானி, சம்யக் ஞானி - ஒரு அலசல்

நமக்கு, ஞானம் இரண்டு விதத்தில் ஏற்படும், என்று வேதம் சொல்கிறது.
தெய்வத்தை பற்றிய ஞானமானாலும் சரி,
உலகத்தை பற்றிய ஞானமானாலும் சரி,
ஞானத்தை (ஒரு விஷயத்தை பற்றிய உண்மை அறிவு), இரண்டு வகையில் பெறலாம்.




ஒன்று : சாஸ்திர ஞானம். (Academic)
மற்றொன்று : சம்யக் ஞானம். (Experienced)

ஒருவன் ஒரு விஷயத்தை பற்றிய உண்மையான அறிவை (ஞானத்தை) பெற, அதற்கு சம்பந்தமான புத்தகங்களை (சாஸ்திரங்களை) படித்து தெரிந்து கொள்கிறான். இப்படி படித்ததினால் ஏற்படும் ஞானத்தை "சாஸ்திர ஞானம்" என்று சொல்கிறது வேதம்.

"கல்கண்டு சாப்பிட்டால் இனிப்பாக இருக்கும், மாம்பழம் சாப்பிட்டால் இனிப்பாக இருக்கும்" என்பதை ஒரு புத்தகத்தை படித்தே தெரிந்து கொள்ளலாம்.
இதை "சாஸ்திர ஞானம்" என்று சொல்லுவார்கள்.
படித்ததினால் உண்டாகும் அறிவு இது.

படித்ததை படித்ததோடு மட்டும் நிறுத்தாமல், அதை அனுபவத்தில் கொண்டு வந்தவனை, 'சம்யக் ஞானம்' உடையவர்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.

மாம்பழத்தை சாப்பிட்டு, கல்கண்டையும் சாப்பிட்டு அனுபவித்தவன், எழுத்தால் வர்ணிக்க முடியாத இனிப்பு என்ற சுவையை, உண்மையில் அனுபவிக்கிறான்.
இதை 'சம்யக் ஞானம்' என்று சொல்லுவார்கள்.

படிக்காமல் ஒருவனுக்கு சம்யக் ஞானம் வராது.
முதலில் சாஸ்திர ஞானத்தை பெற்று, பின்னரே ஒருவன் சம்யக் ஞானத்தை அடைகிறான்.

பிறக்கும் பொழுதே சம்யக் ஞானியாக தோன்றிய சம்பந்தர், ரமணர் போன்றோர், முற்பிறவியில் சாஸ்திர ஞானம் ஸித்தி பெற்று, பிறக்கும் போதே சம்யக் ஞானியாக பிறக்கின்றனர்.

சாஸ்திர ஞானி, சம்யக் ஞானியிடம் தோற்றுவிடுவார்கள்.

முதலில் சாஸ்திர ஞானியாக இருந்து, பின் அனுபவத்தால் சம்யக் ஞான நிலை அடைவதால், உண்மையான ஞானிகள், சாஸ்திரத்தை ஒதுக்க மாட்டார்கள்.

ஒருவேளை சாஸ்திர ஞானத்தை சம்யக் ஞானி மறுத்தால், நாம் அவரை குருவாக ஏற்றுக்கொள்ள கூடாது.

குரு என்ற சமஸ்கரித சொல்லுக்கு, இருளை (அஞானத்தை) போக்குபவர் என்று அர்த்தம்.







சாஸ்திர ஞானியாகவும் இருந்து, சம்யக் ஞானியாகவும் இருக்கும் ஒரு ஞானி, யாருக்கு குருவாக கிடைகிறாரோ!! அவர்களே பாக்கியவான்கள். அப்படிப்பட்ட ஞானியே உண்மையான குரு.

ஸ்ரீ கிருஷ்ணர், தான் பகவானாக இருந்தும், சம்யக் ஞானியாகவே இருந்தும், உலகத்திற்கு வழி காட்டும் பொருட்டு, தானே குருகுல வாசம் செய்து சாஸ்திர பாடங்களை கற்று, சாஸ்திர ஞானத்தின் முக்கியத்துவத்தை காட்டினார்.

சாஸ்திரத்தை மீறி செய்யும் எந்த காரியமும், அதர்மமே!
எது அதர்மம் என்று தெரிந்து கொள்ள, சாஸ்திர ஞானம் அடிப்படை தேவையாகிறது.

ஒரு விஷயத்தை பற்றிய சாஸ்திர ஞானம் உயர்ந்தது தான்.
அதை விட உயர்ந்தது சம்யக் ஞானம்.

அமெரிக்காவில் உள்ள ஒருவன் தன் நாட்டை பற்றி புத்தகம் எழுதுகிறான். வேறு தேசத்தில் உள்ளவனுக்கு அதை படிப்பதினால் "சாஸ்திர ஞானம்" ஏற்படுகிறது.
எழுதினவன் உண்மையை எழுதி உள்ளானா? பொய்யான விஷயங்களை எழுதி உள்ளானா? என்பது, சாஸ்திர ஞானத்தால் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.
உண்மையில் அமெரிக்கா சென்று, 10 வருடங்கள் இருந்து, அவன் படித்த புத்தகம் உண்மை என்று உணர்ந்தால், அதுவே சம்யக் ஞானம்.

பொதுவாக, பாரத தேசத்தில், ஆத்மாவை அறிந்து கொள்ள விரும்பும் ஞானிகள் உதித்து கொண்டே இருக்கின்றனர்.
மற்ற நாடுகளில், உலகை அறிந்து கொள்ள விரும்பும் ஞானிகள் உதித்து கொண்டே இருக்கின்றனர்.

பாரத தேசத்தில், ஆத்மாவை பற்றிய ஆராய்ச்சியில் பல சாஸ்திரங்களை படித்த "சாஸ்திர ஞானிகளை" காணலாம்.
அதே போல,
மற்ற நாடுகளில், உலக விஷயங்களை பற்றிய ஆராய்ச்சியில் பல சாஸ்திரங்களை படித்த "சாஸ்திர ஞானிகளை" காணலாம்.

பாரத தேசத்தில், ஆத்மாவை பற்றிய ஆராய்ச்சியில் பல சாஸ்திரங்களை படித்து, அதை பின்பற்றி, அதை அனுபவத்தில் கொண்டு வந்த சம்யக் ஞானிகளையும் காணலாம். இவர்களே மகாத்மாக்கள். இவர்களே மெய் ஞானிகள்.
மெய் ஞானிகளை, குருவாக பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

தெய்வத்தை காண, வேத சாஸ்திரங்கள் வழி சொல்கின்றன.
சாஸ்திர அறிவு மட்டும் பெற்றவன் "சாஸ்திர ஞானி".
அது சொன்ன படி வாழ்க்கையை அமைத்து, தெய்வத்தை தன் அனுபவத்தில் உணர்ந்தவர்களே "சம்யக் ஞானி".

சாஸ்திரம் தெய்வத்தை காண, பல நிபந்தனைகளை விதிக்கிறது.
மனசு, வாக்கு, மெய் (உடல்) இந்த மூன்றாலும் ஒழுக்கமாக இருக்க சொல்கிறது.
இப்படி ஒழுக்கம் உள்ள ஒருவனுக்கு, பகவானை அடைய பல வழிகளையும் சொல்கிறது.

தஞ்சாவூர், திருவையாற்றில் பிறந்த தியாகராஜர், சிறுவனாக இருந்த போது, அவர் தந்தை மரண படுக்கையில் இருந்தார்.

தன் மகனுக்கு கொடுக்க சொத்து ஒன்றும் இல்லை அவரிடம்.
தியாகராஜரை அருகில் கூப்பிட்டு, "100 கோடி தடவை "ராம ராம" என்று சொல். ஸ்ரீ ராமர் வெறும் சொப்பனத்தில் தரிசனம் தராமல், நேரில் வந்து காட்சி தருவார்' என்று சொல்லி உயிர் துறந்தார்.

அனுபவத்தில் கொண்டு வந்து,
ஸ்ரீ ராமரை பார்த்தே தீர வேண்டும் என்று அன்றிலிருந்தே ஆரம்பித்தார் தியாகராஜர்.
தினமும் ராம நாம ஜபம் என்று உட்கார்ந்து கணக்கு வைத்துக்கொள்வார்.

80 கோடி முடித்த சமயத்தில், அவர் வீட்டின் கதவை திறந்து கொண்டு, ஸ்ரீ ராமர், தன்னுடன் சீதை, லக்ஷ்மணன், ஹனுமான் என்று அனைவரும் சூழ தியாகராஜர் வீட்டுக்குள் கண்ணால் காணும்படியாக உள்ளே நுழைந்தார். தியாகராஜரின் மனைவி என்ற காரணத்தாலேயே, அவளும் இந்த அற்புதமான தரிசனத்தை பெற்றாள்.

"80 கோடி தானே முடிந்தது, 100 கோடி இன்னும் சொல்லவில்லையே?" என்று தியாகராஜர் கேட்க,




"ஜபம் தவிர்த்து, நடக்கும் போதும், அமரும் போதும், எப்பொப்பொழுதெல்லாம் ராம நாமம் சொன்னீர்களோ, அதையும் நான் கணக்கு எடுத்து கொண்டிருந்தேன். இப்பொழுது 100 கோடி முடிந்து விட்டது. தரிசனம் தர வந்து விட்டேன்"
என்றாராம் ஸ்ரீ ராமர்.
இப்படி கதவை திறந்து, ஸ்ரீ ராமர் உள்ளே வந்த போதுதான், தியாகராஜர், கண்ணுக்கு நேர் நிற்கும் ஸ்ரீ ராமரை பார்த்து
"பால கனக மய ... "
என்று பாடுகிறார். 
(ராமர் காட்சி கொடுத்த போது, தியாகராஜர் பரவசத்துடன் உள்ளே வரவேற்கும் போது பாடிய பாடல் கேட்க
https://youtu.be/sw9lE0VKd1A
https://www.dailymotion.com/video/x1e607u )
அனுபவத்தில் கொண்டு வந்த ஞானிகளே "சம்யக் ஞானிகள்".
சம்யக் ஞானிகளை குருவாக கொண்டவர்கள் பாக்கியசாலிகள்.