சந்தியாவந்தனத்தில், சூரியனுக்கும் ஆத்மாவாக (நமக்கும்) இருக்கும் பரமாத்மாவை பார்த்து, மாலையில் "இமம் மே வருண" என்று சொல்வோம்.
திருமங்கையாழ்வார்,
"அனலுருவாய் பெருமாள் இருக்கிறார்" என்று சொல்லி, பிறகு,
"வருண" என்ற வடசொல்லுக்கு ஈடாக "புனலுருவாய் பெருமாள் இருக்கிறார்" என்கிறார்.
அனல் உருவாய் - என்றால் "அக்னி போன்று பரமாத்மா இருக்கிறார்" என்று அர்த்தம்.
"தீ" எப்பொழுதுமே மேல் நோக்கியே செல்லும். மற்றவர்கள் தொட முடியாதபடி இருக்கும். தீக்கு அருகில் சென்றால் விழுங்கி விடும்.
அது போல,
பெருமாளும் தேவர்களுக்கெல்லாம் தேவனாக, அவரை எவரும் தொட முடியாதபடி உயர இருக்கிறார். பெருமாள் பக்கத்தில் சென்றால், அப்படியே விழுங்கி விடுவார்.
இப்படி யாருக்கும் எட்டாதபடி அனலுருவாய் இருக்கும் பெருமாள், புனலுருவாயும் இருக்கிறார்.
புனல் உருவாய் - என்றால் "தண்ணீர் போன்று பரமாத்மா இருக்கிறார்" என்று அர்த்தம்.
தண்ணீர் எப்பொழுதுமே கீழ் நோக்கியே செல்லும். மற்றவர்களுக்கு கிடைக்கும்படி நிலத்திற்கு தானே வரும்.
அது போல,
பெருமாள் நிஜத்தில் அனலுருவாய் எங்கோ உயரத்தில் இருந்தாலும், "தானே இறங்கி ராமனாக, கண்ணனாக மனிதனை போன்று அவதாரம் செய்து, கோவிலில் அரச்ச அவதாரம் செய்து, நம்முடன் சமமாக பழகி, தானே வலிய வந்து கிடைக்கிறார்" என்கிறார்.
மாலையில் "இமம் மே வருண..." என்று சொல்லுமிடத்தில், "புனலுருவாய்" என்ற சொல்லின் அர்த்தத்தை நினைத்து சொல்லும் போது, பெருமாள் எத்தனை கருணையோடு நாம் காணும்படியாக கோவிலில், நம் வீட்டில் விக்ரக ரூபமாக அவதரித்து நிற்கிறார் என்பது புரியும்.
"அனலுருவாய்" என்று சொல்லும் போது, பெருமாளின் பர-தத்துவம், கம்பீரம் வெளிப்படுகிறது.
"புனலுருவாய்" என்று சொல்லும் போது, பெருமாளின் கருணை வெளிப்படுகிறது.