Followers

Search Here...

Showing posts with label மாண்டவ்ய. Show all posts
Showing posts with label மாண்டவ்ய. Show all posts

Wednesday, 22 April 2020

யமன் செய்த அவதாரம்... பற்றி தெரிந்து கொள்வோமே

'ஆணிமாண்டவ்ய ரிஷி' ஒரு சமயம் ஆழ்ந்த தியானத்திலிருந்த பொழுது,  அவருடைய ஆஸ்ரமத்துக்குள், திருடர்கள் நுழைந்து அவர்கள் திருடிய பொருட்களை போட்டு விட்டு ஓடி விட்டனர்.
இவர்களை துரத்தி வந்த காவலர்கள், இவருடைய ஆஸ்ரமத்தில் நுழைந்தனர்.
மகரிஷியின் அருகில் அரண்மனையில் திருடிய நகைகள்  கிடப்பதைக் கண்டு இவரை சந்தேகப்பட்டு சிறைப்படுத்தி விட்டனர்.




அந்த காலங்களில், திருடுவதற்கு மக்கள் பயப்படுவார்கள்.
திருட்டுக்கு தண்டனையாக கழுவேற்றி விடுவார்கள். 
கழுவேற்றம் (impalement) என்பது ஒரு மரணதண்டனை. கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றி விடுவார்கள்.
அரச தண்டனை மிக கடுமையாக இருந்த காலம் அது.
எதிர்பாராவிதமாக, இவர் திருடவில்லை என்று நிரூபணம் ஆகாமல் போக, அரசன், தண்டனை யாருக்கும் பொது என்ற காரணத்தால், மாண்டவ்ய ரிஷியை ஊசி போல இருக்கும் கழுவில் ஏற்றி  விட்டான். 

தியானம் கலையாமலேயே இருந்த ரிஷி, உடல் நாசமானதால், 
தன் சூக்ஷ்ம ரூபத்துடன் யமலோகம் சென்று விட்டார்.

கழுவேற்றிய மரத்தில் தன் உடல் கிடப்பதை பார்த்த ரிஷி, எம தர்மமனிடமே நியாயம் கேட்டார்.

"தான் செய்யாத குற்றத்துக்கு இத்தனை பெரிய தண்டனையா?"
என்று யமதர்மனை கேட்டார்.

ரிஷியான மாண்டவ்யரை பார்த்து எம தர்மராஜன்,
"ரிஷி ! நீங்கள் சிறு வயதாக இருக்கும் போது, ஒரு தும்பியின் வாலைக் [பட்டாம்பூச்சி] கயிற்றால் கட்டி அதன் அடிப்பகுதியை முள்ளால் குத்தி கொடுமை படுத்தினீர்கள். அதற்கான தண்டனையே இது” என்று சொன்னார்.
இதை கேட்ட மாண்டவ்ய ரிஷி,
“என்ன அநியாயமான சட்டம் இது!! 
அறியாப் பருவத்தில் செய்த சிறு தவறுக்கு இத்தகைய பெரிய தண்டனையா? 
16 வயது வரை நல்லது எது? கெட்டது எது? என்று தெரியாதே !  
குழந்தை பருவத்தில் செய்யும் பாவங்களுக்கு இப்படி ஒரு சட்டம் இருக்குமானால், நான் செய்த தவத்தை நீங்கள் பலனாக ஏற்றுக்கொண்டு, 16 வயது வரை செய்த பாவங்களுக்கு தண்டனை கிடையாது என்று சட்டத்தை மாற்றுங்கள்" 
என்று சொல்லிவிட்டார்.

அவர் செய்த தவத்துக்கு பலனாக, யமதர்மன் "சரி! மாற்றினேன்" என்று உடனேயே சட்டத்தை மாற்றினார்..
உடனே மாண்டவ்ய ரிஷி, யமதர்மனை பார்த்து,
"அறியாப் பருவத்தில் செய்த சிறு தவறுக்கு தண்டனை இல்லை என்று சட்டத்தை மாற்றி விட்டீர்கள். 
இருந்தாலும், அதோ பாருங்கள்..  என் உடல் இன்னும் அதே கழுவில் உள்ளது. 
சட்டம் மாற்றிய பிறகும், நடைமுறையில் இல்லாத சட்டத்தால், தண்டிக்கப்பட்டு இந்த உடல் இன்னும் பூமியில் கிடப்பதால், அதற்கு பிராயச்சித்தமாக, நீங்களும் பூமியில் அவதரிக்குமாறு, நான் சாபமிடுகிறேன்."
என்று சொல்லிவிட்டார்.

"ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்ய போகிறார், நாராயணன்"
என்று தெரிந்ததும், அவருக்கு முன்பாகவே முப்பத்து முக்கோடி தேவர்களும் பிருந்தாவனத்தில் இடையர்களாக அவதாரம் செய்து விட்டனர்..

ரிஷிகள் கோபிகைகளாக வந்து விட்டனர். 

எம தர்மனுக்கு மட்டும் ஓய்வே கிடையாது. 
நரகத்தில் இவருக்கு எப்பொழுதும் வேலை. 

"தானும் கிருஷ்ண  அவதாரத்தில் கலந்து கொள்வோமா? 
தன்  வீட்டுக்கும் கண்ணன் ஒரு முறையாவது வருவாரா?" 
என்று காத்து இருந்த யமதர்மன், ஆணி மாண்டவ்யர் கொடுத்த சாபத்தை அனுகிரஹமாக ஏற்றுக்கொண்டு, தன் சார்பாக சித்ரகுப்தனை சிறிது காலம் பார்க்க சொல்லிவிட்டு,  விதுரராக அவதரித்தார்.
மஹாபாரதத்தில் விதுரர் சொல்லும் தர்மங்கள் "விதுர நீதி" என்று புகழ் பெற்றது. 
தர்மத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால், "விதுர நீதி" படித்தாலேயே போதும்.




யமதர்மனுக்கு "ஸ்ரீ கிருஷ்ணரை" பஜிப்பவர்களை கண்டால் பேரானந்தம் உண்டாகும்.  
யமதர்மனே கிருஷ்ண பக்தர் தான், என்கிற போது "யமனை கண்டு நாம் ஏன் அச்சம் கொள்ளவேண்டும்?".

வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்.
வாழ்க ஹிந்து தர்மம்.
வாழ்க நம் புராணங்கள்.