Followers

Search Here...

Showing posts with label மறைவு. Show all posts
Showing posts with label மறைவு. Show all posts

Saturday, 12 March 2022

ஸ்ரீகிருஷ்ணர், பலராமர் மறையும் நேரம், துவாரகை கடலில் மூழ்கிய சமயம்.. 5 லட்சம் யாதவ போர் வீரர்கள் அடித்து கொண்டு மடிந்த போது..நடந்த சம்பவம் பற்றி மஹாபாரத ஸ்லோகத்துடன் அர்த்தத்தோடு அறிந்து கொள்வோம். இடம் பெயர்ந்த சில யாதவ மக்களால் பிற்காலத்தில் உருவான யஹுதி (yahudi/jews) சமூகமும், அவர்களின் பிள்ளைகளுக்கு க்ருஷ் என்று பெயர் வைக்கும் காரணமும்.. அறிந்து கொள்வோம் மஹாபாரதம் - மௌஸல பர்வம்

மௌஸல பர்வம்  (Incident happened around 3102 BCE)

யாதவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய சண்டையில் அவர்கள் அழிந்துபோனதை இந்த பர்வம் கூறுகிறது

வைஸம்பாயனர் ஜனமேஜெயனிடம் இவ்வாறு கூறினார்:

மஹாபாரத போர் முடிந்து 36ஆம் ஆண்டு, ​​குரு வம்சத்தை புகழை உச்சிக்கு கொண்டு சென்ற யுதிஷ்டிர மகாராஜன், பல அசாதாரண உலக மாறுதல்களை கண்டார்.  

(षट् त्रिंशे त्व अथ संप्राप्ते वर्षे कौरव-नन्दन  | ददर्श विपरीतानि निमित्तानि युधिष्ठिरः  || வியாசர் - மஹாபாரதம்)


ஈரப்பதம் இல்லாத வறண்ட காற்று, நான்கு புறமும் பலமாக வீசியது. மேலும் கற்கள் மழை போல பொழிந்து,

பறவைகள் வலமிருந்து இடமாக வட்டமிட ஆரம்பித்தன.

பெரிய ஆறுகள் எதிர் திசையில் ஓடின.

எல்லாப் பக்கங்களிலும் கீழ்வானம் எப்போதும் மூடுபனியால் மூடி இருந்தது.

எரியும் விண்கற்கள், வானத்திலிருந்து பூமியில் விழுந்தன.


அரசே! சூரியன் எப்பொழுதும் தூசியால் மூடப்பட்டிருப்பதாகத் தோன்றியது. 

(आदित्यॊ रजसा राजन् समवच्छन्न मण्डलः |  வியாசர் - மஹாபாரதம்)

உதய சூரியனின் ஒளி கிரணங்களை பார்த்தால், வெட்டப்பட்ட தலைகளை தாங்குவது போல தோன்றியது.

சூரியன் மற்றும் சந்திரன் இரண்டையும் சுற்றி ஒவ்வொரு நாளும் அச்சத்தை ஏற்படுத்தும் ஒளி வட்டங்கள் காணப்பட்டன

இந்த வட்டங்கள் மூன்று வண்ணங்களைக் காட்டின.

அவற்றின் விளிம்புகள் கருப்பு மற்றும் கரடுமுரடான மற்றும் சாம்பல்-சிவப்பு நிறமாகத் தெரிந்தன.

அரசே! பயம் மற்றும் ஆபத்தை முன்னறிவிக்கும் இவையும் இன்னும் பல கெட்ட சகுனங்களும் காணப்பட்டன.

ஒவ்வொருவர் இதயங்களும் கவலையால் நிரப்பின.


இப்படி ஒரு சூழ்நிலையை கண்ட குரு மன்னன் யுதிஷ்டிரன், இரும்பு உலக்கையால் விருஷ்ணி குல மக்கள் மொத்தமாக இறந்து போனதை கேள்விப்பட்டார். 

(कस्य चित् त्व अथ कालस्य कुरुराजॊ युधिष्ठिरः | शुश्राव वृष्णिचक्रस्य मौसले कदनं कृतम् || - வியாசர் - மஹாபாரதம்)


பாண்டுவின் மைந்தன் யுதிஷ்டிரன், பலராமன், வாசுதேவ கிருஷ்ணன் மட்டும் உயிரோடு இருப்பதை கேள்விப்பட்டார், 

(विमुक्तं वासुदेवं च श्रुत्वा रामं च - வியாசர் மஹாபாரதம்)


தன் சகோதரர்களை (பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்) வரவழைத்து, இனி என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை நடத்தினார். 

(पाण्डवः समानीय अब्रवीद् भ्रातॄन् किं करिष्याम इति उत - வியாசர் - மஹாபாரதம்)

பிராம்மணர்களின்  சாபத்தால், விருஷ்ணி குலம் அழிவை சந்தித்ததைக் கேள்விப்பட்டு பாண்டவர்கள் மிகவும் துயரமடைந்தனர். 

(परस्परं समासाद्य ब्रह्म दण्ड बलत् कृतान् | वृष्णीन् विनष्टांस ते श्रुत्वा व्यथिताः पाण्डवाभवन् || வியாசர் - மஹாபாரதம்)


வறண்டு போகாத கடல், திடீரன்று வறண்டு போனால் எப்படி நம்பவே முடியாதோ! அது போல, பிறகு, சார்ங்கபாணியான  வாசுதேவனும் மறைந்து விட்டார் என்று அறிந்ததும் அந்த மாவீரர்களால் நடந்த விபரீதங்களை நம்பவே முடியவில்லை  

(निधनं वासुदेवस्य समुद्रस्येव शॊषणम् | वीरा न श्रद्दधुस् तस्य विनाशं शार्ङ्गधन्वनः || - வியாசர் - மஹாபாரதம்)


இரும்பு உலக்கையால் வ்ருஷ்ணீ  குலம் அழிந்ததை அறிந்த பாண்டவர்கள் தாங்க முடியாத துக்க சோகத்தில் மூழ்கினர்.  

(मौसलं ते परिश्रुत्य दुःख शॊक समन्विताः | வியாசர் - மஹாபாரதம்)


பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகத்தை விட்டு சென்று விட்டார் என்றதும், உற்சாகம் இழந்து இனி செய்வதறியாது அப்படியே தரையில் சோர்ந்து உட்கார்ந்து விட்டனர். ஒவ்வொருவர் முகத்தில் தாங்க முடியாத துக்கமும், விரக்தியும் ஊடுருவி இருந்தது.  

(विषण्णा हत-संकल्पाः पाण्डवाः समुपाविशन् | வியாசர் - மஹாபாரதம்)


உலகத்தையே தன் ஆளுமையில் கொண்ட,  அர்ஜுனனின் கொள்ளு பேரனும், பரீக்ஷித் மஹாராஜனின் மகனுமான ஜனமேஜெயன், இப்படி ஒரு நிகழ்வை கேட்டதும் மனம் பதைபதைத்தார். 

ஜனமேஜெயன் வைஸம்பாயனரிடம்,

"மஹாத்மா ! விருஷ்ணி குலத்தவர்களும்,  அந்தகர் குலத்தவர்களும், அந்த மாபெரும் தேர் வீரர்களான போஜ குலத்தவர்களும், வாசுதேவ கிருஷ்ணர் இருக்கும் போதே, இப்படி ஒரு அழிவை எப்படி சந்தித்தனர்?" என்று கேட்டார். 

(कथं विनष्टा भगवन्न अन्धका वृष्णिभिः सह | पश्यतॊ वासुदेवस्य भॊजा: चैव महारथाः || வியாசர் மஹாபாரதம்)


வைஸம்பாயனர் ஜனமேஜெயனை பார்த்து,

"பாரத போருக்கு பிறகு, 36ஆம் ஆண்டை அடைந்தபோது,  விருஷ்ணிகளுக்கு இப்படி ஒரு பெரிய பேரழிவு ஏற்பட்டது.

(षट् त्रिंश अथ ततॊ वर्षे वृष्णीनाम् अनयॊ महान् | வியாசர் மஹாபாரதம்)


காலத்தின் வலிமையால், அவர்கள் அனைவரும் இரும்பு உலக்கையின் காரணமாக அழிவை சந்திக்க நேர்ந்தது." என்று சொன்னார்.

(अन्यॊन्यं मुसलै: ते तु निजघ्नुः कालचॊदिताः | வியாசர் மஹாபாரதம்)


ஜனமேஜெயன் வைஸம்பாயனரிடம்,

"விருஷ்ணிகள், அந்தகர்கள் மற்றும் போஜர்கள் யாரால் சபிக்கப்பட்டார்கள், ஏன் இப்படி ஒரு அழிவைச் சந்தித்தார்கள்?  தேஜோமயமானவரே! நடந்த விஷயங்களை நீங்கள் எனக்கு விரிவாகக் கூறுங்கள்." என்று கேட்டார்.

(केनानुशप्ता: ते वीराः क्षयं वृष्ण्यन्धका ययुः | भॊजा: च द्विजवर्यत्वं विस्तरेण वदस्व मे || - வியாசர் மஹாபாரதம்)


வைஸம்பாயனர் சொன்னார்..

"ஒரு நாள், பலராமன் மற்றும் சுபத்ரையின் சகோதரனும், ரோகிணியின் புத்ரனான சாரணன், மற்ற விருஷ்ணி வீரர்களோடு இருக்கும் போது, துவாரகைக்கு ஜன லோக, தப லோக வாசிகளான விஸ்வாமித்திரரும், கண்வ மஹரிஷியும், நாரதரும் வருவதை கண்டனர்.

(विश्वामित्रं च कण्वं च नारदं च तपॊधनम् | सारण प्रमुखा वीरा ददृशु: द्वारक आगतान् || - வியாசர் மஹாபாரதம்)


புத்தி கெட்டு போய், அந்த விருஷ்ணீ மஹாநாயகர்கள், துவாரகாநாதனான ஸ்ரீகிருஷ்ணரின் புத்திரனும், ஜாம்பவதியின் புத்திரனான, சாம்பனை பெண் வேடமிட்டு, ரிஷிகளிடம் விளையாட நினைத்து, தெய்வ தண்டனைக்கு ஆளாயினர்."

(ते वै साम्बं पुरस्कृत्य भूषयित्वा स्त्रियं यथा | अब्रुवन्न उपसंगम्य दैव-दण्डनि पीडिताः || - வியாசர் மஹாபாரதம்)





வந்திருந்த ரிஷிகளை அணுகி, பெண் வேடமிட்டிருந்த சாம்பானை நிறுத்தி, 'அளவிட முடியாத ஆற்றல் கொண்ட வப்ருவின் மனைவி இவள். இவள் பிள்ளை பெற விரும்புகிறாள். சாதுக்களான ரிஷிகளே! இவள் உண்மையில் என்ன பெறப்போகிறாள் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேலியாக கேட்டனர். 

(इयं सत्री पुत्र कामस्य बभ्रॊ: अमिततेजसः | ऋषयः साधु जानीत किम् इयं जनयिष्यति || - வியாசர் மஹாபாரதம்)

ஜனமேஜெயா! ராஜன்! முக்காலமும் உணர்ந்த ரிஷிகளை இவ்வாறு இவர்கள் கேலி செய்ய, ரிஷிகள் இவர்களை பார்த்து,

"வசுதேவரின் வாரிசான, இந்த சாம்பன் மூலமாகவே, விருஷ்ணி குலமும், அந்தகர்களின் குலமும் அழிந்து போகும். இந்த அழிவை உண்டாக்க, உயிரை குடிக்கும் இரும்பு உலக்கையை தான் இவன் பெறப் போகிறான்.

பொல்லாதவர்களே! கொடூரமானவர்களே! கர்வத்தில் மயங்கியவர்களே!

பலராமன் மற்றும் ஜனார்த்தனனை தவிர, அந்த இரும்பு உலககையின் மூலம் உங்கள் இனத்தை நீங்களே அழிப்பவர்களாக மாறுவீர்கள்,

கலப்பையை ஏந்திய வீரனான பலராமன், தனது உடலைத் தூக்கி எறிந்துவிட்டு கடலில் நுழைவார்.

அதே நேரத்தில்,

மஹாத்மாவான கிருஷ்ணர் தரையில் படுத்திருக்கும்போது, ஜரா என்ற ஒரு வேடுவன்  அம்புகளை எய்து விடுவான்' என்று  சபித்து விட்டார்கள்.

(समुद्रं यास्यति श्रीमां त्यक्त्वा देहं हलायुधः | जरा कृष्णं महात्मानं शयानं भुवि भेत्स्यति || - வியாசர் மஹாபாரதம்)


பெண் வேடம் போட்டு கேலி செய்ய நினைத்த இந்த குணம் கெட்டவர்களை கண்டு கோபப்பட்டு, கண்கள் சிவந்து, ஒருவரையொருவர் பார்த்து கொண்டே இப்படி சபித்து விட்டார்கள்.

குலநாசம் ஏற்படும் என்று இவர்கள் சபித்ததால், உடனேயே "நடந்த விவரத்தை சொல்ல" ஸ்ரீ கிருஷ்ணரை பார்க்க சென்றனர். .

மது என்ற அரக்கனை கொன்ற மாதவனை தரிசித்து, நடந்த விஷயங்களை சொல்லி, சாபத்தை பற்றியும் ரிஷிகளே தெரிவித்து விட்டனர்.

ஸ்ரீ கிருஷ்ணரும், உடனேயே விருஷ்ணி குலத்தவர்கள் அனைவரையும் வரவழைத்து பேசினார்..

தனது இனத்தின் முடிவு என்னவாக இருக்கும்? என்பதை முழுமையாக அறிந்திருந்த பகவான் கிருஷ்ணர், "விதிக்கப்பட்டது நிச்சயமாக நடக்கும்" என்று சர்வ சாதாரணமாக அனைவரிடமும் தெரிவித்து விட்டார்.

(अथाब्रवीत् तदा वृष्णीञ श्रुत्वैवं मधुसूदनः | अन्तज्ञॊ मतिमां तस्य भवितव्यं तथेति तान् || - வியாசர் மஹாபாரதம்)


இவ்வாறு சொல்லிவிட்டு, ஹிருஷிகேசனான கண்ணன்  தன் மாளிகைக்குள் சென்று விட்டார்..

(एवम् उक्त्वा हृषीकेशः प्रविवेश पुन: गृहान् | - வியாசர் மஹாபாரதம்)


கால  சக்கரத்தை தன் ஆளுமையில் வைத்திருந்தும், உலகுக்கே தலைவனான ஸ்ரீ கிருஷ்ணர், இந்த முடிவை, பேரழிவை மாற்ற விரும்பவில்லை.

(कृत अन्तम् अन्यथा नैच्छत् कर्तुं स जगतः प्रभुः | - வியாசர் மஹாபாரதம்)


கர்பம் போல இரும்பு உலக்கையை தன் வயிற்றில் கட்டி ரிஷிகளிடம் குலநாசம் ஏற்படும் படியாக சாபம் வாங்கிய பிறகு, 

மறுநாள், ​​

விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் இனத்தில் உள்ள அனைவரையும் சாம்பலாக்க போகும் அந்த இரும்பு உலக்கையையே எடுத்து கொண்டு வந்தான் சாம்பன்

(श्वॊभूते ऽथ ततः साम्बॊ मुसालं तद् असूत वै |  वृष्ण्यन्धाक विनाशाय किंकरप्रतिमं महत् || - வியாச மஹாபாரதம்)


அன்று, அந்த இரும்பு உலக்கையை பார்த்த அனைவருக்கும், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் இனத்தை அழிக்க வந்திருக்கும் யமனாகவே தோன்றியது.

ரிஷிகளிடம் நடந்த இந்த நிகழ்வு, உண்மை மாறாமல், உக்ரசேன மஹாராஜாவிடம்,  முறையாக தெரிவிக்கப்பட்டது.

மிகுந்த மன உளைச்சல் அடைந்த உக்ரசேன மகாராஜன், அந்த இரும்புக் கம்பியை நன்றாகப் பொடியாக மாற்ற சொன்னார்.

ராஜன் ! அந்த இரும்பு உலககையை பொடியாக ஆக்கி கடலில் போடுவதற்கு ஆட்களை பணியமர்த்தினர்.

ஜனார்த்தனனுக்கும், பலராமனுக்கும் மெய்காப்பாளனாக இருக்கும்  ஆஹுகன், மற்றும் வப்ரு ஆகியோரின் கட்டளையின்படி, அன்று முதல், அனைத்து விருஷ்ணி மக்களும் மற்றும் அந்தகர்களும் எந்த காரணத்தை கொண்டும், யாரும் மது மற்றும் போதை மருந்து தயாரிக்க கூடாது என்று நகரம் முழுவதும் கட்டளையிடப்பட்டது.


எந்த வகையிலும், இரகசியமாக மதுவையும் மதுபானங்களையும் யாராவது தயாரிப்பது தெரிந்தால், அவருடைய உறவினர்களை சேர்த்து அனைவரும் சூலத்தில் ஏற்றப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது..

(य: च नॊ ऽविदितं कुर्यात् पेयं क: चिन् नरः क्व चित | जीवन् स शूलम् आरॊहेत् स्वयं कृत्वा सबान्धवः || - வியாச மஹாபாரதம்


அரச கட்டளைக்கு பயந்து, அது குறிப்பாக பலராமனின் கட்டளை என்று அறிந்ததும், எல்லா குடிமக்களும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு போதை மற்றும் மதுபானங்கள் எதையும் உற்பத்தி செய்வதைத் தவிர்த்தனர். 

(ततॊ राजभयात् सर्वे नियमं चक्रिरे तदा |  नराः शासनम् आज्ञाय तस्य राज्ञॊ महात्मनः || வியாச மஹாபாரதம்)


வரப்போகும் பேரிடரைத் தவிர்க்க, விருஷ்ணிகளும் அந்தகர்களும் இவ்வாறு முயற்சி செய்து கொண்டிருந்த போது, ​​காலமே உருவம் தரித்து, ஒவ்வொரு நாளும் அவர்களது வீடுகளில் அலைந்து திரிந்தான்.

(कालॊ गृहाणि सार्वेणां परिचक्राम नित्यशः - வியாச மஹாபாரதம்


பயங்கரமான ரூபத்துடன், பெரிய உருவம் கொண்டவர் போல் இருந்தான்.

மொட்டை தலையும், கருப்பு வெளுப்பு கலந்த நிறமாகவும் இருந்தான்.

(करालॊ विकटॊ मुण्डः पुरुषः कृष्ण पिङ्गलः - வியாச மஹாபாரதம்) 


விருஷ்ணிகள் தங்கள் வீடுகளுக்குள் எட்டிப்பார்த்தபோது சில சமயங்களில் அந்த காலனை கண்டார்கள்.

விருஷ்ணிகளில் இருந்த வலிமைமிக்க வில்லாளர்கள் அந்த காலன் மீது நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான அம்புகளை எய்தனர், ஆனால் இவை எதுவும் அந்த காலனை துளைக்க முடியவில்லை, ஏனென்றால் அவர் எல்லா உயிரினங்களையும் அழிப்பவரே தவிர வேறு யாரும் இல்லை.


நாளுக்கு நாள் பலத்த காற்று வீசியது, பல தீய சகுனங்கள் எழுந்தன, இந்த சூழ்நிலைகள் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அழிவை முன்னறிவித்தன.

(वृष्णि अन्धक विनाशाय बहवॊ रॊम हर्षणाः - - வியாச மஹாபாரதம்) 


தெருக்களில் எலிகள் நிரம்பி வழிந்தன. மண் பானைகளில் விரிசல்கள் விழுந்தன. வெளிப்படையான காரணமின்றி பானைகள் உடைந்தன. இரவில், தூங்கும் மனிதர்களின் முடி மற்றும் நகங்களை எலிகள் சாப்பிட்டன. 

(विवृद्ध मूषका रथ्या विभिन्न मणिका: तथा | नॊपशाम्यति शब्द: च स दिवारात्रम् एव हि || - வியாசர் மஹாபாரதம்)

விருஷ்ணிகளின் வீடுகளுக்குள் அமர்ந்து சாரிகா (நாகணவாய்) என்ற பறவைகள்  "சீ சீ ..கூ சீ..." என்று  கிண்டல் செய்தது. அந்தப் பறவைகள் எழுப்பும் சத்தம் பகலிலோ இரவிலோ சிறிது நேரம் கூட நிற்கவில்லை.

(चीची कूचीति वाश्यन्त्यः सारिका वृष्णिवेश्मसु | नॊपशाम्यति शब्द: च स दिवारात्रम् एव हि ||  - வியாசர் மஹாபாரதம்)

சாரஸ பறவைகள்  ஆந்தையின் கூக்குரலில் கத்தின. ஓ பாரதா (ஜனமேஜெயா)! ஆடுகள் நரிகளை போல ஊளையிட்டன. 

மரணத்தால் தூண்டப்பட்ட பறவைகள் வெளுத்து போய் கால்கள் சிவந்து காணப்பட்டன.

(अनुकुर्वन्न उलूकानां सारसा विरुतं तथा | अजाः शिवानां च रुतम् अन्वकुर्वत भारत || - வியாசர் மஹாபாரதம்


விருஷ்ணிகளின் வீடுகளில் புறாக்கள் எப்பொழுதும் திரிந்துகொண்டே இருந்தன.

கழுதைகள் பசுக்களிலிருந்தும், யானைகள் கழுதைகளிலிருந்தும் பிறந்தன. நாயிடத்தில் பூனைகளும்,  கீரிகளிடத்தில்  எலிகளும் இயற்கைக்கு மாறாக பிறந்தன.

விருஷ்ணிகள், பாவச் செயல்களைச் செய்ய ஆரம்பித்தார்கள். இருந்தும், அவமானம் அடைந்ததாகக் காணப்படவில்லை.

அவர்கள் பிராமணர்கள் மற்றும் பித்ருக்கள் மற்றும் தெய்வங்களை அலட்சியம் செய்ய ஆரம்பித்தனர். 

அவர்கள் தங்கள் குருவையும், மூத்தவர்களையும் அவமதித்து அவமானப்படுத்த ஆரம்பித்தனர்.

பலராமரை, கிருஷ்ணரை மட்டும் அவமதிக்கவில்லை. 

மனைவி தங்கள் கணவனை ஏமாற்றினர், கணவன் மனைவியை ஏமாற்றினான்.

(पत्न्यः पतीन् व्युच्चरन्त पत्नी: च पतय: तथा  - வியாசர் மஹாபாரதம்)


அக்னி, ஜ்வாலைகளை நீலமாகவும்,  சிவப்பாகவும், மஞ்சளாகவும் தனித்தனியாக உண்டுபண்ணி கொண்டு, ​​இடதுபுறமாக வீச ஆரம்பித்தது.

(विभावसुः प्रज्वलितॊ वामं विपरिवर्तते |नीललॊहित माञ्जिष्ठा विसृजन्न अर्चिषः पृथक् || - வியாசர் மஹாபாரதம்)


சூரியன், நகரத்தின் மீது உதிக்கும் போதும், மறையும் போதும், தலையில்லாத மனித உடல்களால் நெருக்கமாக சூழப்பட்டவராக காணப்பட்டார்.

(उदय अस्त मने नित्यं पुर्यां तस्यां दिवाकरः | व्यदृश्यता सकृत् पुम्भिः कबन्धैः परिवारितः || - வியாசர் மஹாபாரதம்)


சமையல் அறைகளில், சுத்தமான மற்றும் நன்கு சமைத்து வைக்கப்பட்ட உணவுகளில், அதை உண்பதற்காக பரிமாறப்பட்டபோது, ​​பல்வேறு வகையான எண்ணற்ற புழுக்கள் காணப்பட்டன.

(महानसेषु सिद्ध अनने संस्कृत अतीव भारत | आहार्यमाणे कृमयॊ व्यदृश्यन्त नराधिप || - வியாசர் மஹாபாரதம்)


பிராமணர்கள், பரிசுகளைப் பெறும்போது, ​​அந்த நாளையோ அல்லது நேரத்தையோ (இந்த அல்லது அந்தச் செயலுக்கு நிர்ணயிக்கப்பட்ட) ஆசீர்வதிக்கும் போது அல்லது உயர்ந்த ஆன்மாக்கள் மௌனமாகப் பாராயணம் செய்யும் போது, ​​ஒரு வீட்டில் குழந்தை பிறந்து, அதற்கு புண்யாஹ மந்திரத்தை மகாத்மாக்கள் சொல்லும்போது, வெளியில் ஜனங்கள் ஓடும் சத்தம் கேட்டது. ஆனால் ஒருவரும் காணப்படவில்லை.

(पुण्याहे वाच्यमाने च जपत्सु च महात्मसु | अभिधावन्तः शरूयन्ते न चादृश्यत कश चन || - வியாசர் மஹாபாரதம்)


ஒருவருக்கு கஷ்டம் ஏற்படும் போது, மற்றவர்களின் நக்ஷத்திரம் எப்படி இருக்கிறது? என்று வானசாஸ்திரம் பார்த்தார்களே தவிர, தன்னுடைய ஜாதகம் எப்படி இருக்கிறது? என்பதை பார்க்க மறந்தார்கள்.

(परस्परं च नाक्षत्रं हन्यमानं पुनः पुनः |गरहैर अपश्यन सार्वे ते न आत्मानस तु कथं चन || - வியாசர் மஹாபாரதம்


விருஷ்ணீகளின் வீட்டிலும், அந்தகர்களின் வீட்டிலும் பாஞ்சஜன்யம் ஒலிக்கும் போது, அந்த ஒலி கேட்காமல், சுற்றி அனைத்து திசையிலிருந்தும் முரட்டுத்தனமான மற்றும் பயங்கரமான குரலுடன் கழுதைகள் உரத்த குரலில் முழங்க தொடங்கின.

  

இவ்விதம் காலத்தின் விபரீதமான அறிகுறிகளை  கண்டு, (15வது நாளில் வரவேண்டிய அமாவாசை) 13வது நாளில் அமாவாசை வந்ததையும் கண்டு, யாதவர்களை வரவழைத்து, ஹிருஷிகேசனான ஸ்ரீகிருஷ்ணர் அவர்களிடம் இந்த வார்த்தைகளைக் கூறினார்.

(त्रयॊदश्याम अमावास्यां तान् दृष्ट्वा पराब्रवीद इदम् - வியாசர் மஹாபாரதம்)


"14வது பட்சம் ராகுவால் மீண்டும் 15ஆவது பட்சமாக ஆக்கப்பட்டுவிட்டது.

(चतुर्दशी पञ्चदशी कृतेयं राहुणा पुनः | - வியாசர் மஹாபாரதம்)

பாரத பெரும் போர் நடந்த சமயத்திலும் இதே போன்ற சூழ்நிலைகள் ஒரு நாள் நடந்திருக்கிறது.

(दा च भरते युद्धे पराप्ता च अद्य कषयाय नः | - வியாசர் மஹாபாரதம்)

அது மீண்டும் ஒருமுறை தோன்றி இருக்கிறது. இது நம் அழிவுக்காகத்தான் ஏற்பட்டு இருக்கிறது." என்றார்.


கேசியைக் கொன்றவரான ஜனார்தனன் காலத்தின் சகுனங்களை ஆராய்ந்த பிறகு யாதவர்களை பார்த்து, 

'36ஆம் ஆண்டு வந்துவிட்டது. காந்தாரி தனது மகன்களின் மரணத்தால் துக்கத்தில் எரிந்து, தனது உறவினர்கள் அனைவரையும் இழந்த பிறகு எதை சொன்னாளோ, அது நடக்கவிருக்கிறது" .

(मेने पराप्तं स षट्त्रिंशं वर्षं वै केशि सूदनः | पुत्र-शॊकाभि संतप्ता गान्धारी हत बान्धवा | यद् अनुव्याज हारार्ता तद्  इदं समुपागतम् || - வியாசர் மஹாபாரதம்)

"பாண்டவ கௌரவ இரு படைகளும், போருக்காக வரிசையாக அணிவகுக்கப்பட்டிருந்த போது, ​​யுதிஷ்டிரர் எத்தகைய பயங்கரமான சகுனங்களைக் குறிப்பிட்டாரோ அதை போலவே தற்போதும் உள்ளது." என்றார். 


இவ்வாறு கூறிய பிறகு, காந்தாரியின் வார்த்தைகளை சத்தியம் செய்ய சங்கல்பித்த பகைவர்களை அடக்குபவரான வாசுதேவன்,

உடனே, விருஷ்ணிகளை தீர்த்தயாத்திரை மேற்கொள்ளும்படி கட்டளையிட்டார்.

(इत्य उक्त्वा वासुदेवस तु चिकीर्षन सत्यम् एव तत् | आज्ञापयाम आस तदा तीर्थ-यात्रम् अरिंदम् || - வியாசர் மஹாபாரதம்)


கேசவனின் கட்டளையின் பேரில் தூதர்கள் "உடனடியாக விருஷ்ணிகள் சமுத்திர ஸ்நானம் செய்ய கடற்கரைக்கு பயணம் செய்ய வேண்டும்" என்று அறிவித்தனர். 

(अघॊषयन्त पुरुषास तत्र केशव शासनात | तीर्थयात्रा समुद्रे वः कार्येति पुरुषर्षभाः || - வியாசர் மஹாபாரதம்)


வைசம்பாயனர் மேலும் கூறினார்:

இப்படிப்பட்ட சூழ்நிலையில், விருஷ்ணி பெண்கள் ஒவ்வொரு இரவும் பயங்கரமான கனவு கண்டார்கள், 

கருப்பு நிறமும் வெள்ளைப் பற்களும் கொண்ட ஒரு பெண் உரத்த குரலில் சிரித்து கொண்டு துவாரகைக்குள் நுழைந்து, இவர்கள் வசிப்பிடத்திற்குள் நுழைந்து அவர்களிடமிருந்து மங்களமான வளையல்களை, ரக்ஷைகளை பறித்த்துக்கொண்டு ஓடிவது போல கனவு கண்டார்கள்.


'பயங்கரமான கழுகுகள், தங்கள் வீடுகளிலும், சமையல் அறைகளிலும் நுழைந்து, தங்கள் உடல்களை கிழித்து தின்பது போல' ஆண்கள் கனவு கண்டார்கள்.

(अलंकाराश च छत्त्रं च धवजाश च कवचानि च | हरियमाणान्य अदृश्यन्त रक्षॊभिः सुभयानकैः || - வியாசர் மஹாபாரதம்)


அவர்களின் ஆபரணங்களும் குடைகளும் கொடிகளும் கவசங்களும் பயங்கரமான ராக்ஷஸர்களால் பறிக்கப்பட்டது.


அக்னியால் கொடுக்கப்பட்ட கிருஷ்ணரின் இரும்பு போன்ற மிகவும் உறுதியான சக்கரம், விருஷ்ணிகள் பார்க்கும் போதே ஆகாயத்தில் பறந்து மறைந்து விட்டது.

(तच चाग्ग्नि दत्तं कृष्णस्य वज्रनाभम अयॊ मयम | दिवम आचक्रमे चक्रं वृष्णीनां पश्यतां तदा || - வியாசர் மஹாபாரதம்)


மனதின் வேகத்திற்கு ஈடாக ஓடக்கூடிய ஸ்ரீ கிருஷ்ணரின் 4 குதிரைகளும்  (சைவ்ய, சுக்ரீவன், மேகபுஷ்ப மற்றும் வலஹகா) தாருகன் (ஸ்ரீ கிருஷ்ணரின் தேரோட்டி) பார்த்துக்கொண்டிருக்கும் போதே சூரிய ஒளியுடன் கூடிய வாசுதேவரின் திவ்யமான ரதத்தை, இழுத்துக்கொண்டு சமுத்திரத்துக்கு மேலே சென்று மறைந்தன.

(युक्तं रथं दिव्यम् आदित्यवर्णं; हयाहरन् पश्यतॊ दारुकस्य | ते सागरस्यॊ परिष्ठाद अवर्तन; मनॊजवाश चतुरॊ वाजिमुख्याः || - வியாசர் மஹாபாரதம்)


பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் பெரிதும் மதித்து வணங்கப்பட்ட கருட கொடியையும், பலராமரால பெரிதும் மதித்து வணங்கப்பட்ட பனைமர கொடியையும் தேவலோக அப்சரஸ்கள் எடுத்துச் சென்றனர். விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் "தீர்த்த யாத்திரை செல்லுங்கள்.. தீர்த்த யாத்திரை செல்லுங்கள்" என்று இரவும் பகலும் சொல்லி விட்டு புறப்பட்டனர்.

(तालः सुपर्णश च महाध्वजौ तौ; सुपूजितौ राम जनार्दनाभ्याम |उच्चैर जह्रुर अप्सरसॊ दिवानिशं; वाचश चॊचुर गम्यतां तीर्थयात्रा || வியாசர் மஹாபாரதம்)





நடக்கும் இந்த விபரீதமான சகுனங்களை கண்டும், கேட்டும், மஹாரதர்களான விருஷ்ணிகள் மற்றும் அந்தக மஹாவீரர்கள், தங்கள் முழு குடும்பத்துடன் பல தீர்த்த யாத்திரைகளுக்கு செல்ல முடிவு செய்தார்கள்.

(ततॊ जिगमिषन्तस ते वृष्णि अन्धक महारथाः | सान्तःपुरास तदा तीर्थयात्राम् ऐच्छन् नरर्षभाः || வியாசர் மஹாபாரதம்)


மஹாரதர்களான விருஷ்ணிகள் மற்றும் அந்தக மஹாவீரர்கள், வழிப்பயணத்திற்கு சாப்பிடவும், குடிக்கவும் பல்வேறு வகையான மதுவையும் இறைச்சிகளையும் தயார் செய்து கொண்டனர்.

(ततॊ भॊज्यं च भक्ष्यां च पेयं च अन्धक वृष्णयः | बहु नानाविधं चक्रुर मद्यं मांसम अनेकशः || வியாசர் மஹாபாரதம்)


மதுபானம் செய்ய விரும்பும், பெரும் செல்வமும், அழகுமுடைய, பயங்கரமான பலசாலிகளான விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் துவாரகை நகரத்திலிருந்து தங்கள் தங்கள் ரதங்களில் குதிரைகளில் மற்றும் யானைகளில் ஏறி கொண்டு தீர்த்த யாத்திரையாக புறப்பட்டனர்.


தீர்த்த யாத்திரையாக வந்த யாதவர்கள், தங்கள் மனைவிகளுடன், ப்ரபாஸ க்ஷேத்திரம் (இன்று சோம்நாத், குஜராத்) வந்த போது ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட (தற்காலிக) கூடாரத்தில் தாங்கள் கொண்டு வந்த ஏராளமான உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களோடு தங்கினர். 

(ततः प्रभासे नयवसन् यथॊद्देशं यथा गृहम | प्रभूत भक्ष्य पेयस ते सदारा यादवास तदा || வியாசர் மஹாபாரதம்)


இப்படி இவர்கள் கடல் கடற்கரையில் தங்கியிருப்பதைக் கேள்விப்பட்ட  மனிதர்களில் சிறந்தவரான யோகத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவரான உத்தவர், தான் மற்ற இடங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்லப்போவதற்கு முன், அங்கு வந்தார். 

ஸ்ரீகிருஷ்ணர், உத்தவரைக் கைகூப்பி வணங்கினார், 

மேலும் விருஷ்ணிகளின் அழிவு நெருங்கிவிட்டன என்பதை அறிந்த ஸ்ரீகிருஷ்ணர், உத்தவரை தடுக்க விரும்பவில்லை.

காலத்தின் பிடியில் சூழப்பட்டு இருந்த, வலிமைமிக்கத் தேர்வீரர்களான விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் மத்தியில் அப்போது உத்தவர் ஆகாயத்தையும் பூமியையும் வியாபித்து கொண்டு, கிழித்துக்கொண்டு, தேரில் பயணம் செல்வதைக் கண்டனர்.


விருஷ்ணிகள், பிராமணர்களுக்காக சமைத்த உணவை மதுவுடன் கலந்து, குரங்குகளுக்கு கொடுத்தனர். 

(ब्राह्मणार्थेषु यत सिद्धम् अन्नं तेषां महात्मनाम् |तद वानरेभ्यः परददुः सुरा गन्धसमन्वितम् || - வியாசர் மஹாபாரதம்)


இப்படி தகாத காரியங்களை செய்ய ஆரம்பித்த மஹா பராக்ரமசாலியான இந்த வீரர்கள் கூட்டத்தில் அன்று மது பானமே முக்கியத்துவம் பெற்று இருந்தது. ப்ரபாஸ க்ஷேத்ர கடற்கரையில் அனைவரும் குடித்து கொண்டிருந்தனர்.  

கடற்கரை முழுவதும், "ஹாய் ஊய்…" என கூச்சலிட்டு கொண்டும், வாத்தியங்கள் ஊதி எக்காளம் செய்தும் கொண்டும், ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் நிலை தடுமாறி கும்மாளமடித்தனர்.

பகவான் கிருஷ்ணர் பார்த்து கொண்டிருக்கும் போதே, மஹாரதர்களான க்ருதவர்மா, யுயுதானன் (சாத்யகி) மற்றும் கதன் ஆகியோருடன் பலராமரும் குடிக்க தொடங்கினார்; கூடவே காசி அரசன் வப்ருவும் குடிக்க தொடங்கினார்..

(कृष्णस्य संनिधौ रामः सहितः कृतवर्मणा | अपिबद युयुधानश च गदॊ बभ्रुस तथैव च || வியாசர் மஹாபாரதம்)


அப்போது மது அருந்திய போதையில் இருந்த யுயுதானன் (சாத்யகி), அந்தச் கூட்டத்தின் நடுவே இருந்த க்ருதவர்மனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து அவமதிக்க ஆரம்பித்தான். 

'இறந்துபோன மனிதர்களை தாக்குவது போல, தூங்கி கொண்டு இருந்தவர்களை கொன்றவனை, க்ஷத்ரியனாக எப்படி ஏற்க முடியும்?" 

அடேய் ! ஹார்திக்கின் மகனே, நீ செய்த இந்த கீழ்த்தரமான காரியத்தை யாதவர்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்." என்றான்.

(न तन मृष्यन्ति हार्दिक्य यादवा यत् तवया कृतम् | வியாசர் மஹாபாரதம்)


யுயுதானன் (சாத்யகி) இப்படி சொன்னதும், மஹாரதர்களில்  முதன்மையான ப்ரத்யும்னன் (ருக்மிணி, ஸ்ரீகிருஷ்ணரின் பிள்ளை), ஹார்திக்கின் மகன் செய்த செயலை நினைத்து வெறுப்படைந்து, அவனை அவமானப்படுத்தும் நோக்கில், யுயுதானன் (சாத்யகி) சொன்னதை ஆமோதித்து பாராட்டினான். 

(इत्य उक्ते युयुधानेन पूजयामास तद् वचः | प्रद्युम्नॊ रथिनां श्रेष्ठॊ हार्दिक्यम् अवमन्य च || வியாசர் மஹாபாரதம்)


இதனால் மிகவும் கோபமடைந்த க்ருதவர்மா, அலட்சியப்படுத்தும் விதமாக சாத்யகியின் பக்கம் இடது கையை சுட்டிக்காட்டி:

அர்ஜுனனால் போர்க்களத்தில் கை அறுக்கப்பட்ட பிறகு யோகத்தில் உயிர் துறப்பதற்காக அமர்ந்திருந்த ஸோமதத்தனின் மகனான பூரிஸ்ரவஸின் தலையை வெட்டி கொடூரமாகக் கொன்றாயே! இது தான் உன் வீரமா?’ என்றான்.

(भूरिश्रवाश् छिन्नबाहुर् युद्धे परायगतस् तवया | वधेन सुनृशंसेन कथं वीरेण पातितः || வியாசர் மஹாபாரதம்)

(ஆயுதம் இல்லாமல் இருந்த அபிமன்யுவை பலபேர் சேர்ந்து கொன்றதற்கு பதில் கொடுப்பதற்காக, அன்று சாத்யகி ஆயுதம் இல்லாமல் இருந்த பூரிஸ்ரவஸின் தலையை வெட்டி சாய்த்தான்.

கண்ணனும் சாத்யகியும் இணை பிரியா நண்பர்கள். சாத்யகி யாதவ மஹாவீரன். அர்ஜுனனுக்கு வலக்கையாக பாரதப்போரில் இருந்தான் சாத்யகி)


பகைவீரர்களை அழிப்பவரான கேசவன், க்ருதவர்மனுடைய இந்த பேச்சை கேட்டதும், கோபமாகப் பார்த்தார்.

பின்னர் சாத்யகி ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து, 'ச்யமந்தக மணிக்காக க்ருதவர்மா சத்ராஜித்தை என்னவெல்லாம் செய்தான்' என்றான்.. 

(मणिः स्यमन्तकश् चैव यः स सत्राजितॊ ऽभवत् | तां कथां समारयाम् आस सात्यकिर् मधुसूदनम || வியாசர் மஹாபாரதம்)


தன் தகப்பனார் "சத்ரார்ஜித்" இறந்ததற்கான காரணத்தை கேட்ட சத்தியபாமா கோபமும், கண்ணீருமாக கேசவன் அருகில் சென்று அவர் மடியில் அமர, இதை பார்த்த சாத்யகிக்கு கிருதவர்மா மீது கோபம் அதிகரித்தது.

உடனே கோபத்துடன் சாத்யகி எழுந்து.

"உறங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் ஐந்து புதல்வர்கள், திருஷ்டத்யும்னன் மற்றும் சிகண்டி ஆகியோரை துரோணரின் மகனின் துணையுடன், கொலை செய்த இவனையும் வழி அனுப்பி வைக்க போகிறேன். இது சத்தியத்தின் மீது சத்தியம்

சத்யபாமா!  க்ருதவர்மாவின் வாழ்க்கையும் புகழும் இன்றோடு முடிந்துவிட்டன" என்றான்..

இப்படி சொல்லிவிட்டு, க்ருதவர்மனை நோக்கி விரைந்த சாத்யகி, கேசவன் பார்க்க,  அவனது தலையை வாளால் சீவி எறிந்தான் 

இப்படி செய்த பிறகு, யுயுதானன் (சாத்யகி), மேலும் அங்கிருந்த மற்றவர்களையும் தாக்கத் தொடங்கினான்.

யுயுதானன் (சாத்யகி) மேலும் அனர்த்தம் விளைவித்த கூடாது என்பதற்காக ஹிருஷிகேசனான ஸ்ரீ கிருஷ்ணர் ஒடி சென்று தடுத்தார்.

மஹாராஜா (ஜனமேஜெயா) ! இருப்பினும், நடந்த கலவரத்தால் ஆட்கொள்ளப்பட்டிருந்த போஜ வீரர்கள், அந்தகரர்கள், அனைவரும் அணியாக சேர்ந்து  கொண்டு, ஸைனேயனின் பேரனான சாத்யகியை சூழ்ந்தனர்.

மஹா தேஜஸை உடையவரும், காலத்தை அறிந்தவருமான ஜனார்தனன், சாத்யகியின் மீது கோபத்துடன் நான்கு திசையிலிருந்தும் தாக்க வரும் இவர்களை கண்டும் கோபம் கொள்ளாமல் அசையாமல் நின்றார்.

விதியாலும், குடி போதையாலும் கட்டுப்பட்டு இருந்த, யுயுதானனை தாங்கள் சாப்பிட்டு கையில் வைத்து இருந்த பாத்திரங்களாலேயே அடிக்க ஆரம்பித்தனர்.

ஸைனேயனின் பேரன் சாத்யகி இவ்வாறு தாக்கப்பட்டபோது, ​​ருக்மணியின் மகன் ப்ரத்யும்னன் மிகவும் கோபமடைந்தான்.

போஜர்கள் மற்றும் அந்தகர்களுடன் சண்டையில் ஈடுபட்டிருந்த சாத்யகியை மீட்பதற்காக ப்ரத்யும்னன் விரைந்து சென்றான்.

மிகுந்த பலமும், ஆற்றலும் கொண்டிருந்த இருவரும் மிகுந்த தைரியத்துடன் தங்களை சூழ்ந்து இருந்த போஜர்கள் மற்றும் அந்தகர்களுடன் சண்டையிட்டனர். இருந்தாலும், எதிர்ப்பு மிகவும் அதிகமாக இருந்ததால், இருவருமே ஸ்ரீ கிருஷ்ணரின் பார்வையிலேயே கொல்லப்பட்டனர்.

(स भॊजैः सह संयुक्तः सात्यकिश चान्धकैः सह | बहुत्वान् निहतौ तत्र उभौ कृष्णस्य पश्यतः || வியாசர் மஹாபாரதம்)


யது நந்தனான ஸ்ரீ கிருஷ்ணர், தன் மகனும், ஸைனேயனின் பேரனும் தன் கண் எதிரே கொல்லப்பட்டதை கண்டதும், கோபத்தோடு அங்கு விளைந்திருந்த கோரபுல்லை பிடுங்கி எடுத்துக்கொண்டார்.

(हतं दृष्ट्वा तु शैनेयं पुत्रं च यदुनन्दनः | एरकाणां तदा मुष्टिं कॊपाज जग्राह केशवः || வியாசர் மஹாபாரதம்)

அந்த கையளவு புல், இடியின் ஆற்றலினால் பயங்கரமான இரும்பு உலக்கை  போல ஆனது. அதை வைத்துக்கொண்டே  ஸ்ரீகிருஷ்ணர்  தனக்கு முன் வந்த அனைவரையும் அடித்து நொறுக்கினார்.

ஏற்பட்ட கலவரத்தால் தூண்டப்பட்ட அந்தகர்களும் போஜர்களும், ஸைனேயர்களும் (சாத்யகியின் வீரர்கள்), விருஷ்ணிகளும் (யாதவர்கள்) அந்த கலவரத்தில் ஒருவரையொருவர் அங்கு இருந்த கோரை புல்லை பிடுங்கி தாக்கிக்கொள்ள ஆரம்பித்தனர்..

அரசே! உண்மையில் அவர்களில் எவரெல்லாம் கோபத்தோடு அந்த கோர புல்லை பிடுங்கினார்களோ, அவர்களது கைகளில், புற்களே இடி மின்னல் போல மாறியது, 

அங்குள்ள ஒவ்வொரு புல்லும் பயங்கரமான இரும்பு உலகக்கை போல மாறி இருந்தது.

அரசே (ஜனமேஜெயா)! இவையெல்லாம் பிராமண சாபத்தால் நிகழ்ந்தவை 

(बरह्मा दण्डकृतं सर्वम इति तद विद्धि पार्थिव | வியாசர் மஹாபாரதம்)


புல் என்று நினைத்து அதை பிடுங்கி ஒருவர் மீது ஒருவர் தாக்க ஆரம்பிக்க, எளிதில் துளைக்க முடியாத உலோகத்தையும் உடைத்து துளைப்பதைக் கண்டார்கள். 

உண்மையில், ஒவ்வொரு கோரை புல்லும் இடி போல சக்தியை உமிழ்ந்து கொண்டு, பயங்கரமான உலக்கை போல மாறி இருந்தது. 

மகன் தந்தையை கொல்ல ஆரம்பித்தான், தகப்பன் மகனை கொன்றான், 

ஓ பாரதா! 

மது அருந்தி மதம் பிடித்து போயிருந்த இவர்கள் யுத்தம் செய்ய விரைந்து, ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். 

குகுரர்களும், அந்தகர்களும் விட்டிற்பூச்சிகள் தானாக நெருப்பில் வந்து விழுவது போல, மரணத்தை தழுவினர். 

(पतंगा इव चाग्नौ ते नयपतन् कुकुरान्धकाः | नासीत पलायने बुद्धिर् वध्यमानस्य कस्य चित् || வியாசர் மஹாபாரதம்)


இத்தனை நாசம் ஏற்படுவதை பார்த்தும், காலத்தின் கட்டுப்பாட்டால் சூழப்பட்ட மற்றவர்களுக்கு, ஓடும் புத்தி கூட உண்டாகவில்லை.

(तं तु पश्यन् महाबाहुर जानन कालस्य पर्ययम || வியாசர் மஹாபாரதம்)


அப்பொழுது, காலத்தை அறிந்த வாசுதேவ கிருஷ்ணர், கையில் உலக்கையாக மாறி இருந்த கோரை புற்களை பிடித்து கொண்டே நின்று கொண்டிருந்தார்.

பாரதா! 

நடந்த கலவரத்தில், தன் பிள்ளைகளான ஸாம்பனும், சாருதேஷ்ணனும், ப்ரத்யும்னனும், அநிருத்தனும் கொல்லப்பட கோபம் கொண்டார். கதனும் கொல்லப்பட்டு விழுந்து கிடக்க, பெருங்கோபம் கொண்டு, ஒருவர் கூட மிச்சமாகாமல் அனைவரையும் கொன்று குவித்தார்.

(साम्बं च निहतं दृष्ट्वा चारुदेष्णं च माधवः | प्रद्युम्नं च अनिरुद्धं च ततश् चुक्रॊध भारत || வியாசர் மஹாபாரதம்)


இப்படி கடுங்கோபத்தோடு சண்டையிட்ட வாசுதேவ கிருஷ்ணரிடம், பப்ருவும், தாருகனும் சொன்னதை கேளுங்கள்.

வாசுதேவ கிருஷ்ணரிடம், "பகவானே! இங்கு கூடியிருந்த அனைவரும் உம்மால் கொல்லப்பட்டனர்.

பலராமரை காணவில்லை. அவர் இடத்தை தேடுங்கள். அவர் இருக்குமிடம் செல்வோம்" என்றனர்.

(भगवन् संहृतं सर्वं त्वया भूयिष्ठम् अच्युत | रामस्य पद्म अन्विच्छ तत्र गच्छाम यत्र सः || வியாசர் மஹாபாரதம்)


பிறகு, வாசுதேவரும், தாருகனும் பப்ருவும், பலராமர் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக சென்றனர்.

அளவற்ற பராக்ரமுள்ள,பலராமர், யாரும் இல்லாத இடத்தில், மரத்தினடியில் சிந்தனையில் அமர்ந்து இருந்ததை பார்த்தனர்.


அப்போது, வாசுதேவ கிருஷ்ணர், பலராமர் அருகில் சென்று, தன்னுடைய தேரோட்டியான தாருகனை பார்த்து,

"நீ கௌரவர்களிடம் சென்று அர்ஜுனனிடம், யாதவர்களுக்கு நேர்ந்த பெரிய நாசத்தை முழுவதுமாக சொல்.

பிறகு, யாதவர்கள், பிராம்மண சாபத்தால், அழிந்து போனதை கேட்டு,  சீக்கிரம் இங்கு வரச்சொல்" என்று உத்தரவிட்டார்.

துக்கத்தால் தன் புலன்களை இழந்தவனாக இருந்த தாருகன், குரு தேசத்தை நோக்கி தேரை செலுத்தினான்.

பிறகு,  வாசுதேவர், தாருகன் சென்ற பிறகு, அங்கிருந்த பப்ருவை பார்த்து, "நீ ஸ்திரீகளை ரக்ஷிக்க உடனே செல். பொருளில் ஆசையுள்ள திருடர்கள், பெண்களை துன்புறுத்தி விட கூடாது"என்றார்.

இவ்வாறு கேசவனால் கட்டளையிடப்பட்ட பப்ரு, இன்னும் மது போதை தெளியாமல் இருந்தாலும், தன் உறவினர்களின் படுகொலையால் துக்கத்துடன்  புறப்பட்டுச் சென்றான்.

விலங்குகளை பிடிக்க ஒரு இயந்திரத்தில், இரும்பை கட்டி வைத்திருந்தான் ஒரு வேட்டைக்காரன்.  யாதவ வீரனான பப்ரு தனியாக சென்று கொண்டிருந்த போது, அந்த இரும்பு திடீரென இவன் மீது விழுந்து கேசவனின் கண் முன்னே உயிரை பறித்து விட்டது. பிராமணர்களின் சாபம்  அவனையும் கொன்றது.

(सा परस्थितः केशवेनानुशिष्टॊ; मदातुरॊ जञातिवधार्दितश च | तं वै यान्तं संनिधौ केशवस्य; तवरन्तम् एकं सहसैव बभ्रुम् | ब्रह्मानुशप्तम् अवधीन महद वै; कूटॊन्मुक्तं मुसलं लुब्धकस्य || வியாசர் மஹாபாரதம்)


இவ்வாறு இறந்து விட்ட பப்ருவை கண்ட ஸ்ரீகிருஷ்ணர், சோர்வடைந்து விடாமல், பலராமரை பார்த்து, 

"ராமா! நான் இப்பொழுதே சென்று ஸ்திரீகளை அரசரிடம் ஒப்படைத்துவிட்டு வந்து விடுகிறேன். நீர் இந்த இடத்திலியேயே என்னை எதிர்பார்த்து கொண்டிரும்" என்று சொல்லிவிட்டு, துவாரகா நகரம் நோக்கி விரைந்தார்.

(इहैव तवं मां परतीक्षस्व राम; यावत् सत्रियॊ जञातिवशाः करॊमि | வியாசர் மஹாபாரதம்)

துவாரகையை அடைந்த வாசுதேவ ஸ்ரீகிருஷ்ணர், தன் தந்தை வசுதேவரை பார்த்து,

"நீங்கள் அர்ஜுனன் வரவை எதிர்பார்த்து கொண்டு இருங்கள். அதுவரை, அனைத்து ஸ்த்ரீகளும் ரக்ஷியுங்கள். 

பலராமர் வனத்தின் மத்தியில் என்னை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். நான் இப்பொழுது அவரிடம் சொல்லப்போகிறேன்.

யாதவ க்ஷத்ரியர்களின் அழிவு, என்னால் பார்க்கப்பட்டது. இவர்கள் இல்லாத இந்த துவாரகை நகரத்தில், நான் மட்டும் இருக்க விருப்பமில்லை.

ஆகையால், நான் வனத்தில் இருக்கும் பலராமர் இருக்கும் இடத்திற்கு சென்று, தவம் செய்ய போகிறேன். இதை உங்களிடம் தெரிவிக்கவே வந்தேன்" என்று சொல்லி, பாதத்தை தொட்டு வணங்கி விட்டு வனம் நோக்கி புறப்பட்டார்.

(तपश चरिष्यामि निबॊध तन मे; रामेण सार्धं वनम् अभ्युपेत्य | इतीदम् उक्त्वा शिरसास्य पादौ; संस्पृश्य कृष्णस तवरितॊ जगाम || வியாசர் மஹாபாரதம்)


அப்போது துவாரகையில் உள்ள அனைத்து பெண்களும் குழந்தைகளும் பெரும் சோகத்தில் கதறி அழுதனர். இவர்களின் அழுகை உரத்த சத்தத்தை கேட்ட கேசவன், திரும்பி வந்து, அவர்களை நோக்கி,

"அர்ஜுனன் இங்கு சீக்கிரத்தில் வந்து விடுவான். உத்தமமானவனான அர்ஜுனன் உங்களை துக்கத்திலிருந்து விடுவிப்பான்:"

இப்படி சமாதானம் சொல்லிவிட்டு, ஸ்ரீகிருஷ்ணர், வனம் சென்று, பலராமரை பார்த்தார்.

யோகத்தில் அமர்ந்து இருந்த பலராமரின் வாயிலிருந்து, வெண்மையான நிறமுடைய பெரிய நாகம் வெளியேறியது. 

(अथापश्यद् यॊगयुक्तस्य तस्य; नागं मुखान् निःसारन्तं महान्तम् | शवेतं ययौ स ततः परेक्ष्यमाणॊ; महार्णवॊ येन महानुभावः || வியாஸர் மஹாபாரதம்)


அதை ஸ்ரீ கிருஷ்ணர் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே, ஆயிரம் தலைகளுடன், மலை போன்ற சரீரத்தோடு, சிவந்த முகத்துடன் வெளிப்பட்ட அந்த நாகம், சரீரத்தை விட்டு விட்டு, பெருங்கடலில் பிரவேசிக்க.

(सहस्रशीर्षः पर्वता भॊगवर्ष्मा; रक्ताननः सवां तनुं तां विमुच्य | सम्यक् च तं सागरः परत्यगृह्णान; नागदिव्याः सरितश चैव पुण्याः || வியாஸர் மஹாபாரதம்)

சமுத்திர ராஜன், பல தேவலோக நாகங்கள், பல புனித நதி தேவதைகள் ப்ரத்யக்ஷமாகி, அவரை மரியாதையுடன் வரவேற்றனர்.

ஹே ராஜன் (ஜனமேஜெயா) !

கார்கோடகனும் வாசுகியும், தக்ஷகனும், பிருதுஸ்ரவனும் வருணனும் குஞ்சரனும், மிஸ்ரீயும், சங்கனும் குமுதனும், புண்டரிகனும் உயர் ஆன்மாவான திருதராஷ்டிரனும், ஹ்ராதனும், க்ராதனும், சிதிகண்டனும், உக்கிரதேஜாசும், சக்ரமந்தன் அதிஷாண்டன் என்ற இரு முதன்மையான நாகர்களும், துர்முகனும், அம்வரிஷனும், மன்னன் வருணனும், எதிர்சென்று, அவருக்கு அர்க்கியமும் பாத்யமும் கொடுத்து பூஜித்தனர், குசலம் விசாரித்து, தங்கள் தங்கள் மரியாதையை செலுத்தினர்.

(कार्कॊटकॊ वासुकि: तक्षक: च; पृथुश्रवा वरुणः कुञ्जर: च | मिश्री शङ्खः कुमुदः पुण्डरीक: तथा नागॊ धृतराष्ट्रॊ महात्मा || ह्रादः क्राथः शितिकण्ठॊ ऽगरतेजास; तथा नागौ चक्रमन्दातिषाण्डौ | नागश्रेष्ठॊ दुर्मुखश चाम्बरीषः; सवयं राजा वरुणश चापि राजन | परत्युद्गम्य सवागतेनाभ्यनन्दंस; ते ऽपूजयंश चार्घ्य पाद्य करियाभिः || வியாஸர் மஹாபாரதம்)


சகோதரன் இவ்வாறு உலகத்தை விட்டு பிரிந்த பிறகு, எல்லாவற்றின் முடிவையும் முழுமையாக அறிந்திருந்த வாசுதேவர், சூன்யமான  அந்த காட்டில் தனிமையாக சிந்தனையுடன் சிறிது நேரம் அலைந்த பிறகு, அப்படியே பூமியில் அமர்ந்தார்.

(ततॊ गते भरातरि वासुदेवॊ; जानन सर्वा गतयॊ दिव्यदृष्टिः | वने शून्ये विचरंश चिन्तयानॊ; भूमौ ततः संविवेशाग्र्य तेजाः || வியாசர் மஹாபாரதம்)


அப்போது கிருஷ்ணர் முன்பு காந்தாரி முன்பு தனக்கு கொடுத்த சாபத்தையும், எச்சில் பாயசத்தை பூசிக்கொண்ட போது, துர்வாசர் சொன்னதையும் நினைத்தார்.

வ்ருஷணீக்களும், அந்தகர்களும் அழிந்த பிறகு, இதற்கு முன், இருந்த கௌரவர்களும் அழிந்து விட்டதால், தன் காரியம் முடிந்து விட்டதால், காலத்தை அனுசரித்து, புறப்பட தயாரானார், பகவான் ஸ்ரீகிருஷ்ணர். உடனே இந்திரியங்களை அடக்கினார். 

(स चिन्तयानॊ ऽन्धकवृष्णिनाशं; कुरु कषयं चैव महानुभावः | मेने ततः संक्रमणस्य कालं; ततश चकारेन्द्रिय संनिरॊधम || வியாசர் மஹாபாரதம்)





எல்லா பொருட்களின் தத்துவத்தை அறிந்தவரான வாசுதேவர், ஸ்வயமே பரமாத்மாவாக இருந்தாலும், எல்லா சந்தேகங்களையும் போக்குவதற்கும், முடிவுகளை உறுதி செய்வதற்கும், மூன்று உலகங்களையும் நிலைநிறுத்துவதற்கும், உலகத்தை உருவாக்குவதற்கும், அத்ரியின் மகனான துர்வாசரின் வார்த்தைகளை உண்மையாக்க விரும்பி கிளம்ப தயாரானார்.

கிருஷ்ணர் தனது புலன்கள், பேச்சு, மனம் அனைத்தையும் அடக்கிக்கொண்டு உயர்ந்த யோகத்தில் தன்னைக் கிடத்தி அப்படியே தரையில் படுத்துக்கொண்டார்.

(स केशवं यॊगयुक्तं शयानं; मृगाशङ्की लुब्धकः सायकेन || வியாசர் மஹாபாரதம்)


அப்பொழுது, மிருகங்களை வேட்டையாட கூடிய ஜரன் என்ற வேடன் ஒருவன் அங்கு வந்தான்.

தாமரை போன்ற பாதங்களை உடைய பகவானின் உள்ளங்காலை பார்த்த இந்த வேடன், ஏதோ பக்ஷி என்று நினைத்து, ஸ்ரீகிருஷ்ணர் காலில் அம்பு எய்தி விட்டான்.

ஓடி சென்று பார்த்த போது, யோகத்தை ஆஸ்ரயித்து, மஞ்சள் நிற ஆடை அணிந்து, பல கைகளுடன் தரையில் சயனித்து கொண்டிருக்கும் பகவானை பார்த்தான் ஜரன்

(जराविध्यत् पादतले तवरावांस; तं चाभितस तज जिघृक्षुर जगाम | अथापश्यत पुरुषं यॊगयुक्तं; पीताम्बरं लुब्धकॊ ऽनेकबाहुम || வியாசர் மஹாபாரதம்)

இப்படி பல கைகளோடு பகவானாக காட்சி தர, ஜரன் தான் செய்த குற்றத்தை எண்ணி மனம் நடுங்கி, அவருடைய இரு பாதங்களையும் தன் தலை மீது வைத்து கொண்டான்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஜரனை ஆறுதல் படுத்தினார். ஜரன் நிமித்தமாக வைகுண்டம் செல்ல திட்டமிட்ட பகவான், தன் ரூபத்துடன் உலகை பிரகாசித்து கொண்டே உயர சென்றார்.

(मत्वात्मानम् अपराधं स तस्य; जग्राह पादौ शिरसा चार्तरूपः | आश्वासयत तं महात्मा तदानीं; गच्छन्न ऊर्ध्वं रॊदसी व्याप्य लक्ष्म्या || வியாசர் மஹாபாரதம்)


பகவான் மேல் உலகத்தை நோக்கி புறப்படுவதை கண்டதும், வாசவனும் (இந்திரனும்), அஸ்வினி குமாரர்களும், 11 ருத்ரர்களும், 12 ஆதித்யர்களும், 8 வசுக்களும், விஸ்வேதேவர்களும், முனிகளும், சித்தர்களும், கந்தர்வர்களில் முதன்மையானவர்களும், அப்சரஸ்களுடன் அவரை எதிர் கொண்டு அழைக்க வந்தனர்.

(दिवं पराप्तं वासवॊ ऽथाश्विनौ च; रुद्रादित्या वसवश चाथ विश्वे | परत्युद्ययुर मुनयश चापि सिद्धा; गन्धर्वमुख्याश च सहाप्सरॊभिः || வியாசர் மஹாபாரதம்)


பிறகு, ஓ மன்னா (ஜனமேஜயா)! 

அபரிமிதமான சக்தி கொண்ட பகவான் நாராயணன், அனைத்தையும் படைத்தவன்,  அனைத்தையம் அழிப்பவனுமான, யோகத்தின் முதல்வன், சொர்க்க லோகங்களை தனது மகிமையால் நிரப்பி, கற்பனைக்கு எட்டாத அவரது ஸ்தானத்தை அடைந்தார்.

(ततॊ राजन् भगवान् उग्रतेजा; नारायणः परभवश चाव्ययश च | यॊगाचार्यॊ रॊदसी वयाप्य लक्ष्म्या; सथानं पराप सवं महात्माप्रमेयम् || வியாசர் மஹாபாரதம்)


இப்படி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தன் ஸ்தானத்தில் அமர்ந்த பிறகு, தேவர்கள், தேவரிஷிகள், சாரணர்கள், கந்தர்வர்களில் முதன்மையானவர்கள் மற்றும் பல அழகான அப்சரஸ்கள் மற்றும் சித்தர்கள் மற்றும் சாத்தியர்களை அருகில் சென்று நமஸ்கரித்தனர். அனைவரும் பணிவுடன் குனிந்து அவரை வணங்கினர்.

(ततॊ देवैर ऋषिभिश चापि कृष्णः; समगतश चारणैश चैव राजन | गन्धर्वाग्र्यैर अप्सरॊभिर वराभिः; सिद्धैः साध्यैश चानतैः पूज्यमानः || வியாசர் மஹாபாரதம்)


ராஜன்! ஈசனான ஸ்ரீகிருஷ்ணரை தேவர்கள் அனைவரும் கொண்டாடினர்.

முனிவர்களும் முனிவர்களுள் முதன்மையான பலர் சேர்ந்து கொண்டு, அவரை வேதத்தின் ருக்குகளால் பூஜித்தார்கள் .

கந்தர்வர்கள் ஸ்தோத்திரம் செய்து பாடினார்கள். பகவானை  புகழ்ந்தனர். இந்திரன் மகிழ்ச்சியுடன் அவரைப் கொண்டாடினான்.

(ते वै देवाः परत्यनन्दन्त राजन; मुनिश्रेष्ठा वाग्भिर आनर्चुर ईशम | गन्धर्वाश चाप्य उपतस्थुः सतुवन्तः; परीत्या चैनं पुरुहूतॊ ऽभयनन्दत ||வியாசர் மஹாபாரதம்)


இதற்கிடையில், தாருகன், குரு தேசம் சென்று, ப்ரிதாவின் (குந்தி) மகன்களான அந்த வலிமைமிக்க தேர்வீரர்களைப் பார்த்து, 'விருஷ்ணி க்ஷத்ரியர்கள் ஒருவரையொருவர் இரும்புஉலக்கையால்  தங்களை தாங்களே அடித்து கொண்டு, அழிந்து போனது பற்றி தெரிவித்தார். 

க்ஷத்ரிய வீரர்களான விருஷ்ணிகள், போஜர்கள், அந்தகர்கள், குகுரர்கள் அனைவரும் அழிந்துபோனதை கேள்விப்பட்ட பாண்டவர்கள், துக்கத்தால் துடிதுடித்தனர். 

(श्रुत्वा विनष्टान् वार्ष्णेयान सभॊजकुकुरान्धकान | पाण्डवाः शॊकसंतप्ता वित्रस्तमनसॊ ऽभवन् || வியாஸர் மஹாபாரதம்)


பின்னர் கேசவனின் ப்ரியமான நண்பனான அர்ஜுனன், தன் சகோதரர்களிடம் விடைபெற்று, தனது தாய் மாமாவைப் பார்க்கப் புறப்பட்டார்.

(ततॊ ऽर्जुनस तान आमन्त्र्य केशवस्य प्रियः सखा | पर्ययौ मातुलं द्रष्टुं नेदम् अस्तीति चाब्रवीत् || வியாஸர் மஹாபாரதம்)


ஸ்ரீ கிருஷ்ணரின் சாரதியான தாருகனுடன் விருஷ்ணிகளின் நகரமான துவாரகைக்குள் நுழைந்த மஹாவீரனான அர்ஜுனன், துவாரகை நகரமே கணவனைப் பிரிந்த ஒரு பெண்ணைப் போல் இருப்பதைக் கண்டான்.

(सा वृष्णिनिलयं गत्वा दारुकेण सह परभॊ | ददर्श द्वारकां वीरॊ मृतनाथाम् इव सत्रियम || வியாசர் மஹாபாரதம்)


எந்த மாளிகையில் லோகநாதனான ஸ்ரீ கிருஷ்ணரால் காப்பாற்றப்பட்டு வந்தார்களோ, அந்த வ்ருஷ்ணீ குல பெண்கள் இன்று நாதன் இல்லாமல் இருப்பதை அர்ஜுனன் கண்டான்.
(याः सम ता लॊकनाथेन् नाथवत्यः पुराभवन् | तास तव अनाथास तदा नाथं पार्थं दृष्ट्वा विचुक्रुशुः || வியாசர் மஹாபாரதம்)

பார்த்தன் தங்களைக் காக்க வந்ததைக் கண்டு, அவர்கள் அனைவரும் கதறி அழ ஆரம்பித்தனர். எங்கும் உரத்த அலறல் சத்தமே கேட்டது.
 
வாசுதேவ கிருஷ்ணரின் 16,108 பத்னிகளும், அர்ஜுனன் வந்ததைக் கண்டவுடன், துக்கம் தாளாமல், அனைவரும் பெரும் சோகத்தில் கதறி அழ ஆரம்பித்தனர். 
(षॊडशस्त्रीसहस्राणि वासुदेव परिग्रहः | तासाम आसीन महान नादॊ दृष्ट्वैवार्जुनम आगतम || வியாசர் மஹாபாரதம்)


இப்படி ஸ்ரீ கிருஷ்ணர் இல்லாமல் பட்டத்து மஹிஷிகளும், அவர்களது பிள்ளைகளும் அர்ஜுனனை கண்டு கதறி அழ, அர்ஜுனன் கண்கள் கண்ணீரால் நிரம்பி, அவர்களை  பார்க்கமுடியாமல் தானும் கதறி அழுதான்.
(ता: तु दृष्ट्वैव कौरव्यॊ बाष्पेण पिहितॊ ऽर्जुनः | हीनाः कृष्णेन पुत्रैश च नाशकात सॊ ऽभिवीक्षितुम् || வியாசர் மஹாபாரதம்)

துவாரகா நகரத்தில் ஒரு பெரிய நதியாக விருஷ்ணிகளும் அந்தகங்களும் இருந்தனரே ! 
மனதை விட வேகமாக செல்லும் குதிரைகள் மீன்கள் போல அங்கு துள்ளி விளையாடியதே!
தேர்கள் அந்த சமுத்திரத்தில் படகுகள் போல பவனி வந்ததே! 
அங்கு இசைக்கப்பட்ட இசைக்கருவிகளின் நாதமும், தேர்கள் ஓடும் சத்தமும், சமுத்திரத்தில் உள்ள அலைகள் போல இருந்ததே! 
துவாரகையில் வரிசையாக கட்டப்பட்டு இருந்த வீடுகளும், மாளிகைகளும், பொது சதுக்கங்களும் சிறு சிறு ஏரிகள் போல இருந்ததே!
ரத்தினங்களும் விலையுயர்ந்த கற்களும் துவாரகை முழுவதும்  சமுத்திரத்தின் பாசிகள் போல எங்கும் காணப்பட்டனவே! 
சாதுக்கள் தங்க அமைக்கப்பட்ட பெரிய பெரிய மடங்கள், அதன் சுவர்கள், சமுத்திரத்தில் மிதக்கும் மலர் மாலைகள் போன்ற காணப்பட்டதே!
சமுத்திரத்தில் ஆங்காங்கு ஏற்படும் சிறு தீவில், நீரோட்டம் இருப்பது போல, துவாரகா தெருக்கள் மற்றும் சாலைகளின் மேற்பரப்பை பார்த்தால், சுழல்களில் ஓடும் வலுவான நீரோட்டங்கள் போல காணப்பட்டதே! 
நான்கு பக்கமும் மூடப்பட்ட, பெரிய மைதானங்கள் பெரிய ஏரிகளாக காணப்பட்டதே! 

மகுடம் வைத்தார் போல, பலராமனும் கிருஷ்ணனும் இரண்டு வலிமைமிக்க முதலைகள் போல இந்த சமுத்திரத்தை ஆட்சி செய்தனரே! 
அப்படி காணப்பட்ட அற்புதமான துவாரகா என்னும் நதி, இப்போது காலபாசத்தில் சிக்கி, பயங்கரமான வைதரணீ என்னும் நதி போல அர்ஜுனனுக்குத் தோன்றியது.
(राम कृष्ण महाग्राहां द्वारका सरितं तदा | कालपाशग्रहां घॊरां नदीं वैतरणीम् इव || வியாசர் மஹாபாரதம்

இப்படி துவாரகையே காட்சி கொடுக்க, கிருஷ்ணரின் எண்ணற்ற தேவிகளை கண்டதும், அர்ஜுனன் கண்ணீரில் குளித்த கண்களுடன் உரத்த குரலில் அழுது கொண்டே பூமியில் விழுந்தான். 
(तां ददर्शार्जुनॊ धीमान् विहीनां वृष्णिपुंगवैः | गतश्रियं निरानन्दां पद्मिनीं शिशिरे यथा || வியாசர் மஹாபாரதம்)

இப்படி பார்த்தன் கிருஷ்ணரை இழந்து பரிதவித்து அழுது கிடக்க, கிருஷ்ணரின் பத்னிகள், ஸத்ராஜித்தின் மகளான சத்யபாமா, ருக்மிணி உட்பட, அர்ஜுனனை சூழ்ந்து கொண்டு மேலும் துக்கம் தாளாமல் கதறி அழுதனர்.
(तां दृष्ट्वा द्वारकां पार्थस ताश च कृष्णस्य यॊषितः | सस्वनं बाष्पम् उत्सृज्य निपपात महीतले || सत्राजिती ततः सत्या रुक्मिणी च विशां पते | अभिपत्य पररुरुदुः परिवार्य धनंजयम् || வியாசர் மஹாபாரதம்)

அர்ஜுனனை எழுப்பி தங்க ஆசனத்தில் அமரச் செய்தனர். 
மஹாத்மாவான அர்ஜுனனை ஸ்ரீ கிருஷ்ணரின் பத்னிகள்  சுற்றி அமர்ந்து கொண்டு, அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் கொண்ட நட்பை சொல்லி சொல்லி கொண்டாடினார்கள், அழுதார்கள். 

பாண்டுவின் மகனான அர்ஜுனனும், கோவிந்தனின் பெருமைகளை ஸ்தோத்திரம் செய்து, கிருஷ்ண பத்னிகளுக்கு ஆறுதல் சொன்னான். 
பிறகு, தன் தாய் மாமாவைப் பார்க்கச் சென்றான்.


வைசம்பாயனர் மேலும் கூறினார்: 
புத்திர சோகத்தினால் பீடிக்கப்பட்டு பெரும் துயரில் இருந்த வசுதேவர், மஹாத்மாவும், வீரனும், கௌரவ தேசத்தின் சிறந்தவனுமான அர்ஜுனன் வருவதை கண்டார்.
கண்ணீரால் நிறைந்த கண்களுடன், விசாலமான மார்புடைய, நீண்ட கைகளை உடைய அர்ஜுனன் தாங்க முடியாத மனத் துயருடன், வசுதேவரின் இரண்டு பாதங்களையும் பற்றி கொண்டு அழ ஆரம்பித்தான். 

ஓ பாரதா! அந்த வயதான வசுதேவர், தனது சகோதரியின் மகனை உச்சி முகர ஆசைப்பட்டு அருகில் வந்தும், துக்கத்தை அடக்க முடியாமல், பெரும் தளர்ச்சியுற்ற நிலையில், அர்ஜுனனை கட்டி கொண்டு, மறைந்து விட்ட சகோதரர்களையும், புத்ரர்களையும், பேரன்களையும், நண்பர்களையும் நினைத்து வாய்விட்டு அழ ஆரம்பித்தார்.
(समालिङ्ग्यार्जुनं वृद्धः स भुजाभ्यां महाभुजः | रुदन पुत्रान समरन सार्वान विललाप सुविह्वलः | भरातॄन पुत्रांश च पौत्रांश च दौहित्रांश च सखीन अपि || வியாசர் மஹாபாரதம்)

வசுதேவர், அர்ஜுனனை பார்த்து,
"அர்ஜுனா! எவர்கள் நூற்றுக்கணக்கான மன்னர்களையும், அசுரர்களையும் ஜெயித்தார்களோ, அவர்கள் யாரும் இன்று இல்லை. 
அர்ஜுனா! நான் மட்டும் மரணத்தை தழுவாமல் ஜீவித்து இருக்கிறேன்!
அர்ஜுனா! பார்த்தா! உனக்கு பிரியமான, நீ எப்பொழுதும் கௌரவிக்கும் இருவரால், வ்ருஷ்ணீகள் மரணமடைந்தனர்.

தனஞ்சயா ! உன்னால் எப்பொழும் புகழப்பட்ட, ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்தமான, சிறந்த வ்ருஷ்ணீ வீரர்கள் என்று புகழப்பட்ட ப்ரத்யும்னனும், யுயுதானனும் (சத்ரார்ஜித்) இந்த பேரழிவுக்கு காரணமானார்கள்.

(यौ तौ वृष्णिप्रवीराणां दवाव एवातिरथौ मतौ | प्रद्युम्नॊ युयुधानश च कथयन् कत्थसे च यौ || வியாசர் மஹாபாரதம்)

அர்ஜுனா! குல நாசம் சாபத்தால் ஏற்பட்டு இருக்கிறது. ஆதலால், நான் சாத்யகியையோ, க்ருதவர்மனையோ, அக்ரூரரையோ, ப்ரத்யும்னனையோ நிந்திக்க விரும்பவில்லை. 
(न तु गर्हामि शैनेयं हार्दिक्यां चाहम अर्जुन | अक्रूरं रौक्मिणेयं च शापॊ हय एवात्र कारणम् || வியாசர் மஹாபாரதம்)

மதுவைக் கொன்றவன், கேசியையும், கம்ஸனையும் தன் பலத்தால் ஒழித்தவன், தன் பராக்ரமத்தால் கர்வமுள்ள சேதி நாட்டு சிசுபாலனை தண்டித்தவன், வேடனான ஏகலைவனையும், கலிங்கர்களையும், மகதர்களையும், காந்தாரர்களையும், காசிராஜனையும், பாலைவனத்தில் இருந்த அரசர்களையும், கீழ் திசையிலும், தென் திசையிலும், மலை நாட்டிலும் இருந்த மன்னர்களையும் அடக்கியவனான மதுஸூதனன் பாராமுகத்துடன் இருந்து விட்டான். 
(केशिनं य: तु कंसं च विक्रम्य जगतः परभुः | विदेहाव अकरॊत पार्थ चैद्यं च बल गर्वितम् || नैषादिम् एकलव्यं च चक्रे कालिङ्गमागधान | गान्धारान् काशिराजं च मरु भूमौ च पार्थिवान || पराच्यांश च दाक्षिणात्यंश च पार्वतीयांस तथा नृपान् | सॊ ऽभयुपेक्षितवान् एतम अन्यं मधुसूदनः || வியாசர் மஹாபாரதம்)


அந்தோ! ரிஷிகள் கொடுத்த  சாபத்துக்காக, மதுசூதனன் நடக்கும் பேரழிவை கண்டும் காணாதது போல இருந்தான்! 

நீயும் நாரதரும் முனிவர்களும் எனக்கு புத்திரனாக பிறந்த ஸ்ரீகிருஷ்ணனை ஸநாதனமான, தோஷமற்ற அச்சுதனான தேவாதிதேவன் என்று அறிகிறீர்கள்.

சாக்ஷாத் விஷ்ணுவாக இருந்தும், தன் உறவினர்களின் அழிவை குறுக்கிடாமல் பார்த்து கொண்டிருந்தான்.

இப்படி ஒரு பேரழிவு நடக்க என் புத்திரனே  அனுமதித்திருக்க வேண்டும். அவன் பரமாத்மா என்று அறிவேன். 
காந்தாரி மற்றும் ரிஷிகளின் வார்த்தைகளைப் பொய்யாக்க வாசுதேவன் விரும்பவில்லை

பகைவர்களை வாட்டுபவனே! உன்னுடைய பேரன் (பரீக்ஷித்) அஸ்வத்தாமனால் கர்பத்திலேயே கொல்லப்பட்டும், ஸ்ரீகிருஷ்ணன் தன் யோக பலத்தால் உயிர்ப்பித்து கொடுத்ததை நேரில் கண்டாய்.

அப்படி காப்பாற்றிய உன்னுடைய ப்ரிய நண்பன், தன் குலத்தை, தன் மக்களை காக்க விரும்பவில்லை.

கேசவன், தன்னுடைய புத்திரர்களும், பௌத்திரர்களும், சகோதரர்களும், நண்பர்களும் கொல்லப்பட்டு பூமியில் விழுந்து கிடக்க, என்னை பார்க்க வந்தான். 

என்னை பார்த்து இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணன் சொன்னான்.
"இப்போது இந்த குலத்திற்கு இப்படி ஒரு முடிவு ஏற்பட்டு விட்டது. பரத-ஸ்ரேஷ்டனான அர்ஜுனன் இந்த துவாரகைக்கு வர போகிறான். 
அவனிடத்தில் வ்ருஷ்ணிகளுக்கு நேர்ந்த பெரிய நாசத்தை தெரிவிக்க வேண்டும்.
யாதவர்களுக்கு ஏற்பட்ட மரண செய்தியை கேட்டு, அர்ஜுனன் உடனேயே புறப்பட்டு இருப்பான். இதில் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை.

நானே அர்ஜுனன். அர்ஜுனன் தான் நான். அர்ஜுனன் என்ன சொல்கிறானோ! அதை அப்படியே நீங்கள் செய்ய வேண்டும்
(यॊ ऽहं तम् अर्जुनं विद्धि यॊ ऽर्जुनः सॊ ऽहम् एव तु | यद् ब्रूयात तत् तथा कार्यम् इति बुध्यस्व माधव || வியாசர் மஹாபாரதம்

அந்த பாண்டு புத்ரன், இங்கு உள்ள பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எது நல்லதோ, அதையே செய்வான். உங்களுக்கு நான் எப்படியோ, அது போல தானும் புத்திரனாக இருந்து, உங்களுக்கு கடைசி காரியங்கள் வரை செய்வான். 
(स स्त्रीषु प्राप्तकालं वः पाण्डवॊ बालकेषु च | प्रतिपत्स्यति बीभत्सुर भवतश चौर्ध्व देहिकम् || வியாசர் மஹாபாரதம்)

துவாரவதி நகரத்தை விட்டு அர்ஜுனன் வெளியேறியதும், பெரும் மதில்சுவர்கள் மாளிகைகளுடன் இருக்கும் இந்த நகரத்தை எந்த தாமதமும் இல்லாமல் சமுத்திரம் விழுங்க போகிறது.
(इमां च नगरीं सद्यः प्रतियाते धनंजये | प्राकाराट्टाकलॊपेतां समुद्रः प्लावयिष्यति || வியாசர் மஹாபாரதம்)

நான் இப்பொழுதே, பலராமனுடன் வனத்தில் புண்யமான ஓர் இடத்தில நியமத்தை ஆஸ்ரயித்து கொண்டு, காலத்தை கழிக்க விரும்புகிறேன்" என்று ஸ்ரீகிருஷ்ணன் சொன்னான் என்றார்..
(अहं हि देशे कस्मिंश चित् पुण्ये नियमम् आस्थितः | कालं कर्ता सद्य एव रामेण सह धीमता || வியாசர் மஹாபாரதம்)

அளவிடமுடியாத பராக்கிரமும், ப்ரபுவுமான, ஹ்ருஷீகேசன் என்னிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, குழந்தைகளை என்னிடம் விட்டு  எங்கு போனான் என்றே தெரியாதபடி, ஏதோ திசை நோக்கி சென்று விட்டான்.

நான் மஹாத்மாக்களான பலராமனையும், ஸ்ரீகிருஷ்ணனையும், கோரமான மரணத்தை சந்தித்த என் உறவினர்களையும் நினைத்து நினைத்து சோகத்தால் மெலிந்து போஜனம் செய்யக்கூட விரும்பாமல் இருக்கிறேன்! 

பாண்டவ! நான் இந்த துயரத்தில் இருந்து மீளவே முடியாது. நான் ஜீவித்து கொண்டு இருக்கவும் விரும்பவில்லை. நீ தெய்வ செயலாய் வந்து இருக்கிறாய். 

பார்த்தா! கேசவன் எதை சொன்னானோ அதையெல்லாம் முழுவதும் செய்! 

இந்த ராஜ்யமும், இங்குள்ள அனைத்து பெண்களும், ரத்தினமும் உன்னுடையவை. 
பகைவர்களை ஒழிப்பவனே! நானும் என் பிராணனை விட முடிவு செய்து விட்டேன்!" 
என்றார் வசுதேவர்.
(एतत् ते पार्थ राज्यं च स्त्रियॊ रत्नानि चैव ह | इष्टान् पराणान् अहं हीमांस तयक्ष्यामि रिपुसूदन || வியாசர் மஹாபாரதம்)


வைசம்பாயனர் மேலும் கூறினார்: 
தாய் மாமாவான வசுதேவர் இப்படி சொன்னதும், மிகுந்த மனவருத்தமுற்று, வாடிய முகத்துடன், வசுதேவரிடம், 
"மாமா (மாதுலரே)! வ்ருஷ்ணீகளில் சிறந்த வீரரான வாசுதேவனையும், மற்ற உறவினர்களையும் இழந்து நிற்கும் இந்த பூமா தேவியை என்னால் பார்க்க முடியவில்லை. 
(नाहं वृष्णिप्रवीरेण मधुभि: चैव मातुल | विहीनां पृथिवीं द्रष्टुं शक्तछ चिरम् इह परभॊ || வியாசர் மஹாபாரதம்)
அந்தோ ! யுதிஷ்டிர மஹாராஜனும், பீமசேனனும், சகதேவனும், நகுலனும், யாக்ஞசேனியான திரௌபதியும், நான் எந்த மனநிலையில் வேதனையில் உள்ளேனோ அதே வேதனையை அடைய போகிறார்கள். 
(राजा च भीमसेन: च सहदेव: च पाण्डवः | नकुलॊ याज्ञसेनी च षड एकमनसॊ वयम् || வியாசர் மஹாபாரதம்)

யுதிஷ்டிர மகாராஜன் புறப்படும் நேரமும் வந்துவிட்டது. மாதுலரே ! நாங்கள் அனைவரும் புறப்படும் நேரமும் நெருங்கிவிட்டது.
காலத்தின் போக்கை நன்கு அறிந்தவர் நீங்கள்.
ஆதலால் நீங்கள் சொன்னபடி, விருஷ்ணி இனத்தைச் சேர்ந்த பெண்களையும் குழந்தைகளையும் முதியவர்களையும் முதலில் இந்திரப்பிரஸ்தத்திற்கு (DELHI) கூட்டி செல்கிறேன்."

மாமாவான வசுதேவரிடம் இவ்வாறு கூறிய அர்ஜுனன் அடுத்ததாக தாருகனை பார்த்து, "விருஷ்ணி வீரர்களின் தலைமை அதிகாரிகளை தாமதமின்றி பார்க்க விரும்புகிறேன்." என்று சொல்லிவிட்டு, வீர அர்ஜுனன், அழிந்து போன  மஹாரதர்களை நினைத்து கொண்டே பெரும் துக்கத்துடன், சுதர்மா என்றழைக்கப்பட்ட யாதவர்களின் அரசவைக்குள் நுழைந்தான்.

அங்கு இருந்த ஆசனத்தில் அமர்ந்ததும், பிராமணர்கள் உட்பட அனைத்து குடிமக்களும், அனைத்து மந்திரிகளும் வந்து அவரைச் சூழ்ந்து நின்றனர்.

உயிரற்ற உடல் போல துக்கத்துடன் நிற்கும் குடிமக்களை பார்த்து,  அவர்களை விட பெரும் துக்கத்தை சுமந்து கொண்டிருக்கும் அர்ஜுனன், அந்தச் சந்தர்ப்பத்திற்கு மிகவும் பொருத்தமான வார்த்தைகளைச் பேச ஆரம்பித்தான், 

விருஷ்ணீகளையும், அந்தகர்களையும் சேர்ந்த ஜனங்களை நானே இந்திரப்ரஸ்தம் அழைத்து கொண்டு செல்கிறேன். 
இந்த துவாரகா நகரத்தை சமுத்திரம் மூழ்கடிக்கப்போகிறது.
(शक्रप्रस्थम् अहं नेष्ये वृष्ण्यन्धकजनं सवयम् | इदं तु नगरं सर्वं समुद्रः प्लावयिष्यति || வியாசர் மஹாபாரதம்)

உங்களிடம் உள்ள வித விதமான ரத்தினங்களை எல்லாம் எடுத்து கொண்டு, உடனேயே ரதத்தில் கிளம்ப தயாராகுங்கள். ஸ்ரீகிருஷ்ணனின் பேரனான வஜ்ரநாபன் இனி உங்களுக்கு அரசனாக இருந்து உங்களை பாதுகாப்பான். 
(सज्जीकुरुत यानानि रत्नानि विविधानि च | वज्रॊ ऽयं भवतां राजा शक्र परस्थे भविष्यति || வியாசர் மஹாபாரதம்)

இன்றிலிருந்து 7வது நாள் சூரிய உதயத்தோடு புறப்படுவோம். தாமதிக்காமல் நீங்கள் அனைவரும் தயாராகுங்கள்.
(सप्तमे दिवसे चैव रवौ विमल उद्गते | बहिर् वत्स्यामहे सर्वे सज्जीभवत माचिरम् || வியாசர் மஹாபாரதம்)

தூய ஆத்மாவான ப்ரிதாவின் மகன் அர்ஜுனன், இவ்வாறு சொன்னதும், மக்கள் அனைவரும் தங்களின் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து, கிளம்புவதற்கு தயார் ஆனார்கள். அர்ஜுனன் அன்றிரவு முழுவதும், ஸ்ரீகிருஷ்ணரின் மாளிகையில் தங்கினான். கண்ணன் இல்லாத அந்த மாளிகை அர்ஜுனனை மீள முடியாத மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது, ப்ரமை பிடித்தவன் போல இருந்தான் அர்ஜுனன்.
(तां रात्रिम् अवस्त पार्थः केशवस्य निवेशने | महता शॊकमॊहेन सहसाभिपरिप्लुतः || வியாசர் மஹாபாரதம்)

மறுநாள் காலை விடிந்த போது, மிகுந்த ஆற்றலும் பராக்கிரமமும் கொண்ட வசுதேவர், தனது ஆத்மாவை யோகத்தில் செலுத்தி, உத்தமான கதியை அடைந்து விட்டார்.  வசுதேவரின் மாளிகையில் பெண்களின் உரத்த அழு குரல் அனைவரது இதயத்தை பிளந்தது, 
(ततः शब्दॊ महान् आसीद वसुदेवस्य वेश्मनि | दारुणः करॊशतीनां च रुदातीनां च यॊषिताम् || வியாசர் மஹாபாரதம்)

அங்கிருந்த பெண்கள் அனைவரும் விரித்த கூந்தலோடு, ஆபரணங்கள் மற்றும் மலர் மாலைகளை கழற்றி, கைகளால் மார்பில் அடித்துக்கொண்டு, நெஞ்சைப் பிளக்கும் படி புலம்பி அழுதார்கள்.

பெண்களில் சிறந்தவர்களான, தேவகீ, பத்ரா, ரோகினி மற்றும் மதிரா ஆகியோர் தங்கள் கணவனின் உடலில் விழுந்து அழுதனர்.
(तं देवकी च भद्रा च रॊहिणी मदिरा तथा | अन्वरॊढुं व्यवसिता भर्तारं यॊषितां वराः || வியாசர் மஹாபாரதம்)

பிறகு பார்த்தன் தனது மாதுலரின் உடலை விலையுயர்ந்த பல்லக்கில் ஏற்றி, பலர் தன் தோள்களில் தூக்கி செல்ல ஏற்பாடுகளை செய்தான் 


துவாரகையில் வசிக்கும் அனைத்து ஜனங்களும், பெரும் துக்கத்துடன், சோகத்துடன், அந்த பல்லக்கை தொடர்ந்து பின் சென்றார்கள்.
(तम् अन्वयुस् तत्र तत्र दुःखशॊकसमाहिताः | द्वारकावासिनः पौराः सर्व एव नरर्षभ || வியாசர் மஹாபாரதம்)

வசுதேவரின் உடலை தாங்கி கொண்டு பல்லக்கு முன்னால் செல்ல, வசுதேவர் அஸ்வமேத யாகம் செய்தபோது, பயன்படுத்திய குடை வசுதேவருக்கு நிழல் கொடுத்தது.
வசுதேவரின் உடலுக்கு முன்னால், வசுதேவர் தினமும் செய்த ஒளபாஸனா அக்னியும், பல ப்ராம்மணர்களும் சென்று கொண்டிருந்தனர்.

வசுதேவரின் உடலை பின்தொடர்ந்து பூஷணங்களால்  அலங்கரிக்கப்பட்ட அவரது மனைவிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மருமகள்கள் கூடவே வந்தனர்.

அவர் உயிருடன் இருந்தபோது எந்த இடம் அவருக்கு பிரியமானதோ, அதே இடத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. 

வசுதேவரின் தர்மபத்னிகள் நால்வரும் (தேவகீ, பத்ரா, ரோகினி மற்றும் மதிரா) இறுதிச் சடங்கின் வசுதேவருடன் சிதையில் ஏறினார்கள்.
(तं चिताग्निगतं वीरं शूर पुत्रं वराङ्गनाः | ततॊ ऽनवारुरुहुः पत्न्य: चतस्रः पतिलॊकगाः || வியாசர் மஹாபாரதம்)

பாண்டுவின் மகன் தனது மாதுலரோடு சிதையில் இறங்கிய நான்கு பேருக்கும் சேர்த்து சந்தனக்கட்டைகள்  மற்றும் வாசனை திரவியங்களை சேர்த்து முறையாக சம்ஸ்காரம் செய்தான். 
(तं वै चतसृभिः स्त्रीभि: अन्वितं पाण्डुनन्दनः | अदाह्यच चन्दानैश च गन्धैर उच्चावचैर अपि || வியாசர் மஹாபாரதம்)




இப்படி சிதை ஏறியும் போது, அந்த ஜொலிக்கும் அக்னியின் சத்தமும், சாம வேதத்தின் மந்திர ஓசையும், அதனோடு குடிமக்கள் மற்றும் மற்றவரின் அலறல் சத்தமும் கேட்டது.
(ततः परादुरभूच छब्दः समिद्धस्य विभावसॊः | समगानां च निर्घॊषॊ नराणां रुदताम् अपि || வியாசர் மஹாபாரதம்)

பிறகு, விருஷ்ணி மற்றும் அந்தக குலத்தை சேர்ந்த சிறுவர்கள், வஜ்ரனின் தலைமையில் பெண்களும், மஹாத்மாவான வசுதேவருக்கு தீர்த்தத்தால், தர்ப்பணம் செய்தார்கள்.
(ततॊ वज्रप्रधानास ते वृष्णिवीर कुमारकाः | सर्व एवॊदकं चक्रुः स्त्रियश चैव महात्मनः || வியாசர் மஹாபாரதம்)

பரத ஸ்ரேஷ்டரே (ஜனமேஜெயா)! 
தர்மம் கெடாதவனான அந்த பால்குணன் (அர்ஜுனன்), அனைத்து ஈம காரியமும் முறையாக முடித்துவிட்டு, விருஷ்ணிகள் தங்களுக்குள் அடித்து கொண்டு இறந்த இடத்தை (ப்ரபாஸ க்ஷேத்திரம்) நோக்கி புறப்பட்டான்.

எங்கு பார்த்தாலும் இறந்த உடல்கள் இருப்பதை பார்த்த குரு இளவரசன், மேலும் அதிகமான துக்கத்தை அடைந்தான்.

இருப்பினும், தான் செய்ய வேண்டிய ஈம காரியத்தை அவர்கள் அனைவருக்கும் செய்தான். 

பிராம்மண சாபத்தால், புற்களே இரும்பு உலக்கையாக மாறி, அந்த மாவீரர்களின் அழிவுக்கு காரணம் ஆனதை உணர்ந்து, அங்கு கிடக்கும் உடல்களுக்கு வயது வரிசைப்படி அனைவருக்கும் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன

பலராமர் மற்றும் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} உடல்களை தேட திறம்பெற்ற சிலரை அனுப்பி சம்ஸ்காரம் செய்ய சொல்லி அனுப்பினான் அர்ஜுனன்.
(ततः शरीरे रामस्य वासुदेवस्य चॊभयॊः | अन्विष्य दाहयाम आस पुरुषैर आप्तकारिभिः || வியாசர் மஹாபாரதம்)

இறந்து கிடைக்கும் அனைவர்க்கும் செய்யவேண்டிய இறுதி சடங்குக்களை முறையாகச் செய்து முடித்த பாண்டுவின் மகன், 7ஆம்  நாளில் தேரில் ஏறி விரைவாகப் ஹஸ்தினாபுரம் நோக்கி புறப்பட்டான்.
(स तेषां विधिवत् कृत्वा प्रेतकार्याणि पाण्डवः | सप्तमे दिवसे प्रायाद रथम आरुह्य सत्वरः || வியாசர் மஹாபாரதம்)

விருஷ்ணி வீரர்களின் விதவைகள், காளைகள், கழுதைகள் மற்றும் ஓட்டகங்களால் இழுக்கப்பட்ட பல விதமான தேர்களில் அமர்ந்து, மஹாத்மாவான பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} பின்தொடர்ந்து சென்றனர் 

அனைவரும் பெருந்துன்பத்தில் இருந்தனர். 
அந்தகர்கள் மற்றும் விருஷ்ணி வீரர்களின் பணியாட்களும், குதிரை வீரர்களும், தேர் வீரர்களும், துவாரகா நகரத்தின் குடிமக்களும் அங்கே வசித்தவர்களும், முதியவர்களும்  மற்றும் குழந்தைகளும் விதவைகளாகிய விருஷ்ணீ வீரர்களின் மனைவிகளை சூழ்ந்து கொண்டு ஒரே நேரத்தில் புறப்பட்டுச் சென்றனர்.

யானைகளில் இருந்து போரிட்ட போர்வீரர்கள் மலைகளைப் போன்ற யானைகளில் சென்றனர். 
காலாட்படை வீரர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.

பிராம்மணர்கள், க்ஷத்ரியர்கள், வைசியர்கள், செல்வந்தர்களாக இருந்த சூத்திரர்கள் அனைவரும், வாசுதேவ ஸ்ரீ கிருஷ்ணரின் மீதமிருந்த 16100 மஹிஷிகள் மற்றும் ஸ்ரீகிருஷ்ணனின் பேரனான வஜ்ரநாபனை முன்னிட்டுக் கொண்டு சென்றனர்.
(दश षट् च सहस्राणि वासुदेवावरॊधनम् | पुरस्कृत्य ययुर वज्रं पौत्रं कृष्णस्य धीमतः || வியாசர் மஹாபாரதம்)

போஜ, விருஷ்ணி, அந்தக குல வீரர்களின் மனைவிகளும், நாதனை இழந்து இருக்கும் லக்ஷக்கணக்கான  பெண்கள் அனைவரும்  அர்ஜுனனுடன் புறப்பட்டுச் சென்றனர்.

தேர்வீரர்களில் முதன்மையானவனும், எதிரிகளை  வெல்பவனுமான ப்ரீதாவின் மகன் அர்ஜுனன், செல்வம் நிறைந்த பெருங்கடலை போல காணப்படும் விருஷ்ணிகளின் இந்தப் பெரும் ஊர்வலத்தின் வழியைப் பாதுகாத்துச் சென்றான்
துவாரகா நகரமக்கள் அனைவரும் புறப்பட்டதும், சுறா மீன்களுக்கும் முதலைகளுக்கும் இல்லமாக இருக்கும் பெருங்கடலானது ரத்தினங்கள் நிறைந்திருந்த துவாரகையை நீரில் மூழ்கச் செய்தது
(निर्याते तु जने तस्मिन् सागरॊ मकरालयः | द्वारकां रत्नसंपूर्णां जलेनाप्लावयत् तदा || வியாசர் மஹாபாரதம்)


அர்ஜுனன் எந்த எந்த நிலப்பகுதியை கடந்தானோ, அந்த அந்த  இடங்கள் உடனடியாகப் பெருங்கடலின் நீரில் மூழ்க தொடங்கியது. 

அற்புதம் நிறைந்த இந்தக் காட்சியைக் கண்ட துவாரகாவாசிகள், "ஓ ஓ தெய்வமே!" என்று சொல்லிக்கொண்டே வேக வேகமாக நடந்தனர்

(तद् अद्भुतम् अभिप्रेक्ष्य द्वारकावासिनॊ जनाः | तूर्णात् तूर्णतरं जग्मुर अहॊ दैवम इति बरुवन् || வியாசர் மஹாபாரதம்)


தனஞ்சயன் (அர்ஜுனன்), துவாரகையிலிருந்து கிளம்பி, காடுகள், மலைகள் மற்றும் நதிகளின் ஓரத்தில் விருஷ்ணி பெண்களுக்கு ஆங்காங்கு ஓய்வு கொடுத்து, மெது மெதுவாக அழைத்து சென்றான்.

ஐந்து நீர்நிலைகளைக கொண்ட பஞ்சநத தேசத்தை  (பஞ்சாப்} அடைந்த க்ஷத்ரியனான தனஞ்சயன், அங்கு தானியங்கள், காளைகள் பசுக்கள் நிறைந்த ஒரு இடத்தில பெரிய முகாமை அமைத்தான்
(स पञ्चनदम् आसाद्य धीमान् अतिसमृद्धिमत् | देशे गॊपशुधान्याढ्ये निवासम् अकरॊत प्रभुः || வியாசர் மஹாபாரதம்)

பாரதா (ஜனமேஜயா)! நாதனை இழந்த அந்த விதவைகளின் பாதை ப்ரீதாவின் மகனால் (அர்ஜுனனால்) மட்டுமே பாதுகாக்கப்படுவதை கண்ட கள்வர்கள் பேராசை கொண்டனர்
(ततॊ लॊभः सम्भवद् दस्यूनां निहतेश्वराः | दृष्ट्वा स्त्रियॊ नीयमानाः पार्थेनैकेन भारत || வியாசர் மஹாபாரதம்)

அப்போது, பேராசை கொண்ட பாப காரியங்களே செய்யும். அமங்கலமானவர்களாக (நெற்றியில் திலகம் இல்லாது) காட்சி கொடுக்கும் ஆபீரர்கள், ஒன்று கூடி தங்களுக்கு பேசி கொண்டார்கள்.
(तत: ते पापकर्माणॊ लॊभॊपहतचेतसः | आभीरा मन्त्रयाम आसुः समेत्याशुभदर्शनाः || வியாசர் மஹாபாரதம்
"ஒரே ஒரு வில்லாளியான அர்ஜுனன் மட்டுமே இருக்கிறான். இந்த குதிரைப்படை அணிவகுப்பில் குழந்தைகளும், முதியவர்களும் இருக்கிறார்கள். நம்மை மீறி அர்ஜுனன் இவர்களின் வழியை பாதுகாத்து வருகிறான். விருஷ்ணி வீரர்கள் சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்" என்று பேசிக்கொண்டனர்.

ஆயிரக்கணக்கில் இருந்த கள்வர்கள் கையில் தடி எடுத்துக்கொண்டு கொள்ளையடிக்க விரும்பி விருஷ்ணிகளை நோக்கி முன்னேறினர்.

காலத்தின் தூண்டுதலால், சிங்கத்தை போல கர்ஜித்து கொண்டே , கொள்ளை அடிக்கும் விருப்பத்துடன், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியவாறு அந்தப் பெருங்கூட்டத்தின் மீது பாய்ந்தனர்.
(महता सिंहनादेन द्रावयन्तः पृथग्जनम् | अभिपेतुर धनार्थं ते कालपर्याय चॊदिताः || வியாசர் மஹாபாரதம்)

ஊர்வலத்தைத் தாக்கும் கள்வர்களை பார்த்த குந்தியின் மகன் (கௌந்தேயன்) மேலும் முன்னேறி செல்லாமல், தன் சேனையுடன் திரும்பி கள்வர்கள் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றான்.
(ततॊ निवृत्तः कौन्तेयः सहसा सपदानुगः | उवाच तान् महाबाहुर अर्जुनः परहसन्न इव || வியாசர் மஹாபாரதம்)

வலிமைமிக்க புஜங்களை கொண்ட போர்வீரனான அர்ஜுனன் தாக்கிக் கொண்டிருந்த கள்வர்களை பார்த்து சிரித்தவாறே, "தர்மத்தை அறியாதவர்களே! உங்கள் உயிர் மீது உங்களுக்கு ஆசையிருந்தால் திரும்பிவிடுங்கள். நான் என் பாணங்களால் உங்கள் உடல்களைத் துளைத்து உயிரை எடுக்கும்போது இதற்காக வருந்துவீர்கள்" என்றான்

இப்படி அர்ஜுனன் எச்சரித்தும், அலட்சியம் செய்த அவர்கள், மீண்டும் மீண்டும் அர்ஜுனனால் தடுக்கப்பட்டாலும், ஜனங்கள் மீது பாய்ந்தனர். 
அப்போது அர்ஜுனன், திவ்யமானதும், அழிவற்றதுமான தன் தெய்வீக வில்லுக்கு நாண்பூட்ட தொடங்கினான்.

மிக்க பரபரப்பான சூழ்நிலையில், பலர் தாக்கும் நிலையில், பெரும் சிரமத்துடன் தன்னுடைய காண்டீபத்தில் நாண் பூட்டினான்.

பெரும் அபாயத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் இந்த கள்வர்கள் கூட்டத்தை ஒழிக்க, அர்ஜுனன் தெய்வீக அஸ்திரங்களை வரவழைக்க, நினைத்தும், மந்திரங்கள் மனத்தில் தோன்றவில்லை. 

போரின் கடுமையையும், தன் ஆயுத வலிமையின் இழப்பையும், தெய்வீக ஆயுதங்கள் தோன்றாமையையும் கண்ட அர்ஜுனன் பெரிதும் அவமானமடைந்தான்.

யானைகளிலும், தேரிலும், குதிரையிலும் போரிட்ட விருஷ்ணி வீரர்கள், தடியை வைத்து கொண்டு தாக்க வந்த கள்வர்களை தடுக்க முடியாமல், விருஷ்ணி பெண்கள் அபகரிக்கப்படுவதை தடுக்க முடியாமல் நின்றனர். 

கள்வர்கள் கூட்டம் பெரியதாக இருந்தது. கள்வர்கள் பல்வேறு முனைகளில் தாக்க ஆரம்பித்தனர். 
அர்ஜுனன் தன்னால் முடிந்த அளவு வ்ருஷ்ணீ பெண்களை பாதுகாக்க முயன்றாலும், அவனால் கள்வர்களை வெல்ல முடியவில்லை
(कलत्रस्य बहुत्वात् तु संपतत्सु तत: ततः | प्रयत्नम् अकरॊत पार्थॊ जनस्य परिरक्षणे || வியாசர் மஹாபாரதம்)


போர்வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பெண்களில் முதன்மையான பலர் கள்வர்களால் இழுத்துச் செல்லப்பட்டனர், 
அதே சமயம், சிலர் தாங்களே விரும்பி அந்தக் கள்வர்களுடன் செல்ல தொடங்கினர்.

பலமிக்க அர்ஜுனன், விருஷ்ணிகளின் பணியாட்களுடன் சேர்ந்து கொண்டு, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட பாணங்களால் கள்வர்களை தாக்கினான்.

மன்னா ஜனமேஜெயா! எனினும் விரைவில் அவனது பாணங்கள் அனைத்தும் தீர்ந்து போயின. இதுநாள் வரை அவனது பாணங்கள் வற்றாதவையாக இருந்தன. இப்போது அவை தீர்ந்து போயின 
(ततॊ गाण्डीव निर्मुक्तैः शरैर् पार्थॊ धनंजयः | जघान् दस्यून् सॊद्वेगॊ वृष्णिभृत्यैः सह परभुः || வியாசர் மஹாபாரதம்)

தன் பாணங்கள் தீர்ந்ததைக் கண்ட அர்ஜுனன் பெருந்துன்பத்தில் பீடிக்கப்பட்டான். இருந்தாலும், தன் காண்டீபத்தின் முனைகளினால் அந்தக் கள்வர்களைத் தாக்கத் தொடங்கினான்.

ஜனமேஜயா! இருந்தபோதும், அந்த மிலேச்சர்கள், பார்த்தன் {அர்ஜுனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே விருஷ்ணிகள் மற்றும் அந்தக குல பெண்களில் முதன்மையானோர் பலரை அபகரித்து கொண்டு நான்கு புறமும் சென்று விட்டார்கள். (இந்த சமயத்தில் இடம் பெயர்ந்த சில யாதவ மக்களால் பிற்காலத்தில் யஹுதி (yahudi/jews) என்ற சமூகம் மிலேச்ச தேசங்களில் தென்பட்டது என்று காண்கிறோம். அவர்களின் பிள்ளைகளுக்கு க்ருஷ் என்று பெயர் வைக்கும் காரணமும் இதிலிருந்தே தெரிகிறது.)
(प्रेक्षत: तव एव पार्थस्य वृष्ण्यन्धकवरस्त्रियः | जग्मुर आदाय ते म्लेच्छाः समन्ताज जनमेजय || வியாசர் மஹாபாரதம்)

யாரிடமும் தோற்று அறியாத, பலமிக்க தனஞ்சயன் தன் கண் முன் நடப்பதை கண்டு, இவை அனைத்தும் விதியின் விளையாட்டு என்று  கருதினான். 
திவ்ய அஸ்திரங்கள் தோன்றாததையும், தன் புஜங்கள் வலிமை இழந்ததையும், தன் காண்டீபம் தனக்குக் கீழ்ப்படியாமல் இருந்ததையும் நினைத்து பெருமூச்சுவிட்டான்.

அர்ஜுனன் 'நடந்தவை அனைத்தும் விதியின் விளையாட்டு' என்று புரிந்து கொண்டு, உற்சாகத்தை இழந்தான். 

மன்னா ஜனமேஜயா! 
"முன்பு கொண்டிருந்த பலத்தை இப்போது தான் கொண்டிருக்கவில்லை" என்று சொல்லி அவன் மேலும் முயற்சி செய்வதை நிறுத்தினான்.
(बभूव विमनाः पार्थॊ दैवम् इत्य अनुचिन्तयन् | न्यवर्तत ततॊ राजन नेदम् अस्तीति चाब्रवीत् || வியாசர் மஹாபாரதம்)


மஹாத்மாவான அந்த அர்ஜுனன், எஞ்சி இருந்த செல்வத்தையும் மிச்சமிருந்த விருஷ்ணி பெண்களையும் அழைத்துக் கொண்டு குருக்ஷேத்திரம் வந்து சேர்ந்தான்.
(ततः स शेषम् आदाय कलत्रस्य महामतिः | हृतभूयिष्ठ रत्नस्य कुरुक्षेत्रम् अवातरत् || வியாசர் மஹாபாரதம்)

குரு வம்சத்தில் தோன்றிய அர்ஜுனன், எஞ்சியிருந்த விருஷ்ணிகளை பல தேசங்களில் குடிபுக வழி செய்தான்.

க்ருதவர்மனின் மகனை, மார்த்திகாவதம் (போஜர்களின் ஆட்சி செய்த தேசம்) என்றழைக்கப்படும் நகரத்தில் அரசாட்சி புரிய சொல்லி, எஞ்சியிருந்த போஜ மன்னனின் பெண்களை அங்கு அனுப்பினான்.  
(हार्दिक्य तनयं पार्थॊ नगरं मार्तिकावतम् | भॊजराजकलत्रं च हृतशेषं नरॊत्तमः || வியாசர் மஹாபாரதம்)

குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் ஆகியோருடன் எஞ்சியிருந்தவர்களை பாதுகாத்த அந்தப் பாண்டுவின் மகன், குதிரைகளை இழந்து நடந்து வந்தவர்களை இந்திரப்ரஸ்த நகரத்தில் (டெல்லி) நிறுவினான்.

தர்மம் தெரிந்த அர்ஜுனன், யுயுதானனின் {சாத்யகியின்} அன்பு மகனை அரசனாக்கி, மற்றும் சில முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களோடு, சரஸ்வதி ஆற்றங்கரையில் இடம் கொடுத்து வசிக்க செய்தான். 

இந்திரப்ரஸ்தத்தின் ஆட்சி (டெல்லி), ஸ்ரீகிருஷ்ணனின் கொள்ளுப்பேரனான வஜ்ரனுக்கு கொடுக்கப்பட்டது.
அக்ரூரரை இழந்த அவருடைய மனைவிகள் வனம் செல்ல விரும்பினார்கள். வஜ்ரநாபன் எத்தனை தடுத்தும், கேளாமல் அவர்கள் சென்று விட்டனர்.
(इंन्र प्रस्थे ददौ राज्यं वज्राप परवीरहा | वज्रेणाक्रुर दारास तु वार्यमाणाः परव्व्रजुः || வியாசர் மஹாபாரதம்)

ருக்மிணி தேவி, காந்தார இளவரசி, சைப்யை, ஹைமவதி, ஜாம்பவதி ஆகியோர் அக்னி ப்ரவேசம் செய்து விட்டனர்.
(रुक्मिणी तव अथ गान्धारी शैब्या हैमवतीत्य अपि | देवी जाम्बवती चैव विविशुर जातवेदसम || வியாசர் மஹாபாரதம்)

சத்யபாமா மற்றும் கிருஷ்ணருக்கு ப்ரியப்பட்ட பிற தேவிகளும், வனம் செல்வதாக நிச்சயித்து கொண்டு, புறப்பட்டு சென்று விட்டனர்..
(सत्यभामा तथैव अन्या देव्याः कृष्णस्य संमताः | वनं प्रविविशू राजंस तापस्ये कृतनिश्चयाः || வியாசர் மஹாபாரதம்)

துவாரகாவதியில் இருந்து அர்ஜுனனைப் பின்பற்றி வந்த அனைவரும், குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வஜ்ரனிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
(द्वारकावासिनॊ ये तु पुरुषाः पार्थम् अन्वयुः | यथार्हं संविभज्यैनान वज्रे पर्यद्दज जयः || வியாசர் மஹாபாரதம்)

அந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற செயல்கள் அனைத்தையும் செய்த அர்ஜுனன், கண்ணீரால் குளித்த கண்களுடன், வியாசரின் ஆசிரமத்திற்குள் நுழைந்தான். 
அங்கே கிருஷ்ணத்வைபாயனர் என்னும் வியாச பகவான் மனசாந்தியுடன் சுகமாக அமர்ந்திருப்பதை அர்ஜுனன் கண்டான்.
(स तत् कृत्वा प्राप्तकालं बाष्पेणापिहितॊ ऽर्जुनः | कृष्णद्वैपायनं राजन् ददर्शासीनम् आश्रमे || வியாசர் மஹாபாரதம்)

ஆசிரமத்திற்குள் நுழைந்த அர்ஜுனன், ஒரு தனிப்பட்ட இடத்தில் சத்யவதியின் மகனான சத்யமே ரூபமாக கொண்ட வியாச பகவான் அமர்ந்திருப்பதைக் கண்டான்.
(प्रविशन्न अर्जुनॊ राजन्न आश्रमं सत्यवादिनः | ददर्शासीनम् एकान्ते मुनिं सत्यवती सुतम्|| வியாசர் மஹாபாரதம்)

உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரும், கடமைகள் அனைத்தின் அறிவைக் கொண்டவருமான அந்த முனிவரை அணுகிய அவன், "நான் அர்ஜுனன் வந்திருக்கிறேன்" என்று சொல்லி காத்திருந்தான்.
(स तम् आसाद्य धर्मज्ञम् उपतस्थे महाव्रतम् | अर्जुनॊ ऽसमीति नामास्मै निवेद्याभ्यवदत् ततः || வியாசர் மஹாபாரதம்)




தர்மத்தை அறிந்தவரும், உயர்ந்த விரதங்களுடன் கூடிய சத்யவதியின் மகன் {வியாசர்} "உனக்கு நல்வரவு" என்று பதிலளித்தார். 

மனக்கலக்கம் இல்லாத மஹாமுனிவர், அர்ஜுனனை பார்த்து, "இருக்கையில் அமர்வாயாக" என்று சொன்னார்.

அர்ஜுனன் பெரிதும் உற்சாகம் இழந்தவனாகவும், மீண்டும் மீண்டும் பெருமூச்சுகளை விடுபவனாகவும், கவலை நிறைந்தவனாகவும் இருப்பதைக் கண்ட வியாசர், அர்ஜுனனை பார்த்து 
"பிராம்மணனை கொன்றாயா?
அல்லது 
போரில் வெல்லப்பட்டாயா?
(अवीरजॊ ऽभिघात: ते ब्राह्मणॊ वा हत: त्वया | युद्धे पराजितॊ वासिगतश्रीर इव लक्ष्यसे || வியாசர் மஹாபாரதம்)

பொலிவு இழந்து காணப்படுகிறாயே, பரத ஸ்ரேஷ்டா ?!!
நீ எவராலும் வீழ்த்தப்பட்டாயா என்பதை நான் அறியேன் ! 
அர்ஜுனா! நீ ஏன் பெரிதும் நொந்து போன தன்மையுடன் இருக்கிறாய்? 
இவற்றைச் சொல்வதில் உண்மையில் எத்தீங்கும் இல்லையெனில் அனைத்தையும் எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்" என்றார் வயாசர்.
(न तवा प्रत्यभिजानामि किम् इदं भरतर्षभ | शरॊतव्यं चेन मया पार्थ क्षिप्रम आख्यातुम् अर्हसि || வியாசர் மஹாபாரதம்)

அர்ஜுனன் வியாசரிடம், 
"மேகம் போன்ற நிறத்தைக் கொண்டவனும், தாமரை இதழ்களைப் போன்ற அகன்ற விழிகளைக் கொண்டவனுமான ஸ்ரீ கிருஷ்ணன், பலராமருடன் தன் சரீரத்தை விட்டு விட்டு சென்றுவிட்டார். 
(यः स मेधवपुः श्रीमान् बृहत पङ्कज लॊचनः | स कृष्णः सह रामेण तयक्त्वा देहं दिवं गतः || வியாசர் மஹாபாரதம்)

ப்ரபாஸத்தில், பிராம்மண சாபத்தில் உண்டான இரும்பு உலக்கைகளின் (முசலங்களின்) மூலம் விருஷ்ணி வீரர்களுக்கு பயங்கரமான அழிவு ஏற்பட்டது. ஒரேயொரு வீரன் கூட அதில் தப்பவில்லை.
(मौसले वृष्णिवीराणां विनाशॊ ब्रह्मशापजः | बभूव वीरान्त करः प्रभासे रॊमहर्षणः || வியாசர் மஹாபாரதம்)

மகாத்மாக்களும், சிங்கம் போன்ற செருக்குடையவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களுமான, போஜ, அந்தக, விருஷ்ணி குலத்து வீரர்கள் போரில் ஒருவரையொருவர் அடித்து கொண்டு இறந்துவிட்டனர்..
(ये ये शूरा महात्मानः सिंहदर्पा महाबलाः | भॊजवृष्ण्यन्धका ब्रह्मन्न अन्यॊन्यं तैर हतं युधि || வியாசர் மஹாபாரதம்)

இரும்பு கதாயுதங்கள் போலத் தெரியும் கரங்களைக் கொண்டவர்களும், கனத்த பரிகங்களின், ஈட்டிகளின் தாக்குதலையும் தாங்க வல்லவர்களுமான அவர்கள் அனைவரும், ஐயோ! ஏரக புற்களினால் கொல்லப்பட்டனர். கால ஓட்டத்தின் முரணை பாருங்கள்!
(गदापरिघशक्तीनां सहाः परिघबाहवः | त एरकाभिर निहताः पश्य कालस्य पर्ययम || வியாசர் மஹாபாரதம்)

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஐந்து லட்சம் 5.00.000 போர்வீரர்கள் இவ்வாறு வீழ்த்தப்பட்டனர். 
ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு, அவர்கள் அழிவை அடைந்தனர்.
(हतं पञ्चशतं तेषां सहस्रं बाहुशालिनम् | निधनं समनुप्राप्तं समासाद्येतरेतरम् || வியாசர் மஹாபாரதம்)

அளவிலா சக்தி கொண்ட யாதவ வீரர்களுக்கு நேர்ந்த இந்தப் பேரழிவையும், புகழ்மிக்க கிருஷ்ணன் மறைந்ததையும் மீண்டும் மீண்டும் நினைத்து மனதில் அமைதியை இழந்து தவிக்கிறேன்
(पुनः पुन: न मृश्यामि विनाशम् अमितौजसाम् | चिन्तयानॊ यदूनां च कृष्णस्य च यशस्विनः || வியாசர் மஹாபாரதம்)

பெருங்கடல் வற்றியதைப் போல, மலை நகர்ந்ததைப் போல, சொர்க்கம் விழுந்ததைப் போல, நெருப்பு குளிர்ந்ததைப் போல நம்ப முடியாததாக இருக்கிறது. 
(शॊषणं सागरस्येव पर्वतस्येव चालनम् | नभसः पतनं चैव शैत्यम् अग्नेस तथैव च || வியாசர் மஹாபாரதம்)

சாரங்கபாணியின் துணையை இழந்த நான் மனதளவில் எதிலும் ஈடுபட இயலாதவன் ஆகிவிட்டேன். இவ்வுலகில் நான் வாழ விரும்பவில்லை.
(अश्रद्धेयम् अहं मन्ये विनाशं शार्ङ्गधन्वनः | न चेह सथातुम् इच्छामि लॊके केष्ण विनाकृतः || வியாசர் மஹாபாரதம்)

தபோதனரே! இதைவிட அதிகத் துன்பம் நிறைந்த மற்றொரு நிகழ்ச்சியும் நடந்து விட்டது. அதை மீண்டும் மீண்டும் நினைத்தே என் இதயம் பிளக்கிறது.
(इतः कष्टतरं चान्यच छृणु तद् वै तपॊधन | मनॊ मे दीर्यते येन चिन्तयानस्य वै मुहुः || வியாசர் மஹாபாரதம்)

பிராம்மணரே! 
ஐந்து நீர்நிலைகள் உள்ள பஞ்ச நதத்தில் (பஞ்சாபில்) நான் பார்த்து கொண்டிருக்கும்போதே ஆயிரக்கணக்கான விருஷ்ணி பெண்கள் ஆபிரர்களால் அபகரிக்கப்பட்டனர்.
(पश्यतॊ वृष्णिदारा: च मम ब्रह्मन् सहस्रशः | आभीरै: अनुसृत्याजौ हृताः पञ्चनदालयैः || வியாசர் மஹாபாரதம்)

என் காண்டீபத்தை நான் எடுத்தபோது அதில் நாண்பூட்டவதற்கு திறமையற்றவனாக நான் இருந்தேன். 
என் கரங்களில் இருந்த வலிமை முன்பு இருந்தது போல இல்லை.
(धनु: आदाय तत्राहं नाशकं तस्य पूर्णे | यथा पुरा च मे वीर्यं भुजयॊर न तथाभवत् || வியாசர் மஹாபாரதம்)

மகாமுனி வியாசரே ! என்னுடைய பல்வேறு வகையான திவ்ய ஆயுதங்கள் வெளிப்பட தவறின. மேலும் என் பாணங்கள் விரைவில் தீர்ந்த போயின.

அளக்க முடியாதவனும், நான்கு கரங்களை கொண்டவனும், சங்கு, சக்கரம், கதாயுதம் தரித்தவனும், மஞ்சள் ஆடை உடுத்தியவனும், கரிய நிறத்தவனும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான இளஞ்சிவப்பு ஓடும் கண்களையும் கொண்டவனை இப்போது என்னால் காணமுடியவில்லையே! 
ஐயோ! அந்த கோவிந்தனை என் கண்கள் காணவில்லையே! முதலில் எவனுடைய சக்தியால் பகை துருப்புகள் அனைத்தையும் எரித்து, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் அதன்பிறகு அவர்களைக் கொன்றேனோ அந்த கோவிந்தனை இப்போது என்னால் காணமுடியாமல் நான் துயரால் நிறைகிறேன். என் தலை கிறுகிறுக்கிறது
(पुरुष: चाप्रमेयात्मा शङ्खचक्रगदाधरः | चतुर्भुजः पीतवासा शयामः पद्मायतेक्षणः || यः स याती पुरस्तान् मे रथस्य सुमहाद्युतिः | परदहन् रिपुसैन्यानि न पश्याम्य अहम् अद्य तम् || येन पूर्वं परदग्धानि शत्रुसैन्यानि तेजसा | शरैर गाण्डीवनिर्मुक्तैर अहं पश्चाद वयनाशयम् || வியாசர் மஹாபாரதம்)


உற்சாகம் இழந்து, கவலையால் துளைக்கப்பட்டிருக்கும் நான் என் மனதில் அமைதியை இழந்து தவிக்கிறேன்.

வீர ஜனார்த்தனன் இல்லாமல் நான் வாழத் துணியேன். 
எப்போது விஷ்ணு இந்தப் பூமியை விட்டுச் சென்று விட்டான் என்பதைக் கேட்டேனோ! அப்போதே என் கண்கள் மங்கி போயின, அனைத்தும் என் பார்வையில் இருந்து மறைந்தன.
(विना जनार्दनं वीरं नाहं जीवितुम् उत्सहे | श्रुत्वैव हि गतं विष्णुं ममापि मुमुहुर दिशः || வியாசர் மஹாபாரதம்)

மனிதர்களில் சிறந்தவரே! 
உற்றார், உறவினரை இழந்து, ஆற்றலும் கொள்ளை போனவனான எனக்கு, நீங்கள் க்ஷேமம் எது என்று உபதேசிக்க வேண்டும்" என்று அர்ஜுனன் பிரார்த்திதான்.
(प्रनष्टज्ञातिवीर्यस्य शून्यस्य परिधावतः | उपदेष्टुं मम श्रेयॊ भवान् अर्हति सत्तम || வியாசர் மஹாபாரதம்)

வியாசர் அர்ஜுனனிடம், 
"விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும் பிராமணர்களின் சாபத்தால் எரிக்கப்பட்டனர். 
ஓ! குரு வம்ச ஸ்ரேஷ்டனே ! அவர்களின் அழிவுக்காக நீ வருந்துவது தகாது!
(ब्रह्मशापविनिर्दग्धा वृष्ण्यन्धकमहारथाः | विनष्टाः कुरुशार्दूल न ताञ शॊचितुम अर्हसि || வியாசர் மஹாபாரதம்)


விதிக்கப்பட்டதே நடந்திருக்கிறது. 
அந்த மஹா வீரர்களின் விதியும் இதுவே. 
ஸ்ரீ கிருஷ்ணன் இந்த விதியை கலங்கடிக்க முழுவதும் தகுந்தவெனினும், அது நடக்க வேண்டும் என்று அனுமதித்து விட்டான்.
கோவிந்தன், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்துடன் கூடிய அண்டத்தின் போக்கையே மாற்ற கூடியவன். மஹாத்மாக்களான பிராம்மணர்களின் சாபத்தைக் குறித்துச் சொல்ல வேறென்ன இருக்கிறது?

எவன் உன் மீது கொண்ட அன்பின் மூலம் சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்துக் கொண்டு உன் முன்பு செல்வானோ, அவன் நான்கு கரம் கொண்ட புராதனமான வாசுதேவன் ஆவான். 
(रथस्य पुरतॊ याति यः सचक्र गदाधरः | तव स्नेहात् पुराणर्षिर वासुदेवश चतुर्भुजः || வியாசர் மஹாபாரதம்

அகன்ற விழிகளைக் கொண்ட கிருஷ்ணன், பூமியின் பாரத்தை  குறைத்து, தன்னுடைய சரீரத்தை விட்டு, தன்னுடைய உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறான்.
(कृत्वा भारावतरणं पृथिव्याः पृथुलॊचनः | मॊक्षयित्वा जगत सर्वं गतः स्वस्थानम् उत्तमम् || வியாசர் மஹாபாரதம்

புருஷ ஸ்ரேஷ்டனே! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரனே ! பீமனையும், நகுல் சகாதேவனையும் உதவியாக கொண்ட உன்னாலும், தேவர்களின் பெரும்பணி நிறைவேறியிருக்கிறது.
(त्वया तव इह महत् कर्म देवानां पुरुषर्षभ | कृतं भीम सहायेन यमाभ्यां च महाभुज || வியாசர் மஹாபாரதம்)

குரு குலத்தில் புழப்பெற்றவனே ! நீயும், உன் சகோதரர்களும் உங்களுடைய வாழ்வின் பெரும் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டதால், நீங்கள் அனைவருமே வெற்றி மகுடம் சூட்டப்பட்டவர்களென நான் உங்களை கருதுகிறேன். 
(कृतकृत्यांश च वॊ मन्ये संसिद्धान् कुरु पुंग्गव | गमनं प्राप्तकालं च तद धि श्रेयॊ मतं मम || வியாசர் மஹாபாரதம்)

பாரதா! ஒருவனுக்கு நல்ல காலம் நடக்கும் போது, புத்தியும், ஆற்றலும், தொலைநோக்குப் பார்வையும் எழுகிறது. அவனுக்கே, எதிர்மறையான கெட்ட காலம் வரும்போது, புத்தியும், ஆற்றலும், தொலைநோக்கு பார்வையும் வேலை செய்யாமல் மறைந்துபோகும்
(बलं बुद्धिश च तेजश च प्रतिपत्ति: च भारत | भवन्ति भव कालेषु विपद्यन्ते विपर्यये || வியாசர் மஹாபாரதம்)

புத்தி, ஆற்றல், தொலைநோக்கு பார்வை இவை அனைத்துக்கும் வேராக காலமே உள்ளது. 
தனஞ்சயா! உண்மையில், காலமே அண்டத்தின் வித்தாகும். 
மேலும், காலமே தன் விருப்பப்படி அனைத்தையும் ஈர்க்கிறது
(कालमूलम् इदं सर्वं जगद् बीजं धनंजय | काल एव समादत्ते पुन: एव यदृच्छया || வியாசர் மஹாபாரதம்)

நீங்கள் இவ்வுலகத்தில் இருந்து செல்வதற்கான வேளை வந்துவிட்டது. ஓ! பலமிக்கவனே, இதுவே இப்போது உங்களுக்கு நன்மையானது.


காலத்தின் பிடியில் இருக்கும் மனிதன், ஒரு நாள் வலிமையடைகிறான், ஒருநாள் வலிமையை இழுந்து பலவீனமாகிறான். 
ஒருவன் தேர்ந்தவனாகி பிறரை ஆட்சி செய்கிறான், 
பிறகு அவனே அந்நிலையை இழந்து, பிறரின் ஆணைகளுக்குக் கீழ்ப்படியும் ஒரு பணியாளனாகிறான்.
(स एव बलवान् भूत्वा पुनर भवति दुर्बलः | स एवेशश् च भूत्वेह परै: आज्ञाप्यते पुनः || வியாசர் மஹாபாரதம்)

உன் ஆயுதங்கள் உனக்கு பல வெற்றிகளை கொடுத்து விட்டு, தாம் வந்த இடத்திற்கே சென்றுவிட்டன. 
அவற்றுக்கான காலம் வரும்போது அவை மீண்டும் உன் கரங்களில் வரும்.
பாரதா! 
நீங்கள் அனைவரும் உயர்ந்த கதியை அடைவதற்கான காலம் வந்துவிட்டது. 
பாரதக் குலத்தில் புகழ்பெற்றவனே ! 
இதுவே உங்கள் அனைவருக்குமான உயர்ந்த நன்மையென நான் கருதுகிறேன்" என்றார் வியாசர்.
(कालॊ गन्तुं गतिं मुख्यां भवताम् अपि भारत | एतच छ्रेयॊ हि वॊ मन्ये परमं भरतर्षभ || வியாசர் மஹாபாரதம்)

வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் தொடர்ந்தார், "அளவிலா சக்தி கொண்ட வியாசரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்டு யானையின் பெயரால் அழைக்கப்படும் ஹஸ்தினாபுர நகரத்திற்கு (உத்தர பிரதேசம்)  திரும்பினான்.
(एतद् वचनम् आज्ञाय व्यासस्यामित तेजसः | अनुज्ञातॊ ययौ पार्थॊ नगरं नागसाह्वयम || வியாசர் மஹாபாரதம்)

ஹஸ்தினாபுரம் நுழைந்த அந்த அர்ஜுனன். யுதிஷ்டிரனை அணுகி  விருஷ்ணிகளுக்கு நடந்தது குறித்து அனைத்தையும் சொன்னான்" என்றார் வைசம்பாயனர்.
(प्रविश्य च पुरीं वीरः समासाद्य युधिष्ठिरम् | आचष्ट तद् यथावृत्तं वृष्ण्यन्धकजनं प्रति || வியாசர் மஹாபாரதம்)

மௌஸல பர்வம் முற்று பெற்றது