நிச்ருத் காயத்ரி சந்தஸ் என்றால் என்ன?
சந்தியா வந்தனத்தில்,
ஜபம் செய்யும் முன் தலை, மூக்கு, இதயம் தொட்டு செல்லும் ஆவாஹன மந்திரத்தின் பொருள் என்ன?
ஓம் என்ற ப்ரணவ மந்திரமே, மற்ற அனைத்து மந்திரத்துக்கும் மூல காரணம்.
பிரபஞ்சத்தில் உள்ள ஒலி அலைகளை தியானத்தில் கவனித்து, மந்திரங்களை கண்டுபிடித்து கொடுத்தவர்கள் நம் ரிஷிகள்.
உருவாக்கப்பட்ட பிற மதங்கள் "நாங்கள் ஆடை இல்லாத, அறிவு இல்லாத ஆதாம், ஏவாள் மூலம் வந்தோம்" என்று பெருமிதமாக சொல்கின்றனர்.
சனாதன தர்மத்தில் இருக்கும் நாம், "வேத மந்திரங்கள் கொடுத்த பிரமிக்க தக்க அறிவாளிகளாக இருக்கும் ரிஷிகளின் பரம்பரை என்று இன்று வரை எந்த ரிஷியின் கோத்திரத்தில் வருகிறோம்" என்று சொல்கிறோம்.
நம் ரிஷிகள் கண்டுபிடித்ததே வேத மந்திரங்கள்.
இவர்கள் கண்டுபிடித்த
ஒவ்வோரு மந்திரமும், ஒவ்வொரு சந்தஸ் (a measure) கொண்டதாக இருக்கிறது.
ஒவ்வொரு மந்திரமும் ஒரு தேவதையை குறித்ததாக உள்ளது.
நாம் தினமும் செய்யும் சந்தியா வந்தனத்தில்,
ப்ராணாயாம மந்திரம் சொல்லும் முன்,
காயத்ரி மந்திரம் சொல்லும் முன்,
நாம்
காயத்ரி மந்திரத்தை கொடுத்த ரிஷியின் பெயரை சொல்லி தலையை தொட்டு,
காயத்ரி மந்திரத்தின் சந்தஸை நினைவில் கொள்ளும் போது மூக்கை தொட்டும்,
காயத்ரி மந்திரம் வணங்கும் தேவதையை நினைவில் கொள்ளும் போது இதயம் தொட்டு ஆவாஹன செய்கிறோம், பாவிக்கிறோம்.
சந்தியா வந்தனத்தில்,
ப்ரணவ ஜபம் செய்யும் முன்:
ப்ரணவஸ்ய ருஷிர் ப்ரஹ்ம,
தேவீ காயத்ரீச் சந்த:
பரமாத்மா தேவதா !
என்று நாம் சொல்லும் போது, தலை, மூக்கு, இதயத்தை முறையே தொடுகிறோம்.இதற்கு ப்ரணவ ந்யாஸம் என்று பெயர்.
இங்கு பரவாசுதேவனை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.
விளக்கம்:
ப்ராணாயாம மந்திரம் சொல்லும் முன்னர்,
இந்த மந்திரத்தை எந்த ரிஷி கண்டுபிடித்தார்?
எப்படி சொல்ல வேண்டும்?
யாரை குறித்து இந்த மந்திரம் துதிக்கின்றது ?
என்று தியானிக்கிறோம்.
பரவாசுதேவனை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.
1. ப்ரணவஸ்ய ருஷிர் ப்ரஹ்ம
இங்கு, நம் தலையை தொட்டு "ப்ராணாயாம மந்திரத்திற்கு ப்ரம்மாவே ரிஷி" என்று சொல்கிறோம்.
வேத ஸ்வரூபியான ஸ்வயம் ப்ரம்மாவே, ப்ராணாயாம மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் என்று உணர்ந்து, அவர் பாதம் நம் தலையில் பட்டு நமக்கு இந்த ப்ராணாயாம மந்திரம் ஸித்தி ஆகட்டும் என்று பாவனை செய்து தலையை தொடுகிறோம்.
2. தேவீ காயத்ரீச் சந்த:
பின்னர், மூக்கை தொட்டு ப்ராணாயாம மந்திரத்தின் சந்தஸ் "தேவீ காயத்ரீ சந்தஸ்"ல் என்று உள்ளது என்று சொல்கிறோம்.
ஸ்வயம் ப்ரம்மாவே, ப்ராணாயாம மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் என்று உணர்ந்து, ப்ராணாயாம மந்திரத்தை, காயத்ரி சந்தஸ் முறையில் சொல்ல வேண்டும் என்று நம் மனதில் நிறுத்த, நமக்கு எப்படி மூச்சு முக்கியமோ, அது போல,
மந்திரங்களுக்கு அதன் சந்தஸ் (உச்சரிப்பு) முக்கியம் என்று உணர்ந்து, பாவனையாக மூக்கை தொடுகிறோம்.
3. பரமாத்மா தேவதா
பின்னர், இதயத்தை தொட்டு, நாம் சொல்லப்போகும் இந்த ப்ராணாயாம மந்திரம், மூல பொருளான அந்த பரமேஸ்வரனை, பரவாசுதேவனை, பரப்ரம்மத்தை துதிக்கின்றது என்று சொல்கிறோம்.
ஸ்வயம் ப்ரம்மாவே, "இந்த ப்ராணாயாம மந்திரத்தின் மூலம் பரவாசுதேவனை துதித்தார்" என்று உணர்ந்து, "ப்ராணாயாம மந்திரம்" நாம் ஜெபிக்கும் போது, அந்த பரமாத்மாவாகிய பரவாசுதேவன், நம் இதயத்தில் வந்து தங்கி, நமக்கு அனுக்கிரகம் செய்யட்டும் என்று பாவனை செய்து நம் இதயத்தை தொடுகிறோம்.
முக்கியமாக 7 சந்தஸ் உண்டு:
ப்ராணாயாம மந்திரம், காயத்ரி மந்திரம் போன்றவை, "காயத்ரீ சந்தஸில்" உள்ளன.
பெரும்பாலான நம் இதிஹாசங்களும், புராணங்களும் "அனுஷ்டுப் சந்தஸில்" உள்ளன.
"அனுஷ்டுப் சந்தம்" என்பது "மொத்தம் 32 சொல்லுடன் கூடியது".
நான்கு அடிகள், ஒர் அடிக்கு 8 சொல்.
மொத்தம் 32 சொல்.
"காயத்ரி சந்தம்" என்பது "மொத்தம் 24 சொல்லுடன் கூடியது".
மூன்று அடிகள், ஒர் அடிக்கு 8 சொல்.
மொத்தம் 24 சொல்.
காயத்ரி மந்திரத்தை, அர்க்ய ப்ரதானம் செய்யும் போது, 24 சொல்லுடன் "காயத்ரி சந்தஸில்" சொல்ல வேண்டும்.
தத் ஸ வி துர் வ ரே னி யம்
பர் கோ தே வ ஸ்ய தீ ம ஹீ !
தி யோ யோ ந: ப்ர சோ த யாத் !!
இப்படி சொல்லும் போது, காயத்ரீ சந்தஸ் முழுமையாக 24 சொல்லுடன் இருக்கிறது.
ஆனால், அர்க்யமாக செய்யாமல், காயத்ரி மந்திரத்தை ஜபம் செய்யும் போது 23 சொல்லாக மனதில் ஜபிக்க வேண்டும்.
காயத்ரீ சந்தஸ் முழுமையாக இல்லாமல் 23ஆக இருப்பதால், "நிச்ருத் காயத்ரி" என்று சொல்லி, பின்னர் ஜபம் செய்கிறோம்.
நிச்ருத் காயத்ரி மந்திரமாக சொல்லும் போது,
தத் ஸ வி துர் வ ரே ன்யம்
பர் கோ தே வ ஸ்ய தீ ம ஹீ !
தி யோ யோ ந: ப்ர சோ த யாத் !!
என்று 23ஆக மனதில் ஜபிக்க வேண்டும்.நிச்ருத் காயத்ரி மந்த்ரத்தை மனதால் மட்டுமே சொல்ல வேண்டும்.
ஒம்காரமே காயத்ரி மந்திரமாக இருப்பதால், ஒம் பூர் புவஸ் ஸூவ: ! என்று எப்பொழுதும் காயத்ரி மந்திரத்துடன் சேர்த்து சொல்ல வேண்டும்.
நிச்ருத் காயத்ரி மந்த்ரத்தை சொல்லும் முன்,
ஸாவித்ர்யா ருஷிர் விச்வாமித்ர: !
நிச்ருத் காயத்ரீச் சந்த: !
ஸவிதா தேவதா !!
என்று சொல்லி, "தலை, மூக்கு, இதயத்தை" தொடுகிறோம்.இங்கு காயத்ரி தேவையான வேத மாதாவை, நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.
ப்ராணாயாம மந்திரத்துக்கு முன் சொன்ன பரவாசுதேவனை ஆவாஹனம் செய்தது போல, நிச்ருத் காயத்ரி மந்திரம் சொல்லும் முன், காயத்ரி தேவியை ஆவாஹனம் செய்கிறோம்.
"ஓம்" என்ற மந்திரத்தின் மறு உருவான, "காயத்ரி மந்திரத்தை" கண்டுபிடித்து, வேத மாதாவாகிய காயத்ரி என்ற சாவித்ரி என்ற சரஸ்வதி தேவியை உபாஸனை செய்து, தரிசனமும் செய்த விச்வாமித்ர ரிஷியை தியானித்து, அவர் பாதம் நம் தலையில் படட்டும் என்ற பாவனையில் நாம் தலையை தொடுகிறோம்.
"காயத்ரி மந்திரம் 24ஆக இல்லாமல், ஒன்று குறைந்து 23ஆக இருப்பதால், காயத்ரீ சந்தஸ், நிச்ருத் காயத்ரீ சந்தஸ் ஆக சொல்ல வேண்டும்" என்று மனதில் நிறுத்தி, நமக்கு எப்படி மூச்சு முக்கியமோ, அதை போன்றது காயத்ரி மந்திரத்துக்கு சந்தஸ் என்று குறிக்க, மூக்கை தொடுகிறோம்.
காயத்ரி மந்திரத்தை ஜபிக்கும் முன், "காயத்ரீ தேவியாகிய சாவித்ரி தேவியை மனதில் த்யானிப்போம்" என்று இதயத்தை தொடுகிறோம்.
இங்கு காயத்ரீ வேத மாதாவை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.
இந்த ஞானத்தோடு, காயத்ரி ஜபத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்டு செய்யும் பொழுது, விஸ்வாமித்திர ரிஷியின் ஆசியும், காயத்ரீ தேவியின் அணுகிரஹமும் கிடைக்கிறது.
sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka