Followers

Search Here...

Showing posts with label தேவப்ரயாகை. Show all posts
Showing posts with label தேவப்ரயாகை. Show all posts

Sunday, 26 July 2020

பாசுரம் (அர்த்தம்) - "தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த". கண்டம் என்னும் கடிகையில் (தேவப்ரயாகையில்) வீற்றுஇருக்கும் ராமபிரானை தொழும் பாசுரம். பெரியாழ்வார் வர்ணிக்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே !

பரவாசுதேவன் நாராயணன், ராமபிரானாக அயோத்தியில் அவதாரம் செய்து விட்டார்.

வனவாச சமயத்தில் பரத்வாஜ ரிஷியை சந்தித்தார் ராமபிரான். பிறகு சித்ரகூடம் சென்று தங்கி இருந்தார்.

14 வருட வனவாசத்தில்,
அயோத்தியில் ஆரம்பித்து, ராமேஸ்வரம் வரை நடந்தே வந்தார் ராமபிரான்.

ராமபிரானின் பாதம் படும் பாக்கியத்தை அயோத்திக்கு தெற்கே உள்ள பாரத தேசங்கள் முழுவதும் பெற்றது.



இலங்கையில் இருந்த ராக்ஷஸன் ராவணனின் தலையை கொய்து, அவன் தம்பி விபீஷணனுக்கு முடி சூட்டிவிட்டு, அயோத்தியில் இருந்து இலங்கை வரை தன் ஆளுமையை பறைசாற்றினார் ராமபிரான்.

பிறகு, சீதா தேவியுடன் பட்டாபிஷேகம் செய்து, அயோத்தியை அரசாட்சி செய்து கொண்டிருந்தார்.

அயோத்தியில் ஆரம்பித்து, ராமரின் பாதம் தெற்கு பாரதம் முழுக்க பட்டுவிட்டது.
ஆனால், அயோத்திக்கு மேல் உள்ள ஹிமாசலம் போன்ற வ்டபாரத தேசங்கள் ராம பாதம் கிடைக்காமல் இருந்தது.

"புனிதமான கங்கை நதி பாயும் ஹிமாலயத்திலும் ராமபிரான் பாதம் படவேண்டும்"
என்று ஆசைப்பட்டார் பரத்வாஜ ரிஷி.

அதற்காக கண்டம் என்னும் கடிகையில், சித்ரகூடம் போலவே ஒரு குடில் அமைத்து, அயோத்தி மன்னன் னை அழைத்தார்.
பரத்வாஜ ரிஷி அழைப்பை ஏற்று, ராமபிரான் புனிதமான கங்கை ஓடும் இந்த கடிகையில் வந்து சிலகாலம் தங்கினார்.

இந்த 'கடிகை' என்ற திவ்ய தேசமே 'தேவப்ரயாகை' என்றும் அழைக்கபடுகிறது.

இங்குள்ள ரகுநாத் கோவிலில், ராமபிரான் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறார்.

"பாரத தேசம் முழுவதும் ராம ராஜ்யமே"
என்று பறைசாற்றினார்.



"கங்கையில் நின்று, எங்கும் தன் புகழை பரப்பி, பாரத தேசம் முழுவதும் ஆளும் என் புருஷோத்தமனே"
என்று பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்கிறார் இந்த பாசுரத்தில்.

தங்கையை மூக்கும்
தமையனைத் தலையும் தடிந்த
எம் தாசரதி போய்
எங்கும் தன் புகழாய் இருந்து
அரசாண்ட எம் புருஷோத்தமன் இருக்கை
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
கடுவினை களைந்திடகிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற
கண்டம் என்னும் கடிநகரே
திருமொழி (பெரியாழ்வார்)
கண்டம் என்னும் கடிநகர், இன்று "தேவப்ரயாகை" (Uttarakhand) என்ற பெயருடன் இருக்கிறது.

வீட்டில் உள்ள வாளி ஜலத்தில் குளிக்கும் போது "கங்கே கங்கே" என்ற சொன்னால் கூட, அந்த சொல்லே குளிப்பவனின் பாவங்களை போக்கி, புனிதமாக்கிவிடும். (கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
கடுவினை களைந்திடகிற்கும்)

'கங்கை' என்ற சொல்லுக்கே அத்தனை மகத்துவம் சொல்லப்படுகிறது.

அப்படிப்பட்ட பெருமைமிகு கங்கை, கடிகை என்ற தேவப்ரயாகையில் ஓடிக்கொண்டு இருக்க, ராமேஸ்வரம் முதல் ஹிமாச்சலம் வரை தன் பாதம் பதித்த ராமபிரானை கண்டு (எம் தாசரதி போய் எங்கும் தன் புகழாய் இருந்து அரசாண்ட எம் புருஷோத்தமன் இருக்கை),
'அந்த கங்கையில் மேல் நின்ற என் புருஷோத்தமனே' என்று ராமபிரானை கை தொழுது சேவிக்கிறார், பெரியாழ்வார். (கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற)

ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார், வடதேசத்தில் உள்ள  தேவப்ரயாகை வரை சென்று ராமபிரானை சேவித்து இருக்கிறார் என்பது தெரிகிறது.
"ராமபிரான் பாரத தேசம் முழுவதும் தன் பாதத்தை பதித்து, கங்கையில் வந்து ரகுநாதனாக நிற்கிறார். அந்த ரகுநாதனை தொழுவோம்"
என்று மட்டும் பெரியாழ்வார் சொல்லி இருக்கலாமே!
ஆனால்,
ஏன், சூர்பனகை மூக்கை அறுத்த, அவள் அண்ணன் ராவணன் தலையை அறுத்த ராமபிரான் என்று சேர்த்து சொன்னார்?

ராக்ஷஸ தாயாருக்கும், ரிஷியான விஸ்ரவசுக்கும் பிறந்தவன் ராவணன். ராவணனும் ஒரு விதத்தில் பிராம்மணன். வேதம் கற்றவன். 
பெரியாழ்வார் பிராம்மணர்.
இப்படி ராவணன் தலையை கொய்து எறிந்த ராமபிரான் என்று சொல்ல காரணம் என்ன?

இதற்கான காரணத்தை பெரியவாச்சான் பிள்ளை சொல்லியிருந்தாலும், அந்த அர்த்தங்கள் நமக்கு கிடைக்காமல் போய் விட்டது.
அதற்கு பின் வந்த மணவாள மாமுனிகள், பெரியாழ்வார் என்ன காரணத்தினால் இப்படி சொன்னார்? என்று நமக்கு காட்டுகிறார்.

உண்மையான பக்தன் பெருமாளையும், பிராட்டியையும் சேர்த்து சேவிக்கவே விரும்புவான். பிரித்து வைக்க விரும்பமாட்டான்.
ஹனுமான் ராமபிரானையும், சீதையும் சேர்க்க பாடுபட்டார். பிரிந்து இருப்பதை கண்டு வருத்தப்பட்டார்.
சேர்த்து வைக்க ஆசைப்பட்ட ஹநுமானுக்கு ராமபிரான் பெரும் புகழை கொடுத்தார்.



ஹனுமானுக்கு கோவில் காட்டினால், அங்கு ஒரு சிறிய சன்னதியில் கூட ராமபிரான் இருக்க சம்மத்தித்து விடுகிறார்.
ராமருக்கே கோவில் காட்டினாலும், அங்கு இருக்கும் சிறு ஹனுமான் சன்னதியை சுற்றுபவர்களே அதிகம்.
ஹநுமானுக்கு ஏன் எந்த ஏற்றம்? 
பெருமாளையும், பிராட்டியையும் சேர்த்து சேவிக்க ஆசைப்பட்டதால், ஹநுமானுக்கு எந்த ஏற்றம் கிடைத்தது.
பெருமாளை பிராட்டியிடமிருந்து பிரித்து பார்க்க ஆசைப்பட்டாள் - 'சூர்ப்பனகை'.
இந்த பாபத்துக்கு மூக்கு அறுபட்டு தண்டிக்கப்பட்டாள்.

பிராட்டியை பெருமாளிடமிருந்து பிரித்து பார்க்க ஆசைப்பட்டான் - 'ராவணன்'.
தலையே போனது அவனுக்கு.

பக்தன் 'பெருமாளையும் பிராட்டியையும் பிரித்து பார்க்க கூடாது' என்று நமக்கு சொல்லவே  பெரியாழ்வார் "தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த" என்று மணவாள மாமுனிகள் நமக்கு விளக்குகிறார்..

ராமபிரானையும், சீதாதேவியையும் சேர்த்தே வணங்குவோம்.
ஹநுமானை போல, பெருமையை அடைவோம்.

குருநாதர் துணை.