Followers

Search Here...

Showing posts with label திருவனந்தபுரம். Show all posts
Showing posts with label திருவனந்தபுரம். Show all posts

Thursday, 13 January 2022

பெரியோர்களிடம் எப்படி பழக வேண்டும்? ஆளவந்தார் திருவனந்தபுரம் செல்ல வைத்த பாசுரம். அர்த்தம் தெரிந்து கொள்வோம். கெடுமிட ராயவெல்லாம் ...

பெரியோர்களை பார்க்கும் போது, "முதலில் அவர்களுடைய திருவடியை தான் பார்க்க வேண்டும். பிறகு தான் அவர்களின் முகத்தை பார்க்கவேண்டும்".

இது பெரியோர்களிடம் மரியாதையாக பழகும் முறை. 

ஒரு அரசனை பார்த்தாலும், இப்படி தான் பார்க்க வேண்டும்.

நம்முடைய ஆசாரியனை பார்த்தாலும், முதலில் அவருடைய திருவடியை பார்த்து விட்டு தான் அவருடைய முகத்தை பார்க்க வேண்டும்.

தெய்வத்தை பார்த்தாலும், முதலில் திருவடியை பார்த்து விட்டு தான், அவருடைய திருமுகத்தை பார்க்க வேண்டும்.


திருவடியை பார்த்து விட்டு, முகத்தை பார்ப்பது என்பது "மரியாதை".

முகத்தை பார்த்து விட்டு, பிறகு வெட்கப்பட்டு தலை குனிந்து திருவடியை பார்ப்பது என்பது "அன்பு".

திருவடியின் பெருமையை ஆளவந்தார் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் நமக்கு காட்டுகிறது.

திருமங்கையாழ்வார், திருவரங்கத்தில் நம்பெருமாள் முன்பு தம்முடைய திருநெடுந்தாண்டக பாசுரங்களை அனுபவித்துப் பாடினார்

அரங்கன், “ஆழ்வாரின் விருப்பம் என்னவோ?” என்று கேட்க, 

திருமங்கையாழ்வார், ”மார்கழியின் மோக்ஷ உத்ஸவத்தன்று வடமொழி வேதங்களுடன், நம்மாழ்வாரின் திருவாய்மொழியையும் அரங்கன் கேட்டருள வேண்டும்”  என வேண்டினார். 

அரங்கன் மகிழ்வுடன் இணங்கினார்


இதை படிப்படியாக சீர்படுத்தப்பட்டு, இதில் மோஹினி அவதாரம், திருக்கைத்தல சேவை, வேடுபறி, மற்றும் நம்மாழ்வார் மோக்ஷம் போன்றவை சேர்த்து பிரமாண்ட உத்ஸவமாக நாதமுனிகள் ஆரம்பித்தார்.

அவரை தொடர்ந்து ஆளவந்தார், சுவாமி ராமானுஜர் மற்றும் மணவாள மாமுனிகள் என்னும் ஆச்சாரியார்கள், தொடர்ந்து, இன்று வரை நிர்வகித்து வருகின்றனர்.

இந்த உத்ஸவத்திற்காக ஆழ்வார்திருநகரியில் இருந்து நம்மாழ்வார் விக்கிரகத்தை திருவரங்கம் கோயிலுக்கு எழுந்தருள செய்வார்கள்.  

இது மார்கழி சுக்லபட்ச ஏகாதசி முதல் பத்து நாட்கள் நடைபெறும்.

இந்நாட்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி அரையர்களால் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும். 

இது பத்து  நாட்கள் இரவில் நடைபெறும். 

எனவே ’இராப்பத்து’ எனப்படுகிறது.  

இதுவே ’அத்யயன உத்ஸவம்’ என்றும் கொண்டாடப்படுகிறது.

அத்யயன உத்சவ காலத்தில், வைஷ்ணவ ஆசாரியர்கள் பெருமாளை விட்டு போகவே மாட்டார்கள்.

அத்யயன உத்ஸவத்தில் தான், திவ்ய பாசுரங்களை, பெருமாளே உட்கார்ந்து கேட்பார்.

பரம ரசிகர்களான ஆசாரியர்கள் பாசுரத்தையும், பெருமாள் கேட்பதையும் அனுபவிக்காமல் வேறு எங்காவது போக ஆசைப்படுவார்களா? 

இந்த அனுபவத்தை விடுவதற்கு யாருக்கு தான் மனம் வரும்?

இந்த அத்யயன உத்ஸவத்தை ஆரம்பித்தவரே நாதமுனிகள் தான்.

அவரை தொடர்ந்து நிர்வகித்து வந்தவர் ஆளவந்தார்.

"108 திவ்ய தேசங்களை நமது ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து, திவ்ய தேச தரிசனம் செய்ய சொல்லி இருக்கிறார்களே! 

மேல் நாட்டு, மலை நாட்டு திவ்ய தேசங்கள் அனைத்தும் பார்க்க வேண்டுமே! பார்க்க வேண்டுமே!"

என்று ஆளவந்தார் ஆசைப்பட்டு கொண்டிருந்தார்.


அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. மேலும், நம்பெருமான் அனுமதிக்காக காத்து இருந்தார்.

அத்யயன உத்சவம் நம்பெருமாளுக்கு ஆரம்பமானது.

பாசுரங்களை கேட்டு, பெருமாளையும் பார்த்து ரசித்து கொண்டிருந்தார் ஆளவந்தார்.





பத்மநாபன் மீதான பாசுரம் வந்த போது, "அனந்தபுர நகர் புகுதும் இன்றே" என்று சொல்லும்போது, கொஞ்சம் வீசி சொல்லி, ஆளவந்தாரை அரையர் பார்க்க, 'இது தான் நம்பெருமாள் நியமனம்' என்று, அப்படியே புறப்பட்டு விட்டார்.


ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டு, போகும் வழியில் உள்ள திவ்ய தேசங்கள் அனைத்தையும் சேவித்து கொண்டே, நடந்து நடந்து, 'திருவனந்தபுரம்'  வந்து சேர்ந்தார்.


பத்மநாபனை அங்கு மூன்று வாசல் வழியாக தான் பார்க்க முடியும். 

முதலில் திருவடி, பிறகு திருநாபி, பிறகு திருமுகம் என்று மூன்று ஸ்தானமாக பெருமாளை இங்கு பார்க்கலாம்.

'மூன்று உலகங்களாக விராட் புருஷனாக (வ்யாஹ்ருதி - பூ: புவ ஸுவ:) தானே இருக்கிறேன்' என்கிறார்.

ஸ்ரீரங்கத்தில் இருந்து நடந்தே வந்து, ஆசையோடு பார்க்க வந்த ஆளவந்தார், கோவிலுக்குள் வந்து, முதல் வாசலில் பெருமாளின் "திருவடியை" பார்த்தார்.

பார்த்து விட்டு, உடனேயே, திரும்பி விட்டார்.

சேவை செய்து வைப்பவர்கள், ஆளவந்தாரை கூப்பிட்டு, 'இதோ பாருங்கள் பெருமாளின் நாபி கமலம். ப்ரம்ம தேவனை படைத்த நாபி கமலத்தை பாருங்கள்' என்று காண்பித்து அழைக்க,

ஆளவந்தார் அவர்களிடம், "அதற்கு அதிகாரம் நமக்கில்லை. திரு நாபியை தரிசிக்கவோ,திருமுகத்தை தரிசிக்கவோ பிராட்டிக்கு தான் அதிகாரம். அடியேனுக்கு திருவடியே போதும்" என்று சொல்லிவிட்டு திரும்பினார்.

ஆளவந்தாரை திருவனந்தபுரம் கொண்டு வர செய்த நம்மாழ்வார் பாசுரம் :

கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார் விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும் தடமுடை வயல் அனந்தபுரநகர்ப் புகுதுமின்றே

- திருவாய்மொழி (நம்மாழ்வார்)

கேசவா! என்ற மூன்றெழுத்து நாமத்தை சொன்னால் துன்பம் அனைத்தும்  தொலைந்து போகுமே! (கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன

இந்த ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு நரக வேதனைகளை அனுபவிக்க யமலோகம் யமதூதர்கள் அழைத்து செல்லும் போது, 

இங்கு ஏன் வந்தாய்? அனைத்து பாவங்களையும் நாசம் செய்யவல்ல, கேசவனை நீ பஜிக்கவில்லையா? கேசவனின் நாமத்தை சொல்பவர்களுக்கு நரக வேதனை நேராதே! கேசவ நாமத்தை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும், கேசவனை பூஜை செய்ததற்கு சமம் அன்றோ!' என்று எமதர்மன் கேட்பாரே!

கேசவா! என்று சொல்பவருக்கு எம பயமில்லையே! (நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்)

ஆதிசேஷன் மேல் விரும்பி பள்ளி கொள்பவன் வீற்று இருக்கும் (விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான்)

வண்டுகள் ரீங்காரம் செய்யும், தடாகங்கள் நிறைந்த, வயல்வெளிகள் நிறைந்த (சுரும்பு அலற்றும் தடம் உடை வயல்)

திருவனந்தபுரத்திற்கு இன்றே செல்வோமே! (அனந்தபுரநகர் புகுதும் இன்றே)


இதை கேட்டதும், ஆளவந்தார், நம்பெருமாள் உத்தரவாக ஏற்று,  திருவனந்தபுரத்திற்கு கிளம்பி விட்டார்.