Followers

Search Here...

Showing posts with label சவிதா. Show all posts
Showing posts with label சவிதா. Show all posts

Monday, 23 August 2021

ஸவிதா என்பது யார்? காயத்ரி மந்திரம் "ஸவிதா"வை தியானம் செய்ய சொல்கிறது? - ப்ரம்ம விசாரம்.....தெரிந்து கொள்வோம்.

ஸவிதா என்பது யார்? மேலும் தெரிந்து கொள்வோம்.

காயத்ரீ மந்திரத்தின் அர்த்தம், "என்னுடைய புத்தியை தூண்டி இயங்க வைக்கும், அந்த ஸவிதாவான ஈஸ்வரனை நான் தியானிக்கிறேன், துதிக்கிறேன்"

சிஷ்யன்

வேத மாதாவான காயத்ரீ,  சூரியனை தான் 'ஸவிதா' என்று சொல்கிறதா?

குரு

நீ என்ன நினைக்கிறாய்?

சிஷ்யன்

சூரியன் ஒரு அக்னி பிழம்பு தானே.. 

அதை ஸவிதா என்று காயத்ரீ சொல்லி இருக்க முடியாது என்று தான் தோன்றுகிறது.

குரு

நீ சொல்வது சரியாக தான் உள்ளது. சூரியன் என்ற அக்னி பிழம்பு ஸவிதா இல்லையென்றால், பிறகு எது ஸவிதா என்று நினைக்கிறாய்?

சிஷ்யன்

இந்த அக்னியில் இருந்து வரும் சூரிய கதிர் தான் ஸவிதா என்று காயத்ரீ சொல்கிறதோ?

குரு

நீ என்ன நினைக்கிறாய்? 

சிஷ்யன்

சூரிய கிரணங்கள் நம் புத்தியை தூண்டுகிறது என்றே வைத்து கொண்டாலும், அது பரமாத்மா இல்லை. ஒரு சக்தி. அவ்வளவு தானே. அதை போய் ஏன் காயத்ரீ வணங்க வேண்டும்?

குரு

அதுவும் சரி தான். பிறகு, எது  ஸவிதா என்று நினைக்கிறாய்?



சிஷ்யன்

இந்த சூரியன் என்ற அக்னி பிழம்புக்கும், அதன் கிரணங்களுக்கும் காரணமாக ஒரு தேவன் இருக்கிறார். அந்த சூரிய தேவனை தான் ஸவிதா என்று காயத்ரீ சொல்கிறதோ?

குரு

நீ என்ன நினைக்கிறாய்?

சிஷ்யன்

சூரிய தேவனுக்கும் இந்திரனாக தேவேந்திரன் இருக்கிறார். தேவர்களை படைத்த கஷ்யபர் இருக்கிறார். அவரை படைத்த ப்ரம்ம தேவன் இருக்கிறார். ப்ரம்ம தேவனையும் படைத்த விராட் புருஷனான நாராயணன் இருக்கிறார். அவரே ப்ரணவமாக நாம ரூபத்திலும் இருக்கிறார்.. அவரே நாம ரூபத்தை கடந்து ப்ரம்மமாகவே இருக்கிறார்.. ப்ரம்மமே பகவான்.

பகவானின் இதயத்திலிருந்து வந்த சங்கல்பமே வேதம் என்கிற போது, வேத மாதாவான 'காயத்ரீ' சூரிய தேவனை துதிக்கிறது என்று தோன்றவில்லையே.. அவருக்கும் மேல் பலர் உள்ளனரே!

குரு

நீ சொல்வதும் சரியாக தான் உள்ளது... பிறகு ஸவிதா என்று வேத மாதா யாரை சொல்கிறாள் என்று நினைக்கிறாய்? 




சிஷ்யன்

அந்த ப்ரம்மமே, நாமமாக (ஒலி) ப்ரணவத்தில் இருக்கிறார். அதிலும் விஷ்ணுவாக (அ) தனித்த ரூபத்தோடு இருக்கிறார். அவரே மெய் என்ற உடலில் புகுந்து கொண்டும் இருக்கிறார். ஒரு வேளை, நமக்குள் இருக்கும் அந்த பகவானை தான் "ஸவிதா" என்று சொல்கிறதோ? அனைவருக்குள்ளும் இருக்கும் அந்த பகவான், அந்த சூரிய தேவனுக்குள்ளும் இருப்பாரே!! அந்த சூரிய தேவனுக்குள், நமக்குள், அந்தர்யாமியாக இருக்கும் அந்த நாராயணனை தான், வேத மாதா காயத்ரீ துதிக்கிறாளோ? 

சூரிய தேவனுக்கும் அந்தர்யாமியாக சூரிய நாராயணன் தானே இருக்கிறார். 

ஆத்ம நாராயணனை, சூரிய நாராயணனை தான் காயத்ரீ துதிக்கிறாளோ?

குரு

நீ சொல்வது சரியாக தான் தோன்றுகிறது. நீ என்ன நினைக்கிறாய்?

சிஷ்யன்

என் சந்தேகம் தீர்ந்தது.


சிஷ்யன் குருவின் சரணத்தில் விழுந்து நமஸ்கரித்தான்.