Followers

Search Here...

Showing posts with label கள்ளழகர். Show all posts
Showing posts with label கள்ளழகர். Show all posts

Friday, 15 April 2022

கள்ளழகர்... வைகை ஆற்றங்கரை வர காரணம்.... என்ன?

தன் பக்தர்களை பார்க்க, அவர்கள் கொடுப்பதை வாங்கி கொள்ள, புது புது பக்தர்களை உருவாக்க, மோக்ஷம் கொடுக்க, பக்தனிடம் தனக்கு இருக்கும் அன்பை காட்ட வருகிறார் கள்ளழகபெருமாள்...

ராம அவதாரம் செய்த பெருமாள், ஒரு காரணத்தை காட்டி, 

தன் அரண்மனையை விட்டு விட்டு, 

ஆடை அலங்காரத்தை மாற்றி கொண்டு,  

வெயில் மழை பாராமல் வீதியில் கிளம்பி, 

தனக்கு காவலனாக லக்ஷ்மணனையும் சேர்த்து கொண்டு, 

தனக்காக காத்து கிடக்கும் பல ரிஷிகள், சபரி ஆஸ்ரமத்துக்குள் புகுந்து அவர்களிடம் பழகி, அவர்கள் கொடுக்கும் பழங்கள், கிழங்குகளை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு தரிசனம் கொடுத்து ஆனந்தப்படுத்தினார்.

மேலும், 

இன்றுவரை தன்னை பார்க்காத புது புது பக்தர்களான ஹனுமான், சுக்ரீவன், விபீஷணன் போன்றவர்களை தானே அவர்கள் இடத்துக்கு சென்று தரிசனம் கொடுத்து, தன் பக்தனாக்கி

மேலும் கோடிக்கணக்கான வானரர்கள், ராக்ஷஸர்கள், அணில் உட்பட பலரை தன் பக்தனாக்கி, 

உறவுகளால் விரட்டப்பட்ட தர்மாத்மாவான விபீஷணனுக்கு இலங்கையையே கொடுத்து, சகோதரனால் விரட்டப்பட்ட சுக்ரீவனுக்கு அவன் மனைவியோடு ராஜ்யத்தையும் கொடுத்து, 

ஜடாயுவுக்கு மோக்ஷம் கொடுத்து விட்டு, 

மீண்டும் தன் அயோத்திக்கு திரும்பினார்.


ராம அவதாரம் செய்த போது தான் பெருமாள் இப்படி செய்தார் என்று நினைக்க கூடாது.


பெருமாள், இன்றும் மதுரையில், ஒவ்வொரு வருடமும் இந்த ஆச்சர்யமான நிகழ்வை செய்து காட்டுகிறார்.


கள்ளழகராக வீற்று இருக்கும் பெருமாள், ஒரு காரணத்தை காட்டி, 

தன் கோவிலை விட்டு விட்டு, 

கையில் சாட்டை, கோடாலியோடு அலங்காரம் செய்து கொண்டு, 

வெயில் மழை பாராமல் வீதியில் கிளம்பி, 

தனக்கு காவலனாக பல போலீஸை சேர்த்து கொண்டு, 

தனக்காக மண்டகபடியில் காத்து கிடக்கும் பல பக்தர்களின் மண்டபத்துக்குள் புகுந்து அவர்களிடம் பழகி, அவர்கள் கொடுக்கும் பொங்கல் பழங்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு தரிசனம் கொடுத்து ஆனந்தப்படுத்துகிறார்.

மேலும், 

இன்றுவரை தன்னை பார்க்காத புது புது பக்தர்களை தானே அவர்கள் இடத்துக்கு சென்று தரிசனம் கொடுத்து, தன் பக்தனாக்கி, 

மேலும் கோடிக்கணக்கான வெளியூர், வெளிநாட்டவர்களை தன் பக்தனாக்கி

உறவுகளால் விரட்டப்பட்டவர்கள், சகோதரனால் விரட்டப்பட்டவர்கள், ஏழைகள் என்று அனைவருக்கும் சுகமான வாழ்வு கிடைக்க அணுகிரஹம் செய்து

மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுத்து விட்டு, 

மீண்டும் தன் அழகர்மலைக்கு திரும்புகிறார்.


கள்ளழகருக்கு காவல் புரிபவர்கள் தன்னை லக்ஷ்மணன் போலவும்,

அவருக்காக மண்டகப்படியில் காத்து இருந்து வரவேற்பவர்கள், தங்களை ரிஷிகள் போலவும்,

அவருக்கு போகும் வழியில் சேவை செய்பவர்கள், தங்களை பலம்வாய்ந்த வானர சேனை போலவும்,

ஏதோ முடிந்தவரை சேவை செய்பவர்கள், தங்களை ராமபிரானுக்கு சேவை செய்த அணில் போலவும்,

துக்கத்தில் இருந்து பெருமாளை பார்ப்பவர்கள், தங்களை சுக்ரீவன் போலவும், விபீஷணன் போலவும், நினைக்கும் போது, கள்ளழகரை ராமராக தரிசிப்போம். 

Sunday, 5 April 2020

பாசுரம் (அர்த்தம்) - கோட்டுமண் கொண்டு... பெரியாழ்வார் (மதுரை) கள்ளழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

கோட்டு மண் கொண்டு இடந்து 
குடம் கையில் மண் கொண்டு அளந்து மீட்டும் 
அஃது உண்டு உமிழ்ந்து விளையாடு 
விமலன் மலை
ஈட்டிய பல்பொருள்கள் எம்பிரானுக்கு அடி உறையென்று
ஓட்டரும்தண் சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே
- திருமொழி (பெரியாழ்வார்)

வராக அவதாரம் செய்த போது இந்த பூமியை (மண்) பிரளய ஜலத்தில் இருந்து தூக்கிய (இடந்து) அதே பகவான் (கோட்டு மண் கொண்டு இடந்து)




வாமன அவதாரம் செய்த போது இந்த பூமியை (மண்) பலிசக்கரவர்த்தியிடம் இருந்து மீட்க உலகை அளந்த அதே பகவான் (குடம் கையில் மண் கொண்டு அளந்து மீட்டும்)

கிருஷ்ண அவதாரம் செய்த போது இந்த பூமியை (மண்) உண்டு, லோகங்கள் அனைத்தும் தனக்குள் அடக்கம் என்று யசோதையிடம் லீலை செய்த (விளையாடு) அதே பகவான் (அஃது உண்டு உமிழ்ந்து விளையாடு)

இந்த அழகர் மலையில் கள்ளழகனாக வீற்று இருக்க (விமலன் மலை)

இங்கு வாழும் பலதரப்பட்ட பக்தர்களான கள்ளர்கள், மறவர்கள், பிராம்மணர்கள் எவரானாலும், தனக்கு கிடைத்த கேழ்வரகானாலும், ஆடு கோழியானாலும், பால், நெய் என்று எந்த பொருளானாலும் (ஈட்டிய பல்பொருள்கள்)
அதில் ஒரு பாகம் என் அழகருக்கு (எம்பிரான்) என்று உரைத்து அவர் பாதத்தில் சமர்ப்பித்து விடுகிறார்கள் (எம்பிரானுக்கு அடி உறையென்று).

அழகர் பெருமாள் ஜாதி பார்க்காமல், குணம் பார்க்காமல் இங்கு மட்டும் தான், அவரவர்கள் ஜாதிக்கு ஏற்ப, அவரவர்கள்  பேச்சுக்கு ஏற்ப, அவரவர்கள் நாகரீகத்து ஏற்ப, அவரவர்கள் சாப்பாடுக்கு ஏற்ப, அவரவர்கள் குணத்திற்கு ஏற்ப பழகுகிறார்.

பொருளை கொள்ளை அடிக்கும் கள்ளர்களின் மத்தியில் நின்று கொண்டு, கள்ளர்களின் மனதையும் கொள்ளையடிக்கும் கள்ளனுக்கு கள்ளனாக கள்ளழகர் இங்கு இருக்கிறார்.

ஸ்ரீரங்க நம்பெருமாள் போல இங்கு கள்ளழக பெருமாள் இருக்க மாட்டார். 
அங்கு ஸ்ரீரங்கபெருமாள், யார் கொடுத்தாலும் ஏற்க மாட்டார்.
இங்கோ,
கம்பு சாப்பிடுவீர்களா? என்று கேட்டால், "சாப்பிடுவேனே !" என்று சொல்வாராம் கள்ளழக பெருமாள்.

"கள்ளர்களை போல கருப்பு துணி கட்டி கொள்வீர்களா?"
என்று கேட்டால், "சரி" என்று கட்டி கொள்வாராம்.

பெருமாள் ஒரு நாள் கருப்பு துணி கட்டிக்கொள்ளும் அதிசயம் அழகர்மலையில் மட்டுமே காண முடியும்.
கள்ளர்களும் ரசிக்க கருப்பு துணி, கருப்பு தொப்பி அணிந்து கொண்டு, கையில் ஒரு கோலுடன் தரிசனம் தருகிறார் அழகர்.

அழகரை பார்த்தால் அனைவருக்குமே என் பெருமாள் (எம்பிரான்) என்று தோன்றிவிடும்.

மற்ற ஊர்களில் பெருமாளுக்கு நேரடியாக எதையும் சமைத்து நெய்வேத்யம் செய்து விட முடியாது.


பெருமாள் இங்கு மிகவும் சுலபமாக இருப்பதால்,
அழகர்மலையை சுற்றி ஆயிரக்கணாக்கான மாக்கள், நூபுர கங்கையில் (சிலம்பாறு) ஸ்நானம் செய்து விட்டு,
தாங்களே அடுப்பு மூட்டி, பொங்கல் வைத்து பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்யும் அழகை நாம் ரசிக்கலாம். 

சமயத்தில், தான் சாப்பிடும் ஆடு கோழியை கூட இவர்கள் சமர்ப்பிக்க இந்த பெருமாள் அதை ஏற்கிறார்.

இப்படி பிரார்த்தனை எல்லாம் இங்கு பலித்து விடும் என்பதால்,
பெரியாழ்வார் பெற்ற ஆண்டாள், ஸ்ரீ ரங்க பெருமாளை மணக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, நம் அழகருக்கு பொங்கல் செய்து சமர்ப்பித்தாள். இதை ஆண்டாளே  பாடுகிறாள்.

கள்ளர்கள் முதல் ஆழ்வார்கள் வரை, பழகுவதற்கும், ஆசைப்பட்ட அனைத்தும் நிறைவேறவும் அனுகிரஹிக்கும் பெருமாளாக கள்ளழகர் இருக்கிறார்.

சித்ரா பௌர்ணமி அன்று, ஒவ்வொரு பக்தன் தனக்கு சமர்ப்பிக்க ஆசைப்படும் உணவை ஏற்றுக்கொள்ள,
தானே வெயிலை பார்க்காமல், அழகர் மலையை  (மாலிருஞ்சோலை) விட்டு கிளம்பி, ஒவ்வொரு வீடாக நுழைந்து, அமர்ந்து, அவர்கள் கொடுக்கும் உணவை ஏற்று கொண்டு வைகை நதி செல்லும் வரை அனைவரிடமும் பழகி கொண்டே செல்கிறார். 




லட்சம் ஜனங்கள் இந்த அழகரை பார்க்க கூடும் அழகை கண் படைத்தவர்கள் காண வேண்டும். நம் வீட்டு பெருமாள் போல பழகும் அழகை மதுரையில் காணலாம். (ஓட்டரும்தண் சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே)

Saturday, 4 April 2020

பாசுரம் (அர்த்தம்) - நாறு நறும்பொழில்... ஆண்டாள் (மதுரை) கள்ளழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?


நாறு நறும்பொழில்
மாலிருஞ்சோலை நம்பிக்கு,
நான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவி வைத்தேன்,
நூறு தடா நிறைந்த
அக்காரவடிசில் சொன்னேன்,
ஏறு திருவுடையான்
இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ
-  நாச்சியார் திருமொழி (ஆண்டாள்)




வராக அவதாரம் செய்த போது இந்த பூமியை பிரளய ஜலத்தில் இருந்து தூக்கிய அதே பகவான்,
வாமன அவதாரம் செய்த போது இந்த பூமியை பலிசக்கரவர்த்தியிடம் இருந்து மீட்க உலகை அளந்த அதே பகவான்,
கிருஷ்ண அவதாரம் செய்த போது இந்த பூமியை உண்டு, லோகங்கள் அனைத்தும் தனக்குள் அடக்கம் என்று யசோதையிடம் லீலை செய்த அதே பகவான்,

இந்த அழகர் மலையில் கள்ளழகனாக (மாலிருஞ்சோலை நம்பி) வீற்று இருக்க,
இங்கு வாழும் பலதரப்பட்ட பக்தர்களான கள்ளர்கள், மறவர்கள், பிராம்மணர்கள் எவரானாலும்,
தனக்கு கிடைத்த கேழ்வரகானாலும், ஆடு கோழியானாலும், பால், நெய் என்று எந்த பொருளானாலும்,
அதில் ஒரு பாகம் "என் அழகருக்கு" என்று உரைத்து, அவர் பாதத்தில் சமர்ப்பித்து விடுகிறார்கள். 

அழகர் பெருமாள் ஜாதி பார்க்காமல், குணம் பார்க்காமல் இங்கு மட்டும் தான், அவரவர்கள் ஜாதிக்கு ஏற்ப, அவரவர்கள்  பேச்சுக்கு ஏற்ப, அவரவர்கள் நாகரீகத்து ஏற்ப, அவரவர்கள் சாப்பாடுக்கு ஏற்ப, அவரவர்கள் குணத்திற்கு ஏற்ப பழகுகிறார்.

பொருளை கொள்ளை அடிக்கும் கள்ளர்களின் மத்தியில் நின்று கொண்டு, கள்ளர்களின் மனதையும் கொள்ளையடிக்கும் கள்ளனுக்கு கள்ளனாக கள்ளழகர் இங்கு இருக்கிறார். 

ஸ்ரீரங்க நம்பெருமாள் போல இங்கு கள்ளழகர் இருக்க மாட்டார்.
அங்கு பெருமாள், யார் கொடுத்தாலும் ஏற்க மாட்டார். ஒரு அரசனாக இருப்பார்.

இங்கோ, பெருமாள் 'கம்பு சாப்பிடுவீர்களா?' என்று கேட்டால், "சாப்பிடுவேனே !" என்று சொல்கிறார். 
'கள்ளர்களை போல கருப்பு துணி கட்டி கொள்வீர்களா?' என்று கேட்டால், 'சரி' என்று கட்டி கொள்கிறார்.

பெருமாள் ஒரு நாள் கருப்பு துணி கட்டிக்கொள்ளும் அதிசயம் அழகர்மலையில் மட்டுமே காண முடியும். 

கள்ளர்களும் ரசிக்க கருப்பு துணி, கருப்பு தொப்பி அணிந்து கொண்டு, கையில் ஒரு கோலுடன் தரிசனம் தருகிறார் அழகர்.

அழகரை பார்த்தால் அனைவருக்குமே என் பெருமாள் (எம்பிரான்) என்று தோன்றிவிடும்.

மற்ற ஊர்களில் பெருமாளுக்கு நேரடியாக எதையும் சமைத்து நெய்வேத்யம் செய்து விட முடியாது.
பெருமாள் இங்கு மிகவும் சுலபமாக இருப்பதால், அழகர்மலையை சுற்றி ஆயிரக்கணாக்கான மக்கள், நூபுர கங்கையில் (சிலம்பாறு) ஸ்நானம் செய்து விட்டு, தாங்களே அடுப்பு மூட்டி, பொங்கல் வைத்து பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்யும் அழகை நாம் ரசிக்கலாம்.

சமயத்தில், கிராம மக்கள், தான் சாப்பிடும் ஆடு கோழியை சமர்ப்பித்தால் கூட, இந்த பெருமாள் அதையும் ஏற்கிறார்.

இப்படி பிரார்த்தனை எல்லாம் இங்கு பலித்து விடும் என்பதை அறிந்து கொண்ட பெரியாழ்வார் பெற்ற ஆண்டாள்,
"ஸ்ரீ ரங்க பெருமாளை மணக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்து, நம் அழகருக்கு பொங்கல் (அக்காரவடிசில்) செய்கிறேன் என்று வேண்டிக்கொண்டாள்.

மாலிருஞ்சோலை நம்பிக்கு,
நான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவி வைத்தேன்,
நூறு தடா நிறைந்த
அக்காரவடிசில் சொன்னேன்,
என்று ஆண்டாளே  பாடுகிறாள்.




ஆண்டாள் அவதரித்த காலத்துக்கு பிறகு, ராமானுஜர் அவதரித்தார் (1017AD).

ஆண்டாள் பாடிய இந்த பாட்டில், "அக்காரவடிசில் சமர்ப்பித்தேன்" என்று சொல்லாமல், "அக்காரவடிசில் சொன்னேன்" என்று இருப்பதை கவனித்து விட்டார் ராமானுஜர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த ஆண்டாள், ரங்கநாதரை மணந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையினால், மதுரையில் உள்ள கள்ளழகரிடம் பிரார்த்தனை செய்து, "பொங்கல் வைக்கிறேன்" என்று சொன்னாளாம்.

ஆண்டாள் தன்னிடம் சொன்னதற்கே, கள்ளழகர் அவள் ஆசையை பூர்த்தி செய்து விட்டாராம். 
ஆண்டாள் ஸ்ரீ ரங்கநாதருடன் ஐக்கியமாகி விட்டாள்.

தங்கை மனதில் ஆசைப்பட்டதை கூட, அண்ணன் தானே பூர்த்தி செய்து கொடுக்க வேண்டுமாம். 

"அக்காரவடிசில் செய்கிறேன்" என்று சொல்லியும், ஆண்டாள், கள்ளழகருக்கு அக்காரவடிசில் செய்யமுடியாமல் போனது. 

ஆண்டாள் ரங்கநாதரை திருமணம் செய்து கொண்டு புக்ககம் போய் விட்டாள் என்பதால், அண்ணனாக தான் இருந்து, தன் தங்கை ஆண்டாள் செய்த பிரார்த்தனையை முடித்து கொடுக்க ஆசைப்பட்டார்.

இதற்காக மதுரை வந்து, கள்ளழகரை தரிசித்து, அவருக்கு நூறு தடா அக்காரவடிசில் செய்து ஆண்டாள் செய்த பிரார்த்தனையை நிறைவேற்றி கொடுத்தார்.

தான் அண்ணனாக செய்த இந்த காரியத்தை தன் தங்கைக்கு சொல்ல, ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற ராமானுஜர், ஆண்டாள் சன்னதிக்கு செல்ல,

அந்த சன்னதியில் இருந்து 7 வயது பெண் குழந்தை ஓடி வந்து"அண்ணா..." என்று ராமானுஜரை நோக்கி ஓடி வந்து கட்டிக்கொண்டாளாம்.
வந்திருப்பது ஆண்டாள் என்று உணர்ந்த ராமானுஜர், தன் தங்கையின் பிரார்த்தனையை தான் செய்து முடித்த ஆனந்தத்தை அடைந்தார்.

ராமானுஜர் ஆண்டாளுக்கு அண்ணனாகி விட்டதாலேயே, அவருக்கு "கோயில் அண்ணன்" என்றும் பெயர் ஏற்பட்டது.

ராமானுஜர் வாழ்வில் நடந்த அற்புதமான சம்பவம் இது.

மதுரையில் உள்ள அழகரை காண ராமானுஜர் வந்தார் என்பதும்,
ஆண்டாள் பிரார்த்தனை கூட இந்த அழகரால் தான் நிறைவேறியது என்று பார்க்கும் போது, நம் பிரார்த்தனையும் கள்ளழகர் மூலம் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை.

நாமும் கள்ளழகரை தரிசிப்போம்.

Monday, 30 March 2020

பாசுரம் (அர்த்தம்) - பலபல நாழம் சொல்லி. பெரியாழ்வார் கள்ளழகர் (மதுரை) அழகர்மலையை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

கள்ளழகர் வீற்று இருக்கும் சோலைமலையை கொஞ்ச வேண்டும் என்று ஆவல் வந்து விட்டது, பெரியாழ்வாருக்கு.
"சோலைமலை" தான்  பெரியாழ்வாருக்கு முக்தி ஸ்தலம்.
பெரியாழ்வார் சோலைமலையையே கொஞ்சி பாடுகிறார்.


பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
அலங்காரன் மலை 
குலமலை
கோலமலை 
குளிர்மாமலை
கொற்றமலை
நிலமலை
நீண்டமலை 
திருமாலிருஞ்சோலையதே  
- பெரியாழ்வார் (திருமொழி)




"அலங்காரன் மலை (அழகர் மலை), குலமலை, கோலமலை, குளிர்மாமலை, கொற்றமலை, நிலமலை, நீண்டமலை
என்று திருமாலிருஞ்சோலையின் அழகை கொஞ்சி கொஞ்சி ரசிக்கிறார் பெரியாழ்வார்.
திருப்பதியில் உள்ள திருமலையை கூட ஆழ்வார்கள் இப்படி கொஞ்சியதாக தெரியவில்லை. 
ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார் வாத்சல்ய பாவம் கொண்டவர்.

இந்த வாத்சல்யம் சோலைமலையை பார்த்ததும் பெரியாழ்வாருக்கு ஏற்பட்டு, இப்படி ஆசை தீர கொஞ்சுகிறார்.

சிசுபாலனுக்கு நல்ல வார்த்தையே வாயில் வராதாம். 

சிலர் பேசும்போது, ஸ்தோத்திரம் செய்வது போல வெளியில் இருக்கும், ஆனால் கவனித்து பார்த்தால் உண்மையில் கிண்டல், கேலி இருக்கும்.

சிலர் பேசும்போது, வெளியில் திட்டுவது போல இருக்கும், ஆனால் உண்மையில் ஸ்தோத்திரம் செய்து இருப்பார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணன் சிறு பாலகனாக இருக்கும் போது வெண்ணை திருடி லீலை செய்தார். 
பக்தர்கள், "சோரன்" (திருடன்) என்று கிருஷ்ணனை சொல்வார்கள். வெளியில் திட்டுவது போல தெரியும்..
ஆனால், உண்மையில் அதீத கிருஷ்ண பிரேமையால், இப்படி ஸ்தோத்திரம் செய்வது புரியும்.

"நேரடியாக திட்டுவதோ, நேரடியாக கொஞ்சுவதோ நாகரீகம் இல்லை" என்று பண்புள்ளவர்கள் நினைப்பார்கள்.
"பிடிக்காதவர்கள் வந்தாலும், நேரடியாக திட்டுவது நாகரீகம் இல்லை"
என்று நினைப்பார்கள்.

இந்த சிசுபாலனோ, நாகரீகம் கொஞ்சமும் இல்லாதவன். 
உள்ளொன்று வெளியொன்று என்று இல்லாமல், பச்சையாக கிருஷ்ண பரமாத்மாவை திட்டுவானாம்.
 "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவானாம்.

நம்மாழ்வார் "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவான் என்கிறார்..

பீஷ்மர், விதுரர் போன்றோர் கண்ணன் "பரமாத்மா" என்று தெரிந்தவர்கள்
கண்ண பரமாத்மாவை யாராவது கேலி பேசினால் இவர்களுக்கு தாங்காது. 
பெருமாளிடம் பக்தி உள்ளவர்களுக்கு, பெருமாளை பற்றி அவதூறு பேசினால் தாங்காது.  இதுவும் இயற்க்கையான ஸ்வபாவம்.தான்.




ராஜசூய யாகத்தில், சிசுபாலன் கிருஷ்ணரை கண்டபடி சபையில் பேச ஆரம்பிக்க, விதுரர் கோபப்பட்டு சிசுபாலனை அதட்டினார். இது எதிர்பார்த்த ஒன்று தான்.  

நம்மாழ்வார், "அடியார் செவி சுடும் படி சிசுபாலன் பேசுவான்" என்று சொல்லி இருக்கலாம்.
மாறாக, "கேட்பார் செவி சுடும்" படி சிசுபாலன் பேசினான்" என்று சொல்கிறார்.

சிசுபாலன் கிருஷ்ணரை பச்சையாக திட்டுவதை கேட்டால், அடியார்களுக்கு மட்டும் செவி சுடும் படியாக இருக்காதாம்,
கிருஷ்ணரை கிண்டல் செய்ய சொல்லி கேட்டு ரசிக்கும் குணம் கொண்ட, கிருஷ்ணரை பிடிக்காத துரியோதனன், சகுனி போன்றவர்களுக்கே இவன் பேச்சை கேட்டால் "செவி சுடுமாம்".
சிசுபாலன் பேசுவதை கேட்பவன் அனைவருக்குமே செவி சுடும்படி கீழ்த்தரமான வசவுகளே பேசி அவமதிப்பானாம் சிசுபாலன்.

இவன் பேச்சை கேட்டு, ராஜசூய யாகத்தில் கிருஷ்ணரை தானே நிந்திக்கும் குணமுடைய துரியோதனனே எழுந்து "சிசுபாலா, இப்படி பேசாதே!!" என்று சொல்லும் அளவுக்கு கீழ்த்தரமாக பேசுவானாம் சிசுபாலன்.

அதன் காரணத்தாலேயே நம்மாழ்வார் 
"கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வெய்யும் ..சிசு பாலன்" 
என்கிறார்.
இப்படி பகவானை தான் பிறந்ததிலிருந்து பல முறை நிந்திப்பதே (பல பல நாழம்) தொழிலாக வைத்து இருந்த சிசுபாலனின் அற்பத்தனத்தையும் (அலவலைமை) தவிர்த்து விட்டு,
அவனுக்கு தன் அழகான ரூபத்தை காட்டி, அவன் பேசிய பேச்சுக்கு சக்கரத்தை விட்டு அவன் உயிரை பறிக்க, உயிர் பிரிந்த போது, சிசுபாலனின் ஆத்மஜோதி, சபையில் இருந்த அனைவருக்கும் தெரிய, கண்ணனின் பாதத்தில் சேர்ந்து விட்டது.




பிறகு ஒரு சமயம், தர்மபுத்திரர், நாரதரிடம் இது பற்றி கேட்கிறார்.
தர்மபுத்திரர், 
"என்ன அநியாயம் இது!! 
பகவத் பக்தி செய்பவனுக்கு மோக்ஷம் கிடைக்கலாம். 
இந்த சிசுபாலன் பிறந்ததில் இருந்து கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டே கிருஷ்ணரை இகழ்ந்து பேசுவான். அவனுக்கு போய், தன் திவ்ய தரிசனமும் கொடுத்து, நாங்கள் பார்க்க, அவன் ஜோதி கண்ணனின் பாதத்தில் சேர்ந்ததே!! 
மனிதர்கள் அநியாயம் செய்தாலே தவறு. 
இங்கு பகவான் அநியாயம் செய்கிறாரே! 
தன்னை நிந்தனை செய்தவனுக்கு போய் மோக்ஷம் கொடுத்துவிட்டாரே?"
என்று கேட்டார்.

"தன் அழகு பொருந்திய திவ்ய தரிசனம் சிசுபாலனுக்கு கிடைத்ததால், அந்த திவ்ய தரிசனத்தின் பலனாக மோக்ஷம் கொடுத்தார்"
என்று நாரதர் பதில் சொன்னார்.

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? என்று பெரியாழ்வார் மேலும் சொல்கிறார்.
சிசுபாலன் பேசிய பேச்சுக்கும் சக்கரத்துக்கு சரியாகி விட்டதாம்.
ஆனால், தன் அழகான தரிசனத்தை சிசுபாலனுக்கு காட்டி, அவன் மனத்திலும் உள்ளுக்குள்
"இத்தனை அழகான கிருஷ்ணனையா திட்டினோம்? அனாவசியமாக எதற்காக கிருஷ்ணனை திட்ட வேண்டும்?" 
என்று மனதுக்குள் நினைத்தானாம்.




தன் அழகால் சிசுபாபலன் போன்ற கீழ்த்தரமாக பேசுபவர்கள் நெஞ்சிலும், இடம் பிடித்து, அவன் தன்னை தரிசித்த பலனாக, சிசுபாலனுக்கும் மோக்ஷம் கொடுத்துவிட்டாராம். 

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? 
"அழகுக்கு உரிமையாளனான திருமாலிருஞ்சோலையில் இருக்கும் கள்ளழகரிடமிருந்து, இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்" 
என்று பெரியாழ்வார் கொஞ்சுகிறார்.!!

அதையே,
பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
என்று ரசிக்கிறார்.


இப்படி,
அழகே உருவான நம் கள்ளழகர், தன் அழகை மேலும் பிரகாசிக்க செய்வது போல, 'கிரீடம், வைஜயந்தி மாலை, பீதாம்பரம், கௌஸ்துபம்' என்று அலங்காரமும் செய்து கொண்டு (அலங்காரன்) சோலைமலையில் வீற்று இருக்க,
இந்த சோலைமலை எப்படி இருக்கிறது? என்று பார்த்த பெரியாழ்வார்மலையை வர்ணிக்கிறார்.

"அனைவருக்கும் குல தெய்வமாக (குலமலை), 
அழகு மலையாக (கோலமலை), 
குளிர்மாமலை, 
தனக்கு அபிமானத்துக்கு பாத்திரமான பக்தனுக்கு  ஸம்ஸாரம் துக்கம், வாசனைகள் புகாதபடி செய்து, வெற்றியை கொடுக்கும்  மலையாக (கொற்றமலை), 
நல்ல மரங்கள் முளைக்கும் நிலத்தையுடைய மலையாக (நிலமலை), 
நீண்டமலையாக இருக்கும் திருமாலிருஞ்சோலையில் நம் கள்ளழகர் வீற்று இருக்கிறார்" 
என்று மலையை கொஞ்சி வர்ணிக்கிறார்.

தெய்வத்தை தவேஷிக்கும் சிசுபாலன் போன்ற கீழ்தரமானவர்கள் கூட அர்ச்ச ரூபத்தில் இருக்கும் கள்ளழகரை தன் ஊன கண்களால் பார்த்தால் கூட, மனம் மாறி விடுவான். 
"அழகர் என் குலதெய்வம்" என்று சொல்ல ஆரம்பித்து விடுவான்.

சிசுபாலன் போன்றவர்களுக்கு கூட மோக்ஷத்தை தன்னை தரிசனத்தின் பலனாக கொடுத்து விடும் பெருமாள், மதுரையில் அழகர்கோவில் இருக்கிறார்.

"அழகரை தரிசித்தாலே மோக்ஷம்" என்பதால்,
பேரழகு உடையவர் என்பதால்,
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி, பிறகு மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்கும் காட்சியை பார்ப்பதற்காகவே, 5 லட்சம் மக்கள் சித்ரா பௌர்ணமி அன்று கூடி விடுகிறார்கள்.

அனைவரும் அழகரை கண்களால் தரிசிப்போம்.
நாம் அனைவரையும் கள்ளழகரை, அவர் வீற்றுஇருக்கும் அழகர்மலையை காண அழைக்கிறார்.


பாசுரம் (அர்த்தம்) - முடிச்சோதியாய் உனது முகச்சோதி - நம்மாழ்வார் கள்ளழகர் (மதுரை) சுந்தரராஜ பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

நம்மாழ்வார் (திருவாய்மொழி) நம் கள்ளழகரை மங்களாசாசனம் செய்து பாடுகிறார்.

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? 
திருமாலே கட்டுரையே
-  நம்மாழ்வார் (திருவாய்மொழி)
அர்ச்சா திருமேனியுடன் தான் கள்ளழகர் இருக்கிறார்.
இருந்தாலும்,
பரமபதத்தில் அப்ராக்ருத (Beyond Nature) திவ்ய மங்கள வடிவை கொண்ட பரவாசுதேவன் எப்படி இருப்பாரோ, அது போலவே இருக்கிறார் கள்ளழகர்.

கள்ளழகரை பார்க்கும் போது, இவர் அர்ச்சா திருமேனி  என்று தோன்றவே தோன்றாது.




இவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டு இருக்கிறார்?
என்றே சொல்ல முடியாத படி, தனித்து இருக்கிறார்.
இன்றைக்கு சென்று, நம் ஊன கண்ணால் பார்த்தாலும் இந்த அதிசயத்தை நாம் உணரலாம்.

எந்த கோவிலுக்கு சென்று போய் பார்த்தாலும், கள்ளழகருக்கு உள்ள அந்த அழகு, பொலிவு வேறு எங்கும் பார்க்க முடியாது.

திருமஞ்சனம் செய்யட்டும், செய்யாமாலே இருக்கட்டும், இவர் திருமேனி மட்டும் தக தக வென்று அப்படி ஒரு பொலிவுடன் இருக்கும்.
நம்மாழ்வார் ஹ்ருதயத்தில் அத்தகைய பொலிவுடன் கள்ளழகர் காட்சி தர, அந்த பொலிவை வர்ணிக்கிறார்.

தக தக வென ஜொலிக்கும் பெருமாளின் "கன்னத்தில் (முக) வெளிப்பட்ட பொலிவு (ஜோதி) தான் கிரீடமாக (முடிச்சோதி) இருக்கிறதோ?"
என்று பார்த்து பிரமிக்கிறார் நம்மாழ்வார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்கிறார்.

தங்க ஆபரணங்களை தனியாக பார்க்கும் போது ஜொலி ஜொலிக்குமாம்.
அதே தங்க ஆபரணங்களை கள்ளழகர் அணிந்துகொண்டு விட்டால், இவருடைய மேனி பொலிவுக்கு முன், தங்க நகைகள் பொலிவு இல்லாதது போல தெரியுமாம். 
இந்த அனுபவத்தை இன்று கள்ளழகரை சென்று பார்த்தால் கூட நாமும் அனுபவிக்க முடியும். 




கள்ளழகர் கன்னத்தை பார்த்தால், எதிரே நிற்பவர்களின் பிம்பம் தெரியுமாம். 
அத்தனை பொலிவு உடைய கள்ளழகரின் பொலிவை கண்டு மயங்கி, 
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்று நம்மாழ்வார் ஆச்சர்யப்பட்டு கேட்கிறார்.

பெருமாளின் முகப்பொலிவை கண்ட பிரமித்த நம்மாழ்வார், "சரி திருவடியை பார்ப்போம்" என்று கவனிக்க,
கள்ளழகரின் திருவடியின் அடிப்பகுதி சிவந்து பெரும் பொலிவை தர,
அந்த "திருவடி பொலிவுதான் சிவந்த தாமரையாக மலர்ந்து இருக்கிறதோ?" என்று கேட்கிறார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,  
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
என்கிறார்.




பெருமாள் இடுப்பில் பீதாம்பரம் அணிந்து இருந்தாலும், அந்த வஸ்திரத்தையும் மீறிக்கொண்டு, அவர் திருதொடையின் பொலிவு, பீதாம்பரத்துக்கும் மேல் பிரகாசிக்குமாம்.

இப்படி அடி முதல் முடி வரை தங்கம் போல (பைம்பொன்) தக தகவென ஜொலிக்கும் அழகரை கண்டு பிரம்பிக்கிறார் நம்மாழ்வார்.

இதையே

படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் 
நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ
என்கிறார்.

எப்பொழுதுமே தங்கம் போல ஜொலிக்கும் கள்ளழகர் .
ஒரே ஒரு சமயம் மட்டும், பச்சை திருமேனியாக ஆகி விடுகிறார்.

கள்ளழகர் ஒரு சமயம் மலை மீது ஏறி, நூபுர கங்கைக்கு செல்வார்.
இந்த மலையோ பச்சை பசேல் என்று சோலையாக இருக்கும். 

போகும் வழியில், இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று இருப்பதால், அந்த சாயம் இவர் கன்னத்தில் பிரதிபலித்து, பெருமாளே பச்சை வர்ணமாக காட்சி தருவார்.
அங்கு மட்டும் கள்ளழகர் பச்சை வண்ண பெருமாளாக இருப்பார்.
மற்ற சமயங்களில் எல்லாம், பெருமாள் மணிவண்ணனாகவே இருப்பார்.

இப்படி பெருமாளின் பொலிவை கண்டு ஆனந்தப்படுகிறார் நம்மாழ்வார்.