Followers

Search Here...

Showing posts with label கலியன். Show all posts
Showing posts with label கலியன். Show all posts

Sunday, 30 January 2022

தாண்டகம் என்றால் என்ன? கலியன் என்றால் என்ன? திருமங்கையாழ்வார் பாடிய முதல் பாசுரம் எது? அறிந்து கொள்வோம்.

வடமொழியில் "தண்டகம்" என்ற ஒரு வகையான பாடும் (ஸ்தோத்திர) முறை உண்டு. 

அம்பாள் மேல் ஸ்யாமளா தண்டகம், மஹாலக்ஷ்மி மேல் கோமளா தண்டகம் என்று தண்டகங்கள் உள்ளன.


"தண்டவத் ப்ரணாமம்" என்ற சொல்லே "தண்டம் சமர்ப்பிக்கிறேன்' என்று தமிழில் சொல்லப்படுகிறது.


"தண்டகம்" என்ற வடசொல்லையே "தாண்டகம்" என்றும் "தண்டம்" என்றும் சொல்கிறோம்.


வைஷ்ணவர்கள் பெரியோர்களுக்கு கடிதம் எழுதும் போது, 'நமஸ்கரிக்கிறேன்' என்று எழுதாமல் "தேவரீர் திருவடியில் தண்டம் சமர்ப்பிக்கிறேன்" என்று எழுதுவார்கள்.


தண்டகம் என்றால் மரக்கட்டை என்று அர்த்தம்.

தன்னை ஒரு மரக்கட்டையாக பாவித்து, பெரியவர்கள் காலில் விழுவதால், "தண்டம் சமர்ப்பிக்கிறேன்"  என்று சொல்வார்கள்.

சந்யாசிகளும் தங்கள் கைகளில் "தண்டம்" வைத்து கொண்டிருகிறார்கள். 


ஸ்ரீமத் பாகவதத்தில், அக்ரூரர், பகவான் அவதாரம் செய்து இருக்கிறார் என்று அறிந்ததால், ஆர்வத்தோடு பிருந்தாவனம் வந்த போது, பலராமரோடு கிருஷ்ணரை பார்த்தபோது, மரக்கட்டை போல இருவருடைய கால்களிலும் விழுந்து விட்டார்.

रथात् तूर्णम् अवप्लुत्य स:

अक्रूर: स्‍नेह विह्वल: ।

पपात चरण उपान्ते

दण्डवद् राम-कृष्णयो: ॥

திருமங்கையாழ்வார் திருகுறுந்தாண்டாகம், திருநெடுந்தாண்டாகம் இயற்றி,  பெருமாளின் திருவடியில் தன்னையே தண்டம் போல சமர்பிக்கிறார். 


'நீலன்' என்ற பெயர் கொண்ட இவர், திருவாலி என்ற தேசத்தை சிற்றரசனாக ஆட்சி செய்து வந்தார்.

ஒரு சமயம், குமுதவல்லி என்ற பெண்ணை கண்டு மணந்து கொள்ள ஆசைப்பட்டார்.


அந்த பெண்ணோ, இவர் சம்ஸ்காரம் செய்து கொண்டு வைஷ்ணவனாக ஆக வேண்டும், தினமும் 1000 வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தாள்.

இதை ஏற்று கொண்ட மணந்து கொண்ட திருமங்கை மன்னன், திருநரையூர் எம்பெருமானிடம் வைஷ்ணவனாக சம்ஸ்காரம் பெற்றார்.


பூம்புகார் செல்லும் வழியில், திருமங்கைமடம் என்ற இடத்தில், தினமும் 1000 வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்து வந்த இவர், சொத்தையெல்லாம் இழந்து விட்டார்.


இருந்தாலும் அன்னதானம் செய்வதில் பெரும் ஆர்வம் கொண்டார். 

"அன்னதானம் எந்த காரணம் கொண்டும் நிற்க கூடாது" என்று நினைத்தார்.


ஒரு நிலையில், "கொள்ளை அடித்தாவது அன்னதானம் செய்தே ஆக வேண்டும்" என்று இறங்கி விட்டார். 


இவரை ஆட்கொள்ள நினைத்த வயலாலி மணவாளன், தானே பிராம்மண பையனாக, தாயாரோடு, புது மண தம்பதிகளாக நகைகளை அணிந்து கொண்டு, இவர் சஞ்சரிக்கும் இடமான வேதராஜபுரத்திற்கு வந்தார்கள். 

இவர்கள் அணிந்து இருக்கும் நகைகளை பார்த்த திருமங்கை மன்னன், இவர்களை வழிமறித்து, அனைத்து நகைகளையும் கழட்ட சொல்லி மிரட்டி, ஒரு பெரிய மூட்டையாக கட்டி கொண்டார்.


மிகவும் பலசாலியான இவரால், தான் கட்டிய நகை மூட்டையை தூக்க முடியவில்லை.


அருகில் நின்று கொண்டிருந்த இந்த பிராம்மணன் சிரிக்க, 'இவர் ஏதோ மந்திரம் சொல்லி, இந்த மாயம் செய்கிறார்' என்று நினைத்தார் பரகாலன்.


எவ்வளவு முறை முயன்றும், மூட்டையை தூக்க முடியாமல் போக, உடனே கோபத்தோடு, வாளை உருவி, "ப்ராம்மணரே! நீர் ஏதோ மந்திரம் ஜெபித்து தான் இந்த மாயாஜாலம் செய்கிறீர்கள் என்று அறிகிறேன். உங்களை பார்த்தால், இப்பொழுது தான் மணமாகி இருக்கிறது என்று தெரிகிறது.

இந்த நிலையில் உங்கள் நகைகளை எடுத்து கொள்ள நான் விரும்பவில்லை. சீதனமாக நானே தருகிறேன் எடுத்து கொண்டு செல்லும். ஆனால், நீர் எந்த மந்திரத்தை சொல்லி இந்த மாயம் செய்தீரோ அந்த மந்திரத்தை எனக்கு சொல்லி கொடுத்து விட்டு, பிறகு எடுத்து கொள்ளும்" என்றார்.


அந்த பிராம்மணனோ, "நகையும் உனக்கு கிடையாது. மந்திரமும் கிடையாது" என்றார்.

உடனே வாள் எடுத்து மிரட்டினார். மசியவில்லை அந்த பிராம்மணன்.


மரியாதையோடு, சேவை புத்தியோடு பிறகு கேட்க, ப்ராம்மணனாக வந்த வயலாலி மணவாளன், அவருக்கு திருவஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார். 

இப்படி பெருமாளே, பரகாலனை தடுத்தாட்கொண்டதும், தன் நிஜ ஸ்வரூபம் என்ன? என்று ரகசியத்தை அறிந்து கொண்டார். 

உடனே, 'வாடினேன் வாடி வருந்தினேன்..."என்று முதல் பாசுரத்தை பாட ஆரம்பிக்கிறார்.

முதல் பாசுரத்தை முடிக்கும் போது, திருமங்கையாழ்வார், "கண்டு கொண்டேன் நாராயணன் என்னும் நாமம்' என்று பாடுகிறார். 

திருமங்கையாழ்வார் முதன்முதலாக 'பெரிய திருமொழி' தான் பாடினார் என்பது 'கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமத்தை' என்ற வாக்கியத்தை கொண்டே அறிய முடிகிறது.

வாடினேன் 

வாடி வருந்தினேன் 

மனத்தால்

பெருந்துயர் இடும்பையில் பிறந்து

கூடினேன் 

கூடி இளையவர் தம்மோடு

அவர் தரும் கலவியே கருதி ஓடினேன்

ஓடி உய்வதோர் பொருளால்

உணர்வெனும் பெரும் பதம் திரிந்து நாடினேன் 

நாடி நான் கண்டுகொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.

- பெரிய திருமொழி.


'சம்சார சக்கரத்தில் உழன்று, சிற்றின்பத்தில் விழுந்திருந்த நான், உய்வதற்கு பெரும் பதம் எங்கு கிடைக்கும் என்று தேடி திரிந்தேன். வயலாலி மணவாளா! உங்கள் கருணையால் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமத்தை' என்று சொல்லி முதல் பாசுரத்தை பாடுகிறார்.

வயலாலி மணவாளனை சாக்ஷாத்காரம் செய்த திருமங்கையாழ்வார், தொடர்ந்து 1000 பாசுரங்கள் பாடினார். நமக்கு பெரிய திருமொழி கிடைத்தது.

கடைசியில், 'இந்த சம்சார உலகத்தில் நான் உழன்றது போதும். பெரிய திருமொழி பாடவே இந்த உலகத்தில் வந்தேன் என்று அறிகிறேன். பதரியில் இருந்து திருபுல்லாணி வரை ஒவ்வொரு திவ்ய தேசமும் கால் நெடுக நடந்து சென்று, மங்களாசாசனம் செய்தேன். திருவரங்கம் போன்ற திவ்ய தேசங்களில் கைங்கர்யமும் செய்து விட்டேன். இனி இந்த சம்சாரத்தில் இருக்க மாட்டேன். வந்த காரியம் முடிந்து விட்டது. எனக்கு வைகுண்டம் கொடுங்கள். என்னை உங்கள் திருவடியில் அழைத்து கொள்ளுங்கள்' என்று பெரிய திருமொழி முடிக்கும் போது கதறி விண்ணப்பம் செய்கிறார்.

முசுகுந்த சக்கரவர்த்தி போன்றோர், பெருமாளிடம் வைகுண்டம் கேட்டும், 'கர்மா இன்னும் தீரவில்லை, இன்னும் 2 யுகம் கழித்து துவாபர யுகத்தில் தான் வைகுண்டம்' என்று சொல்லி விட்டார். 

அதேபோல, பரத யோகீஸ்வரர், பெருமாளிடம் வைகுண்டம் கேட்டும், கர்மாவினால், மானாக பிறந்து, பிறகு ஜடபரதராக பிறந்து,  2 ஜென்மங்கள் கழித்து தான் வைகுண்டம் சென்றார். 


வைகுண்டத்தில் இருக்கும் நித்ய சூரிகளே, 12 ஆழ்வார்களாக அவதரித்தனர். 

கர்மாவுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆழ்வார்கள். அவதார புருஷர்கள்.

இப்படி ஆழ்வார் பெரிய திருமொழி முடிக்கும் போது வைகுண்டம் கேட்டு கதறியும், எம்பெருமானோ, 'அஜாமிளன் என்றால், உடனே பரமபதம் கொடுத்து விடலாம்.

இன்னும் கொஞ்ச நாள் இவர் பூலோகத்தில் இருந்தால், தனக்கு மேலும் சில பிரபந்தம் கிடைக்குமே! மேலும் இவர் பாடுவாரே! இவர் பாடுவது நன்றாக இருக்கிறதே! அதை கேட்டு ஆனந்தபடலாமே" என்று திருவுள்ளம் கொண்டார். 

திருமங்கையாழ்வாருக்கு உடனே பரமபதம் கொடுக்க தயங்கினார் பெருமாள். 

'இன்னும் கர்மா பாக்கி உள்ளது. இப்பொழுது பரமபதம் கிடையாது' என்று முசுகுந்தன், பரத யோகிக்கு சொன்னது போல, ஆழ்வாரிடம் சொல்ல முடியாது,

இனி இவர் இந்த உலகத்தில் ஜீவிக்க வேண்டுமென்றால், இவருக்கு பகவத் அனுபவமே ஆதாரம். 

திருமங்கையாழ்வார் இப்படி ஆர்த்தியோடு வைகுண்டம் கேட்டும், பரமபதம் கொடுக்க தயங்கிய பெருமாள், இவரை மேலும் சில காலம் பூலோகத்தில் இருக்க வைக்க, தானே அவருக்கு சில திவ்யகாட்சிகளை, சில அனுபவங்களை கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். 

இப்படி பெருமாளால் கிடைக்கப்பெற்ற காட்சிகளாலும், அனுபவங்களாலும் உகந்திருந்த திருமங்கையாழ்வார், தொடர்ந்து, திருகுருந்தாண்டாகம், திருநெடுந்தாண்டாகம் என்று பாட ஆரம்பிக்கிறார்.

ஆழ்வாருக்கு ஏற்பட்ட இந்த திவ்ய அனுபவங்களே, அடுத்து அவர் இயற்றிய, திருகுறுந்தாண்டாகம், திருநெடுந்தாண்டாகம், மேலும் திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் போன்ற பாசுரங்களில் காண்கிறோம். 


தானே நாயகியாக ஆகி, விரகத்தில் அழுவதும், சிரிப்பதும், ப்ரணய கோபம் அடைவதும்,

நாயகியான தன் நிலையை கண்டு, தனக்கு பரிந்து கொண்டு தாய் வருந்தி பெருமாளிடம் சொல்லி அழுவதுமாக, பெருமாள் இவருக்கு கொடுத்த அனுபவங்களை பாசுரங்களாக அள்ளி கொடுத்து விட்டார்.