Followers

Search Here...

Showing posts with label ஓம் ஸுவ. Show all posts
Showing posts with label ஓம் ஸுவ. Show all posts

Friday, 19 June 2020

பிராணாயாமம் - ஓம் பூ:, ஓம் புவ:, ஓம் ஸுவ: என்று ஏன் சொல்கிறோம்? 7 பாதாள லோகங்களை சொல்வதில்லையே... ஏன்?

பூலோகத்துக்கு (பூ:) கீழே, 7 பாதாள லோகங்கள் உள்ளது.
பலி சக்கரவர்த்தி பூலோகம் முதல் பிரம்ம லோகம் (ஸ்த்ய லோகம்) வரை பிடித்து விட்டார்.
பலி சக்கரவர்த்தியிடம் வாமன அவதாரம் செய்து தானமாக வாங்கி தேவர்களை, மனிதர்களை, ரிஷிகளை வாழ வைத்தார் பரவாசுதேவன்.


7 பாதாள லோகங்களில் ஒன்றான "சுதலம்" என்ற லோகத்தில், பலி சக்கரவர்த்தியை இருக்க சொல்லி, அவனுக்கு காவலனாக தானே "கதாதரனாக" நிற்கிறார்.
"அடுத்த தேவ இந்திரன் பலி சக்கரவர்த்தி" என்றும் ஆசிர்வதித்து விட்டார்.

இனி,
பிராணாயாமம் சொல்லும் போதும், 
காயத்ரி மந்திரம் சொல்லும் போதும், 
இந்த பாதாள லோகங்களை சொல்வதில்லை. இது ஏன்?

மாறாக,
"ஓம் பூ, ஓம் புவ, ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓஹும் சத்யம்"
என்று நமக்கு மேல் இருக்கும் லோகங்களை சொல்கிறோம்.
பூலோகத்தில் (ஓம் பூ:) இருக்கும் நாம், நம்முடைய புண்ணியங்களை உயர்த்தி உயர்த்தி, 

  • பித்ருக்கள் உள்ள லோகமான புவர் லோகத்துக்கும்
  • தேவர்கள் உள்ள சொர்க்க லோகத்துக்கும்
  • துருவனை போன்றோர் நக்ஷத்திரமாக இருக்கும் மகர லோகத்துக்கும்
  • ரிஷிகள், யோகிகள், முனிகள் வாழும் ஜன மற்றும் தப லோகத்துக்கும்
  • பிரம்ம தேவன் வசிக்கும் சத்ய லோகத்துக்கும் 

செல்ல ஆசைப்பட வேண்டுமே தவிர, கீழ்த்தரமான வாழ்க்கை வாழ்ந்து,
'பாதாள லோகங்களுக்கு சென்று விட கூடாது' என்று நம்மை நிதானப்படுத்துகிறது.




சத்ய லோகத்துக்கும் காரணமான வைகுண்ட நாதனை அடைய ஆசைப்படும் புண்ணிய ஆத்மாக்கள், பிரம்ம தேவன் படைத்த இந்த 14 உலகங்களையும் விட்டு விட்டு, வைகுண்டம் என்ற பரமபதம் அடைந்து விடுகிறான்.

புண்ணியங்கள் செய்து, 
ஜீவ ஹிம்சை செய்யாமல், 
ஜீவ ஹிம்சையான உணவு உண்ணாமல், 
மற்றவர்களுக்கு உபயோகமாக வாழ்ந்து, 
தெய்வத்திடம் பக்தி கொண்டு மனிதன் வாழ வேண்டும் 
என்று வழிகாட்டுகிறது இந்த மந்திரங்கள்..
"ஓம் பூ, ஓம் புவ, ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓஹும் சத்யம்"
என்று சொல்லும் போதே, நாம் செல்ல வேண்டிய பாதை என்ன? என்று காட்டுகிறது..

இந்த அனுபவத்துடன் பிராணாயாமம் செய்வோம். ஆத்மாவை உயர்த்துவோம்..