Followers

Search Here...

Showing posts with label இன்பத்தை. Show all posts
Showing posts with label இன்பத்தை. Show all posts

Thursday, 20 June 2019

இன்பத்தை தரும் கடவுள், எதற்காக துன்பங்களையும் தருகிறார்? ஒரு அலசல்...

திருநாங்கூரிலிருந்து கிழக்கே 2km தொலைவில் அமைந்துள்ளது - "திருமணிக்கூடம்" என்ற திவ்ய தேசம்.
திருநாங்கூரில் உள்ள 11 திருப்பதிகளுள், இக்கோயிலும் ஒன்று.


இங்கு நாம் அனைவரும்  தரிசிப்பதற்காக வீற்றிருக்கிறார் "கஜேந்திரவரதன்" என்ற "வரதராஜ பெருமாள்".

இந்த பெருமாளை பார்த்து, திருமங்கையாழ்வார்,
பாவமும், அறமும், வீடும்,
இன்பமும், துன்பந் தானும்,
கோவமும், அருளும்,
அல்லாக் குணங்களுமாய எந்தை,
மூவரில், எங்கள் மூர்த்தி இவன் என
முனிவரோடு, தேவரும் வந்து இறைஞ்சும்
நாங்கூர்த் திருமணிக்கூடத்தனே
---- என்று மங்களாசாசனம் செய்து பாடுகிறார்.
(பெரிய திருமொழியில் இந்த பாசுரம் உள்ளது)

இங்கு "மூவர்" என்று சொல்லுமிடத்தில் 'ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன்' என்ற மும் மூர்த்திகளையும் குறிப்பிட்டு,
அந்த மூவரில் நடுநாயகனாக (prime hero) இருக்கும் விஷ்ணுவே, இங்கு திருமணிக்கூடத்தில் வரதராஜனாக இருக்கிறார் என்பதால்,
தன்னை போன்ற அடியார்களும், முனிவர்களும், தேவர்களும் வந்து வந்து  சேவிக்கிறார்கள் என்று பாடுகிறார் திருமங்கையாழ்வார்.
மேலும், வரதராஜ பெருமாளை பார்த்து
"எல்லா குணங்களுமாக பெருமாளே இருக்கிறார்"
என்று திருமங்கையாழ்வார் சொல்வதை, ஆழ்ந்து கவனிக்கும் போது தான், அவர் பக்தன் மட்டுமில்லாது, வைராக்கியம் உள்ள ஞானி என்றும் தெரிகிறது.
அற்புதமான பிரபந்தம் இது.
புரிந்து கொள்வதும் எளிது.
இது போன்ற பாசுரங்கள் மனப்பாடம் செய்யவும் எளிதானது. தமிழும் வாழும்.

நாமும் திருமணிக்கூடம் செல்லும் பாக்கியம் பெற்றால், பெருமாள் முன் சென்று நிற்கும் போது, என்ன சொல்வதென்றே தெரியாமல்!! இருப்பதற்கு பதில்,  திருமங்கையாழ்வார் பாடிய, இந்த பிரபந்தத்தை நாமும் சொல்லி சேவிக்கலாம்.


ஆழ்வார் பாடிய பாடலை நாமும் சொல்லும் போது, 
நம்மை கண்டு பெருமாளும் சந்தோஷப்படுவார். 
நமக்கும் ஞானத்தை தருவார். 
சகல பாக்கியங்களும் கிடைக்க, நமக்கும் அணுகிரஹம் செய்து விடுவார்.

வரதராஜனை பார்த்து, திருமங்கையாழ்வார்
"நமக்கு ஏற்படும் பாவமும், அறமும், வீடும் (மோக்ஷமும்), இன்பமும், துன்பமும்,
கோபமும், அருளும், மற்றும் அனைத்து குணங்களும் வரதராஜனே" என்று ஆச்சர்யமாக பாடுகிறார்.

"புண்ணியமும் நீயே, வீடும் நீயே,
அருளும் நீயே, இன்பமும் நீயே"
என்று பகவானை பார்த்து சொன்னால் ஒரு நியாயம் தெரிகிறது....
"பகவான் நமக்கு நல்ல குணங்களை கொடுக்கிறார்" என்று சொன்னால், அதில் ஒரு நியாயம் உள்ளது...

அது என்ன?
திருமங்கையாழ்வார் துணிந்து "பாவமும் நீயே, துன்பமும் நீயே"  என்று சொல்லிவிட்டார்?
அது மட்டுமா!!
"எல்லாக் குணங்களும் நீயே" என்று 'அனைத்து குணங்களுக்கும் காரணம் வரதராஜனே' என்று சொல்லிவிட்டாரே?

பாவ செயல்களை, நம் புத்தியை கொண்டு தான் செய்கிறோம்.
செய்த தவறான செயல்களுக்கு (கர்மா) பலனாக, துன்பம் நமக்கு கிடைக்கிறது.
இப்படி இருக்க,
நாம் செய்யும் பாவத்தையும், அனுபவிக்கும் துன்பத்தையும் கூட பகவான் செயல் என்று சொல்லிவிட்டாரே..திருமங்கையாழ்வார்??

அது எப்படி நியாயம் ஆகும்? என்று நமக்கு தோன்றலாம்.

"பாவமும் பகவான் கொடுத்தது தான்" என்று திருமங்கையாழ்வார் சொல்வது, துரியோதனன் ஒரு சமயத்தில் சொன்னது போல இருக்கிறதே? என்று கூட நமக்கு தோன்றலாம்.
மகாபாரத சமயத்தில், பெரிய போர் சம்பவித்து விடும் என்ற நிலையில்,
துரியோதனனை பார்க்க ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களுக்காக தூது வந்தார்.

சபையில் இருந்த அனைவரும், துரியோதனனை பார்த்து,
"துரியோதனா... வந்திருப்பது பரமாத்மா..
ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வதை கேள்" என்று புத்திமதி சொல்லியும்,
"குறைந்த பட்சம் 5 கிராமமாவது தானமாக பாண்டவர்களுக்கு கொடு. போர் ஏற்படாமல் தடுத்து விடலாம்"
என்று ஸ்ரீ கிருஷ்ணரே கேட்டும் கூட,
"ஒரு குண்டூசி குத்தும் இடம் கூட பாண்டவர்களுக்கு தர மாட்டேன்.
'பாண்டவர்களுக்கு கொடுக்க கூடாது' என்று இந்த புத்தியை கொடுத்ததும் உங்கள் பரமாத்மா கிருஷ்ணன் தான்"
என்று பதிலுக்கு சாமர்த்தியமாக பேசி, முடிவாக மறுத்தான் துரியோதனன்.


திருமங்கையாழ்வார் "பாவமும் இறைவனே" என்று சொன்னது போலவே,
துரியோதனன் 'தான் செய்யும் பாவ காரியத்துக்கு காரணம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தான்" என்று சாமர்த்தியமாக சொல்ல,
"இவன் உண்மையில் ஞானியாக பேசுகிறானா? இல்லை திமிர் பிடித்து பேசுகிறானா?"
என்று அங்கிருந்த ரிஷிகளே திகைத்தனர்.
ஸ்ரீ கிருஷ்ணர் சிரித்து கொண்டே, "போரில் சந்திக்கலாம்" என்று சபையை விட்டு கிளம்பினார்.

துரியோதனன் "பாண்டவர்களுக்கு கொடுக்க முடியாது" என்று 'சுயமாக' முடிவு செய்து விட்டு,
தான் தெரிந்தே செய்யும் பாவ செயலுக்கு, "இறைவன் பெயரால்" என்று தனக்கு சாதகமாக பேசி,
அங்கு இருந்த அனைவரையும் எதிர்க்கவும் முடியாமல் செய்தான்.

"எல்லாம் ஈசன் செயல்" என்று ஞானிகள், மகாத்மாக்கள் சொல்லும் வார்த்தையை,
துரியோதனன் போன்ற துர்புத்தி உள்ளவர்கள், தாங்கள் செய்யும் பாப செயல்களுக்கு மட்டும் "எல்லாம் ஈசன் செயல்" என்று சாமர்த்தியமாக பேசி ஏமாற்றுவார்கள்.
"இறைவன் பெயரால்' என்று சொல்லிக்கொண்டு, தான் செய்யும் பாவ செயல்களுக்கு இறைவனை இழுக்கும், துரியோதனனை போன்றவர்கள்  எப்பொழுதுமே உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவர்கள் துரியோதனன் போலவே அழிவார்கள்.

"இறைவன் பெயரால்" என்று சொல்லி, துரியோதனன் போன்ற செயல்கள் செய்பவர்களின்  சுற்றத்தை முதலில் அடியோடு அழித்து,
கடைசியில் "இறைவன் பெயரால்" என்று சொல்லி பாவ காரியங்கள் செய்பவனையும், "தெய்வமே அழிக்கும்" என்பது தான் துரியோதனன் வாழ்வில் நடந்த உண்மை.

ஆழ்வார் சொன்ன படி "பாவமும் ஈசன் செயல் தான், புண்ணியமும் ஈசன் செயல் தான்". இது உண்மைதான்.

ஆனால் இதை உண்மையான ஞானிகள் சொன்னால், 'அதில் உண்மை இருக்கிறது' என்பது நமக்கு கூட புரியும்.
அதே சமயத்தில்,
துரியோதனன் போன்ற மூடர்கள், அசுர கூட்டம் சொல்லும் போது, 'அதில் சுயநலம் இருக்கிறது' என்பது நமக்கு கூட புரியும்.

ஞானிகள் "பாவமும் ஈசன் செயல் தான், புண்ணியமும் ஈசன் செயல் தான்" என்று வாழ்வில் நிரூபித்து காட்டுகிறார்கள்.

ஜடபரதர் என்ற யோகியை, உட்காரவைத்து சந்தனம் இட்டு, புதிதாக துணிகள் கொடுத்து
, அவருக்கு கட்டி விட்டு, மாலைகள் போட்டு, ராஜா உபசாரம் செய்து பூஜை செய்தார்கள்.
"எல்லாம் பகவான் செயல்" என்று வரும் சுகத்தை ஏற்றுக்கொண்டார்.
அலங்காரம் முடிந்ததும்,
ஜடபரதரை கூட்டி கொண்டு போய், பலிபீடத்துக்கு அருகில் நிறுத்தி, பெரிய வாளுடன் ஆவேசம் வந்தது போல, ஒருவன் ஓடி வந்து இவரை வெட்ட வர, 
ஜடபரதர் அப்பொழுதும்
"எல்லாம் பகவான் செயல்" என்று வரும் ஆபத்தையும் ஏற்றுக்கொண்டார்.





"வாளும். எம்பெருமான் தான்,
வெட்ட வருபவனும். எம்பெருமான் தான்,
தன் கழுத்தில் போட்ட பூ மாலையும். எம்பெருமான் தான்,
தனக்கு ஏற்பட்ட சுகமும். எம்பெருமான் தான்,
தனக்கு ஏற்படும் துக்கமும். எம்பெருமான் தான்"
ன்று இருந்தார் ஜடபரதர்.
ஜடபரதர் தன்னை கொல்ல வருபவனையும் தடுக்கவில்லை.
ஆனால், தெய்வம் சும்மா இருக்குமா?
ஒரு ஞானியை "காளியின் பெயரால்" என்று சொல்லிக்கொண்டு, கொலை செய்ய வந்தவர்களை பார்த்து காளி தேவி கோபம் கொண்டாள்.
மகாகாளி மகா கோபம் கொண்டு, தன் பெயரால் நடக்கும் இந்த காரியத்தை பொறுக்க முடியாமல் ப்ரத்யக்ஷமாகி, அங்கு இருந்த அனைவரையும் வெட்டி சாய்த்தாள்.

ஜடபரதர் போன்ற ஞான வைராக்ய நிலையில் உள்ளவர்கள், திருமங்கையாழ்வார் பாடிய இந்த பிரபந்தத்தை பாடினால், அவர்களுக்கு தான் இதன் பூரணமான அர்த்தம் புரியும்.

துரியோதனன் போன்றவர்கள், சூதாடி ஏமாற்றி பாண்டவர்களின் சொத்தை பிடுங்கிய போது, "இது என் சாமர்த்தியம்" என்று சொல்லிக்கொண்டான்.

தனக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் போதெல்லாம் "தன் முயற்சி, தன் செயல், தன் சாமர்த்தியம்" என்று சொல்லி,
தனக்கு விபரீதமான விஷயங்கள் நடக்கும் போது மட்டும், இறைவன் மீது பழி போட்டான் துரியோதனன்.

துரியோதனன் போன்றவர்கள் அவனை போலவே அழிவார்கள்.

"பாண்டவர் சொத்தை திருப்பி கொடு" என்று கேட்ட பொழுது, 'கொடுக்க முடியாது' என்று தானே சுயமாக முடிவு செய்து விட்டு,
"நான் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஈசன் ஆசைப்படுகிறார்" என்று அப்பொழுது மட்டும் "ஈசன் செயல்" என்று சொல்லி, ஏமாற்றினான் துரியோதனன்.

துரியோதனனை போன்று பேசுபவர்கள், தன் சக மனிதர்களை வேண்டுமானால் ஏமாற்றி விடலாம்.
ஆனால், தெய்வம் மன்னிக்காது. 

ஜடபரதர், ஆழ்வார் போன்ற ஞானிகள் "தன் வாழ்வில் சம்பவிக்கும் இன்பத்தையும், துன்பத்தையும் பகவான் இஷ்டம்" என்று சொல்லும் போது, அவர்களின் ஞான நிலையை கண்டு, பகவான் அவர்களுக்கு கருணை செய்கிறார். மோக்ஷத்தையே கொடுக்கிறார்.

இன்பத்தை தரும் பகவான், அதே சமயம் எதற்காக துன்பங்களையும் தருகிறார்?
பூலோகத்தில் இன்பம் மட்டுமே இருக்க செய்தால், இங்கு இருக்கும் ஒரு ஜீவனுக்கு கூட, மோக்ஷம் அடைய வேண்டும் என்ற எண்ணமே எழாது.

ஜீவன் உலகில் உடல் எடுத்து பிறப்பதே, மோக்ஷம் அடைய வேண்டும் என்பதற்காக தான்.
நாம் ஜீவ ஆத்மா, அவர் பரம் ஆத்மா. நம் இருவருக்கும் உறவு உண்டு.
"ஓம்" என்ற பிரணவமே - 'ஜீவனுக்கும், பரமாத்மா வாசுதேவனுக்கும் உள்ள இந்த உறவை தான்' நமக்கு உணர்த்துகிறது..
புரிந்து கொள்ள கிளிக் செய்யுங்கள்.


ஜீவாத்மாவாகிய நாம் செய்யும் காரியங்களை,
'மனசாட்சி' என்ற பெயரிலும்
'அந்தர்யாமி' என்ற பெயரிலும்,
உள்ளிருந்து 'பரமாத்மா வாசுதேவன்' பார்த்து கொண்டே இருக்கிறார்.

தவறான காரியங்கள் ஜீவன் செய்யும் போதெல்லாம்,
கூடவே இருக்கும் பரமாத்மா 'தவறு செய்யாதே' என்று சொல்லவும் செய்கிறார்.

பரமாத்மா வாசுதேவன், உலகத்தில் இன்பம் மட்டுமே கிடைக்கும் படியாக செய்து இருந்தால், ஜீவாத்மாவாகிய நாம், பரமாத்மாவாகிய நாராயணனை அடைய வழி என்ன? என்று யோசித்து கூட இருக்க மாட்டோம்.

பல வித விதமான துன்பத்தை நமக்கு கொடுத்து,
ஜீவனாகிய நம்மை, உலக ஆசைகளில் இருந்து நாமாகவே விரும்பி,
சிறிது சிறிதாக விலகும் படியாக செய்து,
மெதுவாக நம்மை பகவான் நாராயணன் பக்கம் திருப்பி,
பக்தி அனுபவத்தை கொடுத்து, பரமாத்மாவை உணரும் ஆனந்தம் என்ற அனுபவத்தை கொடுத்து,
கடைசியில் மோக்ஷத்தை கொடுத்து விடுகிறார்.

"மோக்ஷம் அடைய வேண்டும் என்ற ஆசை" நமக்கு ஏற்பட, துன்பங்களையும் நமக்கு கொடுக்கிறார் பகவான்.

இத்தனை துன்பங்கள் உலகில் இருந்தும் கூட,
பல கோடி மக்கள், இன்னும் கோவிலுக்கு சென்று பெருமாளை சரண் அடைய வேண்டும் என்று நினைக்கவில்லை,
பெருமாளிடம் பக்தி செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை,
என்று பார்க்கிறோம்.

துன்பமே இல்லாமல் இந்த உலகை பகவான் படைத்து இருந்தால்?!! ஒருத்தன் கூட மோக்ஷத்தை பற்றியோ,
பகவானை பற்றிய எண்ணமோ,
பகவானிடம் பக்தியையோ செய்து இருக்க மாட்டான்.

நம்மை சுகமாகவே வாழ செய்தால்,
"உலகமே லட்சியம்" என்று வாழ்ந்து, 
இறைவனை நினைக்க மறந்து விடுவோம் என்பதால் தான்,
உலக துன்பங்களை பார்த்து பார்த்து, ஒரு சமயத்தில் நாமே விருப்பப்பட்டு விலக,
நம் கவனம் ஒரு சமயத்தில் பகவான் பக்கம் திரும்ப,
பகவான் அவ்வப்போது, நமக்கு துன்பமும் கொடுக்கிறார்.

ஆதலால் தான், "எல்லா குணங்களும் (இன்பமும், துன்பமும், பாவமும்) பகவான் கொடுத்தது தான்" 
என்று திருமங்கையாழ்வார் சொல்கிறார்.

தனக்கு வரும்
சுகத்தையும், துன்பத்தையும்,
லாபத்தையும், நஷ்டத்தையும்,
பாராட்டையும், இகழ்ச்சியையும்,
ஜனனத்தையும், மரணத்தையும்,
வெற்றியையும், தோல்வியையும்,
ஆரோக்கியத்தையும், நோயையும்,
இளமையையும், முதுமையையும்
"பகவான் செயல்" என்று பார்க்க தெரிந்தவன்,
மோக்ஷத்திற்கு தயாராகிறான்.
"இறைவன் செயல்" என்று இருக்கும் ஞானிகள், ஒரு வெளி மனிதனை போல வேடிக்கை பார்ப்பதால், இந்த குணங்கள் இவர்களை அசைக்க கூட முடிவதில்லை.
ஞானிகள் தங்கள் வாழ்வில் டக்கும், எந்த 'துக்க நிலையிலும்' துவண்டு போவதில்லை.
ஞானிகள் தங்கள் வாழ்வில் கிடைக்கும், எந்த 'சுகபோக நிலையிலும்' கர்வமும் கொள்வதில்லை.
சுகத்திலும், துன்பத்திலும் இறைவனை மறப்பதும் இல்லை. மறுப்பதும் இல்லை.
மறு பிறவி எடுக்க அவசியமில்லாத நிலையை பெறுகிறார்கள்.

'பாவமும் புண்ணியமும் பகவான் செயல்' என்று தன்னை பற்றிய சுய தம்பட்டம் இல்லாத ஒருவனின் வாழ்வில் சம்பவிக்கும்
பாவ செயலால் ஏற்படும் பாவ மூட்டையையும்,
புண்ணியத்தால் ஏற்படும் புண்ணிய மூட்டையையும்
பகவான் எடுத்து கொண்டு,
பாவமும் செய்யவில்லை, புண்ணியமும் செய்யவில்லை என்று ஆக்கி, வைகுண்டத்தில் இடம் தந்து விடுகிறார்.

"குணங்களுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தை" நம்மை போன்றவர்களும் புரிந்து கொள்ள,
சமுத்திரத்தை (கடல்) உதாரணமாக காட்டி, புரிய வைப்பார்கள் பெரியோர்கள்.
கடற்ரைக்கு, நாம் சென்று பார்க்கும் போது,
வித விதமான அளவுகளில்,
திடீரென்று பெரிய அலையும்,
திடீரென்று சிறிய அலையும்,
மாறி மாறி, ஓயாமல் எழும்பி எழும்பி மறைந்து கொண்டே இருக்கிறது.

"கடல் அலைகள் போன்றது தான், நம் குணங்களும்"
என்று ஜடபரதர், திருமங்கை ஆழ்வார் போன்ற ஞானிகள் அறிந்து கொள்கிறார்கள்.
இதன் காரணத்தால் தான், திருமங்கையாழ்வார், "எல்லா குணங்களுக்கும் காரணம் நாராயணனே" என்று பாடுகிறார் என்று பார்க்கிறோம்.
திடீரென்று நமக்குள் ஏற்படும் பெரிய கோப அலையும்,
திடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் துக்க அலையும்,
திடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் பாவ அலையும்,
திடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் தான அலையும்,
திடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் பக்தி அலையும்,
மாறி மாறி நம்மிடம் தோன்றி தோன்றி மறைகிறது என்று அறிகிறார்கள்.

கடற்கரையில், அலைகள் ஏற்படுவதற்கு ஆதாரமாக இருப்பது எது?
அலைகளை தாண்டி கவனித்தால், அமைதியான கடல் இருப்பது தெரிகிறது.
'கடல் இருப்பதால், அலைகள் தோன்றுகிறது' என்று கவனிக்கும் போது, அனைத்து விதமான அலைகளும் ஏற்படுவதற்கு காரணம் அதற்கு ஆதாரமாக இருக்கும் "கடலே" என்று தெரிகிறது.
கடல் "அலைகளை," நம் "குணங்களுடன்" உதாரணமாக காட்டி,
அலைகள் ஏற்படுவதற்கு காரணம் "கடல்" என்று காட்டி புரிய வைப்பது போல,
நம்மிடம் பல வித குணங்கள் ஏற்படுவதற்கு காரணம், "ஜீவன்" இருப்பதால் தான், என்று புரிய வைக்கிறார்கள் பெரியோர்கள்.

நம் உடம்பில் உள்ள "ஜீவாத்மாவாகிய நாம்", நம் கூடவே அந்தர்யாமியாக (மனசாட்சியாக) இருக்கும் பரமாத்மா நாராயணனுக்கு கட்டுப்பட்டவன் என்று உணர்த்தி,
எப்படி கடல் அலைகளுக்கு ஆதாரமாக கடல் இருக்கிறதோ,
அதுபோல,
நம்மிடம் உருவாகும் அனைத்து குணங்களுக்கும், நமக்கும் ஆதாரமாக, "பரமாத்மா நாராயணனே" இருக்கிறார் என்பதால்,
உள்ளும் புறமும் எங்கும் உள்ள அந்த பரமாத்மாவே, நம் கண்ணுக்கு எதிரில், வெளியிலும் "திருமணிக்கூடம் வரதராஜ பெருமாளாக வீற்றிருக்கிறார்" என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.

தமிழ் வளர,
ஆழ்வார்கள் பாடிய 4000 பிரபந்தங்களும், நாயன்மார்கள் பாடிய பதிகங்களுமே போதும்.

இதை நாம் தெரிந்து, புரிந்து கொள்ள, ஆர்வம் காட்டினாலேயே,
"தமில் தமில்..." என்று பேசி தமிழை அழித்து விடாமல், 
உண்மையிலேயே தமிழை வளர்க்கலாம்.

தமிழை வளர்த்துக்கொள்வதோடு மட்டுமில்லாமல், அதனோடு நம் இறை உணர்வையும் வளர்த்து கொள்ளலாம்.

போலி தமிழர்களையும்,
"பலம்" என்ற தமிழ் சொல்லை கூட "பெலம்" என்று உளரும் திருடர்களையும் தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும்.

ஹிந்துவாக பிறந்தால், ஹிந்துவாக வாழ்ந்தால் எத்தனை அருமை!! என்று இது போன்ற ஆன்மீக விளக்கங்கள், நம் தெய்வங்களின் மகத்துவங்கள் தெரிந்து கொண்டால் தான் புரியும்.

நம்முடைய ஆயுசை, பகவத் கீதை படிக்காமல், திவ்ய பிரபந்தங்கள் படித்து புரிந்து கொள்ளாமல் வீண் செய்து விட கூடாது.
இத்தனை வருஷம் வீண் செய்தோமே!! என்று வயதான பிறகு தோன்றி பிரயோஜனமில்லை.

அதிக பட்சம் நமக்கு கொடுக்கப்பட்ட ஆயுசு 100 தான்.
அதில் நமக்கு எத்தனை குறைவோ நமக்கு தெரியாது.
அதில் இப்பொழுதே இத்தனை வருடங்கள் வீண் செய்தோமே!! என்று ஒவ்வொரு ஹிந்துவும் நினைக்க வேண்டும்.

நம்மிடம் இல்லாத விஷயங்களா, போலி மதங்களிடம் உள்ளது?
இந்த ஒரு பாசுரத்துக்கு ஈடாகுமா, பிற மதங்கள்?

ஹிந்துவாக பிறந்ததில் கர்வம் கொண்டு, அனைவரையும் ஹிந்துவாக ஆக்க வேண்டும்.
பிற மதத்தில் விழுந்து விட்ட அனைவரையும் திவ்ய பிரபந்தம், பகவத் கீதை படிக்க வைத்து ஹிந்துவாக வாழ வைக்க வேண்டும்.


வாழ்க ஆழ்வார்கள்,
வாழ்க நாயன்மார்கள்..
வாழ்க இறை உணர்ச்சி..
வாழ்க ஹிந்து தர்மம்..
வாழ்க தமிழ்.

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - Afternoon (with meaning)

Sandhya Vandanam - Morning (with meaning)



Sandhya Vandanam - Evening (with meaning)