பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.
'கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ்
கச்சி மேய களியே' என்றும்
'கடல் கிடந்த கனியே' என்றும்
'அல்லியம் பூ மலர் பொய்கை பழனம் வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான்' என்றும்
சொல் உயர்ந்த நெடுவீணை
முலைமேல் தாங்கி தூமுறுவல்
நகை இறையே தோன்ற நக்கு
மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே
மென்கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே
- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)
பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, பாடுகிறாள்.
"கருங்கற்களால் மதிற்சுவர்கள் ஓங்கி உயர்ந்து காஞ்சிபுரத்தை சூழ்ந்திருக்க (கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ் கச்சி) அங்கு எழுந்தருளியிருக்கும் (மேய) மதயானை போன்ற ஹஸ்தி வரதனே ! என்று இவள் பாட (களியே என்றும்)
திருப்பாற்கடலில் படுத்திருக்கும் கனிபோன்றவனே! என்று இவள் பாட (கடல் கிடந்த கனியே)
சுகந்தமுடைய அல்லி பூக்கள் பூக்கும் தடாகங்களையும் (அல்லியம் பூ மலர் பொய்கை) நீர்நிலைகளையுமே (பழனம்) வேலியாக உடைய (வேலி) அழகிய திருவழுந்தூரிலே (தேரழுந்தூர்) நின்று (அணி அழுந்தூர் நின்று), உள்ளம் உகந்து இருக்கும் என் ஸ்வாமியே! என்று இவள் பாட (உகந்த அம்மான்' என்றும்)
அவள் பாடிய இந்த திவ்ய நாமசங்கீர்த்தனத்தை கேட்டு (சொல் உயர்ந்த) அந்த நீண்ட வீணையும் திருப்பி பாட (நெடுவீணை), தனது நாதனை இந்த வீணையும் பாடுகிறதே என்ற பூரிப்பில், தனது மார்பின் மீது தாங்கி கொண்டு (முலைமேல் தாங்கி) பெருமாளையே ஸ்பரிசித்து விட்டது போன்று புன்முறுவல் செய்கிறாள் (தூமுறுவல்).
பல்வரிசைகள் (நகை) தெரியும் படி (இறையே தோன்ற) தனக்கு தானே சிரிக்கிறாள் (நக்கு).
இயற்கையாகவே சிவந்து இருக்கும் விரல்கள் இன்னமும் சிவக்கும்படி நாள் முழுவதும் தந்தி கம்பிகளை வருடி (மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி அந்தவீணையை) அதற்கும் மேலே (ஆங்கே) தானே ஒரு கிளிப்பிள்ளை போலே (மென்கிளி போல்) மழலைச்சொற்களால் பாடிக்கொண்டு நிற்கிறாள் (மிகமிழற்றும்).
என் வயிற்றில் பிறந்த அறியா பெண்ணான இவள், இவையெல்லாம் எங்கே கற்றாள்? (என் பேதையே)"
என்று பரகால நாயகியின் தாய், தன் பெண் (திருமங்கையாழ்வார்) நிலை கண்டு வருந்துகிறாள்.
பகவான் நமக்கு பிறகு நல்ல 'இளமையான உடல், அழகு' கொடுக்கிறார்.
அங்கும் இங்கும் ஓடி பொருள் சேர்க்கிறோம்.
கல்யாணம் செய்து கொண்டு, காமத்தில் ஈடுபட்டு குழந்தை பெற்று, குடும்பமாக மகிழ்கிறோம்.
"பகவான் கருணை உள்ளவன்" என்று சொல்கிறோம்.
பிறகு, பகவான் நமக்கு உடலை இளைக்க செய்து, உடலால் எதையும் செய்ய முடியாதவனாக ஆக்கி 'வயோதிகம்' கொடுக்கிறார்.
ஓடி ஆட முடியாமல், காமத்திற்கு உடல் ஒத்துழைக்காமல், உடல் சோர்ந்து விட, குடும்பத்தில் உள்ளவர்களும் நம் தேவையை அதிகம் பொருட்படுத்தாமல் இருக்க, 'இந்த நிலை வந்ததே!' என்று புலம்பி, "பகவான் கருணை இல்லாதவன்" என்று சொல்லி விடுறோம்.
"வார்தக்யே முனி வர்தீனாம்" என்று மஹாகவி காளிதாசன் 'பகவானை தியானம் செய்யத்தான், வ்யோதிகமே வருகிறது" என்று சொல்கிறார்.
பகவான் என்ன நினைத்து நமக்கு இந்த வயோதிகம் கொடுக்கிறார்?
"போதும் நீ மற்றவருக்காக, உலகத்துக்காக உழைத்தது. போதும் உனக்கு இந்த உலக ஆசைகள்.
இனியாவது என்னோடு வந்து விட கடு முயற்சி செய்.
என் கோவிலே கதியாக இரு. என்னை பற்றி பஜனையோ, சத்சங்கமோ நடந்தால், அங்கு சென்று கேள்.
இளமை காலத்தில் கோவிலுக்கு சென்றால், சத்சங்கத்தில் ஈடுபட்டால் "வீட்டில் வேலை இல்லையா? குடும்பம் இல்லையா?" என்று கேள்வி கேட்டு கொண்டே இருப்பார்கள்.
இதோ தானாக கிடைத்தது வயோதிகம்.
இனி நீ கோவிலுக்கு போனாலும், "ஏன் கோவிலுக்கு போனாய்?" என்று யாரும் கேட்க மாட்டார்கள். "எப்படியோ நிம்மதியாக இருந்தால் சரி. நம்மை தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி" என்று தான் நினைப்பார்கள்.
பாகவதம், பகவத் கீதை, ராமாயணம், 4000 பாசுரங்கள், சிவபக்தனாக இருந்தால் பதிகங்கள், கந்த புராணம், முக்தி தரும் வராஹ அவதாரம் படித்து கொண்டே இருக்கலாமே! நடக்க முடிந்தால், கோவில் வாசலில் சென்று அமர்ந்து, பகவத்தியானம் செய்யலாமே!
அருமையாக வயோதிகம் தானாக கிடைத்தும், மீண்டும் உலக விஷயத்தில் செலவு செய்வானா ஒருவன்?
இளமை காலம் வரை தெய்வத்துக்கு நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலையில், தானாக வரும் வயோதிகம் வரமல்லவா?"
காஞ்சியை ஆண்டு வந்த அரசன், சிஷ்யரான கணிகண்ணனை அழைத்து, 'தனக்கும் இளமை கிடைக்க வேண்டும்" என்று கேட்க, இப்படி ஒரு ஞான உபதேசம் செய்தார்.
"இளமை தர முடியாது என்றால் காஞ்சியில் இருக்க கூடாது" என்று அரசன் சொல்ல,
கணிகண்ணன் தன் குருவிடம் சொல்லிவிட்டு கிளம்ப, 'தானும்வருகிறேன்' என்று திருமழிசை ஆழ்வாரும் கிளம்ப, வேகாசேது என்ற பெருமாள் திருவெஃகாவில் பள்ளி கொண்டு இருக்க, பாம்பு பையை சுருட்டி கொண்டு என்னோடு வாருங்கள் என்று ஆழ்வார் அழைக்க, பெருமாள் கல் ரூபத்தோடு எழுந்து ஆழ்வாரோடு நடக்க ஆரம்பித்தார்.
காஞ்சியை விட்டு, சுமார் 4 km தள்ளி இருக்கும் ஓரிருக்கை என்ற இடம் வர, சாயங்காலம் ஆனதால், அந்த இரவை அங்கு கழிக்க ஆழ்வார் நினைக்க, பெருமாள் அங்கேயே படுத்து விட்டார்.
ஒரு நாள் அங்கு பெருமாள் தங்கியதால், இந்த ஊருக்கு "ஓரிருக்கை" என்ற பெயர் ஏற்பட்டது.
பெருமாளே சென்று விட்டதால், காஞ்சியை விட்டு சகல தேவதைகளும் கிளம்பி விட, திடீரென்று காஞ்சியே சூன்யமாக காட்சி அளித்தது.
அரசன் 'ஆழ்வாருக்கு செய்த அபசாரம் தான் காரணம்' என்று உணர்ந்து, அந்த இரவே ஓடி சென்று ஆழ்வாரை மீண்டும் காஞ்சி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார் அரசன்.
துவேஷம் இல்லாத ஆழ்வார், "கிளம்பு என்று சொன்னதால் கிளம்பினோம். வர சொன்னால் வருகிறோம்" என்று கிளம்ப, கனிகண்ணனோடு பெருமாளும் பின் தொடர்ந்து வந்து மீண்டும் காஞ்சிக்கு வந்து படுத்துக்கொண்டார்.
குரு சொன்னால், சிஷ்யன் கேட்க வேண்டும்.
பகவான் சொன்னால், நாம் அனைவரும் கேட்க வேண்டும்.
அது மட்டுமல்ல,
"உத்தம பக்தன் எது சொன்னாலும், மறுக்காமல் பகவானும் கேட்பார்" என்று காட்ட, பெருமாள் இப்படி ஒரு லீலை செய்தார்.
வேகாசேது என்ற பெருமாள், அன்றிலிருந்து யதோக்தகாரி என்றும், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்றும் பெயர் பெற்றார்.
திருமங்கை ஆழ்வார், திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவத்சல பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது,
அதே பெயரில் திருநின்றவூரில் இருக்கும் பக்தஜீவன பெருமாளின் நினைவு வர, அவரையும் சேர்த்து இங்கு மங்களாசாசனம் செய்தார்.
இரண்டு திவ்ய தேசங்களை சேர்த்து கொண்டு மங்களாசாசனம் செய்கிறார்.
பாசுரம்:
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை!
இம்மையை மறுமைக்கு மருந்தினை!
ஆற்றலை அண்டத் அப்புறம் உய்த்திடும் ஐயனை!
கையில் ஆழி ஒன்று ஏந்திய கூற்றினை!
குரு மாமணிக் குன்றினை!
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை!
காற்றினை!
புனலை!
சென்று நாடிக் கண்ணமங்கையுள்
கண்டு கொண்டேனே!
- (பெரிய திருமொழி)
என்று திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவத்சல பெருமாளை பார்க்கும் போது பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணமங்கையில் எழுந்தருளி இருக்கும் பக்தவத்சல பெருமாளை பார்க்கும் போது, திருநின்றவூரில் எழுந்தருளி இருக்கும் பக்தஜீவனன் என்ற பெயருடைய பெருமாள் ஆழ்வாருக்கு வலுவில் வந்து தரிசனம் தர,
'நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை'
என்று இந்த திவ்ய தேச பெருமாளை கொஞ்சி மங்களாசாசனம் செய்கிறார்.
பரமபதத்தில் (வைகுண்டம்) எம்பெருமான் எழுந்தருளி இருக்கிறார். க்ஷீராப்தியிலும் (பாற்கடல்) எம்பெருமான் எழுந்தருளி இருக்கிறார்.
யாரும் எளிதில் போக முடியாத இமயமலையில் பதரிநாத் போன்ற திவ்ய தேசங்களிலும் எம்பெருமான் எழுந்தருளி இருக்கிறார்.
நம்மால் அத்தனை தூரம் வர முடியுமோ!! என்று கருணை கொண்டு, அதே எம்பெருமான், மஹாலக்ஷ்மி ஸ்திரமாக நிற்கும் திருநின்றவூருக்கு நமக்காக வந்து நிற்கிறாரே!!
என்று பகத்ஜீவனனாக இருக்கும் எம்பெருமானை கொஞ்சி மகிழ்கிறார், திருமங்கை ஆழ்வார்.
திருநின்றவூரில் நிற்கும் எம்பெருமான், 'ஒரு முத்து குவியல் போல' பேரழகுடன், குளிர்ந்த திருமேனியுடன் கண் எதிரே தரிசனம் தர, "குரு மாமணிக் குன்றினை" என்று கொஞ்சுகிறார்.
இங்கு "நித்தில தொத்தினை" என்று திருநின்றவூர் எம்பெருமானை என்று அழைக்கிறார். "நித்தில தொத்து" என்றால் "பவள கொத்து" என்று அர்த்தம்..
பவளத்திற்கு இயற்கையாகவே ஒரு குளிர்ச்சி உண்டு.
பவள மணியை, மாலையாக கழுத்தில் போட்டு கொண்டால், உடல் குளிர்ச்சியாகும்.
இங்கு, "பவள கொத்து" என்று திருநின்றவூர் எம்பெருமானையே சொல்லி கொஞ்சுகிறார் திருமங்கை ஆழ்வார்.
ஒரு முத்து குவியல் போல பேரழகுடன், குளிர்ந்த திருமேனியுடன் இருக்கும் திருநின்றவூர் பெருமாளை பார்த்ததுமே, 'பெருமாளையே ஒரு பவள மாலையாக ஆக்கிக்கொண்டு, தன் கழுத்தில் போட்டு கொண்டு விட வேண்டும்' என்று ஆசை உண்டாகி விட்டது ஆழ்வாருக்கு.
வெயிலில்
வாடி, வியர்த்து போன ஒருவனுக்கு, தென்றல் காற்று வீசினால் எப்படி சுகமாக
இருக்குமோ! அது போல, உலகத்தில் ஏற்படும் பலவித சிரமங்களால் துக்கப்பட்டு
துவண்டு போகும் நமக்கு, இவர் தரிசனமே குளிர்ந்த காற்று வீசுவது போல சுகத்தை
தருகிறதே!! என்றதும் "காற்றினை" என்று கொஞ்சுகிறார்.
வெயிலில்
வாடி, உடம்பில் தண்ணீர் வற்றி, உயிர் போய் விடும்!! இனி தாளாது!! என்று
தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு, சுவையான நீர் கிடைத்தால் எத்தனை சுகம்
அடைவானோ, அது போல, தாபத்தோடு வரும் பக்தனுக்கு, தாபத்தை போக்கும் புனல்
(தண்ணீர்) போல திருநின்றவூர் எம்பெருமான் தரிசனம் தருகிறாரே!! என்றதும் "புனலை" என்று கொஞ்சுகிறார்.
திருக்கண்ணமங்கையில் பக்தவத்சல பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது, திருநின்றவூர் பக்தஜீவனன் (பக்தவத்சல என்றும் சொல்கிறார்கள்) என்ற எம்பெருமான், வலிய இடையில் புகுந்து கொண்டு, திருமங்கை ஆழ்வாரிடம் தனக்கும் ஒரு மங்களாசாசனம் வாங்கி கொண்டு விட்டார்.
பரதத்துவ அனுபவத்துடனேயே இருந்ததால் தான், அவருக்கு கோவிலுக்கு சென்று எம்பெருமானை தரிசிக்க கூட அவசியம் ஏற்படவில்லை. கோவிலுக்கே போகாத ஆழ்வார் இவர் ஒருவர் தானே..
மாறாக ஸ்ரீரங்கம் என்று நினைத்தால், அந்த கோவிலில் உள்ள ஸ்ரீரங்கபெருமாள், இவர் இருக்கும் இடத்துக்கு வந்து காட்சி கொடுப்பார்.
அத்தகைய அனுபவத்திலேயே இருந்தார் நம்மாழ்வார் என்று பார்க்கிறோம்.
பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார்,நாச்சியார் (ஆண்டாள்) போன்ற அனைவரும் "ராம, கிருஷ்ண, கூர்ம, நரசிம்ம" போன்ற விபவ அவதாரங்களையே (3) அனுபவிப்பவர்களாக இருந்தனர்.
விபவ அவதாரமான "கண்ணனிடம் மட்டுமே பக்தி செய்தாள்" ஆண்டாள்.
அர்ச்சா திருமேனியாக உள்ள ஸ்ரீ ரங்கநாதரிடம் கிருஷ்ண பரமாத்மாவை கண்டாள் ஆண்டாள் நாச்சியார் என்று பார்க்கிறோம்.
சாமானிய ஜனங்களான நாம், "ராமரையோ, கிருஷ்ணரையோ பக்தி செய்து, அதே ரூபத்தை கனவிலாவது தரிசிக்க முடியுமா?" என்பது தெரியாது..
திடபக்தி உள்ள மகான்களுக்கு, சாத்தியமாகும் இந்த பகவத் தரிசனம், நமக்கு சாத்தியமாகுமா? என்பது கேள்விக்குறியே !!
தெய்வத்திடம் திடபக்தி இல்லாத நமக்கும், வழி உண்டா?
ஆழ்வார்களில் நமக்காக நிற்பவர் திருமங்கை ஆழ்வார் ஒருவரே.
அர்ச்ச (விக்ரஹ) அவதாரத்தில் இருக்கும் பெருமாளிடம், ஆண்டாளை போல விபவ அவதாரத்தை கூட பார்க்கவில்லை, இவர்.
எம்பெருமானே "விக்ரஹ ரூபமாக அவதரித்து இருக்கிறார்" என்றே அனுபவித்தார் திருமங்கை ஆழ்வார்.
நாம் கோவிலுக்கு சென்று, கோவிலில் உள்ள பெருமாளை எப்படி பார்க்க வேண்டும்? எப்படி பக்தி செய்ய வேண்டும்? என்று கேள்விக்கு,
தன் வாழ்க்கையே இதற்கு பதிலாக வாழ்ந்து காட்டி,,
எம்பெருமானை பார்த்து நாமும் பாடுவதற்கு தன் பாசுரங்களையே கொடுத்து,
நம் "பக்தியை" வளர்க்க செய்கிறார் திருமங்கை ஆழ்வார்.
சாதாரண மக்களும், எம்பெருமானை எப்படி பக்தி செய்ய வேண்டும்? என்று வழிகாட்டிய திருமங்கை ஆழ்வாருக்கு, ஹிந்துக்கள் பெரும் கடன் பட்டு இருக்கிறோம் அல்லவா..
நாம் எப்படி கோவிலில் உள்ள பெருமாளை பார்த்து பக்தி செய்ய வேண்டும்?
என்று காட்டுவதற்காகவே, திருமங்கை ஆழ்வார் அவதரித்தார் போலும்.
திருமங்கை ஆழ்வாருக்கு, அர்ச்ச அவதார விக்ரஹங்களே பூரணமான அனுபவத்தை கொடுத்தது.
திருமங்கை ஆழ்வாரை போல கோவில் கோவிலாக சென்று தரிசித்த ஆழ்வார்கள் இல்லை.
கோவில் கோவிலாக சென்று, அங்கு "அர்ச்ச அவதாரமாக உள்ள பெருமாளை பார்ப்பதினாலேயே அவருக்கு ஏற்படும் உகப்பு, வேறு எந்த அனுபவத்திலும் அவருக்கு ஏற்படவில்லை" என்று தெரிகிறது.
திருமங்கை ஆழ்வாரை போல, கோவில் கோவிலாக சென்று எம்பெருமானை நேரில் பார்த்து, பார்த்து, மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் வேறு இல்லை.
தியானத்தில் எம்பெருமானை புருவ மத்தியில் தரிசனம் செய்வதை காட்டிலும், இவருக்கு மட்டும் தான், எம்பெருமானை கோவிலில் சென்று அரச்சா திருமேனியாக பார்த்தால் தான் திருப்தி ஏற்பட்டது.
கோவிலில் இருக்கும் பெருமாள், "அரச்சா (விக்ரஹ) திருமேனி"யாக தான் இருக்கிறார்.
நம்மை போன்ற சாதாரண ஜனங்களுக்கு, "இது கல் சிலை தானே" என்று தோன்றுகிறது.
ஆனால், திருமங்கை ஆழ்வாருக்கோ, அர்ச்சா திருமேனியை பார்க்கும் போதே, "இது நமக்காக எம்பெருமான் செய்த அர்ச்சா (5) அவதாரமாயிற்றே"
என்றே தோன்றுகிறது..
"ஸ்வயம் பகவான் நாராயணன், அர்ச்சா திருமேனியுடன் அவதரித்து உள்ளார்"
என்றே ஆழ்வார்கள், மகான்கள், ஆச்சாரியர்கள் பார்க்கிறார்கள்.
பகவான் ராமராகவும், கிருஷ்ணராகவும் விபவ அவதாரங்கள் (3) செய்த சம காலத்தில் கூட, சில மூடர்கள், நேரில் பரமாத்மாவை பார்த்தும், "இவர்கள் மனிதர்கள்" என்று தானே நினைத்தார்கள்..
ராவணன், துரியோதனன், கம்சன் போன்றவர்கள், 'ராமரையும், கிருஷ்ணரையும் "மனிதன்" என்று தானே நினைத்தார்கள்'.
அதே சமயத்தில், ரிஷிகள், ஜடாயு, பீஷ்மர் போன்ற உத்தமர்கள், மனிதனாக வந்திருப்பது பகவான் நாராயணன் என்று உணர்ந்து பக்தி செய்து மோக்ஷம் அடைந்தார்களே!!..,
அதே போல,
கோவிலில் அர்ச்சா திருமேனியாக இருக்கும் எம்பெருமானை பார்க்கும் சாமானிய ஜனங்கள், "இது சிலை தானே"
என்று பார்த்து ஏமாறுகிறார்கள்.
ராமபிரான் அவதார காலத்தில், அவரை "மனிதன்" என்றே நினைத்தவர்களும் உண்டு.
ஞான கண் கொண்டு பார்த்தவர்கள் "மனிதனாக சாஷாத் பரப்ரம்மமே அவதரித்து உள்ளார்" என்று புரிந்து கொண்டனர்.
அது போல,
திவ்ய ஞானம் கொண்ட ஆழ்வார்கள்,
கோவிலில் உள்ள "அர்ச்சா திருமேனியை" எம்பெருமானின் அவதாரமாகவே பார்த்தனர்.
நமக்கும் ஆழ்வார்களை போன்று, அத்தகைய உணர்வு ஏற்படும் போது, கோவிலில் உள்ள அரச்சா மூர்த்தியை பார்க்கும் போது "ஐயோ.. எம்பெருமானை பார்க்க முடியவில்லையே..விக்ரஹ ரூபமாக தானே பார்க்க முடிகிறது"
என்ற எண்ணம் கூட ஏற்படாது..
"அர்ச்சா திருமேனியே பகவானின் ஒரு அவதாரம் தான்" என்று ஆழ்வார்களை போன்று பார்க்க நம் ஆரம்பித்தால்,
அந்த எண்ணமே, பக்திக்கு விதை ஆகி விடும்.
அர்ச்ச அவதாரமாக கோவிலில் வீற்றிருக்கும் பெருமாள், நம் பக்திக்கு ஏற்ப அவர் நம்மிடம் நெருங்குவார்.
அர்ச்சா திருமேனியை "சிலை" என்று பார்த்தால், அவர் விக்ரஹமாகவே உனக்கு தோன்றுவார்.
அதே அர்ச்சா திருமேனியை "பெருமாள்" என்று பார்த்தால், அவர் பெருமாளாகவே உனக்கு தோன்றுவார்.
கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டையில், இஸ்லாமிய சுல்தான்கள் புகுந்து, அங்கிருந்த கோவிலை இடித்து, உற்சவராக இருந்த பெருமாளை டில்லிக்கே எடுத்து கொண்டு சென்று விட்டான்.
"சிலை தானே" என்று பார்த்த அவர்களுக்கு, சிலையாகவே இருந்து விட்டார் பெருமாள்..
சில வருடங்கள் கழித்து, ஸ்ரீ ரங்கத்தில் கிருமிகண்ட சோழனால் ஆபத்து ஏற்பட, ராமானுஜர் அங்கிருந்து புறப்பட்டு, மேல்கோட்டை வந்து சேர்ந்தார்.
"கோவில் உள்ளதே!! மூலவரை காணவில்லையே!! உற்சவரையும் காணவில்லையே!!"
என்று கண்ணீர் விட்டார் ராமானுஜர்..
"சிலை" என்று பார்த்த இஸ்லாமியனுக்கு சிலையாகவே இருந்து விட்ட பெருமாள், "தான் எங்கு இருக்கிறேன்?" என்பதை ராமானுஜருக்கு சொப்பனத்தில் காட்டினார்..
இஸ்லாமியர்கள் மேல்கோட்டையில் புகுந்து விட்டனர் என்ற பயத்தில், அங்கிருந்த ஹிந்துக்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாது, மூலவரை குழி தோண்டி புதைத்து விட்டனர்... உற்சவரை மறைப்பதற்குள் எடுத்து சென்று விட்டான்..
ராமானுஜருக்கு தான் மூலவராக இருக்கும் இடத்தையும் காட்டி, டெல்லி சுல்தான் அரண்மனையில் உற்சவராக இருப்பதாக தானே காட்டினார்..
தெய்வ பலத்துடன், தைரியமாக டில்லி சென்று, டில்லி சுல்தானிடம் பெருமாளை திருப்பி தர கேட்க,
ராமானுஜரின் திவ்யமான ரூபத்தை கண்டு எதிர்க்க முடியாமல்,
தன் சேனைகள் பல கோவில்களில் இருந்து கொள்ளையடித்த கோவில் சிலைகளை காட்ட அனுமதித்தான்.
ஆயிரக்கணக்கான கோவில் சிலைகளை கொள்ளை அடித்து வைத்து இருந்த இடத்துக்கு சென்று, "தான் கனவில் கண்ட பெருமாள் இருக்கிறாரா? என்று பார்த்தார், ராமானுஜர். "தான் கண்ட பெருமாள் அங்கு இல்லை" என்றதும் ராமானுஜர், "வேறு எங்காவது உள்ளதா? யாரிடமாவது கொடுத்து விட்டீர்களா?" என்று கேட்க, "தன் மகள் அங்கிருந்த ஒரு சிலையை மட்டும் எடுத்து வைத்து இருந்ததாக ஞாபகம்", என்று தன் மகளை அழைத்தான்.
அவன் மகளிடம் தான் கண்ட அதே பெருமாளை கண்ட ராமானுஜர், "வாராய் செல்ல பிள்ளாய்" என்று அழைக்க, சுல்தான் பார்க்க,
அர்ச்ச அவதாரமாக (சிலையாக) இருந்த பெருமாள், அவள் மடியிலிருந்து இறங்கி ஓடி வந்து ராமானுஜரை நோக்கி வந்தது...
இந்த அதிசயத்தை கண்டு பிரமித்து போன இஸ்லாமியனுக்கு, இன்னொரு அதிர்ச்சியாக,
அவன் மகள் தன்னிடம் இருந்த பெருமாளை பதியாக நினைத்து இருந்தாள்...
இவளிடம் மட்டும் பேசி கொண்டு இருந்த பெருமாள், இவள் கூப்பிட்டவுடன் ராமானுஜரை விட்டு இறங்கி "கிடு கிடு வென ஓடி சென்று" அவள் மடியில் போய் அமர்ந்து விட்டது..
"இந்த துலுக்க பெண் செய்த பக்திக்காக, எம்பெருமான அவளிடமும் பேசுகிறார்" என்பதை உணர்ந்த ராமானுஜர், "மேல்கோட்டைக்கு அழைத்து செல்ல வேண்டுமே!! கோவிலில் இருக்க வேண்டிய உற்சவர் அல்லவா இவர்" என்று மீண்டும் அழைக்க, அதே போல விக்ரஹ ரூபத்துடனேயே ஓடி வந்து ராமானுஜர் மடியில் போய் அமர்ந்து விட்டார் பெருமாள்.
இந்த ஆச்சர்யம் ஒரு வித பயத்தை இஸ்லாமிய சுல்தானுக்கு உண்டாக்கியது... "வந்திருக்கும் சாமியார் மந்திரங்கள் தெரிந்தவர் போல, கல் சிலையை நடக்க வைக்கிறாரே" என்று பயந்தான்... "அந்த மாய சிலை தன் மகளையும் மாற்றி விட்டதே!!" என்று அச்சம் ஏற்பட, ராமானுஜரை பார்த்து, "அந்த சிலையை தன் மகள் மீண்டும் கேட்பதற்குள் எடுத்து சென்று விடுங்கள்" என்று அனுமதி அளித்தான்..
மேல்கோட்டை பெருமாளிடம் பக்தி செய்த அவளுக்கும் இடம் கொடுத்து விட்டார் பெருமாள்.
இன்று போய் அந்த உற்சவ பெருமாளை பார்த்தாலும், அவர் திருப்பாதங்களில், துலுக்க நாச்சியாராக அமர்ந்து இருக்கிறாள் அந்த பக்தை.
பகவான், பக்தன் எங்கு இருந்தாலும், எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறார் என்பது தெரிகிறது. "இது சிலை அல்ல, பகவான் அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார் என்று உணர்ந்து பக்தி இருந்தால், நம்மிடமும் பேசுவார்" என்று திடமாக தெரிகிறது.
"சிலை" என்று பார்க்கும் போது, அர்ச்ச ரூபத்துடன் இருக்கும் எம்பெருமான் சிலையாகவே இருக்கிறார்...
காழ்ப்புணர்ச்சி, தெய்வ நிந்தை செய்யும் சிலரால், சில சமயங்களில் கோவில்கள் இடிக்கப்படுகிறது..
சில சமயம், கோவில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன.
சில சமயம், கோவிலில் உள்ள பெருமாளையே தூக்கி சென்று விடுகின்றனர்..
சிலர், கோவில் விக்ரஹங்களை மீண்டும் பயன்படுத்த முடியாதபடி உடைத்து விடுகின்றனர்.
"கோவிலில் கொள்ளை, கோவில் சிலை திருட பட்டு விட்டது"
போன்ற செய்திகளை பார்த்து விட்டு,
ஹிந்து தர்மத்தின் மீது காழ்ப்புணர்ச்சி, தீராத வெறுப்பு உள்ள ஈனர்கள், "சிலையை தெய்வம் என்றாயே!! சக்தி இருந்தால் கொள்ளையை தடுத்து இருக்கலாமே? சிலையையே தூக்கி சென்ற போது, உடைத்த போது உங்கள் தெய்வம் ஒன்றும் செய்ய வில்லையே?"
என்று கேட்கிறார்கள்..
"தெய்வத்தை "மனிதனை போன்று" நினைப்பதால் தான் இவர்களுக்கு வேதத்தில் உள்ள தெய்வங்கள் என்ன நினைக்கிறார்கள்?" என்று புரியவில்லை.
தன் அர்ச்சா (சிலை) திருமேனியை, "சிலை தானே" என்று ஒருவன் எடுத்து சென்று ஒளித்தாலும், உடைத்தாலும் பெருமாளுக்கு ஒரு சேதமும் கிடையாது...
நாத்தீகன், மிலேச்சன், ஆஸ்தீகன் அனைவரையுமே அவர் தானே படைத்தார்..
அப்படி இருக்க,
ஒரு நாதீகனோ, மிலேச்சனோ "சிலை தானே" என்று தன் அர்ச்ச அவதாரத்தை பார்க்கும் போது, சிலையாகவே இருந்து விடுகிறார்..
அவன் 'தன் கழுத்தில் போட்டு இருக்கும் வைர மாலையை கழட்டினால் கூட' அமைதியாக இருக்கிறார்.. "தன் குழந்தைகள் தானே" என்று சிரித்து கொண்டு இருக்கிறார்.
"வைரமாகவும், கல் சிலையாகவும் அகில உலகங்களாகவும் தானே இருப்பதால், தன் அர்ச்ச அவதாரத்தை சேதம் செய்தாலும்" பொறுத்து கொள்கிறார்.
ஆனால்,
பல வருடம் கழிந்தாலும்,
பல ஆயிரம் வருடங்கள் கழிந்தாலும் கூட,
ஒரே ஒரு உண்மையான பக்தன் "இங்கே இருந்த என் பெருமாள் எங்கே?" என்று அழுது கதறினான் என்றால், தன் பக்தன் அழுவதை சகிப்பதில்லை எம்பெருமான்.
மேல்கோட்டைக்குள் புகுந்து, கோவிலை உடைத்து, உற்சவ பெருமாளை பார்த்ததும் "சிலை தானே" என்று நினைத்த இஸ்லாமியனுக்கு சிலையாகவே இருந்து விட்டார்.
அவன் மகள், 'தனக்கு ஒரு விளையாட்டு பொம்மையாக வைத்து கொள்ளலாம்' என்று எடுத்து சென்று, அந்த சிலையுடனேயே பேசி கொண்டு, விளையாட, அர்ச்சா அவதாரமாக உள்ள பெருமாள் அவளிடம் பேச ஆரம்பித்து விட்டார்.
பெருமாள், துலுக்க பெண் என்றா பார்க்கிறார்? "இவன் என் பக்தனா?" என்று தானே பார்க்கிறார்.
"சிலை" என்று பார்த்த சுல்தானுக்கு "சிலையாகவே இருந்து அவன் கூடவே சென்று விட்ட பெருமாள்",
ராமானுஜர் "எங்கே போய் விட்டார் எம்பெருமாள்?" என்று கதற, "தான் இருக்கும் இடத்தை காட்டி, ஒரு பெரும் நாடகத்தையே ஆடி, மீண்டும் மேல்கோட்டைக்கே வந்து விட்டாரே.."
18 முறை, தங்கத்தால் ஆன சோம்நாத் கோவிலை இடித்து, தங்கங்களை எல்லாம் கொள்ளை அடித்து, சிவ லிங்கத்தை உடைத்து, முகம்மது கஜினி பெரும் சேதம் விளைவித்தான்... மூர்த்தியே போய் விட்டது.. கோவிலும் இடிந்து விட்டது...
சிவபெருமான் "தன்னை சிலையாக பார்க்கும் அவனுக்கு சிலையாகவே இருந்து விட்டார்". தங்கத்தில் ஆசை கொண்ட கொள்ளையன், தங்கத்தை கொள்ளை அடித்தான். சிலையை உடைத்து விட்டதால், சிவபெருமான் இல்லாமல் போய் விடுவாரா?
"ஒரு பக்தன் தன் சிவபக்திக்காக கட்டிய கோவிலை, காலப்போக்கில் பக்தி இல்லாதவன் இடிக்கிறான்" என்று தான் தெய்வங்கள் பார்க்கிறார்கள்.
இந்த அசம்பாவிதங்களை தடுத்து, தான் இருப்பதை மனிதனுக்கு காட்டி, தன் பெருமையை நிலைநாட்டலாமே?"
வேதத்தில் சொல்லப்படும் நம் தெய்வங்களுக்கு, இது அவசியமில்லாதது.. "இந்திரன், வருணன், வாயு போன்ற தேவர்கள் கூட, மனிதனுக்கு காட்சி கொடுத்து தான், தன் பெருமை நிலைக்கும் என்று நினைக்கவில்லை" எனும் போது, தேவர்களுக்கும் மேற்பட்ட பெருமாளும், சிவபெருமானும், "மனிதர்களுக்கு தன் தரிசனத்தை வலுக்கட்டாயமாக கொடுத்துத்தான் தன் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்ற அவசியமில்லை".
தெய்வங்கள் எதிர்பார்ப்பது, உண்மையான ஒரே ஒரு பக்தனை மட்டுமே.
"சோம்நாத் கோவிலை இடித்து விட்டான், அங்கு இருந்த சிவலிங்கத்தையும் உடைத்து விட்டானே..." என்று மனம் குமுறி ஹிந்துக்கள் மனம் கொதித்து, வழி தெரியாமல் அழ, மீண்டும் மீண்டும் கோவில் எழுந்தது... கதறிய ஹிந்துக்கள் மீண்டும் மீண்டும் சிவபெருமானுக்கு கோவில் எழுப்பினார்கள்...
அதன் பின் வந்த கில்ஜி, லோடி, துக்ளக், முகலாய ஆட்சி வரை கோவில் பல முறை இடிக்கப்பட்டது...
மீண்டும் மீண்டும் ஹிந்துக்களால் கட்டப்பட்டது...
"சக்தி இல்லாத தெய்வ சிலையை உடைப்பேன்!!.. மக்களை கொன்று குவிப்பேன்.."
என்று 1000 வருடங்கள் பாரத தேசத்தை உருட்டி, மிரட்டி பார்த்த கில்ஜி, துக்ளக், லோடி, பாபர், ஒளரங்கசீப் போன்ற முகலாய அந்நியர்கள் அனைவரும் மண்ணோடு மண் ஆகி விட்டனரே!!..
சோம்நாத்தில், இன்றும் புதிய உருவத்துடன், அதே சிவபெருமான் அர்ச்சா ரூபத்துடன் வந்து விட்டாரே?
சிவன் சொத்தை அபகரித்த இவர்கள் குலமே நாசம் ஆகி போனதே!!..
"ஹிந்து கோவில்களை இடித்து விட்டேன். அங்கு இருந்த வேத ப்ராம்மணர்களை கொன்று விட்டேன்.. ஹிந்துக்கள் மீது மட்டும் அதிக வரி விதிப்பேன்...ஹிந்துக்கள் ஒழிந்தார்கள்.. இனி இவர்கள் ஹிந்துக்களாக வாழ இயலாது"
என்று 1000 வருடங்கள் ஆதிக்கம் செய்தும், ஒன்றும் ஆகவில்லையே..!!
மனிதனை மனிதன் கேலி செய்தால், தப்பிக்க வழி உண்டு..
முட்டாள்கள் தானே, தன்னை விட பலசாலியான தெய்வத்தை கேலி செய்ய துணிவான்..?
தெய்வத்தை கேலி செய்து, குல நாசம் ஆகாதவன் உலகிலேயே இல்லையே ! நம் பாரத நாட்டின் சரித்திரமே காட்டுகிறதே!!
சிந்திக்க வேண்டாமா?
"நிறுத்துவோமே ஹிந்து தெய்வங்களின் மீது உமிழப்படும் காழ்ப்புணர்ச்சியை..."
"சக்தி உள்ள ஹிந்து தெய்வங்கள் நமக்கு அனுக்கிரஹம் செய்ய இருக்கும் போது, அந்த தெய்வத்தின் அனுக்கிரஹம் பெற வழி என்ன?" என்று நினைப்பது தானே புத்திசாலித்தனம்!!
வேதத்தில் சொல்லப்பட்ட தெய்வங்கள் கற்பனை அல்ல.. அவர்கள் நிஜமான தெய்வங்கள்.
"அர்ச்ச அவதாரம்" செய்த எம்பெருமான், அந்த இடங்களில் தன் சாந்நித்யத்துடனேயே இருக்கிறார்.
"கோவிலே இடிக்கப்பட்டாலும், தெய்வ சிலைகளே இடிக்கப்பட்டாலும்" அங்கு தன் சாந்நித்யத்துடனேயே இருக்கிறார்..
"உண்மையான பக்தி நாம் செய்தால், தன்னை மீண்டும் அர்ச்ச அவதார மூர்த்தியாக காட்டி நமக்கு முன் வந்து விடுகிறார்..." என்பதை நாம் மறக்க கூடாது.
எம்பெருமான் நாராயணனை "அந்தர்யாமி"யாக (4) அனுபவிக்கும் திருமழிசை ஆழ்வார், திருக்குடந்தை (கும்பகோணம்) சென்ற போது, "அர்ச்சா (விக்ரக)" திருமேனியுடன், மூலவராக உள்ள ஆராவமுதனை (சாரங்கபாணி) தரிசிக்க வந்தார்.
பெருமாள் சயன கோலத்தில் படுத்து இருந்தார். அர்ச்ச ரூபத்தில் உள்ள பெருமாள், அனைவருக்கும் காட்சி கொடுப்பது போல தான் காட்சி கொடுத்தார்...
"பக்தனான தன்னை கவனிக்கவில்லையோ!!" என்று நினைத்த திருமழிசை ஆழ்வார், பின்வருமாறு பாட,
படுத்து இருந்த பெருமாள், "பக்தன் அழைக்கிறானே" என்றதும், கல் சிலையாக உள்ள பெருமாள், சயன கோலத்துடனேயே கொஞ்சம் எழுந்து (உத்தான சயனம்) அமர்ந்து விட்டார்.
நடந்த கால்கள் நொந்தவோ
....
காவிரிக்கரை குடந்தையுள்,
கிடந்தவாரே எழுந்திருந்து
பேசுவாழி கேசனே
என்று பாசுரம்..
இன்று நாம், கும்பகோணம் சென்று பார்த்தாலும், "சாரங்கபாணி கோவிலில் மூலவர் உத்தான சயனத்தில் (கிடந்தவாரே எழுந்திருந்த)" இருப்பதை காணலாமே!!.. "மூலவரை 'கல்' என்றா பார்த்தார்கள்?5 வித அவதாரங்களில், நமக்காக பெருமாள் அர்ச்சா அவதாரமாக இருக்கிறார்" என்று தானே பார்த்தார்கள். "இந்த அனுபவத்தை, நாமும் நம் மனதில் கொண்டு வந்தால் தானே நமக்கும் பக்தி ஏற்படும்.. அப்பொழுதுதானே அர்ச்சா அவதாரத்தில் இருக்கும் பெருமாள், நம்மிடமும் பகவான் பேச முன் வருவார்".
"ஆழ்வார்கள் கண்களுக்கு அர்ச்சா திருமேனி எம்பெருமானாக தோன்றியதால் தானே, அவர்கள் பக்திக்கு பகவான் தலை அசைத்தார்" என்று கண்கூடாக காட்டுகிறதே...
இதே திருமழிசை ஆழ்வார், காஞ்சிபுரம் சென்ற போது, காஞ்சி அரசன் இவரை நாடு கடத்த உத்தரவு இட, அரச்சா திருமேனியுடன் சயன கோலத்தில் இருந்தயதோக்தகாரி என்ற வேகாசேது பெருமாளை, அர்ச்சா (விக்ரக) ரூபத்துடனேயே "ஓரிருக்கை" என்ற ஊர் வரை கூட்டிக்கொண்டு கிளம்பி சென்று விட்டாரே..
அந்த பெருமாளை பார்த்து,
கணிகண்ணன் போகின்றான்,
காமரு பூங்கச்சி மணிவண்ணா ! கிடக்க வேண்டா !
துணிவொன்றிச் செந்நாப் புலவோன்யான் செல்கின்றேன்,
நீயுமுன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்
என்று சொல்லி, கல் சிலையாக உள்ள பெருமாளை நடக்க வைத்து விட்டாரே...
அரசன் மன்னிப்பு கேட்க, பின்னர் "மீண்டும் படுத்துக்கொள்" என்றதும் மீண்டும் வந்து படுத்து கொண்டு விட்டாரே!! பெருமாள்.
அர்ச்சா அவதாரமாக இருந்து கொண்டே பெருமாள், இவர்களிடம் பேசினார் என்றால், "நம் பக்தியை பொறுத்து பகவான் நம்மிடம் பேசுவார்" என்பது தானே இதில் நிரூபணம் ஆகிறது..
உன் பக்தி எந்த அளவு உள்ளதோ, அந்த அளவுக்கு பகவான் பேசுகிறார்..
25% உனக்கு பகவான் மீது நம்பிக்கை இருந்தால், பகவான் உன்னிடம் 25% பழகுகிறார். 50% உனக்கு பகவான் மீது நம்பிக்கை இருந்தால், பகவான் உன்னிடம் 50% பழகுகிறார். 100க்கு 100% ஆழ்வார்களை போன்று, மீராவை போன்று, சக்குபாய் போன்று பக்தி செய்தால், நேரில் வந்து பழகுகிறார். நம் பக்தியை கொண்டு தானே, இறை அருள் நமக்கு கிடைக்கிறது.
நமக்கும் ஆழ்வார்கள் போன்று, "அர்ச்சா மூர்த்தியே பகவானின் அவதாரம் தான்" என்ற தெளிந்த பக்தி இருந்தால், நம்மிடமும் பெருமாள் அர்ச்ச அவதாரமாகவே இருந்து கொண்டே பேசுவார்.
திருமங்கை ஆழ்வாருக்கு விசேஷமாக "அர்ச்சா திருமேனியையே" பெருமாளின் அவதாரமாக அனுபவிப்பதால், பெருமாளின் திவ்ய காட்சியை கூட இவர் பார்க்க ஆசைப்படவில்லை..
அர்ச்ச அவதாரமே இவருக்கு பகவானாக தெரிவதால், பல இடங்களில் "கண்டு கொண்டேன்" என்று பாடுவதை பாசுரங்களில் கவனிக்கிறோம்..
கதியேல் இல்லை
நின் அருள் அல்லது
எனக்கு நிதியே
திருநீர்மலை நித்திலத் தொத்தே,
பதியே பரவித் தொழும்
தொண்டர் தமக்குக் கதியே
உனை "கண்டு கொண்டு" உய்ந் தொழிந்தேனே
என்று "பெரிய திருமொழி"யில் திருமங்கை ஆழ்வார் பாடும் போது, வால்மீகி முனிவருக்கு ஏற்பட்ட தாபத்தை போக்க, அர்ச்ச திருமேனியுடன் திருநீர்மலையில் காட்சி கொடுத்த எம்பெருமானை பார்த்த உகப்பில் "கண்டு கொண்டேன்" என்று பாடுகிறார்.
புருவத்தின் மத்தியில் எம்பெருமான் திவ்ய காட்சி கண்டதை சொல்கிறாரா?இல்லை..
எம்பெருமான் ராமராக தன் விபவ அவதாரத்தை காட்டி தரிசனம் தந்ததை சொல்கிறாரா?இல்லை.
திருமங்கை ஆழ்வார், திருநீர்மலையில், அர்ச்சா திருமேனியுடன் இருக்கும் எம்பெருமானையே தனக்காக அவதரித்த பெருமாளாகவே பார்த்தார். சிலையாக தோன்றிய எம்பெருமானை பார்த்ததினால் வந்த உகப்பில் "கண்டு கொண்டேன்" என்று ஆனந்தப்படுகிறார்..
இந்த பாசுரத்தை ஆரம்பிக்கும் போது "கதியேல்" என்ற சொல்லை கொண்டு ஆரம்பிக்கிறார்.
திருநீர்மலை பெருமாளை நேரில் கண்ட திருமங்கை ஆழ்வார், "தனக்கு ஒரு கதி உண்டா? மோக்ஷத்துக்கு கதி (வழி) உண்டா?" என்று தன் மனசாட்சியையே கேட்க.. மனசாட்சியே பதிலாக "என் திறமையால் எனக்கு மோக்ஷத்துக்கு கதி இல்லை." என்று சொல்ல,
"எனக்கும் என்று ஒரு கதி (வழி) உண்டாகில், அது உம்முடைய அருளை கொண்டு தான்" என்று எம்பெருமான் அருளை எதிர்பார்த்து,
கதியேல் இல்லை...
நின் அருள் அல்லது
என்று ஆரம்பிக்கிறார் திருமங்கை ஆழ்வார்.
மேலும்,
உலகத்தில் உள்ளவர்கள் பொதுவாக, வயதான காலத்துக்காக தன் பாதுகாப்புக்காக, நிதியை சேர்த்து வைத்து கொள்வார்கள்..
அதே போல,
பரலோக வாழ்க்கைக்காக, புண்ணிய காரியங்களை செய்து புண்ணியம் என்ற நிதியையும் சேர்த்து வைத்து கொள்வார்கள்..
இந்த இரண்டு நிதியுமே அல்பமானவை, நிரந்தரமற்றவை..
சேர்த்த பணம் எல்லாம் ஒருநாள் செல்வழிந்து போய் விடும்..
இல்லை, செல்வம் இருக்கும் இவன் போய் விடுவான்..
புண்ணியம் காக்குமே என்றாலும், கொஞ்ச காலம் சொர்க்க லோகத்தில் இருக்க செய்து விட்டு, "பூலோகத்தில் நீ செய்த புண்ணியங்கள் இன்றுடன் தீர்ந்தது போ" என்று இந்திரனும் கீழே தள்ளி விட்டு விடுவான்.. மீண்டும் பிறக்க வேண்டியது தான்...
இதனை கருத்தில் கொண்டு, செல்வம் என்ற நிதியையும் தள்ளி, புண்ணியம் என்ற நிதியையும் தள்ளி விட்டு,
திருமங்கை ஆழ்வார், "எனக்கு இகத்திலும் பரத்திலும் என்றும் அழியாத வைப்பு மா நிதியாக எம்பெருமானே திருநீர்மலையில் இருக்கிறார்" என்று பாடுகிறார்.
எனக்கு நிதியே
திருநீர் மலை நித்திலத்தொத்தே
இங்கு நித்தில தொத்தே என்றால் "பவள கொத்து" என்று அர்த்தம்..
பவளத்திற்கு இயற்கையாகவே ஒரு குளிர்ச்சி உண்டு.
பவள மணி மாலையாக கழுத்தில் போட்டு கொண்டால், உடல் குளிர்ச்சியாகும்..
இங்கு, பவள கொத்து என்று திருநீர்மலை எம்பெருமானையே சொல்லி கொஞ்சுகிறார் திருமங்கை ஆழ்வார்.
குளிர்ச்சி தரும் கருணை கொண்ட திருநீர்மலை பெருமாளை பார்த்ததுமே, 'பெருமாளையே ஒரு பவள மாலை என்ற தன் நிதியாக ஆக்கிக்கொண்டு, தன் கழுத்தில் போட்டு கொண்டு விட வேண்டும்' என்று ஆசை உண்டாகி விட்டது ஆழ்வாருக்கு.
"எனக்கும் கதி உண்டா?" என்று மோக்ஷத்துக்கு வழி தெரியாமல் வந்த தனக்கும், "கதி உண்டு" என்று காட்டி விட்டார் திருநீர்மலை பெருமாள் என்றதும், அடுத்த பதத்தில் "பதியே" என்று சொல்லி, "உன்னை கண்டு கொண்டேன்" என்று சரண் அடைகிறார்..
பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே உனை "கண்டு கொண்டு"
உய்ந் தொழிந்தேனே
ஆழ்வார்கள் பாசுரங்கள் தமிழே தமிழ்...
தமிழை வளர்க்க, பாசுரங்களை புரிந்து கொண்டாலேயே தமிழ் வாழுமே. .