Followers

Search Here...

Showing posts with label ஆதி சங்கரர். Show all posts
Showing posts with label ஆதி சங்கரர். Show all posts

Sunday, 29 December 2019

விசிஷ்டாத்வைதம் என்றால் என்ன? 'நானும், ஈஸ்வரனும் வேறல்ல' என்று சொல்லும் அத்வைத ஞானி ஆதி சங்கரர், பஜகோவிந்தம் இயற்றி, "அந்த பரந்தாமனை ஜீவன் பஜிக்காமல் போனால், மோக்ஷம் உனக்கு கிடைக்காது" என்று அத்வைத விரோதமாக ஏன் சொன்னார்? ஆதி சங்கரர் எண்ணத்தை அறிந்து கொள்ள வேண்டாமா?

விசிஷ்ட (விஷேச) அத்வைதம் என்றால் என்ன?
விசிஷ்டாத்வைதம்அத்வைதம் + அதில் சொல்ல மறந்த ரகசியமான, கூடுதலான ஒரு 'விசேஷ தத்துவத்தை' சேர்த்து சொல்கிறது.

தெரிந்து கொள்வோம், இதன் 'விசேஷ தத்துவ' ரகசியத்தை. 
தெரிந்து கொள்வோம், ஆதி 'சங்கரர்' எண்ணத்தை.
தெரிந்து கொள்வோம், 'விசிஷ்டாத்வைத' தத்துவத்தை



"சரீரமே நான்" என்று நினைப்பது அஞானம் (அறிவீனம்).

இறந்த பின், உடல் மறைந்து விடுவதில்லை. பிரேத உடல் கண்ணனுக்கு எதிரே கிடக்கிறது.
ஆனால் "அதனுள் இதுநாள் வரை பிரவேசித்து இருந்த ஏதோ ஒன்று வெளியேறி விட்டது" என்று மட்டும் நமக்கு புரிகிறது.

உடலில் இதுநாள் வரை பிரவேசித்து இருந்த அந்த ஒன்றுக்கு தான் "ஆத்மா" என்று பெயர் சொல்கிறது வேதம்.
பொதுவாக "ஜீவாத்மா" என்று சொல்வோம்.

"உடல் தான் நான்" என்றால், 'இது நாள் வரை பேசிக்கொண்டு இருந்த இந்த உடல், இறந்தபின் எழுந்திருக்கவில்லையே!!' என்ற கேள்வி எழுகிறது.

கொஞ்சம் புத்தி உள்ளவன் கூட, மரணத்தை பார்த்த பின்,
"சரீரமே நான்" என்று நினைக்க மாட்டான்.

நம் சனாதன வேதம், "சரீரம் நான் அல்ல, உள்ளிருக்கும் ஆத்மாவே நான்" என்று தெளிவை நமக்கு முதலில் கொடுக்கிறது.
மேலும்,
"ஜீவனும், ஈஸ்வரனும் வேறல்ல... உடலுக்குள் இருந்த ஜீவாத்மாவும், எங்கும் நிறைந்த பரமாத்மாவும் உண்மையில் ஒன்று தான்" என்ற அத்வைத சித்தாந்தத்தை 'ஆதி சங்கரர்' உலகுக்கு வேதத்தை கொண்டு வெளிப்படுத்தினார்.

"நான் பகவானுடைய தாஸன்" என்ற ஞானம் இல்லாமல், "நான் ஒரு தனித்த தத்துவம். நான் சுதந்திரமானவன்" என்று நினைப்பதே உண்மையான ஞானத்துக்கு (மெய்அறிவுக்கு) விரோதம் தான்.

"நான் பகவானுடைய தாஸன்" என்று உணர்வதே உண்மையான ஞானம் (அறிவு).

வேதத்தின் அத்வைத சித்தாந்தத்தை உலகத்துக்கு காட்டிய ஆதி சங்கரர்
"நான் சரீரம் அல்ல, ஆத்மாவே நான் என்ற அத்வைத நிலையிலேயே இருந்தார். 
உள்ளிருக்கும் ஜீவாத்மாவும், பரமாத்மாவும் உண்மையில் ஒன்று தான் என்று அத்வைத சித்தாந்தத்தை பல உதாரணங்கள் கொடுத்து விளக்கினார்".


ஆதி சங்கரர், "ஜீவனும், பரமாத்மாவும் ஒன்று தான்" என்று சொன்ன போதிலும், "மோக்ஷம் அடையவேண்டுமானால் பரமாத்மாவாகிய ஸ்ரீ கிருஷ்ணனை பஜிக்க வேண்டும் என்று பஜ கோவிந்தம் பாடினார்" என்று பார்க்கிறோம்.

பஜ கோவிந்தம் 'ஜீவனையும், பரமாத்மாவையும் பிரித்து காட்டுகிறது'. மேலும்,
'ஸ்ரீ கிருஷ்ணரை வணங்காமல், ஜீவனுக்கு மோக்ஷம் (பிறவாநிலை) கிடைக்கபோவதே இல்லை' என்று முடிவாக சொல்கிறார் ஆதி சங்கரர்.
இதை கவனிக்க வேண்டும்.

ஏன் அத்வைத விரோதமாக ஆதி சங்கரர் இப்படி சொன்னார்? என்ற ரகசியத்தை நாம் அறியாதவரை, ஆதி சங்கரர் 'அத்வைதத்தை மட்டும் தான் வெளிப்படுத்தினார்' என்றே சொல்லிக்கொண்டு இருப்போம்.

ஆதி சங்கரர் வேதத்தை முழுதும் அறிந்தவர்.. சிவபெருமான் அவதாரம்.
ஆதி சங்கரர் உண்மையில் அத்வைதம் மட்டுமே சொன்னாரா? இல்லை, வேதத்தின் முழு முடிவான விசிஷ்டாத்வைத மார்க்கத்தை தான் கடைபிடித்தாரா? என்ற ரகசியம், பஜ கோவிந்தம் ஏன் பாடினார்? என்ற ஆராய்ச்சியில் மட்டுமே நமக்கு விளங்கும்.

பஜகோவிந்தம் அர்த்தத்துடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்

ஆதி சங்கரர் இதயத்தை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள்,
"பரமாத்மாவும் தானும் ஒன்று தான்" என்று ஆதி சங்கரர் சொன்ன அத்வைதத்தை மட்டும் எடுத்து கொண்டு, அங்கேயே நின்று விடுகிறார்கள். 
"ஈஸ்வரனையும், ஜீவனையும் பிரித்து, பஜ கோவிந்தம் ஏன் பாடினார்?" என்ற காரணத்தை இவர்கள் அறிந்து கொள்ள போவதில்லை.

இப்படி நின்று விடுவதால், "ஈஸ்வரனும் நானும் வேறல்ல. இரண்டும் ஒன்று தான். நானும் கடவுள் தான்" என்று நினைத்து விடுகிறார்கள்.
"தான் சுதந்திரமான ஆத்மா" என்று நினைத்து விடுகிறார்கள்.

இப்படி அரைகுறையாக ஆதி சங்கரர் சொன்னதை  புரிந்து கொண்டவர்கள்,
"ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று தான்" என்று சொன்ன ஆதி சங்கரர்,
"பின்பு ஏன் பரமாத்மாவையும் ஜீவாத்மாவையும் பிரித்து, த்வைதமாக காட்டி, ஜீவாத்மாவாகிய நாம் மோக்ஷம் அடைய அந்த பரந்தாமனை பஜிக்க வேண்டும் என்று பாடினார்?"
என்பது புரிந்து கொள்ள முடியாத விஷயமாகவே போகிறது.



இது ஆதி சங்கரர் பிழை அல்ல.
அத்வைத நிலையில் உள்ள ஆதிசங்கரர், "எந்த இடத்தில் அத்வைதத்துக்குள் த்வைதம் இருப்பதை கண்டார்?" என்றும் சரியாக புரிந்து கொள்ள முடியாததே காரணம்..

"பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று தான்" என்ற அத்வைத சித்தாந்தம் சத்தியம் என்றாலும்,
"எந்த இடத்தில் அத்வைதத்தில் த்வைதம் தெரிகிறது?" என்ற ரகசியத்தை விளக்கி சொல்ல வந்ததே "விசிஷ்டாத்வைதம்".

விசிஷ்டாத்வைதமே உண்மையில் 'ஆதி சங்கரர்' காட்டினார்.
அவர் "அத்வைதத்தில் விசேஷ தத்துவமாக த்வைதம் இருப்பதை கண்டதால் தான்" பஜ கோவிந்தம் நமக்கு கொடுத்தார்.

இந்த ரகசியம் பலருக்கு புரியாமல் இருந்த சமயத்தில், 
'ஆதி சங்கரர் காட்டிய விசிஷ்டாத்வைத மார்க்கத்தை', 
'வேதத்தின் உண்மையான அபிப்பிராயத்தை', 
பிற்காலத்தில் அவதரித்த "ஸ்ரீ ராமானுஜர்" தன் அவதார காலத்தில் வெளிப்படுத்தினார்.

ரகசிய அர்த்தத்தை அறிந்து கொள்வோம்:

அத்வைதம் "பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று தான்.. இரண்டும் வேறல்ல" என்று காட்ட, சில உதாரணங்களை நமக்கு காட்டி விளக்குகிறது.

1. "கடலும், அலையும் போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று" என்று சொல்கிறது அத்வைதம்.
"கடல் தான் அலையாக தெரிகிறது" என்பதால், 'அலை வேறு, கடல் வேறு' என்று அறிவுள்ளவர்கள் நினைக்க மாட்டார்கள்.
அது போல,
"பரமாத்மாவே தான் ஜீவாத்மாவாக தெரிகிறார்" என்பதால், 'ஜீவன் வேறு, பரமாத்மா வேறு' என்று ஞானிகள் நினைக்கமாட்டார்கள் என்கிறது அத்வைதம்

2. "பிம்பமும் (object) பிரதிபிம்பமும் (mirror image) போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று" என்று சொல்கிறது அத்வைதம்.
ஒரு கண்ணாடி முன் நிற்கும் போது, நம்முடைய பிம்பமே, பிரதிபிம்பமாக தெரிகிறது..
நகர்ந்து விட்டால், பிரதிபிம்பமும் மறைந்து விடும்.

"பிம்பம் தான் பிரதிபிம்பமாக தெரிகிறது" என்பதால், 'பிம்பம் வேறு, பிரதிபிம்பம் வேறு' என்று அறிவுள்ளவர்கள் நினைக்க மாட்டார்கள்.
அது போல,
"பரமாத்மாவே தான் ஜீவாத்மாவாக தெரிகிறார்" என்பதால், 'ஜீவன் வேறு, பரமாத்மா வேறு' என்று ஞானிகள் நினைக்கமாட்டார்கள் என்கிறது அத்வைதம்

3. "அதிஷ்டானமும் (real) ப்ரமையும் (illusion) போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று" என்று சொல்கிறது அத்வைதம்.
கயிறை பார்த்து, சில சமயம் பாம்பு என்று நினைக்கிறோம்.
கவனித்து பார்த்தால்,  அது பாம்பு(illusion) அல்ல, கயிறு (real) தான் என்று அறிந்து கொள்கிறோம்.
"அதிஷ்டானம் தான் ப்ரமையை போல காட்சி கொடுத்தது" என்பதால், 'அதிஷ்டானம் வேறு, ப்ரமை வேறு' என்று அறிவுள்ளவர்கள் நினைக்க மாட்டார்கள்.
அது போல,
"பரமாத்மாவே தான் ஜீவாத்மாவாக தெரிகிறார்" என்பதால், 'ஜீவன் வேறு, பரமாத்மா வேறு' என்று ஞானிகள் நினைக்கமாட்டார்கள் என்கிறது அத்வைதம்

4. "மஹாகாசமும், கடாகாசமும் போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று" என்று சொல்கிறது அத்வைதம்.
எங்கும் இருக்கும் ஆகாசமே, ஒரு ஒரு குடத்துக்குள், சிறு ஆகாசமாக தன்னை காட்டி கொள்கிறது.
அந்த குடம் உடைந்து போனால், குடத்துக்குள் இருந்த ஆகாசம் (கடாகாசம்), எங்கும் உள்ள ஆகாசத்தில் (மஹாகாசத்தில்) கலந்து விடுகிறது.

"மஹாகாசம் தான் கடாகாசமாக தெரிகிறது" என்பதால், "கடாகாசம் வேறு, மஹாகாசம் வேறு" என்று அறிவுள்ளவர்கள் நினைக்க மாட்டார்கள்.
அது போல,
"எங்கும் நிறைந்த பரமாத்மாவே, இந்த உடல் என்ற குடத்துக்குள் ஜீவாத்மாவாக தெரிகிறார்" என்பதால், 'ஜீவன் வேறு, பரமாத்மா வேறு' என்று ஞானிகள் நினைக்கமாட்டார்கள் என்கிறது அத்வைதம்






இப்படி மேற்சொன்ன உதாரணங்களை காட்டி, "பரமாத்மாவும், ஜீவாத்மாவும் வேறு போல தோன்றினாலும், உண்மையில் ஒன்று தான்" என்று விளக்குகிறது அத்வைதம்.

அஞானிக்கு அத்வைத சித்தாந்தம் "நானும் கடவுளே" என்ற சிந்தனையை விதைக்கிறதோ? என்று தோன்றலாம்.

"ஈஸ்வரனும் ஜீவனும் வேறல்ல" என்று அத்வைதம் காட்டி அருளிய ஆதி சங்கரர், "ஜீவாத்மாவாகிய நாம் மோக்ஷம் அடைய அந்த பரந்தாமனை பஜிக்க வேண்டும் என்று த்வைதமாக ஏன் பாடினார்? என்ற காரணத்தை தெரிந்து கொள்வோம்.

உண்மையில், மேற்சொன்ன அத்வைத உதாரணத்திலேயே, பேதம் ஒளிந்து இருக்கிறது...
அத்வைதத்தில் த்வைதம் ஒளிந்து இருக்கிறது.

அத்வைதத்தில் த்வைதம் விசேஷமாக ஒளிந்து இருப்பதை கண்டதால் தான், 
ஆதி சங்கரர் "நாமும் பரமாத்மாவும் ஒன்று தான் என்றாலும், ஜீவாத்மாவாகிய நாம் பரந்தாமனை வணங்கினால் தான் மோக்ஷம் கிடைக்கும்" 
என்று பஜ கோவிந்தம் இயற்றி நமக்கு கொடுத்து பேருபகாரம் செய்தார் என்று புரியும்.

"பரமாத்மாவும் நாமும் ஒன்று தான்" என்றாலும், "மோக்ஷம் அடைய நாம் பரமாத்மாவிடம் பக்தி செய்தே ஆக வேண்டும்" என்ற விசேஷ அர்த்தத்தை, 
ஆதி சங்கரரின் உண்மையான அபிப்ராயத்தை, வெளிக்காட்ட, பிற்காலத்தில் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர்,
"விசிஷ்ட  அத்வைதம்" என்ற வேதத்தின் முழுமையான அபிப்பிராயத்தை ஸ்ரீ ராமானுஜர் உலகுக்கு வெளிப்படுத்தினார்.

விசிஷ்ட அத்வைதம் என்ன சொல்கிறது? என்று கவனிக்கும் போது, அத்வைத சித்தாந்தத்தை வெளிக்காட்டிய ஆதிசங்கரர், ஏன் த்வைதமாக பஜ கோவிந்தம் பாடி, பக்தி செய்ய சொன்னார்? என்று புரிந்து கொள்ள முடியும்.

1. கடலும், அலையும் போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று என்று சொல்கிறது அத்வைதம். இது சத்தியம் தான்.
ஆனாலும், இந்த உதாரணத்தோடு நிறுத்தி விடுவதால், 'கடலும், அலையும் வேறல்ல, இரண்டும் ஒன்று தான்' என்ற அத்வைதம் மட்டும் நமக்கு வெளிப்படுகிறது.
இதில் ஒரு உண்மை ரகசியமாகவே உள்ளது.
"கடலும் அலையும் வேறல்ல" என்பது உண்மைதான்.
ஆனால்,
"கடல் அலையை உருவாக்கியதா? அலை கடலை உருவாக்கியதா? 
கடலுக்கு அலை ஆதாரமாக உள்ளதா? அலைக்கு கடல் ஆதாரமா?
ஆதாரம் எது? கடலா? அலையா?"
என்று மேலும் ஒரு கேள்வி கேட்கும் போது தான்,
ஆதி சங்கரர் ஜீவாத்மாவாகிய நம்மை ஏன் பக்தி செய்ய சொன்னார்? என்பது விளங்கும்.

அலைக்கு ஆதாரம் கடல். ஆனால் கடலுக்கு ஆதாரம் அலை அல்ல.
இந்த உண்மையை கவனிக்கும் போது, "அலையை உருவாக்க காரணமாக இருந்தது கடல்" என்ற உண்மை விளங்கும்.
அது போல,
"பரமாத்மாவாகிய கடல், ஜீவாத்மாவாகிய அலைக்கு ஆதாரமே தவிர,
ஜீவாத்மாவுக்கு ஆதாரம் பரமாத்மா இல்லை" என்ற உண்மை வெளிப்படும்.
"ஜீவாத்மாவுக்கு ஆதாரம் பரமாத்மா இல்லை" என்ற உண்மை புலப்படும் போதே "ஜீவாத்மாவை உருவாக்க காரணமாக இருந்தது பரமாத்மாவே" என்ற உண்மை விளங்கும்.

இந்த உண்மை அறியப்படும் போது, "அலை போன்ற நம்மை உருவாக்காமல் இருக்க, தன்னையும் கடலோடு சேர்த்து கொள்ள, கடல் போன்ற பரமாத்மாவிடம் பக்தி செய்வது ஒன்றே வழி. 
அலைக்கு ஆதாரமான கடல் நினைத்தால், அலை இல்லாமல் செய்ய முடியும் (ராமேஸ்வரத்தில் அலை கிடையாது). 
அது போல, 
பரமாத்மா என்ற கடல் நினைத்தால், ஜீவாத்மாவாகிய நம்மை பிரித்து அலையாக காட்டாமல், தன்னோடு சேர்த்து கொள்ள முடியும்" என்பது நமக்கு புரியும்.

அத்வைத நிலையை நாம் அடைய, பரமாத்மாவின் கருணை நமக்கு அவசியமாகிறது.

ஈஸ்வரன் என்ற கடல், நமக்கு கருணை செய்யாதவரை, நாம் அலை போல தெரிந்து கொண்டே தான் இருப்போம்.  பிறவி கடலை தாண்டவே முடியாது.



அவர் நமக்கு கருணை செய்ய, அவர் நம்மிடம் பக்தியை (அன்பை) எதிர்பார்க்கிறார். 
தன்னிடம் கடலோடு கடலாக சேர ஆசைப்படுகிறானா? என்று பக்தியை எதிர்பார்க்கிறார். 
நமக்கு அந்த ஆவல் (பக்தி) உண்டானால், 
பரந்தாமன் நமக்கு ஆதாரமாக இருக்கிறார் என்ற ஞான உண்டானால், 
அலை போன்ற உருவத்தை மறைத்து, கடலோடு கடலாக ஆக்கி கொண்டு விடுகிறார் (அத்வைதம்).


"அத்வைத நிலையை (ஈஸ்வரனோடு கலந்து விட்ட நிலை) அடைய, ஜீவனாக இருக்கும் வரை, நாம் பக்தி செய்தே ஆக வேண்டும்!!" என்ற தீர்ப்பை, ஆதி சங்கரர் பஜகோவிந்தத்தில் காட்டி விடுகிறார்.

பஜகோவிந்தம் அர்த்தத்துடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்
"அலை போன்று தனியாக இருக்கும் நம்மை, கோவிந்தன் என்ற கடலுடன் சேர்த்து கொள்ள, த்வைத நிலையில் உள்ள நாம் அந்த பரந்தாமனை பக்தி செய்வது ஒன்றே வழி" 
என்ற விஷேச ரகசியத்தை ஆதி சங்கரர் அறிந்ததால் தான், "பஜ கோவிந்தம்" இயற்றி, ஜீவாத்மாவாகிய நம்மை பக்தி செய்து, பரமாத்மாவின் கருணையை பெற்று மோக்ஷம் அடைய வழி காட்டினார்.

ஆதி சங்கரர் உண்மையில் காட்டிய வழி "விஷிஷ்ட அத்வைதமே"

அதே போல,
2. பிம்பமும் (object) பிரதிபிம்பமும் (mirror image) போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று என்று சொல்கிறது அத்வைதம்.

"பிரதிபிம்பத்துக்கு பிம்பம் ஆதாரமா? பிம்பத்துக்கு பிரதிபிம்பம் ஆதாரமா?ஆதாரம் எது?" என்ற கேள்வி எழும் போது, பிரதிபிம்பத்துக்கு ஆதாரம் பிம்பமே என்ற உண்மை நமக்கு புரிகிறது.
பிரதிபிம்பம் தெரிவதற்கு காரணமே, பிம்பம் இருப்பதால் தான் என்ற உண்மை புரிகிறது.
பிரதிபிம்பம் இல்லாமல் போனாலும், பிம்பம் இருக்கும் என்ற உண்மையும் புரிகிறது.

இந்த உதாரணத்தின் படி பார்த்தால்,
ஆதாரம் எது? என்ற கேள்வி ஏழும் போது தான், நமக்கு ரகசியங்கள் விளங்குகிறது.
பிம்பம் (ஈஸ்வரன்) மாயை என்ற கண்ணாடி முன் நிற்காமல் இருந்தால், பிரதிபிம்பம் (ஜீவன்) உருவாகாது என்ற உண்மை புரிகிறது.
ஜீவனாகிய நம்மை உருவாக்காமல் இருக்க வேண்டும் என்றால், அவர் நினைத்தால் மட்டுமே சாத்தியம்.
அவர் நம்மை உருவாக்காமல் இருக்க செய்ய வேண்டுமென்றால், நாம் அவரிடம் பக்தி செலுத்துவது ஒன்றே வழி. 
இதை அறிந்த ஆதி சங்கரர், "ஜீவாத்மாவாகிய நாம் பரந்தாமனை வணங்கியே ஆக வேண்டும்" என்று பாடுகிறார்.

அதே போல,
3. அதிஷ்டானமும் (real) ப்ரமையும் (illusion) போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று என்று சொல்கிறது அத்வைதம்.

ப்ரமைக்கு அதிஷ்டானம் ஆதாரமா? அதிஷ்டானத்துக்கு ப்ரமை ஆதாரமா?ஆதாரம் எது? என்ற கேள்வி எழும் போது, "ப்ரமைக்கு ஆதாரம் அதிஷ்டானமே" என்ற உண்மை நமக்கு புரிகிறது.
கயிறு இல்லாமல், இந்த ப்ரமை கூட ஏற்படாது..
இல்லாத ஒன்றை (ஜீவன்) இருப்பதாக காட்டுவதும் பரமாத்மாவே.

இந்த ரகசியத்தை அனுபவத்தில் கொண்டவர், ஆதி சங்கரர்.

இந்த உண்மை அறியப்படும் போது, ப்ரமை போன்ற நம்மை உருவாக்காமல் இருக்க, அதிஷ்டானம் போன்ற பரமாத்மாவிடம் பக்தி செய்வது ஒன்றே வழி என்று புரிந்து விடும்.
புலன்களை கொடுத்து (மாயை), ப்ரமை போன்ற நம்மை உருவாக்கி லீலை செய்பவரும் அவர் தான் என்ற உண்மை புரியும்.

அதே போல,
4. மஹாகாசமும், கடாகாசமும் போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று என்று சொல்கிறது அத்வைதம்.

மஹாகாசத்திற்கு கடாகாசம் ஆதாரமா? கடாகாசத்திற்கு மஹாகாசம் ஆதாரமா? ஆதாரம் எது? என்ற கேள்வி எழும் போது, கடாகாசத்துக்கு ஆதாரம் மஹாகாசமே என்ற உண்மை நமக்கு புரிகிறது.
வெளியில் எங்கும் உள்ள ஆகாசம் (பரமாத்மா) தான், பானைக்குள்ளும் சிறிய ஆகாசம் (ஜீவன்) போல தெரிகிறதே தவிர, 
பானைக்குள் இருக்கும் ஆகாசம், வெளி ஆகாசத்தை உருவாக்கவில்லை.

இந்த உடம்புக்குள் புகுந்த சிறிய ஜோதியே ஜீவன்.
இந்த உடம்பு என்ற பானை உடையும் போது, தான் ஜீவனல்ல என்ற உண்மையை உணர்கிறான்.



இந்த உடம்பை கொடுத்து ஜீவனாக தெரிய செய்வது அந்த பரமாத்மாவே.
நமக்கு (கடாகாசம்) ஆதாரமான பரந்தாமனை (மஹாகாசம்) பக்தி செய்யாமல், அவரிடம் சேர்ந்து விட ஆசை இல்லாமல் இருக்கும் வரை, நம்மை மனித உடலிலோ, மிருக உடலிலோ, மரங்களிலோ புகுத்தி ஜீவனாக பிரித்து காட்டி லீலை செய்கிறார்.

நாமும் அவரும் வேறல்ல என்ற அத்வைத நிலையை நாம் அடைய, மோக்ஷத்தை அடைய, 
"அந்த பரந்தாமனை பக்தி செய்வது ஒன்றே வழி" என்பதால், ஆதி சங்கரர் பஜகோவிந்தம் இயற்றி நம்மிடம் தந்து விட்டார்.

பிற்காலத்தில் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர், விஷிஷ்ட அத்வைதத்தை ப்ரகாசப்படுத்தி, "நாம் அத்வைத நிலையை (அலைகள் ஒடுங்கி கடலுடன் அடங்க) அடைய, முதலில் அந்த பரந்தாமன் நாராயணனை பஜித்து, அவர் கருணைக்கு பாத்திரமாக வேண்டும். அவர் கருணையின் மூலமே நம்மை மீண்டும் பிறக்க செய்யாமல் தன்னுடன் சேர்த்து கொள்வார்" என்ற ரகசியத்தை உலகுக்கு வெளிப்படுத்தினார்.

கடல் போன்ற "பரந்தாமன்", அலை போன்ற "நம்மை" படைக்கிறார்.
கடல் தான் அலையை உருவாக்குகிறது.

கடல் போன்ற பரந்தாமனும், அலை போன்ற தானும் ஒன்று தான் என்று அத்வைத அறிவுடன் இருந்து, அலையாக இருக்கும் வரை எது நடந்தாலும் வைராக்யத்தோடு இருந்து விட்டால் மட்டும், அலை (சம்சாரம்) ஓய்ந்து விடாது.

அத்வைத ஞானத்தில், அலை போன்று இருக்கும் நாம், அத்வைத அறிவுடன் இருக்க வேண்டுமே தவிர அத்வைத அனுபவத்துடன் இருந்தால், இந்த உலகில் உள்ள மற்ற அலைகளுடன் வாழ முடியாது.
இது தேவையற்ற துயரமே..
சுகப்ரம்மம் போன்ற சில ஞானிகள் மட்டுமே இப்படி வாழ்ந்தனர். வாழ முடியும்.

அத்வைத அனுபவம் நமக்கு தேவையே இல்லை.
அலை போன்ற ஜீவனாக பிறந்து இருக்கும் நாம், அத்வைத அறிவுடன் (ஞானம்) இருந்தாலேயே போதுமானது.

இந்த அலையை ஓய வைத்தால், அலையும் கடல் ஆகி விடுகிறது. ராமேஸ்வரத்தில் காணும் கடல் போல.
இது அத்வைத அனுபவம்.
இந்த அத்வைத அனுபவம் நமக்கு மோக்ஷம் கிடைத்த பிறகே உண்மையில் கிடைக்கும்.

கடல் மனது வைத்தால் தான் அலை ஏற்படுத்தாமல் இருக்க முடியும்.

மோக்ஷம் கொடுக்க, கடல் போன்ற பரந்தாமன் மனம் குளிர வேண்டும்.
நம்மை மீண்டும் மீண்டும் அலையாக உருவாக்காமல், அலை ஓயவேண்டும் என்றால், அவர் நம் மீது கருணை செய்தே ஆக வேண்டும்.

அவர் கருணை செய்ய, அலை போன்ற நாம் "அலை போன்ற இந்த பிரிந்த உருவத்தை, மாய உருவத்தை வெறுக்க வேண்டும். சம்சாரத்தில் அலையாக அடி வாங்குவதை வெறுக்க வேண்டும்.
இந்த அலையை ஓய வைக்கும் சக்தி, அந்த கடல் போன்ற பரந்தாமனுக்கே உண்டு என்ற உண்மையை உணர வேண்டும்.

இந்த உண்மை அறியப்படும் போது, ஜீவன் பக்தி செய்ய முடிவு செய்கிறான். பரமாத்மாவின் கருணையை எதிர்பார்க்கிறான்.

அலை போன்று வாழும் வாழ்க்கையை எதிர்கொள்ளவும் தயாராகிறான்.
அத்வைத அறிவு உள்ள இவனின் நோக்கம், அத்வைத அனுபவத்தை மோக்ஷத்தில் பெறுவதே என்றாலும், அலை போன்ற தன்னை ஓய செய்ய தன்னால் ஆகாது என்று தெளிவு பெறுகிறான்.
வாசுதேவ கிருஷ்ணனை சரண் அடைகிறான்.

இந்த நிலையில் ஆதி சங்கரர், "கோவிந்தனை பஜித்து, அத்வைத அனுபவத்தை தரும் மோக்ஷத்தை அவர் கருணையால் பெற்று கொள்" என்று பஜ கோவிந்தம் நமக்கு கொடுத்தார்.

ஆதி சங்கரரை வெறும் அத்வைதி என்று மட்டும் நினைப்பதை விட, அவர் விஷிஷ்டாதவைத் தத்துவத்தை தான் நமக்கு காட்டினார் என்று புரிந்து, கிருஷ்ண பக்தி செய்வோம்.

ஸ்ரீ ராமானுஜர் சொன்ன விசிஷ்டாத்வைதமே, ஆதி சங்கரரும் சொல்கிறார். 
ஆதி சங்கரரை "அத்வைதி" என்று மட்டும் சொல்வதை தவிர்த்து, பஜகோவிந்தம் அளித்த ஆதி சங்கரரும் விசிஷ்டாத்வைதமே (அத்வைதம் + விஷேச தத்துவம்) சொல்கிறார் என்ற உண்மையை அறிவோம்.
கிருஷ்ண பக்தி செய்வோம். 
அவர் கருணையால், மோக்ஷம் அடையும் போது, அத்வைத நிலையில் பரந்தாமனுடன் இரண்டற கலந்துவிடுவோம்.

வாழ்க ஸ்ரீ ராமானுஜர் புகழ், வாழ்க ஆதி சங்கரர் புகழ்.
வாழ்க ஹிந்து தர்மம். 

வாழ்க ஹிந்துக்கள்.


Monday, 2 October 2017

தெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? மனித முயற்சியால் பெற முடியாத 5 விஷயங்களை தெய்வத்திடம் கேள் என்று சொல்லி தருகிறார் ஆதி சங்கரர்... தெரிந்து கொள்வோமே...

"தெய்வத்திடம் நாம் 
என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? 
எதை கேட்க வேண்டும்?"
ஆதி சங்கரர் நமக்கு வழி காட்டுகிறார்.


பொதுவாக, நாம் "பக்தியோடு" எதை கேட்டாலும், பகவான் நமக்கு கேட்டதை தருவார்.

கேட்பதில் உயர்ந்த விஷயங்கள் உண்டு,
கேட்பதில் மிகவும் சாதாரண விஷயங்கள் உண்டு.

வரம் கொடுப்பவர், எதையும் கொடுக்க முடிந்தவர் என்று தெரிந்தும், அல்ப விஷயங்களை கேட்பவன், கோடீஸ்வரனிடம் போய் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல ஆகும்.

பிரார்த்தனை செய்தேன், நோய் சரியாகி விட்டது, 
பிரார்த்தனை செய்தேன், செல்வம் கிடைத்து விட்டது,
பிரார்த்தனை செய்தேன், வேலை கிடைத்து விட்டது, 
என்று சந்தோஷப்படுவது எல்லாம், கோடீஸ்வரனிடம் போய் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல ஆகும்.
அல்ப தெய்வங்கள் இதை மட்டுமே கொடுக்கும்.

"பரவாசுதேவன்" எதையும் தரவல்லவர்.

உன்னதமான சனாதன தர்மத்தை புரிந்து கொள்ளாமல், பொய் மதமான பௌத்த மதம் போன ஒரு சில க்ஷத்ரிய அரசர்களால்,
நம் பாரத நாடு 1000 வருடங்கள் இஸ்லாமியருக்கும், 200 வருடங்கள் கிறிஸ்தவருக்கும் அடிமைப்பட்டு,
க்ஷத்ரிய அரசர்களையும் இழந்து, 
செல்வங்களும் கொள்ளை அடிக்கப்பட்டன.

"வளர்ந்த நாடாக" இருந்த நம் தேசம், விடுதலையின் போது ஏழை நாடாக ஆனது. 1947ADல் ஏழைகளாக விடப்பட்டனர் நம் முன்னோர்கள். 

ஏழை நாடாக விடப்பட்ட பாரத நாடு, பெருமுயற்சி செய்து "வளரும் நாடாக" இன்று உள்ளது.

ஆதி சங்கரர் இதற்கு முன்னரே அவதரித்து, நம் பாரத மக்களுக்கு,
நம் கலாச்சாரத்தின் பெருமையை,
நம் தர்மத்தின் பெருமையை,
நம் வேதத்தின் உண்மையான மகிமையை,
நம் சனாதன தர்மத்தின் பெருமையை போதனை செய்து,
மக்களை தர்ம வழியில் உறுதியாக நிறுத்தி விட்டார்.

இந்த பலமே, க்ஷத்ரிய அரசர்களை நாம் இழந்தும், இன்று வரை நம்மை ஹிந்துவாக வைத்துள்ளது.

ஆதி சங்கரர் மக்கள் தர்மங்களை புரிந்து கொள்ள, வேதத்தை பாஷ்யம் செய்து கொடுத்தார்.


"பாஷ்யமும் அனைவருக்கும் புரிவதற்கும், படிப்பதற்கும் கடினமே" என்று உணர்ந்து, யாவரும் சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் கொடுத்தார்.
"ஸ்லோகங்கள்" மூலம் தர்மங்களை விளக்கினார்.
எளிதாக பாடக்கூடியதான "பஜ கோவிந்தம்" கொடுத்தார்.

முக்கியமாக, "நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?" என்று வேதம் சொல்கிறது என்று எளிதான ஸ்லோகங்கள் மூலம் நமக்கு தர்மத்தை புரியவைத்தார்.

தெய்வத்திடம் அநேகமானவர்கள் பொதுவாக கேட்பது,
"எனக்கு வேலை கிடைக்க வேண்டும்,
எனக்கு குழந்தைகள் இல்லை குழந்தை வேண்டும்,
ப்ரோமோஷன் வேண்டும்,
நோய் தீரனும்,
என் பையனுக்கு, பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும்"
என்று கேட்டு கொண்டிருப்பார்கள்.
ஆதி சங்கரர் 'இதையெல்லாம் போய் பகவானிடம் கேட்காதே' என்று சொல்லி, "நீ கேட்க வேண்டியது என்று சில உள்ளது, உன் முயற்சியால் கூட அடைய முடியாததை பகவானிடம் கேள்" என்று சொல்லி கொடுக்கிறார்.


இனி ஹிந்துவாக இருப்பவர்கள், ஆதி சங்கரர் சொன்ன வழியில் பிரார்த்தனை செய்யலாம்.

நம் புராதன வேதம், நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்? என்று சொல்லி இருக்கிறது என்ற ஆதி சங்கரர் விளக்குகிறார்.

1. கர்வம்
தெய்வத்திடம் நாம் முதலில் கேட்க  வேண்டியது,
"பகவானே !! முதலில் 'நான் செய்கிறேன்' என்ற என் கர்வத்தை (அஹங்காரம்) என்னிடம் இருந்து விலக்கி விடுங்கள்"
என்று கேட்கவேண்டும்.

நமக்கு முக்கியமாக தேவையானது - விநயம் (அடக்கம்).

இந்த விநயம் (அடக்கம்) நமக்கு வராமல் இருப்பதற்கு காரணம், நம்மிடம் "நான் செய்கிறேன்" என்று இருக்கும் கர்வமே காரணம்.

அனைத்தையும் படைத்த பகவானிடம், நாம் போய் "என் கஷ்டம், என் துக்கம், என் வேலை" என்று நான், என்னுடைய என்று சொல்வதே 'நம் கர்வத்தை' காட்டுவதாகும்.

நிறைய படிப்பதனால், உயர்ந்த பதவி கிடைப்பதால், உடனே கர்வம் நமக்கு வந்து விடும்.
"எத்தனை விஷயங்கள் நமக்கு தெரிந்தாலும், அது சமுத்திரத்தில் நாம் எடுத்த ஒரு துளி தான்" 
என்ற மனப்பக்குவம் எப்பொழுதும் நமக்கு இருக்க வேண்டும்.
இந்த மனப்பக்குவம், நமக்கு விநயத்தை தரும்.

மேலும் "எல்லாம் தெரிந்து கொண்டு விட்டோம்" என்ற கர்வத்தை உண்டாக்காமல், "மேலும் தெரிந்து கொள்ளலாம்" என்று நம்மை உணர வைக்கும்.

சாஸ்திரம் நம்மை பார்த்து "எல்லோரும் எல்லாமும் தெரிந்தவர்கள் அல்ல" என்று சொல்லி,
"உனக்கு சில விஷயங்கள் தெரியலாம், 
அடுத்தவருக்கு உனக்கு தெரியாத சில விஷயங்கள் தெரியலாம். 
கற்றுக்கொள்ள வேண்டியது உலக அளவு இருக்க, எப்படி உனக்கு கர்வம் வரும்?" என்று கேட்கிறது.

அனைத்து விஷயங்களிலும் "விநயமாக (அடக்கமாக) இரு"
என்று சொல்கிறது நமது சாஸ்திரம்.

"எல்லாம் தெரியும்" என்ற நம் கர்வம், தெய்வத்திடம் போய் கூட கர்வத்துடன் பேச வைக்கிறது.

"எல்லாம் தெரிந்தவர் அந்த பரவாசுதேவனே" என்று தெரிந்தும்,
நான், என் என்று அவரிடம் பேசுவது தகாது. 

"எல்லாம் தெரிந்தவருக்கு உன் துக்கம், நோய் தெரியாதா? சொல்லித்தான் அவருக்கு தெரியுமா?

அதனால்,
"நம் விநயத்துக்கு எதிரியாக இருக்கும், நம்மால் அழிக்க முடியாத கர்வத்தை நீக்கு"
என்று முதலில் ப்ரார்த்திக்க வேண்டும் என்று ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.


கர்வம் இல்லாதவனிடம் விநயம் (அடக்கம்) தானே வரும். 

விநயம் நம்மில் வளர வளர, "இன்னும் தெரிந்து கொள்வோம்" என்ற ஆசை உண்டாகும்.

விநயம் உள்ளவனுக்கே, கேட்கும் புத்தி வளரும்.

பல விஷயங்கள் கேட்க ஆசை உள்ளவனுக்கு, "உலக அறிவும், ஆன்மீக அறிவும் எளிதில் ப்ரகாசமடையும்".

பர்த்ரு ஹரி ஒரு ஸ்லோகத்தில்,
"ஒரு சமயத்தில் எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து இருந்தேன். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக பெரியோர்கள், மகான்கள் சொல்வதை கேட்க கேட்க, எனக்குள் பல விஷயங்கள் மனதில் பதிய பதிய, இப்பொழுது எனக்கு எதுவுமே தெரியாது என்ற புரிந்து, அடக்க நிலைக்கு வந்து விட்டேன். கர்வம் அழிந்து, இன்னும் தெரிந்து கொள்ள ஆசை கொண்டேன்" 
என்கிறார்.

ஆக,
"ஒருவன் எத்தனை படித்து இருந்தாலும், நமக்கு தெரியாத விஷயங்களும் சிலருக்கு தெரியும்" என்று அடக்கமாக இருக்க வேண்டும்.

"ஒருவன் எத்தனை செல்வந்தனாக இருந்தாலும், நம்மை விட செல்வந்தன் உண்டு" என்று அடக்கமாக இருக்க வேண்டும்.

எந்த காலத்திலும், "நான் உயர்ந்தவன் இல்லை", 
எந்த காலத்திலும் "அந்த பரமேஸ்வரன் ஒருவர் தான் உயர்ந்தவர்" 
என்ற ஞானம் (அறிவு) நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

கொஞ்சம் படித்தாலும்,
கொஞ்சம் பணம் சேர்ந்தாலும்,
கொஞ்சம் பேசினாலும்,
நம்மையும் மீறி, நமக்குள் இந்த கர்வம் வந்து விடும்.

இந்த "நான், எனது" என்கிற கர்வத்தை, "நம் முயற்சியால்" போக்கிக்கொள்ளவே முடியாது. 

தெய்வத்திடம் சொல்லி, தெய்வ அணுகிரஹத்தால் மட்டுமே, நம்மில் இருக்கும் இந்த கர்வத்தை அழிக்க கொள்ள முடியும்.

ஆதி சங்கரர், அதனால் தான், பகவானிடம் நீ முதலில் கேட்க வேண்டியது 'பகவானே, முதலில் என் மனசில் இருக்கும் கர்வத்தை நீக்கி விடு'
என்று பிரார்த்திப்பது தான் என்கிறார்.

2. ஆசை
இரண்டாவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.

நாம் செய்யவேண்டிய இரண்டாவது பிரார்த்தனை,
'பகவானே! என்னுடைய மனதில் இன்றுவரை நிறைய ஆசைகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த ஆசைகளை வராமல் செய்து விடு" 
என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

நமக்கு மனதில் எத்தனைக்கு எத்தனை ஆசைகள் உருவாகி கொண்டே இருக்கிறதோ, அந்த ஆசையினால் துக்கங்கள் உண்டாகிறது. 

ஒரு ஆசையை நிறைவேற்ற முயன்றால், அது பலிக்கும் போது, இன்னொரு ஆசை மனதில் உண்டாகிறது.

அந்த ஆசையை நிறைவேற்ற முயன்றால், அது பலிக்கும் போது, மற்றொரு ஆசை மனதில் உண்டாகிறது.



முடிவே இல்லாத ஆசைகள், திருப்தி இல்லாதவனுக்கு வந்து கொண்டே இருக்கும்.
திருப்தி இல்லாததால் துக்கம் உண்டாகும்.

கர்வத்தை நம்மால் அழிக்க முடியாதது போல,
மனதில் வந்து கொண்டே இருக்கும் இந்த ஆசையையும் நம் திறமையால் அழிக்கவே முடியாது.

அதனால்தான், ஆதி சங்கரர் இரண்டாவதாக,
"என் மனதில் ஆசையே இனி வரக்கூடாது" என்று பிரார்த்தனை செய் என்று சொல்லி தருகிறார்.

பகவான் அனுகிரஹத்தால் மட்டுமே,
நம்மால் அழிக்க முடியாத கர்வத்தையும், நம்மிடம் உருவாகும் ஆசையையும் அழிக்க முடியும்.

3. திருப்தி:
மூன்றாவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.

நாம் செய்யவேண்டிய மூன்றாவது பிரார்த்தனை,
'பகவானே! எனக்கு என்று எது உள்ளதோ, அதை பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை கொடு"
என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.
பகவத் கீதையில், இந்த திருப்தியை பற்றி ஸ்ரீ கிருஷ்ணர்
"யதுர்சா லாப சன்துஷ்ட: த்வந் த்வா தீதோ விமத் சர: !
சம: சித்தாவ சித்தௌ ச க்ருத் வா பி ந நிபத் யதே !!'"
(4 chapter, 22 sloka)
என்று சொல்லும் போது,
"நானாக போய் யாரிடமும் கை எந்த மாட்டேன். எனக்கு என்று எது கிடைக்கிறதோ அதை கொண்டு நான் சந்தோஷப்படுவேன் என்கிற திருப்தியில் எவன் இருக்கிறானோ!! அவனை சுகம்-துக்கம், வெற்றி-தோல்வி என்ற எந்த அனுபவமும் மனதளவில் பாதிக்காது" என்கிறார்.

"திருப்தியாக உள்ளவனின் நிலையை" இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.

'மனதில்' த்ருப்தி இல்லாத மனிதனுக்கு'மனதில்' சுகம் கிடைக்காது.

கர்வத்தையும், ஆசையையும் நம்மால் அழிக்க முடியாதது போல, 
"கிடைத்தது போதும்" என்கிற த்ருப்தியும், நம் முயற்சியால் வரவே வராது.

தெய்வ அனுக்கிரகத்தால் மட்டுமே, மனதில் த்ருப்தி ஏற்படும்.

அதனால்தான், ஆதி சங்கரர் மூன்றாவதாக,
"பகவானே! எனக்கு என்று எது உள்ளதோ, அதை பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை கொடு" 
என்று பிரார்த்தனை செய் என்று சொல்லி தருகிறார்.

பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, நம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி' என்ற குணத்தையும் கொடுக்க முடியும்.

4. இரக்கம்:
நான்காவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.


நாம் செய்யவேண்டிய நான்காவது பிரார்த்தனை,
'பகவானே! எனக்கு யாரை பார்த்தாலும் மனதில்
இரக்க சிந்தனை உருவாகும் படி செய்யுங்கள்" 
என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

நம்மால் கொண்டு வர முடியாத குணம் "இரக்கம்".
இரக்க குணம் உள்ளவனுக்கு, 
மற்றவர்கள் செய்யும் தவறுகள் தெரிந்தாலும், "அவன் தெரியாமல் செய்கிறான்" என்று அவன் மீதும் இரக்கம் வரும்.

இரக்க குணம் உள்ளவனுக்கு, 
"உயிரை கொன்று, மாமிசம் சாப்பிட கூடாது" என்ற எண்ணம் தோன்றும். 

"இரக்க குணம் உள்ளவனுக்கு", எதை பார்த்தாலும், யாரிடத்திலும் 'கோபமே' வராது.

'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் நம்மால் அழிக்க முடியாதது போல, 
மனதில் 'த்ருப்தி' கொண்டு வரவே முடியாதது போல, 
எதனிடத்திலும் 'இரக்கம்' காட்டும் குணம், நம் முயற்சியால் வரவே வராது.

தெய்வம், அனுக்கிரகம் செய்தால் மட்டுமே, இந்த இரக்க குணம் மனதில் ஏற்படும்.

அதனால்தான், ஆதி சங்கரர் நான்காவதாக,
"பகவானே! எனக்கு யாரிடத்திலும் இரக்கம் வருமாறு உள்ள குணத்தை கொடு" 
என்று பிரார்த்தனை செய் என்று சொல்லி தருகிறார்.

பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, 
நம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி', 'இரக்கம்' என்ற குணத்தையும் கொடுக்க முடியும்.

5. மோக்ஷம்
கடைசியாக ஐந்தாவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.

நாம் செய்யவேண்டிய ஐந்தாவது பிரார்த்தனை,
'பகவானே! பல யுகங்களாக நானும் இந்த ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கி எழுந்து கொண்டு இருக்கிறேன். 
எவ்வளவு தடவை இப்படியே இருந்து கொண்டிருப்பது? 
என்னை இந்த ஸம்ஸார ஸாகரத்தில் இருந்து தாண்ட வைத்து விடு. மோக்ஷத்தை கொடு" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

இங்கு ஸம்ஸார ஸாகரம் என்று சொல்வது, ஜனனம்-மரணம் என்ற சுழற்சியை.

இந்த சுழற்சியையே, ஆதி சங்கரர், பஜ கோவிந்தம் பாடும் போது "புனரபி ஜனனம், புனரபி மரணம்,
புனரபி ஜனனீ ஜடரே சயனம் I
இஹ ஸம்ஸாரே பகுதுஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே !!"
என்று பாடுகிறார்.
இதற்கு அர்த்தம்,
"பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து உண்டாகி கொண்டே இருக்கிறது. இந்த பிறப்பிலும் மீண்டும் தாயின் கருவறையில் பிறந்தாயிற்று. 
கடக்க முடியாத இந்த சக்கரத்தில் இருந்து, விடுவித்து, அக்கரை காண கடாக்ஷித்து அருளமாட்டாயா கோவிந்தா?" என்கிறார்.
நாம் பிறந்தாச்சு. கொஞ்சம் வருஷம் வாழ்ந்து தான் ஆக வேண்டும். பின்பு இறந்து தான் ஆக வேண்டும்.
செய்த பாவ, புண்ணிய பலன் படி, திரும்ப ஏதாவது ஒரு தாயார் வயிற்றில் பிறக்க தான் வேண்டும். 
ஆனால் இப்படியே எவ்வளவு நாள் ஸம்ஸார சாகரத்தில் சூழல்வது?

'கர்வத்தை'யும், 'ஆசை'யையும் நம்மால் அழிக்க முடியாதது போல,
மனதில் 'த்ருப்தி'யும், 'இரக்கத்தை'யும் நம்மால் கொண்டு வரவே முடியாதது போல,
ஸம்ஸார சக்கரத்தில் இருந்து, நம் முயற்சியால் முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது.
தெய்வம், அனுக்கிரகம் செய்தால் மட்டுமே, மோக்ஷம் நமக்கு ஏற்படும்.

"உன் முயற்சியால், பெற முடியாத இந்த 5 விஷயங்களையும், 
பகவானிடம் கேள்" 
என்று ஆதி சங்கரர் நமக்கு சொல்லிதருகிறார்.

"யாராலும் தர முடியாத, பகவான் மட்டுமே தரக்கூடிய, இந்த 5 விஷயங்களை உனக்கு கேட்டுக்கொள்ளாமல், 
அற்பமான பணத்தையும், 
உனக்கு வந்த நோயை பற்றியும் கேட்டு வீண் செய்யாதே" 
என்று சொல்லி தருகிறார்.
நீ இந்த 5 விஷயங்களையும் பகவானிடம் தினமும் பிரார்த்தித்து கொண்டே இரு. 

பகவான் நம்மிடம் கருணை கொண்டு, அணுகிரஹித்து விட்டால், இதை விட லாபம் ஒரு மனிதனுக்கு ஒன்று உண்டா?
இதை விட்டு, 
மிகவும் அற்பமான எதை எதையோ கேட்டு!! உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதே !

இப்படி, "தெய்வத்திடம் எதை கேட்க வேண்டும்?" 
என்று எளிதாக நமக்கு காரணத்தோடு விளக்கி சொல்லித்தந்த ஆதி சங்கரர், இது போன்று பல தர்ம தத்துவங்களை பல ஸ்லோகங்களில் நமக்காக சொல்லி இருக்கிறார்.
ஹிந்துவாக உள்ள நீங்கள், 
ஆதி சங்கரரின் ஸ்லோகங்களை, தினமும் ஒவ்வொன்றாக படித்து, 'அர்த்தங்களை புரிந்து கொள்ள' முயற்சி செய்யுங்கள். 

அடிக்கடி அர்த்ததோடு ஸ்லோகங்களை மனதில் கொண்டு வந்தாலேயே, நமக்கு எப்படி அழகாக நிம்மதியாக வாழ்க்கையை நடத்த வேண்டும்? என்று புரிந்து விடும்.

"பிரச்சனைகள் பதட்டம், பயம்" உள்ள நம் வாழ்க்கையில், உள்ள தவறுகளையும் திருத்தி கொள்ள முடியும்.

"நாம் ஹிந்துவாக இன்றும் வாழ காரணமாயிருந்த"  ஆதி சங்கருக்கு நாம் செய்யும் நன்றி, நம் தவறுகளை திருத்தி கொண்டு, ஆதி சங்கரரின் பாடல்களை அர்த்தத்துடன் மனதில் அனுபவத்து கொண்டு இருப்பதே

"ஹர ஹர சங்கரா, ஜெய ஜெய சங்கரா"

சிருங்கேரி சங்கராச்சாரியார் அருளுரை