ஆண், தன்னை எதிர்ப்பவர்களை தன் உடல் பலத்தால் எதிர்க்கிறான்.
பெண், தன்னை எதிர்ப்பவர்களை, தன் பொறுமையால், தியாகத்தால், அன்பால் எதிர்க்கிறாள். எதிர்க்க வேண்டும்.
பெண்ணுக்கு பொறுமையும், தியாகமும், அன்புமே பலம்.
பொறுமை இல்லாத பெண், குலத்தை நாசம் செய்கிறாள்.
தியாக குணம் இல்லாத பெண், பிரச்சனையை வளர்க்கிறாள்.
அன்பு இல்லாத பெண், வெறுப்பை வளர்க்கிறாள்.
சீதாதேவி, 10 மாதம் ராவணனால் சிறைபிடிக்கப்பட்டு, ராமபிரான் ராவணனை கொன்ற பின்,
வானரர்கள், ராக்ஷஸர்கள் முன்னிலையில் 'அக்னியில் இறங்கி' தன் கற்பை நிரூபித்தாள்.
இருந்தாலும், 'சீதாதேவி, 10 மாதம் ராவணனால் சிறைபிடிக்கப்பட்டாள்' என்ற காரணத்தை காட்டி, சீதையை பற்றி அவதூறு பேச ஆரம்பித்து விட்டார்கள் அயோத்தி மக்கள்.
'ராமர் மோகத்தால் இப்படி சீதையை ஏற்று கொண்டு விட்டாரே!!!!'
என்று ராமரை பற்றியெல்லாம் பேச ஆரம்பித்து விட்டனர்.
அயோத்தி அரசரான ராமபிரான், பெரும் சங்கடத்தில் ஆழ்ந்தார்.
"இப்படி ஒவ்வொருவருக்காகவும் சீதையை அக்னி பிரவேசம் செய்ய வைக்க முடியுமா? இது நியாயமா?.. இப்படி மக்கள் சீதையை இப்படி பேச ஆரம்பித்து விட்டார்களே!! இவர்கள் சந்தேகத்தை போக்க வழியே இல்லையே!!"
என்றும் கவலைப்பட்டார்.
அரசனுக்கு "மனைவி மக்கள் மட்டும்" குடும்பம் அல்ல.
அரசனுக்கு, "மக்கள் அனைவருமே" தன் குடும்பம் தான்.
அனைவருக்கும் சம்மதமாக வாழவேண்டியது தலைவனின் கடமை.
சீதாதேவி, அரசனாக இருக்கும் ராமபிரானின் நிலைமையை உணர்ந்து கொண்டாள்.
சீதாதேவி, அயோத்தியாவின் அரசர் ராமபிரானை பார்த்து சொல்கிறாள், "அயோத்தி மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நீக்க, உங்களை பற்றி அவதூறு பேசுவதும் நிற்க, நான் உங்களை விட்டு விலகுவதே வழி. ஆண் தன்னை எதிர்ப்பவர்களை, உடல் பலத்தால் அடக்குகிறான். உடல் ரீதியாக வெல்லமுடிந்தாலும், ஆண்களால் எதிரியை திருத்த முடியாமல் போகிறது. பெண்ணுக்கு பலம் பொறுமையும், தியாகமும், அன்புமே. சந்தேகப்படும் என் மக்களிடம் கோபத்தை காட்டுவதை விட, என் பொறுமையையே காட்ட விரும்புகிறேன். நான் உங்களை விட்டு விலகி சென்று, என் தியாகத்தால், மக்களின் சந்தேகத்தை நீக்கி, அவர்கள் அன்பை பெறுவேன். நீங்கள் கவலைப்படாதீர்கள். மேலும் உங்களை என் காரணமாக பழித்து பேசுவதும் நிற்கும்"
என்று சொல்கிறாள்.
ஸ்ரீ ராமரின் குணங்களை பார்த்தே, "இவர் பரமாத்மா" என்று உணர்ந்தார் ஹனுமான் என்று பார்க்கிறோம்.
ராமபிரானின் குணங்களுக்கு ஈடு கொடுக்கிறாள் சீதாதேவி.
பெண்ணுக்கு 'சகிப்பு தன்மையே, த்யாகமே, அன்பே பலம்' என்று சீதாதேவியே நமக்கு காட்டுகிறாள்.
சீதையின் பெருமையை கொண்டாடுபவர்கள் "ராமா" என்று சொல்வதை விட "சீதாராம்" என்று சீதையை சேர்த்து சொல்லி ஆனந்தப்படுகிறார்கள்.
"பகவானை பார்க்க வேண்டும்" என்ற ஆசை நமக்கு உண்மையாக இருக்குமானால்,
வேத சாஸ்திரங்கள் சொன்ன வழியில் சென்று முயற்சி செய்ய வேண்டும்.
வெறும் வாய் வார்த்தையில், விதண்டாவாத பேச்சுக்களால், பகவானை தரிசிக்க முடியாது.
நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு, அதற்கான பலன்களை தந்து விடுகிறார் பகவான். பலன்களை தருவதற்கு பகவான் வரவேண்டிய அவசியமில்லை. பகவான் நமக்கு தரிசனம் தர, சில தகுதிகளை எதிர்பார்க்கிறார்.
க்ருத யுகத்தில், "பிரகலாதன்" தன்னுடன் படிக்கும் அசுர குழந்தைகளை பார்த்து சொல்கிறார், "புலன்கள் (கண், காது, மூக்கு, தொடுதல், சுவை) வழியாகவே இன்பங்களை அனுபவித்து, இந்த புலன்களை சந்தோஷப்படுத்துவதற்காகவே தன் வாழ்நாள் முழுவதும் உபயோகப்படுத்துகிறீர்களே !! இத்தனை முயற்சி கூட நீங்கள் செய்ய தேவையில்லையே பகவானை சந்தோஷப்படுத்துவதற்கு !! பகவான் சொல்லியுள்ள வழியில், நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்தால் கூட, பகவான் உங்களுக்கும் அருள் பாலித்து விடுவாரே !! பகவானை ப்ரத்யக்ஷமாக அனைவரும் பார்க்க முடியும். பகவானை பார்க்க முடியாது என்பதே இல்லை. அசுரனாக இருந்தாலும் பகவானை பார்க்கலாம். இவர் தான் பகவானை பார்க்க முடியும், இவர் பார்க்க முடியாது என்பதே இல்லை. யார் வேண்டுமானாலும் பகவானை பார்க்க முடியும். ஆனால், அந்த பகவானை பார்க்க வேண்டும் என்றால் 'திடமான நம்பிக்கையும், பேரன்பும்' அவனிடத்தில் நமக்கு வேண்டும். அவ்வளவுதான்."
என்றார் பிரகலாதன். க்ருத யுகம் 16 லட்ச வருடம் முன் இருந்த காலம்.
5000 வருடம் முன் துவாபர யுகம் முடியும் சமயம்.
துவாபர யுக முடிவு சமயத்தில், பகவான் நாராயணன் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் செய்தார். "என்னை எப்படி ஒருவன் பார்க்க முடியும்?"
என்று பகவானே, உத்தவனுக்கு, தன் திருவாயால் சொல்கிறார்.
எந்த சாதனை செய்தாலும் அதற்கான பலன் உண்டே தவிர, என் தரிசனம் கிடையாது" என்கிறார்.
மேலும்,
"பக்த்யாஹாம் ஏகயா க்ராஹ்யா
ஸ்ரத்தயாத்மா"
என்று சொல்லும்போது,
"என்னை பார்க்கவேண்டுமென்று, என் மீது
உண்மையான பக்தியும் (அன்பும்),
ஸ்ரத்தையும் (திட நம்பிக்கையும்)
ஒருவன் கொண்டிருந்தால், அவர்களுக்கு நான் என் தரிசனத்தை அளிப்பேன்" என்றார்.
இந்த சம்பாஷணை (உரையாடல்) ஸ்ரீமத்பாகவதத்தில் (11.14.20-21) உள்ளது.
இப்படி,
"யார் ஒருவனுக்கு பகவானிடத்தில்
உண்மையான "ப்ரேமையும்" (அன்பு/பக்தி),
உண்மையான "திட நம்பிக்கையும்"
இருக்குமோ, அவர்களுக்கு பகவத் தரிசனம் நிச்சயமாக கிடைக்கும்"
என்று வேத சாஸ்திரமும் சொல்கிறது.
பகவத் தரிசனம் பெற்ற பிரகலாதனும்"ப்ரேமையும்" (அன்பு/பக்தி), திட நம்பிக்கையும்" நமக்கு வேண்டும் என்று சொல்கிறார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் தன்னை தரிசனம் செய்ய, இதுவே தகுதி என்று நிச்சயப்படுத்துகிறார்.
பகவானை தரிசனம் செய்ய அனைவருக்கும் "ஆசை" உள்ளது. பகவான் தான் நம்மை அனைவரையும் படைத்தவர் என்றும் புரிகிறது. ஆனால், பகவான் நாராயணனிடம் நமக்கு "பிரியம்" (அன்பு) எப்படி ஏற்பட செய்வது? நமக்கு "அவர் மீது நம்பிக்கையை" எப்படி உண்டாக செய்வது?
பொதுவாக,
நமக்கு ஒருவரிடம் பிரியம் ஏற்பட வேண்டுமென்றால், அவரிடம் நமக்கு உள்ள "சம்பந்தம்" (உறவு) புரியும் போது, "பிரியம்" (அன்பு) ஏற்படுகிறது.
இந்த "சம்பந்தம்" (உறவு) எத்தனை நெருக்கமாக உள்ளதோ, அந்த அளவுக்கு நமக்கு அவர்கள் மீது பிரியம் ஏற்படுகிறது.
ஒரு தாய்க்கு, "தன் பிள்ளை" மேல் அலாதியான பிரியம் ஏற்படுகிறது. ஆனால், தன் பிள்ளையின் வயதிலேயே உள்ள பக்கத்து வீட்டு பையனிடம் அத்தனை பிரியம் ஏற்படுவதில்லை. ஏன்?
இவன் "என் பிள்ளை" என்ற "சம்பந்தம்" (உறவு) அந்த தாய்க்கு தெரிவதால், தன் பிள்ளையிடம் பேரன்பு கொள்கிறாள் ஒரு தாய்.
அந்த "சம்பந்தம்" (உறவு) நெருக்கமாக இல்லாத, பக்கத்து வீட்டு பையன் "எங்கோ வெளிநாடு போகிறேன்" என்றாலும் கவலை அடைவதில்லை.
அதே சமயம், தன் பிள்ளை, வெளி நாடு சென்று விட்டால், "தன் பிள்ளை என்ன செய்கிறானோ? சாப்பிட்டானோ?" என்று கவலை பட ஆரம்பிக்கிறாள் தாய்.
ஆக, "பிரியம்" (அன்பு, பிரேமை) என்பது, நமக்கும், பிறருக்கும் உள்ள சம்பந்தத்தை (உறவை) புரிந்து கொள்வதால் ஏற்படுகிறது
என்று அறிகிறோம்.
"நாராயணன்" என்ற நாமத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்டாலேயே, நமக்கும், பகவானுக்கும் உள்ள "சம்பந்தம்" (உறவு) புரிந்து விடும்.
"நர" (மனித) சமூகத்திற்கு யார் இருப்பிடமாக (அயனம்), அபயம் அளிப்பவராக, அடைக்கலம் தருபவராக இருக்கிறாரோ? அவரே "நாராயணன்".
அந்த நாராயணன் சங்கம் சக்ரம் ஏந்தி, ஆதிசேஷன் மேல் பாற்கடலில் உள்ளார். மகாலட்சுமி அவருடைய பத்னி என்று அடையாளப்படுத்துகிறது.
நமக்கு அடைக்கலம் தருபவர் "நாராயணனே",
நமக்கு 'அபயம்' (பயத்தை போக்குபவர்) தருபவரும் "நாராயணனே",
நாம் பிறவி கடல் தாண்டி, மோக்ஷம் என்ற வைகுண்டம் என்ற இருப்பிடத்தை அடைய காரணமாக இருப்பவரும் "நாராயணனே",
நம்முடனேயே எப்பொழுதும் இருப்பவரும் "நாராயணனே"
என்று நாம் உணரும் போது, நமக்கும், பகவானுக்கும் உள்ள "சம்பந்தம்" (உறவு) இயற்கையாகவே புரிந்து விடுகிறது.
நமக்கும், பகவானுக்கும் உள்ள "சம்பந்தம்" (உறவு) புரிந்தாலேயே, நமக்கு பகவான் மீது "ப்ரேமை என்ற அன்பு என்ற பக்தி" இயற்கையாகவே உண்டாகி விடும்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் "பக்தியும், ஸ்ரத்தையும் (திடநம்பிக்கையும்) தன்னிடம் யாருக்கு இருக்குமோ, அவர்களுக்கு தன்னுடைய தரிசனம் கிடைக்கும்" என்கிறார்.
நமக்கும், பகவானுக்கும் உள்ள சம்பந்தத்தை நாம் புரிந்தாலேயே, நாளடைவில் நமக்கு ஸ்ரத்தை (திடநம்பிக்கை) ஏற்படும்.
ஆக பகவானை காண வேண்டும் என்றால், முதலில் நமக்கும் பகவானுக்கும் உள்ள சம்பந்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாராயணனுக்கும் நமக்கும் உள்ள "சம்பந்தம்" (உறவு) புரியாதவரை, கோவிலுக்கே சென்று பெருமாளை பார்த்தாலும் "ப்ரேமபக்தி" வரவே வராது.
நாராயணன் யாரோ!! நாம் யாரோ!! என்று "சம்பந்தம்" (உறவு) புரியாத வரை, நாம் பிறவி எடுத்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்.
"நாராயணனே பரமாத்மா. மனிதனாக பிறந்த நாம் அனைவரும், அவரிடம் நமக்கு உள்ள உறவை (சம்பந்தத்தை) புரிந்து கொண்டு, பக்தி செய்ய வேண்டும்"
என்று காட்டுவதற்காக தானே, ஆழ்வார்களும், ஆசாரியர்களும், "நாராயணன்" என்று சொல்லாமல் "நம் பெருமாள்" என்று உறவை காட்டுகிறார்கள். சற்று யோசித்து பார்க்க வேண்டும்.
நமக்கும், நாராயணனுக்கும் உள்ள சம்பந்தத்தை காட்டுவதற்காக தானே, நாராயணனை "நம் பெருமாள்" என்றும், "எம் பெருமான்" என்றும், சொல்கிறோம். சற்று யோசித்து பார்க்க வேண்டும்.
ஆழ்வார்கள் "எம் பெருமானே" என்று பல இடங்களில் சொல்லி அழைப்பதை பார்க்கும் போது, தனக்கும் நாராயணனுக்கும் உள்ள உறவை (சம்பந்தம்) காட்டி பக்தி செய்தார்கள் என்று பார்க்கிறோம்.
நாராயணனை "நம் பெருமாள்" என்று சொல்லிக்கொள்ள ஆசை வராதவரை நமக்கு பக்தி ஏற்படாது.
நமக்கும் நாராயணனுக்கு உள்ள "சம்பந்தம்" (உறவு) புரிந்தாலேயே, "நம் பெருமாள்" என்று பகவானிடம் நமக்கு உறவு கொள்ள தோன்றும். இதுவே பக்திக்கு வித்திடும்.
ஒரு தாய்க்கு "தன் மகன்" என்ற உறவு கொள்ள தோன்றுவதால் தானே அவளுக்கு அளவு கடந்த ஆசை வருகிறது. பிறருடைய மகன் என்றால் அத்தனை ஆசை வராதே..
பகவானை பார்க்க, முதல் படியாக நமக்கு பகவானிடம் ஒரு உறவு வேண்டும்.
உறவை புரிந்து கொண்டால் மட்டும் போதாது, பகவானிடத்தில் "எம்பெருமான்" என்று ஆசையோடு சொல்லிக்கொள்ளும் கலையாத பேரன்பு (இஷ்ட நிஷ்டை) நமக்கு வேண்டும்.
"அவர் தான் வைகுண்டம் நமக்கு அளிப்பார். அவர் தான் பரமாத்மா" என்று சம்பந்தம் மட்டும் புரிந்து, ஆர்வம் (அவர் மீது ஆசை) இல்லாது போனால், நமக்கு பக்தியே வராது.
"சம்பந்தம்" (உறவு) புரிந்தும், ஆசை இல்லாமல் இருந்தால், 'அவர் யாரோ, நாம் யாரோ' என்று தான் இருப்போம். பக்தி ஏற்படாது.
இந்த ஆசையை நமக்கு ஊட்டுவதற்காகவே ஆழ்வார்கள் நம்மை கூப்பிட்டு "இவர் நம் பெருமாள்" என்று ஆர்வத்தை ஊட்டி, பெருமாளிடம் நாமும் பக்தி செய்ய உற்சாகப்படுத்துகின்றனர்.
ஒரு தாய்க்கு தன் பிள்ளையிடம் தனக்கு உள்ள "சம்பந்தம்" (உறவு) புரிகிறது. "என் பிள்ளை" என்று சொல்லிக்கொள்வதால், தாய்க்கு தன் பிள்ளையிடம்பேரன்பு ஏற்படுகிறது. "என் பிள்ளை" என்று சொல்லிக்கொள்வதால் ஏற்படும் இந்த பேரன்பு, அந்த தாய்க்கு எப்பொழுதும் அவன் பிள்ளையின் நினைவையே தருகிறது.
தன் கூடவே இருந்து வளர்ந்த பிள்ளை, திடீரென்று ஒரு சமயம் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டான்.
பிள்ளையை பிரிந்த சோகத்தில், தாய் அழுகிறாள். "எப்பொழுது மீண்டும் என் பிள்ளையை காண்பேனோ" என்று காண துடிக்கிறாள்.
அவனிடம் பேச முயற்சிக்கிறாள். சென்று பார்க்கலாமா? என்று யோசிக்கிறாள்.
தன் தாய் தனக்காக அழுவதை பார்க்க முடியாத பிள்ளை, "ஒரு நாள் வருவதாக" செய்தி அனுப்புகிறான்.
"தன் பிள்ளையை காண போகிறோம். இத்தனை மணிக்கு கிளம்பி இருப்பான். இத்தனை மணிக்கு வந்து விடுவான்"
என்ற "ஆர்வம்" அந்த தாயை தொற்றிக்கொள்கிறது.
"இத்தனை தேதிக்கு வருகிறேன்" என்று சொன்ன பிள்ளை, ஏதோ வேலை காரணத்தால் "வர முடியவில்லை" என்று சொல்ல, காண முடியாத துக்கத்தில், "ஓ"வென்று அழ ஆரம்பிக்கிறாள்.
இதுவே விரகம் என்று சொல்லப்படுகிறது.
சாதாரண பிள்ளையாக இருப்பதால், தன் தாய்க்கு ஏற்பட்ட இந்த சோகத்தை உடனே போக்க முடியாது போகிறது.
எல்லாம் வல்ல பகவான்,
எந்த பக்தன் தன் "சம்பந்தத்தை" (உறவை) உணர்ந்து, "எம் பெருமான்" என்று ஆசையோடு உறவு (ப்ரேமபக்தி) பாராட்டிக்கொண்டு, எம் பெருமான் மகத்துவத்தை, கருணையை தினமும் ஸ்மரித்து, கோவிலில் அர்ச்ச அவதாரத்தை தரிசித்து கொண்டே,
தன் பக்தியை (அன்பை) மேலும் மேலும் வளர்த்துக்கொண்டு இருக்கிறானோ,
அப்படிப்பட்ட பக்தனுடன் உறவாட ஆரம்பிக்கிறார்.
ப்ரேமை என்ற அன்பு (பக்தி) தன்னிடம் ஏற்பட்ட தன் பக்தனுக்கு, ஸ்ரத்தை (திடநம்பிக்கை) ஏற்பட, வருவது போல வந்து, பின் மறைந்து, காண வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி, விரக அனுபவத்தை கொடுத்து, கடைசியில் தன் தரிசனத்தை தந்து விடுகிறார்.
ப்ரேமை (அன்பு/பக்தி) தன்னிடம் ஏற்பட்ட தன் பக்தனிடம், ஆரம்ப நிலையில், நேரிடையாக தரிசனம் தந்து விடாமல், யார் மூலமாகவோ உறவு கொள்ள ஆரம்பிக்கிறார்.
ஒரு பக்தன், தன் கஷ்டத்தை சொல்ல கோவிலுக்கு வந்து எம்பெருமானை சொல்லிக்கொள்கிறான். தெய்வம் பார்த்து தான் தன் கஷ்டத்தை தீர்க்க வேண்டும் என்று நினைக்கிறான்.
அப்பொழுது, கோவில் அர்ச்சகர் யாரை பார்த்தோ "கவலையே படாதீர்கள். பெருமாள் பார்த்துக்கொள்வார்" என்று சொல்லி பிரசாதம் கொடுத்து கொண்டு இருக்கிறார்.
இதை கேட்டவுடன் பக்தனுக்கு "இந்த சமாதானம் எனக்கு சொன்னது போல இருக்கிறதே" என்று தோன்ற, பெருமாள் தன் கஷ்டம் போக வழி செய்வார் என்ற நம்பிக்கையுடன் செல்கிறான்.
இப்படி முதல் படியில் பகவான் நாராயணன், தன் பக்தனிடம் பேச ஆரம்பிக்கிறார்.
அவன் நினைத்த கஷ்டம் வராமல் போக, அவனுடைய ஸ்ரத்தை (நம்பிக்கை) எம்பெருமானிடம் அதிகமாகிறது.
எப்பொழுதும் எம்பெருமான் நினைவாகவே இருக்க, அவனிடம் பேச ஆரம்பிக்கிறார்.
கோவிலில் அர்ச்ச அவதாரமாக எம்பெருமான் பேசாதது போல இருந்தாலும் பக்தனிடம் பேசுகிறார்.
பகவான் பக்தனின் தகுதிக்கு தக்கபடி பேசுகிறார். பக்தியை உயர்த்த உயர்த்த, பகவான் நேரிடையாகவே பேச ஆரம்பிக்கிறார்.
"இந்த காரியம் எப்படி நடக்குமோ!!" என்று நினைத்துக்கொண்டே படுத்து உறங்கும் போது, கனவில் "திருப்பதி செல்" என்று யாரோ ஒரு பெரியவர் சொல்வது போல தோன்ற, "இது ஏதோ தெய்வ வாக்கு" என்று நினைத்து திருப்பதி செல்கிறான்.
அங்கு போய் தன் பிரார்த்தனையை செய்ய, அவன் நினைத்த காரியம் நடக்க ஆரம்பிக்கிறது.
இதனால் இன்னும் இவன் ஸ்ரத்தை (நம்பிக்கை) எம்பெருமானிடம் அதிகமாகிறது, "எம்பெருமானே கதி" என்று வாழ ஆரம்பிக்கிறான். "கோவிலே கதி" என்று வாழ ஆரம்பிக்கிறான். உலக விஷயங்களில் ஆசையை குறைத்து கொண்டு, ஸத் சங்கங்களில் நேரத்தை செலவிட ஆரம்பிக்கிறான்.
பக்தியை உயர்த்தி கொண்டே போக, தன் பக்தனின் கனவிலேயே யாரோ போல வராமல், சங்கு சக்ர கதையுடன், திவ்ய தரிசனமே கொடுத்து பேச ஆரம்பிக்கிறார்.
கனவில் தான் கண்ட காட்சியை நினைத்து "நாம் இப்படி ஒரு காட்சி கண்டோமே" என்று ஆச்சர்யப்படுகிறான் பக்தன்.
ஆண்டாளுக்கே "தானே கல்யாணம் செய்து கொள்வதாக" முதலில் கனவில் தானே வந்து சொன்னார் ஸ்ரீ ரங்கநாதர்.
அதனால் தானே, "கனா கண்டேன், தோழி நான்" என்று ஆண்டாளே சொல்கிறாள் என்று பார்க்கிறோம்.
தெய்வ கனவு எதுவுமே வீணான கனவே இல்லை. தெய்வ கனவு இயற்கைக்கு மாறானது.
அருவெறுக்கத்தக்க கனவுகள் தான் அனைவருக்கும் எப்பொழுதும் வரும்.
தெய்வ கனவுகள் மிகவும் அபூர்வமாக வரும். தெய்வ கனவுகள் அடிக்கடி வருவதில்லை.
அடிக்கடி கன்னாபின்னா கனவுகள் வருகிறது இயற்கை.
தெய்வ கனவுகள் நமக்கு வந்தால், அது "தெய்வ அருள்" என்று புரிந்து கொள்ள வேண்டும்.
பகவான் நமக்கு ஏதாவது சொல்ல நினைத்தால் பக்தியின் நிலை பொறுத்து, கனவில் பேசுகிறார். திவ்ய காட்சி கொடுக்கிறார்.
பக்குவம் இல்லாத பக்தனிடம், நேர் எதிரில் வந்து தரிசனம் தந்து விட்டால், பக்தன் தாங்க மாட்டான் என்பதால், படிப்படியாக பக்தனிடம் நெருங்குகிறார் பகவான்.
பக்தியில் உன்னத நிலையில் இருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், கிருஷ்ண சைதன்யர் போன்றவர்கள் கூட, பகவத் தரிசனம் பெற்ற பின் உன்மத்தர்கள் ஆகிவிட்டனர் என்று பார்க்கிறோம்.
பகவத் தரிசனம் பெற்றும், உலகத்தில் இருக்கும் காலம் வரை வாழ பகவத் தரிசனம் பெற்றதை ஜீரணிக்கும் சக்தி வேண்டுமே..
பக்தி குறைவாக உள்ள நமக்கு, கனவில் பேச ஆரம்பிக்கிறார்.
அதைவிட பக்தியை நாம் உயர்த்தினோம் என்றால், நம் வாழ்விலேயே யாரோ ஒருவன் போல வந்து பழகி விட்டு, மறைந்து லீலை செய்ய ஆரம்பிப்பார்.
பக்தர்களின் கதைகளில் பெரும்பாலும் நாம் இதை கவனிக்கலாம்.
பாண்டுரங்கனே, சக்குபாய், ஜனாபாய், நாம தேவர் போன்ற பக்தர்களிடம், மனிதன் போல விளையாடினான் என்று பார்க்கிறோம்.
அதைவிட பக்தியை நாம் உயர்த்தினோம் என்றால், அர்ச்ச அவதாரமாக உள்ள எம்பெருமான் பேச ஆரம்பித்து விடுவார்.
திருமழிசை ஆழ்வாருக்காக, அரச்சா திருமேனியுடன் உள்ள சொன்ன வண்ணம்செய்த பெருமாள் எழுந்து கொண்டு விட்டார்.
ராமானுஜரிடம் அர்ச்ச அவதாரமாக இருக்கும் ஸ்ரீ ரங்க பெருமாளும், மேல்கோட்டையில் உள்ள செல்ல பிள்ளை பெருமானும் பேசினார்கள் என்று பார்க்கிறோம்.
துளசி தாசர் சொன்னார் என்பதற்காக, காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கல்லாக உள்ள நந்திகேஸ்வரர், அவர் கொடுத்த உணவை, ஊர் பார்க்க உண்டு விட்டார் என்று அவர் சரித்திரத்தில் பார்க்கிறோம்.
இது வெளி ஜனங்களுக்கு ஆச்சர்யமாக தோன்றினாலும், பக்தனுக்கு மேலும் பக்தியை வளர்த்து கொள்ள உற்சாகம் அளிக்கிறது.
கோவிலில் உள்ள பெருமாளுக்கு நம்மிடம் பேச வேண்டும் என்ற ஆசையும் உண்டு. ஆர்வமும் உண்டு.
கோவிலில் அர்ச்சனையை சமஸ்கரிதத்தில் பண்ணலாமா?
தமிழில் பண்ணலாமா? என்று சண்டை போட்டுக்கொண்டிருந்தால், பகவான் நம்மிடம் பேசவே மாட்டார்.
பெருமாளுக்கு நம்மிடம் பேச வேண்டும் என்ற ஆசையும் உண்டு. ஆர்வமும் உண்டு.
ஆனால் நம்மிடம் அவர் எதிர்பார்ப்பது சமஸ்கரித பாஷையோ, தமிழ் பாஷையோ இல்லை. அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது ப்ரேம பாஷை என்ற அன்பு பாஷை.
தனக்கும் எம்பெருமானுக்கும் சம்பந்தம்(உறவு) புரிந்து அன்பு ஏற்படும் போது,
இந்த அன்பே, பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் போது, அன்பும் ஆர்வமும் சேர்ந்த தன் பக்தனுக்கு திவ்ய தரிசனம் தந்து விடுகிறார் எம்பெருமான் நாராயணன்.
திருக்கோவிலூரில் "பூதத்தாழ்வார், பொய்கை ஆழ்வார், பேயாழ்வார்" மூவரும்,
ஒரே சமயத்தில் உலகளந்த பெருமாளை சேவிக்க வந்த போது,
பொய்கை ஆழ்வாரும், பூதத்தாழ்வாரும் ஞான தீபத்தை ஏற்ற,
பேயாழ்வார் "ஞான தீபத்தின் பலனாக, எம்பெருமானை கண்டேன்" என்று ஆரம்பிக்கிறார்.
"அன்பு" என்ற விளக்கில்,
"ஆர்வம்" என்ற நெய் ஊற்றி,
"உருக்கம்" (இன்புருகு சிந்தை) என்ற திரி இட்டு, ஞான தீபம் ஏற்ற, இனி இன்னொரு விளக்கில் தீபம் ஏற்ற தேவையில்லாமல் போக, அந்த ஞான தீபத்தில், எம்பெருமானை கண்டேன்
என்று பேயாழ்வார் ஆரம்பிக்கிறார்.
எம்பெருமானிடத்தில் நமக்கு அன்பும் (ப்ரேமை/பக்தி),
அவரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும்,
இன்னும் காணமுடியவில்லையே என்ற "உருக்கமும்" இருக்குமானால், பகவானே மெய் ஞானத்தை கொடுத்து, தான் இருப்பதை காட்டிவிடுகிறார்.
வையம் தகளியா
வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று.
- பொய்கை ஆழ்வார்
அன்பே தகளியாய்
ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.
- பூதத்தாழ்வார்
திருக்கண்டேன்
பொன்மேனி கண்டேன்,
திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்,
செருக்கிளரும் பொன்னாழி கண்டேன்
புரி சங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று.
- பேயாழ்வார்
sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka
Hare Rama Hare Krishna - Bhajan
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka
தெய்வத்திடம் ஏற்படும் ப்ரேமையை (அன்பை), ஞான உபதேத்தால் வீழ்த்தவே முடியாது.
பிரேமை (அன்பு) தான் ஜெயிக்கும்.
இதற்கு சான்றாக ராமாயணத்தில் ஒரு சம்பவம் நடந்தது.
தசரத மகாராஜனை காண, விஸ்வாமித்ரர் அயோத்தி வந்தார்.
ப்ரம்ம ரிஷியான விஸ்வாமித்ரர் வருகையினால் சந்தோஷப்பட்டு, "தங்கள் ஆணைக்கு காத்து கொண்டு இருக்கிறேன். உங்களுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன்"
என்று சொல்லி சபைக்குள் அழைத்தார் தசரதன்.
விஸ்வாமித்ரர் மிகவும் சந்தோஷப்பட்டார்.
"தசரதா, எங்களை போன்ற ரிஷிகளுக்கு உலக தேவைகள் எதுவும் கிடையாது. எங்களுக்கு ஏற்படும் தேவையை, ஒரு கஞ்சனிடம் சென்று கேட்கும் நிலையை ஈஸ்வரன் எங்களுக்கு கொடுப்பதில்லை. எங்களை தரிசிக்கும் ஆவல் கொண்ட, எங்களுக்கு ஏதாவது உண்மையாக கொடுக்க ஆசைப்படுபவர்களிடம் மட்டுமே, எங்களை ஈஸ்வரன் அனுப்புகிறார். இந்த உலகத்திலேயே உன்னை போன்ற கொடையாளி கிடையாது என்று அறிவேன். நீ ப்ரம்மத்தை உணர்ந்தவன், சத்யம் தவறாதவன் என்றும் அறிவேன்.
இந்த நற்குணங்கள் உன்னிடம் இயற்கையாகவும், பரம்பரை பரம்பரையாகவும் உள்ளது. மேலும் ப்ரம்ம ரிஷியான வசிஷ்டர் உனக்கு குல குருவாகவும், உன் வீட்டு புரோகிதராகவும் இருக்கிறார் என்பதும் உன் பெருமையை காட்டுகிறது. நான் வந்த விஷயத்தை சொல்கிறேன். நானும், என்னோடு பல ரிஷிகளும் சேர்ந்து, ஸித்தாஸ்ரமத்தில் யாகம் செய்கிறோம். பல நல்ல காரியங்களுக்காகவும், உலக நன்மைக்காகவும் செய்து கொண்டிருக்கிறார்கள். ராக்ஷசர்கள் நடமாட்டம் அங்கு உள்ளது. ராக்ஷசர்கள் நர மாமிசம் சாப்பிடுபவர்கள். இதனால் அங்கு இருக்கும் சாதுக்கள் நடமாட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்த கஷ்டத்தை போக்கி, அங்கு இருக்கும் சாதுக்களுக்கு உபகாரம் செய்ய வேண்டியது, தசரத ராஜனான உன் கடமை."
என்று சொல்லிக்கொண்டே, அங்குமிங்கும் கண்களால் ஒரு நோட்டமிட்ட விஸ்வாமித்ரர்,
"அதோ, அங்கு அழகான குடுமியுடன், நின்று கொண்டிருக்கும் உன் மூத்த மகன் 'ராமனை' என்னுடன் அழைத்து கொண்டு போய், யாகம் பூர்த்தி ஆனவுடன் திருப்பி உன்னிடமே கொண்டு வந்து விடுகிறேன்."
என்று சொல்லி முடித்தார்.
ராமன் என்ற பெயரை விஸ்வாமித்ரர் சொன்ன பிறகு, தசரதன் அதற்கு பிறகு அவர் சொன்னதை கவனித்தாரா? என்று கூட தெரியவில்லை.
"ஆகா ! காத்துக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு சேவை செய்ய ராமனை உடனே அனுப்புகிறேன்" என்று சந்தோஷமாக சொல்ல வேண்டாமோ?
"இந்த ராக்ஷஸர்களை நீங்களே சபித்து விடலாமே ! உலக நன்மைக்காக யாகம் செய்கிறீர்கள். நர மாமிசம் சாப்பிடும் இந்த ராக்ஷர்களை சபிப்பதும் கூட உலக நன்மை தானே? உங்கள் தவ சக்தியால், வரும் ராக்ஷஸர்களை ஒவ்வொருத்தராகவோ, மொத்தமாகவோ பொசுக்கி விடலாமே?"
என்றார் தசரதர்.
"சபிப்பது பற்றி என்னை விட யாருக்கு தெரியும், தசரதா? கோபப்பட்டு சபிப்பதில் எனக்கு இஷ்டமில்லை. பொறுமையாகவே நான் இருக்கிறேன். எவ்வளவுக்கெவ்வளவு நான் பொறுமையை கடைபிடிக்கிறேனோ, அதை பார்த்து மற்றவர்கள் எனக்கு சக்தி இல்லையோ என்று நினைக்கின்றனர். கோபம் ஏற்படுவதால் பல தோஷங்கள் ஏற்படுகிறது. கோபத்தை கட்டுப்படுத்தி, பொறுமையை கடைபிடிப்பதால், ஒரே ஒரு தோஷம் மட்டுமே ஏற்படுகிறது. கோபத்தினால் பகை, அடிதடி, கொலை, என்று பல தோஷங்கள் ஏற்படுகிறது. கோபத்தை அடக்கி பொறுமையை கடைபிடித்தால், ஒரே ஒரு தோஷம் மட்டுமே ஏற்படுகிறது. அந்த தோஷம் எதுவென்றால், கோபமே இல்லாமல் பொறுமை காக்கும் கணவனை, 'அவன் பத்தினி கூட மதிக்க மாட்டாள்', என்பது தான். கோபமே கொள்ளாமல், பொறுமை காப்பவனிடம் ஏற்படும் ஒரே தோஷம் "உலகம் இவனை மதிக்காது" என்பது மட்டுமே. கோபத்தினால் பல தோஷங்களை ஏற்றுக்கொள்வதற்கு பதில், 'மற்றவர்கள் மதிக்காமல் போனால் போகட்டுமே' என்று ஒரே ஒரு தோஷத்தை ஏற்றுக்கொண்டதால், பொறுமையை கடைபிடிக்கிறேன். அதுவும் தவிர, 'ப்ராம்மணனுக்கு' பொறுமையே லக்ஷணம். 'க்ஷத்ரியனுக்கு' வீரமும், அதர்மம் செய்பவர்கள் மீது கோபமும் லக்ஷணம். நான் ப்ராம்மண தர்மத்தின் படி, பொறுமையை கடைபிடிக்கிறேன். நாங்கள் செய்யும் தவம், உலக நன்மையை நோக்கியே தவிர, சபிப்பதற்காக இல்லையே ! கோரமான தபசு செய்து, அதன் சக்தியை வேறொரு நல்ல காரியங்களுக்கு பிரயோகம் செய்ய இருக்கும் போது, அதை சபித்து விரயம் செய்ய விரும்பவில்லை. நான் பொறுமையாக இருப்பதை பார்த்து, ராக்ஷசர்கள் 'எனக்கு சக்தி இல்லை' என்று நினைத்து அட்டகாசம் செய்கின்றனர். இந்த ராக்ஷர்களை சபித்து அழிக்கும் சக்தி இருந்தும், நான் ஏன் உன்னிடம் வந்து உதவி கேட்கிறேன்? என்று நினைத்தாய் என்றால், அதற்கு காரணம் உள்ளது. யாகம் செய்வது உலக நன்மைக்காக. அந்த பிரதேசமும் உன் ராஜ்யமாக உள்ளது. உன் ராஜ்ஜியத்தில் 'ராக்ஷசர்கள் நடமாடும் இடமும் இருக்கிறது' என்பதை நீ கவனிக்க வேண்டாமா? தேவர்களுக்கு அசுரர்களால் ஆபத்து என்றவுடன், சொர்க்க லோகம் சென்று உதவி செய்கிறாய். இந்த மனுஷ்ய லோகத்தில், உன் ராஜ்யத்தில், ராக்ஷஸர்கள் ரிஷிகளை நர மாமிசமாகவே அடித்து சாப்பிட்டு விடுகின்றனர். துஷ்டர்களை நிக்ரஹம் செய்வதும் (தீயவர்களை அடக்குவதும்), சிஷ்டர்களை பரிபாலனம் செய்வதும் (நல்லவர்களை காப்பதும்) ஒரு அரசனின் கடமை. உன் கடமையை நினைவு மூட்ட வந்தேனே தவிர, புகார் சொல்வதற்கு வரவில்லை. ராக்ஷஸர்களை அடக்கி, ரிஷிகளை காக்க வேண்டியது உன் கடமை. அந்த கடமையை நிறைவேற்ற நீ ராமனை என்னுடன் அனுப்பு. ராமனே இந்த காரியத்தை செய்யத்தக்கவன். உன் மகன் ராமன் உனக்கு எத்தனை அருமை என்று எனக்கு தெரியாதா! பலவித ஷ்ரேயசை ராமனுக்கு செய்து அனுப்புவேன். என்னுடன் அனுப்பு."
என்றார் விஸ்வாமித்ரர்.
தசரதர் பதில் சொல்லாமல் இருந்தார். மேலும் நினைத்தார்,
"இவர் ஆஸ்ரமத்தில் என்ன சௌகரியம் இருந்து விட போகிறது? நான் என் குழந்தையை வேளை தவறாமல் பார்த்து பார்த்து பாலும் பழமும் கொடுத்து, தாலாட்டி லாலனை செய்கிறேன். ஒரு வசதியும் இல்லாமல், இவர் என் குழந்தையை காட்டுக்கு அழைத்து கொண்டு போகிறேன் என்று சொல்கிறாரே? அது மட்டுமில்லாமல், என் குழந்தையை ராக்ஷசர்களிடம் சண்டைக்கு அனுப்புவேன் என்று வேறு சொல்கிறாரே? என் குமாரனுக்கு இவர் என்ன ஷ்ரேயஸ் (நன்மை) செய்து விட போகிறார்? எனக்கு இல்லாத அக்கரை இவருக்கு இருக்கப்போகிறதா?"
என்று நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்தார்.
தசரதன் பேசாமல் இருப்பதை பார்த்து, விஸ்வாமித்ரர்,
"இவன் என் குழந்தை. இவனுக்கு ஒன்றும் தெரியாது என்று நீ நினைக்கலாம். இந்த ராக்ஷசர்களை ராமன் எதிர்க்க முடியுமா? என்று நீ யோசிக்கிறாய். நான் சத்தியமாக சொல்கிறேன், ராக்ஷசர்கள் அனைவரும் அழிந்து போவார்கள். அப்பேர்ப்பட்ட சக்தியுள்ளவன் உன் மகன். நீ கவலையே படவேண்டாம்"
என்றார் விஸ்வாமித்ரர்.
விஸ்வாமித்ரர் சொல்வது கொஞ்சம் கூட தசரதனுக்கு புரியவில்லை.
தசரதன் பார்வைக்கு 12 வயது ஸ்ரீ ராமன் குழந்தையாகவே தெரிந்தார்.
"ஸ்வாமி, என் குழந்தையை பற்றி உங்களுக்கு தெரியாது போல இருக்கிறது. என் குழந்தை சாயங்காலம் விளையாடி கொண்டிருப்பான். விளையாடி விட்டு, அரண்மனைக்குள் வரும் போது, உள்ளே வரும் பாதை சிறிது வெளிச்சம் குறைவாக இருக்கும். இருட்டாக உள்ளதே என்று உள்ளே வர பயந்துகொண்டு, வாசலில் நின்று கொண்டே, 'அம்மா, அம்மா..' என்று துணைக்கு அழைப்பான் என் குழந்தை. அவன் தாயார் வந்து கூட்டி கொண்டு உள்ளே செல்வாள். என் குழந்தையை பற்றி எனக்கு தெரியாதா?, ஸ்வாமி. நீங்கள் ராக்ஷஸர்கள் முன் சண்டைக்கு கூட்டி சென்றால், பயப்படுவான், ஸ்வாமி"
என்றார்.
விஸ்வாமித்ரர், தசரதனை பார்த்து,
"தசரதா ! நம் குழந்தை தானே, நம் குழந்தை தானே என்று பார்க்காதே. நீ ராமனை 'என் குழந்தை' என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறாய். குழந்தை என்று பார்த்தால், உனக்கு குழந்தையாக தான் தெரிவான். வேறு த்ருஷ்டியால் பார்த்தால் தான், ராமனின் பெருமை புரியும். 'குழந்தையாக இருந்து உன்னை சுகப்படுத்த வேண்டும்' என்று ராமன் சங்கல்பித்ததால் தான், உனக்கு அப்படி ஒரு அனுபவம் தோன்றுகிறது. அப்படியே ஒன்றும் தெரியாத குழந்தை என்றாலும், எத்தனை நாள் இப்படியே வீட்டுக்குள் பூட்டி வைப்பாய்? குழந்தைகளை நாலு பேருடன் பழக விட வேண்டும். துணிந்து வெளி உலகத்தை பார்க்க அனுப்ப வேண்டும். நாலு இடத்துக்கு போனால் தான் அந்த குழந்தைக்கும் சாமர்த்தியம் வருமே தவிர, வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்தால், மகா மக்காக ஆகி, நம் காலையே சுற்றிக்கொண்டு இருப்பான். உன் குழந்தை என்று நீ பார்த்தாலும், நீ அவனுக்கு வில் ஆயுதம் கற்று கொடுத்துள்ளாய். கல்வி மட்டும் போதுமா? அதை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்தினால் தானே கல்வியின் பயனை அவன் அனுபவிப்பான். ராமனை என்னோடு அனுப்பு. மேலும், தசரதா ! உன் பிள்ளையை பற்றி உனக்கு தெரியாது. எனக்கு தெரியும். ஜடா முடியுடன் இருக்கும் நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, ரத்ன கிரீடம் அணிந்து இருக்கும் நீ புரிந்து கொள்ள முடியாது. ஞான யஞ்யம் செய்ய கூடிய நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, புத்ர காமேஷ்டி யாகம் செய்யும் நீ புரிந்து கொள்ள முடியாது. காய்ந்த இலைகளை உண்டு, தவம் செய்யும் நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, ராஜ போஜனம் செய்யும் நீ புரிந்து கொள்ள முடியாது. தர்பாஸனத்தில் அமர்ந்திருக்கும் நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் நீ புரிந்து கொள்ள முடியாது. ஒரு குருவை உயர்ந்த ஆசனம் கொடுத்து, அவருக்கு கீழே அமர்ந்து உபதேசம் கேட்க வேண்டியிருக்க, வசிஷ்டர் போன்ற குருவை கீழே ஆசனம் கொடுத்து அமர செய்து, அவரை விட உயர்ந்த ஆசனத்தில் ராஜா என்று உட்கார்ந்திருக்கும் நீ புரிந்து கொள்ள முடியாது. ராஜ யோகியான நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, ராஜ போகியான நீ புரிந்து கொள்ள முடியாது. உன் நிலை வேறு, என் நிலை வேறு. நீ ஊனக் கண்ணால் பார்க்கிறாய். நான் ஞான கண்ணால் (சாஸ்திர அறிவை கொண்டு) பார்க்கிறேன்.
வேதத்தின் பிரமாணத்தை கொண்டு, உன் பிள்ளை 'ராமன்' பரமாத்மா என்று தெரிந்து கொண்டேன். வேதமே வழிபடும் பரமபுருஷன் தான் உன் மகனாக பிறந்து இருக்கிறான் என்றும் அறிகிறேன். உன்னை பொறுத்தவரை, மிகவும் அழகாக இருக்கிறான் என்பதால், "ராமன்" என்று பெயர் வைத்தோம் என்று நினைத்து இருப்பாய். யோகிகள் எந்த பரப்ரம்மத்தை நோக்கி ரமிக்கிறார்களோ அந்த பரப்ரம்மம் தான் 'ராமனாக' அவதரித்து உள்ளார் என்று தெரிந்து கொள். இந்த ராமன், யோகிகளை ரமிக்க செய்கிறான் என்பது உன் சபையை பார்த்தாலே நீ புரிந்து கொள்ளலாம். போரில் புறமுதுகிட்டு ஓடாத, போர் திறன் மிக்கவன் ராமன் என்று உணர்த்த 'சத்ய பராக்ரமன்' என்று பெயர் வைத்து இருப்பாய். ஸ்ருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), சம்ஹாரம் (அழித்தல்) என்ற மூன்றும், உலகில் எப்பொழுதும் சத்தியமாக நிகழ்ந்து கொண்டே இருக்க செய்யும், பராக்ரமம் (திறமை) மிகுந்த பரம்பொருள், ராமனாக பிறந்ததால் தான், இவனுக்கு 'சத்ய பராக்ரமன்' என்றும் பெயர் உள்ளது என்று நீ அறிய மாட்டாய். இந்த ராமனின் பெருமையை நீங்கள் மட்டும் தான் அறிவீரோ? என்று நீ நினைத்தால், சொல்கிறேன் கேள். உன் சபையில் குலகுருவாக இருக்கும் 'வஷிஷ்டருக்கும்' இது தெரியும். தசரதா ! உன் குலகுருவாக இருக்கும் வஷிஷ்டருக்கும், எனக்கும் மட்டும் தான் தெரியும் என்று நினைத்து விடாதே. உன் சபையில் குழுமி இருக்கும் அனைத்து ரிஷிகளுக்கும் தெரியும், ராமன் பரப்ரம்மம் என்று. மேலும் கேள் தசரதா. பொதுவாக, ரிஷிகள் காடுகளில் தவம் செய்து கொண்டிருப்பவர்கள் தானே? இவர்கள் ஏன் உன் அரண்மனையில் இருக்கிறார்கள் என்று எப்பொழுதாவது யோசித்து பார்த்தாயா?
தவம் செய்ய ஏற்ற இடமா அரண்மனை? ஒரு காலத்தில் தபோவனத்தில் கால் பதிந்த இந்த ரிஷிகள், இன்று தபோவனத்தை மறந்து, உன் அரண்மனையே கதி என்று இங்கேயே இருக்கின்றனர். உன் அரண்மனைக்கு வந்தால், நீ ராஜ போஜனம் ஏற்பாடு செய்து கொடுப்பாய், வயிறார உணவு கிடைக்கும் என்று இந்த ரிஷிகள் வரவில்லையே. இங்கு வந்தும் தவத்திலேயே இருக்கிறார்கள். நீ கொடுக்கும் ராஜ போஜனத்தை இவர்கள் எதிர்பார்க்கவில்லையே? தாங்கள் கொண்டு வந்த காய்ந்த இலைகளை கொஞ்சம் வாயில் போட்டுக்கொண்டு, எப்பொழுது பார்த்தாலும் உன் தர்பாரில் வந்து அமர்ந்து கொண்டு உள்ளனரே? உன் தர்பாரில் உட்கார்ந்து இருக்கும் இந்த ரிஷிகள், உன் சபைக்கு கொண்டு வரப்படும், விவாதங்கள் எதிலும் ஈடுபடுவதில்லை. எப்பொழுதும் கண்ணை மூடி பரப்ரம்மத்தை தியானித்து கொண்டே அமர்ந்து இருக்கின்றனர். நீ என்ன தீர்ப்பு வழங்கினாய்? என்ன நடந்தது? என்று கூட இவர்கள் கவனிப்பதில்லை. நீ போடும் ராஜ போஜனம் எதையும் இவர்கள் சாப்பிடுவதில்லை. சபையில் நடக்கும் எந்த விஷயத்திலும் இவர்கள் கலந்து கொள்வதும் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு எப்பொழுதும் ஜபம் செய்து கொண்டு, கண்களில் நீர் வடிய, உன் சபையில் உட்கார்ந்து கொண்டே இருக்கிறார்கள். புஷ்டியான சரீரமில்லாமல், இளைத்த உடம்புடன், வறண்ட வாயுடன், கண்களில் இருந்து கண்ணீரும், ஒட்டிய வயிருடன், இடுப்பில் மரவுரி அணிந்து, அடிக்கடி ஆனந்த கண்ணீர் விட்டு கொண்டு, உன் சபையில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்களே இவர்கள். எந்த சுகத்தை அனுபவிக்க இவர்கள் இங்கு வந்து அமர்ந்து இருக்கிறார்கள்? என்று எப்பொழுதாவது நினைத்தது உண்டா, தசரதா? அவர்கள் எந்த சுகத்தை அனுபவிக்க இங்கு இருக்கிறார்கள்? என்பதை நீ அறிந்து கொண்டாலே, என்ன காரணம் என்று புரிந்து கொண்டு விடலாம். சபையில், நீ சில சமயம் "ராமா" என்று கூப்பிடும் போது, உன் மகன் ராமன் ஓடி வந்து "அப்பா" என்று வந்து உன் முன் நிற்கும் போதும் மட்டும், இந்த ரிஷிகள் கண்களை திறந்து ராமனை பார்க்கின்றனர்.
கல்ப காலமாய் காட்டில் தவம் செய்தாலும், தரிசனம் கொடுக்க வராத பகவான், 'தசரதன் கூப்பிட்டான்' என்றவுடன், அடுத்த நொடி தரிசனம் கொடுப்பதை அறிந்து, உன்னுடன் சேர்ந்து கொண்டு தாங்களும் பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டு, உன் சபையில் வந்து அமர்ந்துள்ளனர். உன் புத்திரனை பார்ப்பதற்காகவே இந்த ரிஷிகள் வந்து அமர்ந்திருக்கும் போதே தெரியவில்லையா, இவன் பரப்ரம்மம் என்று. ஒரு சாதாரண ராஜகுமாரனை பார்ப்பதற்கா இத்தனை ரிஷிகள் உன் சபையில் அமர்ந்து இருக்கிறார்கள்? வேறு தேசங்களில் ராஜ்குமாரர்கள் இல்லையா? அங்கு போகலாமே இந்த ரிஷிகள் ! இந்த ரிஷிகள் ஏன் இங்கு வந்து அமர ஆர்வம் காட்டுகின்றனர்? என்று நீ நிதானமாக யோசித்தாலே, உனக்கு உண்மை விளங்கும். சாதுக்களான ரிஷிகள் எப்பொழுதும் பரமாத்மாவை தரிசிக்கவே விரும்புவார்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த சாதுக்கள் உன் மகன் ராமனை பார்க்கவே இங்கு அமர்ந்துள்ளனர் என்று நீ புரிந்து கொள்ளும் போது, உன் மகன் பரப்ரம்மம் என்று உனக்கு புரியும்"
என்று சொன்னார் விஸ்வாமித்ரர்.
பக்கத்தில் இருந்த சேவகர்கள் பன்னீர் தெளித்து, விசிறி விட்டு தசரதரை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
தசரதர் உடல் தளர்ச்சியால் மூர்ச்சை ஆகவில்லை.
ராமனை கேட்கிறாரே என்ற சோகத்தில் மூர்ச்சை ஆகி இருந்தார்.
விஸ்வாமித்ரருக்கு என்ன சொல்லி இந்த சங்கடத்தில் இருந்து தப்பிக்கலாம்? என்று யோசித்து கொண்டிருந்தார்.
திடீரென்று ஒரு மனதில் ஒரு பதில் கிடைக்க, இதை வைத்து சமாளித்து விடலாம் என்று எண்ணி, உடனே எழுந்து கொண்டு,
"ஸ்வாமி, இன்னும் என் குழந்தைக்கு வயதாகவில்லை. எந்த காரியத்தை செய்ய வேண்டுமென்றாலும், அதற்கு தகுந்த வயது உள்ளவனா? என்று பார்க்க வேண்டி இருக்கிறது. வாலிபனாக ஆகும் வரை, 'இவன் இன்னாரது பிள்ளை' என்று தகப்பனை வைத்து தானே அடையாளம் காட்டுவார்கள். என் குழந்தைக்கு 12 வயது தான் ஆகிறது. அவனாக ஒரு காரியத்தை செய்யும் அளவுக்கு வயது இல்லை, ஸ்வாமி. இன்னும் 16 வயது கூட ஆகவில்லையே ஸ்வாமி, என் பையனுக்கு. அப்படியே 12 வயது குழந்தையை அழைத்தாலும், அங்கே நாடகம், விளையாட்டு நடக்கிறது என்றா அழைக்கிறீர்கள்? யுத்தத்திற்கு அழைக்கிறீர்களே !! அப்படியே யுத்தம் என்றாலும் அவன் வயதில் ஒரு விளையாட்டு யுத்தம் அழைத்தாலும் பரவாயில்லை. ராக்ஷசர்களோடு யுத்தம் என்று சொல்கிறீர்களே? அப்படிப்பட்ட முரட்டு தனமான யுத்தத்திற்கு நான் குழந்தை பெறவில்லையே !! யுத்தத்திற்காகவே என் குழந்தையை பெற்று இருந்தால், அவனுக்கு "வீரபாகு, மகாபாகு, சத்ருஞ்ஜெயன்" என்றல்லவா பெயர் வைத்து இருப்பேன். 'அழகாக இருக்கிறான்' என் குழந்தை என்று 'ராமன்' என்றல்லவா பெயர் வைத்து இருக்கிறேன். அழகாக இருக்கும் என் குழந்தையை பார்த்து சந்தோஷப்படாமல், இப்படி யுத்தத்திற்கு அழைக்கிறீர்களே? ஒரு வேளை, ராமன் ராமன் என்று தவறி இங்கு வந்து விட்டீரோ? கையில் கோடாரியுடன் சண்டைக்காகவே இன்னொரு ராமன் அலைந்து கொண்டு இருக்கிறார். நீங்கள் அவரை பார்க்க வந்து, தவறி இங்கு வந்து விட்டீர்களோ? இவன் 'தசரதராமன்' ஸ்வாமி. நீங்கள் தேடி வந்தது 'பரசுராமர்' என்று நினைக்கிறேன். என் குழந்தை ராமன் "தாமரை போன்ற கண்கள்" (ராஜீவ லோசனன்) உடையவன் ஸ்வாமி. இதன் காரணமாகவே ராக்ஷசர்களோடு யுத்தம் செய்யும் தகுதி என் குழந்தைக்கு இல்லை."
என்று சொல்லி முடித்து விட்டார்.
பொதுவாக "தாமரை கண்ணன்" என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் கவிஞர்களுக்கு மனதில் உதிக்கும்.
தசரதன், விஸ்வாமித்ரரை பார்த்து
"தாமரை எப்படி மலர்ந்து இருக்குமோ, அதுபோல, மலர்ந்த கண்களை உடையவன் என் குழந்தை. தாமரை எப்படி அழகாக இருக்குமோ, அதுபோல அழகான கண்களை உடையவன் என் குழந்தை. தாமரை எப்படி குளிர்ச்சியாக (ஆர்த்ரம்) இருக்குமோ, அதுபோல குளிர்ச்சியான கண்களை உடையவன் என் குழந்தை. தாமரையின் ஓரத்தில் எப்படி சிவப்பு இருக்குமோ, அதுபோல என் குழந்தையின் கண்களின் ஓரத்தில் சிவப்பாக இருக்கும். தாமரை பார்த்து எப்படி வண்டுகள் மொய்க்குமோ, அதுபோல அனைவரையும் ஆகர்ஷிக்கும் அன்பு நிறைந்த கண்களை உடையவன் என் குழந்தை."
என்ற பொதுவான அர்த்தத்தில் சொல்லவில்லையாம்.
மாறாக,
தசரதன், விஸ்வாமித்ரரை பார்த்து,
"ஸ்வாமி, தாமரையானது சாயங்காலம் ஆனது என்றால், கூம்பி விடும். ராத்திரியில் தாமரை மலர்ந்து இருக்காதே. என் குழந்தை ராமன் "தாமரை போன்ற கண்கள்" உடையவன் ஸ்வாமி. என் மகன், காலை வேளையில், வெளியே சென்று விளையாடி, சாயங்காலம் வருவான். அவன் தின்பதற்கு கொஞ்சம் பட்சணம் செய்து கொடுத்து சாப்பிட சொல்லி, கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்த்தால், அங்கேயே சாய்ந்து கொண்டு தூங்கி கொண்டு இருப்பான். அவன் தாய், கௌசல்யா அவனை ஆசையோடு உள்ளே அழைத்து கொண்டு, சூரியன் மறைந்து இரவு வருவதற்குள் தூங்க பண்ணி விடுவாள், ஸ்வாமி. நீங்கள் யுத்தம் செய்ய சொல்வதோ, ராக்ஷஷர்களுடன். அவர்களோ ராத்திரியில் தான் சண்டைக்கு வருவார்கள். விடியும் வரை சண்டை செய்வார்களே? என் குழந்தையோ தாமரை கூம்பி விடுவது போல, தூங்கி போய் விடுவானே, ஸ்வாமி? இதன் காரணமாகவே, யுத்தம் செய்ய என் குழந்தைக்கு யோக்கியதை இல்லை, ஸ்வாமி"
என்று சொல்லி, தன் மகன் யுத்தத்திற்கு லாயக்கு இல்லை என்று முடித்து விட்டார் தசரதன்.
விஸ்வாமித்ரர் மனதுக்குள் நினைத்தார்,
"இவனிடத்தில் போய் வேதாந்த ரகசியத்தை இத்தனை மணிநேரம் பேசினேனே!! பரப்ரம்மம் தான் உனக்கு ராமனாக வந்து இருக்கிறார் என்று வெளிப்படையாக நானே சொன்ன பிறகும், ஒரே அடியாக, என் குழந்தைக்கு யுத்தம் செய்ய யோக்கியதை இல்லை என்று சொல்லி முடித்து விட்டானே!! வேதாந்த ரகசியத்தை விருப்பம் இல்லாதவனிடம், கேட்கும் பக்குவம் இல்லாதவனிடம் சொல்ல கூடாது என்ற பொழுதும், இவனுக்கு போய் சொல்லி நேரத்தை வீணடித்து விட்டேனே!!"
என்று மனதுக்குள் நினைத்தார்.
ராமனை தன்னுடன் கூட்டி கொண்டு செல்ல முடியாததை காட்டிலும், இத்தனை நேரம் இவனுக்கு செய்த உபதேசம் வீண் போனதே என்று 'பொறுமையே ப்ராம்மணனுக்கு பூஷணம்' என்று சொன்ன விஸ்வாமித்ரர், யாகத்தில் பூர்ணஆஹுதி விடும் போது வெளிப்படும் அக்னியை போல கோபத்தை வரவழைத்து கொண்டார்.
இவரின் கோபத்தை கண்டு, சூரியன் தன் கிரணங்களை குறைத்து கொண்டான்.
வாயு பகவான் காற்றை மந்தமாக்கினான். தேவர்கள் பயந்ததால், பஞ்ச பூதங்களும் தன் சக்தியை குறைத்து கொண்டது. உலகமே மந்தமாகி, இவர் கோபத்தின் விளைவு என்ன ஆகுமோ? என்று பயந்தது.
விஸ்வாமித்ரரின் கோபத்தை கவனித்த வசிஷ்டர், இவரை நன்கு அறிந்தவர்.
ஒரு சமயம், விஸ்வாமித்ரர் அரசனாக (க்ஷத்ரியன்) இருந்த போது, வஷிஸ்டரிடம் கோபம் கொண்டு, 'நானும் ப்ரம்ம ரிஷி ஆவேன், நானும் பிராம்மணன் ஆவேன்' என்று சபதம் செய்தார்.
சபதம் செய்தது மட்டுமில்லை, கடும் தவம் செய்து, காமத்தையும், கோபத்தையும் க்ஷத்ரியனாக இருந்ததால் பல தடவை அடக்க முடியாமல் போனாலும், விடா முயற்சியால் மீண்டும் மீண்டும் தவம் செய்து, கடைசியில் காமத்தையும், கோபத்தையும் ஜெயித்து, பிராம்மணன் ஆகி, மேலும் கடும் தவம் செய்து தேவர்கள், ப்ரம்மா உட்பட ப்ரத்யக்ஷம் ஆகி, "நீ ப்ரம்ம ரிஷி" என்று சொல்லிய பின்பும், ஒப்புக்கொள்ளாமல், வசிஷ்டர் வாயால் இறுதியில் "நீ ப்ரம்ம ரிஷி" என்று பெயர் வாங்கி தன் சபதத்தை நிறைவேற்றி கொண்டார்.
ஒரு ப்ரம்ம ரிஷி ஆவதற்கே விஸ்வாமித்ரருக்கு அத்தனை விடா முயற்சி இருந்தது என்றால், பரப்ரம்மம் ராமனாக அவதரித்துள்ள நிலையில், தசரதனால் தனக்கு ராமன் கிடைக்கவில்லை என்று சொன்னால், இவருக்கு எத்தனை கோபம் வருமோ? என்று வசிஷ்டரே சிறுது கலங்கி விட்டார்.
விஸ்வாமித்ரர் ஒரு மணி நேரம் ஞானத்தை உபதேசம் செய்தும், தசரதன் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்று உணர்ந்த வசிஷ்டர், தசரதனை பார்த்து,
"விஸ்வாமித்ரர் சொன்னது போல, உன் மகன் ராமன் 'பரப்ரம்மம்' தான். சர்வ வல்லமை உடையவன் தான்."
என்று தன் பங்குக்கு ஒரு மணி நேரம் ராமனின் பெருமையை சொல்லவில்லை. சொன்னாலும் தசரதனுக்கு புரியாது.
அதற்கு பதில், விஸ்வாமித்ரரின் பெருமையை தசரதனுக்கு சொல்லலாம் என்று தீர்மானித்தார்.
மகா புத்திசாலியான வசிஷ்டர், தசரதனிடம் "ராமனின் அவதாரத்தை, பெருமையை" சொல்லி ஒன்றும் நடக்காது என்று புரிந்து கொண்டார்.
விஸ்வாமித்ரர் "பரபிரம்மமே ராமனாக அவதரித்து உள்ளார்" என்று ஞானத்தோடு பார்த்து சொல்கிறார்.
தசரதனோ, "ராமன் என் குழந்தை" என்று பாசத்தோடு (ப்ரேமையோடு) பார்க்கிறான்.
பொதுவாக, தெய்வத்திடம் ஏற்படும் ப்ரேமையை, ஞான உபதேத்தால் வீழ்த்தவே முடியாது. பிரேமை தான் ஜெயிக்கும்.
இங்கு இத்தனை மணி நேரம் விஸ்வாமித்ரர் செய்த ஞான உபதேசம், தசரதனின் ராம பிரேமையால் தோற்று நின்றது.
இப்பொழுது விஸ்வாமித்ரருடன் ராமனை அழைத்து செல்ல வைக்க, அந்த அன்பின் வழியிலேயே சென்றால் தான், தசரதன் அனுப்ப சம்மதிப்பான் என்று உணர்ந்த வசிஷ்டர், உடனே தசரதனை பார்த்து,
"தசரதா ! உன் குழந்தைக்கு ஒரு ஆபத்தும் வராது. விஸ்வாமித்ரர் எப்பேர்ப்பட்ட மகாத்மா தெரியுமா? எனக்கு ஒரு யோக்கியதை உண்டு . உனக்கு ஒரு யோக்கியதை உண்டு. நான் ப்ரம்ம ரிஷி, நீ ராஜ ரிஷி. அவரோ இரண்டு யோக்கியதையும் உடையவர். இவர் முதலில் ராஜரிஷியாகி இருந்து, ப்ரம்ம ரிஷி ஆனவர். அவரிடத்தில் உலகில் உள்ள ஏராளமான அஸ்திர, சஸ்திரங்கள் இருக்கிறது. தானாகவே கண்டுபிடித்த அஸ்திர, சஸ்திரங்களும் இவரிடத்தில் இருக்கிறது. ப்ரம்ம ரிஷியாகி போனதால், இவையெல்லாம் இவருக்கு பிரயோஜனம் இல்லை. இவை அனைத்தையும் உன் பிள்ளைக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். இப்படி பலவித ஷ்ரேயஸ்களை ராமனுக்கு செய்வார். ஒரு ஆபத்தும் ஏற்படாது. விஸ்வாமித்ரருடன் அனுப்பு"
என்றவுடன்,
தசரதன் சந்தோஷமடைந்தார்.
"விஸ்வாமித்ர ரிஷிக்கு என் குழந்தை மேல் எத்தனை கிருபை இருந்தால், அத்தனையும் என் குழந்தைக்கு கொடுக்க நினைப்பார். நான் அனுப்பாமல் இருந்து இருந்தால், என் குழந்தைக்கு எத்தனை பெரிய நஷ்டம் இது."
என்று நினைத்து, விஸ்வாமித்ர ரிஷியுடன் அனுப்ப சம்மதத்துடன் "ராமா" என்று அழைக்க, இந்த விவாதத்தை கேட்டு கொண்டிருந்த ராமன், கூடவே லக்ஷ்மணனுடன் வில்லும், அம்புமாக தயாராக வந்து நின்றனர்.
தசரதன் இரண்டு குழந்தைகளையும் விஸ்வாமித்ரரிடம் ஒப்படைத்தார்.
தன் வந்த காரியம் நிறைவேறிய சந்தோஷத்தில், இனி ஒரு நொடி இருந்தாலும், திடீரென்று மனம் மாறி, "அனுப்ப மாட்டேன். சுமந்திரா, உடனே சென்று ராம லக்ஷ்மணர்களை அழைத்து கொண்டு வா" என்று தசரதன் சொல்லி விடுவானோ, என்று உடனேயே அங்கிருந்து ராம லக்ஷ்மணர்களை கூட்டிக்கொண்டு வெகு தூரம் சென்று விட்டார்.
ராம லக்ஷ்மணர்கள் கையில் வில், அம்புடன் இவர் பின்னால் ஓட, வேக வேகமாக நடந்தார்.
சரயு நதி வரை நிற்காமல் வேகமாக நடந்த விஸ்வாமித்ரர் அங்கு வந்த பின் தான் கொஞ்சம் நின்றாராம்.
மேலும் சித்தாஸ்ரமம் நோக்கி வேகமாக நடக்க ஆரம்பிக்க, பரப்ரம்மமே ராமனாக தன்னை பின் தொடர்ந்து வருவதை மறந்து விடுவாரா விஸ்வாமித்ரர்?
இவர்கள் நடந்து போவதை பார்த்தால், பரமேஸ்வரன் முன்னே நடக்க, பின்னால் முருகனும், விநாயகரும் செல்வது போல இருந்தது என்கிறார், வால்மீகி பகவான்.
நீருண்ட மேகம் போல, மரகத மணியை போல இருக்கும் ராமரும், வைடூரிய மணியை போல ஜொலிக்கும் லக்ஷ்மணனும், தன் பின்னால் ராஜ அலங்காரத்துடன் கையில் வில், அம்புடன் வருவதை எண்ணி, தனக்கு கிடைத்த பாக்கியத்தை நினைத்தார்.
வேகமாக நடந்து கொண்டே, அவ்வப்போது விஸ்வாமித்ரர் ராம, லக்ஷ்மண தொடர்ந்து வரும் அழகை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே நடந்தார்.
வெளியில் பார்ப்பதற்கு விஸ்வாமித்ரர் கம்பீரமான ரிஷியாக தெரிந்தாலும், 'பரபிரம்மம்' தன் பின்னால் வருகிறதே என்று எண்ணி பரவசம் அடைந்தார்.
விஸ்வாமித்ரர் கண்களில் நீர் வழிய, தன் மனதுக்குள் நினைத்தார்,
"இது எனக்கு கிடைக்க கூடிய நிதியா? தன் தகப்பனாரை விட்டு, இப்படி என் பின்னால் ஓடி வருகிறார்களே இருவரும் ! நான் சம்பாதித்த ஞானத்தை (அறிவு) கொண்டு, பகவானை பிடித்து விடலாம் என்றல்லவா நினைத்தேன். என் சாமர்த்தியத்தால் பேசி, ராமரை பிடித்து விடலாம் என்று நினைத்தேனே ! பகவானை, நான் பயின்ற ஞானத்தால் அடைய முடியாது என்று தசரதன் சபையிலேயே உணர்ந்து கொண்டேன். என் சாமர்த்தியம் ஒன்று கூட அங்கு செல்லுபடியாகவில்லையே ! கடைசியில் குருவான வசிஷ்டர் செய்த சிபாரிசு தானே ஜெயித்தது. எந்த அறிவை கொண்டும், பகவானை பிடித்து விட முடியாது என்று உணர்ந்தேன். வசிஷ்டர் சொன்ன ஒரு சொல்லுக்கு, இப்படி ராமனாக அவதரித்த பரப்ரம்மம் என் பின்னால் ஓடி வருகிறாரே? மேலும், 'உன் முயற்சியால் என்னை பிடிக்க முடியாது' என்று முதலில் நிரூபித்து, பின், தானே என்னுடன் வருவதற்கு ஆசைப்பட்டு, தசரதன் மனது மாறும்படியாக செய்து, இப்படி என் பின்னால் ஓடி வருகிறாரே!! 'எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவனாக, மனதில் எப்பொழுதும் பகவத் தியானமே செய்து கொண்டிருப்பவனாக, சாதுக்களாக இருக்கும் மகாத்மாக்கள் பாத தூளி என் தலை மேல் விழாதா? என்று அவர்களை தொடர்ந்து கொண்டு, அவர்கள் பின்னால் நான் ஒடுகிறேன்' என்று பகவான் சொல்லும் சாஸ்திரம், இன்று நிரூபணம் ஆகிறதே?"
என்று நினைத்து, தனக்கு கிடைத்த அணுகிரஹத்தை நினைத்து மேனி சிலிர்த்து ஆனந்த கண்ணீருடன், அவ்வப்போது திரும்பி திரும்பி ராம லக்ஷ்மண சகோதரர்களை பார்த்து கொண்டே, நடந்து கொண்டு இருந்தார்.
ராமருடன் இப்படியே சில மணி நேரம் நடந்து வர வர விஸ்வாமித்ரரின் ஸ்வபாவம் மாற தொடங்கியது.
ராமர் தன்னோடு அருகிலேயே வர வர, விஸ்வாமித்ரர் இது வரை சபையில் பேசிய "ராம ப்ரபாவம், வேதாந்த தத்துவங்கள்' எல்லாம் காணாமல் போய், பிரேமை (அன்பு) அதிகமானது".
'நம் பையன், நம் குழந்தை' என்ற எண்ணம் உருவாகி, அடிக்கடி திரும்பி பார்த்து, ராமரின் தலையை வருடி விட்டார்.
வேர்வையை தன் மரவுரியால் துடைத்து விட்டார்.
மேலும் ராமனை பார்த்து,
"குழந்தாய், நடந்து நடந்து கால் வலிக்கிறதோ? நான் வேண்டுமென்றால் கை கால் பிடித்து விடட்டுமா? களைப்பாக இருந்தால், நாம் இங்கேயே தங்கி விட்டு, பின்னர் செல்லலாமா? உனக்கு பசிக்கிறதா? காலையில் அரசவையில் சாப்பிட்டது தானே. நேரம் ஆகிவிட்டதே?"
என்றெல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டார் ஞானியான விஸ்வாமித்ரர்.
ராமரோ, "அதெல்லாம் ஒன்றும் இல்லையே" என்று சொல்லியும், ராம லக்ஷ்மணர்களுக்கு பசிக்குமோ, களைத்து இருப்பாரோ, தூக்கம் வருமோ என்று தானே நினைக்க ஆரம்பித்து விட்டார் விஸ்வாமித்ரர்.
'ஆமாம் பசிக்கிறது' என்று சொன்னால் கூட, இவரிடம் கொடுப்பதற்கு போஜனம் ஏதும் இல்லை.
ஆனாலும் விஸ்வாமித்ரரிடம்,
பசியே வராமல் இருக்க,
தேவைப்பட்டால் மட்டும் தூக்கம் வர,
களைப்பே அடையாமல் இருக்க
சக்தி வாய்ந்த 'பலை அபலை' என்ற இரு மந்திரங்கள் அவரிடம் ஸித்தியாகி இருந்தது.
ராமருக்கு லக்ஷ்மணருக்கும் தான் ஸித்தியாக்கி வைத்திருந்த இந்த பலை-அதிபலை என்ற மந்திரத்தை உபதேசம் செய்து விட்டார் விஸ்வாமித்ரர்.
உபதேசம் செய்த பின், விஸ்வாமித்ரர் பெரிதும் நிம்மதி அடைந்தார்.
தன் மந்திர உபதேசத்தால், ராமன் பலம் பெற்றான் என்று எப்படி நினைத்தார் விஸ்வாமித்ரர்? என்று நமக்கு தோன்றலாம்.
இப்படி ஒரு எண்ணம் எப்படி விஸ்வாமித்ரரிடம் வந்தது? என்றும் நமக்கு தோன்றலாம்.
சற்று முன் தான், இவர் தசரதனிடம் மணிக்கணக்கில் சபையில்
'வேதத்தின் பிரமாணத்தை கொண்டு, உன் பிள்ளை 'ராமன்' பரமாத்மா என்று தெரிந்து கொண்டேன். அவனை குழந்தை குழந்தை என்று பார்க்காதே'
என்றெல்லாம் பேசி ராமனை அழைத்து வந்தார் விஸ்வாமித்ரர் என்று பார்க்கிறோம்.
பகவான் என்று சொல்லிவிட்டு, அவருக்கு இவர் மந்திர உபதேசம் செய்து பலம் கிடைக்கட்டும் என்று எப்படி நினைத்தார்? என்று நமக்கு தோன்றலாம்.
வேதத்தில் "விஷ்ணுவின் பலத்தால் தான் இந்த உலகமே தரிக்கப்பட்டுள்ளது" என்று விஷ்ணுவின் பலத்தை சொல்கிறது.
வேத ப்ராமணமாக ராமன் அவதார புருஷன் என்று தெரிந்த விஸ்வாமித்ரருக்கு, விஷ்ணுவின் பலம் தெரியாமல் இருக்குமா?
மகா பலசாலியான விஷ்ணு அவதாரமான ராமருக்கு, இவர் உபதேசித்த "பலை அதிபலை" என்ற இரு மந்திரத்தால் தான் பலம் அதிகரித்தது என்று எப்படி விஸ்வாமித்ரர் திடீரென்று நினைத்தார்? என்று நமக்கு தோன்றலாம்.
சற்று முன் சபையில் இவர் பேசியதற்கும், இப்பொழுது இவர் பேசுவதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே?
விஸ்வாமித்திரரின் செயலில் ஏற்பட்ட இந்த மாற்றத்துக்கு காரணம் உண்டு.
பொதுவாக ஆரம்பத்தில் "பகவானே, என்னை காப்பாற்று !!"
என்று தனக்காக அழுவான் அஞானியான பக்தன்.
அஞானியான பக்தனுக்கும் பகவான் அணுகிரஹம் செய்கிறார்.
பகவானின் அணுகிரஹத்தை அனுபவித்த இவன், பகவான் தன் கையில் கிடைத்தவுடன், "என்னை காப்பாற்று" என்று ஆரம்பத்தில் சொன்னவன், அன்பின் காரணமாக, "பகவானை நாம் காப்பாற்ற வேண்டுமே" என்று நினைக்க ஆரம்பித்து விடுவான்.
"என்னை காப்பாற்று" என்று சொல்லும் பக்தன், பகவானை "சர்வேஸ்வரன், சர்வ வல்லமை கொண்டவன்" என்று நினைக்கிறான்.
பகவான் தன்னை வெளிக்காட்ட வெளிக்காட்ட, தன் அருகே இருப்பதை உணரும் பக்தன்,
'யாருக்கும் கிடைக்காதவர் தனக்கு கிடைத்து விட்டாரே! அவரை நாம் தானே பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மை விட்டால் யார் பார்த்து கொள்வார்கள்?'
என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்து விடுவான்.
இதற்கு பெயர் தான் பிரேமை (அன்பு).
இந்த பிரேமை (அன்பு) அதிகமாகி அதிகமாகி, "பகவான் என்னை காப்பாற்ற வேண்டும்" என்று வந்தவன், அன்பின் காரணமாக, "பகவானை தான் காப்பாற்ற வேண்டும். அவரை தீயவர்கள் நெருங்காமல் பார்த்து கொள்ள வேண்டுமே!!" என்று நினைக்க ஆரம்பித்து விடுவான் பிரேம பக்தன்.
ராமரை மகனாக பெற்ற தசரத மகாராஜனின் பிரேம நிலை, விஸ்வாமித்ரருக்கு புரிந்தது.
இந்த அன்புக்கு அடிப்படை எது?
ஞானம் (அறிவு).
தெளிந்த அறிவு உடைய ஞானியின் அருகில், பகவான் வந்து விட்டால், பிரேம பக்தி ஆரம்பிக்கிறது.
இந்த பிரேமை என்ற அனுபவம், ஞானத்தை விட உயர்ந்தது.
விஸ்வாமித்ரர் மஹா ஞானி.
ராமர் 'பரமாத்மா' என்று நன்கு அறிந்தவர்.
சர்வ வல்லமை கொண்டவர் 'ராமர்' என்றும் அறிந்தவர்.
இப்பேர்ப்பட்ட இந்த ஞானியிடம், பகவான் ராமர் அருகில் வந்ததும், வேதாந்த தத்துவங்கள் மறந்து, ஒரு அஞானியை போல, தான் உபதேசித்த மந்திரத்தால் ராமனுக்கு பலம் என்று நினைக்கவில்லை.
மாறாக,
தான் சம்பாதித்த இந்த மந்திரத்தை அவரிடம் சமர்ப்பணம் செய்து, ராமருக்கு தன்னிடம் இருந்ததை சமர்ப்பித்து, "மங்களாசாஸனம்" செய்தார் விஸ்வாமித்ரர்.
பகவானுக்கு அஞானி தன்னிடம் பக்தி செய்வது ஆச்சரியமாக இருக்காது.
ஒரு ஞானி தன்னிடம் பக்தி செய்வதை பெருமையாக கருதுகிறார்.
விஸ்வாமித்திரர் மந்திர உபதேசமாக தனக்கு செய்யும் பூஜையை ஆசையுடன் ஏற்று கொண்டார்.
ராத்திரி பொழுதை அந்த சரயு நதி கரையிலேயே தங்கி, அதற்கு பின் சித்தாஸ்ரமம் சென்றார்.
தாடகை வதம் செய்து, யாகம் இனிதாக நடக்க செய்து, அங்கிருந்து மிதலா (நேபால்) சென்று அங்கு சிவதனுஷை நாண் ஏற்றி, வில்லை முறித்து தன் பலத்தை காட்டி, சீதையை தன் தகப்பனார் தசரதன் சம்மதத்துடன் ஏற்றுக்கொண்டு, சீதா ராம தம்பதிகளாக அயோத்தியா திரும்பினர், திவ்ய தம்பதிகள்.
ஸ்ரீராமர், தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்துக்கு கட்டுப்பட்டு, 14 வருடம் காட்டுக்கு சென்றார்.
தன்னால் தான், இந்த நிலை ராமருக்கு வந்தது என்று மனம் வருந்தி, தம்பி பரதன் அழுதார்.
காட்டுக்கு சென்று, ராமரை அயோத்தி வந்து நாட்டை ஆளுமாறு கேட்டு கொண்டார். பிடிவாதம் செய்தார். தனக்கு இந்த பழி வேண்டாம் என்று பாவத்திற்கு அஞ்சினார்.
வேண்டுமென்றால் ராமர் நாட்டை ஆளும் போது, தான் 14 வருடம் காட்டில் வாழவும் தயாராக இருந்தார். வராவிட்டால் உயிர் தியாகம் செய்வேன் என்று பிடிவாதமும் செய்தார்.
கடைசியாக ஜனகர் அங்கு வந்து, பிரேமை (அன்பு) என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? என்று விளக்கி,
ப்ரேமைக்கும், பாசத்திற்கும் உள்ள வித்தியாசத்தை பரதனுக்கு உணர்த்தி,
அவருக்கு பிரேமையின் உண்மையை புரிய வைத்தார்.
பிரேமையை விட பாசம் தாழ்ந்தது என்றும் உணர வைத்தார்.
ஜனகர் : பரதா, நீ ராமரிடம் வைத்துள்ள அன்புக்காக எதை தியாகம் செய்ய துணிவாய்?
பரதன் : மிகவும் உயர்ந்தது உயிர். என் உயிரையே கூட ராமருக்காக தியாகம் செய்வேன்.
ஜனகர் : உயிரை தியாகம் செய்வது எளிது. ஆனால் உயிரை இழக்காமல், அவருக்காக வாழ்வதே நிஜமான அன்பு (பிரேமை).
பரதா, ராமருக்காக நீ செய்யும் தியாகம் மிக உயர்ந்தது.
ஆனால், இப்போது நீ செய்யும் இந்த தியாகத்தை விட, நீ அன்பு செய்யும் ராமருக்கு உன் தியாகம் மகிழ்ச்சி ஏற்படுத்துமா? என்று யோசித்துப் பார்.
அவர் விருப்பம் இல்லாமல் நீ செய்யும் எந்த செயலும், தியாகம் ஆகாது. உண்மையான அன்பு இல்லை.
உண்மையான அன்பு என்பது, நீ அன்பு வைத்து இருப்பவரின் விருப்பப்படி வாழ தூண்டும்.
நீ இப்பொழுது செய்யும் தியாகம் பாசத்தினால் வந்தது.
பாசத்தில் சுய நலம் மட்டுமே இருக்கும்.
அன்பில் (ப்ரேமையில்) மற்றவருக்காக வாழ தோன்றும்.
நீ உண்மையான அன்பு ராமரிடம் கொண்டுள்ளதால், ராமரிடமே சென்று 'நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேள்.
அவர் விருப்பம் என்னவோ அப்படியே செய்.
அவர் எதை விரும்பவில்லையோ அதை செய்யாதே !
இது தான் நீ ராமருக்கு காட்டும் உண்மையான அன்பு.
என்று சொல்லி முடித்தார் சீதையின் தந்தை ஜனகர்.
அது வரை தான், 'தன் தியாகம்' என்று பாச வலையில் இருந்த பரதர், அன்பின் உயர்வை உணர்ந்தார்.
ராமர் என்ன சொல்கிறாரோ, அதை பின் தொடர்வதே உண்மையான அன்பு என்று உணர்ந்து, ராமரின் சொல் படி 14 ஆண்டு அயோத்தியை ஆள ஒப்புக் கொண்டு, உயிர் தியாகம் செய்வேன் என்ற பிடிவாதத்தை கைவிட்டார்.
பாசத்திலிருந்து விடுபட்டு, பரதர் அன்புக்கு அடிமையானார்.
ராமர் விருப்பப்படி வாழ்ந்தார்.
ராமர் பரதனை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்:
யாரிடத்திலும் அன்பு செய்ய வேண்டும்.
பாசம் கூடாது.
பாசம், சுயநலமாக செயல்கள் செய்ய தூண்டும்.
அன்பு, தான் துயரப்பட்டாலும், மற்றவனுக்காக உழைக்க தூண்டும்.
சுயநலம் இல்லாதது அன்பு.
sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka