Followers

Search Here...

Saturday, 1 March 2025

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து - திருக்குறள் 1

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து - திருக்குறள் 1

மனிதா! எப்படி எழுத்துக்களுக்கு எல்லாம் "அ" என்ற அகரம் அடிப்படையாக இருக்கிறதோ, அதுபோல நீ வாழும் உலகத்திற்கு அந்த ஆதியான முதல் பகவான் இருக்கிறார். அவரே உன் படைப்பிற்கு காரணம். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு


மனிதா! தூய அறிவுவடிவாக இருக்கும் அந்த இறைவனுடைய திருவடிகளை தொழாமல் நீ இருந்தால், நீ கற்ற கல்வியினால் உனக்கு என்ன பயன் கிடைக்க போகிறது? ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்


மனிதா! கவிழ்ந்த தாமரை மலர் போன்ற உன் நெஞ்சினில் வீற்றிருக்கும் இறைவனின் திருவடிகளை நீ இடைவிடாமல் நினைத்து வாழ்ந்தால், உனக்கு மோக்ஷமும், அனைத்து இன்பங்களும் கிடைத்து விடுமே. ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்


மனிதா! உலகையும் உன்னையும் படைத்த இறைவனுக்கு விருப்பு வெறுப்பு இல்லை. அந்த இறைவனின் திருவடிகளை நீ எப்பொழுதும் நினைத்து கொண்டிருந்தால், எப்போதும் எவ்விடத்திலும் உனக்கு துன்பம் இல்லை. இது நிச்சயம். ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல


மனிதா! நீ இறைவனிடம் உண்மையாக அன்பை, விரும்பி செலுத்தினால், நீ அறியாமல் செய்த பாவ புண்ணியங்கள் கூட கழிக்கப்பட்டு, உன்னை பாதிக்காமல் இருக்கும். இது நிச்சயம். ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

மனிதா!  தோல், வாய், கண், மூக்கு, செவி. இந்த ஐந்தின் மூலம் ஏற்படும் உணர்வுகளை நீ அடக்கி, இறைவன் எதிர்பார்க்கும் தூய்மையான ஒழுக்கநெறியில் நீ நின்றால், உனக்கு நிலையான நல்வாழ்வு கிடைக்குமே. ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்


மனிதா! அறிவு, ஆற்றல், குணம்.. இந்த மூன்றிலும் ஒப்பில்லாத இறைவனின் பாதங்களை நீ இடைவிடாது சிந்தித்தால், நீ மனக்கவலை சிறிதும் இன்றி வாழலாம். இறைவனின் திருவடியை நினைக்காமல் வாழ்ந்தால், உன் மனக்கவலை கூட உன்னை விட்டு எளிதில் நீங்காதே! ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது


மனிதா! தர்மம், அதாவ்து அறமே வடிவமாக விளங்கும் இறைவனின் திருவடியை நீ நினைக்காமல் போனால், நீ கடல் போன்ற பொருள் சேர்ப்பதிலும், இன்பத்தை தேடுவதிலுமே காலத்தை கடத்தி, இந்த கடல் போன்ற துன்ப கடலை கடக்க முடியாமல் தவிப்பாய்.  ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது



மனிதா! மதிக்கத்தக்க குணங்களையுடைய பகவானின் திருவடியை வணங்காதவன் தலையில், கண் இருந்தும் குருடனே, காது இருந்தும் செவிடனே. புலன்கள் இருந்தும் அது பயனற்றவையே. ஆதிபகவானின் திருவடியை வணங்கு. இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை


மனிதா! பகவானுடைய திருவடியை நீ பற்றினால் மட்டுமே, மறுபிறப்பு என்ற பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது. ஆதிபகவானின் திருவடியை வணங்கு. இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்


சமஸ்கிருதம் தர்மம், அர்த்தம், காமம் என்று சொல்கிறது.

அதையே, தமிழில் அறம், பொருள், இன்பம் என்று சொல்கிறோம்..


திருவள்ளுவர் இங்கு இறைவனை வணங்குவது நம் அறம், நம் தர்மம் என்று சொல்கிறார். 


அதிகாரம் 1, கடவுள் வாழ்த்து.