ஆத்திச்சூடி அறிவோமா?
தர்மம் அதாவது அறம் எதுவோ, அதை செய்ய விரும்பு.
அறம் செய விரும்பு.
கோபம் வந்தால் அதை உடனே தணியச்செய்.
ஆறுவது சினம்.
கொடுக்கக்கூடியதை ஒளித்து வைக்காதே.
இயல்வது கரவேல்.
பிறர் கொடுப்பதை நீ தடுக்காதே.
ஈவது விலக்கேல்.
உன்னிடம் உள்ளதை நீயே விளம்பரம் செய்து கொள்ளாதே.
உடையது விளம்பேல்.
முயற்சியை என்றும் கை விடாதே.
ஊக்கமது கைவிடேல்.
கணக்கையும் இலக்கணத்தையும் இகழாமல் கற்று கொள்.
எண் எழுத்து இகழேல்.
பிறரிடம் கேட்பது இழிவாகும்.
ஏற்பது இகழ்ச்சி.
பிறருக்கு கொடுத்து விட்டு பிறகு நீ சாப்பிடு.
ஐயமிட்டு உண்.
உலகத்தை புரிந்து கொண்டு செயல்படு.
ஒப்புரவு ஒழுகு.
படிப்பதை விடாதே.
ஓதுவது ஒழியேல்.
பொறாமை வார்த்தைகளை பேசாதே.
ஒளவியம் பேசேல்.
அதிக லாபத்தை மனதில் வைத்துக்கொண்டு, தானியங்களை குறைக்காதே.
அஃகம் சுருக்கேல்.
பார்த்தது ஒன்று பேசுவது வேறொன்று என்று வாழாதே.
கண்டொன்று சொல்லேல்.
ங என்ற எழுத்து, ஙா, ஙி, ஙீ .. போன்ற மற்ற எழுத்துக்களை தன்னோடு சேர்த்துக்கொண்டு அர்த்தமுள்ள சொற்களை கொடுக்கிறது. அது போல நீயும், உன் சொந்தங்கள் தனியாக பிரகாசிக்க முடியாவிட்டாலும், உன்னோடு சேர்த்துக்கொண்டு அவர்களது வாழ்க்கைக்கு அர்த்தம் கொடு.
ஙப்போல் வளை.
சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளி.
சனி நீராடு.
இனிமையாக பேசு.
ஞயம்பட உரை.
வெற்றிடம் அதிகமாக இருக்கும்படி வீட்டை கட்டாதே.
இடம்பட வீடு எடேல்.
நட்புக்கு ஆசைப்படுபவரின் குணத்தை தெரிந்து கொண்டு, பிறகு நட்பு கொள்.
இணக்கம் அறிந்து இணங்கு.
தாய் தந்தையை நீ காப்பாற்று.
தந்தை தாய் பேண்.
ஒருவர் செய்த உதவியை மறக்காதே.
நன்றி மறவேல்.
அந்தந்த காலத்தில் செய்ய வேண்டியதை செய், காலத்தில் பயிர் செய்.
பருவத்தே பயிர் செய்.
பிறர் நிலத்தை பிடுங்கி அதில் வாழாதே.
மன்று பறித்து உண்ணேல்.
பொருத்தமில்லாத காரியங்கள் செய்யாதே.
இயல்பு அலாதன செயேல்.
பாம்புகளை பிடித்து விளையாடாதே. விஷமுள்ளவர்களோடு ஜாக்கிரதையாக இரு.
அரவம் ஆட்டேல்.
இலவம் பஞ்சு மெத்தையில் தூங்கு.
இலவம் பஞ்சில் துயில்
ஏமாற்றும்படியாக கபடமான சொற்களை பேசி ஏமாற்றாதே.
வஞ்சகம் பேசேல்.
இழிவான காரியங்கள் செய்யாதே.
அழகு அலாதன செயேல்.
இளமைக்காலத்தில் கல்வியை கற்றுக்கொள். இளமையில் கல்.
அறம் என்ற தர்மத்தை மறக்காதே.
அறனை மறவேல்.
நீண்டநேரம் தூங்காதே.
அனந்தல் ஆடேல்.
கடிந்து பேசாதே.
கடிவது மற
பிற உயிர்களை காப்பதே விரதம்.
காப்பது விரதம்.
உன்னுடைய பொருள் பிறருக்கு பயன்படும்படி வாழ்.
கிழமைப்பட வாழ்.
கீழ்த்தரமான குணத்தை விலக்கு.
கீழ்மை அகற்று.
உன்னிடமுள்ள நல்ல குணங்களை விட்டு விடாதே.
குணமது கைவிடேல்.
நல்லவர்களோடு நட்பு கிடைத்தப்பின் அவர்களை விட்டு நீங்காதே.
கூடி பிரியேல்.
அடுத்தவர்களுக்கு கேடு செய்வதை விட்டுவிடு.
கெடுப்பது ஒழி.
கற்றவர்கள் பேசுவதை காது கொடுத்துக்கேள்.
கேள்வி முயல்.
உனக்கு தெரிந்த தொழிலை பிறருக்கு கற்றுக்கொடு.
கைவினை கரவேல்.
கொள்ளை அடிக்காதே.
கொள்ளை விரும்பேல்.
குற்றமான விளையாட்டுகள் செய்யாதே.
கோது ஆட்டு ஒழி.
சட்டத்திற்கு கட்டுப்பட்டு நில்.
சக்கர நெறி நில்.
அறிவாளிகள் கூட்டத்தோடு இரு.
சான்றோர் இனத்து இரு.
உண்மை போல தோன்றும் பொய் வார்த்தைகளை பேசாதே.
சித்திரம் பேசேல்.
நல்ல காரியங்களை மறந்துவிடாதே.
சீர்மை மறவேல்.
கோபிக்கும்படியாக பேசாதே.
சுளிக்க சொல்லேல்.
சூதாட விரும்பாதே.
சூது விரும்பேல்.
செய்யும் காரியத்தை செம்மையாக செய்.
செய்வன திருந்த செய்.
சேருமிடம் நல்லவர்கள் சூழ்ந்த இடமா என்று தெரிந்து கொண்டு பிறகு அவர்களுடன் சேர்.
சேர் இடம் தெரிந்து சேர்.
பெரியோர்கள் வெறுக்கும் படி நீ அலையாதே.
சை என திரியேல்.
பேசும்போதே சோம்பேறியாக பேசாதே. உற்சாகமாக பேசு.
சொல் சோர்வு படேல்.
சோம்பேறியாக அலையாதே.
சோம்பி திரியேல்.
யோக்கியனாக இரு.
தக்கோன் என திரி.
தானம் செய்ய விரும்பு.
தானமது விரும்பு.
விஷ்ணுவுக்கு தொண்டு செய்.
திருமாலுக்கு அடிமை செய்.
பாவச்செயல்களை நீக்கு.
தீவினை அகற்று.
துன்பத்திற்கு இடம் கொடுக்காதே.
துன்பத்திற்கு இடம் கொடேல்.
ஆராய்ந்து தொழில் செய்.
தூக்கி வினை செய்.
தெய்வத்தை இகழாதே.
தெய்வம் இகழேல்.
தேசத்தில் உள்ளவர்களோடு ஒத்து வாழ்.
தேசத்தோடு ஒத்து வாழ்.
புத்தியில்லாத பெண்களுடைய தீய பேச்சை கேட்காதே.
தையல் சொல் கேளேல்.
தொன்றுதொட்டு வரும் பழக்கத்தை மறந்து விடாதே.
தொன்மை மறவேல்.
தோல்வி அடையக்கூடிய வழக்குகளில் சம்பந்தப்படாதே.
தோற்பன தொடரேல்.
புண்ணியத்தையே உறுதியாக பிடி.
நன்மை கடைப்பிடி.
உன் நாட்டில் உள்ளவர்கள் ஏற்கும் நல்ல காரியங்களை செய்.
நாடு ஒப்பன செய்.
இருக்கும் நிலையை விட்டு தாழ்ந்து போகாதே.
நிலையில் பிரியேல்.
ஆழமுள்ள நீரில் விளையாடாதே.
நீர் விளையாடேல்.
நோயை தரும் சிற்றுண்டிகளை உண்ணாதே.
நுண்மை நுகரேல்.
புத்தகங்கள் பலவற்றை படி.
நூல் பல கல்.
நல்ல நெற்பயிரை விளைவி. நல்ல சிந்தனையை விதை.
நெற்பயிர் விளை.
ஒழுக்கம் மீறாமல் நட.
நேர்பட ஒழுகு.
கெடத்தக்க வினைகளை சாராதே.
நை வினை நணுகேல்.
அற்ப வார்த்தைகளை பேசாதே.
நொய்ய உரையேல்.
வியாதிக்கு இடம் கொடுக்காதே.
நோய்க்கு இடம் கொடேல்.
பழிக்கபடுபவனாக இழி சொற்களை பேசாதே.
பழிப்பன பகரேல்.
பால் கொடுத்தாலும் விஷமே தரும் பாம்பை போன்றவர்களிடம் பழகாதே.
பாம்பொடு பழகேல்.
குற்றங்கள் உருவாகும் படி பேசாதே.
பிழைபட சொல்லேல்.
பெருமை அடையும் படி நில்.
பீடு பெற நில்.
உன்னை அண்டி துதி செய்பவர்களை காப்பாற்றி வாழு.
புகழ்ந்தாரை போற்றி நில்.
விளைநிலத்தை சீர்திருத்தி பயிர் செய்து சாப்பிடு.
பூமி திருத்தி உண்.
பெரியோரை துணையாக பேணிக்கொள்.
பெரியாரை துணைகொள்.
அக்ஞானத்தை (அறியாமையை) விலக்கிக்கொள்.
பேதமை அகற்று.
துஷ்டத்தனமுள்ள சிறு பிள்ளைகளிடம் கூடாதே.
பையலோடு இணங்கேல்.
உன் செல்வங்களை காத்து வாழு.
பொருள் தனை போற்றி வாழ்.
சண்டை சம்பந்தமான தொழில் செய்யாதே.
போர் தொழில் புறியேல்.
மனம் கலங்காமல் இரு.
மனம் தடுமாறேல்.
பகைவனுக்கு இடம் கொடுக்காதே.
மாற்றானுக்கு இடம் கொடேல்.
அளவுக்கு அதிகமாக ஒன்றையும் சொல்லாதே.
மிகைபட சொல்லேல்.
அதிகமான உணவு உண்ண விரும்பாதே.
மீது ஊண் விரும்பேல்.
சண்டை நடக்கும் இடத்தில் நிற்காதே.
முனை முகத்து நில்லேல்.
அறிவில்லாதவரோடு நட்பு கொள்ளாதே.
மூர்க்கரோடு இணங்கேல்.
மெல்லிய உன் மனைவியின் தோளுக்கு துணையாக இரு.
மெல் இல் நல்லாள் தோள் சேர்.
மேன்மையான மனிதர்களின் பேச்சை கேட்டு நட.
மேன்மக்கள் சொல் கேள்.
மை தீட்டிய வேசிகள் வீட்டருகில் செல்லாதே.
மைவிழியார் மனை அகல்.
பேசுவதை சந்தேகம் நீங்கும் படி அறத்தோடு சொல்.
மொழிவது அற மொழி.
பொருள்களின் மீதுள்ள ஆசையை விலக்கு.
மோகத்தை முனி.
உன் திறமையை நீயே புகழ்ந்து பேசாதே.
வல்லமை பேசேல்.
பெரியோர்கள் முன்னே பேசாதே.
வாது முன் கூறேல்.
கல்வியை விரும்பி கற்றுக்கொள்.
வித்தை விரும்பு.
மோக்ஷத்தை அடையும்படி காரியங்கள் செய்.
வீடு பெற நில்.
உயர்ந்த குணங்களோடு இரு.
உத்தமனாய் இரு.
ஊர் மக்களோடு பேசிக்கொண்டு விரோதமின்றி வாழு.
ஊருடன் கூடி வாழ்.
கத்தி வெட்டுவது போல கடுமையாக பேசாதே.
வெட்டு என பேசேல்.
தெரிந்தே தீய காரியங்கள் பிறருக்கு செய்யாதே.
வேண்டி வினை செயேல்.
விடியற்காலையில் தூக்கத்திலிருந்து எழுந்திரு.
வைகறை துயில் எழு.
பகைவனை நம்பாதே.
ஒன்னாரை தேரேல்.
ஒரு பக்கமாக பேசாதே. நியாயத்தை பேசு.
ஓரம் சொல்லேல்.
No comments:
Post a Comment