இசைஞானி, ஆத்மஞானி.. ஞானம் என்றால் என்ன?
பல புத்தகங்களை ஒருவன் படிக்கும் போது, அதில் சொல்லப்பட்ட விஷயங்களை பற்றிய அறிவு அவனுக்கு ஏற்படுகிறது.
உதாரணத்திற்கு,
ஆத்மா என்றால் என்ன?
சரீரம் என்றால் என்ன?
என்று விளக்கும் பல சாஸ்திர புத்தகங்களை படிக்கிறோம். பகவானே தன் திருவாயால் பகவத்கீதையில் ஆத்மா, சரீரம் பற்றி விளக்கி சொல்கிறார்.
இதை படிக்கும் போது, "ஆத்மாவாகிய நாம் இந்த உடலில் இருக்கிறோம். இந்த உடல் ஒரு வாடகை வீடு தான். யமன் என்ற சொந்தக்காரன் எப்பொழுது காலி செய் என்று சொல்வானோ அப்பொழுதே ஆத்மாவாகிய நாம், போட்டது போட்டபடி விட்டுவிட்டு, கிளம்ப வேண்டியது தான்" என்று அறிவு பெறுகிறோம்.
அறிவு வேறு.
ஞானம் வேறு.
நமக்கு படிப்பு அறிவு இருந்தும், அனுபவத்தில் உணரப்படாத வரை, உடல் பற்றிய கவலையிலேயே இருக்கிறோம்.
பகவானிடத்தில் அன்பு செய்வதையே, ஆத்மா விரும்பும் என்று தெரிந்தும், உலக விஷயங்களிலேயே அன்பு செலுத்துகிறோம்.
"நான் ஆத்மா. நான் இப்போது இந்த உடலில் வாடகைக்கு இருக்கிறேன். பகவான் கூப்பிடும் வரை இந்த உடலை அவ்வபோது சரி செய்து கொண்டு, அவரிடமே அன்பு (பக்தி) செய்து கொண்டிருப்பேன்" என்ற இந்த அனுபவ உணர்வோடு வாழ்பவர்களையே "ஞானி" என்று சொல்கிறோம். குறிப்பாக "ஆத்ம ஞானி" என்று சொல்கிறோம்
ஆத்மாவை பற்றிய அறிவு, படிப்பதால் ஏற்படுகிறது.
ஆத்மாவை பற்றிய அறிவோடு, ஆத்மாவே நான் என்பதை வாழ்க்கையில் அனுபவ ரீதியாக உணர்பவர்கள், "ஆத்மஞானி" என்று அழைக்கப்படுகிறார்கள்.
அது போல,
இசையை பற்றிய அறிவு, இசை சம்பந்தமான புத்தகங்களை படிப்பதால் நமக்கு ஏற்படுகிறது.
இசையை பற்றிய அறிவோடு, இசையை தன் வாழ்க்கையில் அனுபவ ரீதியாக உணர்பவர்கள், "இசைஞானி" என்று அழைக்கப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment