பய-பக்தி என்றால்?
பகவான் அனைவருக்கும் சொந்தம்.
அவர், நம் ஒவ்வொருவர் இதயத்திலும் இருந்து கொண்டு, நம்மை பார்த்து கொண்டே இருக்கிறார்.
நாம் ஒருவரிடம் பேசினால் கூட, அடுத்தவர் இதயத்தில் இருந்து கொண்டு, நம்மை பார்த்து கொண்டே இருக்கிறார்.
நாம் நாலு பேரிடம் பேசினால் கூட, இப்படி நம்மை அவர் பார்த்து கொண்டே இருக்கிறார் என்றால், நமக்கு பகவானிடத்தில் பயம் வருமா? பக்தி வருமா?
நம்மை கவனித்து கொண்டே இருக்கிறார் என்று புரிந்து கொண்டாலேயே, பகவானிடத்தில் நமக்கு முதலில் பயம் தான் வரும்.
பயத்துக்கு பிறகு வருவது தான் ப்ரியம். அதனால் தான், "பய-பக்தி" என்று சொல்வது வழக்கம்.
பகவான் நம்மை பார்க்கிறார் என்றால் பயம் உண்டாக தான் செய்யும்.
பகவானிடத்தில் உறவு, பயத்திலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுது தான், அந்த பகவானின் மதிப்பு தெரியும். பயத்துக்கு பிறகு பகவானிடத்தில் ப்ரியம் உண்டாகும்.
இந்த பய-பக்திக்கு ராமகிருஷ்ணர் நெல்லை உதாரணமாக சொல்கிறார்.
பதருக்குள் அரிசி இருப்பதால், அதற்கு "நெல்" என்று பெயர்.
அரிசி உள்ளே இருப்பதால், நெல்லுக்கு பெருமை உண்டாகிறது.
நெல் அதை மூடி ரக்ஷிப்பதால், அரிசிக்கு பெருமை உண்டாகிறது.
உள்ளே அரிசி இல்லாமல் இருந்தால், நெல்லுக்கு "பதர்" என்று பெயர்.
ஆனால், இந்த மேல் உறையாக இருக்கும் பதர் இல்லாமல், அரிசி வளராது.
நமக்கு அரிசி தான் வேண்டும், என்பதற்காக நெல்லையே (பதரோடு) சாப்பிடுவோமா?
நமக்கு அரிசி தானே வேண்டும், என்பதற்காக, பதர் வேண்டாம் என்று, வெறும் அரிசியை மட்டும் நிலத்தில் போட்டாலும், அது முளைக்காது.
நிறைய அரிசி பயிர் செய்ய வேண்டுமென்றால், பதரோடு சேர்ந்த அரிசியை (நெல்லை) தான் பூமியில் தூவ வேண்டும்.
இதை பார்க்கும் போது, அரிசி முக்கியமா? நெல் முக்கியமா? என்ற கேள்வியை விட,
எந்த இடத்தில் எது முக்கியம்?
என்றே பார்க்க வேண்டும்.
சாப்பிடும் போது, நமக்கு அரிசி மட்டும் தேவைப்படுகிறது.
பயிர் செய்ய, நமக்கு பதரோடு சேர்ந்த அரிசி (நெல்) தேவைப்படுகிறது.
ஆக, நாம் புரிந்து கொள்ள வேண்டியது....என்ன?
நமக்கு பகவானிடத்தில் இருக்கும் பக்தி என்ற அரிசியை காத்து கொள்ள, பகவானிடத்தில் நமக்கு இருக்கும் பயம் என்ற கவசத்தை கொண்டு, பாதுகாத்து வைத்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment