ஒரு சமயம், கஷ்யபர், புத்ர காமேஷ்டி யாகம் செய்தார்.
யாகத்துக்கு தேவையான உதவிகளை தேவர்களும், ரிஷிகளும்,கந்தர்வர்களும் செய்தனர்.
யாகத்துக்கு தேவையான ஸமித்துக்களை சேகரிக்க இந்திரனும், மற்ற தேவர்களும் உதவினர்.
இந்திரன் தன் சக்திக்கு ஏற்றார் போல, மலை அளவுக்கு ஸமித்துக்களை அள்ளி கொண்டு, சிரமமில்லாமல் வந்து கொண்டிருந்தான்
வரும் வழியில், ஆகாரம் இல்லாமல் உடல் மெலிந்து, உடலில் சக்தி இல்லாத நிலையில் வாலகில்ய ரிஷிகளை கண்டான்.
அவர்களை பார்த்து சிரித்து கொண்டே, அவர்களுக்கு மரியாதை செய்யாமல் விரைந்து சென்றான்.
இதை கண்ட அந்த ரிஷிகள், "இந்திரனின் கர்வத்தை அடக்க, அவனுக்கே பயத்தை கொடுக்கும், இந்திரனை காட்டிலும் பலம் வாய்ந்த மற்றொரு இந்திரன் (தலைவன்) உருவாகட்டும்" என்று சபித்து விட்டனர்.
இதை அறிந்த இந்திரன், கஷ்யபரிடம் முறையிட்டு, வழி கேட்டு பிரார்த்தனை செய்தான்.
நிலைமையை சமாளிக்க, கஷ்யபர், வாலகில்ய ரிஷிகளிடம் சென்றார்.
"ப்ரம்மா மூவுலகத்தையும் நிர்வாகம் செய்யட்டும் என்று இந்திர பதவி கொடுத்து இருக்கிறார். உங்களுக்கு இந்திரனிடம் ஏற்பட்ட கோபம் நியாயமே என்றாலும், இன்னொரு இந்திரனை உருவாக்கினால், அது பிரம்மாவுக்கு ஏற்புடையதாக இருக்காதே! ஆதலால் நீங்கள் பரிசீலிக்க வேண்டும்" என்று கேட்டு கொண்டார்.
வாலகில்ய ரிஷிகள், "கொடுத்த வாக்கை திரும்ப பெற முடியாதே! நீங்களே இதற்கு மாற்று வழியை சொல்லுங்கள்" என்றனர்.
காஷ்யபர் "அப்படியென்றால், பிறக்க போகும் அந்த மஹாபலசாலி பக்ஷிகளுக்கு இந்திரனாக இருக்கட்டும். நரர்களுக்கு இந்திரனாக இப்பொழுது இருக்கும் இந்திரனே இருக்கட்டும்" என்று சொன்னார்.
இதற்கு சம்மதம் தெரிவித்தனர் ரிஷிகள்.
அப்பொழுது வினதா தனக்கு புத்ரர்கள் வேண்டும் என்று விரதத்தில் இருந்தாள். அவள் கர்ப்பம் தரித்தாள்.
அவளிடம் "உனக்கு 2 புத்ரர்கள் பிறப்பார்கள். இருவருமே மஹா பலசாலிகளாக இருப்பார்கள். இவர்களில் ஒருவன், உலகத்தாரால் பூஜிக்கப்படுபவனாக, நினைத்த ரூபம் எடுத்து கொள்பவனாக, மஹா வீரனாக, அனைத்து பக்ஷிகளுக்கும் இந்திரனாக இருக்க போகிறான்" என்று கஷ்யபர் தெரிவித்தார்.
இந்திரனை பார்த்து, "பிறக்கபோவது சகோதரர்களாக இருக்க போவதால், பயப்பட வேண்டாம்" என்று சொல்லி சமாதானம் செய்து அனுப்பினார்.
அந்த வினதாவுக்கு அருணன் பிறந்தான். அருணன் சூரியனுக்கு சாரதியாக சென்றான்.
பிறகு, கருடன் பிறந்தார். கருடன் பக்ஷி ராஜனாக ஆனார்.
ஒரு சமயம், கருடன் தேவலோகம் சென்றார். கருடனை பார்த்த தேவர்கள் பயந்து நடுங்கினர்.
அமிர்த கலசத்தை "பௌமன்" என்ற தேவன் பாதுகாத்து கொண்டிருந்தான்.
கருடன் இறக்கைகளை அடித்து கொண்டு பறக்க, புழுதி கிளம்பி யார் எதிரில் நிற்கிறார்கள்? என்பதே தெரியாமல் போனது.
உடனே வாயு தேவனை கூப்பிட்டு கலைக்க சொல்லி, பெரும் யுத்தம் செய்தனர் தேவர்கள்.
கடைசியில்,
சாத்யர்களும், கந்தர்வர்களும் - கிழக்கு நோக்கியும்,
வசுக்களும், ருத்ரர்களும் - தெற்கு நோக்கியும்,
ஆதித்யர்கள் - மேற்கு நோக்கியும்,
நாசத்யர்கள் என்ற அஸ்வினீ தேவர்கள் - வடக்கு நோக்கியும், கருடனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே ஓடினர்.
साध्याः प्राचीं स-गन्धर्वा
वसवो दक्षिणां दिशम् |
प्रजग्मुः सहिता रुद्राः
पतगेन्द्र प्रधर्षिताः |
दिशं प्रतीचीम् आदित्या
नासत्या: उत्तरां दिशम् ||
- வியாச மஹாபாரதம்
கடைசியாக அம்ருத கலசம் இருக்கும் இடத்துக்கு வந்த போது, நான்கு புறமும் தீ வானளாவி இருந்தது. இதற்கு நடுவில் அம்ருத கலசத்தை தேவர்கள் பாதுகாத்து வைத்து இருந்தனர்.
உடனே கருடன் 8100 வாய்களை எடுத்து கொண்டு, பல நதிகளை குடித்து, ஜ்வாலை விட்டு எறிந்து கொண்டிருந்த அக்னியை நனைத்தார்.
உடனே தன் உருவத்தை சிறியதாக ஆக்கி கொண்டு, சமுத்திரத்துக்குள் வேகமாக நதிகள் புகுந்து கொள்வது போல, பிரவேசித்தார்.
அப்பொழுது கூர்மையான கத்தி முனைகள் கொண்ட சக்கரம் சுழல்வதை கண்டார்.
சிறிது நேரம் அதனோடு தானும் சுற்றி பறந்து கொண்டே, சாமர்த்தியமாக அந்த இடைவெளியில் புகுந்து சென்று விட்டார்.
அங்கு, அந்த கலசத்தை காத்து கொண்டு இரண்டு மஹா சர்ப்பங்கள் கண்களில் விஷத்தோடு இருந்தன.
இதை கண்டு சிறிது கலங்கிய கருடன், புழுதியை கிளப்பி, அந்த சர்ப்பங்களின் கண்களை மறைக்க, அந்த சமயத்தில் உடனே பறந்து அந்த இரண்டு சர்ப்பங்களையும் பிடித்து கிழித்து எறிந்தார்.
அம்ருதத்தை தான் எடுத்து கொள்ளாமல், அங்கிருந்த அம்ருத கலசத்தை எடுத்து கொண்டு உயரே பறக்க ஆரம்பித்தார்.
அப்பொழுது, வைனதேயர் என்று அழைக்கப்படும் கருடனை, 'அம்ருதத்தில் ஆசையற்ற' கருடனை கண்டு சந்தோஷமடைந்த விஷ்ணு பகவான் அவர் முன் காட்சி கொடுத்தார்.
கருடனை பார்த்து, "உனக்கு நான் வரம் கொடுக்கிறேன். கேள்" என்றார்.
உடனே கருடன், "நான் உங்களுக்கு மேல் இருக்க ஆசைப்படுகிறேன். மேலும் அம்ருதம் உண்ணாமலேயே முதுமையும், மரணமும் இல்லாமல் இருக்க வேண்டும்" என்றார்.
"அப்படியே ஆகட்டும்" என்றார் பகவான்.
एवमस्त्विति तं विष्णुरुवाच विनतासुतम्।
प्रतिगृह्य वनौ तौ च गरुडो विष्णुम् अब्रवीत्।।
भवतेपि वरं दद्यां वृणोतु भगवानपि।
तं वव्रे वाहनं विष्णुर्नरुत्मन्तं महाबलम्।।
- வியாச மஹாபாரதம்
உடனே கருடன், "நான் உங்களுக்கு ஒரு வரம் தர ஆசைப்படுகிறேன். நீங்களும் கேட்க வேண்டும்" என்றார்.
மந்தஹாசம் செய்து கொண்டே பகவான், "நீ எனக்கு வாகனமாக இரு" என்றார்.
இப்படி உடன்படிக்கை ஆன பிறகு, கருடன் விஷ்ணு பகவானுக்கு வாகனமாகவும், பகவானுக்கு மேலே கருட கொடியாகவும் இருந்தார்.
விஷ்ணு பகவானிடம் தான் வந்த காரியத்தை முடித்து விட்டு வருவதாக சொல்லி அனுமதி பெற்று, மீண்டும் அம்ருத கலசத்தோடு கிளம்பினார்.
வழியில், இந்திரன் பறந்து கொண்டிருக்கும் கருடனை நோக்கி வஜ்ராயுதத்தை வீசினான்.
वज्रस्य च करिष्यामि तवैव च शतक्रतो।
एतत् पत्रं त्यजाम् एकं यस्यान्तं नोपलप्स्यसे।।
- வியாச மஹாபாரதம்
வஜ்ராயுதம் பட்டும் கலங்காத கருடன், இந்திரனை பார்த்து, "இந்திரா! இந்த வஜ்ராயுதம் எந்த ரிஷியின் உடம்பிலிருந்து எடுக்கப்பட்டதோ அந்த ரிஷிக்கும், இந்த வஜ்ராயுதத்துக்கும், உனக்கும் மரியாதை செலுத்துவதற்காக, இதோ என்னுடைய ஒரே ஒரு சிறகை விடுகிறேன்" என்று சொல்லி ஒரு சிறகை மட்டும் கீழே போட்டார்.
सुरूपं पत्रमालक्ष्य सुपर्णो अयं भवत्विति।
- வியாச மஹாபாரதம்
அந்த ஒரு சிறகின் அழகை கண்டே சொக்கி போன தேவர்கள் அனைவரும் "இவர் ஸுபரணர்" என்று கருடருக்கு பெயரிட்டு ஜெயகோஷம் செய்தனர்.
இந்திரன் கருடனின் பராக்கிரமத்தை பார்த்து, தன்னோடு தோழமை கொள்ளுமாறு கேட்டு கொண்டான். மேலும் கருடனின் உண்மையான பலம் தான் என்ன? என்று அறிந்து கொள்ள ஆசைப்பட்டு கருடனிடமே கேட்டான்.
இப்படி சொன்ன தேவேந்திரனை பார்த்து, "தேவனே! புரந்தரனே ! நீ விரும்பியபடி உனக்கும் எனக்கும் ஸ்நேஹம் இருக்கட்டும். என்னுடைய பலம் பெரியது, தாங்க முடியாதது என்றும் அறிந்து கொள்.
தன் பலத்தை அறிந்தவர்கள், தன் பலத்தை குறித்து பெருமையாக பேசிக்கொள்வதில்லை.
தன்னை பற்றி தானே பெருமை சொல்லி கொள்பவன், பிறரால் தூஷணைக்கு உள்ளாகிறான்.
ஆனால், பிறர் கேட்டால், அவர்களுக்கு தன்னை பற்றி சொல்லலாம்.
தானாக சொல்வது கூடாது.
நீ கேட்டதால், உனக்கு என்னை பற்றி சொல்கிறேன்.
மலைகள், காடுகள் கடல்கள் கொண்ட இந்த பூமியை, இதில் இருக்கும் உன்னையும் சேர்த்து, மற்ற உயிரைகளோடு சேர்த்து, ஒரே ஒரு சிறகினால் தூக்கி விடுவேன். இது என்னுடைய பலம் என்று அறிந்து கொள்" என்றார் கருடன்.
இதை கேட்ட தேவேந்திரன், "உம்முடைய பலத்தை ஒப்புக்கொள்கிறேன். எங்களிடம் ஸ்நேஹம் கொள்ளுங்கள். உமக்கு இந்த அம்ருதம் தேவையென்றால் எடுத்து கொள்ளுங்கள். தேவை இல்லையென்றால், எங்களுக்கு திருப்பி தந்து விடுங்கள். இதை மற்றவர்களுக்கு கொடுத்தால், அதன் பலத்தை கொண்டு எங்களை எதிர்ப்பார்கள்" என்றான்.
கருடன், "இதை நான் ஒரு காரணமாக கொண்டு செல்கிறேன். நான் இந்த அம்ருத கலசத்தை ஒரு இடத்தில் வைக்கும் போது, அதை நீங்கள் எடுத்து செல்லுங்கள்" என்றார்
இதை கேட்ட இந்திரன் சந்தோஷமடைந்து, "கருடா ! நீ என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றான்.
கருடன், "நான் சர்வ வல்லமை உடையவன் என்றாலும், நீ கேட்பதால் சொல்கிறேன். மிகுந்த வலிமையான சர்ப்பங்கள் எனக்கு உணவாக ஆகட்டும்" என்றார்.
"அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி விட்டு, கொடுத்த வரத்தை பற்றி விஷ்ணு பகவானிடம் தெரிவித்து, அவர் சம்மதத்தையும் பெற்றான்.
கருடன் கடைசியாக வினதையிடம் வந்து "அம்மா! தேவலோகத்தில் இருந்து அம்ருதத்தை கொண்டு வந்துள்ளேன். என்ன செய்ய வேண்டும். கட்டளை இடுங்கள்" என்றார்.
தாயான வினதா, "பெரிதும் மகிழ்ந்தேன். நீ மூப்பு இல்லாமல், மரணமில்லாமல் தேவர்களுக்கு அன்பானவனாக இருப்பாய்" என்றாள்
உடனே அங்கிருந்த கத்ருவின் பிள்ளைகளான சர்ப்பங்களை பார்த்து, "இதோ அம்ருதம். இதை இந்த தர்ப்பை பாயில் வைக்கிறேன். ஸ்நானம் செய்து விட்டு, இதை உண்ணுங்கள். நீங்கள் சொன்னபடி அம்ருதத்தை கொண்டு வந்து விட்டேன். ஆதலால் நீங்கள் அமர்ந்து இப்பொழுதே 'என் தாய் உங்கள் தாயாரான கத்ருவுக்கு அடிமை இல்லை' என்று ஆக வேண்டும்" என்றார்.
அந்த சர்ப்பங்கள் "அப்படியே ஆகட்டும்" என்று கருடனின் தாயான வினதாவின் அடிமை விலங்கை விலக்கினார்கள்
இப்படி இவர்கள் சொல்லி விட்டு ஸ்நானம் செய்ய கிளம்ப, உடனே தேவேந்திரன் அங்கு வந்து அம்ருத கலசத்தை எடுத்து கொண்டு மீண்டும் தேவலோகம் சென்று விட்டான்.
ஸ்நானம் செய்து விட்டு, திரும்பி வந்த சர்ப்பங்கள், அம்ருத கலசம் காணாமல் போனதை கண்டன.
सोमस्थानम् इदं चेति दर्भांस्ते लिलिहु: तदा।
ततो द्विधा कृता जिह्वाः सर्पाणां तेन कर्मणा।
अभवंश्च अमृत स्पर्शाद् दर्भास्तेऽथ पवित्रिणः।।
- வியாச மஹாபாரதம்
அம்ருதம் இருந்த இடம் என்பதால், போட்டி போட்டு கொண்டு அந்த தர்ப்பை பாயை நக்கின.
இதனால், பாம்பின் நாக்குகள் இரண்டாக பிளந்தன.
யாராலும் எதிர்க்க முடியாத கருடனை பார்த்து பயந்த சர்ப்பங்கள் ஓடி ஒளிந்தன. எதிர்த்த சர்ப்பங்களை உணவாக உண்டு விட்டார் கருடன்.
பிறகு தன் தாயோடு வசித்து கொண்டு, பக்ஷிகளுக்கு ராஜனாக இருந்து கொண்டு, ப்ரஸித்தியோடு இருந்தார் கருடன்.
இந்த சரித்திரத்தை கேட்பவன், படிப்பவன், கருடனுடைய சங்கீர்த்தனத்தால் நிச்சயம் ஸ்வர்க்கம் அடைவான்.
No comments:
Post a Comment