Followers

Search Here...

Thursday, 3 February 2022

கனவு உண்மையா? பல கனவுகள் ஏற்படுகிறது.. ஆண்டாள், ஆழ்வார்கள் கனவில் பெருமாள் வந்ததாக சொல்கிறார்கள். நம்மில் சிலருக்கு தெய்வங்கள் கனவில் காட்சி கொடுக்கிறார்கள். பல சமயம் கெட்ட கனவுகள், நல்ல கனவுகளும் வருகிறது. கனவுகள் உண்மையா? ராமானுஜர் என்ன சொல்கிறார்? தெரிந்து கொள்வோம்...

'கனவு' என்பது அவஸ்தை (அனுபவம்) தானே! அதை எப்படி உண்மை என்று நம்ப முடியும்?

ராமானுஜர் தனது ஸ்ரீ பாஷ்யத்தில், 

"விழித்து இருக்கும் போது நாம் காணும் காட்சிகள் எந்த அளவுக்கு சத்தியமோ!, அது போல, கனவில் காணும் காட்சிகளும் சத்தியமே" என்கிறார்.

ஒருநாள், 

ஒருவன் திடீரென்று காக்கையாகி விட்டான். காகம் போல கறைந்து கொண்டு பறக்கிறான். தன் வீட்டை பார்த்ததும், வாசல் வழியாக நுழைய முயன்றான். அவன் மனைவியே "சூ சூ..." என்று துரத்தி விட்டாள்.

"ஐயோ! என் நிலைமை இப்படி ஆகி விட்டதே!"

என்று புலம்பி அழ, விழித்துக்கொண்டு விட்டான்.

"அட.. சீ! என்ன கனவு இது!" என்று பெருமூச்சு விட்டான். கனவு பொய் என்று நினைத்தான்.

ராமானுஜரிடம் கேட்டால்,

"கனவு சத்தியம் தான். ஏதோ ஒரு பூர்வ ஜென்மத்தில் காக்கையாக இருந்திருப்பான், அந்த வாசனை இன்னும் போகாததால், இப்படி ஒரு கனவு கண்டான்" என்கிறார்.


ஒருநாள், 

திடீரென்று நான்கு பேர் சேர்ந்து கொண்டு, இவனை அடி அடியென்று அடித்து நொறுக்கி விட்டார்கள். ரத்தம் சொட்ட, வலி தாங்க முடியாமல், உயிருக்கு பயந்து இவன் ஓட, விழித்துக்கொண்டு விட்டான்.

"அப்பாடா! பெரிய கஷ்டத்தில் இருந்து தப்பித்தோம்! .. சீ! என்ன கனவு இது!" என்று நினைத்தான்.


ராமானுஜரிடம் கேட்டால்,

"கனவு சத்தியம் தான். இவனுக்கு இப்படி ஒரு அவஸ்தை விழிப்பு நிலையில் இவனது பூர்வ கர்மாவால் நடக்க வேண்டியிருக்க, பெருமாளின் கருணையால், இந்த அனுபவத்தை கனவில் கொடுத்து,  பாப கர்மாவின் கணக்கை கழித்து விட்டார்." என்கிறார். 

'நியாயமாக இவன் பெருமாளுக்கு நன்றி சொல்ல வேண்டும்' என்கிறார்.

'கெட்ட கனவும், பாபத்தை கழிக்கவே வருகிறது. இது பெருமாளின் கருணையையே காட்டுகிறது' என்கிறார்.


ஒருநாள், 

பெரிய மாளிகையில், பெரிய சிம்மாசனத்தில் இவன் அமர்ந்து இருக்கிறான். 

ஆயிரக்கணக்கான வேலைக்காரர்கள் சூழ, பல வித உணவுகள் இருக்க, சகல வசதியுடன் இருக்கிறான். 

'ஆஹா எத்தனை சுகமான வாழ்க்கை' என்று அனுபவித்து கொண்டு இருக்கும் போது, விழித்துக்கொண்டு விட்டான்.

ஒட்டு வீட்டில், வெறும் தரையில் படுத்து கொண்டு இருக்கிறான்.

"அடடா.. என்ன அற்புதமான கனவு இது!" என்று நினைத்தான்.


ராமானுஜரிடம் கேட்டால்,

"இந்த கனவு சத்தியம் தான். இவனுக்கு இப்படி ஒரு அவஸ்தை விழிப்பு நிலையில் இவனது பூர்வ கர்மாவால் நடக்க வேண்டியிருக்க, பெருமாளின் கருணையால், இந்த சௌக்கியமான அனுபவத்தை கனவில் கொடுத்து,  புண்ணிய கர்மாவின் கணக்கை கழித்து விட்டார்." என்கிறார். 


'நல்ல கனவு, புண்ணியத்தை கழிக்கவே வருகிறது. இதுவும் பெருமாளின் கருணையே' என்கிறார்.

பெரிய மாளிகை கட்டி, வசதியாக வாழும்படி நிஜத்தில் நடத்தி இருக்க கூடாதா? என்று கேட்டால்,

'வசதி நிஜத்தில் கொடுத்து இருக்கலாம். கஷ்டம் இருந்தால், பெருமாளை கொஞ்சமாவது நினைப்பான்.

அதீத வசதி கொடுத்தால், பெருமாளை விட்டு விலகி சென்று விடுவானே! மீண்டும் சம்சார சுகத்தில் வீழ்ந்து விடுவானே! அதனால் தான் அந்த புண்ணிய அனுபவத்தையும் கனவில் கொடுத்து, அதையும் கழித்து விடுகிறார்" என்கிறார்.


இப்படி, நல்ல கனவும், கெட்ட கனவும், 'பூர்வ ஜென்ம வாசனையாலும், சில பாவ கர்மாக்களை கழிக்கவும், சில புண்ணிய கர்மாக்களை கழிக்கவும்' ஏற்படுகிறது என்கிறார்.

சிலருக்கு ஆச்சர்யமாக கனவில் பெருமாள் தோன்றுகிறாரே!

ஆண்டாள் தனது கனவில் பெருமாள் வந்து தன்னை கரம் பிடித்ததாக கண்டேன் என்று சொல்கிறாளே!  மற்ற ஆழ்வார்களும் கனவில் பெருமாளை தரிசித்தேன் என்று சொல்கிறார்களே!

நமக்கும், எப்பொழுதாவது, 

தெய்வீக காட்சிகள் ஏற்படுகிறதே! அதற்கு காரணம் என்ன? என்று கேட்டால்,

ராமானுஜர், "அந்த திவ்ய காட்சிகள் சத்தியமே! என்கிறார்.


பெருமாள் நேரில் வந்தால் தாங்க முடியாது. நேரில் பார்த்த ஆழ்வார்களால் உலகத்தோடு பழக முடியவில்லை. நேராக தெய்வம் வந்து பேசினால் பித்தனாகி விடுவோம். உலக விஷயங்களில் பிறகு மனம் செல்லவே செல்லாது. 

ஆதலால், பெருமாள், பக்குவம் இல்லாத தன் பக்தனிடம், பழக ஆசைப்படும் போது, முதலில் கனவில் வருகிறார்.

'நாளைக்கு பெருமாளை கனவில் பார்க்க போகிறேன்' என்று சொல்லி யாரும் பார்த்து விட முடியாது. 

'பெருமாள் கனவில் வருவது நம் சாமர்த்தியத்தால் அல்ல, அவர் கருணையால் மட்டுமே!' என்பதால் கனவில் எற்படும் திவ்ய காட்சிகளை சத்தியம் என்றே உணர வேண்டும்.


தன்னிடம் பழக தெய்வம் வருகிறார் என்று கனவில் பார்த்த பக்தன், மேலும் மேலும் நம் பக்தியை வளர்த்து கொள்ள வேண்டும்.


வேதத்தில் இல்லாத, சொல்லாத உருவங்கள், போலி தெய்வங்கள் கனவில் ஏற்பட்டால், அது இந்த ஜென்மத்தில் பழகிய வாசனையே என்று உதற வேண்டும்.

No comments: