Followers

Search Here...

Thursday, 6 January 2022

இப்படி ஒரு பெண்ணை பெற்றோமே! என்று ஆனந்தமும் அடைகிறாள் பரகால நாயகியின் தாய். பாசுரம் "தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத்..." அர்த்தம் தெரிந்து கொள்வோம்.

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள !

தென் இலங்கை முன் மலங்க !

செந்தீ ஓங்கி! போர் ஆளன் !

ஆயிரம் வாணன் மாள 

பொருகடலை அரண் கடந்து புக்கு மிக்க !

பார் ஆளன் ! பார் இடந்து ! 

பாரை உண்டு ! பார் உமிழ்ந்து !

பார் அளந்து ! பாரை ஆண்ட ! பேர் ஆளன் ! 

பேர் ஓதும் பெண்ணை !

மண்மேல் பெரும் தவத்தாள் 

என்று அல்லால் பேசலாமே!

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி மேலும் பாடுகிறாள்.

"சதுரங்க சேனைக்கு மஹாரதனாகவும், கையில்  சந்திரஹாசம் என்ற வாளை வைத்து இருந்த ராக்ஷஸனான ராவணன்  (தேர் ஆளும் வாள் அரக்கன்) சீதாதேவியை இலங்கைக்கு தூக்கி சென்று விட்டான் என்றதும், முதலில் ஹநுமானை அனுப்பி, செல்வங்கள் குவிந்து இருக்கும் இலங்கையை (தென் இலங்கை), தீயில் (செந்தீ ஓங்கி) பொசுக்கி ராவணனை கலங்கடித்து (முன் மலங்க), பிறகு தானே நேருக்கு நேர் போர் செய்து (போர் ஆளன்), ராவணனை கொன்று, சீதை பிராட்டியை மீட்ட ராமபிரானே !





ஆயிரம் தோள்களை உடையனான பாணாஸுரனை (ஆயிரம் வாணன்) ஒழித்து கட்ட (மாள), அலை எறிகின்ற கடலாகிய  கோட்டையை கடந்து (பொருகடலை அரண் கடந்து) அவனுடைய இடத்திற்கே சென்று (புக்கு) போரிட்டு வெற்றிபெற்ற (மிக்க) கண்ணனே!

இந்த பூமிக்கு பதியே! (பார் ஆளன்)

பூமியை பிரளய ஜலதிதிலிருந்து தூக்கிய வராஹ மூர்த்தியே! (பார் இடந்து)

கிருஷ்ணாவதார காலத்தில் மண்ணை உண்டு, பிரளய காலத்தில், உலகத்தை உண்டு தன் திருவயிற்றில் அடக்கியவரே ! (பாரை உண்டு)

உலக ஸ்ருஷ்டி செய்ய சங்கல்பித்த போது, உலகை மீண்டும் வெளிப்படுத்தியவரே! (பார் உமிழ்ந்து) என்றும்,

திருவிக்ரமனாக இருந்து உலகை அளந்தவரே ! (பார் அளந்து

ராம அவதாரத்தில் இந்த உலகை அரசாண்டவரே (பாரை ஆண்ட) என்று, 

பெருமை பொருந்திய எம்பெருமானுடைய (பேர் ஆளன்) திருநாமங்களையே ஓயாது பாடி (பேர் ஓதும்), கண்ணீர் விட்டு கொண்டிருக்கும் இது போன்ற பெண்ணை இந்த உலகில் காண முடியுமோ? 

பெருமாளிடம் பக்தி உள்ள இப்படி ஒரு பெண்பிள்ளையை இந்த உலகில் (மண்மேல்) பெற்று தந்த பாக்கியவதி அல்லவோ இவள்! என்று தானே, என்னை அனைவரும் சொல்வார்கள்!" 

என்று திருமங்கையாழ்வாராகிய பரகால நாயகியின் தாய், 'ஒரு புறம் 'இப்படி வாடி போகிறாளே என் மகள்!' என்று வருந்தினாலும், பெருமாளிடம் இவள் கொண்டிருக்கும் பக்தியை நினைத்து, இப்படி ஒரு பெண்ணை பெற்றோமே!' என்று ஆனந்தமும் அடைகிறாள்.


தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி,

பேராள னாயிரம் வாணன் மாளப் பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க

பாராளன், பாரிடந்து பாரை யுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட

பேராளன், பேரோதும் பெண்ணை மண்மேல் பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே?

'8 சீர்களை கொண்ட பாடல்' என்பதால், திருநெடுந்தாண்டகம் என்ற வரிசையில் வருகிறது. இதை பற்றி தெரிந்து கொள்ள, இங்கே பார்க்கவும்.

No comments: