Followers

Search Here...

Wednesday, 19 January 2022

"பெருமாள் கிடைத்தாலும் அழுது கொண்டே இருப்பேன்" என்று முடிவு செய்த பரகால நாயகி. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. தென்னிலங்கை யரண்சிதறி

திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி, தன் தோழியான பராங்குச நாயகியிடம், "தான் பெருமாளிடம் பிரணய கலகம் செய்யப்போவதாக சொல்கிறாள்".

தென் இலங்கை அரண் சிதறி

அவுணன் மாள சென்று 

உலக மூன்றினையும் திரிந்து 

ஓர் தேரால் ன் இலங்கு 

பாரதத்தை மாள ஊர்ந்த

வரை உருவின் மா களிற்றை தோழீ, 

என்றன் பொன் இலங்கு

முலை குவட்டில் பூட்டிக் கொண்டு

போகாமை வல்லேனாய் 

புலவி எய்தி,

என்னில் அங்கமெல்லாம் வந்து இன்பம் எய்த

எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

பரகால நாயகி, தன் தோழியிடம், 

"முதலில் ராமபிரானாக கண்டேன்.

பிறகு கண்ணனாக வந்தார். 

பிறகு வயலாலி மணவாளனாக வந்தார்.

பிறகு, நம்பெருமாளாக வந்தார்.

பிறகு, ஆமருவியப்பனாக வந்தார்.

பிறகு, சவுரிராஜனாக வந்தார்.

இவர் எப்பொழுது வருவார்? என்று பல நாட்கள் விரகத்தில் இருக்கும் போது, ஒரு நாள் இப்படி என்னை பார்க்க வருவார். 

இவர் வந்ததுமே, விரகம் தீர்ந்து போய்விடும்., அவரிடம் சிரித்து பழகுவேன்.

உடனே மீண்டும் அழ விட்டு, எங்கோ போய் விடுகிறார். 

இன்று வரட்டும். 

ப்ரணய கலகம் செய்து, அழுது கொண்டே இருக்கலாம் என்று தீர்மானித்து இருக்கிறேன்" என்றாள்.


"இப்போது பெருமாள் கிடைக்காமல் அழுகிறேன். 

இவர் வந்தாலும், கூடவே இருக்காமல், மீண்டும் கிளம்பி சென்று விடுகிறார். எப்படி இருந்தாலும் நான் அழத்தானே போகிறேன். 

ஒரே ஒரு பெண்ணை மீட்பதற்காக, இலங்கைக்கு சென்று, ஊரையே அலற அடித்து, மதில் சுவற்றை சிதற அடித்து, அந்த ராவணனை கொன்று  போட்டாரே! அந்த சீதையிடம் தான் அவருக்கு எத்தனை ப்ரியம்!! (தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாள சென்று)

அது போல, 

பூலோகத்தை பலி சக்கரவர்த்தி பிடித்து விட, பூமி பிராட்டியை மீட்பதற்காக, பூமியோடு சேர்த்து ப்ரம்ம லோகம் வரை அடியெடுத்து வைத்து மீட்டாரே! 

அந்த பூமி பிராட்டியிடம் எத்தனை ப்ரியம் இருந்தால், அப்படி த்ரிவிக்ரமனாய் அளந்திருப்பார். (உலக மூன்றினையும் திரிந்து)

பாரத யுத்தம் செய்ததே இவர் தான். 'சமாதானம் செய்கிறேன்' என்று தூது சென்று, யுத்தத்தை கிளப்பி விட்டதே இவர் தான் 

பார்த்தசாரதியாக இருந்து தேரோட்டி, பாரத யுத்தம் செய்ததே இவர் தான்  (திரிந்து ஓர் தேரால் மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த)




ஏன் இப்படி இருக்கிறார்? 

அவரால் ஒன்றுமே செய்யாமல், ஆதிசேஷன் மேல் படுத்து கொண்டு இருக்கவே முடியாது.

ராமாயண யுத்தம் அப்படி போட்டாரல்லவா! அதோடு நிறுத்தி கொள்ள மாட்டாரோ? 

யுகத்துக்கு யுகம் சண்டை போடுகிறார்.


இப்படி தானாகவே பல வேலைகளை தானே இழுத்து கொண்டு, என்னிடம் 'நேரம் ஒதுக்க முடியவில்லை' என்கிறார். 

இன்று வரட்டும். பார்த்து கொள்கிறேன்.

அவர் எப்பொழுது வருவார்?  எப்பொழுது வருவார்?  என்று எதிர்பார்த்து தாபத்தோடு காத்து இருந்தால், திடீரென்று வருவார். 

இவர் வந்துவிட்டார் என்றதுமே, இருந்த தாபம் தீர்ந்து போவதால், சிரித்து பேசுவேன்.

"சரி தான். இவள் நாம் இல்லாமல் போனாலும், சாதாரணமாக தான் இருக்கிறாள் போல" என்று நினைத்து கொண்டு, மீண்டும் ஏதோ ஒரு வேலையை தானே ஏற்படுத்திக்கொண்டு கிளம்பி விடுகிறார். 

மீண்டும் அழுகை தான் எனக்கு மிச்சமாகிறது.

ஒரு நாள் சிரிப்பு, பிறகு மீண்டும் ஆயிரம் நாளும் அழுது கொண்டே தானே இருக்கிறேன்! 

சரியான முரடன் இவர் !

இப்பொழுது இவர் வரும்போது, நான் சிரித்து கொண்டு பேச போவதில்லை. 

இவரிடம் முகம் கொடுக்காமல், நான் இவர் இல்லாமல் எப்படி அழுதேன் என்று காட்டத்தான் போகிறேன். (புலலி எய்தி)

தோழீ!! நான் அழும்போது, என்னிடம் பரிவு காட்டி பேச அருகில் வருவார். 

மலைபோன்ற, பெரிய யானை போன்ற பெருமானை, இனி தப்பிக்க முடியாதபடி, என் மார்போடு கட்டி பூட்டி கொண்டு விடுவேன். (வரை உருவின் மா களிற்றை தோழீ, என்றன் பொன் இலங்கு முலை குவட்டில் பூட்டிக் கொண்டு போகாமை வல்லேனாய்)


இப்படி  சுதந்திரமாக இருக்க விடாமல் இவரை செய்கிறேனே!' என்று அப்பொழுதும் அழுவேன்.

முன்பு விரகத்தில், 'பெருமாள் கிடைக்கவில்லையே' என்று அழுதேன். 

இப்பொழுது 'பெருமாள் என் நெஞ்சில் இருக்கிறார்' என்பதால் கிடைக்கும் பேரின்பத்தில் அழுவேன்" (என்னில் அங்கமெல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே) என்று பரகாலநாயகி, பெருமாள் தன்னிடமே கிடைத்து விட்டதாக சொல்லி சமாதானம் அடைகிறாள்.

பெருமாள் தன் இதயத்தில் நிரந்தரமாக தங்கி விட்டார் என்று நிலையில், திருமங்கையாழ்வார், பாசுரத்தை முடிக்கிறார்.

No comments:

Post a Comment