பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.
'கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ்
கச்சி மேய களியே' என்றும்
'கடல் கிடந்த கனியே' என்றும்
'அல்லியம் பூ மலர் பொய்கை பழனம் வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான்' என்றும்
சொல் உயர்ந்த நெடுவீணை
முலைமேல் தாங்கி தூமுறுவல்
நகை இறையே தோன்ற நக்கு
மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே
மென்கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே
- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)
பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, பாடுகிறாள்.
"கருங்கற்களால் மதிற்சுவர்கள் ஓங்கி உயர்ந்து காஞ்சிபுரத்தை சூழ்ந்திருக்க (கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ் கச்சி) அங்கு எழுந்தருளியிருக்கும் (மேய) மதயானை போன்ற ஹஸ்தி வரதனே ! என்று இவள் பாட (களியே என்றும்)
திருப்பாற்கடலில் படுத்திருக்கும் கனிபோன்றவனே! என்று இவள் பாட (கடல் கிடந்த கனியே)
சுகந்தமுடைய அல்லி பூக்கள் பூக்கும் தடாகங்களையும் (அல்லியம் பூ மலர் பொய்கை) நீர்நிலைகளையுமே (பழனம்) வேலியாக உடைய (வேலி) அழகிய திருவழுந்தூரிலே (தேரழுந்தூர்) நின்று (அணி அழுந்தூர் நின்று), உள்ளம் உகந்து இருக்கும் என் ஸ்வாமியே! என்று இவள் பாட (உகந்த அம்மான்' என்றும்)
அவள் பாடிய இந்த திவ்ய நாமசங்கீர்த்தனத்தை கேட்டு (சொல் உயர்ந்த) அந்த நீண்ட வீணையும் திருப்பி பாட (நெடுவீணை), தனது நாதனை இந்த வீணையும் பாடுகிறதே என்ற பூரிப்பில், தனது மார்பின் மீது தாங்கி கொண்டு (முலைமேல் தாங்கி) பெருமாளையே ஸ்பரிசித்து விட்டது போன்று புன்முறுவல் செய்கிறாள் (தூமுறுவல்).
பல்வரிசைகள் (நகை) தெரியும் படி (இறையே தோன்ற) தனக்கு தானே சிரிக்கிறாள் (நக்கு).
இயற்கையாகவே சிவந்து இருக்கும் விரல்கள் இன்னமும் சிவக்கும்படி நாள் முழுவதும் தந்தி கம்பிகளை வருடி (மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி அந்த வீணையை) அதற்கும் மேலே (ஆங்கே) தானே ஒரு கிளிப்பிள்ளை போலே (மென்கிளி போல்) மழலைச்சொற்களால் பாடிக்கொண்டு நிற்கிறாள் (மிகமிழற்றும்).
என் வயிற்றில் பிறந்த அறியா பெண்ணான இவள், இவையெல்லாம் எங்கே கற்றாள்? (என் பேதையே)"
என்று பரகால நாயகியின் தாய், தன் பெண் (திருமங்கையாழ்வார்) நிலை கண்டு வருந்துகிறாள்.
No comments:
Post a Comment