பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.
'கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்' என்றும்,
'கடிபொழில் சூழ் கணபுரத்து என் கனியே' என்றும்,
'மன்று அமர கூத்தாடி மகிழ்ந்தாய்' என்றும்,
'வட திருவேங்கடம் மேய மைந்தா' என்றும்,
'வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே' என்றும்,
'விரிபொழில் சூழ் திருநறையூர் நின்றாய்' என்றும்,
'துன்று குழல் கருநிறத்து என் துணையே' என்றும்
துணைமுலை மேல் துளிசோர சோர்கின்றாளே!!
- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)
பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.
'யாரை பற்றி நினைத்தால் மூர்ச்சை ஆகிறதோ, அவரை பற்றி நினைக்காதே' என்று சொன்னாலும் கேட்காமல், அவரையே நினைத்து நினைத்து மூர்ச்சை அடைகிறாள் என்னுடைய பெண்.
திவ்ய தேசத்து பெயரை யாராவது தப்பி தவறி சொல்லிவிட்டால் கூட, இவள் அழுது அழுது சோர்ந்து விடுகிறாள்.
'அவரை பற்றி நினைக்காதே! பேசாதே!' என்று சொன்னால், விரகத்தினாலே இவளுக்கு உயிர் போய் விடுமோ! என்றும் கவலையாக இருக்கிறது.
'சரி அனுமதிப்போம்' என்று நினைத்து, 'நீ உன் ஆசை தீர பாடம்மா' என்று சொன்னால், பாட பாட அழுது சோர்ந்து விடுகிறாள் என்னுடைய பெண்.
'பக்தி செய்யாதே' என்று இவளிடம் சொன்னாலும் ஆபத்தாக இருக்கிறது.
'பக்தி செய்' என்று சொன்னாலும் ஆபத்தாக இருக்கிறது.
'பக்தி என்றால் என்ன?' என்று தெரியாத எனக்கோ, இவளிடத்தில் பாசம் மட்டுமே இருக்கிறது.
'என் பெண் குழந்தை இப்படி இருக்கிறாளே! இவளை எந்த வழியில் கொண்டு போய் சரி செய்வது?' என்று தெரியவில்லையே!!
பசு மாடுகளை மேய்த்து அதை காப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்ளும் இளம் பருவத்தில் இருக்கும் காளையே! கோபாலா! கோபாலா! கோபாலா! என்று அழைக்கிறாள்..
(கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்' என்றும்)
நாற்புறமும் நந்தவனம் சூழ்ந்த திருகண்ணபுர பெருமாளை நினைத்து 'கனியே' என்று அழைக்கிறாள்.
(கடிபொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்)
கூத்து ஆடுபவனை கண்டால், பார்ப்பவர்கள் தான் பொதுவாக ஆனந்தப்படுவார்கள். கண்ணனோ, தலையில் குடத்தை வைத்து கொண்டு அரங்கத்தில் பலர் மகிழ ஆட, பிறர் மட்டுமின்றி, தானும் தன் ஆட்டத்தை கண்டு ரசிக்கிறார்.
தலையில் குடத்தை வைத்து கொண்டு அரங்கத்தில் (மன்று) ஆட, அந்த நடனத்தை பார்த்து மக்கள் அனைவரும் சபாஷ் போட, தன் ஆட்டத்தை கண்டு தானே மகிழும் குடக்கூத்தனே! என்று அழைக்கிறாள்.
('மன்று அமர கூத்தாடி மகிழ்ந்தாய்' என்றும்)
வட திருவேங்கடம் என்ற திருப்பதியில் வீற்று இருப்பவரே! கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கிறாள்.
('வட திருவேங்கடம் மேய மைந்தா' என்றும்)
அசுர ராக்ஷஸ கூட்டங்களை ஒழித்து வெற்றி பெற்ற பெருவீரனே! வேந்தே! என்று அழைக்கிறாள்.
('வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே' என்றும்)
எங்கும் பச்சை பசேல் என்று சோலையாக காணப்படும் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் இருக்கும் பெருமானே! என்று அழைக்கிறாள்.
('விரிபொழில் சூழ் திருநறையூர் நின்றாய்' என்றும்)
நெருக்கமான, சுருள் சுருளான கேசத்துடன், நீலமேக ச்யாமள ரூபத்துடன் எனக்கு துணையாக இருப்பவரே! என்று சொல்கிறாள்.
('துன்று குழல் கருநிறத்து என் துணையே' என்றும்)
இப்படி சொல்லி சொல்லி, கண்களில் இருந்து கண்ணீர் அவர் மார்பில் விழும் படியாக அழுது அழுது சோர்ந்து விடுகிறாளே!
(துணைமுலை மேல் துளிசோர சோர்க்கின்றாளே!!)
என்று பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.
No comments:
Post a Comment