மயிலாடுதுறை பெருமை கொள்ள முக்கிய காரணம் பரிமள ரங்கநாதன் ஆலயம் இருக்கும் "திருஇந்தளூர்" என்ற திவ்ய தேசம்.
ஹிந்துவாக பிறந்தவர்கள் வாழ்நாளில் காணவேண்டிய ஆலயங்களில் ஒன்று !
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் இது.
மாயவரம் அல்லது மயிலாடுதுறையில் இருக்கும் இந்த திருஇந்தளூர் கோயிலின் மூலவர் பெயர்: பரிமள ரங்கநாதன்.
இவருக்கு இன்னொரு பெயர்: மருவினிய மைந்தன்.
உற்சவர் பெயர்: சுகந்தவ நாதன்
108 திருத்தலங்களில் 86 தலங்களை நேரில் கண்டு பாடியவர் திருமங்கையாழ்வார்.
ஒரு சமயம்,
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ‘திருஇந்தளூர்’ என்னும் திவ்ய தேசத்தில் குடி கொண்டிருக்கும் ‘பரிமள ரங்கனாதரை’ தரிசிக்கச் சென்ற பொழுது, அர்ச்சகர் பூஜை முடிந்து, கதவு சாத்தி சென்று விட்டார்.
கோவில் சன்னதி மூடி இருந்ததால் பெருமாளை தரிசிக்க முடியவில்லை.
பெருமாளை பார்க்க முடியவில்லையே! என்ற தாபம் ஆழ்வாருக்கு ஏற்பட்டது.
நமக்கு வேண்டிய ஒருவன், நமக்குரிய பொருளை தரமறுத்தால் நாம் என்ன சொல்வோம்?
”பரவாயில்லை! நீரே வைத்துக் கொண்டு நலமாய் வாழுங்கள்" என்று உரிமையாக கோபத்தோடு சொல்வோம் இல்லையா?
அது போல,
ஆழ்வார், உள்ளே இருக்கும் பரிமள ரங்கநாதரை நோக்கி, "நான் உனது அடிமை என்று அறிந்த பின்னும், காட்சி கொடுக்காமல் தாழிட்டுக் கொள்வது உமக்குப் பழியைத் தேடித் தரும். உமது அழகை நீரே வைத்துக் கொள்ளவும்"
என்று பெருமாளிடம் உரிமையாக கோபப்பட, உள்ளே இருந்த பெருமாள், ஆழ்வாரை காண தானே வந்து விட்டார்.
பெருமாள், ஆழ்வாரை பார்த்து, "என்னை பாரும்" என்று சொல்லி, "நான் ஒவ்வொரு யுகத்திலும் எப்படி இருந்தேன் தெரியுமா? க்ருத யுகத்தில் வெண்மையாக இருந்தேன். த்ரேதா யுகத்திலே சிவப்பாக இருந்தேன். த்வாபரயுகத்தில் நீல வர்ணத்தில் இருந்தேன்" என்று காட்ட, தான் கண்ட காட்சியை பாசுரமாக நமக்கு தருகிறார்.
முன்னை வண்ணம் பாலின் வண்ணம்
முழுதும் நிலைநின்ற பின்னை வண்ணம்
கொண்டல் வண்ணம்
வண்ணம் எண்ணுங்கால்
பொன்னின் வண்ணம்
மணியின் வண்ணம்
புரையும் திருமேனி இன்ன வண்ணம்
என்று காட்டீர், இந்தளூரீரே !
- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)
க்ருத யுகத்தில் ஸத்வ குணம் நிறைந்தவர்களாக பெரும்பாலும் இருப்பதால், பால் போன்ற 'வெண்மை' நிறத்தை கொண்டீர்கள்.
த்ரேதா யுகத்திலே 'சிவந்த' நிறத்தை கொண்டீர்கள்.
த்வாபர யுகத்தில் 'நீல' நிறத்தை கொண்டீர்கள்.
இந்தளூரில் உள்ள பெருமானே !
உமக்கு பல நிறங்கள் உள்ளனவாக சாஸ்த்ரங்கள் சொல்கிறது.
இங்கு அர்ச்சையாக எழுந்தருளியிருக்கும் இருப்பிலே எந்த நிறம் கொண்டிருக்கிறீர் என்பதை அடியேன் அறியவேண்டாமோ?" என்று கேட்க,
“இதோ பாராய், இதுவே என் வண்ணம்” என்று சொல்லி பரிமள ரங்கநாதர் ஆழ்வாருக்கு தன் அர்ச்சா ரூபத்தை காட்டி அருளினார்.
திருமங்கை ஆழ்வாரின் அழகு தமிழை பருக விரும்பியதே பரிமள ரங்கனின் விவாதத்தின் நோக்கம்!
இறுதியில், ஆழ்வார் அரங்கனைத் தரிசித்துவிட்டே சென்றார்!
மூலவர்: பரிமளரங்கநாதர்
தாயார்: பரிமள ரங்கநாயகி என்ற புண்டரீகவல்லி
No comments:
Post a Comment