Followers

Search Here...

Saturday, 31 July 2021

இரண்டு விதமான பக்தர்கள் இருக்கிறார்கள்... யார் அவர்கள்? ஹிந்துக்கள் கவனிக்க வேண்டியவை...

இரண்டு விதமான பக்தர்கள் இருக்கிறார்கள்.

"பகவான் தனக்கு ஏதாவது செய்வாரா?" என்று ஒரு வித பக்தர்கள்.

"பகவானுக்கு தான் ஏதாவது செய்ய முடியுமா?" என்று மற்றொரு விதமான பக்தர்கள் உண்டு.


ராம அவதார சமயத்தில், விபீஷணன், சுக்ரீவன் போன்றவர்கள் "ராமபிரான் தன்னை காப்பாற்றுவாரா? தனக்கு அபயம் கொடுப்பாரா?" என்று வந்தார்கள்.


ராமபிரான் சொன்னார் என்றதும், வாலியை சண்டைக்கு கூப்பிட. அண்ணன் தம்பியான இவர்கள், ஒரே ஜாடையோடு இருக்க, 

"வாலிக்கு பதிலாக தவறுதலாக சுக்ரீவனை  அடித்து விட கூடாதே" என்று ராமபிரான் சற்று நிதானிக்க, அதற்குள் 'வாலி தன்னை கொன்று விடுவானோ!' என்று தப்பித்து சுக்ரீவன் ஓடி விட்டான்.

"இப்படி என்னை காப்பேன் என்று சொல்லிவிட்டு, வாலியிடம் மாட்டி விட்டீர்களே" என்று புலம்பினான்.





பிறகு, வாலியை ஒரே அம்பில் வீழ்த்தி, கிஷ்கிந்தைக்கு சுக்ரீவனை ராமபிரான் அரசனாக்கியதும், ராமபிரானை பூரணமாக சரணாகதி செய்தார்.

அதேபோல, 

விபீஷணனும், "ராமரே கதி." என்று சரணாகதி செய்தார். ராமபிரான் உடனேயே "இலங்கைக்கு அதிபதி விபீஷணன்" என்று ராவணன் இருக்கும் போதே பட்டாபிஷேகம் தன் கையால் செய்தார்.


மிகுந்த நம்பிக்கையில் இருந்த விபீஷணன், ராமபிரானும், லக்ஷ்மணனும் இந்திரஜித் செலுத்திய நாக பாணத்தால் மூர்ச்சையாகி விழுந்து விட... உடனே புலம்ப ஆரம்பித்தார்.

"ராவணனை பகைத்து கொண்டு..  ராமபிரானை சரணடைந்தேனே! இப்படி ராமபிரானும் கிடக்க, ஆதரவு இல்லாமல் போய் விட்டேனே!" என்று அழுகிறார்.


பிறகு, நாகபாசத்தில் இருந்து விடுபட்டு, ராமபிரான் தொடர்ந்து யுத்தம் செய்து, ராவணனை கொன்று. சொன்னது படியே விபீஷணனை இலங்கைக்கு அரசனாக்கினார். விபீஷணன் பூரண சரணாகதி செய்தார்.

சுக்ரீவனும், விபீஷணனும் ராமபிரானின் பக்தர்கள் தான்.

ஆனாலும், 

கருடனை போன்றோ, ஹநுமானை போன்றோ, ஆச்சர்யமான பக்த சூரிகள் என்று சொல்லிவிட முடியாது.


கருடன், ஹனுமான் போன்றவர்கள், ராமபிரானிடம் தனக்கு எதுவும் எதிர்பார்க்காதவர்கள். எந்த நிலையிலும் பகவான் மீது சந்தேகமோ, இவர் சக்தி அற்றவர் என்றோ நினைப்பதே இல்லை.


"பகவான் தனக்கு ஏதாவது செய்வாரா?" என்ற பக்தர்கள் மத்தியில், கருடன், ஹனுமான் போன்றவர்கள் "பகவானுக்கு தான் ஏதாவது செய்யலாமா?" என்று நினைப்பார்கள்.

ராமபிரான் நாகபாசத்தால் கட்டுப்பட்டு மயங்கி கிடக்க, விபீஷணன், சுக்ரீவன் உட்பட அனைவரும் கையை பிசைந்து கொண்டிருக்க, "அடடா ! கிடைத்தது ஒரு கைங்கர்யம் நமக்கு" என்று கருடன் தானாக வந்து நாகபாசத்தை விலக்கினார்.

"ராமபிரானுக்கு சக்தி உள்ளதா?" என்று சாதாரண பக்தனை போல நினைக்காமல், "நாம் இவருக்கு சேவை செய்ய, தான் சக்தி அற்றவன் போல கிடக்கிறார்" என்று தான் நினைத்தார் கருடன்.

அதேபோல, 

சஞ்சீவினி எடுத்து வந்து ஹனுமான் ராமபிரானை காப்பாற்றியும், 'ராமபிரான் சக்தி அற்றவர்' என்று ஹனுமான் துளியும் நினைக்கவில்லை.  மாறாக, 

"தனக்கு ஒரு புகழ் கொடுக்க, தனக்கு ஒரு சேவை கொடுக்க, தான் சக்தி அற்றவர் போல இருந்தார் ராமபிரான்" என்று தான் நினைத்தார்.


ராமபிரான் அவதார சமயத்தில் மட்டும் தான், இது போன்ற இரு வித பக்தர்கள் உண்டு என்று நினைத்து கொள்ள கூடாது. இன்றும் இது போன்ற இரு வித பக்தர்கள் இருப்பதை காணலாம்.

இது போன்ற பக்தர்கள் என்றுமே பகவானை சுற்றி உண்டு.

இன்றும், 

கோவிலுக்கு பல லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் வித விதமான பிரார்த்தனைகள்.

பகவானிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். பகவானும் அனுகிரஹிக்கிறார்.

பிரார்த்தனைகள் பலிப்பதால் தானே, மதப்பிரச்சாரம் செய்யாமலேயே நம் கோவில்களில் கூட்டம் குவிகிறது.

சில பிரார்த்தனை பலிக்காமல் போனால், சுக்ரீவன், விபீஷணனை போல சந்தேகம் வந்து விடுகிறது.

பிறகு பலிக்கும் போது, பக்தி வலுப்படுகிறது.

இது போன்ற பக்தியை, பலரிடம் நாம் இன்று கூட பார்க்கிறோம்.




ஆனால், 

ஹனுமான், கருடனை போன்று, "பகவானுக்கு நாம் என்ன செய்ய முடியும்?" என்ற குறிக்கோளுடனேயே வரும் பக்தர்களும் உண்டு..

இப்படிப்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு நுழையும் போதே,

"அடடா ! பெருமாளுக்கு உடுத்தி கொள்ள நல்ல பட்டு வஸ்திரம் இல்லை போல இருக்கிறதே ! நாம் மாதாமாதம் வாங்கி கொடுக்கலாமா?"

"அடடா ! இந்த கோவிலில் தேர் உற்சவம் நடக்கவில்லை போல உள்ளதே ! அதற்கு ஏற்பாடு செய்யலாமா?"

"அடடா ! இந்த கோவிலில் தீபம் ஏற்ற எண்ணெய் இல்லையே.. பகவான் இருட்டில் இருக்கிறாரே! தீபம் நிரந்தரமாக கிடைக்க ஏற்பாடு செய்வோமா?"

"அடடா ! வேத ப்ராம்மணன் இவருக்கு சுப்ரபாதம் செய்ய வழி இல்லாமல் உள்ளதே ! வேத ப்ராம்மணர்கள் இங்கு வந்து கைங்கர்யம் செய்யும் படி வசதி செய்து கொடுத்து, பகவானுக்கு சேவை செய்ய வைப்போமா?"

"அடடா..  கோவில் இப்படி பாழடைந்து உள்ளதே ! எப்படியாவது நாமே பணம் சேர்த்து, திருப்பணி செய்து விடலாமா?"

"அடடா... கோவிலில் பெருமாள் காவல் இல்லாமல் இருக்கிறாரே! தங்க நகைக்கு ஆசைப்பட்டு யாரவது பெருமாளை சேர்த்து திருடிவிட்டால் என்ன செய்வது? ஒரு காவல் போடலாமா? பெரிய கேட் போட்டு விடலாமா?"

"அடடா,,,  தெய்வ நிந்தை செய்பவன் வந்து இவருக்கு ஏதாவது செய்து விடுவானே! அவனிடமிருந்து பகவானை நாம் எப்படி காப்பது?"

என்றெல்லாம் யோசிப்பான் மற்றொரு வகையான பக்தன்.


இப்படிப்பட்ட பக்தர்கள், மிகவும் உயர்ந்தவர்கள்.

பகவானிடம் இவர்கள் எதையும் வேண்டி பக்தி செய்வதில்லை.

பகவானிடம் இவர்கள் கேட்பது  "சேவை" மட்டுமே !

இப்படிப்பட்ட பக்தர்களுக்காக, சர்வ சக்தி உடைய பகவான், சக்தி அற்றவர் போல சில சமயங்களில் இருக்கிறார்.

ஹனுமான் "தனக்காக சஞ்சீவினி  மலையையே தூக்கி வந்து விடுவார்", என்று உலகுக்கு காட்ட, தான் மயங்கி கிடந்தார்.


அது போல, 

இன்று, பல கோவில்களில், இப்படிப்பட்ட உயர்ந்த பக்தர்களை எதிர்பார்த்து, பகவான் காத்து கொண்டு இருக்கிறார். 

கோவில்கள் இடிந்தும், தீபம் ஏற்றப்படாமலும், நல்ல வஸ்திரம் கூட இல்லாமலும், உற்சவங்கள் நடக்காமலும் பல ஆயிரம் கோவில்கள் உள்ளன.


ஹநுமானை போன்றும், கருடனை போன்றும் சேவை செய்யும் பக்தர்கள் இன்று ஒவ்வொரு கோவிலுக்கும் தேவை.


சுக்ரீவன் போலவும், விபீஷணன் போலவும் நாம் இருந்தது போதும்.

நம்மால் முடிந்த அளவுக்கு, ஒரு கோவிலையாவது எடுத்து கொண்டு, உற்சவங்கள், பூஜைகள் நடக்க செய்வோம்.

ஹனுமான் போலவும், கருடனை போலவும், பிரகாசிப்போம்.

Friday, 30 July 2021

பகவான் எதை சாப்பிடுகிறார்? தெய்வ சாந்நித்யம் நிலைக்க, நாம் என்ன செய்ய வேண்டும்?

 பகவான் எதை சாப்பிடுகிறார்? 

தெய்வ சாந்நித்யம் நிலைக்க, நாம் என்ன செய்ய வேண்டும்?

கோவிலிலோ, நம்முடைய வீட்டிலோ உள்ள தெய்வத்துக்கு, நாம் சமைத்த உணவை சமர்ப்பிக்கிறோம் (நெய்வேதயம் செய்கிறோம்)

சமர்ப்பித்த பிறகு? 

பகவான், நாம் சமர்பித்ததை பார்த்து அதில் உள்ள தோஷங்களை நீக்கி அனுக்கிரஹம் செய்கிறார்.

வெறும் சாதத்தை, தெய்வத்துக்கு காட்டிய பிறகு, பிரசாதமாக நமக்கே அது வந்து விடுகிறது.


ஒரு ஊதுபத்தி கொளுத்தினாலும், மனம் நமக்கு வந்து விடுகிறது..




பூ அபிஷேகம் செய்தாலும், அவர் திருமேனியில் பட்ட பூவை நாம் எடுத்து கொண்டு விடுகிறோம்.


இப்படி எது கொடுத்தாலும், அதை அனுக்கிரஹம் செய்து, பகவான் நமக்கே  திருப்பி கொடுத்து விடுகிறார்.


அவர் உண்மையில் திருப்பி கொடுக்காமல் சாப்பிட்டு விடுவது ஒன்றே ஒன்று தான்...

பகவானை நினைத்து கொண்டு "ரமா ரமண கோவிந்தா.. கோவிந்தா.. கோவிந்தா..." என்று சொல்லிவிட்டால், அந்த நாமத்தை அப்படியே சாப்பிட்டு விடுகிறார் பகவான்.


நாமத்தை சொன்ன மாத்திரம்... அப்படியே மறைந்து விடுகிறது... பிரசாதம் போல திரும்ப வருவதே இல்லை...

நாம் செய்ய கூடிய இந்த மங்களாசாசனம் தான்... பகவானை கோவிலிலோ, நமது வீட்டிலோ சாந்நித்யத்துடன் நிற்க செய்கிறது.


எந்த கோவிலில்! எந்த வீட்டில்! பகவன் நாமத்தை சொல்வதில்லையோ, அந்த இடத்தில பகவத் சாந்நித்யம் இருக்கவே இருக்காது.


வேத மந்திரத்தை கொண்டு, பகவன் நாமத்தை மங்களாசாசனம் செய்கிறோம்.


அஷ்டோத்திரம், சஹஸ்ர நாமம் போன்றவற்றை கொண்டும், பகவன் நாமத்தை தான் மங்களாசாசனம் செய்கிறோம்.


"கோடி அர்ச்சனை செய்தால், பகவானுக்கு சாந்நித்யம் ஏற்படும்" என்று பல கோவில்களில் செய்வார்கள்.


"கோடி பூவை பகவானுக்கு அர்ச்சனை செய்தால், பகவான் அங்கு தன் சாந்நித்யத்தை வெளிப்படுத்துகிறார்" என்று நினைத்து விட கூடாது.




"அந்த கோடி அர்ச்சனையில் என்ன சொல்லி அரச்ச்னை செய்தோம்?" என்று பார்க்க வேண்டும்..


கோடி அர்ச்சனையில்... "விஸ்வஸ்மை நம: ! விஷ்ணவே நம: !..." என்று எவ்வளவு நாமத்தை நாம் சொல்கிறோம். 

நாமத்தை சொல்ல சொல்ல, பகவான் நாம் சொல்லுமிடத்தில் சாந்நித்யத்தை காட்டுகிறார்.





கோவிலில் அர்ச்சனை செய்கிறோம். கொடுக்கும் துளசி, பூ, தேங்காய் போன்றவற்றிலா தெய்வத்துக்கு சாந்நித்யம் ஏற்படுகிறது? இல்லை..

அந்த அர்ச்சனையில் நாம சங்கீர்த்தனம் உள்ளது. 

அந்த நாம சங்கீர்த்தனமே பகவானை அங்கு சாநித்யத்தோடு இருக்க செய்கிறது.


எத்தனைக்கு எத்தனை கோவிலில், நம் வீட்டில், நாமம் ஒலிக்கிறதோ, அத்தனைக்கு அத்தனை கோவிலில் தெய்வ சாந்நித்யம் அதிகரிக்கும்.


எததனைக்கு எத்தனை நாம் நமக்குளேயே "ராம... ராம... ராம..." என்று நாம ஜபம் செய்து கொண்டே இருக்கிறோமோ! அத்தனைக்கு அத்தனை நம் இதயத்துக்குளேயே தெய்வம் வந்து அமர்ந்து இருப்பதை அறிய முடியும்..

நாமசங்கீர்த்தனம் செய்து, ஹிந்துக்கள் தெய்வ சக்தியை எங்கும் நிலைபெற செய்ய வேண்டும். 

போலி பிரச்சாரங்கள் தானாக ஒழிந்து விடும்.

Thursday, 29 July 2021

ஸ்ரீரங்கம் பெருமை... பாசுரம் (அர்த்தம்) - "பச்சை மா-மலை போல் மேனி". ஸ்ரீரங்கத்தில் (திருச்சி மாவட்டம்) வீற்று இருக்கும் ரங்கநாத பெருமாளை தொழும் பாசுரம். தொண்டரடிப்பொடியாழ்வார் வர்ணிக்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே !

ஸ்ரீரங்கத்தின் பெருமை....

பச்சை மா-மலை போல் மேனி!
பவள-வாய் கமல-செங்கண்!
அச்சுதா!
அமரர் ஏறே!
ஆயர்தம் கொழுந்தே! என்னும்,
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம்  ஆளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன்!
அரங்க மாநகர் உளானே!

வேதநூல் பிராயம் நூறு
மனிசர்தாம் புகுவரேலும்,
பாதியும் உறங்கிப் போகும்
நின்றதில் பதினை  ஆண்டு,
பேதை பாலகன்  அதாகும்
பிணி! பசி! மூப்பு! துன்பம்!
ஆதலால், "பிறவி வேண்டேன்"
அரங்கமா நகர் உளானே !
- திருமாலை (தொண்டரடிப்பொடியாழ்வார்)

ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டு இருக்கும் ரங்கநாதரை பார்த்து 
"எனக்கு பரலோகமும் வேண்டாம், இக லோகமும் வேண்டாம்" என்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

பெருமாளுக்கு இகலோகம், பரலோகம் - என்ற இரு சொத்துக்கள் தானே உள்ளது !!




நமக்கு இகலோகம் பிடிக்கவில்லை என்றால், "சரி.. பரலோகம் செல்" என்பார்.

பரலோகம் செல்ல நம்மில் பலருக்கு இன்னும் ஆசை வரவே இல்லை! 
ஆதலால், "சரி.. இகலோகத்திலேயே இரு" என்று நம்மை மீண்டும் மீண்டும் பிறக்க செய்கிறார்.

ஆழ்வாரோ, தனக்கு "அச்சுவை பெறினும் வேண்டேன்" என்று சொல்லி "பரலோகம் கூட வேண்டாம்' என்கிறார்.

"சரி... இகலோகம் தரட்டுமா?' என்றால்... 'அதுவும் வேண்டாம்' என்கிறார்.

'ஏன் இகலோகம் வேண்டாம்?' என்று பெருமாள் கேட்டால்,

ஆழ்வார் தன் மனசாட்சியையே கேட்டு பதில் சொல்கிறார்..
"உலகத்திற்கு எத்தனை ஆயுசு கொடுக்கப்பட்டு இருக்கிறது?
ஆகாசத்திற்கு எத்தனை ஆயுசு? ஆகாசம் எவ்வளவு காலம் இருக்கிறது? 
இந்த பூமி எவ்வளவு காலம் இருக்க போகிறது? 
கடல் எவ்வளவு காலம் இருக்கப்போகிறது? 
மலை எவ்வளவு காலம் இருக்கப்போகிறது?

இவைகளின் ஆயுசை பார்க்கும் போது, இவ்வளவு பெரிய உலகத்தில், இந்த மனிதனுக்கு எத்தனை சொற்ப காலம் ஆயுசு உள்ளது !!

ஆகாசம் அளவுக்கு ஆயுசு இல்லாவிட்டாலும், ஒரு ஆயிரம் வருடமாவது மனிதனுக்கு ஆயுசு இருந்தால் பரவாயில்லை.

நூறு வயது காலம் தான் "மனித ஆயுசு" என்று எல்லை வைக்கிறதே!! (வேதநூல் பிராயம் நூறு)

வேதம், 'மனிதனுக்கு 100 வயது' என்று சொன்னாலும், அந்த நூறு வயதை தொடுபவன் கூட கோடியில் ஒரு சிலர் தானே !




50 வயதிலோ, 25 வயதிலோ, குழந்தையாக இருக்கும் போதோ, 'பட்' என்று ஆயுசு முடிந்து விடுகிறது.

கல்யாணம் ஆன பிறகு சிலருக்கு மரணம் ஏற்பட்டு விடுகிறது. கல்யாணம் ஆகாமலேயே மரணம் சிலருக்கு.

சொந்த வீட்டில் இறந்து போகிறான்.
வீடு இருந்தும் எங்கேயோ விபத்தில் இறந்து விடுகிறான். 

பந்துக்கள் சூழ்ந்து இருக்கும் போது இறந்து போகிறான். அனாதையாக இறந்து போகிறான்.

ஆஸ்பத்திரியில் இறந்து விடுகிறான். மாரடைப்பு ஏற்பட்டு மரணம். 
கொடுக்கப்பட்ட 100 வயதை கழிப்பதற்குள், வித விதமான வழிகளில் மனிதனுக்கு மரணம் ஏற்பட்டு விடுகிறது.

ஒன்று நிச்சயாமாகிறது.

'ஒரு நாள், இந்த உயிர், இந்த உடலை விட்டு கிளம்பி விடும்' என்று நிச்சயமாக தெரிகிறது.

சரி.. கிடைத்த ஆயுசை என்ன செய்கிறான் என்று பார்த்தால்!! பாதி நாள் தூக்கத்திலேயே கழிக்கிறான்.

வாழ்ந்த நாட்களில் "பகல் முழுக்க முழித்து கொண்டு இருந்தான்" என்பது தான் மனித பிறவியின் ப்ரயோஜனமா?

சரி..  முழித்து கொண்டு இருக்கும் வேளையில் நன்றாகவே இருக்கிறானா? அதுவும் இல்லை.. 

முதல் 15 வருடங்கள் பாலகனாக விளையாடி வீணடித்து விடுகிறான்.

பிறகு, மிச்ச ஆயுசை பிணியாலும், பசியாலும், மூப்பினாலும், பல வித விதமான துன்பங்களாலும் அனுபவித்து செலவு செய்கிறான்.

சீ ! இந்த உலக வாழ்க்கை வெறுக்கத்தக்கதாக இருக்கிறதே !

ஏதோ பூர்வ கர்மாவால், இந்த ஜென்மாவை எடுத்து விட்டேன். எனக்கு இக லோகமும் பிடிக்கவில்லை.

பரலோகமான இந்திர லோகம் ஆளும், அச்சுவை பெறினும் வேண்டேன்!"
(ஆதலால், "பிறவி வேண்டேன்") என்று பிரார்த்திக்கிறார்.

இப்படி ஆழ்வார் "இகலோகமும் வேண்டாம், பரலோகமும் வேண்டாம்" என்று சொல்ல, 
ஸ்ரீரங்கநாதர், 'இகலோகம், பரலோகம் என்ற இரண்டு சொத்து தானே என்னிடம் இருக்கிறது. இரண்டுமே வேண்டாம் என்றால் எப்படி? இப்படி பிடிவாதம் செய்ய கூடாது.' என்றார்




தாய் தன் குழந்தையை மடியில் வைத்து கொண்டாள். "மடியில் இருக்க மாட்டேன்" என்று கத்தி பிடிவாதம் செய்தது.

"சரி..." என்று கீழே இறக்கிவிட்டாள். 
"கீழே இறக்கி விடாதே" என்று அழுதது.

'குழந்தையை எப்படி சமாதானப்படுத்துவது?' என்று புரியாமல் தாய் தவிப்பது போல, 
'எனக்கு இகமும் வேண்டாம்.. பரமும் வேண்டாம்' என்று புலம்பி அழும் தொண்டரடிப்பொடியாழ்வாரை சமாதானம் செய்ய முடியாமல் பெருமாள் திகைக்க, ஆழ்வாரே தனக்கு வேண்டியதை ரகசியமாக கேட்கிறார்.

'அரங்க மாநகர் உளானே' என்று சொல்லும் போது... "எனக்கு இக லோகமும் வேண்டாம்.. பரலோகமும் வேண்டாம் .. ஆனால், யாருக்கும் தெரியப்படுத்தாமல், ரகசியமாக வைத்து இருக்கும் உங்கள் மூன்றாவது சொத்தான ஸ்ரீரங்கத்தில் நீங்கள் வாசம் செய்ய, உங்களுக்கு ஏதாவது சிறு கைங்கர்யம் செய்து கொண்டு ஸ்ரீரங்க வாசம் செய்யும் பாக்கியத்தை தாருங்கள்" 
என்று கேட்காமல் கேட்கிறார்.

"ஸ்ரீரங்கம் இகலோகத்தில் தானே இருக்கிறது..  நீர் தான் இகலோகம் வேண்டாம் என்கிறீரே?" என்று பெருமாள் கேட்க...

"ஸ்ரீரங்கநாதருக்கு கைங்கர்யம் செய்பவருக்கு இக லோக துக்கமே தெரியவில்லையே!" என்கிறார்.

"சரி.. ஸ்ரீரங்கம் பரமபதத்தை காட்டிலும் உயர்ந்ததோ?" என்று கேட்க..

"பரமபதம் உயர்ந்தது தான் என்றாலும்..  அங்கு பரமபத நாதன் எப்பொழுதும் தரிசன ஆனந்தம் மட்டும் தானே தருகிறார். 
இங்கோ ! 
அதே பரமபத நாதன் 'ரங்கநாதனாக' இருந்து கொண்டு, தரிசன ஆனந்தம் கொடுத்து, பற்பல உற்சவங்கள் செய்து கொண்டு பஞ்ச இந்திரியங்களுக்கும் ஆனந்தம் கொடுக்கிறாரே! 
அவருக்கு விதவிதமான கைங்கர்யம் செய்வதால், கைங்கர்ய ஆனந்தமும் கிடைக்கிறதே!. பரமபதத்தை விட, எனக்கு ஸ்ரீரங்கம் பேரானந்தத்தை தருகிறதே!" என்கிறார்.

இப்படி. ஆச்சர்யமாக, ஆழ்வார், 'எனக்கு ஸ்ரீ ரங்கநாதரே போதும்.. ஸ்ரீரங்கமே போதும்... வேறு எதுவும் வேண்டாம்' 
என்று சொல்லி கதறி அழும் பாசுரம் இது.

'பக்தி என்றால் என்ன?
என்பதை ஆழ்வார் பாசுரங்களை படித்து அர்த்தம் தெரிந்து கொண்டாலே நாம் புரிந்து கொள்ள முடிகிறது..

தமிழனாய் பிறந்தவன் - வாழும் சில வருட வாழ்நாளில், ஒரு வருடமாவது 4000 தமிழ் பாசுரங்களை அர்த்தம் தெரிந்து படிக்க முயற்சிக்க வேண்டும்.

குருநாதர் துணை

Tuesday, 27 July 2021

ராமபிரானுக்கு துணையாக எத்தனை கோடி வானர சேனை கலந்து கொண்டனர்? வால்மீகி ராமாயணம் .. தெரிந்து கொள்வோம்..

ராமபிரானுக்கு துணையாக எத்தனை கோடி வானர சேனை கலந்து கொண்டனர்? 

குறைந்த பட்சம் - 20 ஆயிரம் கோடி வானரர்கள், ராம சேவைக்கு தன்னை ஈடுபடுத்திக்கொண்டனர்.


வாலியின் மாமனார், தாரையின் தந்தை சுசேனா - 10,000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார். 

ततः कांचन शैल आभः ताराया वीर्यवान् पिता |

अनेकैः बहु साहस्रैः कोटिभिः प्रत्यदृश्यत ||

- वाल्मीकि रामायण


சுக்ரீவனின் மாமனார் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

तथा अपरेण कोटीनाम् साहस्रेण समन्वितः |

पिता रुमयाः संप्राप्तः सुग्रीव श्वशुरो विभुः ||

- वाल्मीकि रामायण





ஹனுமானின் தந்தை கேசரி - ஆயிரக்கணக்கான வானரர்களுடன் வந்திருந்தார்.

पद्म केसर संकाशः तरुण अर्क निभ आननः |

बुद्धिमान् वानर श्रेष्ठः सर्व वानर सत्तमः ||

अनीकैः बहु साहस्रैः वानराणाम् समन्वितः |

पिता हनुमतः श्रीमान् केसरी प्रत्यदृश्यत ||

- वाल्मीकि रामायण


கோலங்குளர்களின் அரசன் கவாக்ஷன் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

गो लांगूल महाराजो गवाक्षो भीम विक्रमः |

वृतः कोटि सहस्रेण वानराणाम् अदृश्यत ||

- वाल्मीकि रामायण


தூம்ரா - 2000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

ऋक्षाणाम् भीम वेगानाम् धूम्रः शत्रु निबर्हणः |

वृतः कोटि सहस्राभ्याम् द्वाभ्याम् समभिवर्तत || 

- वाल्मीकि रामायण


பனசன் - 3 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

महा अचल निभैः घोरैः पनसो नाम यूथपः |

आजगाम महावीर्यः तिसृभिः कोटिभिः वृतः |

- वाल्मीकि रामायण


நீலன் - 3 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

नील अंजन चय आकारो नीलो नाम अथ यूथपः |

अदृश्यत महावीर्य: तिसृभि: कोटिभिः वृतः ||

- वाल्मीकि रामायण


கவயன் - 5 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

ततः कांचन आभो गवयो नाम यूथपः |

आजगाम महावीर्यः कोटिभिः पंचभिः वृतः ||

- वाल्मीकि रामायण


தரீமுகன் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

दरीमुखः च बलवान् यूथपो अभ्याययौ तदा |

वृतः कोटि सहस्रेण सुग्रीवम् समुपस्थितः ||

- वाल्मीकि रामायण


மைந்தனும், த்விவிதனும் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

मैन्दः च द्विविदः च उभौ अश्वि पुत्रौ महाबलौ |

कोटि कोटि सहस्रेण वानराणाम् अदृश्यताम् ||

- वाल्मीकि रामायण


கஜன் - 3 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

गजः च बलवान् वीरः त्रिसृभिः कोटिभिः वृतः |

आजगाम महातेजाः सुग्रीवस्य समीपतः ||

- वाल्मीकि रामायण


ஜாம்பவான் - 10 கோடி கரடி படையுடன் வந்திருந்தார்.

ऋक्ष राजो महातेजा जांबवान् नाम नामतः |

कोटिभिः दशभिः व्याप्तः सुग्रीवस्य वशे स्थितः |

- वाल्मीकि रामायण


ருமணன் - 100 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

रुमणो नाम तेजस्वी विक्रान्तैः वानरैः वृतः |

आगतो बलवान् तूर्णम् कोटि शत समावृतः ||

- वाल्मीकि रामायण


கந்தமாதன் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

ततः कोटि सहस्राणाम् सहस्रेण शतेन च |

पृष्ठतो अनुगतः प्राप्तो हरिभिः गंधमादनः ||

- वाल्मीकि रामायण


வாலியின் பிள்ளை அங்கதன் - ஆயிரக்கணக்கான பத்மங்களுடன், நூற்றுக்கணக்கான சங்கங்களுடன் வந்திருந்தார்.

ततः पद्म सहस्रेण वृतः शन्कु शतेन च |

युव राजो अंगदः प्राप्तः पितृ तुल्य पराक्रमः ||

- वाल्मीकि रामायण





தாரா - 5 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

ततः तारा द्युतिः तारो हरिः भीम पराक्रमः |

पंचभिः हरि कोटीभिः दूरतः प्रत्यदृश्यत ||

- वाल्मीकि रामायण


இந்த்ரஜானு - 11 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

इन्द्रजानुः कपिः वीरो यूथपः प्रत्यदृश्यत |

एकादशानाम् कोटीनाम् ईश्वरः तैः च सम्वृतः || 

- वाल्मीकि रामायण


ரம்பன் - 1100 ஆயுத வானரர்களுடன் வந்திருந்தார்.

ततो रंभः तु अनुप्राप्तः तरुण आदित्य संनिभः |

आयुतेन वृतः चैव सहस्रेण शतेन च ||

- वाल्मीकि रामायण


துர்முகா - 2  கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

ततो यूथ पतिः वीरो दुर्मुखो नाम वानरः |

प्रत्यदृश्यत कोटिभ्याम् द्वाभ्याम् परिवृतो बली ||

- वाल्मीकि रामायण


ஹனுமான் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

कैलास शिखर आकारैः वानरैः भीम विक्रमैः |

वृतः कोटि सहस्रेण हनुमान् प्रत्यदृश्यत ||

- वाल्मीकि रामायण


நலன் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

नलः च अपि महावीर्यः संवृतो द्रुम वासिभिः |

कोटी शतेन संप्राप्तः सहस्रेण शतेन च ||

- वाल्मीकि रामायण


சுக்ரீவனுக்கு பிடித்தமான ததிமுகன் - 10 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

ततो दधिमुखः श्रीमान् कोटिभिः दशभिः वृतः |

संप्राप्तो अभिनदन् तस्य सुग्रीवस्य महात्मनः || 

- वाल्मीकि रामायण


சரபன், குமுதன், வன்ஹி மேலும் பல வானரர்கள் இப்படி நிற்க,  மலைகள், மரங்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியாதபடி, எண்ண முடியாத அளவுக்கு வானர சேனை நின்று கொண்டிருந்து.

शरभः कुमुदो वह्निः वानरो रंहः एव च |

एते च अन्ये च बहवो वानराः काम रूपिणः ||

आवृत्य पृथिवीम् सर्वाम् पर्वतान् च वनानि च |

यूथपाः समनुप्राप्ता एषाम् संख्या न विद्यते ||

- वाल्मीकि रामायण


Friday, 9 July 2021

உலக படைப்பு - வரிசையை தெரிந்து கொள்வோம்...

உலக படைப்பு - வரிசையை தெரிந்து கொள்வோம்...

"உலகம் தட்டை" என்று உருட்டி கலிலியோ போன்றவர்களை கொன்ற மதங்கள் ஒரு புறம் இருக்க,

ஹிந்துக்களின் சொத்தான வேதம், உலக படைப்பின் வரிசையை பற்றி சொல்கிறது...  

தெரிந்து கொள்வோம்...

* ஆகாயத்தில் இருந்து 'காற்று'.

* காற்றிலிருந்து 'அக்னி'.

* அக்னியில் இருந்து 'நீர்'.

* நீரில் இருந்து 'நிலம்'.

* நிலத்தில் இருந்து 'மனித உடல்கள், மிருக, தாவர உடல்கள்'


நீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, இன்று நீருக்கு ஆதாரமாக உள்ள அக்னியிலிருந்தும், காற்றிலிருந்தும் எடுக்க அறிவியல் முயற்சி நடக்கிறது என்பதை நாம் மறந்து விட கூடாது.





உலக படைப்பின் வளர்ச்சி :

1. ஒரு குணம்: (ஆகாயம்)

* ஆகாயம் ஒலியால் நிரம்பி உள்ளது. 

ஆகார நியமம் மேலும் கடுமையான தியானத்தால், ரிஷிகள் ஆகாயத்தில் இருக்கும் ஒலிகளை கண்டுபிடித்து நமக்கு தந்து விட்டனர். 

அதுவே 'வேதம்' என்றும் 'சப்த பிரம்மம்' என்று சொல்கிறோம்.

வேதங்கள் அனைத்தும் இந்த ஆகாயத்தில் இருக்கும் ஒலி அலைகளே !

இருக்கும் வித விதமான அனைத்து வேத ஒலிகளும் "ஓம்" என்ற பிரணவ ஒலியில் இருந்து வெளிப்பட்டவை என்று ரிஷிகள் கண்டுபிடித்து நமக்கு தந்து விட்டனர்.

(ரிஷிகளை 'விஞ்ஞானிகள்' என்று பொருள் கொள்ளலாம்) 


2. இரண்டு குணம்: (காற்று)

ஆகாயத்திலிருந்து உண்டான காற்றுக்கு 2 குணங்கள் உண்டு. 

* காற்றில் ஒலி உண்டு.

மேலும்,

* காற்று, நம் தோலில் படும் போது, அதை உணர முடிகிறது.


3. மூன்று குணம்: (அக்னி)

காற்றிலிருந்து உருவான அக்னிக்கு 3 குணங்கள் உண்டு.

* அக்னிக்கும் ஒலி உண்டு. 

* அக்னி நம் மீது படும் போது, உணரவும் முடிகிறது.. 

மேலும்,

* அக்னியை கண்ணால் பார்க்கவும் முடிகிறது. அக்னிக்கு ஒளி உண்டு.


4. நான்கு குணம்: (நீர்)

அக்னியிலிருந்து உருவான நீர் என்ற ரசத்துக்கு 4 குணங்கள் உண்டு.

* நீருக்கும் ஒலி உண்டு.

* நீர் நம் மீது படும் போது உணர முடிகிறது..

* நீரை பார்க்கவும் முடிகிறது..

மேலும்

* நீரை நாக்கால் சுவைக்கவும் முடிகிறது.


'ரசம்' என்ற சொல் நீருக்கு பயன்படுத்தப்படுகிறது.  

நாம் சாப்பிடும் எந்த பொருளாக இருந்தாலும், அதில் சுவை (ரசம்) இருப்பதற்கு காரணம் அதில் இருக்கும் நீரே என்று அறிந்து கொள்ளலாம்.


5. ஐந்து குணம்: (நிலம்)

நீரிலிருந்து உருவான நிலத்துக்கு 5 குணங்கள் உண்டு.

* நிலத்தில் ஒலி உண்டு.

* நிலத்தில் நம் உடல் படும் போது உணர முடிகிறது..

* நிலத்தை பார்க்கவும் முடிகிறது..

மேலும்

* நிலத்தை நாக்கால் சுவைக்கவும் முடிகிறது.

மேலும்

* நிலத்திற்கு வாசனை உண்டு.


நிலத்தில் உருவான மனித உடல்களுக்கு இந்த 5 குணங்களை உணர 5 கருவிகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.


1. ஒலி இருப்பதை கேட்க காதும்,

2. தொடுவதை உணர தோலும்,

3. பார்ப்பதற்கு கண்ணும்,

4. சுவைப்பதற்கு நாக்கும்,

5. முகர்வதற்கு மூக்கும் உள்ளது.


உயிர் இல்லாத, இறந்து போன மனித உடலில் இந்த 5 கருவியும் இருந்தாலும், பயனில்லை...


இந்த மனித உடலில் உள்ள கருவியை பயன்படுத்தி, வெளியில் காணப்படும் பஞ்ச பூதங்களை அனுபவித்து வந்தவனுக்கு "ஜீவன்" என்று பெயர் என்று வேதம் சொல்கிறது.


இந்த ஜீவன் 

"ஆகாயத்திலிருந்தோ! 

காற்றிலிருந்தோ! 

அக்னியிலிருந்தோ! 

நீரிலிருந்தோ! 

நிலத்திலிருந்தோ! 

வந்தவன் இல்லை.." 

என்று சொல்கிறது வேதம்...


இந்த ஜீவனும் (living), ஆகாயமும் (nature) பரமாத்மாவிலிருந்து வந்தவர்கள் என்று சொல்கிறது வேதம்.

எப்படி கடல், பல அலைகளை உருவாக்குமோ! அது போல, பரமாத்மா என்ற பரமபுருஷன், தன் அம்சமாக கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களை வெளிப்படுத்தினார்.

அதில் முதலாவதாக படைக்கப்பட்டவர் ப்ரம்ம தேவன் என்று வேதம் ஆரம்பிக்கிறது.

ஜீவாத்மாக்களை படைத்த பரமாத்மா, வாழ்வதற்கு ஏற்ற பஞ்ச பூதங்களையும் படைத்தார்..





பரமாத்மா 'அவ்யக்தத்தில் இருந்து 'ஓம்' என்ற ஒலி ரூபமான ஆகாயத்தை' படைத்தார். 

ஓம் என்ற பிரணவ ஒலியிலிருந்து, வேத ஒலிகள் வெளிப்பட்டன..

வேத ஒலிகள் மூலம், காற்று, அக்னி, நீர், நிலங்களை படைத்தார்.  

வேதம் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பதால், வேத சப்தத்தை மனனம் செய்து வந்த ப்ராம்மணர்களை அரசர்கள் மதித்தனர்.

காற்று, அக்னி, நீர், நிலங்களில் ஏற்படும் கோளாறுகளைநோய்களை வேத ஓத ஒலிகளை மாத்திரை பிசகாமல் ஓதி சமன் செய்தனர்.

மேலும், 

ப்ரம்ம தேவனிடம் இந்த வேதத்தை கொடுத்து, படைக்கப்பட்ட பல லோகங்களில் தேவர்கள், ரிஷிகள், மேலும் பூலோக நிலங்களில் மனித, மிருக, தாவர உடல்களை படைத்தார்.

பரமாத்மா அழிக்கும் அம்சத்துடன், தானே ருத்ரனாக ப்ரம்ம தேவன் நெற்றியில் இருந்து வெளிப்பட்டார்.

பரமாத்மா படைக்கும் அம்சத்துடன், தானே விஷ்ணுவாக ஸ்வயமாக அவதரித்தார். 

பரமாத்மாவால் படைக்கப்பட்ட கோடிக்கணக்கான ஜீவாத்மாக்கள் இந்த உடல்களில் புகுந்து கொண்டு, பஞ்ச பூதங்களான தன் உடல்களை கொண்டு, பஞ்ச பூதங்களால் ஆன உலகை அனுபவிக்கின்றன.


"எந்த ஜீவாத்மாக்கள் இந்த பஞ்ச பூதங்களால் கிடைக்கும் அனுபவங்கள் போதும், தனக்கு பரமாத்மாவே போதும்" என்று நினைக்கிறதோ! அந்த ஜீவாத்மாவுக்கு விடுதலை கொடுத்து, தன்னுடன் சேர்த்து கொண்டு விடுகிறார்..

இதுவே மோக்ஷம்.

ப்ரம்ம தேவனை படைத்த, நம்மையும் படைத்த, பஞ்ச பூதங்களுக்கு காரணமான அந்த பரமாத்மா "நாராயணன்" என்று அறிவோம்.

நாராயணன் என்ற சொல்லுக்கு "நரர்கள் யாவருக்கும் அடைக்கலம் தருபவர்" என்று பொருள்.

'அந்த பரமபுருஷனை, மஹாலக்ஷ்மி மணந்தாள்' என்று ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூக்தம் சொல்லி அடையாளமும் காட்டுகிறது.


வாழ்க ஹிந்துக்கள்..