இரண்டு விதமான பக்தர்கள் இருக்கிறார்கள்.
"பகவான் தனக்கு ஏதாவது செய்வாரா?" என்று ஒரு வித பக்தர்கள்.
"பகவானுக்கு தான் ஏதாவது செய்ய முடியுமா?" என்று மற்றொரு விதமான பக்தர்கள் உண்டு.
ராம அவதார சமயத்தில், விபீஷணன், சுக்ரீவன் போன்றவர்கள் "ராமபிரான் தன்னை காப்பாற்றுவாரா? தனக்கு அபயம் கொடுப்பாரா?" என்று வந்தார்கள்.
ராமபிரான் சொன்னார் என்றதும், வாலியை சண்டைக்கு கூப்பிட. அண்ணன் தம்பியான இவர்கள், ஒரே ஜாடையோடு இருக்க,
"வாலிக்கு பதிலாக தவறுதலாக சுக்ரீவனை அடித்து விட கூடாதே" என்று ராமபிரான் சற்று நிதானிக்க, அதற்குள் 'வாலி தன்னை கொன்று விடுவானோ!' என்று தப்பித்து சுக்ரீவன் ஓடி விட்டான்.
"இப்படி என்னை காப்பேன் என்று சொல்லிவிட்டு, வாலியிடம் மாட்டி விட்டீர்களே" என்று புலம்பினான்.
பிறகு, வாலியை ஒரே அம்பில் வீழ்த்தி, கிஷ்கிந்தைக்கு சுக்ரீவனை ராமபிரான் அரசனாக்கியதும், ராமபிரானை பூரணமாக சரணாகதி செய்தார்.
அதேபோல,
விபீஷணனும், "ராமரே கதி." என்று சரணாகதி செய்தார். ராமபிரான் உடனேயே "இலங்கைக்கு அதிபதி விபீஷணன்" என்று ராவணன் இருக்கும் போதே பட்டாபிஷேகம் தன் கையால் செய்தார்.
மிகுந்த நம்பிக்கையில் இருந்த விபீஷணன், ராமபிரானும், லக்ஷ்மணனும் இந்திரஜித் செலுத்திய நாக பாணத்தால் மூர்ச்சையாகி விழுந்து விட... உடனே புலம்ப ஆரம்பித்தார்.
"ராவணனை பகைத்து கொண்டு.. ராமபிரானை சரணடைந்தேனே! இப்படி ராமபிரானும் கிடக்க, ஆதரவு இல்லாமல் போய் விட்டேனே!" என்று அழுகிறார்.
பிறகு, நாகபாசத்தில் இருந்து விடுபட்டு, ராமபிரான் தொடர்ந்து யுத்தம் செய்து, ராவணனை கொன்று. சொன்னது படியே விபீஷணனை இலங்கைக்கு அரசனாக்கினார். விபீஷணன் பூரண சரணாகதி செய்தார்.
சுக்ரீவனும், விபீஷணனும் ராமபிரானின் பக்தர்கள் தான்.
ஆனாலும்,
கருடனை போன்றோ, ஹநுமானை போன்றோ, ஆச்சர்யமான பக்த சூரிகள் என்று சொல்லிவிட முடியாது.
கருடன், ஹனுமான் போன்றவர்கள், ராமபிரானிடம் தனக்கு எதுவும் எதிர்பார்க்காதவர்கள். எந்த நிலையிலும் பகவான் மீது சந்தேகமோ, இவர் சக்தி அற்றவர் என்றோ நினைப்பதே இல்லை.
"பகவான் தனக்கு ஏதாவது செய்வாரா?" என்ற பக்தர்கள் மத்தியில், கருடன், ஹனுமான் போன்றவர்கள் "பகவானுக்கு தான் ஏதாவது செய்யலாமா?" என்று நினைப்பார்கள்.
ராமபிரான் நாகபாசத்தால் கட்டுப்பட்டு மயங்கி கிடக்க, விபீஷணன், சுக்ரீவன் உட்பட அனைவரும் கையை பிசைந்து கொண்டிருக்க, "அடடா ! கிடைத்தது ஒரு கைங்கர்யம் நமக்கு" என்று கருடன் தானாக வந்து நாகபாசத்தை விலக்கினார்.
"ராமபிரானுக்கு சக்தி உள்ளதா?" என்று சாதாரண பக்தனை போல நினைக்காமல், "நாம் இவருக்கு சேவை செய்ய, தான் சக்தி அற்றவன் போல கிடக்கிறார்" என்று தான் நினைத்தார் கருடன்.
அதேபோல,
சஞ்சீவினி எடுத்து வந்து ஹனுமான் ராமபிரானை காப்பாற்றியும், 'ராமபிரான் சக்தி அற்றவர்' என்று ஹனுமான் துளியும் நினைக்கவில்லை. மாறாக,
"தனக்கு ஒரு புகழ் கொடுக்க, தனக்கு ஒரு சேவை கொடுக்க, தான் சக்தி அற்றவர் போல இருந்தார் ராமபிரான்" என்று தான் நினைத்தார்.
ராமபிரான் அவதார சமயத்தில் மட்டும் தான், இது போன்ற இரு வித பக்தர்கள் உண்டு என்று நினைத்து கொள்ள கூடாது. இன்றும் இது போன்ற இரு வித பக்தர்கள் இருப்பதை காணலாம்.
இது போன்ற பக்தர்கள் என்றுமே பகவானை சுற்றி உண்டு.
இன்றும்,
கோவிலுக்கு பல லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் வித விதமான பிரார்த்தனைகள்.
பகவானிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். பகவானும் அனுகிரஹிக்கிறார்.
பிரார்த்தனைகள் பலிப்பதால் தானே, மதப்பிரச்சாரம் செய்யாமலேயே நம் கோவில்களில் கூட்டம் குவிகிறது.
சில பிரார்த்தனை பலிக்காமல் போனால், சுக்ரீவன், விபீஷணனை போல சந்தேகம் வந்து விடுகிறது.
பிறகு பலிக்கும் போது, பக்தி வலுப்படுகிறது.
இது போன்ற பக்தியை, பலரிடம் நாம் இன்று கூட பார்க்கிறோம்.
ஆனால்,
ஹனுமான், கருடனை போன்று, "பகவானுக்கு நாம் என்ன செய்ய முடியும்?" என்ற குறிக்கோளுடனேயே வரும் பக்தர்களும் உண்டு..
இப்படிப்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு நுழையும் போதே,
"அடடா ! பெருமாளுக்கு உடுத்தி கொள்ள நல்ல பட்டு வஸ்திரம் இல்லை போல இருக்கிறதே ! நாம் மாதாமாதம் வாங்கி கொடுக்கலாமா?"
"அடடா ! இந்த கோவிலில் தேர் உற்சவம் நடக்கவில்லை போல உள்ளதே ! அதற்கு ஏற்பாடு செய்யலாமா?"
"அடடா ! இந்த கோவிலில் தீபம் ஏற்ற எண்ணெய் இல்லையே.. பகவான் இருட்டில் இருக்கிறாரே! தீபம் நிரந்தரமாக கிடைக்க ஏற்பாடு செய்வோமா?"
"அடடா ! வேத ப்ராம்மணன் இவருக்கு சுப்ரபாதம் செய்ய வழி இல்லாமல் உள்ளதே ! வேத ப்ராம்மணர்கள் இங்கு வந்து கைங்கர்யம் செய்யும் படி வசதி செய்து கொடுத்து, பகவானுக்கு சேவை செய்ய வைப்போமா?"
"அடடா.. கோவில் இப்படி பாழடைந்து உள்ளதே ! எப்படியாவது நாமே பணம் சேர்த்து, திருப்பணி செய்து விடலாமா?"
"அடடா... கோவிலில் பெருமாள் காவல் இல்லாமல் இருக்கிறாரே! தங்க நகைக்கு ஆசைப்பட்டு யாரவது பெருமாளை சேர்த்து திருடிவிட்டால் என்ன செய்வது? ஒரு காவல் போடலாமா? பெரிய கேட் போட்டு விடலாமா?"
"அடடா,,, தெய்வ நிந்தை செய்பவன் வந்து இவருக்கு ஏதாவது செய்து விடுவானே! அவனிடமிருந்து பகவானை நாம் எப்படி காப்பது?"
என்றெல்லாம் யோசிப்பான் மற்றொரு வகையான பக்தன்.
இப்படிப்பட்ட பக்தர்கள், மிகவும் உயர்ந்தவர்கள்.
பகவானிடம் இவர்கள் எதையும் வேண்டி பக்தி செய்வதில்லை.
பகவானிடம் இவர்கள் கேட்பது "சேவை" மட்டுமே !
இப்படிப்பட்ட பக்தர்களுக்காக, சர்வ சக்தி உடைய பகவான், சக்தி அற்றவர் போல சில சமயங்களில் இருக்கிறார்.
ஹனுமான் "தனக்காக சஞ்சீவினி மலையையே தூக்கி வந்து விடுவார்", என்று உலகுக்கு காட்ட, தான் மயங்கி கிடந்தார்.
அது போல,
இன்று, பல கோவில்களில், இப்படிப்பட்ட உயர்ந்த பக்தர்களை எதிர்பார்த்து, பகவான் காத்து கொண்டு இருக்கிறார்.
கோவில்கள் இடிந்தும், தீபம் ஏற்றப்படாமலும், நல்ல வஸ்திரம் கூட இல்லாமலும், உற்சவங்கள் நடக்காமலும் பல ஆயிரம் கோவில்கள் உள்ளன.
ஹநுமானை போன்றும், கருடனை போன்றும் சேவை செய்யும் பக்தர்கள் இன்று ஒவ்வொரு கோவிலுக்கும் தேவை.
சுக்ரீவன் போலவும், விபீஷணன் போலவும் நாம் இருந்தது போதும்.
நம்மால் முடிந்த அளவுக்கு, ஒரு கோவிலையாவது எடுத்து கொண்டு, உற்சவங்கள், பூஜைகள் நடக்க செய்வோம்.
ஹனுமான் போலவும், கருடனை போலவும், பிரகாசிப்போம்.
No comments:
Post a Comment