திருவேங்கடமுடையானை தரிசிப்பதால், நம் அனைவருக்கும் ஏற்படும் பாக்கியம் என்ன?
திருமழிசை ஆழ்வார் "உள்ளுவார் உள்ளத்து" என்ற பதத்தின் மூலம், நமக்கு பதில் சொல்கிறார்...
"உள்ளுவார் உள்ளத்து" என்ற பதத்திற்கு அர்த்தத்தை பெரியவாச்சான் பிள்ளை சொல்லும் போது,
திருவேங்கடமுடையானை தரிசித்த பாக்கியம் பெற்ற பிறகு, நாம் தனியாக முயற்சி செய்து பகவானை நம் நெஞ்சில் புகுத்தி கொள்ள வேண்டிய அவசியமே இல்லையாம்.
திருவேங்கடமுடையானை நாம் பார்த்த மாத்திரத்திலேயே, எம்பெருமானே ஆசையோடு நம் உள்ளத்தில் வலிய வந்து புகுந்து அமர்ந்து கொள்ள ஓடி வருவாராம் ("உள்ளுவார் உள்ளத்து")
அத்தனை ஆசையோடு நம் நெஞ்சில் புக வரும் எம்பெருமானை, "நான்" என்ற அகம்பாவத்தோடு, நாம் எம்பெருமானை தடுக்காமல் இருந்தாலேயே போதுமாம்.
"நான்" என்ற இந்த அகம்பாவம் தானே, நம் நெஞ்சில் எம்பெருமானை அமர விடாமல் செய்கிறது!
இந்த அகம்பாவத்தை நாம் விட்டொழித்து, அவரை நம் உள்ளத்தில் அமர அனுமதித்தாலேயே போதுமாம். எம்பெருமான் தானாகவே நம் நெஞ்சில் அமர்ந்து விடுவாராம்.
"அகம்பாவம் இல்லாமல் ஸ்ரீனிவாச பெருமாளை பார்த்த என் நல்-நெஞ்சே ! உள்ளத்தில் புகுந்து கொண்டு இருக்கும் எம்பெருமானை பார் (உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்)"
என்று பாடுகிறார் திருமழிசை ஆழ்வார்.
திருமழிசை ஆழ்வார் (நான்முகன் திருவந்தாதி) பாடுகிறார்...
உளன் கண்டாய் நன்நெஞ்சே!
உத்தமன் என்றும் உளன்கண்டாய்!
உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்!
தன் ஒப்பான் தானாய் உளன் காண் தமியேற்கும்,
என் ஒப்பார்க்கு ஈசன் இமை
குருநாதர் துணை
No comments:
Post a Comment