Followers

Search Here...

Monday, 7 December 2020

ஆபஸ்தம்ப ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே.. "ஆபஸ்தம்ப" என்றால் என்ன அர்த்தம்? நம் ரிஷிகளின் பெருமையை...

ஒரு சமயம், 
வேதம் கற்ற ப்ராஹ்மணர் ஒருவர் தன் கிரஹத்தில் ஸ்ராத்தம் (திவசம்) செய்தார். 
  
பித்ருக்களுக்கு கொடுக்கும் உணவை ஏற்று, போஜனம் செய்விக்க ஒரு பிராஹ்மணருக்காகக் காத்திருந்தார்.

வெகு நேரம் கழித்து ஒரு பிராஹ்மணர் வந்தார். 
அவர் நல்ல பசியுடன் இருந்தார். 
அவரை அமர்த்தி இலை போட்டு, தானே பரிமாறினார் கர்தா. 

வந்த பிராஹ்மணர், சாதாரண மனிதர்களைக் காட்டிலும் அதிகமாகச் சாப்பிட்டார். 




"ப்ராஹ்மணனுக்கு நல்ல பசிபோலும்" 
என்று எண்ணி இவரும் கேட்கக் கேட்கப் போட்டார். 

போடப் போட அனைத்தும் ஒரு நொடியில் காலியாயிற்று!

கர்தாவின் கண்களில் முதலில் இருந்த 'வினயம்' மறைந்து 'ஏளனம்' குடிகொண்டது. 
அதைத் தன் செயல்களிலும் காட்டினார். 

அதைப் பொருட்படுத்தாத அதிதி 'இன்னும் போடு!¸ 'இன்னும் போடு!' என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

"அபரிதமாக உண்டும் திருப்தியடையாமல் தனக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுக்க இவர் வந்திருக்கிறார்" 
என்று கர்தா நினைத்தார். 

சமைத்தவை எல்லாம் காலியாகிவிட்டன! 

'இன்னும் வேண்டும்! கொண்டு வா!' 
என்று பிராஹ்மணர் கேட்கவே கர்தாவுக்குக் கோபம் வந்துவிட்டது. 

காலியான சமையல் பாத்திரத்தைக் கொண்டுவந்து பிராஹ்மணரின் இலையின் மேல் கவிழ்த்து 'திருப்தியாயிற்றா!?' 
என்று கேட்டார். 

(போஜனம் முடிந்தபோது கர்தா பிராஹ்மணர்களை 'த்ருப்தாஸ்தா' என்று கேட்கவேண்டும். 
திருப்தியடைந்த ப்ராஹ்மணர்கள் 'த்ருப்தாஸ்ம:' என்று சொல்ல வேண்டும்.
அப்பொழுதுதான் ஸ்ராத்தம் நல்ல முறையில் பூர்ணமடைந்தது என்று அர்த்தம்) 

ஆனால் அந்த பிராஹ்மணர் 'ந' ('எனக்கு திருப்தி இல்லை') என்று சொன்னார்! 
 
கர்தாவுக்கு கோபம் தலைக்கேறியது. 
'இவர் கேட்க கேட்க கொண்டு வந்து கொட்டினேனே! 
மலை போல உணவுப் பண்டங்களைத் தின்றுவிட்டு திருப்தி இல்லை! என்று சொல்லி, என்னை அவமானப்படுத்தி, 
நான் செய்த ஸ்ராத்தத்தையும் இந்த பிராஹ்மணர் கெடுத்துவிட்டாரே!!' 
என்று சினந்தார். 

கர்தா நல்ல தபஸ்வி. 

கோபத்தால் முகம் சிவந்த அவர், சாபம் கொடுக்க, கையில் ஜலத்தை எடுத்து அபிமந்திரித்து பிராஹ்மணரின் தலையில் எறிந்தார். 

அப்பொழுது தான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. 

வந்த பிராஹ்மணர் தன் கை அசைவினால் அபிமந்திரித்து எறிந்த ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தினார்! 

கர்தா இதைப் பார்த்து பிரமித்து நின்றார். 

தான் எறிந்த நீரை அந்தரத்தில் நிறுத்திய அவர் சாதாரண மனிதர் அல்ல¸ தன்னை விட உயர்ந்தவர் என்பதை அறிந்தார். 

'பூஜ்யரே! நீங்கள் யார்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்கள்?' 
என்று கேட்டார்.

அதற்கு அந்த பிராஹ்மணர், 
'நான் ஒரு முனிவன். நான் அதிகம் உண்டதால் என்னை ஏளனம் செய்தாய்.
உன் பார்வைகளாலும், செயல்களாலும் என்னை அவமதித்தாய்.

'ஸ்ராத்தத்திற்கு வரும் பிராமணர்களிடம் உன் மூதாதையர்களின் ஒரு அம்சத்தை வைத்து பகவான் அனுப்புகிறான்' 
என்பதை மறந்து நீ நடந்து கொண்டாய்.

உனக்கு புத்தி புகட்டவே நான் இப்படி நடந்து கொண்டேன். 

'ஸ்ரார்த்தம்' என்றாலே 'சிரத்தை' (ஈடுபாடு) என்று அர்த்தம்.
உன் தகப்பனுக்கு செய்ய, எத்தனை ஈடுபாட்டுடன் நீ இருக்கிறாய், என்பதே முக்கியம்.
எத்தனைக்கு எத்தனை சிரத்தையுடன் செய்கிறாயோ, அத்தனைக்கு அத்தனை பலன் பித்ருக்களிடமிருந்து உனக்கு கிடைக்கிறது.

ஸ்ராத்தத்தை பய பக்தியுடன் கோப தாபங்களை விட்டுச் செய்!' 
என்றார். 

அதற்குக் கர்தா¸ 
'ஸ்வாமி! என் தவறை நான் உணர்ந்து கொண்டேன். க்ஷமியுங்கள். 
இனி இம்மாதிரித் தவறுகளைச் செய்யமாட்டேன். 
நான் செய்த ஸ்ராத்தம் பூர்ணமாகவில்லையே! 
அதற்கு என்ன செய்ய வேண்டும்?' 
என்று வினவினார். 

அதற்கு அந்த பிராஹ்மணர்¸
"நான் 'ந' என்று சொல்லி ஸ்ராத்தம் பூர்ணமாகாமல் இருக்கிறது. 
புருஷ சூக்தம் பாராயணம் செய்! 
இந்த தோஷம் பரிகாரம் ஆகும்!" 
என்றார். 




அதை பாராயணம் செய்து ஸ்ராத்தத்தை முடித்தார் கர்தா.

ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தியதால், அவரை "ஆபஸ்தம்பர்" என்று அழைத்தார்கள். 

ஸ்ராத்த காலத்தில், புருஷ சூக்தமும், காடகோபநிஷத்தும் பாராயணம் செய்யும் நியமம் இருக்கிறது. 

"ஆப" என்றால் நீர்
நீரை ஸ்தம்பிக்க வைத்து அந்தரத்தில் நிறுத்தியதால் அவர் ஆபஸ்தம்பரானார்
ஆபஸ்தம்பரின் சூத்ரம் பிரசித்தமானது. 

அதில் சில சூத்திரங்களை தெரிந்து கொள்ள, இங்கே படிக்கலாம்.

No comments: