Followers

Search Here...

Thursday, 31 December 2020

சீதாதேவி உண்மையை சொல்ல மறுத்த தருணம். தர்ம சூக்ஷ்மம் தெரிந்து கொள்வோம். வால்மீகி ராமாயணம்

 'பொய் பேச கூடாது' என்று தர்மம் பொதுவாக சொல்கிறது.

உண்மையை சொல்வதால், 'தர்மத்துக்கு ஆபத்து ஏற்படுமானால்' அந்த உண்மையை கூட மறைக்கலாம் என்று தர்மம் சூக்ஷ்மமாக சொல்கிறது.


இந்த தர்ம சூக்ஷ்மத்தை தான் ' ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பாரத போரில் செய்து காண்பித்தார். 


த்ரேதா யுகத்திலேயே, சீதா தேவியே இந்த தர்ம சூக்ஷ்மத்தை செய்து காட்டி இருக்கிறாள்.  

இதை பார்க்கும் போது, 'தர்மத்தில் இருப்பவர்களை, நாம் எக்காரணம் கொண்டும் ஆபத்தில் சிக்க வைத்துவிட கூடாது'

என்று தெரிகிறது..


இதை ஹிந்துக்கள் கவனிக்க வேண்டியது மிக அவசியம்.





தேவைப்பட்டால், தர்மத்தை காக்க, தர்மத்தில் உள்ளவர்களை காக்க,  பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், 'உண்மையை மறைக்கலாம்' என்று தர்ம சூக்ஷ்மத்தை விளக்கும் நிகழ்வை அறிந்து கொள்வோம்.


ஹனுமான் கடலை தாண்டி, 

யாரும் பார்க்க முடியாதபடி, கட்டை விரல் ரூபத்துடன் சீதாதேவியை தரிசித்து பேசி,

சமாதானம் செய்து, 

ராமபிரானின் அடையாளங்களை சொல்லி, 

ராம தூதன் என்ற நம்பிக்கையும் பெற்று, 

ராமபிரான் கொடுத்த மோதிரத்தை காண்பித்து, 

சீதா தேவியை சந்தித்ததற்கு அடையாளமாக சூடாமணியையும் பெற்று,

சீதாதேவியிடம் விடைபெற்று கிளம்ப தயாரானார்.


கடலை கடந்து ராமபிரானை பார்ப்பதற்கு முன், ராவணனின் ராக்ஷஸ படை பலத்தை அறிய நினைத்தார் ஹனுமான். முடிந்தால் ராவணனை பார்த்து விட்டு கூட செல்லலாம் என்று முடிவு செய்தார்.


தான் இருந்த அசோகவனத்தின் ஒரு பகுதியை நாசம் செய்து ராக்ஷஸிகளின் கவனத்தை தன்னிடம் திருப்பினார்.


மரங்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு, குளங்கள் கலங்கி, மலைகள் பொடி பொடியாகி கிடக்க, அங்கு இருந்த விலங்குகளும், பறவைகளும் சிதறி ஓட, அதிகாலை உறக்கத்தில் இருந்த ராக்ஷஸிகள் எழுந்தனர்.

அசோக வனமே தரைமட்டமாகி கிடக்க, அங்கே மலை போல ஒரு வானரன் நிற்பதை பார்த்தனர்.


ஹனுமான் உயிர் பறிக்கும் பயங்கர பெரிய ரூபத்துடன் காட்சி கொடுக்க, ராக்ஷஸிகள் சீதா தேவியிடம்

"யார் இவன்? யாரால் அனுப்பட்டவன்? இப்பொழுதே சொல்! 

இவனிடம் நீ என்ன பேசினாய்? பயப்படாமல் சொல்.."

என்று கேட்க,

அத அப்ரவீத் ததா சாத்வீ 

சீதா சர்வாங்க சோபனா |

ரக்ஷஸாம் காம ரூபானாம் 

விஞானே மம கா கதி: ||

- வால்மீகி ராமாயணம்

अथ अब्रवीत् तदा साध्वी सीता सर्वाङ्ग शोभना |

रक्षसां कामरूपाणां विज्ञाने मम का गतिः ||

- वाल्मीकि रामायण

இப்படி ராக்ஷஸிகள் கேட்க, சாத்வீகமே உருவான சீதாதேவி, "ராக்ஷஸர்களை பற்றி எனக்கு என்ன தெரியும்?


யூயம் ஏவ அஸ்ய ஜானீத 

யோயம் யத்வா கரிஷ்யதி |

அஹிரேவ அஹே: பாதான்வி 

ஜானாதி ந சம்ஸய: ||

- வால்மீகி ராமாயணம்

यूयम् एव अस्य जानीत योऽयं यद्वा करिष्यति |

अहिरेव अहेः पादान्विजानाति न संशयः ||

- वाल्मीकि रामायण

ராக்ஷஸர்களில் யார் என்ன செய்வார்கள் என்று உனக்கு தானே தெரியும். பாம்புக்கு தானே எலி போன பாதை தெரியும்.





அஹம் அப்யஸ்ய பீதாஸ்மி 

நைனம் ஜானாமி கோன்வயம் |

வேத்மி ராக்ஷஸமேவைனம் 

காமரூபினம் ஆகதம் ||

- வால்மீகி ராமாயணம்

अहमप्यस्य भीतास्मि नैनं जानामि कोऽन्वयम् |

वेद्मि  राक्षसमेवैनं कामरूपिणम् आगतम् ||

- वाल्मीकि रामायण

எனக்கும் இவர் யார் என்று தெரியாது. நானும் இவரை பார்த்து பயப்படுகிறேன். இவரும் ஒரு ராக்ஷஸனோ, உருமாறி வந்து இருக்கிறாரோ என்று தான் நான் நினைக்கிறேன்."

என்று சீதாதேவி சொல்ல, 

ஹனுமானின் பெரிய ரூபத்தை கண்டு பயந்த ராக்ஷஸிகள், அலறியடித்து கொண்டு நாற்புறமும் அங்குமிங்கும் ஓடினார்கள்.


சிலர், ராவணனிடம் விஷயத்தை சொல்ல ஓடினார்கள்.


இப்படி சீதா தேவி, தர்மத்துக்காக கடல் கடந்து வந்த ஹனுமானை காக்க, உண்மையை சொல்ல மறுத்து, தர்ம சூக்ஷ்மத்தை நமக்கு காட்டினாள்.

No comments: