ஹனுமான், சீதா தேவியை தேடி இலங்கைக்கு வந்து விட்டார்.
பாதி இரவு முழுக்க தேடியும் சீதா தேவி எங்கு இருக்கிறாள்? என்று கண்டுபிடிக்க முடியாமல் தவித்தார்.
"தற்கொலை செய்து கொண்டு விடலாமா?" என்று கூட நினைத்து விட்டார் ஹனுமான்.
"கஷ்டம் வரும் சமயத்தில், உற்சாகத்தை இழப்பவன் தான், தற்கொலை செய்து கொள்வான்" என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டார்.
"உற்சாகத்துடன் மீண்டும் தேடுவோம்" என்று மீண்டும் பல இடங்களில் தேடி பார்த்தார்.
அப்பொழுதும் சீதா தேவி இருக்குமிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
"தன் முயற்சியும் வீணாகி விட்டது.
உற்சாகமும் பலனளிக்கவில்லை" என்றதும், மீண்டும் சோகத்தில் மூழ்கினார் ஹனுமான்.
புஷ்பக விமானம் இருந்த இடத்தில் இருந்த மதில் சுவரில் வந்து அமர்ந்தார்.
'இலங்கை முழுவதும் தேடியும் சீதா தேவியை காண முடியவில்லையே!!
தடாகங்கள், நதிகள், வனங்கள், மலைகளில் தேடியும் தேவியை காண முடியவில்லையே!!
சம்பாதி, ராவணன் அரண்மனையில் சீதா தேவி இருப்பாள் என்று சொன்னாரே!
அங்கும் சீதாதேவி காணப்படவில்லையே!
ராம பானத்துக்கு பயந்து, ராவணன் ஒளிந்து இருந்து சீதா தேவியை கடத்தி சென்ற போது, ஒருவேளை விமானத்தில் இருந்து விழுந்து விட்டாளோ?
கடல் கடந்து விமானத்தில் சென்ற போது, இதயம் வெடித்து சீதா தேவி கடலில் விழுந்து விட்டாளோ?
அல்லது,
ராவணனிடமிருந்து தன்னை காத்து கொள்ள, தானே கடலில் குதித்து விட்டாளோ?
அல்லது,
நர மாமிசம் சாப்பிடும் இந்த ராக்ஷஸ, ராக்ஷஸிகள் சீதா தேவியை தின்று விட்டார்களோ?
(அதவா ராக்ஷஸேந்த்ரஸ்ய பத்னீபி: அசிதேக்ஷனா | அதுஷ்டா துஷ்ட பாவபி: பக்ஷிதா ஸா பவிஷ்யதி || - வால்மீகி ராமாயணம்)
அல்லது,
ராமபிரானை தியானித்து கொண்டே சீதா தேவியின் உயிர் பிரிந்து விட்டதோ?
ஹா ராமா! ஹா லக்ஷ்மணா! ஹா அயோத்தியா! என்று ஒருவேளை சீதா தேவியின் உயிர் உடலை விட்டு பிரிந்து விட்டதா?
சீதா தேவி உயிரை பிரிந்து விட்டதா? அல்லது தொலைந்து விட்டாளோ?
நான் ராமபிரானிடம் இதை எப்படி சொல்வேன்?
நான் ராமபிரானிடம் சீதையை காணவில்லை என்று சொன்னாலும் விபரீதமாகும்..
சொல்லாவிட்டாலும் தவறாகிவிடும்.
நான் எப்படி இந்த நிலைமையை சமாளிக்க போகிறேன்?
ஒருவேளை நான் கிஷ்கிந்தை திரும்பினாலும், என்ன சாதித்தேன் என்று சுக்ரீவ மஹாராஜனிடம் சொல்லுவேன்?
இந்த கடலை கடந்து, இலங்கையில் நுழைந்து, இந்த ராக்ஷஸர்களை பார்த்தும் ப்ரயோஜனமில்லாமல் போய் விட்டதே!!
(மமேதம் லங்கனம் வ்யர்தம் சாகரஸ்ய பவிஷ்யதி | ப்ரவேஷ்சைவ லங்காய ராக்ஷஸானாம் ச தர்சனம் - வால்மீகி ராமாயணம்)
சீதா தேவியை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினால் ராமபிரான் உயிர் விட்டு விடுவாரே!
(கத்வா து யதி காகுத்சம் வக்ஷ்யாமி பரம ப்ரியம் | ந த்ருஷ்டதே மயா சீதா தத: த்யக்ஷதி ஜீவிதம் || - வால்மீகி ராமாயணம்)
அதை பார்த்து லக்ஷ்மணன் உயிர் விடுவாரே.
அதை பார்த்து,
அயோத்தியில் இருக்கும் பரதனும், சத்ருக்னனும் உயிர் விடுவார்களே!
இதை கண்டு அவர்கள் தாயார் அனைவரும் உயிர் விடுவார்களே!
அதை கண்டு அயோத்தி மக்கள் உயிர் விடுவார்களே!
நண்பனுக்கு பதில் செய்ய முடியாமல் போனதே! என்று சுக்ரீவ மகாராஹா உயிர் விடுவாரே!.
அதை கண்டு அவர் மனைவி 'ருமா' உயிர் விடுவாளே!
கணவனும் இல்லை, இப்போது வானர அரசன் சுக்ரீவனும் இல்லை என்றதும் தாராவும் உயிர் விடுவாளே!.
இதை கண்டு வாலியின் பிள்ளை அங்கதனும் உயிர் விடுவானே!
வானர ராஜனை உயிருக்கும் மேலாக நினைக்கும் வானரர்கள் தங்கள் கைகளாலேயே தன் தலையை அடித்து உடைத்து கொண்டு உயிர் விடுவார்களே!
வானர பெண்கள் தங்கள் குழந்தைகளோடு மலையிலிருந்து குதித்தும், விஷம் அருந்தியும், அக்னியில் இறங்கியும் உயிர் விடுவார்களே!..
(சபுத்ர தாரா: சாமாத்யா பர்த்ரு வ்யசன பீடிதா: | சைலாக்ரேப்ய: பதிஷ்யந்தி சமேத்ய விஷமேஷு ச || - வால்மீகி ராமாயணம்)
இத்தனை நாசம் என்னால் ஏற்படுவதற்கு பதில், நாமே இங்கு உயிரை விட்டு விடுவோம்.."
என்று நினைத்து விட்டார் ஹனுமான்.
பலத்திற்கு தைரியத்துக்கு பெயரெடுத்த ஹனுமான், தன் முயற்சியும், உற்சாகமும் பலனிக்கவில்லை என்ற நிலையில், உயிர் விட்டு விடலாமா? என்று நினைத்தார் என்பதை கவனிக்க வேண்டும்.
இங்கு, 'மனித முயற்சியும்' கைகொடுக்கவில்லை, 'உற்சாகமும்' கைகொடுக்கவில்லை ஹனுமானுக்கு.
புத்திக்கு பெயரெடுத்த ஹனுமான், தன் முயற்சியும், உற்சாகமும் கைவிட்டபோது, கடைசியாக இந்த நிலையில்,
'இனி தெய்வம் தான் தனக்கு கைகொடுக்க வேண்டும்' என்று முடிவு செய்தார்.
நாராயணனும், மஹாலக்ஷ்மியும், ஆதிசேஷனுமான, ராம, சீதா, லக்ஷ்மணனை, மனதால் நமஸ்கரித்தார்.
(நமோஸ்து ராமாய ச லஷ்மணாய தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை - வால்மீகி ராமாயணம்)
'மனித முயற்சிக்கும் கிடைக்காத சில விஷயங்கள், தெய்வ அருள் மூலம் கிடைக்கிறது' என்று இங்கு நமக்கு உணர்த்துகிறார்.
'சீதாதேவியே தான் இருக்குமிடத்தை காட்டட்டும்' என்று சீதாதேவியை ராமபிரானோடு சேர்த்து பிரார்த்தித்த ஹனுமானுக்கு, உடனே அதுவரை கண்ணில் படாத 'அசோக வனம்' தென்பட்டது.
அங்கு சென்று பார்த்த ஹனுமான், சீதா தேவியை முதன் முதலாக தரிசித்தார்.
புழுதி படர்ந்த ஆடையுடன், ராக்ஷஸிகள் சூழ சீதா தேவி அமர்ந்து இருந்தாள்.
பல மாதங்கள் சாப்பிடாமல் இருந்ததால் சீதா தேவி மெலிந்து இருந்தாள்.
பெருமூச்சு விட்டு கொண்டு இருந்த சீதா தேவியின் முகம், அந்த இரவிலும் குளுமையான நிலவு போல பிரகாசித்தது.
மெதுவாக ஒவ்வொரு மரமாக தாவி அருகில் செல்ல செல்ல, சீதா தேவியின் தரிசனம் தெளிவாக தெரிந்தது ஹனுமானுக்கு.
சீதா தேவியின் பேரழகு அங்கு பிரதிபலித்தது.
அதே சமயம், வெளியில் புகை போல காட்டிக்கொண்டு, உள்ளே வேள்வி தீ போல இருந்தாள் சீதா தேவி.
தாமரை பூக்கள் இல்லாத, கலங்கி போன தாமரை தடாகம் போல இருந்தாள் சீதா தேவி.
பெரும் சோகத்தில் ஆழ்ந்து இருந்தாள் சீதா தேவி.
வாடி போய் இருந்தாள்.
கற்புடையவளாக இருந்தாள்.
கண்களில் கண்ணீருடன் காணப்பட்டாள் சீதா தேவி.
மிகவும் மெலிந்து காணப்பட்டாள்.
தவத்தில் இருப்பவள் போல இருந்தாள்.. ஏழையாக காணப்பட்டாள்.
பெரும் ஆபத்தில் இருந்தாள்.
சீதா தேவியை சுற்றி ராக்ஷஸிகள் சூழ்ந்து இருந்தனரே தவிர, இவளுக்காக நிற்பவர் யாருமில்லை.
சீதா தேவியின் கருமையான தலை கேசம் அவள் கால்முட்டி வரை படர்ந்து இருந்தது.. அதை பார்க்க கரு நாகம் போல இருந்தது.
ஆனந்தமாக வாழ வேண்டிய சீதா தேவி, பெரும் துயரில் இருந்தாள்.
'இது போன்ற நிலையை அனுபவிப்போம் 'என்று சீதா தேவி அனுமானம் செய்து கூட பார்த்து இருக்க மாட்டாள்.
'இப்படி பெரும் சோகத்தில் காணப்படும் இவள், சீதா தேவியாக தான் இருக்க முடியும்' என்று ஹனுமான் தனக்குள் தீர்மானம் செய்து கொண்டார்.
மேலும், 'இந்த ராவணன் அன்று கடத்தி சென்ற தேவியை தான் இன்று இங்கு பார்க்கிறேன்' என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டார்.
மேலும்,
சீதா தேவியின் தாமரை போன்ற முகத்தையும்,
உயர்ந்த பெண்மணியின் லக்ஷ்ணத்தையும்,
அவளிடமிருந்து வெளி வரும் ப்ரகாசத்தையும்,
கருமையான கேசத்தையும், சிவப்பான உதடையும்,
மெலிந்த இடையையும்,
ரதி போன்ற ரூபத்தையும்,
உறுதியான கொள்கையுடன் இருக்கும் தவத்தையும்,
கொடிய விஷத்தை கக்கும் கருநாக பாம்பு போல மூச்சு விட்டு கொண்டு இருப்பதையும், பார்த்த ஹனுமான், தான் பார்ப்பது சீதா தேவியே!
என்று உணர்ந்து கொண்டார்.
ராமபிரான் சீதா தேவியை இழந்து துக்கப்படுகிறார்.
இங்கு சீதா தேவி ராமபிரானை பிரிந்து, மெலிந்து போய், ராமபிரானின் துக்கத்தையும் சேர்த்து கொண்டு, துக்கப்படுவதை கண்டார் ஹனுமான்.
பேராபத்தில் சிக்கிய பெண் மான் குட்டி, தன் அகன்ற கண்களால் அங்கும் இங்கும் பார்ப்பது போல, சீதா தேவி பார்த்து கொண்டே அழுது கொண்டிருந்தாள்.
சீதா தேவியின் முகம் வெளிர்த்து போய் இருந்தது.
கருமேகங்கள் அழகிய சந்திரனை சூழ்ந்து இருப்பது போல, சீதா தேவியின் மீது புழுதி படர்ந்து இருந்தது.
கலாச்சாரமுள்ள ஒருவனை, கலாச்சாரமில்லாமல் வாழும் கூட்டத்தில் வாழ வைத்தது போல, சீதா தேவி காணப்பட்டாள்.
ஹனுமான் சீதா தேவியின் நிலையை கண்டு பெரிதும் துக்கப்பட்டார்.
இவள் சீதா தேவியே! என்று உறுதி கொண்டார்.
ராவணன் சீதா தேவியை தூக்கி சென்ற போது தூக்கி எறிந்த ஆபரணங்களை தவிர, அவள் அணிந்து இருந்த தோடுகள், கைகளில் அணிந்து இருந்த வைர ஆபரணங்களை பற்றி ராமபிரான் சொன்னது நினைவுக்கு வந்தது.
ராமபிரான் சொன்ன அதே ஆபரணங்கள் தேவியிடம் காணப்பட்டது.
பலநாட்கள் இதை சுத்தம் செய்யாததால், அழுக்கு படிந்து பார்க்க கருப்பாக இருந்தது.
ராமபிரான் சொன்ன ஆபரணங்கள் காணப்பட்டதும், 'தான் காண வந்த சீதா தேவி இவள் தான்' என்று முடிவுக்கு வந்தார்.
ராமருக்கு பிரியமான சீதா தேவி இவள் தான்.
இத்தனை காலங்கள் சீதா தேவியை தொலைத்து இருந்தாலும், ராமபிரான் சீதா தேவியை தன் இதயத்திலிருந்து தொலைக்கவில்லை.
தான் கண்ட ராமபிரான், சீதா தேவியை தொலைத்து, நான்கு துக்கங்களை ஒரு சேர அனுபவித்தாரே!! என்று நினைத்து பார்த்தார் ஹனுமான்.
(இயம் ஸா யத்க்ருதே ராம: சதுர்பி: பரிதப்யதே - வால்மீகி ராமாயணம்)
1.
சீதாதேவி ஒரு பெண், என்ற ரீதியில், அவள் படும் துக்கத்தை நினைத்து இரக்கம் கொண்டு அழுதார்.
2.
சீதாதேவி தன்னை நம்பி காட்டுக்கு வந்தவள், என்ற ரீதியில், அவள் படும் துக்கத்தை நினைத்து பெரும் சோகத்தில் அழுதார்.
3.
சீதாதேவி என் மனைவி, என்ற ரீதியில், அவள் படும் துக்கத்தை நினைத்து, அவள் நல்லொழுக்கத்திற்கு வந்த ஆபத்தை நினைத்து அழுதார்.
4.
சீதாதேவி தன் பிரியமான காதலி, என்ற ரீதியில், அவள் படும் துக்கத்தை நினைத்து, அழுதார்.
இப்படி பெரும் துக்கத்தில் இருக்கும் ராமபிரான் நினைவு ஹனுமானுக்கு வர, அதே சமயம் சீதா தேவியின் நிலையை கண்ட போது, ராமபிரானின் துக்கத்தை போலவே, சீதா தேவியின் துக்கமும் காணப்பட்டது.
இருவரது சோகமும் ஒன்று போல காணப்பட்டது.
சீதாதேவியின் இதயத்தில் ராமபிரான் இருப்பதும்,
ராமபிரான் இதயத்தில் சீதாதேவி இருப்பதும் ஹனுமானுக்கு புரிந்தது.
(அஸ்யா தேவ்யா மன: தஸ்மின் தஸ்ய ச ஆஸ்யாம் பிரதிஷ்டிதம் - வால்மீகி ராமாயணம்)
"ராமபிரானின் இதயம் சீதா தேவியிடம் இருந்ததால் தான், ராமபிரான் இன்றுவரை ஜீவிக்கிறார்.
(தேநேயம் ச ச்ச தர்மாத்மா முகூர்த்தம் அபி ஜீவதி - வால்மீகி ராமாயணம்)
இப்படிப்பட்ட சீதையை விட்டு, ராமபிரான் ஜீவித்து இருப்பது நடக்காத காரியம்.
இந்த சீதா தேவி இல்லாமலும், ராமபிரான் ஜீவிக்கிறார்.
சோககடலில் மூழ்கி விடாமல், உயிரை உடலில் இவர் தரித்து கொண்டு இருக்கிறாரே!!
இதற்கு காரணம், ராமபிரானின் இதயம் சீதாதேவியிடம் அல்லவா உள்ளது.."
என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.
சீதாதேவியை கண்ட பேரானந்தத்தில், ராமபிரானின் பெருமையையும், சீதா தேவியின் பெருமையையும் தனக்குள் சொல்லி சொல்லி ஆனந்தப்பட்டார்.
பிறகு, சீதா தேவியிடம் பேச சரியான காலத்தை எதிர்நோக்கி காத்து இருந்து, சீதாதேவியை தரிசித்தார்.
குருநாதர் துணை
No comments:
Post a Comment