"காலத்துக்கும், தேசத்துக்கும், பொருளுக்கும் அப்பாற்பட்டவரே! பரமாத்மா"
என்று வேத சாஸ்திரம் கூறுகிறது.
இந்த மூன்றுக்கும் அப்பாற்பட்டு இருப்பதாலேயே, பரமாத்மாவை ஒரு பொருளுக்குள், தேசத்துக்குள், காலத்துக்குள் அடைக்க முடியாது.
ஆதலால், "பரமாத்மாவை எனக்கு காட்டு" என்று ஒருவன் கேட்டால், "அவனுக்கு காட்ட முடியாது"என்று சொல்வதற்கு காரணமே இதுதான்.
பரமாத்மாவை "அனுமானத்தாலும்" தெரிந்து கொள்ள முடியாது.
காரணம்,
நம் அனுமானத்துக்கும், அப்பாற்பட்டவர் பரமாத்மா.
நாம் பொதுவாகவே ஒரு 'காரியத்தை' பார்த்து தான், 'காரணத்தை' அனுமானம் செய்கிறோம்.
'வீடு' என்ற ஒரு காரியம் கண் எதிரே இருப்பதை பார்த்து, 'யாரோ ஒருவர் இதை முன்பு கட்டி இருக்கிறார்'
என்று அனுமானிக்கிறோம்.
ஆனால்,
ஜீவாத்மாவின் அனுமானம் அனைத்துமே சரியாகவும் இருக்க முடியாது.
நம் 'புத்திக்கு எட்டிய அளவு தான் அனுமானமும்' உண்டாகிறது.
ஒருவனின் அனுமானம் பிற்காலத்தில் தவறு என்று கூட நிரூபிக்க படலாம்.
"உலகம் தட்டை' என்று ஒரு அந்நிய மதம் அனுமானித்தது.
கலிலியோ 'உலகம் உருண்டை' என்று அனுமானித்தார். அதற்காக அவரை தண்டித்தார்கள்.
பிற்காலத்தில்,
'உலகம் உருண்டை தான்' என்று நிரூபிக்கப்பட, மனித அனுமானங்களால் உருவாக்கப்பட்ட மத கொள்கைகள் நகைப்பு உரியதானது.
மனித அனுமானங்கள், அந்தந்த காலத்தை அனுசரித்தோ, தேசத்தை அனுசரித்தோ, பொருளை அனுசரித்தோ நிர்ணயிக்கப்படுகிறது.
காலம் மாறும் போது,
தேசம் மாறும் போது,
பொருள் (வஸ்து) மாறும் போது,
மனித அனுமானங்கள் மாறுபடகூடும்.
இப்படி இருக்க, அனுமானத்தை கொண்டு, 'இவர் தான் பரமாத்மா' என்று மனித புத்தியை கொண்டு, எழுதப்பபட்ட போலி மதங்களை கண்டு ஏமாற கூடாது.
நம்முடைய புத்தியோ "அளவு உடையதாக' இருக்கிறது.
பரமாத்மாவோ 'அளவற்று' இருக்கிறார்.
அளவுடைய நம் புத்தியால், அளவில்லாத பரமாத்மாவை
எப்படி அனுமானிக்க முடியும்?
'அளவில்லாத பரமாத்மாவை நாம் புரிந்து கொள்ள முடியாது' என்பது உண்மை என்றாலும்,
'அந்த பரமாத்மா அளவிடமுடியாதவர், காலத்துக்கும், தேசத்துக்கும், பொருளுக்கும் அப்பாற்ப்பட்டவர்' என்ற அளவுக்காவது நாம் தெரிந்து கொண்டாலே, பரத்துவ ஞானம் நமக்கு உண்டாக ஆரம்பித்து விடும்,
'நம்முடைய புத்தியால் தெரிந்து கொள்ள முடியாதவர் பரமாத்மா' என்று தெரிந்து கொண்டாலே போதுமானது.
உன்னுடைய கண்ணை கொண்டு அந்த பரமாத்மாவை பார்க்க முடியாது.
ஆனால்,
'உன் கண்ணுக்கு பார்க்கும் சக்தியை கொடுத்ததே அந்த பரமாத்மா தான்' என்று நீ புரிந்து கொண்டாலே போதும்.
உன்னுடைய காதை கொண்டு அந்த பரமாத்மாவை கேட்க முடியாது.
ஆனால்,
'உன் காதுக்கு கேட்கும் சக்தியை கொடுத்ததே அந்த பரமாத்மா தான்' என்று புரிந்து கொண்டாலே போதும்.
எந்த பரமாத்மா உள்ளே இருப்பதால், உன் கண் பார்க்கிறதோ, காது கேட்கிறதோ, நாக்கு சுவைக்கிறதோ, அந்த பரமாத்மாவை உன் கண்களால், காதால், நாக்கால் எப்படி பார்க்க, கேட்க, சுவைக்க முடியும்?
அதனால், 'பரமாத்மா நம் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்' என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
அப்படி எங்கும், எல்லாமுமாக, எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட, தனித்த சாட்சியாக, யாவரிடத்திலேயும் ஹ்ருதயத்தில் இருக்க கூடிய அந்த பரமாத்மா "சாஷாத் நாராயணனே" என்று சர்வ சாஸ்த்திரமும் சொல்கிறது.
வேதம் "நாராயணனே பரதெய்வம்" என்று சொல்வதை புரிந்து கொள்ளாதவர்கள், மோக்ஷம் அடையாமல் இருக்கிறார்கள்.
புரிந்து கொள்ளாததாலேயே, பரமாத்மாவை 'நாராயணன், விஷ்ணு' என்று சொன்னால், முப்பத்து முக்கோடி தேவர்களை போல 'அவரும் ஒரு தேவன்' என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
மனிதர்கள் நினைப்பது ஒருபுறம் இருக்கட்டும்..
தேவர்கள் கூட சில சமயம், விஷ்ணுவும் தன்னை போல ஒரு தேவன் தான் என்று நினைத்து விடுகிறார்கள்?
வைகுண்டத்தில் இருக்கும் பரமாத்மா நாராயணன், காலத்துக்கும், தேசத்துக்கும், வஸ்துவுக்கும் அப்பாற்பட்டவர் என்றாலும், எந்த வஸ்துவாகவும் வர கூடியவர், எந்த தேசத்திலும், எந்த காலத்திலும் இருப்பவர் என்பதால், சொர்க்க லோகத்தில் உள்ள தேவர்களை போல தானும் "விஷ்ணு" என்ற தேவனாகவும் (வஸ்துவாக) தன்னை க்ஷீராப்தியில் அவதரித்து கொண்டு விடுகிறார்.
"ஆதித்யாநாமஹம் விஷ்ணு:" என்று பகவத் கீதையில் "தேவர்களுக்குக்குள்ளே நான் விஷ்ணு என்ற தேவனாகவும் இருக்கிறேன்" என்று சொல்கிறார்.
அதுமட்டுமா,
"மனிதர்களுக்குள்ளே நான் ராமனாக இருக்கிறேன்" என்றும் ராம்பிரானே ப்ரம்ம தேவனை பார்த்து "ஆத்மாநம் மானுஷம் மன்யே" என்று சொல்கிறார்.
"மனிதனாக பரமாத்மா வந்து விட்டதால், ராமபிரான் மனிதன் தானே" என்று நினைப்பவர்கள் அஞானிகள்.
"தேவனாக வந்து விட்டதால், விஷ்ணுவும் மற்ற தேவர்களை போல தானே" என்று நினைப்பவர்களும் அஞானிகளே.
'எதற்கும் அப்பாற்ப்பட்டவர், எதிலும் இருப்பவர், எதுவாகவும் வரக்கூடியவர் பரமாத்மா'
என்று அறிந்து, அந்த பரமாத்மா நாராயணனை தியானம் செய்பவர்கள் மோட்சத்திற்கு தகுதி பெறுகிறார்கள்.
அந்த பரமாத்மா நாராயணன், ஆணா? பெண்ணா? இரண்டும் கலந்தவரா?
என்ற கேள்விக்கு வேதம் "ச ஏக: புருஷ:" என்று சொல்லும் போது
"அவர் ஒருவர் மட்டுமே ஆண்" என்று தீர்மானமாக சொல்கிறது.
மனிதர்களில், தேவர்களில், பறவைகளில் என்று அனைத்திலும் ஆண் வர்க்கம் உள்ளது.
இவர்களும் ஆண் தானே?
நாராயணன் மட்டுமே ஆண்!!
என்று என்ன காரணத்தால் வேதம் சொல்கிறது?
வேதம், புருஷ (ஆண்) என்பதற்கு சில லக்ஷணங்களை சொல்கிறது.
அது போல, பெண் என்பதற்கு 6 லக்ஷணங்களை சொல்கிறது.
(இதை பற்றி அறிய இங்கு படிக்கவும்..)
அனைத்து புருஷ லக்ஷணமும் பொருந்திய ஒரே புருஷன் அந்த நாராயணனே என்ற காரணத்தால், அவர் மட்டுமே ஆண் ("ச ஏக: புருஷ:") என்று வேதம் சொல்கிறது.
அவர் மட்டுமே ஆண் ("ச ஏக: புருஷ:") என்று வேத வாக்கியத்தை, அப்படியே தமிழில் பொருத்தி நம்மாழ்வார், திருவாய்மொழியில் நமக்கு கொடுக்கிறார்.
பரமாத்மா நாராயணனை சொல்லும் போது,
"ஆண் அல்லன், பெண் அல்லன், அல்லா அலியும் அல்லன்"
என்று சொல்கிறார்.
மேலோட்டமாக பார்க்கும் போது, நம்மாழ்வார் "பரமாத்மா ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை, அல்லது, அலியும் இல்லை"
என்று சொல்கிறார் என்றே தோன்றும்.
கவனித்து பார்த்தோமென்றால்,
"ச ஏக: புருஷ:" என்ற வேத வாக்கியத்தை அப்படியே தமிழில் சொல்வது புரியும்.
"ஆண் அல்ல, பெண் அல்ல, அல்லா அலியும் அல்ல"
என்று ஆழ்வார் கூறியிருந்தால், மேல் சொன்ன அர்த்தம் பொருத்தமாக இருக்கும்.
ஆனால், அவர் அப்படி சொல்லவில்லை ஆழ்வார்.
ஒரு ஆணை குறிப்பிடும் போது, "ன்" என்றும் (வந்தான்),
ஒரு பெண்ணை குறிப்பிடும் போது, "ள்' என்றும் (வந்தாள்),
மற்றவையை "அது" என்றும் (வந்தது),
தமிழில் சொல்லுவோம்.
இங்கு பாசுரத்தை கவனித்தால், தமிழில் உள்ள "ன்" என்ற ஆண் குறியீடை பயன்படுத்தி இருக்கிறார் ஆழ்வார்.
இதை கவனிக்கும் போதே,
பரமாத்மா "ஆண் தான்' என்று நிச்சயிக்கிறார்.
"ஆண் அல்லன்" என்ற சொல்லின் மூலம், 'நாம் காணும் ஆண் போல இல்லை இந்த ஆண்.
ஆண் என்ற இலக்கணத்தில் முழுவதுமாக பொருந்தி இருக்கும் ஒரே ஆண் இவர்' என்று வேத வாக்கியத்தை அப்படியே தமிழில் நமக்கு கொடுக்கிறார்.
ஆழ்வார்களின் தமிழை, ஒரு தமிழன் உணர்ந்து படித்தாலேயே தமிழ் அழியாமல் நிற்கும்.
"ச ஏக: புருஷ:" என்ற வேதத்தில் உள்ள வாக்கியத்தை,
"ஆண் அல்லன்" என்ற 2 தமிழ் சொல்லில் கொடுத்து விட்டார் நம்மாழ்வார்.
"நாராயணனே பரமாத்மா" என்று அறிவோம்.
மனிதன் தன் அனுமானத்தால் உருவாக்கிய போலி மதங்களை, போலி தெய்வங்களை வணங்கி வாழ்க்கையை வீண் செய்யாமல் இருப்போம்.
தமிழ் வாழ, தமிழ் வளர்த்த ஆழ்வார்கள், நாயன்மார்கள் கொடுத்த பாசுரங்கள், பதிகங்கள் அழகை அறிவோம்.
No comments:
Post a Comment