ஒரு தகப்பன், தன் 2 வயது பிள்ளை தட்டு நிறைய உணவை வைத்து ஆசையாக சாப்பிடுவதை பார்க்கிறான்.
ஆனால், அந்த பிள்ளை 'தகப்பன் சாப்பிட்டானா?' என்று கூட நினைக்காமல் முழு உணவையையும் சாப்பிட்டு விட்டது.
"தன் பிள்ளை தனக்கு கொடுப்பானா?" என்று தகப்பன் உண்மையில் எதிர்பார்க்கவும் இல்லை.
உண்மையில், தகப்பனுக்கு பிள்ளை சாப்பிட்டதை பார்த்தே திருப்தி ஏற்பட்டு விட்டது.
ஆனால்,
கடைசி சாதத்தை வாயில போட்டு கொண்ட பாசமுள்ள அந்த 2 வயது பிள்ளைக்கு, 'தன் தகப்பனுக்கு கொடுக்கவில்லையே!!' என்று திடீரென்று நினைவு வர,
உடனே ஆசையோடு தன் வாயில் இருந்த எச்சில் உணவையே,
தன் இடது கையால் எடுத்து, தகப்பனை பார்த்து,
"அப்பா... நீயும் சாப்பிடு" என்று பாசத்தால் கொடுக்க,
திருப்தி மட்டுமே கொண்டிருந்த இந்த தகப்பன், ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று, எச்சில் என்று கூட பார்க்காமல், தன் குழந்தையின் பாசத்தில் உருகி, அதை ஏற்கிறான்.
அந்த பாசத்தை நாம் ஈஸ்வரனிடம் காட்டுவதே இந்த மந்திரம்.
'அம்ருதாபிதானம் அஸி' என்று கொஞ்சம் ஜலத்தை பருகி விட்டு,
பிறகு, கையில் மிச்சமிருக்கும் கொஞ்சம் ஜலத்தை நம் எச்சில் கையால், கட்டை விரல் வழியாக விட்டு கொண்டே இந்த மந்திரத்தை சொல்வது வழக்கம்.
இதன் அர்த்தம் இதோ:
அங்குஷ்டமாத்ர: புருஷ அங்குஷ்டஞ்ச ஸமாச்ரித: !
ஈச: ஸர்வஸ்ய ஜகத: ப்ரபு: ப்ரீணாதி விச்வபுக் !!
உலகையே படைத்து, அதையே தனக்கு உணவாக உண்ணும் அளவுக்கு சக்தி கொண்ட அந்த பரமாத்மாவான புருஷன் (புருஷ:), கட்டைவிரல் அளவுக்கு (அங்குஷ்டமாத்ர:) எனக்காக ரூபம் எடுத்து, கட்டைவிரல் அளவுக்கு வியாபித்து கொண்டு (அங்குஷ்டஞ்ச ஸமாச்ரித:) நான் கொடுக்கும் இந்த துளி ஜலத்தை, பாசத்தோடு ஏற்க வேண்டும்.
அனைத்து உலகங்களுக்கும் அதிபதியாக (ஸர்வஸ்ய ஜகத: ப்ரபு:) இருக்கும் பரமாத்மா (ஈச:), எங்கும் வியாபித்து இருப்பவர், (விச்வபுக்) ஒரு தகப்பனை போல, அறியாபிள்ளையாகவும், பாசத்தோடும் இருக்கும் என்னை கண்டு ப்ரீதி அடையட்டும் (ப்ரீணாதி).
ஒரு இலை நிறைய சோற்றை தெய்வ சிந்தனை இல்லாமல், நம் வயிற்றுக்கே போட்டு கொண்டாலும்,
கொஞ்சம் பாசத்தோடு நம்மை படைத்த பரமாத்மாவுக்கு நம் எச்சில் கையால் கொடுத்தாலும், ஒரு தகப்பனை போல ஆனந்தம் அடைகிறார் என்பதை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.
'பெற்றோர் மீது பாசமுள்ள யாவருக்கும்' சாப்பிட்ட பின் வரும் இந்த மந்திரத்தை சொல்ல ஆசை வரும்.
No comments:
Post a Comment