Followers

Search Here...

Saturday, 29 August 2020

'ராவணன் பேசிய பச்சை பொய்' தெரிந்து கொள்ள வேண்டாமா .. சீதையின் புலம்பல்.. தமிழன் 'வால்மீகி' கொடுத்த ராமாயணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

சீதா தேவியை மீட்க, வானர சேனையை திரட்டி கொண்டு, இலங்கையை நோக்கி வந்தார் ராமபிரான்

"சார்தூளா" என்ற ஒற்றன், ராவணனிடம் இதை தெரிவிக்க, "சுகா" என்ற ராக்ஷஸ ஒற்றனை மேலும் விவரம் அறிந்து வர அனுப்பினான்.

வானரர்கள் பிடித்து கட்டி வைத்தனர்.

ஐந்தே நாளில், கடலில் பாலம் அமைத்து, இலங்கையை வந்து அடைந்தார் ராமபிரான்.

பிறகு சுகாவை விடுவித்து அனுப்பினார். 




பிறகும், ராவணன், சுகனோடு 'சாரணன்' என்ற மற்றொரு ராக்ஷஸ ஒற்றனை அனுப்பி, வானர வீரர்களின் பலத்தை அறிந்து வர அனுப்பினான்.

வானரர்கள் போல உருவம் மாற்றி கொண்டு, இவர்கள் இருப்பதை கண்டு விபீஷணன் ராமபிரானிடம் தெரிவிக்க, இருவரையும் பிடித்து கட்டினர் வானரர்கள்.

ராமபிரான் இவர்களை விடுவித்து, விபீஷணனையே இவர்களுக்கு முழு படைபலத்தையும் காட்ட சொல்லி, திருப்பி அனுப்பினார்.


'சுக சாரணன்' இருவரும் வானரர்கள் படை பலத்தை ராவணனிடம் பிரமிப்புடன் சொல்ல, சார்தூளா கோபம் அடைகிறான்

எதிரியை போற்றும் படியாக ராவணனிடம் பேசுவதை கண்டித்தான். 

'சுக சாரணன்' இருவரும், அமைதியுடன், 'ராவணனுக்கு வெற்றி உண்டாகட்டும்' என்று சொல்லி விட்டு சபையை விட்டு கிளம்பினர்.

ராவணன், மகோதரன் என்ற ஒரு மந்திரியை பார்த்து, "சிறந்த ஒற்றர்களை" சபைக்கு அழைத்து வர சொன்னான்.

உடனே, தலை சிறந்த ராஜ ஒற்றர்களை, ராவணன் முன் அழைத்து வந்தான் மகோதரன்.

சார்தூலாவின் தலைமையில், அனைத்து ஒற்றர்களையும் ராமபிரானை பற்றி அறிந்து வர அனுப்பினான்.

"ராமனின் திறன் என்ன? ராமனுக்கு பிடித்தமானவர்கள் யார் யார்? 

யாரெல்லாம் ராமனுக்கு நட்பாக இருக்கிறார்கள்? 

ராமன் எப்பொழுது தூங்குவார்? எப்பொழுது விழிப்பார்? 

வேறு என்னவெல்லாம் காரியம் செய்கிறார்? 

என்னவெல்லாம் செய்ய நினைக்கிறார்? 

அனைத்தையும் தெரிந்து கொண்டு என்னிடம் வந்து சொல்ல வேண்டும்" 

என்று உத்தரவு செய்தான்.

மாயாவிகளான இவர்கள் வானர்ர்களோடு கலந்து கொண்டு சுவேல மலையில் இருக்க, கடல் போன்ற வானர சேனையை பார்த்து அச்சம் கொண்டனர்.

விபீஷணன் மீண்டும் இவர்களை கண்டுபிடித்து விட்டார். 

சார்தூளா வானரர்களிடம் மாட்டி கொண்டு விட, இவர்களை வானரர்கள் ரத்தம் வரும் வரை கைகளை மடக்கி குத்தி, முட்டியால் குத்தி, பற்களால் கடித்து உயிர் போகும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சுவேல மலையில் இருந்த ராமபிரான், மீண்டும் வானரர்களை தடுத்து, அனைவரையும் விடுவித்தார்.

ராவணனிடம் திரும்பி வந்த சார்தூளவும் மற்ற ஒற்றர்களும், பெரும் மரண பீதியில் இருந்தனர்.


ராவணன் இவர்களின் வெளுத்து போன முகத்தை பார்த்து, மனஉளைச்சலுடன் "ஏன் இப்படி சோர்ந்து இருக்கிறீர்கள்? நீங்களும் எதிரிகளின் கட்டுப்பாட்டில் சிக்கினீர்களா?" 

என்று கேட்டான்.


நடந்த விஷயத்தை சொல்லி, குறிப்பாக 'ஒவ்வொரு வானரனும் எந்த தேவனின் அம்சமாக இருக்கிறார்கள்?' என்று சார்தூளா ராவணனிடம் சொல்கிறான்...

"அரசே! வானர அரசன் சுக்ரீவன், ருக்ஷராஜனின் மகன். 

ஜாம்பவான் கட்கதனின் இளைய மகன். தும்ரா கட்கதனின் மூத்த மகன். 

கேசரி ப்ருஹஸ்பதியின் மகன்.

இலங்கையில் புகுந்து ராக்ஷஸரகள் பலரை கொன்ற ஹனுமான் கேசரியின் மகன்.

சுசேனன் சாஷாத் தர்ம தேவதையின் மகன்.

ததிமுகன் சோம தேவதையின் அம்சமாக தோன்றியவன்.

சுமுகன் மரண தேவதையின் அம்சமாக தோன்றியவன்.

படைத்தளபதியான நீலன் அக்னி தேவனின் அம்சம்.

ஹனுமான் வாயு தேவனின் அம்சம்.

அங்கதன் இந்திரனின் பேரன்.

மைந்தனும் த்விவிதனும் அஸ்வினி குமாரர்களின் அம்சம்.

கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்தமாதன் அனைவரும் சூரிய தேவனின் பிள்ளைகள்.

10 கோடிக்கும் மேலான வானரர்கள் போர் செய்ய குவிந்து இருக்கிறார்கள்.




இளமையான வீரனாக இருக்கும் ராமன், தசரதனின் பிள்ளை.

அந்த ராமன் தான் கர, தூஷன, த்ரிசிரர்களை கொன்றார்.

யாருமே அந்த ராமனை எதிர்க்க முடியவில்லை.

விராதா மற்றும் கபந்தன் போன்ற ராக்ஷஸர்களையும் கொன்றவர் இந்த ஸ்ரீராமன்.

ஜனஸ்தானத்தில் இருந்த ஒட்டு மொத்த ராக்ஷஸர்களும் வேரோடு அழிந்து விட்டனர்.

கூடவே இருக்கும் லக்ஷ்மணன் விடும் பாணத்தை இந்திரன் கூட தடுக்க இயலாது."

இப்படி வானரர்கள் அனைவரையும் பற்றி சொல்ல, ராவணன் மனகுழப்பம் அடைந்தான்.

சிறிது நேரம் தன் மந்திரிகளிடம் ஆலோசனை செய்து விட்டு, தன் மாளிகைக்கு சென்றான்.


தனது மாளிகையில், "வித்யுஜிஹ்வா" என்ற மாயாவியை அழைத்து இவ்வாறு பேசினான்,

"சீதையை மாயத்தால் குழப்ப வேண்டும். நீ உடனேயே மாயையால் ராமனின் தலையையும், அவன் கையில் வைத்து இருக்கும் அம்பு, வில்லை கொண்டு வா" என்றான்.

(வித்யுஜிஹ்வம் ச மாயாக்யம் அப்ரவீத் ராக்ஷஸாதிப: ! மோஹயிஷ்யாவஹே சீதாம் மாயயா ஜனகாத்மஜாம் !! 

சிரோ மாயாமயம் க்ருஹ்ய ராகவஸ்ய நிஸாசர! த்வம் மாம் சமுபதிஸ்டஸ்வ மஹச்ச சசரம் தனு:!! - வால்மீகி ராமாயணம்)


வித்யுஜிஹ்வா உடனேயே மாயா ரூபமான ராமனின் தலையும், வில்லும் அம்பும் கொடுக்க, ராவணன் அந்த மாயாவிக்கு தான் அணிந்து இருந்த ஆபரணத்தை பரிசாக கொடுத்து அனுப்பினான்.


பிறகு, 

ராவணன் அசோக வனத்தில் இருக்கும் சீதையை பார்க்க ஆவலுடன் சென்றான்.


அபலையான சீதை தலை குனிந்து நிலத்தை பார்த்து கொண்டே, ராமபிரானின் நினைவிலேயே, பயமுறுத்தும் ராக்ஷஸிகள் சூழ அமர்ந்து இருந்தாள்.

மிகவும் உற்சாகமாக தன்னை பற்றி உயர்வாக சீதையை பார்த்து பேசலானான் ராவணன், 

"சீதா! நான் உன்னிடம் எத்தனை மதுரமாக பேசினாலும், அந்த ராமனை நம்பிக்கொண்டு ஏதோ உளருகிறாய். 

பரிதாபம்! கரண் போன்ற ராக்ஷஸரகளை கொன்ற உன் கணவன் இப்பொழுது போரில் கொல்லப்பட்டு விட்டான்.

உன் நம்பிக்கை அனைத்தும், என்னால் வேர் அறுக்கப்பட்டு சின்னாபின்னம் ஆக்கப்பட்டு விட்டது. 

(கர ஹந்தா ச தே பர்தா ராகவ சமரே ஹத:! சின்னம் தே சர்வதோ மூலே தர்பஸ்தே விஹிதோ மயா!  - வால்மீகி ராமாயணம்)

கலங்கி இருக்கும் சீதா, இனி நீ என்னுடைய மனைவியாக ஆக போகிறாய்.

(வ்யசனே ஆத்மன: சீதே மம பார்யா பவிஷ்யசி  - வால்மீகி ராமாயணம்)

சீதா! முட்டாள்த்தனமான நம்பிக்கையை விடு..  செத்துபோனவனை வைத்து என்ன செய்ய போகிறாய்?

(விஸ்ருஜே மாம் மதிம் மூடே கிம் ம்ருதேன கரிஷ்யசி  - வால்மீகி ராமாயணம்)

ஒழுக்கமானவளே! என் மனைவிகள் அனைவருக்கும் மேலே உன்னை ஆக்கி, பட்டத்து ராணியாக உன்னை ஆக்குகிறேன்.

(பவஸ்ய பத்ரே பார்யானாம் சர்வாசாம் ஈஸ்வரி மம  - வால்மீகி ராமாயணம்)

அல்ப புண்ணியங்கள் கொண்டவளே! மூடத்தனமாக நீ உன்னையே எல்லாம் தெரிந்தவள் என்று நினைத்து கொண்டு இருக்கிறாய்.

(அல்ப புண்யே நிவ்ருத்தார்த்தே மூடே பாண்டிதம் ஆனினி!  - வால்மீகி ராமாயணம்)

சொல்கிறேன் கேள்... உன் கணவன் ராமன் கொடூரமாக கொல்லப்பட்டு விட்டான்.

(ஸ்ருணு பர்த்ரு வதம் சீதே கோரம் வ்ருத்ர வதம் யதா!  - வால்மீகி ராமாயணம்)

இந்த ராமன் சுக்ரீவன் தலைமை ஏற்ற பெரும் படையை கூட்டிக்கொண்டு, என்னை கொல்வதற்கு கடற்கரை பக்கம் போர் புரிய வந்தான்.

(சமாயாத சமுத்ராந்தம் மாம் ஹந்தும் கில ராகவ:!  - வால்மீகி ராமாயணம்)

சூரியன் மறைந்த வேளையில், வடக்கு சமுத்திர கரையில் படைகளுடன் தங்கி இருந்தான்.

பயண களைப்பில் சோர்ந்து இருந்த இவர்கள் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தனர்.

என்னுடைய ஒற்றர் படை அங்கு சென்று இதை கவனித்தனர்.

ப்ரஹஸ்தன் தலைமையில் பெரும் ராக்ஷஸ படை அங்கு சென்றனர்.

(தத் ப்ரஹஸ்த ப்ரணீதேன பலேன மஹதா மம! - வால்மீகி ராமாயணம்)

ராமனின் மொத்த படைகளும் இரவோடு இரவாக அழிக்கப்பட்டது.

ராக்ஷஸர்கள் தங்களிடம் இருந்த பிராணிகளை பிடிக்கும் ஆயுதங்களை கொண்டும், கதையை கொண்டும், சக்கரத்தை கொண்டும், கம்புகளை கொண்டும், கத்தியை கொண்டும், அம்புகளை கொண்டும், கூர்மையான ஆணிகள் பதித்த கதையை கொண்டும், ஏவுகணை போன்ற ஆயுதங்களை கொண்டும் அடியோடு வானர கூட்டத்தை அழித்தனர்.

அந்த சமயத்தில், தூங்கி கொண்டிருந்த ராமனின் அருகில் சென்ற ப்ரஹஸ்தன் தன் கூரிய வாளால் ராமனின் தலையை சீவி விட்டான். அங்கு அவனை எதிர்ப்பதற்கு ஒரு ஆள் இல்லை.

(அத சுப்தஸ்ய ராமஸ்ய ப்ரஹஸ்தேன ப்ரமாதினா! அசக்தம் க்ருத ஹஸ்தேன சிரஸ் சின்னம் மஹாசினா! - வால்மீகி ராமாயணம்)


விபீஷணன் சிறைபிடிக்கப்பட்டான்.

லக்ஷ்மணன் எஞ்சி இருந்த வானர கூட்டத்துடன் விரட்டி அடிக்கப்பட்டான்.

சுக்ரீவன் கழுத்து நொறுக்கப்பட்டு கீழே வீழ்ந்தான்.

ஹனுமான் ராக்ஷஸர்களால் தாடை உடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.

ஜாம்பவான் மண்டி இட்டு காலில் விழுந்தான். அவனை ஈட்டியால் குத்தி மரத்தை சாய்ப்பது போல சாய்த்து விட்டனர்.

மைந்தன், த்விவிதன் இருவரும் வீழ்த்தப்பட்டனர். 

அனைவரும் வெட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் அழுது விழுந்தனர்.

பனசன் பனச மரத்தை போல விழுந்தான்.

தரீமுகன் பலமுறை வெட்டப்பட்டு கீழே விழுந்தான்.

குமுதன் அம்புகளால் வீழ்த்தப்பட்டான். வலியால் கதற கூட முடியாமல் இறந்தான்.

அங்கதன் பல ஆயிரம் அம்புகளால் தாக்கப்பட்டு வீழ்ந்தான்.

வானர கூட்டம் யானைகளால் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

பலர் தேரிலும் குதிரைகளின் கால்களிலும் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

யானைகள் சிங்கத்தால் பின் பக்கத்தில் இருந்து தாக்கப்படுவது போல, ராக்ஷஸர்கள் வானரர்களை தாக்கினர். 

பலர் கடலில் விழுந்து உயிர் விட்டனர்.

பல வானரர்கள் கடற்கரையிலும், மலைகளிலும், மரங்களுக்கு இடையிலும் ராக்ஷஸர்களால் கொல்லப்பட்டனர்.

இப்படி என்னுடைய படைகள் உன் கணவனையும் அவன் படையையும் அழித்து விட்டனர்.

உனக்காக புழுதி படிந்த ரத்தம் ஒழுகும் ராமனின் தலையை கொண்டு வந்து இருக்கிறேன்."

இப்படி சொல்லிக்கொண்டே, அருகில் இருந்த ஒரு ராக்ஷஸியை பார்த்து, 

"வித்யுஜிஹ்வாவை போரிலிருந்து கொண்டு வந்த ராமனின் தலையோடு இங்கு வரச்சொல்" 

என்று கட்டளை இட்டான்.

வித்யுஜிஹ்வா மாயா ரூபமான ராமனின் தலையுடன், ராமபிரான் வைத்து இருக்கும் அம்பு வில்லை காண்பித்தான்.

ராவணன், வித்யுஜிஹ்வாவை பார்த்து, 

"அந்த ராமனின் தலையை சீதைக்கு முன் வை. கடைசி முறையாக அவள் கணவனை பார்த்து கொள்ளட்டும்." என்றான்

(அக்ரத குரு சீதாயா சீக்ரம் தாசரதே சிர:! அவஸ்தாம் பஸ்சிமாம் பர்த்ரு க்ருபனா சாது பஸ்யது!! - வால்மீகி ராமாயணம்)


உடனே வித்யுஜிஹ்வா சீதையின் முன் மாயா ரூபமான ராமபிரான் தலையை வைத்தான்.


ராவணன், மாயா ரூபமான ராமனின் வில்லை சீதையின் முன் வீசிவிட்டு, சீதையை பார்த்து,

"இதோ பார்.. ராமனின் நாண் ஏற்றப்பட்ட வில். இரவோடு இரவாக அந்த மனிதன் கொல்லப்பட்ட பின், ப்ரஹஸ்தன் இதை கொண்டு வந்தான்.

சீதா! நீ எனக்கு வசமாகி விடு."

என்று பேசினான்.

ராமபிரானின் தலையையும், தலை கேசத்தையும், அவர் அணிந்து இருந்த குண்டலம் போன்ற ஆபரணங்களையும், வில்லையும் பார்த்த சீதை, ராவணன் சொன்ன வார்த்தையை நம்பி விட்டாள்.

கதறி அழுத சீதை, நிலை தடுமாறி பேசலானாள். 

"கைகேயி! சந்தோஷமாக இருங்கள். இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய உத்தமர் கொலை செய்யப்பட்டு விட்டார்.

உங்களால் குலமே நாசமாகி விட்டது.

மற்றவர்கள் துயரத்தில் நீங்கள் ஆனந்தப்படுங்கள்.

எந்த விதத்தில் உங்களுக்கு ராமபிரான் துன்பம் செய்தார்?

எதற்காக அவருக்கு மரவுரி அணிந்து வனம் செல்ல செய்தீர்கள்?"

இப்படி சொல்லிக்கொண்டே வேரோடு சாய்க்கப்பட்ட வாழை மரம் போல சீதை மயங்கி விழுந்தாள்.


சிறிது நேரத்தில் தன்னை சுதாரித்து கொண்டு, ராமபிரானின் தலையை முகர்ந்து கொண்டே, புலம்ப ஆரம்பித்தாள்...

"ஐயோ! நான் இறந்து விட்டேன். 

நீண்ட கைகள் உடைய என் நாதா! 

சத்தியத்தை கடைபிடிக்கும் நாயகா! நான் இறந்து விட்டேன்!

ஐயோ! நான் விதவை ஆனேனே! 


மனைவிக்கு முன்னால் கணவன் போவது நியாயமா?

ஒழுக்கத்தில் சிறந்தவரே! என்னை முந்தி கொண்டு நீங்கள் சென்று விட்டீர்களா?

என்னுடைய சோகத்திலிருந்து இனி என்னை மரணம் மட்டுமே மீட்க முடியும்..

ஐயோ! கன்றை இழந்த தாய் பசு போல, என் மாமியார் கௌசல்யா தவிப்பாளே!

உங்களுக்கு நீண்ட ஆயுசு என்று ஜாதகம் கணித்தார்களே!! 

அவர்கள் சொன்ன சொல் பொய் போனதே! இப்படி சிறுவயதோடு உங்கள் வாழ்வு முடிந்து விட்டதே!

எந்த நேரமும் சுதாரிப்புடன் இருக்கும் உங்களையும், காலம் விழுங்கி விட்டதா?

அரசாங்க அறிவு உள்ளவராயிற்றே நீங்கள்.. எப்படி நீங்கள் இப்படி உடலை விட்டு பிரிந்து இருக்க முடியும்?

பெரும் அபாயகரமான சூழ்நிலையிலும் தப்பித்து கொள்ளும் திறன் கொண்டவரல்லவா நீங்கள்?

உங்களை எப்படி இந்த இரவு கொள்ளை கொண்டது?

ஓ தாமரை கண்ணா! என்னை விட்டு பிரிந்து விட்டீர்களே!

எளிமையான என்னை விட்டு விட்டு, பூமியின் மேல் உள்ள ஆசையால் சென்று விட்டீர்களா?

இந்த அற்புதமான வில்லை நான் எத்தனை முறை மலர்களால் பூஜித்து இருப்பேன்.

குறை இல்லாதவரே! நீங்கள் உங்கள் மூதாதையர்களும், என் மாமனார் தசரதர் இருக்கும் லோகத்துக்கு சென்று விட்டீர்களா?

உங்களுடைய ஒழுக்கமான நடத்தையால் நீங்கள் நக்ஷத்திரமாக இருந்து கொண்டு இருக்கிறீர்களா?

ஏன் நீங்கள் என்னை பார்க்க வில்லை? 

என்னிடம் ஏன் பேசவில்லை?

இளமை காலத்தில் உங்களை மணந்த பின், உங்களை தானே நான் தொடர்கிறேன்.

மணமேடையில் என் கை பிடித்து, என்னை ஒருபோதும் விட மாட்டேன் என்று சொன்னீர்களே!

அதை ஞாபகபடுத்தி கொண்டு, உடனே என்னையும் அழைத்து கொள்ளுங்கள்.

(சம்ஸ்ருதம் க்ருஹ்னதா பாணிம் சரிஷ்யாமீதி யத் த்வயா! ஸ்மர தன் மம காகுத்ஸம் நய மாமபி துக்கிதாம்!! - வால்மீகி ராமாயணம்)

என்னை இந்த உலகத்தில் விட்டு விட்டு, வேறு உலகத்துக்கு ஏன் சென்றீர்கள்?

அடைக்கலம் தருபவரே! என்னால் அணைக்கப்பட்ட உங்கள் தேகத்தை, பிராணிகள் எப்படி இழுத்து செல்ல முடியும்?

வேத காரியங்கள் பல செய்தீர்களே. உங்களுக்கு வேத முறைப்படி இறுதி காரியங்கள் ஏன் கிடைக்கவில்லை?

நாம் மூன்று பேரும் வனவாசம் வந்தோம்.

இப்பொழுது லக்ஷ்மணன் மட்டுமே திரும்பி செல்கிறான்.

கௌசல்யா மாதா லக்ஷ்மணனை கேட்பாளே!! 

லக்ஷ்மணன் ராக்ஷஸர்களால் இரவில் நடந்த பேரழிவை சொல்லவேண்டி வருமே!

நான் இந்த ராக்ஷஸர்களிடம் சிக்கி இருப்பதையும், ராமபிரானை விண்ணுலகம் சென்றதையும் கேட்டால், கௌசல்யா மாதாவின் இதயம் சுக்கு நூறாகி விடுமே!!

இவர் எனக்காக கடல் கடந்து வந்தது பலன் அளிக்கவில்லையே!!

இந்த சிறிய சண்டையில் இவர் கொல்லப்பட்டு விட்டாரே!!

மனைவி என்ற பெயரில் நானே மரணமாக வந்து தொலைந்தேனே! 

இதை தெரிந்து கொள்ளாமல் ராகவன் என்னை மணந்து கொண்டு விட்டாரே!

நான் போன ஜென்மத்தில் ஏழைகளுக்கு தானம் செய்வதை நிறுத்தி இருக்கிறேன். அதனால் தான் யாருக்கும் அபயம் தரும் இவருக்கு மனைவியாக இருந்தும், இத்தனை துன்பத்தை அனுபவிக்கிறேன்.

ராவணா! என் உடலையும் ராமபிரானின் உடலோடு வைத்து விடு.

என் கணவனோடு என்னையும் எரித்து விடு. இந்த புண்ணிய காரியத்தையாவது செய்.

என் தலை ராமபிரான் தலையோடு சேரட்டும்.. என் தேகம் ராமபிரானின் தேகத்தோடு சேரட்டும். நான் அந்த உயர்ந்த ஆத்மாவான ராபிரானையே தொடர்கிறேன்!"

இவ்வாறு தன் கணவனின் தலையையும், வில்லையும் பார்த்து பார்த்து புலம்பினாள் சீதை.

இப்படி இவள் அழுது கொண்டு இருக்க, ராக்ஷஸ படையில் இருந்து சிலர் அங்கு வந்து கை குவித்து நின்றனர்.

பிறகு ராவணனை பார்த்து, 

"ப்ரஹஸ்தன் அனைத்து மந்திரிகளுடன் வந்து இருக்கிறார். உங்களை பார்க்க ஆவலாக இருக்கிறார். இது ஒரு அவசர செய்தி. தயவு செய்து உங்கள் அமைச்சர்களை பார்க்க அழைக்கிறோம்" என்றார்கள்.

இதை கேட்ட ராவணன் உடனே அசோக வனத்தை விட்டு, தன் சபையை நோக்கி சென்றான்.

ராவணன் நகர்ந்து போன உடனேயே, அங்கு இருந்த மாயா ரூபமான ராமபிரான் தலையும், வில்லும் மறைந்து போயின.

(அந்தர்தானம் து தச்சீர்ஷம் தச்ச கார் முகம் உத்தமம்! ஜகாம ராவணஸ்யைவ நிர்யான சமன் அந்தரம்!! - வால்மீகி ராமாயணம்)










No comments:

Post a Comment