Followers

Search Here...

Thursday, 25 June 2020

பாசுரம் (அர்த்தம்) - இடங்கொள் சமயத்தை. "பாற்கடலில், ஹரிபக்தி செய்பவர்களின் பக்தி எப்படி உள்ளது?" என்று நம்மாழ்வார் வர்ணிக்கிறார். தெரிந்து கொள்வோமே !

ஒரு சமயம் நாரதர், நர நாராயணனாக வீற்று இருக்கும் பதரிநாத்க்கு வந்தார்.



எப்பொழுதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் நாரதர், முகம் வாடி இருந்தார்..

இதை கவனித்த பதரி நாராயணன், "என்ன காரணம்?" என்று விஜாரித்தார்.

நாரதர் பல உலகங்கள் சஞ்சாரம் செய்பவர்.
எங்கு போனாலும் இவருக்கு மரியாதை, வரவேற்பு தான் கிடைக்கும்.

கம்சன் அரண்மனைக்கு சென்றாலும் வரவேற்பு கிடைக்கும், சிவபெருமானை பார்க்க சென்றாலும் வரவேற்பு கிடைக்கும்.

இவரை மதிக்காதவர் உலகில் இல்லை.

இருந்தாலும், ஒரு சமயம் ஒரு இடத்துக்கு இப்பொழுது தான் முதல் முறையாக சென்றாராம்.

அங்கு இருந்தவர்கள் அனைவரும் ஹரி நாம கீர்த்தனை தான் செய்து கொண்டு இருந்தார்கள்.

நாரதரும் ஹரி நாம கீர்த்தனை செய்பவர் தான்.
ஆசையாக இவர்கள் அருகில் சென்றும், நாரதர் வந்து இருக்கிறார் என்று கூட கவனிக்காமல், 
மெய்மறந்து நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு இருந்தார்களாம். ஆடினார்களாம்.. துள்ளினார்களாம்.. பாடினார்களாம்...குனிந்து நிமிர்ந்து நமஸ்காரம் செய்து ஆடி பாடினார்களாம்...
ஆனால் கடைசி வரை நாரதர் இருப்பதையே கவனிக்க வில்லையாம்...

இப்படி ஒரு ஹரி நாம கீர்த்தனையை நாரதர் கேட்டதே இல்லையாம்.. மேலும், தன்னை கவனிக்காததும் ஆச்சரியம் தர,
பதரி நாராயணனிடம் "இப்படி ஹரிநாம பஜனை செய்யும் இவர்கள் யார்?"
என்று கேட்க,
பதரி நாராயணன் நாரதரை பார்த்து,
"நீங்கள் பார்த்தது க்ஷீராப்தியில் அருகில் உள்ள இடம்.
அதற்கு ஸ்வேத த்வீபம் என்று பெயர்.
விஷ்ணு பக்தி செய்த புண்ணிய ஆத்மாக்கள், இங்கே தடையில்லாமல், தன்னையே மறந்து என்னை பஜித்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நானே லட்சியமாக இருக்கிறேன்.
இதனாலேயே, வந்திருப்பது யார் என்று கூட அவர்கள் கவனிக்கவில்லை.
அவர்கள் பக்தி அலாதியானது"
என்றார்.
விஷ்ணு லோகமான 'க்ஷீராப்தியில் உள்ள உன்னதமான பக்தர்கள் எப்படி பஜனை செய்கிறார்கள்?'
என்று தன் பாசுரத்தில் "நம்மாழ்வார்" நமக்கு காட்டுகிறார்.

இடங்கொள் சமயத்தை யெல்லாம்
எடுத்துக் களைவன போல !
தடங்கடல் பள்ளிப் பெருமான்
தன்னுடைப் பூதங்களேயாய் !
கிடந்தும் ! இருந்தும் ! எழுந்தும் !
கீதம் பலபல பாடி !
நடந்தும் ! பறந்தும் ! குனித்தும் !
நாடகம் செய்கின்றனவே !!




'பரமபதத்தில்' நாராயணன் நான்கு கைகளுடன், சங்கு சக்கரம் ஏந்தி அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.
அதே நாராயணன்,
'க்ஷீராப்தியில்' விஷ்ணுவாக இருக்கும் போது, இரண்டு கைகளுடன், ஆதிசேஷன் மேல், யோக நித்திரையில் பாற்கடலில் பள்ளி கொண்டு இருக்கிறார்.

'க்ஷீராப்தியில்' ப்ரம்ம தேவன், ருத்ரன், தேவர்கள், ரிஷிகள் பேசி பழகும் படியாக பிரசன்னமாக பாற்கடலில் இருக்கிறார்.

பாற்கடலில் வீற்று இருக்கும் விஷ்ணுவை, ஸ்வேத த்வீபத்தில் இருக்கும் இவர்கள் எப்படி பஜிக்கிறார்கள்? என்று சொல்கிறார் நம்மாழ்வார்.

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை (தடங்கடல் பள்ளிப் பெருமான்)
நினைத்து நினைத்து, ஸ்வேத தீவபத்தில் இருக்கும் இவர்கள் ஆனந்தத்தில் திளைக்கிறார்களாம்,
விஷ்ணுவின் நாமத்தை, கைகளில் தாளத்தை வைத்து கொண்டு "நாராயண..நாராயண..நாராயண.." என்று சொல்ல சொல்ல, கோஷ்டியாக 1000 பேர் சேர்ந்து கொண்டு குனிந்து, நிமிர்ந்து ஆடியும் பாடியும் அபிநயமும் செய்து கொண்டு இருக்கின்றனராம்.

பாற்கடலில் இருக்கும் இவர்களுக்கு "நாராயணனை' பஜிப்பதே லட்சியம்.

பெருமாளே இவர்களுக்குள் புகுந்தது போல இருந்தார்களாம் இவர்கள்.
அதையே "பெருமாள் தன்னுடைப் பூதங்களேயாய் !" என்கிறார்.

இப்படி பெருமாள் இவர்களிடம் ஆவேசித்து இருக்க,
க்ஷீராப்தியில் ஆதிசேஷன் மேல் படுத்து கொண்டிருக்கிறார் என்று பாடும் போது,
தானும் அது போல அபிநயம் செய்து கிடப்பார்களாம் (கிடந்தும்)
மற்றொரு சமயம்,
பரமபத்தில் அமர்ந்த கோலத்தில் பரவாசுதேவனாக இருக்க, இவர்களும் பரவாசுதேவன போலவே அமர்ந்த படி (இருந்தும்) அபிநயம் செய்வார்களாம்.
மற்றொரு சமயம்,
திருமலையில் ஸ்ரீனிவாசனாக எழுந்து நின்று இருப்பது போலவே நின்று (எழுந்ததும்) அபிநயம் செய்வார்களாம்.

வெறும் அபிநயம் மட்டும் செய்தால் நன்றாக இருக்குமா?... அபிநயத்தோடு பல பல கீதங்கள் பாடுவார்களாம்.

தண்டகாரண்யத்தில் ராமபிரானாக நடந்ததையும், ஸ்ரீ பிருந்தாவனத்தில் கண்ணனாக நடந்ததையும் பாடும் போது,
கண்ணனாகவே நடந்து (நடந்தும்) அபிநயம் செய்வார்களாம், ராமபிரானாகவே நடந்து (நடந்தும்) அபிநயம் செய்வார்களாம்.

கருடனில் பறந்து வரும் பெருமாளாக பாடும் போது, தன் கைகளே இறக்கையாக நினைத்து, தானும் பறப்பது போல அபிநயம் (நாடகம்) செய்து ஆடுகிறார்களாம் (குனித்தும்) இவர்கள்.

இதையே,
கிடந்தும் ! இருந்தும் ! எழுந்தும் !
கீதம் பலபல பாடி !
நடந்தும் ! பறந்தும் ! குனித்தும் !
நாடகம் செய்கின்றனவே !!
என்கிறார்.

நெல் விதைக்கப்பட்ட நிலத்தில், தேவையில்லாத கோரை புல் இடையிடையே வளர்ந்து இருக்கும்.
நெல் வளர்ச்சியை தடுக்கும், இந்த கோரை புற்களை முழுமூச்சுடன் உடனே களையெடுக்க, அந்த விவசாயி குனிந்து, நிமிர்ந்து அதை தேடி கண்டுபிடித்து, அறுத்து எரிவார்களாம்,
குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதால், களைப்பு ஏற்படாமல் இருக்க கிராமத்து பாடல் பாடிக்கொண்டே, அறுத்து எரிவார்களாம்,
கோரை புல்லை பிடுங்கி எரிந்து, நெல்லை காப்பாற்றும் விவசாயி போல, இங்கு இவர்கள் குனிந்தும், நிமிர்ந்தும் ஆடுவதையும், 
களைப்பு தெரியாமல் இருக்க இவர்கள்  "நாராயண.. நாராயண.." என்று சொல்லிக்கொண்டே பாடுவதையும் பார்த்தால், 
எதையோ தூக்கி எரிவது போல தோன்றியதாம்!  நம்மாழ்வாருக்கு.




அப்படி என்ன எறிந்தார்களாம் இவர்கள்?
விஷ்ணு பக்தியை வளர்க்காத போலி மதங்களை எல்லாம், க்ஷீராப்தியில் இருக்கும் இவர்கள் கோரை புல்லை பிடுங்கி எரிவது போல தூக்கி எறிந்தார்களாம்.

மற்ற விஷயங்கள் புகாமல், நாராயணனின் நினைவே க்ஷீராப்தியில் நிரம்பி இருந்தது  என்ற ரீதியில் ரசித்து, 'க்ஷீராப்தியில் உள்ள விஷ்ணு பக்தர்கள் செய்யும் பஜனையை' ரசிக்கிறார் நம்மாழ்வார்.

இதையே,
இடங்கொள் சமயத்தை யெல்லாம்
எடுத்துக் களைவன போல !
என்று சொல்கிறார்.

குருநாதர் துணை.

No comments: