Followers

Search Here...

Sunday, 5 April 2020

பாசுரம் (அர்த்தம்) - கோட்டுமண் கொண்டு... பெரியாழ்வார் (மதுரை) கள்ளழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

கோட்டு மண் கொண்டு இடந்து 
குடம் கையில் மண் கொண்டு அளந்து மீட்டும் 
அஃது உண்டு உமிழ்ந்து விளையாடு 
விமலன் மலை
ஈட்டிய பல்பொருள்கள் எம்பிரானுக்கு அடி உறையென்று
ஓட்டரும்தண் சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே
- திருமொழி (பெரியாழ்வார்)

வராக அவதாரம் செய்த போது இந்த பூமியை (மண்) பிரளய ஜலத்தில் இருந்து தூக்கிய (இடந்து) அதே பகவான் (கோட்டு மண் கொண்டு இடந்து)




வாமன அவதாரம் செய்த போது இந்த பூமியை (மண்) பலிசக்கரவர்த்தியிடம் இருந்து மீட்க உலகை அளந்த அதே பகவான் (குடம் கையில் மண் கொண்டு அளந்து மீட்டும்)

கிருஷ்ண அவதாரம் செய்த போது இந்த பூமியை (மண்) உண்டு, லோகங்கள் அனைத்தும் தனக்குள் அடக்கம் என்று யசோதையிடம் லீலை செய்த (விளையாடு) அதே பகவான் (அஃது உண்டு உமிழ்ந்து விளையாடு)

இந்த அழகர் மலையில் கள்ளழகனாக வீற்று இருக்க (விமலன் மலை)

இங்கு வாழும் பலதரப்பட்ட பக்தர்களான கள்ளர்கள், மறவர்கள், பிராம்மணர்கள் எவரானாலும், தனக்கு கிடைத்த கேழ்வரகானாலும், ஆடு கோழியானாலும், பால், நெய் என்று எந்த பொருளானாலும் (ஈட்டிய பல்பொருள்கள்)
அதில் ஒரு பாகம் என் அழகருக்கு (எம்பிரான்) என்று உரைத்து அவர் பாதத்தில் சமர்ப்பித்து விடுகிறார்கள் (எம்பிரானுக்கு அடி உறையென்று).

அழகர் பெருமாள் ஜாதி பார்க்காமல், குணம் பார்க்காமல் இங்கு மட்டும் தான், அவரவர்கள் ஜாதிக்கு ஏற்ப, அவரவர்கள்  பேச்சுக்கு ஏற்ப, அவரவர்கள் நாகரீகத்து ஏற்ப, அவரவர்கள் சாப்பாடுக்கு ஏற்ப, அவரவர்கள் குணத்திற்கு ஏற்ப பழகுகிறார்.

பொருளை கொள்ளை அடிக்கும் கள்ளர்களின் மத்தியில் நின்று கொண்டு, கள்ளர்களின் மனதையும் கொள்ளையடிக்கும் கள்ளனுக்கு கள்ளனாக கள்ளழகர் இங்கு இருக்கிறார்.

ஸ்ரீரங்க நம்பெருமாள் போல இங்கு கள்ளழக பெருமாள் இருக்க மாட்டார். 
அங்கு ஸ்ரீரங்கபெருமாள், யார் கொடுத்தாலும் ஏற்க மாட்டார்.
இங்கோ,
கம்பு சாப்பிடுவீர்களா? என்று கேட்டால், "சாப்பிடுவேனே !" என்று சொல்வாராம் கள்ளழக பெருமாள்.

"கள்ளர்களை போல கருப்பு துணி கட்டி கொள்வீர்களா?"
என்று கேட்டால், "சரி" என்று கட்டி கொள்வாராம்.

பெருமாள் ஒரு நாள் கருப்பு துணி கட்டிக்கொள்ளும் அதிசயம் அழகர்மலையில் மட்டுமே காண முடியும்.
கள்ளர்களும் ரசிக்க கருப்பு துணி, கருப்பு தொப்பி அணிந்து கொண்டு, கையில் ஒரு கோலுடன் தரிசனம் தருகிறார் அழகர்.

அழகரை பார்த்தால் அனைவருக்குமே என் பெருமாள் (எம்பிரான்) என்று தோன்றிவிடும்.

மற்ற ஊர்களில் பெருமாளுக்கு நேரடியாக எதையும் சமைத்து நெய்வேத்யம் செய்து விட முடியாது.


பெருமாள் இங்கு மிகவும் சுலபமாக இருப்பதால்,
அழகர்மலையை சுற்றி ஆயிரக்கணாக்கான மாக்கள், நூபுர கங்கையில் (சிலம்பாறு) ஸ்நானம் செய்து விட்டு,
தாங்களே அடுப்பு மூட்டி, பொங்கல் வைத்து பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்யும் அழகை நாம் ரசிக்கலாம். 

சமயத்தில், தான் சாப்பிடும் ஆடு கோழியை கூட இவர்கள் சமர்ப்பிக்க இந்த பெருமாள் அதை ஏற்கிறார்.

இப்படி பிரார்த்தனை எல்லாம் இங்கு பலித்து விடும் என்பதால்,
பெரியாழ்வார் பெற்ற ஆண்டாள், ஸ்ரீ ரங்க பெருமாளை மணக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, நம் அழகருக்கு பொங்கல் செய்து சமர்ப்பித்தாள். இதை ஆண்டாளே  பாடுகிறாள்.

கள்ளர்கள் முதல் ஆழ்வார்கள் வரை, பழகுவதற்கும், ஆசைப்பட்ட அனைத்தும் நிறைவேறவும் அனுகிரஹிக்கும் பெருமாளாக கள்ளழகர் இருக்கிறார்.

சித்ரா பௌர்ணமி அன்று, ஒவ்வொரு பக்தன் தனக்கு சமர்ப்பிக்க ஆசைப்படும் உணவை ஏற்றுக்கொள்ள,
தானே வெயிலை பார்க்காமல், அழகர் மலையை  (மாலிருஞ்சோலை) விட்டு கிளம்பி, ஒவ்வொரு வீடாக நுழைந்து, அமர்ந்து, அவர்கள் கொடுக்கும் உணவை ஏற்று கொண்டு வைகை நதி செல்லும் வரை அனைவரிடமும் பழகி கொண்டே செல்கிறார். 




லட்சம் ஜனங்கள் இந்த அழகரை பார்க்க கூடும் அழகை கண் படைத்தவர்கள் காண வேண்டும். நம் வீட்டு பெருமாள் போல பழகும் அழகை மதுரையில் காணலாம். (ஓட்டரும்தண் சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே)

No comments:

Post a Comment