Followers

Search Here...

Thursday, 26 September 2019

ராமபிரான் தன்னை "மனிதன் என்றும்", "தசரதனின் பிள்ளை" என்றும் சொல்லி மனிதனாகவே காட்டி கொண்டார். ஒரு சில சமயங்களில் வேறு வழியில்லாமல், தன்னை பரமாத்மா என்று காட்டி கொள்ளும் படி ஆனது. அப்படி ஒரு அருமையான சமயத்தை நாமும் தெரிந்து கொள்ளலாமே..

12 வருட வனவாசம் முடிந்த நிலையில், அகத்தியரை தரிசித்தார் ஸ்ரீ ராமர். 
தன்னிடமிருந்த அனைத்து அஸ்திர, சஸ்திரங்களையும் ஸ்ரீ ராமரிடம் சமர்ப்பித்தார் அகத்தியர் முனி.
அவர் ஆசிரமத்தில் ஒரு இரவு தங்கி விட்டு, மறுநாள் அருகில் உள்ள பஞ்சவடியை நோக்கி புறப்படலானார்கள்.

பஞ்சவடிக்கு (Panchavati, Maharastra) வந்த ஸ்ரீ ராமர், முதன் முதலாக 'ஜடாயு'வை தான் தரிசித்தார்.
ஸ்ரீ ராமர் வருவதை பார்த்த ஜடாயு, "நீங்கள் தசரதன் பிள்ளைகளா?" என்று கேட்டார்.


ஜடாயு இப்படி கேட்டதும், ராமர் ஆச்சரியப்பட்டார்.
"எங்கள் தகப்பனாரின் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்?"
என்று ஆவலுடன் கேட்டார்.

"தசரதனின் முக ஜாடை உங்கள் முகத்தில் தெரிந்ததால் கேட்டேன்"
என்று ஜடாயு சொல்ல,

ஸ்ரீ ராமர், "எங்கள் அப்பாவை உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்க,

"ஆஹா... தேவர்களுக்கு சகாயம் செய்ய சொர்க்க லோகம் அடிக்கடி வருவார். உங்கள் அப்பா எனக்கு நெருங்கிய நண்பர் ஆயிற்றே!!"
என்று சொல்ல,
அடுத்த நொடி, ஸ்ரீ ராமர் 'ஜடாயுவை' கை குவித்து வலம் வந்து வணங்கினார்.

"தன் அப்பாவின் நண்பர்" என்று கூட நினைக்கவில்லை.
ஜடாயுவை "தன் தகப்பனாராகவே நினைத்தார்" ஸ்ரீ ராமர்.

ஸ்ரீ ராமரின் "பித்ரு பக்தி எப்படி இருந்தது?" என்று தெரிகிறது.

இப்படி ஒரு உத்தமமான பிள்ளையை "நியாயம் இல்லாமல்" 14 வருடம் வனவாசம் அனுப்ப நேர்ந்ததும், தசரதன் உயிர் பிரிந்ததில் ஆச்சர்யம் இல்லையே!!
தசரதனுக்கு கிடைத்தது போன்ற மகன், எந்த தகப்பனுக்கும் அவருக்கு முன்னும், அவருக்கு பிறகும் இன்றுவரை
"ஸ்ரீ ராமரை போன்று உத்தம புத்திரன் பிறக்கவில்லையே.".

ஸ்ரீ ராமருக்கு, "தசரதன் மேல் மட்டும் தான் பக்தி (மரியாதை) என்று நினைத்து விட கூடாது, அவர் சம்மந்தப்பட்ட அனைத்திலும் பக்தி செய்தார்".

உலகத்தில்,
"அப்பா ஆசையாக ஒரு பூனை வளர்த்தார்" என்பதற்காக,
"அந்த பூனையை போய், 'அப்பா வளர்த்த பூனை' என்று அப்பாவுக்கு கொடுக்கும் மரியாதையுடன் மதிப்பார்களா?..".

"அப்பாவுடன் கூட பிறந்த சித்தப்பாவை கூட அப்பாவாக மதிக்க முடியாத" கல் நெஞ்சம் கொண்ட உலக ஜனங்களுக்கு,
ராமரின் மென்மையான மனம் எப்படி புரியும்?..

"வயதாகி விட்ட அப்பாவே சுமை என்று நினைக்கும்" கல் நெஞ்சம் கொண்ட உலக ஜனங்களுக்கு,
ராமரின் மென்மையான மனம் எப்படி புரியும்?..

ஜடாயு என்ற தேவ பக்ஷியை தன் "தகப்பனாகவே பார்த்தார்" ஸ்ரீ ராமர்.
என்பது, கல் நெஞ்சம் கொண்ட உலக ஜனங்களுக்கு
ராமரின் மென்மையான மனம் எப்படி புரியும்?..


ஜடாயு "தசரதன்..." என்ற பெயரை உச்சரித்த மறுகணமே,
ஸ்ரீ ராமருக்கு தன் 'தகப்பனாரை பார்த்த ஆனந்தம் உண்டானது' என்பது ஆச்சரியமில்லையே...

ஜடாயுவை வலம் வந்து, "தன் தகப்பனுக்கு சம்பந்தப்பட்டவர் என்பதாலேயே அவரை கௌரவித்து வணங்கினார்" ஸ்ரீ ராமர்.

ஸ்ரீ ராமர் 'வனவாசமாக வந்த விஷயத்தை சொல்ல, தன் தகப்பனார் தசரதர் காலகதி அடைந்து விட்டார்' என்று ஸ்ரீ ராமர் சொல்ல,
நண்பனை இழந்த ஜடாயு, மிகவும் வருத்தப்பட்டார்.
ஸ்ரீ ராமரை பார்த்து
"ராமா.. நீங்கள் இந்த பஞ்சவடியில் தங்கும் போது, ஒரு வேளை நீங்கள் இருவரும் வேட்டையாட செல்ல நேர்ந்தால், என் நாட்டுப்பெண் சீதையை நான் இருந்து காவல் காப்பேன்." என்று ஒரு தகப்பனாகவே பேசினார்.
ஒரு வருஷ காலம், பஞ்சவடியில் ஸ்ரீ ராமர், சீதை வசித்தனர்.

கொஞ்சம் அருகிலேயே ஜடாயுவும், ஒரு மரத்திலேயே அமர்ந்து கொண்டு சீதாராம தரிசனம் செய்து கொண்டிருந்தார்.

லக்ஷ்மணன், "குடில் அமைப்பது, வீடு பெருக்குவது, காய் கனிகள் கொண்டு வருவது" என்று சகல சேவையும் செய்து வந்தார்.


"இன்னும் ஒரு வருட காலத்தில் அயோத்தி திரும்ப போகிறோம்"
என்ற மனநிலையில் இருந்த சீதைக்கு
"அயோத்தி திரும்பும் போது, மாதா கௌசல்யாவுக்கு ஏதாவது கொண்டு போகலாமே!" என்று ஆசை தோன்றியது.

"மாரீசன்" என்ற ராக்ஷஸன், தங்கத்தாலான மாய மானாக தன்னை உருமாற்றிக்கொண்டு, காட்டில் அலைவதை பார்த்ததும்,
"அந்த தங்க மானை அயோத்தி எடுத்து சென்று, கௌசல்யா மாதாவுக்கு காட்டுவோம்" என்று ஆசைப்பட்டாள்.
"ராவண வதம்" என்ற அவதார நோக்கம் ஒரு புரம் ரகசியமாக இருக்க,
சீதை முதல் முறையாக "எனக்கு இந்த மானை பிடித்து தாருங்கள்."
என்று வாய் திறந்து கேட்டாள் என்றதும்,
"அந்த மானை எப்படியாவது பிடித்து தருவேன். மாய மானாக இருந்தால் கொன்று விட்டு திரும்புவேன்"
என்று சீதையிடம் சொல்லி கொண்டு ஸ்ரீ ராமர் புறப்பட்டார்.

மாய மானாக இருந்த மாரீசன், வெகு தூரம் ஸ்ரீ ராமரை இழுத்து செல்ல, "இனியும் நேரம் கடத்த முடியாது" என்று ஸ்ரீ ராமர் அந்த மாய மானை தன் அம்பினால் அடிக்க,
மாரீசன் என்ற அரக்கன் தன் சுய ரூபத்துடன் கீழே விழுந்து
"சீதே... சீதே...லக்ஷ்மணா.. லக்ஷ்மணா..."
என்று ஸ்ரீ ராமரின் குரல் போலவே அழைத்து உயிர் விட்டான்.

"ஸ்ரீ ராமருக்கு தான் ஏதோ ஆபத்து ஏற்பட்டு விட்டது"
என்று நிஜமாகவே நம்பி விட்டாள் சீதை.
லக்ஷ்மணனை கட்டாயப்படுத்தி போய் பார்க்க அனுப்பினாள்.

நிலைமை கை மீற,
ராவணன் போலியான சாதுவாக வேடம் போட்டு,
பிக்ஷை வாங்குவது போல வந்து,
சீதையை புஷ்பக விமானத்தில் (flight used 12 lak yr before 'treta yuga') இழுத்து கொண்டு இலங்கையை நோக்கி புறப்பட்டே விட்டான்.

சீதை நடக்கும் விபரீதத்தை கண்டு அலற ஆரம்பித்தாள்...
"ஐயோ. . என்னை ராவணன் தூக்கி செல்கிறான்.. யாராவது ஸ்ரீ ராமரிடத்தில் சொல்லுங்கள்.."
என்று அலற,

கொஞ்சம் கண் அயர்ந்து இருந்த ஜடாயு, சீதையை ராவணன் தூக்கி செல்வதை பார்த்து விட்டார்.

நடக்கும் விபரீதத்தை கண்டதும், வயதாகி போனாலும், தன் முழு பலத்தால், தன் இரு சிறகுகளையும் அடித்து கொண்டு, ராவணன் போகும் புஷ்பக விமானத்தின் அருகில் சென்று, ராவவனை பார்த்து கர்ஜித்தார்...
"ராவணா... எப்படிப்பட்ட காரியத்தை செய்து கொண்டிருக்கிறாய் நீ??...
இவள் யார் என்று நினைத்து தூக்கி செல்ல பார்க்கிறாய்?
ஸ்ரீ ராமபிரானின் தர்ம பத்னி இவள்.

நீ எப்பேர்ப்பட்ட 'பலம்' பொருந்தியவனாகவும் இருக்கலாம்...
நீ எப்பேர்ப்பட்ட 'தபோ' பலம் கொண்டவனாகவும் இருக்கலாம்..
இந்திரன் உட்பட அனைத்து தேவர்களையும் அடக்கியவனாகவும் இருக்கலாம்..
உலகையே ஆள்பவனாகவும் இருக்கலாம்...

எத்தகைய பெருமைகள் உன்னிடம் இப்போது வரை இருந்தாலும், 
நீ சீதையை அபகரித்து செல்ல முயன்றால், உன் தவம் எல்லாம் பொசுங்கி, நீயும் அழிந்து போவாய்..


பிறர் மனைவியை தொடுவதை காட்டிலும் பெரிய பாபம் உலகத்தில் கிடையாது.
ஒரு கணவன் தன் மனைவியை எப்படி காப்பானோ, அது போல பிறர் மனைவியை காக்க வேண்டுமே தவிர, இப்படி கீழ்த்தரமான காரியம் செய்யலாமா?!! 

சாஸ்திரம் தெரிந்தும் இந்த பாபத்தை செய்கிறாய்..
உன் அழிவு காலம் நெருங்கி விட்டதால் தான் இந்த பாபத்தை செய்ய துணிந்து விட்டாய்..

நீ என்னை விட வயதில் சிறியவன்.. நானோ முதியவன்.
உன்னை எதிர்த்து சமாளிக்க முடியுமா? என்பது எனக்கு முக்கியமில்லை... ஆனால்,
என் உயிர் இருக்கும் வரை, சீதையை கொண்டு போக விட மாட்டேன்.."
என்று 'உலகமே நடுங்கும் ராவணனை' பார்த்து கர்ஜித்தார் ஜடாயு.

பக்ஷியாக இருந்தாலும், வயதான ஜடாயு ராவணனுடன் போர் செய்தார்.

"தான் உயிருடன் இருக்கும் வரை சீதையை கொண்டு செல்ல முடியாது" என்று தன் முழு பலத்தாலும் போர் செய்ய ஆரம்பித்தார்.

ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் யுத்தம் ஆரம்பிக்க,
தன் "அலகுகளையும், சிறகுகளையும்" மட்டும் வைத்து கொண்டே, ஆயுதங்கள் ஏந்திய ராவணனுடன் போர் செய்தார்.

தன் அலகுகளால், சாரதியை கொன்று,
ராவணன் கையில் இருந்த நாண் கயிறை அறுத்து,
அவனிடம் இருந்த வில்லை முறித்து,
ராவணனின் மகுடத்தை கீழே தள்ளி
கடுமையாக யுத்தம் செய்தார் 'ஜடாயு'.
ஜடாயுவை சமாளிக்க முடியாத ராவணன், கடைசியில் சிவபெருமான் கொடுத்த "சந்திரஹாசம்" என்ற வாளை உருவி கொண்டு, ஜடாயுவின் இரண்டு இறக்கைகளையும்  துண்டிக்க,
"சீதே.. சீதே..."
என்று ஜடாயு கீழே விழுந்து விட்டார்.

ராமன் வரும்வரை உயிர் போகாமல் "உயிரை பிடித்து கொண்டு இருந்தார்" ஜடாயு.

ராமபிரான் மாரீச்சனை கொன்றதும், இவன் "ஹா சீதே" என்று குரல் கொடுக்கவே,
'இவன் இப்படி குரல் கொடுக்க காரணம் என்னவோ?!. என்ன நேர்ந்ததோ சீதைக்கு?!..."
என்று பதட்டத்துடன் ஸ்ரீ ராமர் தன் குடிலுக்கு ஓடி வர, எதிரில் லக்ஷ்மணர் வருவதை பார்த்ததும்,
"சீதை எங்கே?..." 
என்று கேட்க, நடந்த சம்பவத்தை அறிந்து, லக்ஷ்மணன் கையை பற்றி கொண்டு, வேகவேகமாக ஓடி வந்து குடிலை பார்க்க,
காய் கனிகள் சிதறி, அங்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது என்பதை உணர்ந்தார் ஸ்ரீ ராமர்.

அந்த இடமே சூன்யமாகி விட்டது..
சீதா பிராட்டியை காணவில்லை.

"கோதாவரியில் தண்ணீர் எடுக்க போய் இருப்பாளோ??!!"
என்று ஸ்ரீ ராமர் "சீதே..சீதே...மைதிலி... வைதேகி" என்று குரல் கொடுத்தும்,
பதிலுக்கு சீதை குரல் கேட்காமல் இருக்க,
நடந்த விபரீதத்தை புரிந்து கொண்டு கலங்கி நின்றார்.

"வனவாசம் போ.. உனக்கு அயோத்தி அரியணை கிடையாது"
என்று சொன்ன போது கூட
"அப்பொழுது பூத்த செந்தாமரையை வென்றதுவோ" 
என்று கம்பன் சொல்வது போல, சோகப்படாமல், கலங்காமல், மகிழ்ச்சி குறையாமல் இருந்த ஸ்ரீ ராமர்,

சீதையை தொலைத்ததும், தாளமுடியாத துக்கத்தில் மூழ்கினார்.
எதற்கும் கலங்காதவர் கலங்கினார்.

வனத்தில் மனித நடமாட்டமே  கிடையாது...
யாரிடமும் கேட்க கூட முடியாத நிலை.
"சீதையை கண்டீர்களா? சீதையை கண்டீர்களா?"
என்று ஸ்ரீ ராமர் அங்கு இருந்த வில்வ மரத்தையும், செடி கொடிகளையும், மலையையும் கேட்டு கொண்டே கதறி அழுதார்.


"இப்படி மனம் தடுமாறி நிற்கிறாரே ஸ்ரீ ராமர்!! இவர் பெருமாளாக இருப்பாரா?
பெருமாள் எப்பொழுதும் ஆனந்த மூர்த்தியாக தானே இருப்பார்??"
என்று ஞானம் இல்லாதவர்களுக்கு சந்தேகம் வருமாம்.

ஆஞ்சநேயர் சொல்கிறார்
"பக்தன் துன்பத்தை கண்டு, ஒரு துளி பக்தனை நினைத்து கண்ணீர் கூட விடாத பகவான், நமக்கு வேண்டவே வேண்டாம்." 
என்கிறார்.
மேலும் ஆஞ்சநேயர் சொல்கிறார்
"ஸ்ரீராமர் ஆனந்த மூர்த்தியாக தான் இருக்கிறார்.
இருந்தும், தன் பக்தன் துன்பப்படுவதை பார்த்து, அவர் நமக்காக கண்ணீர் சிந்துகிறார்"
என்கிறார்.

ஸ்ரீ ராமரின் முதல் பக்தை 'சீதை' அல்லவா.

"வனவாசம் போக வேண்டும்" என்று ஸ்ரீ ராமர் சொன்னதும்,
"என்னை உங்கள் பத்னியாக கூட்டி செல்ல வேண்டாம்..
உங்கள் பக்தையாக கூட்டி செல்லுங்கள்.. உங்களுக்கு ஒரு குறை இல்லாமல் சேவை செய்வேன்"
என்று சொன்னவள் அல்லவா சீதை.
"அப்படிப்பட்ட சீதையை இழந்து விட்டோமே!!" என்றதும்,
"அருமையான பக்தையான சீதையை தொலைத்து விட்டேனே! தன் பக்தையான சீதை கஷ்டப்படுவாளே!!"
என்று நினைத்து கலங்கினார் ஸ்ரீ ராமர்.




பக்தனுக்காக கலங்கும், பக்தன் துயர் போக்க தானே வந்து காப்பாற்றும் தெய்வமல்லவா, ஸ்ரீ ராமர்.
ஸ்ரீ ராமரை நம்பி கெட்டவர்கள் உலகில் இல்லையே.

சீதையை காணாமல், தேடி வந்த ராமர், "சிறகுகள் வெட்டப்பட்டு உயிர் பிரியும் நிலையில் கிடக்கும் ஜடாயுவை பார்த்ததும், ஏதோ சீதை சம்பந்தமாக பெரிய யுத்தம் நடந்துள்ளது"
என்று உணர்ந்தார்.

ஜடாயுவை தன் மடியில் போட்டுகொண்டு, தகப்பனை இழந்தது போல அழுதார்.
ஸ்ரீராமர் வந்து விட்டதை பார்த்த ஜடாயு,
"ராமா.. உனக்கா தான் உயிரை பிடித்து வைத்துள்ளேன்..
என்னுடைய ப்ராணனை கொடுக்க முயற்சித்தும், என் ப்ராணனுக்கும் மேலான என் மகள் சீதையை லங்காதிபதியான ராவணன் தூக்கி சென்று விட்டான்.." என்றார்.

"ராவணன் ஏன் சீதையை தூக்கி சென்றான்? கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள்"
என்று கேட்க,

மேலும் பேச முடியாத நிலையில்,
"அந்திம காலத்தில், தகப்பன் தன் மகனுக்காக மனமுவந்து சொல்லும் ஆசிகள் பலிக்கும் என்பார்கள்.

ராமா!!... அபூர்வமான மூலிகையை தேடி வந்தவன் போல வரும் நீ, கட்டாயம் சீதையை மீண்டும் அடைவாய்!! அடைந்து, அயோத்தி ராஜ்யத்தையும் அடைவாய்.. தீர்க்க ஆயுசுடன் இருப்பாய்"
என்று சொல்லிக்கொண்டே, ஸ்ரீ ராமரின் மடியிலேயே ஜடாயுவின் உயிர் பிரிந்து விட்டது.

தசரதருக்கு கிடைக்காத பாக்கியம், தகப்பனாக மதித்த ஜடாயுவுக்கு கிடைத்து விட்டது.

மகன் மடியில் உயிர் விடும் பாக்கியத்தை, ஜடாயு பெற்று விட்டார்.
காசியில், இறந்து போகும் அனைத்து ஜீவனுக்கும்,
சிவபெருமானே "ராம" நாமத்தை கடைசி மூச்சு விடும் சமயத்தில் அந்த ஜீவனுக்கு காதில் சொல்லி, 'மோக்ஷம்' அனுப்புகிறார்.


கடைசி மூச்சு விடும் சமயத்தில், "ராமா" என்ற நாமத்தை காதில்  கேட்டதற்கே மோக்ஷம் என்றால்,
சாஷாத் ஸ்ரீ ராமரே அவதாரம் செய்து இருக்கும் போது,
அவர் மடியிலேயே, 
அவரை பார்த்து கொண்டே உயிர் பிரியும் பாக்கியத்தை பெற்ற 'ஜடாயுவுக்கு' மோக்ஷம் நிச்சயம் அன்றோ!!

"மோக்ஷம் நிச்சயம்" என்று அறிந்து இருந்த ஸ்ரீ ராமர்,
"தனக்காக உயிரையே விட்டு விட்டாரே? இவருக்கு பதில் செய்ய முடியாமல் ஆகி விட்டதே" என்ற தாபம் உண்டாகிவிட்டது ராமபிரானுக்கு..

இது ஒரு "பக்ஷி வர்க்கம்" என்று புதைக்க விரும்பவில்லை ஸ்ரீராமர்.

"தன் தகப்பனுக்கு கொடுக்கும் ஸ்தானத்தை கொடுக்க நினைத்தார்" ஸ்ரீ ராமர்.
பக்ஷி வர்க்கமாக இருந்தாலும்,
"தன் கையாலேயே ஜடாயுவின் சரீரத்துக்கு அபிஷேகம் செய்து, 
திருமண் இட்டு, 
லக்ஷ்மணை கொண்டு சிதை மூட்ட சொல்லி, 
அந்த சிதையில் ஜடாயுவின் சரீரத்தை வைக்கும் போது, 
என்னென்ன வேத மந்திரங்கள் உண்டோ, அனைத்தையும் தானே சொல்லி, 
ப்ரம்மமேதா சம்ஸ்காரம் முறையாக செய்து, 
தன் கையாலேயே நெருப்பு போட்டார்" ஸ்ரீராமர்.

சந்நியாசிக்கு தகனம் கிடையாது.
சந்நியாசிகளுக்கு வேறு விதமான ஸம்ஸ்கார முறைகள் சொல்லப்பட்டு உள்ளது.

"உடல் வேறு ஆத்மா வேறு" என்று ஞானத்தை சம்பாதித்த சந்யாசிகள், உடலை விட்டு பிரியும் போது, முழுமனத்துடன் இஷ்டப்பட்டு செல்கிறார்கள்.
ஆதலால் உடலை விட்டு பிரிந்த துக்கத்தை சந்யாசிகள் பெறுவதில்லை.

ஆதலால் சந்யாசிகளை புதைத்தாலும்,
"உடல் புதைக்கப்பட்டதே, உடல் உள்ளே இருக்கிறதே" என்று வருத்தப்படாமல்,
"எப்படியாவது அந்த உடலில் மீண்டும் புகுந்து விட மாட்டோமா?"
என்ற எண்ணமும் இல்லாமல் இருப்பதால், அவர்கள் நற்கதி அடைந்து விடுகிறார்கள்.

குடும்பஸ்தர்கள் யாவருக்கும் இறந்த பின், "அவர்கள் உடலை தகனம் செய்து விட வேண்டும்" என்று சாஸ்திரம் சொல்கிறது.

சன்யாசம் பெறாதவர்களை புதைப்பது, அந்த ஜீவனை அந்த உடல் புதைக்கப்பட்ட இடத்தை விட்டு பிரிய விடாமல் செய்யும்.

புதைக்கும் பழக்கம் உள்ள பிற மதங்களில் "பிசாசு, சாத்தான், ஆவிக்கு கொடுக்கப்படும் பயம் அதிகம். ஆவிக்கு கொடுக்கப்படும்  முக்கியத்துவம் பல சமயம் அவர்கள் வழிபடும் தெய்வத்துக்கு கூட கிடையாது.".
இந்த எண்ணங்களுக்கு காரணமே இந்த புதைக்கும் பழக்கம் தான்.

புதைக்கும் பழக்கம்,
  • இறந்த ஜீவனுக்கும் நல்லதல்ல, 
  • பூமியையும் பிணங்களால் நிரப்பி வாழ இடமில்லாமல் செய்வதும் நல்லதல்ல.
"உடல் அழிந்து பஸ்பமாகி விட்டது" என்று பார்த்த பின் தான், உடலை விட்டு பிரிந்த ஜீவன், இனி ஒன்றும் செய்வதற்கு இல்லை என்று சமாதானம் அடைகிறான்.
அந்த ஜீவன் எம லோகத்துக்கு அனுப்பப்பட்டு பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்க, நரக லோகம் இருந்து விட்டு, மீண்டும் பிறக்க பூலோகம் வந்து விடுகிறார்கள்.

"பாவ புண்ணியம் இரண்டுமே செய்யாத" முமுக்ஷுக்கள் (மோக்ஷத்தை நாடுபவர்கள்) மீண்டும் பிறக்காமல் மோக்ஷம் என்ற வைகுண்டத்தை அடைந்து விடுகிறார்கள்.

வேதம் கொஞ்சம் அறிந்த ப்ராம்மணனுக்கு, "அனாஹித அக்னி" என்ற முறையில் உடலை தகனம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

வேதம் முழுவதும் கற்று அறிந்த தீட்சிதர்கள், கனபாடிகள் போன்றவர்கள் இறந்தால், "ஆஹித அக்னி"  என்ற முறையில் உடலை தகனம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது சாஸ்திரம்.
குடும்பத்தில் இருந்த தேசிகர் போன்ற மகான்களாக இருந்தால் மட்டுமே, "ப்ரம்ம மேதா சம்ஸ்காரம்" செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.


பொதுவாக வேதம் அறியாதவர்களுக்கு "கோவிந்தா கோவிந்தா..." என்று பகவானின் நாமத்தை சொல்லி கொண்டே, "நெருப்பு போட வேண்டும்" என்று சாஸ்திரம் சொல்கிறது.

இறந்தவர்களுக்கு முன்னால் வெடி போட்டு கொண்டு போவது, 
இறந்தவர்களுக்கு முன்னால் ஆடி கொண்டு போவது, 
உடலை விட்டு பிரிந்த ஜீவனுக்கு புண்ணியம் தராது. 
மரணம் ஒரு இழப்பல்லவா...?

1960 வரை கூட, தமிழ்நாட்டில் "கோவிந்தா .. கோவிந்தா.." என்று, பகவானின் நாமத்தை சொல்லிக்கொண்டே தான் இறந்தவர்கள் உடலை எடுத்துக்கொண்டு தகனம் செய்தனர்.

இந்த 'புண்ணியத்தை' கூட, இன்று அந்த இறந்த ஜீவனுக்கு கொடுக்க மறந்து விட்டார்களே இந்த தமிழகத்தில்!!

கிறிஸ்தவன் இறந்தால், அவர்கள் கூட அவர்கள் தெய்வ சம்பந்தமாக ஏதோ சொல்லி, புதைக்கிறார்கள்.
முஸ்லீம் இறந்தால் கூட, அவர்களும் ஏதோ அவர்கள் முறையில் ஏதோ பிரார்த்தனை செய்து புதைக்கிறார்கள்.

வேத மந்திரங்கள் ஓதி தகனம் செய்ய வேண்டாம்...
குறைந்தபட்சம்,
"கோவிந்தா கோவிந்தா" என்று பரவாசுதேவன் நாமத்தையாவது சொல்லி கொண்டு தகனம் செய்யலாமே!!.ஹிந்துக்கள்!!
பகவானின் நாமத்தை கூட சொல்லாமல், ஆட்டம் போட்டு கொண்டு,
"உடலை விட்டு ஜீவன் போய் விட்டான்" என்று எரித்து விட்டால்,
எத்தகைய அவமரியாதையை செய்கிறோம் அந்த ஜீவனுக்கு!! என்று யோசிக்க வேண்டாமா?
ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டாமா?

இது வருத்தப்பட வேண்டிய விஷயமில்லையா..ஹிந்துக்களுக்கு.

ஹிந்துக்களாக பிறந்தும், பகவானின் நாமத்தை சொல்லாமல் எரித்து விட்டால், இறந்த ஜீவனுக்கு துரோகம் செய்தோம் என்றல்லவா ஆகி விடும்!!.

வட இந்தியாவில் இன்று வரை,
இறந்த உடல்களை தூக்கி கொண்டு
"ராம நாம் சத்ய ஹை" (ராம நாமமே சத்யம்)
என்று உரக்க சொல்லி கொண்டு தகனம் செய்கின்றனர்.

வெடி போட்டு, ஆட்டம் போட்டு, உடலை எடுத்து கொண்டு செல்லும் ஹிந்துக்கள், ஜீவனின் நல்ல கதிக்காகவாவது "கோவிந்தா.. கோவிந்தா..." என்று சொல்லலாமே!!..
மரணம் ஒரு இழப்பல்லவா...?

மெளனமாக, பகவான் நாமத்தை சொல்லி கொண்டு ஜீவனின் நற்கதிக்கு வழி செய்ய வேண்டாமா!! ஹிந்துக்கள்.

வேதம் அறிந்தவர்களாக இருந்தால், அவர்களுக்கு வேத மந்திரங்கள் சொல்லி நெருப்பு போடலாம் என்று சொல்கிறது.

பக்ஷியான ஜடாயுவுக்கு, "கோவிந்தா கோவிந்தா..." என்று பகவானின் நாமத்தை சொல்லி கொண்டே கூட, ஸ்ரீ ராமர் நெருப்பு போட்டு இருக்கலாம்!!

ஆனாலும் ஸ்ரீ ராமர், ஜடாயுவுக்கு வேத மந்திங்கள் சொல்லி,
மோக்ஷத்திற்கு அதிகாரம் உள்ள முமுக்ஷக்களுக்கு செய்யும் "ப்ரம்ம மேதா சம்ஸ்காரத்தை" துணிந்து செய்கிறார்.

தன் தகப்பன் போன்று கௌரவம் கொடுத்த ஜடாயுவுக்கு,
சீதைக்காக உயிரையே தியாகம் செய்த ஜடாயுவுக்கு,
தன் விருப்பத்தின் காரணமாக,
தன் கையால் "ப்ரம்ம மேதா சம்ஸ்காரம் செய்து, நெருப்பு போட்டார்" ஸ்ரீராமர்.

"மோக்ஷத்தை தேடும் மகான்களுக்கு தான் ப்ரம்ம மேதா சம்ஸ்காரம் மோக்ஷத்தை தரும்" என்று சொல்கிறது சாஸ்திரம்.

ஜடாயு என்ற பக்ஷியோ, மோக்ஷத்திற்காக வாழ்ந்த ஜீவன் இல்லை.

"தன் ஆசைக்காக", இப்படி ப்ரம்ம மேதா சம்ஸ்காரம் செய்தாரே தவிர, ப்ரம்ம மேதா சம்ஸ்காரம் செய்ததால் ஜடாயு மோக்ஷம் அடைவார்!! என்று சாஸ்திரம் அறிந்த ஸ்ரீ ராமரும் நினைக்கவில்லை..
காரணம்,
மோக்ஷத்திற்காகவே வாழ்ந்த தேசிகர் போன்ற மகான்களுகளுக்கு மட்டுமே, "ப்ரம்ம மேதா சம்ஸ்காரம்" பலனை கொடுக்கும்.


இந்த உண்மை ஸ்ரீராமருக்கும் தெரியும்.

ஸ்ரீ ராமருக்கோ, "ஜடாயுவுக்கு மோக்ஷம் கொடுக்க வேண்டும்" என்று ஆசை ஏற்பட்டது.

தன் ஆசைக்காக செய்த "ப்ரம்ம மேதா சம்ஸ்காரம்" முமுக்ஷுக்களுக்கு தான் பலிக்கும் என்பதால்,
"ஜடாயு இந்த ஸம்ஸ்காரத்தால் மோக்ஷம் அடைவாரா??" என்பது சந்தேகமே !
"ஜடாயுவின் புண்ணிய பலத்தால் மோக்ஷம் அடைவாரா?" என்று பார்த்தாலும் சந்தேகமே...

காரணம்,
சீதைக்காக போர் செய்து உயிர் விட்ட ஜடாயுவுக்கு,
சாஸ்திரப்படி, "வீர சொர்க்கம் கிடைக்குமே தவிர, மோக்ஷம் கிடைக்க வாய்ப்பில்லை".

'ப்ரம்ம மேதா ஸம்ஸ்காரமும்' ஜடாயுவுக்கு மோக்ஷம் கொடுக்க முடியாது,
ஜடாயுவின் 'புண்ணியமும்' மோக்ஷம் கொடுக்க முடியாது
என்று உணர்ந்த ஸ்ரீராமர்,
"தான் பரவாசுதேவனாகவே இருந்து ஜடாயுவுக்கு மோக்ஷம் தர" முடிவு செய்தார்.

யார் கேட்டாலும் "நான் சாதாரண மனிதன், தசரதன் பிள்ளை" என்றே சொல்லிக்கொள்ளும் ராமபிரான்,
இந்த இடத்தில் மட்டும் தான் "தான் சர்வேஸ்வரன்" என்று வெளிக்காட்டுகிறார்.

உரிமை இல்லாத வீட்டுக்கு, யாரோ ஒருவன் அவன் நண்பனை பார்த்து  "இன்னொரு வீட்டுக்குள் நீ போ" என்று சொன்னாலும், அந்த உரிமையாளன் துரத்தி விட வாய்ப்பு உண்டு.

ஆனால் வீட்டின் உரிமையாளனே, ஒருவனை பார்த்து, "நீ என் வீட்டுக்கு என் அனுமதியோடு போ" என்று சொல்ல முடியும். யாரும் எதிர்க்க முடியாது.

நெருப்பு போட்டு விட்டு, ஸ்ரீராமர் பரமாத்மாவாக பேச ஆரம்பிக்கிறார்,
"ஜடாயு, என் அனுமதியோடு நீ மோக்ஷத்திற்கு செல்.
மோக்ஷம் அடையும் முன்,
மஹா புருஷர்கள், உத்தமமான பிராம்மணர்கள், எந்தெந்த புண்ணிய லோகங்களை அடைவார்களோ, அந்த லோகங்கள் எல்லாம் சென்று பார்த்து விட்டு,
பூமி தானம் செய்த பெரியோர்கள் எந்தெந்த புண்ணிய லோகங்களை அடைவார்களோ, அந்த லோகங்கள் எல்லாம் சென்று பார்த்து விட்டு,
தர்மத்துக்காக போராடி, போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த க்ஷத்ரியர்கள் எந்தெந்த லோகங்களை அடைவார்களோ, அந்த லோகங்கள் எல்லாம் சென்று பார்த்து விட்டு,
முடிவாக பரமபதம் என்ற மோக்ஷத்தை அடைவாயாக..!"
என்று வாசுதேவனாக பேசினார் ராமபிரான்.

ராமபிரான் "ஜடாயுவுக்கு மோக்ஷம் தர வேண்டும்" என்று ஆசைப்பட்ட பின்,
உடனே மோக்ஷம் (ஸத்யோ முக்தி) செல்ல அனுமதித்து இருக்கலாமே?
ஏன் இப்படி பல லோகங்களை பார்த்து விட்டு கடைசியாக பரமபதம் செல்ல சொன்னார்? 
என்று நமக்கு தோன்றலாம்.

மோக்ஷம் என்ற பரமபதத்தை ஒருவன் அடைந்து விட்டால், மீண்டும் அவனுக்கு பிறவி கிடையாது..
"சத்ய லோகம் முதல் பாதாளம் வரை", எந்த லோகத்துக்கும் திரும்பி வர இவர்களுக்கு அவசியமும் இல்லை.
ஒரு வேளை,
ஜடாயுவுக்கு உடனே நேரடியாக மோக்ஷத்தை கொடுத்து விட்டால்,
போகும் வரை "சீதைக்கு என்ன ஆனதோ??" என்று வருத்தப்படுவாரே என்று உணர்ந்த ராமபிரான்,
"தான் சீதையை மீட்டு, அயோத்தி அரியணை ஏறும் வரை, பல புண்ணிய லோகங்களில் இருந்து கொண்டே பார்த்து கொண்டு,
சீதை மீட்கப்பட்ட விஷயத்தை அறிந்த பின், 
மன கவலை இல்லாமல், மோக்ஷம் அடையட்டும்" 
என்பதால், இவருக்கு இப்படி ஒரு மோக்ஷ க்ரமத்தை கொடுத்தார் ஸ்ரீ ராமர்.
இதற்கு "க்ரம முக்தி" என்று பெயர்.

ராமர் "தன் அனுமதியால் மோக்ஷம் செல்" என்று வாக்கு கொடுத்ததும், அது நிரூபணம் ஆகும் விதமாக,
ஜடாயு தன் சரீரத்தை விட்டு, 'திவ்ய பார்ஷத ரூபம்' பெற்று, மோக்ஷம் செல்ல தயாரானார்.
உடலை விட்டு பிரிந்த ஜடாயு, திவ்யமான பார்ஷத ரூபத்துடன் திவ்யமான ஞானத்துடன், ஸ்ரீ ராமரை பார்த்து ஸ்தோத்திரம் செய்கிறார்,
"சகல உலகங்களும் இருப்பதற்கு காரணமான,
வேதத்துக்கு காரணமான,
முதல் தெய்வமான,
பரமாத்மாவாக இருக்கும் உங்களுக்கு நமஸ்காரம் !


ஒவ்வொரு யுகத்திலும் எப்பொழுதெல்லாம் தர்மம் வீழ்கிறதோ!! அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலை நிறுத்த தேவரீர் அவதாரம் செய்கிறீர்கள்.

மனிதனாக இப்பொழுது நீங்கள் செய்து இருக்கும் அவதாரமும், 'கேவலம் ராக்ஷஸர்களை அழிப்பதற்காக இல்லை' என்று அறிகிறேன்.

உங்கள் 'சங்கல்பத்தின்' மூலமே ராக்ஷஸர்களை வதம் செய்ய முடியும். இதற்கு அவதாரம் செய்ய தேவையில்லை என்று அறிகிறேன்.
'எப்படிப்பட்ட கஷ்டம் வந்தாலும், எப்படிப்பட்ட நஷ்டம் வந்தாலும்,
ஒரு மனிதன் தன்னுடைய தர்மத்தை மீற கூடாது'
என்று காட்டுவதற்காக மனித அவதாரம் செய்து உள்ளீர்கள் என்று அறிகிறேன்.

அனைத்தும் அறிந்தவனாக (சர்வஞ்ன்) இருந்தும், மனித அவதாரத்தில் ஒன்றும் தெரியாதவர் போல இருக்கிறீர்.

மகா சக்தி (சர்வ சக்தன்) உடையவனாக இருந்தும், பிறர் உதவியை நாடுகிறீர்.
(குரங்குகள் உதவியை இதன் பிறகு கேட்க போகிறார் என்று அறிந்து சொல்கிறார் ஜடாயு)

எப்பொழுதும் ஆனந்தமாக (ஆனந்தமூர்த்தி) இருந்தும், தான் துக்கப்படுவது போல இருக்கிறீர்.

உங்கள் கபடநாடகம் தெரியாதா?

சீதையை காணவில்லை என்றதும்,
'சீதை எங்கே? சீதை எங்கே? சீதை கண்டீர்களா? சீதை கண்டீர்களா?'
என்று சாதாரண மனிதனை போல, சக்தி இல்லாதவன் போல தேடி வருகிறீர்கள்.

கடைசியில் இங்கு வந்து, ஒரு கழுகுக்கு
'என் ஆணையால் மோக்ஷம் கொடுக்கிறேன்'
என்று சொல்ல, இதோ திவ்ய பார்ஷத ரூபத்துடன் மோக்ஷம் செல்ல நிற்கிறேனே!!
இது எப்படி? 

காசியில் விஸ்வநாதர், அங்கு உயிர் விடும் அனைத்து ஜீவனுக்கும் 'ராம ராம ராம' என்று உங்கள் நாமத்தை (பெயரை) தானே, அவர்கள் காதில் சொல்லி மோக்ஷம் கொடுக்கிறார்.

'உங்கள் பெயர் சொன்னாலே மோக்ஷம் கிடைக்குமென்றால்,
ஸ்ரீராமனாகிய உங்கள் கைகளாலேயே சம்ஸ்காரம் செய்யப்பட்டேன் என்று பார்க்கும் போது, என் பாக்கியத்தை என்னவென்று சொல்வது?'

'ராம நாமத்தாலேயே" சிவபெருமான் 'மோக்ஷம் கொடுக்கிறார்' என்றால், 
இந்த உடலை விட்டு பிரியும் போது, 'ராமரே எனக்கு அருகில் இருந்தார்!!' என்ற 'என் பாக்கியத்தை' என்னவென்று சொல்வது?

'ராம' நாமமே ஒருவனுக்கு மோக்ஷம் கொடுத்துவிடுமென்று தெரிந்தும், பறவையான எனக்கு போய் தகனமும் செய்து, வைதீக சம்ஸ்காரமும் சேர்த்து செய்கிறீர்.

'ராம நாமமே மோக்ஷ வாசலை கொடுக்கும்' என்ற போது,
எனக்கு  'வைதீக சம்ஸ்காரம் செய்தது, மோக்ஷத்திற்கு அல்ல, உங்கள் தனிப்பட்ட ஆசையினால் செய்தீர்கள்' என்று அறிகிறேன்.

'தசரதனை போன்று, என்னையும் தகப்பன் ஸ்தானத்தில் என்னை நீங்கள் நினைத்ததால்,
உங்கள் கையால் கொள்ளி போட  ஆசைப்பட்டீர்கள்' என்று அறிகிறேன்.

பறவைக்கு சம்ஸ்காரம் கிடையாது..  தேவையுமில்லை..
ஆனாலும், 
'எனக்கு வைதீக சம்ஸ்காரம் செய்து, உங்கள் ஆசையை, பூர்த்தி செய்து கொண்டீர்கள்' என்று அறிகிறேன்.

உங்கள் மடியில் உயிரை விட்ட பாக்கியத்தால், எனக்கு மோக்ஷம் நிச்சயித்துவிட்டது.

'சீதையை காக்க தன் உயிரையே விட்டு விட்டாரே' என்று பார்க்கும் நீங்கள்,
'ஜடாயு'வுக்கு என்ன பதில் செய்வேன்?
என்று நினைக்கிறீர்கள்.

"நான் செய்த சிறு முயற்சிக்கு, மோக்ஷத்தையும் கொடுக்க சம்மதித்த உங்களுக்கு,
நான் என்ன செய்ய போகிறேன்?" என்று திகைக்கிறேன்...

உங்களுடைய கருணையே எப்பொழுதும் மிஞ்சி இருக்கிறது.
'உங்களுடைய கருணையை பார்க்க பார்க்க, நாம் செய்யும் பக்தி குறைவாக இருக்கிறது' என்று புரிகிறது.

உங்களுடைய கருணையை உணர்ந்த அடியார்கள் நிலை எப்படி இருக்கும்? என்றும் புரிகிறது.


இத்தகைய கருணையை பரமாத்மா நாராயணன் எனக்கு வர்ஷிக்கிறாரே!! அவருக்கு நாம் எப்படி பதில் செய்வோம்?
என்று நினைக்கும் அடியார்கள், 
முதலில்
அவர்கள் 'வாக்கை' உங்களுக்கு அர்ப்பணம் செய்து விடுகிறார்கள்.
'வாக்கு இனி உலக விஷயம் பேசாது' என்ற பிறகு, 
எப்பொழுதும் 'ராம ராம ராம ராம ராம ராம ...' என்று சொல்லி தன் வாக்கை உங்களுக்கு சமர்ப்பணம் செய்கின்றனர்.

நீங்களோ அதை விடவும் கிருபை செய்து விட,
அவர்கள் 'மனதையும்' உங்களுக்கு அர்ப்பணம் செய்து விடுகிறார்கள்.
எப்பொழுதும் உங்கள் நினைவுகளே கொள்கிறார்கள். வேறு நினைவை மறக்கிறார்கள்.

நீங்களோ அதை விடவும் கிருபை செய்து விட,
அவர்கள் 'உடலையும்' உங்களுக்கு அர்ப்பணம் செய்து விடுகிறார்கள்.
எப்பொழுதும் எம்பெருமான் கருணையை நினைத்து, 
கண்களால் கண்ணீர் பெருக்கி, 
கையால் பூஜை செய்து கொண்டு, 
கால்களால் நடந்து சென்று, 
எப்பொழுதும் அவர் சரணத்திலேயே 
உடலால் கைங்கர்யம் செய்கிறார்கள்.

நீங்களோ அதை விடவும் கிருபை செய்து விட,
அவர்கள் 'ஆயுளையும்' உங்களுக்கென்றே அர்ப்பணம் செய்து விடுகிறார்கள்.
தன் 'ஆயுட்காலம் முழுவதும் நீங்களே லட்சியம்' என்று ஆத்ம சமர்ப்பணம் செய்து, உங்களுக்காகவே கடைசிவரை வாழ்ந்து விடுகின்றனர், உன் அடியார்கள்.

இப்படிப்பட்ட அடியார்கள் அநேக பேர் உங்களுக்கு உண்டு.
அப்படிப்பட்ட அடியார்கள் கூட்டத்தில், 'அடியேனும் ஒருவன்'.

ஹே ரகுநாதா!, 
உங்கள் சரணத்தில் என் ஆயுளையே அர்ப்பணம் செய்தேன்.

பொதுவாக 'பரோபகாரார்த்தம் இதம் சரீரம்' என்று சொல்கிறார்கள்.
'இந்த உடம்பு கொடுக்கப்பட்டதே பிறருக்கு உதவியாக இருப்பதற்கு தான்' என்று சொல்கிறார்கள்.

'என் சரீரம் உங்களுக்காக அர்ப்பணம் செய்யப்பட்டது' 
என்ற பாக்கியத்தை நினைக்கும் போது, நான் பிறவி எடுத்த பயன் பெற்றேன் என்று அறிகிறேன்.

எப்படி இருந்தாலும், என்றோ ஒரு நாள் நிச்சயமாக அழிய கூடியது தான் இந்த சரீரம் (உடல்).
இந்த சரீரம், இன்று எனக்கு நீங்கி விட்டது.
உங்கள் கையால் தகனம் செய்யப்படும் பாக்கியத்தையும் பெற்றது.

உங்களையும் நேரில் காணும் பாக்கியமும் பெற்றேன்.


உங்களிடமிருந்து விடைபெற்று, நீங்கள் திறந்து விட்ட வைகுண்டம் நோக்கி செல்கிறேன்"
என்று நமஸ்கரித்து விடைபெற்றார் ஜடாயு.

ஜடாயுவை மோக்ஷம் அனுப்பி, ஸ்ரீராமர் ராவணனை ஒழித்து, சீதையை மீட்க, லக்ஷ்மணனுடன் கிளம்பினார்.



2 comments:

  1. "தாய் தந்தையே" கண் கண்ட தெய்வம் என்று சொல்பவன், தந்தையை எப்படி மதிப்பான்?... தெரிந்து கொள்ளவாவது செய்வோமே..

    ராமபிரான் எதற்காக மனிதனாக அவதாரம் செய்தார்?.. ராவணனை, பரமாத்மா அவதாரம் செய்யாமலேயே அழித்து இருக்கலாமே... உண்மையான காரணம் என்ன?..

    இறைவனின் கருணையை உணர்ந்தவர்கள் நிலை எப்படியெல்லாம் இருக்கும்?..
    தெரிந்து கொள்வோமே...


    https://www.proudhindudharma.com/2019/09/RamRevealedHimselfOnce.html

    ReplyDelete
  2. "தாய் தந்தையே" கண் கண்ட தெய்வம் என்று சொல்பவன், தந்தையை எப்படி மதிப்பான்?... தெய்வம் தானே காட்ட முடியும்.
    தெரிந்து கொள்ளவாவது செய்வோமே..

    ராமபிரான் எதற்காக மனிதனாக அவதாரம் செய்தார்?.. பரமாத்மா அவதாரம் செய்யாமலேயே ராவணனை அழிக்க முடியுமே... உண்மையான காரணம் என்ன?..

    மோக்ஷம் அடைய தகுதி உள்ளவர்கள் நேரடியாக வைகுண்டம் சென்று விடுவார்கள்.. ஏன் ஜடாயு மட்டும் பல லோகங்களில் தங்கி பிறகு சென்றார்?

    இறைவனின் கருணையை உணர்ந்தவர்கள் நிலை எப்படியெல்லாம் இருக்கும்?..
    தெரிந்து கொள்வோமே...

    https://www.proudhindudharma.com/2019/09/RamRevealedHimselfOnce.html

    ReplyDelete