Followers

Search Here...

Saturday, 20 October 2018

"அறம், பொருள், இன்பம், விடுதலை" என்று சொல்லாமல் "அறம், பொருள், இன்பம், வீடு" என்று ஏன் சொன்னார்கள்? காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

"மோக்ஷம்" என்ற சொல்லுக்கு "விடுதலை" என்றும் பொருள் உண்டு, "வீடு" என்ற பொருளும் உண்டு.
தமிழில் "மோக்ஷத்தை" சொல்லும் போது "வீடு" என்ற சொல்கிறார்கள்.

"தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம்" என்று வேதம் கூறும் நான்கு விஷயங்களை.
"அறம், பொருள், இன்பம், வீடு" என்று தமிழிலில் சொல்கிறார்கள்.
நன்றாக கவனித்தோமென்றால்,
"அறம், பொருள், இன்பம், விடுதலை" என்று சொல்லவில்லை.
மோக்ஷத்தை, "வீடு" என்ற அர்த்தத்தை கொண்டு ஏன் சொன்னார்கள்? தெரிந்து கொள்ள வேண்டாமா தமிழர்கள்?

1. தர்மம், (धर्म) (rules)
2. அர்த்தம், (अर्थ) (wealth)
3. காமம், (काम) (desire)
4. மோக்ஷம் (मोक्ष) (freedom from rebirth)
என்ற நான்கு விஷயங்களை நோக்கி தான் மனிதர்கள் எப்பொழுதும் பயணிக்கின்றனர் என்கிறது சப்த ப்ரம்மமாகிய வேதம்.

இதை பொதுவாக 4 புருஷார்த்தங்கள் (Purushartha - லட்சியம்) என்று சொல்கிறது.



இதில் "மோக்ஷம்" என்ற விஷயத்தை நோக்கி செல்லும் மனிதர்கள் மட்டும், மீண்டும் பிறவி எடுக்காமல், சம்சார கடலில் இருந்து பகவானால்  விடுவிக்கப்படுகின்றனர்.
பிறவியில் இருந்து விடுதலை பெறுகின்றனர்.
ஆகவே, "மோக்ஷத்தை" தன் லட்சியமாக கொள்ளும் மனிதர்கள் பெரிதும் மதிக்கப்படுகின்றனர்.

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கில், அனைவரும் கட்டாயம் தன் வாழ்க்கையின் லட்சியமாக கொள்ள வேண்டியது "தர்மம்" (Human Rules) என்று சொல்லப்படுகிறது.
தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற இந்த நான்கு சமஸ்கரித சொல்லுக்கு ஈடாக, தமிழிலில்
1. அறம் (சமஸ்கரித சொல் தர்மம்)
2. பொருள் (சமஸ்கரித சொல் அர்த்தம்)
3. இன்பம் (சமஸ்கரித சொல் காமம்)
4. வீடு (சமஸ்கரித சொல் மோக்ஷம்)
என்று சொல்கிறோம்.

"மோக்ஷம்" என்ற சொல்லுக்கு, "விடுதலை" என்பது தான் நிகரான தமிழ் சொல்.

பின்பு ஏன்?
"அறம், பொருள், இன்பம், விடுதலை"
என்று சொல்லாமல்,
"அறம், பொருள், இன்பம், வீடு"
என்று தமிழிலில் சொன்னார்கள்?

காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

'மோக்ஷம்' என்ற சொல் இரண்டு மோக்ஷத்தை குறிக்கிறது.
1. 'கைவல்யம்' என்பதும் ஒரு மோக்ஷம்.
2. 'வைகுண்டம்' என்பதும் ஒரு மோக்ஷம்.

கைவல்யம் என்றால் என்ன?
வைகுண்டம் என்றால் என்ன?
என்று புரிந்து கொள்ளும் போது, ஏன் 'மோக்ஷம்' என்ற சொல்லுக்கு 'வீடு' என்று தமிழில் சொன்னார்கள்? என்று புலப்படும்.

செய்த பாவத்திற்கு, இறந்த பின், ஜீவ ஆத்மா நரகம் சென்று தண்டனை அனுபவித்து, பின் மீண்டும் உலகில் பிறக்கிறது.

செய்த புண்ணியத்திற்கு, இறந்த பின், ஆத்மா சொர்க்கம் முதல் பிரம்ம லோகம் வரை, சென்று போகங்களை அனுபவித்து, பின் மீண்டும் உலகில் பிறக்கிறது.

ஆக, பாவம் செய்தாலும் மீண்டும் பிறவி உண்டு. புண்ணியம் செய்தாலும் மீண்டும் பிறவி உண்டு.

பிற மதங்களும், புண்ணியங்கள் செய்தால் சொர்க்கம் என்கிறது.

அந்த சொர்க்கமும் நிரந்தரமல்ல என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்.




சொர்க்க லோகத்தில் இருப்பவர்கள் தேவர்கள்.
இவர்கள் நம் புண்ணியம் தீர்ந்த பின், கீழ் லோகமாக இருக்கும் பூமிக்கு மீண்டும் பிறக்க அனுப்பி விடுகின்றனர்.

பிற மதங்கள் சொர்க்கத்துக்கு மேல் ஒன்று இருப்பதாக கூட நினைக்கவில்லை. அதுவே நிரந்தரம் என்றும் சொல்லிக்கொள்கின்றனர்.

நாமோ, சொர்க்க லோகத்துக்கும் மேல், இன்னும் 4 லோகங்கள் உள்ளது என்று சொல்கிறோம். அதுவும் நிரந்தரமில்லை என்றும் சொல்கிறோம்.
சொர்க்க லோகத்துக்கும் மேல்,
மகர லோகம் (stars), ஜன லோகம், தப லோகம், கடைசியாக ப்ரம்ம லோகம் என்று சொல்கிறோம்.

ப்ரம்ம லோகத்தையும் படைத்த நாராயணன் இருக்கும் இடம் வைகுண்டம் என்கிறோம். அங்கு செல்பவர்கள் மட்டுமே மீண்டும் பிறப்பதில்லை என்கிறது நம் சனாதன தர்மம்.

சொர்க்க லோகத்தில் நின்று விட்ட மற்ற மத அறிவு எங்கே?, நம் அறிவு எங்கே என்று இதிலேயே புரிந்து கொள்ளலாம்.



மோக்ஷம் என்ற கைவல்யம் :
உலகம் நிலை இல்லாதது (அநித்யம்) என்று உணர்ந்து, உடல் வேறு, ஆத்மா வேறு என்று உணர்ந்து, உலகத்தோடு ஒட்டாமல், பாவம் புண்ணியம் செய்யாமல், யோகியாய் இருந்து, இறந்த பின், அந்த ஆத்மா, கைவல்யம் (விடுதலை) என்ற முக்தியை அடைகிறது.

மோக்ஷம் என்ற வைகுண்டம் :
உலகம் நிலை இல்லாதது (அநித்யம்) என்று உணர்ந்து, உலகத்தோடு இருந்து கொண்டே, பாவம் புண்ணியம் அனைத்தையும் நாராயணன் பாதத்தில் சமர்ப்பித்து, நாராயணனே கதி என்று வாழ்ந்து, இறந்த பின், அந்த ஜீவ ஆத்மாவை, பரதெய்வமான நாராயணன், தன் இடமான வைகுண்டம் (வீடு) என்ற முக்தியை, மோக்ஷத்தை கொடுத்து விடுகிறார்.

கைவல்யம் (விடுதலை) அடைந்த ஜீவனும், மீண்டும் பிறப்பதில்லை.
வைகுண்டம் (வீடு) போய் சேர்ந்த ஜீவனும், மீண்டும் பிறப்பதில்லை.

இரண்டுமே மோக்ஷம் தான் என்றாலும், இதில் நாம் அடைய வேண்டியது விடுதலை மட்டுமல்ல, வீடு போய் சேர வேண்டும் என்று வேதத்தின் உண்மையான அபிப்ராயத்தை தெரிந்த தமிழர்கள்,
"அறம் பொருள் இன்பம் விடுதலை"
என்று சொல்லாமல்,
"அறம், பொருள், இன்பம், வீடு"
என்று சொன்னார்கள்.

ஒரு கைதி, பல ஆண்டுகள் சிறையில் இருந்து வந்தான்.
அவனுக்கு திடீரென்று விரக்தி வந்து விட்டது. இந்த சிறைச்சாலை என்னுடையது அல்ல, எப்படியாவது இதை விட்டு தப்பிக்க வேண்டும் என்று முடிவு செயதான்.
தப்பிக்க பல தடவை முயற்சி செய்தும், காவலாளிகள் பிடித்து விட்டனர்.
இனி முரண்டு செய்யாமல், ஒழுக்கமாக இருந்து, நல்ல பெயர் வாங்கி, விடுதலை அடைவோம் என்று எண்ணினான். அதற்கு பல வருடங்களுக்கு பிறகு பலனும் கிடைத்தது. நன்னடத்தை காரணமாக, ஒரு நாள் விடுதலை ஆகி விட்டான்.
இனி சிறை இல்லை, இனி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற விடுதலை காற்றை அனுபவித்த அவன் பேரானந்தம் அடைந்தான். இது தான் கைவல்யம் என்ற மோக்ஷ நிலை.

கைவல்யம் என்பது, சிறையில் வைக்கப்பட்டு இருந்த ஒருவன் விடுதலை ஆவது போல. பிறப்பு இறப்பு என்ற சிறைச்சாலையில் இருந்து "விடுதலை" ஆவதே இவன் நோக்கம்.

அதே சிறைச்சாலையில் இன்னொருவன் இருந்தான். அவனும் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைத்தான். இவன் தப்பிக்க நினைப்பதற்கு விடுதலை மட்டும் காரணமல்ல, அவன் வரவை எதிர்பார்த்து, அவன் தகப்பன், அவன் வீடு எல்லாம் உள்ளது என்று அறிகிறான்.
ஒரு நாள் இவனும் நன்னடத்தை காரணமாக, விடுதலை ஆகி விட்டான்.
இதற்கு முன்னால் விடுதலை ஆனவன், கூப்பிட ஆள் இல்லாததால், நேராக அங்கு இருக்கும் பார்க்கில் சுகமாக படுத்துக்கொண்டு வருவோர் போவோர்களை பார்த்து கொண்டு அலைந்து கொண்டிருந்தான்.

இவனோ, விடுதலை ஆனவுடன், தன் வீட்டுக்கு சென்று தகப்பன் வரவேற்க, அவன் வீட்டுக்கு போய் நிம்மதியாக தகப்பன் நிழலில் நிம்மதியாக இருந்தான்.
வைகுண்டம் என்பது, சிறையில் வைக்கப்பட்டு இருந்த ஒருவன் விடுதலை ஆன பின், தன் சொந்த தகப்பன் வீட்டுக்கு வந்து, தந்தையான நாராயணன் அரவணைப்பில் வீட்டில் இருப்பதே.

இந்த வேற்றுமையை உணர்ந்த தமிழ் ரிஷிகள், கைவல்யம் (விடுதலை) என்ற மோக்ஷத்தை நம் லட்சியமாக கொள்ளாமல், வைகுண்டம் (வீடு) என்ற மோக்ஷத்தையே நம் லட்சியமாக கொள்ள வேண்டும் என்று, அறம், பொருள், இன்பம், வீடு என்றனர்.



"வீட்டுக்கு" போய் சேர்வதே நம் நோக்கம்.

வைகுண்டம் என்பது கைவல்யத்தை விட உத்தமானது.

வீடு என்பது விடுதலையை விட உத்தமானது.

இதனால் தான் அறம், பொருள், இன்பம், விடுதலை என்று சொல்லாமல், அறம், பொருள், இன்பம், வீடு என்ற சொல்லில் முடிக்கின்றனர்.

திருவள்ளுவர் திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மூன்றும் மூன்று பகுதிகளில் சொல்லியிருக்கிறார்.
மோக்ஷத்தைப் பற்றித் தனியாக இப்படிப் பெரிய பகுதி இல்லாவிட்டாலும், அறத்துப் பாலிலேயே ‘இல்லற இயல்’ என்பதற்கு அப்புறம் ‘துறவற இயல்’என்று சில அதிகாரங்கள் பண்ணி, அதில் நூற்றுக்கு மேற்பட்ட குறள்களில் மோக்ஷம் ஸித்திப்பதற்கான வழிகளைச் சொல்லியிருக்கிறார்.
(http://www.kamakoti.org/tamil/3dk257.htm)

திருவள்ளுவர், சமஸ்கிருதம் அறிந்த, தமிழ் புலவர் என்பதும் வெளிச்சம் ஆகிறது.

வாழ்க தமிழ். வாழ்க தெய்வ பாஷை.



No comments:

Post a Comment