மனதில் நமக்கு தளர்ச்சி அல்லது சலிப்பு அடையும் போது சோகம் உண்டாகும்.
சோகம் உண்டானால் சோம்பேறித்தனம் உண்டாகும்.
சோம்பேறித்தனம் உண்டானால்
மனம் வீணான பயத்தை உண்டாக்கும்.
வீணான பயம், புத்தியை குழப்பும்.
புத்தி குழம்ப குழம்ப, தாழ்வு மனப்பான்மை உண்டாகும்.
தாழ்வு மனப்பான்மை ஒரு மனிதனை தற்கொலை செய்து கொள்ள கூட தூண்டி விடும்.
தாழ்வு மனப்பான்மை, தன்னால் மற்றவர்க்கு கஷ்டம், தான் இருப்பதும் வீண் என்று தோன்ற செய்து விடும்.
சோம்பேறித்தனம் அதிகமாவதால், உடல் அமைதியாக இருந்தாலும் மனம் அடங்காமல் இருப்பதால், மனம் வீணான பொய்யான கேள்விகளை எழுப்பும்.
இதனால் ஏற்படும் பயம், தாழ்வு நிலையை ஏற்படுத்தும்.
தாழ்வு மனப்பான்மை தற்கொலை வரை தூண்டி விடும்.
இந்த சோக நிலையிலிருந்து விடு பட, வழி என்ன?
செயலில் உற்சாகமும், தெய்வ ப்ரார்த்தனையுமே !
புத்தி உடையவரும், பலசாலியும், புகழ் உடையவரும், தைரியம் உடையவரும், பயம் அறியாதவருமான ஹனுமனுக்கே தற்கொலை செய்து கொள்ளலாமா!! என்று ஒரு ஸமயம் தோன்றிவிட்டது.
நம்ப முடியுமா நம்மால்?
ஆனால் சோம்பேறித்தனத்தை விரட்டி, உற்சாகத்துடன் தெய்வ நம்பிக்கையுடன் செயல் பட்டால் வாழ்வில் வழி பிறக்கும் என்று காட்டினார். இதுவே நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம்.
ஹனுமான் நள்ளிரவு வரை இலங்கை முழுவதும் ஸீதையைத் தேடித் தேடி அலைந்து காணாமல் மனம் சலித்து ஒரு தனித்த மரத்தில் அமர்ந்து வருந்தலானார்.
இனி இலங்கையில் ஒரு நாலு அங்குலம் இடம் கூட இல்லையாம். அப்படி தேடிவிட்டாராம்.
காண முடியவில்லையே என்று நினைத்து ஏங்கி தவித்து கண்ணீர் விட்டார்.
ஸீதையைத் தேடியும் காணாதபடி ஹனுமான் வருந்தி தனக்குள் தானே சிந்திக்கலானார்.
ஸீதையைக் காணாமல் நான் திரும்புவேனாகில் இவ்வளவு முயற்சியும் வீணே!
நான் கடலைத் தாண்டியது கூட பெரிய காரியமில்லை.
ஸீதையைக் காணாமல் திரும்பிச் சென்று, வானரர்களுக்கு என்ன பதில் சொல்லுவேன்?
ஸீதையைக் காணவில்லை என்று சொல்லிக்கொண்டு சுக்ரீவனிடம் சென்றால், சுக்ரீவன் வானரர்களை கொன்று போடுவான்.
ஸம்பாதி இங்கு ஸீதை இருப்பதாக சொன்னாரே, அதுவும் பொய்யோ?
ஸீதையைக் காணாமல் ராமரும் உயிர் தியாகம் செய்வார்.
இதனால், அவர் தம்பி லக்ஷ்மணனும் உயிரை விட்டு விடுவார்.
நண்பர்களுக்கு உபகாரம் செய்ய முடியவில்லையே என்று சுக்ரீவனும் உயிர் துறப்பான்.
தலைவனை இழந்த வானரர்களும் மாண்டு போவார்கள்.
தன் தமையன் வனவாஸம் முடிந்து வராததால் பரதனும், சத்ருக்னனும் தீக்குளித்து விடுவார்கள்.
இதனால் அயோத்தி நாட்டு மக்களும் உயிர் துறப்பது திண்ணம்.
இவ்வளவு பேர்கள் உயிர் துறப்பதை விட நான் இங்கேயே ப்ராணத் தியாகம் செய்து விடுவது நலம் என்று நினைத்தார்.
பிறகு இத்தகைய அதைரியத்திற்கு இடம் தரக்கூடாது.
சோகம் யாவரையும் சோம்பேறி ஆக்கிவிடும்.
சோகத்தை விட உற்சாகமே முக்கியம்.
எனவே உற்சாகத்தை கைவிடலாகாது. தெய்வ அனுகூலத்துடன் மறுமுறை ஸீதையைத் தேட முயற்சிப்போம் என்று நினைத்தார்.
மனித முயர்சியோடு தெய்வ துணையும் வேண்டும் என்று உணர்ந்தார்.
ஸீதையை காண ஸீதையையே மனதில் வேண்டினார். இவ்வாறு ஸீதையை வணங்கி விட்டு உற்சாகத்துடன் எழுந்த ஹனுமானுக்கு அசோக வனம் கண்ணிற்பட்டது.
ஆஹா! இந்த இடம் இதுவரை தேடவில்லையே! நிச்சயம் ஸீதை இங்கு தான் இருப்பாள் என்று ஹனுமான் சந்தோஷத்துடன் அசோகவனத்தை நோக்கி நடந்தார். ஸீதையைக் கண்டார்.
என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்று பயந்த ஒரு விஷயம், உற்சாகம், முயற்சி, தெய்வ பிரார்த்தனை மூலம் இங்கு எளிதானது.
இதுவே நாமும் அறிந்து கொள்ள வேண்டிய பாடம்.
ராமாயணத்தில் இது போன்று வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment