Followers

Search Here...

Saturday, 2 December 2017

பல தெய்வங்கள் பெயரை சொல்லி வழிப்படுகிறது - ஹிந்து மதம்

பொதுவாக, வேதம் பல தெய்வங்கள் பெயரை சொல்லி வழிபடுகிறது.

அக்னி, இந்திரன், வாயு, சிவன், துர்கை என்று அனைவருக்கும் மந்திரம் உள்ளது.
ஆஹுதி உள்ளது.

யாகம் செய்யும் பொழுது பொதுவாக எல்லா தேவதைகள் பெயரையும் சொல்லி, சமமாக ஆராதிக்கிறார்கள்.
இதுவே வைதீக முறை.

இப்படி பல தேவதைகளை சொல்லி, அனைவரையும் ஆராதிக்க வேண்டும் என்று யாகத்தின் விதியாக சொல்லும் போது,
வழிபாடு செய்பவன் ஒரு அஞானியாக இருந்தால், எப்படி ஆராதனை செய்வான்?

வழிபாடு செய்பவன் ஒரு ஞானியாக இருந்தால், எப்படி ஆராதனை செய்வான்?

இது ஒரு பொதுவான கேள்வி.

வைதீக மதம் பரவாசுதேவனான நாராயணனே, ஹரியே பரப்ரம்மம் என்று சொல்கிறது.
அவரால் தான் ப்ரம்மா படைக்கப்பட்டார்.
அதற்கு பிறகு தான் மற்ற அனைத்து படைப்புகளும் நடந்தன என்றும் சொல்கிறது.

ஓம் என்ற பிரணவத்துக்கும் முன்னும் ஹரியே இருக்கிறார் என்பதை தெளிவாக "ஹரி: ஓம்" என்று சொல்கிறது.

இப்படி ஒரே தெய்வம் தான் படைப்பிற்கு காரணம் என்று தெளிவாக சொல்லும் வேதம், பல தெய்வங்கள் பெயரை வணங்க சொல்வதாக வருவதற்கு காரணம் என்ன? வேதத்தின் உண்மையான அபிப்ராயம் என்ன?

வேதத்தின் உண்மையை உணர்ந்த ஞானி குழம்ப மாட்டார்.

அஞானியாக இருப்பவன், வேதத்தின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், வைதீக தர்மம் (ஹிந்து) பல தெய்வங்களை வழிபட சொல்கிறது என்று நினைப்பான்.

இதற்கு காரணம், அஞானமே.




அதாவது, வேதத்தின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ளாததே !!

வேதத்திற்கு தமிழில் ஒரு அழகான பெயர் உண்டு. வேதத்தை "மறை நூல்" என்று சொல்வர்.

வெளியோட்டமாக பார்த்தால் வேதம் கர்ம காண்டமாக தோன்றும்.
உண்மை உணர்ந்து பார்த்தால் ஞானத்துக்கு வழி சொல்வது புரியும்.

அதாவது, அஞானத்தோடு பார்க்கும் போது, வேதம் கர்மங்களை பற்றியும், அதன் பலன்கள் பற்றி சொல்வது போன்று தோன்றும்.
அதன் உண்மையான பொருள் மறைந்து இருப்பதாலேயே, இதற்கு "மறை" என்று பெயர்.

அர்த்தங்களை மறைத்து பேசுவதாலேயே அதற்கு "மறை" என்று பெயர்.

இந்திரன், வருணன், யமன், அக்னி, சிவன் என்று வேதம் பேசுகிறது.

இப்படி சொல்லும் போது, இந்திரன் என்று ஒரு தேவதை,

வருணன் என்று தேவதையை சொல்கிறது என்று  நினைக்கிறோம்.

ஆனால் வேதத்துடைய அபிப்பிராயம் இந்திரன் தேவன் இல்லை, அக்னி தேவன் இல்லை, வருண தேவன் இல்லை.

பின் யாரை சொல்கிறது? என்று கேட்டால், வேதமே சொல்கிறது,
"ஏகம் சந்தம் விப்ரா பஹுதா கல்பயந்தி"
அதாவது,
ஒரே பரமாத்மாவான வாசுதேவனை தான், இப்படி பல பெயர்களில் சொல்கிறேன்
என்று தெளிவாக சொல்கிறது.

இப்படி சொல்லிவிட்டு,
'இந்திராய ஸ்வாஹா'
என்று சொல்லும் போதும்
"நான்(வேதம்) அவரையே சொல்கிறேன் என்று உணர்ந்து கொள்"
என்று உண்மையான அர்த்தத்தை மறைத்து பேசுவதாலேயே, இதற்கு மறை என்று பெயர்.

வேதத்தின் லட்சியமே, ஜீவாத்மாவை பரமாத்மாவோடு சேர்ப்பதே.

மோக்ஷம் விரும்பும் ஆத்மாவுக்காக ஞான மார்க்கம் காட்டும் வேதம்,
வெளியோட்டமாக கர்ம மார்க்கத்தை காட்டி அல்ப பலன்களையும், தேவதைகளை தனித்தனியே வழிபாடு செய்யும் முறையையும் காட்டுகிறது.

வேதத்தின் உண்மையை உணர்ந்த ஞானி, வேத சொர்களில் ஞானத்தையும், பக்தியையும் தருவதை உணர்கிறான்.

வேத சொற்களை கேட்கும் ஒரு அஞானி,
வேதம் பல தெய்வங்களை வழிபட சொல்கிறது.
வேதம் கர்மா செய்ய சொல்கிறது.
கர்மாவுக்கு பலனாக, அந்தந்த தெய்வங்களின் பலன் கிடைக்கிறது என்று புரிந்து கொள்வான்.
பல தெய்வங்கள் உள்ளதால், பல தெய்வ வழிபாடு செய்ய சொல்கிறது என்றும் நினைப்பான்.

அஞானியாக இருப்பவன், ப்ரார்த்திக்கும் போதும், தான் சொல்லும் ஒவ்வொரு தேவதையும் தனித்தனி என்று நினைத்து, அந்தந்த தேவதையை மட்டும் தியானிப்பான்.
வேதம் அந்த தேவதையை பற்றித்தான் சொல்கிறது என்று நினைப்பான்.

இந்திராய ஸ்வாஹா என்று சொல்லும் இடத்தில், இது இந்திர தேவனுக்காக என்று நினைப்பான்.
தான் கொடுக்கும் ஆஹுதி, அந்த இந்திர தேவனை போய் சேருகிறது என்று நினைப்பான்.

சூர்யாய ஸ்வாஹா என்று சொல்லும் இடத்தில், இது சூரிய தேவனுக்காக என்று நினைப்பான்.
தான் கொடுக்கும் ஆஹுதி, அந்த சூரிய தேவனை போய் சேருகிறது என்று நினைப்பான்.

வேத மந்திரங்கள் இப்படி தான் இருக்கிறது.
பல தேவதைகள் பெயர்களை சொல்லி தான் வழிபாடு செய்கிறது என்பதும் உண்மையே !

ஞானியாக இருந்தாலும், அஞானியாக இருந்தாலும் இப்படி தான் சொல்லியாக வேண்டும் என்பதும் விதி.
மந்திரத்தை மாற்றவும் முடியாது.
க்ரியையும் மாற்றவும் கூடாது.

அப்படியென்றால், ஞானி வழிபாடு செய்யும் போது எப்படி மாறுபடுகிறார்?
ஞானி யஞ்யத்தை எப்படி செய்கிறார்?

ப்ரம்ம தேவன் பூலோகத்துக்கு வந்து, காஞ்சிபுரத்தில் அஸ்வமேத யாகம் செய்தார்.
அவரோ வேத ஸ்வரூபன். ஞானி. அவரே வேதம்.

பரவாசுதேவனின் முதல் படைப்பு என்ற பெருமை உடையவர்.

பரவாசுதேவனே வேதத்தை நேரிடையாக பிரம்மாவுக்கு உபதேசித்தார் என்ற பெருமை உடையவர்.

பிரம்மாவின் ஒரே லட்சியம் "நாராயணன்".

இவர் வேறு தெய்வங்களை வணங்குவாரா?

அனைத்து தேவதைகளும் இவருக்கு பின்னால் படைக்கப்பட்டவர்கள்.

வேதத்தில் இந்திரன் என்ற சொல்லப்பார்த்து, இந்த பதவிக்கு தகுந்த ஒரு ஆத்மாவை, இந்திர தேவனாக பணி அமர்த்தினார்.
தேவர்களுக்கும் காலம் உண்டு என்பதும் நாம் அறிந்ததே.

வேதத்தை கொண்டு உலகையும் படைத்து, தேவர்களையும் நியமித்தவர், ப்ரம்மா.

இப்படி இருக்க, இவர்கள் படைப்புக்கு முன்பே வேதத்தில் உள்ள இந்த சொற்கள் எதை சொல்லுகிறது என்று சிந்திக்கும் போது,
வேதம் 'இந்திராய ஸ்வாஹா' என்று சொல்லும் போது, அது இந்திர தேவனை சொல்லவில்லை என்று நமக்கு புரியும்.

ஞானியான ப்ரம்ம தேவன், யாகத்தில்
"இந்திராய ஸ்வாஹா" என்று சொல்லும்போது,
தனக்கு பின் படைக்கப்பட்ட இந்திர பதவியில் இருக்கும் தேவனை நினைக்கவில்லை.

பரவாசுதேவனே விராட் ஸ்வரூபத்தில் இருக்கிறார். அவரால்தான் வேதமே தனக்கு கொடுக்கப்பட்டது.
அவர் தான் தன்னையும் படைத்தார்.
அவரே விஸ்வமாகவும் இருக்கிறார்.
அவர் சக்தியில் தான் தானும் இயங்குகிறேன்.
அவர் சக்தியில் தான் உலகமே இயங்குகிறது என்ற உண்மையை அறிந்தவர் ப்ரம்மா.

ஆகையால், ஞானியான ப்ரம்மா  "இந்திராய ஸ்வாஹா" என்று சொல்லும்போது, இந்திரன் விராட் ஸ்வரூபியான பகவானின் புஜம் என்றும்,

"அக்னயே ஸ்வாஹா" என்று சொல்லும்போது, சூரியன் விராட் ஸ்வரூபியான பகவானின் வாக்கில் வெளிவரும் அக்னி  என்றும்,

"சோமாய ஸ்வாஹா" என்று சொல்லும்போது, சோமன் விராட் ஸ்வரூபியான பகவானின் ஹ்ருதயம் என்றும்,


மனதில் தியானித்து, காஞ்சிபுரத்தில் யாகத்தை, அந்த பரவாசுதேவனுக்கே ஒரு "அங்க பூஜை"யாக செய்தாராம்.

இதுவே ஞானியின் நிலை.

ஞானி எந்த கர்மாவை செய்தாலும், கர்ம பலனுக்காக செய்யாமல், நாராயணனின் ஆராதனையாக செய்வார்கள் என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

நாராயணனே விஸ்வரூபன். எல்லா தேவதைகளும் அவரின்  அங்கங்களில் இருக்கின்றனர் என்று வேதமே சொல்கிறது.

பொதுவாக அங்கங்களில் செய்யும் பூஜை, அந்த அங்கத்தில் உரிமை உடையவனுக்கு தான் போய் சேரும்.

ஒரு தாய்க்கு கால் பிடித்து விடும் குழந்தை, "காலுக்கு தான் பிடித்து விட்டேன், உனக்கு இல்லை" என்று அறிவீனத்தால், தாயிடமே சொன்னாலும், தாய்க்கு உண்மை தெரியுமே.

அதே போல
"நான் சூரியனை தான் வணங்குகிறேன், நாராயணனை அல்ல"
என்று அஞானத்தால் சொன்னாலும், அந்த நாராயணன், தன் வாக்கில் உள்ள அக்னியாக இருக்கும் சூரிய தேவன் வழியாக நாம் கேட்கும் பலனை கொடுத்து விடுகிறார்.

இதையே, பகவத் கீதையில், வாசுதேவனே, ஸ்ரீ கிருஷ்ணராக  துவாபர யுகத்தின் கடைசியில்  அவதாரம் செய்து,

"நீ எந்த தெய்வத்தை வணங்கி வரம் வாங்கினாலும், அந்த வரத்தை அந்த தெய்வம் வழங்குமாறு செய்தவனே நான் தான். நீ எந்த தெய்வத்தை நம்பிக்கையுடன் வணங்கினாலும் அது என்னை வணங்கியது தான் என்று உணர்ந்து கொள்" என்கிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர் இந்த ஸ்லோகத்தை சொல்லும் போது, வேதத்தின் ஞான மார்கத்தையே  சொல்கிறார் என்று தெரிகிறது.

ஸ்லோகம் :
யே அன்ய தேவதா பக்தா
யஜந்தே ச்ரத்தையான் விதா: !
தேபி மாம் ஏவ கௌந்தேயே
யஜந்த விதி பூர்வகம் !!

அர்ஜுனா! எந்த எந்த தெய்வங்களை அஞானத்தால் ஒருவன் வணங்கினாலும், அந்த தெய்வங்களுக்கும் ஆத்மாவாக இருக்கும் நான், அவர்கள் வழியாக இவன் கேட்கும் பலனையும் கொடுக்கிறேன். இப்படி அஞானத்தில் வணங்குபவர்கள், உண்மை  அறியாமலேயே என்னை தான்  வணங்குகின்றனர்.

அங்கங்களில் உள்ள தேவதைகளுக்கு செய்யும் பூஜையும், அங்கியாக உள்ள நாராயணனையே போய் சேரும் என்பதே வேதத்தின் அபிப்ராயம்.

தலையில் கிரீடம் வைத்தால் தலைக்காக வைக்கப்படுவது இல்லை.
தலையை உடையவனுக்கு தான் அணிவிக்கிறோம்.

மார்பில் சந்தனம் பூசினால், மார்புக்காக இல்லை.
மார்பை உடையவனுக்கு தான் அணிவிக்கிறோம்.

காலில் செருப்பு அணிந்தால் காலுக்காக இல்லை.
கால் உடையவனுக்கு தான் அணிவிக்கிறோம்.

அதை போன்று, இந்திரன், வருணன் என்று வேத சப்தம், அவருடைய ஒவ்வொரு அங்கங்களை துதிக்கின்றது.
இதையே, வேதம், "நான் ஹரியையே, பல பெயர்களில் துதிக்கிறேன்" என்று சொல்கிறது.

இந்த உண்மையின் காரணமாகவே, சந்தியா வந்தனத்தில் பல தேவதைகள் பெயர்கள் வந்தாலும், முதலும் முடிவாக, நாராயணனே நின்று நாம் செய்யும் பூஜையை அங்கீகரிக்கிறார்.

ஞானத்தோடு செய்யும் போது, பல தேவதைகள் அவர் அங்கங்கள் என்ற உண்மை புரிந்து விடும்.

மேலும், செய்யும் கர்மாவும் ஞானத்தோடு செய்வதால், அந்த நாராயணனை நேரிடையாக பூஜித்த பலனை தரும்.

அஞானத்தோடு செய்யும் போது, பல தேவதைகள் அவர் அங்கங்கள் என்ற உணராமல், அந்த தேவதையை மட்டும் வணங்கிய கர்ம புண்ணியத்தை மட்டும் தந்து விட்டு, அந்த தேவதைகள் விலகி விடும்.

ப்ரம்ம தேவன் மஹாஞானியாக இருப்பதால்,
"இந்திராய ஸ்வாஹா",
"அக்னேயே ஸ்வாஹா",
"சோமாய ஸ்வாஹா"
என்று சொல்லி யாகம் செய்யும் போது, எந்தெந்த தேவதைகள் எம்பெருமாளுக்கு அவயவங்களாக இருக்கிறார்களோ, அந்த அவயவங்களுக்கு செய்யும் ஆஹுதியாக தியானம் செய்தார்.

பகவானுடைய (நாராயணன்) அவயவங்கள் என்ற ஞானம் (அறிவு) இல்லாமல், வேதத்தில் உள்ள தேவதைகளின் பெயரை சொன்னோமானால், அல்ப பலனே கிடைக்கும்.

இந்திர தேவன் என்று மட்டும் நினைத்து வணங்கினால், சொர்க்கம் என்ற பலனை மட்டும் இந்திர தேவன் கொடுத்து விட்டு சென்று விடுவார்.
அந்தந்த தேவதைகளின் சக்திக்கு உட்பட்ட அணுகிரங்கள் செய்து விட்டு விலகி விடும்.

இதனாலேயே, ப்ரம்மாவிடமும், சிவனிடமும் வரம் வாங்கிய ராவணன், தேவர்களை இம்சிக்க,  பரவாசுதேவன் ஸ்ரீ ராமராக அவதரித்து சம்ஹாரம் செய்தார். சிவனும், பிரம்மாவும் விலகி விட்டார்.

வேதத்தின் நோக்கத்தை உணர்ந்து ஞானத்தோடு சொன்னோமானால், அதற்கு வேறு விதமான பலன்கள் உண்டு என்று உபநிஷத்துக்களே சொல்கிறது.

பரமாத்மாவின் அங்கங்கள் தானே இந்த தேவதைகள் என்று ஞானியாக இருப்பவன் பார்க்கிறான்.

அவயவங்களாக இருக்கும் தேவதைகள் மீது பிடிக்காத்தனம், துவேஷம் ஞானியாக இருப்பவனுக்கு வர இயலாது.

தேவதைகளுக்கு செய்யும் பூஜை அவர்களை மட்டும் மகிழ்ச்சி படுத்த அல்ல, ஆனால் அங்கியாக இருக்கும் அந்த பரமாத்மா என் பூஜையை ஏற்றுக்கொள்ளட்டும்  என்ற தியானத்தில், ஞானி யாகம் செய்கிறான்.

நாம் பொதுவாக எந்த கர்மாவை செய்தாலும் இந்த ஞானத்தோடு செய்தால், அனைத்து கர்மாவும் நாராயணனை துதித்தாகவே ஆகி விடும்.

ஒரு மனிதனை கண்டு கை கூப்பி வணக்கம் சொன்னாலும்,
நடந்து போகும் போது, நாம் பார்க்கும் மரமோ, பசுவோ, நதியோ எதை பார்த்தும் வணங்கும் போதும்,
நாம் நினைக்க வேண்டியது  என்னவென்றால்,
"அதற்குள்ளும் அந்தர்யாமியாக அந்த பரமாத்மாவே இருக்கிறார்" என்ற ஞானத்தோடு
"அந்த அந்தர்யாமிக்கு நமஸ்காரம் செய்கிறேன்" என்று நினைக்க வேண்டும்.

வெளியோட்டமாக உள்ள தோற்றத்தை பார்த்து இவன் தாழ்ந்தவன், இவன் முதலாளி, இது மரம், இது விலங்கு என்று வணங்க கூடாது. வெளி தோற்றத்துக்கு வணக்கம் சொல்ல கூடாது.

அந்த பரமாத்மாவின் சக்தியினால் தான், இந்த ஜடப்பொருள் (உடல்) வேலை செய்கிறது என்று ஞானத்தோடு பார்க்க வேண்டும்.

இந்த ஞானம் கொண்டவன் ஜீவ ஹிம்சை கூட செய்ய மாட்டான்.

பரமாத்மா எங்கும் வ்யாபித்து இருக்கிறான் என்ற ஞானத்தோடு இருப்பவனே ஞானி.

இந்த ஞான நிலை ஹனுமானிடம் காணப்பட்டது.

'ஸ்ரீ ராமரை தவிர எனக்கு வேறு தெய்வம் கிடையாது'
என்று சொல்பவர் ஹனுமான்.
ஏக நிஷ்டை உடையவர்.

ஆனால், இதே ஹனுமான், இலங்கைக்கு கடலை தாண்ட தயாரான போது,
"சூரியனுக்கும், மகேந்திரனுக்கும், என் நமஸ்காரங்கள்"
என்று எல்லா தேவதைகளின் பெயரையும் சொல்லி வணங்கினார் என்று பார்க்கிறோம்.

ஹனுமானின் மனோபாவத்தில், இந்த தேவதைகளின் அந்தர்யாமியாக ஸ்ரீ ராமரே இருக்கிறார் என்று உணர்ந்து, அனைத்து தேவதைகளும் ஸ்ரீ ராமரின் அவயவங்களாக பாவித்து பூஜை செய்தார் என்று ஞானத்தோடு கவனித்த துளசி தாசர் தன் துளசி ராமாயணத்தில் விளக்கிச் சொல்கிறார்.

இந்த ஞானத்தோடு இருப்பதால் தான், எங்கும் எதிலும் ஸ்ரீ ராமரே இருப்பதை உணர்ந்த ஹனுமான், எப்பொழுதும் கை குவித்து கொண்டே இருக்கிறார்.

கோவிலில் நாம் காணும் ஆஞ்சநேயர் கை குவித்து நம்மையும் பார்த்து அஞ்சலி செய்வது, அவரின் ஞான நிலையை உணர்த்துகிறது.

நம் உள்ளும் அந்த அந்தர்யாமியாக ஸ்ரீராமர்  இருப்பதாலேயே நாம் ஜீவித்து இருக்கிறோம் என்று பார்க்கும் ஹனுமான், நம்மை பார்த்து கூட அஞ்சலி ரூபத்தோடேயே இருக்கிறார்.

ஹனுமானின் ஞான நிலையும், பிரம்மாவின் ஞான நிலையும் நமக்கும் வர வேண்டும் என்று ஆசை படவேண்டும்.

இந்த ஞானம் உடையவன், ஒரு நாயை பார்த்தாலும் அஞ்சலி செய்வான்.
அவன் உண்மையில் நாய் என்ற ஜீவனுக்கு செய்ய வில்லை. உள்ளே இருக்கும் அந்த பரமாத்மாவான வாசுதேவனுக்கு அஞ்சலி செய்கிறான்.

இந்த ஞான நிலையில் இருந்த ஹிந்துக்கள், 1200 ஆண்டுகள் இஸ்லாமிய, கிறிஸ்துவ படையெடுப்பு, மத மாற்றம், ஆக்கிரமிப்பு, கொள்ளை, கொலை, கற்பழிப்பு போன்ற கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சியால்,
இந்த தெளிந்த ஞானம் மறந்து, பரம்பரை பழக்கம் போன்று ஆகி விட்டது.

வெளியோட்டமாக பார்த்த வெளிநாட்டவனுக்கு
ஹிந்துக்கள் கல்லை கும்பிடுகின்றனர்,
நாயை கும்பிடுகின்றனர்,
பல தெய்வங்களை கும்பிடுகின்றனர்
என்று தானும் குழம்பி, கலாச்சார சீரழிவினால் குழம்பி இருந்த ஹிந்துக்களையும் குழப்பி, மத மாற்றம் செய்தார்கள்.
இன்றும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

வாசுதேவனே எங்கும் உளன் என்ற ஞானத்தோடு,
நாம் எந்த தெய்வத்தை பூஜை செய்தாலும்,
அந்த தெய்வங்களுக்கு உள்ளும், அந்தர்யாமியாக அந்த பரமாத்மாவே இருக்கிறார்
என்ற நினைப்போடு, அன்பாகவும், ஆசையோடும், ஆர்வத்தோடும் செய்ய வேண்டும்.

யாரிடமும் பழகினாலும், பழகும் மனிதர்களுக்கு உள்ளும் அந்தர்யாமியாக அந்த பரமாத்மாவே இருக்கிறார்
என்ற நினைப்போடு, அன்பாகவும், ஆசையோடும், ஆர்வத்தோடும் செய்ய வேண்டும்.

சர்வேஸ்வரனே கர்த்தா (செய்கிறார்). சர்வேஸ்வரனுக்கே இந்த பலன் என்று இருப்பவன் பண்டிதன்.
அப்படி செய்யும் கர்மாவின் பலன்களும் அவனிடம் சேராது.

அப்படி செய்யும் கர்மாவும் அவனுடைய மோக்ஷத்திற்கு வழி செய்து கொடுத்து விடும்.

ப்ரம்மா ஞானியாக இருப்பதால், தான் செய்த யாகத்தை, ஒரு பலனை கருதி செய்யாமல், விஷ்ணுவுக்கு ஒரு ஆராதனை செய்ய கிடைத்த வாய்ப்பாக செய்தாராம்.

அல்ப பலனை எதிர்பார்த்து, தேவதைகளை மட்டுமே நினைத்து செய்தால், புண்ணியங்கள் மட்டுமே கிடைக்கும்.

ஆனால், ப்ராம்மவோ, அதே யாகத்தை விஷ்ணுவுக்கு ஒரு ஆராதனையாக செய்ததால், அதன் பலனாக, அக்னி குண்டத்தில் இருந்து, அதி ஆச்சர்யமாக "வரதராஜ பெருமாள்" ஆவிர்பவித்தார்.

அஸ்வமேத யாகம் செய்தால் புண்ணியம் தானே கிடைக்கும்? ஆனால் யஞ்யம் செய்த பலனாக, பெருமாளே வந்து விட்டார்  ப்ரம்மாவுக்காக.

இந்திரனை நினைத்து வழிபட்டு இருந்தால், பெருமாள் இந்திர தேவனை அனுப்பி அணுகிரஹம் செய்ய சொல்லி இருப்பார்.

தன்னையே ஆராதனை செய்ததால், பிரம்மாவின் யாகத்தின் பலனாக தானே வந்தார் அர்ச்ச அவதாரமாக.

எந்த செயலையும் கர்மாவாகவும் நாம் செய்ய முடியும், ஞானமாகவும் செய்ய முடியும்.

பிரம்மா யாகம் செய்த முறை மூலம், ஞானத்துடன் செயதால் என்ன லாபம் கிடைக்கும், எனபது  புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.

கர்மாவாக செய்தோம் என்றால், அதற்கு கர்ம பலன் உண்டு.

ஞானத்தோடு செய்தோம் என்றால், அதற்கு பகவத் தரிசனமும் உண்டு. மோக்ஷமும் உண்டு.

இந்திரன், அக்னி, சோமன், சிவன்  என்று  தனித்தனியாக பார்த்து, வணங்குவது சாதாரண வழிபாடு.

ஞானி, அக்னியை பூஜிக்கும் போதும், வாசுதேவனின் அங்கங்கள் என்று உணர்ந்து, வாசுதேவனையே ஆராதனை செய்து, கர்மம் செய்தும் கூட மோக்ஷத்திற்கு வழி தேடி விடுகிறார்கள்.

கர்மத்தையும் ஞானத்தோடு செய்ததால், பிரம்மாவுக்காக காஞ்சிபுரத்தில் அர்ச்ச அவதாரமாக சங்கு சக்ரத்துடன், பீதாம்பரம் உடுத்திக்கொண்டு, முக மலர்ச்சியுடன் வரதராஜ பெருமாளாக, யக்யத்தின் பலனாக, அக்னி குண்டத்தில் இருந்து வெளி வந்து, அனைவருக்கும் திருகாட்சி கொடுத்தார்.

இன்று போனாலும், ப்ரம்மாவுக்காக வந்த வரதராஜ பெருமாளை நாமும் சென்று தரிசிக்கலாம்.

No comments:

Post a Comment