நாராயணன் 5 விதமாக (பரம், வ்யுகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்ச) அவதாரங்கள் எடுக்கிறார்.
ஐந்து விதமான நீர் உள்ளது :
- உலகம் ஒரு நீரால் உருவானது.
- மேகத்தில் ஒரு நீர் உள்ளது.
- மழையால் சில இடங்களில் நீர் பூமியில் விழுகிறது.
- பூமிக்கு அடியில் ஒரு நீர் உள்ளது.
- ஏரி, குளங்களில் சில இடங்களில் நீர் கிடைக்கிறது.
"முதலில் சொன்ன நீர் நமக்கு ப்ரயோஜனம் இல்லை" என்பது போல தோன்றினாலும், "உலகம் என்று இருப்பதே, இந்த நீரால் தான்".
இரண்டாவதாக சொன்ன மேக நீர், "நமக்கு ப்ரயோஜனம் இல்லை" என்றாலும், சக்தி உள்ள சில பறவைகள் அந்த மேகம் வரை சென்று, அந்த நீரை பருகும் சக்தி உள்ளதாக இருக்கிறது.
மூன்றாவதாக சொன்ன மழை நீர், நம் அனைவருக்கும் ப்ரயோஜனம் அளிக்கிறது.
ஆனால் குறிப்பிட்ட காலம் வரை. பூமி வரை வந்து விழுகிறது.
இந்த மழை இருக்கும் வரை தான், ப்ரயோஜனம் கிடைக்கிறது.
நான்காவது சொன்ன பூமி நீர், பூமியின் அடியில் உள்ளது.
கொஞ்சம் சிரமப்பட்டு தோண்டினால், இந்த நீர் கிடைக்கிறது.
ஐந்தாவது சொன்ன ஏரி, குளங்களில் உள்ள நீர், யாவருக்கும் கிடைக்கிறது. ஏரி, குளம் அருகே சென்றாலே கிடைக்கிறது.
மனிதர்களில் சிலர் அந்த பறவை போன்று சக்தி உள்ளவர்களாகவும்,
மழை பெய்யும் சமயத்தில் இருந்தவர்களாகவும்,
இருக்கும் இடத்திலேயே உள்ள நீரை தோண்டி எடுக்கும் சக்தி உள்ளவர்களாயும் உள்ளனர்.
பலர் காலத்தை தவற விட்டவர்களாயும், அத்தனை சக்தி இல்லாதவர்களாயும் உள்ளனர்.
பரம் என்ற வைகுண்டத்தில் இருக்கும் நாராயணன், ஜீவனிடம் உள்ள கருணையால், எப்போதும் இருக்க, பரம் என்ற இடத்தில் மட்டும் இருக்காமல், தன்னை பல விதமாக பிரகடனப் படுத்துகிறார்.
தன்னை வியூகம் என்ற பாற்கடலில் விஷ்ணுவாக, ரிஷிகளும் தேவர்களும் காணும் படியாக இருக்கிறார்.
இது மேகத்தில் ஒரு நீர் உள்ளது போல தவ வலிமையும், சக்தி உள்ள சிலருக்கு மட்டுமே பயன். இவர்கள் மட்டுமே சென்று காண முடியும்.
தர்மம் வீழ்ச்சி அடையும் போது விபவம் என்ற நரசிம்ஹ, ராம, கிருஷ்ண அவதாரங்கள் செய்தார்,செய்கிறார்.
அவதாரம் நடக்கும் போது பார்த்தவர்கள், அனுபவித்தவர்கள் பாக்கியசாலிகள். இது மழையால் சில இடங்களில் நீர் பூமியில் விழுகிறது போல.
ஒவ்வொரு உயிரிலும் அந்தர்யாமியாக கடவுள் என்ற பெயருடன் உள்ளார். (கடவுள் = கடந்து உள்ளே கவனித்தால் ஒவ்வொரு உயிரிலும் நாராயணன் இருப்பது புலப்படும்)
யோகத்தினால் தன் உள்ளே இருக்கும் அந்த நாராயணனை உள்ளே கடந்து பெரு முயற்சி செய்து சென்று சிலர் பார்க்கின்றனர் (ஆதி சங்கரர் போன்ற அத்வைதிகள்).
அனைத்து உயிரிலும் இருக்கிறார் என்று உணர்கின்றனர்.
இது பூமிக்கு அடியில் ஒரு நீர் உள்ளது போல.
நாம் நிற்கும் பூமிக்கு அடியில் தான் இருக்கிறது. ஆனால் பெரு முயற்சி தேவைப்படும்.
மூடனும், முரடனும், நல்லவனும், கெட்டவனும்,
சக்தி உள்ளவனும், சக்தி இல்லாதவனும், எவனும் எப்பொழுதும் பார்க்க நின்று கொண்டே இருக்கிறார் அர்ச்ச அவதாரத்தில்.
ஞானமும், பக்தியும் ஒருவனுக்கு இருக்கும் அளவிற்கு தன்னை வெளிப்படுத்துகிறார்.
சென்றால் பார்க்கலாம் என்று கோவிலில் இருக்கிறார்.
வீட்டிலும் இருக்கிறார்.
தன்னை அர்ச்சிக்க (பூஜிக்க) விரும்பினால் மூடத்தனமாக அர்ச்சனை செய்தாலும் ஏற்று கொள்கிறார்.
மூடனையும் அறிவாளி ஆக்குகிறார்.
கேட்டதை கொடுக்கிறார்.
திட்டினால் கூட அமைதியாக இருக்கிறார்.
எப்பொழுது கேட்பதை நிறுத்தி விட்டு, உன் பலத்தினால் காப்பாற்று என்று கேட்பான் என்று காத்து இருக்கிறார்.
எப்பொழுதும் இருக்கும் படியாக இருந்து கொண்டே இருக்கிறார்.
ஏரி, குளங்களில் சில இடங்களில் நீர் கிடைக்கிறது.
முயற்சி செய்யாமலேயே ஒருவன் குளம் இருக்கும் சென்று நீர் குடிப்பது போல, எப்பொழுதும் இருக்கும் படியாக இருந்து கொண்டே இருக்கிறார்.
பாவம், புண்ணியம் இரண்டையும் செய்யாத ஜென்மத்தில், பரம் என்ற வைகுண்டம் ஒரு ஜீவன் அடைகிறான்.
No comments:
Post a Comment