Followers

Search Here...

Thursday, 26 October 2017

தெய்வம், நாம் தவறு செய்தாலும் உடனே "அறிவுரை சொல்லி திருத்தாமல், கோபப்படாமல்" எப்படி இருக்கிறார்?... தெரிந்து கொள்வோம்

வைஷ்ணவ குணம் :
ஒரு சமயம் ஸ்ரீ ராமானுஜர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று இருந்தார்.
அந்த சமயம், ராமானுஜர் மனைவிக்கும், அவர் குரு நாதர் "பெரிய நம்பி்"யின் மனைவிக்கும் கிணற்றில் தண்ணீர் எடுக்கும் போது, மனஸ்தாபம் ஏற்பட்டு, வாய் தகராறு ஆகிவிட்டது. 

இதனால், பெரிய நம்பி்யிடம் அவர் மனைவி சென்று, நடந்ததை கூறி, வருத்தப்பட்டாள்.
மேலும், "நாம் இங்கு இருப்பதை விட ஸ்ரீ ரங்கம் சென்று விடலாம்" என்றாள்.

பெரிய நம்பிக்கும் ஸ்ரீ ரங்கநாதரை பார்த்து பல நாள் ஆகி விட்டதால், "சரி" என்று கிளம்பினார்.

இந்த விஷயம் எதுவும் அறியாத ஸ்ரீ ராமானுஜர் கோவிலில் இருந்து கிளம்பி தன் குருவின் க்ருஹம் பூட்டி இருப்பதை அறிந்து. நடந்ததை விசாரித்து அறிந்து கொண்டார்.

மிகவும் மனம் வருந்தினார். 

"தன் குரு தன்னிடம் சொல்லிக்கொள்ளாமல் செல்லும் அளவிற்கு அபசாரம் நிகழ்ந்ததே" என்று மனம் வருந்தினார்.
ஆனால் "இதற்கு காரணம் தன் மனைவி" என்று கோபப்படவும் இல்லை, மனதில் கோபமும் ஏற்படவில்லை. 




"இப்படி குரு பத்தினியிடம் சண்டை செய்யலாமா?
இவர்கள் இப்படி வருத்தப்பட்டு காஞ்சிபுரத்தை விட்டு செல்லும் அளவுக்கு செய்யலாமா?"
என்று எந்த வித கேள்வியும் ஸ்ரீ ராமானுஜர் தன் மனைவியிடம் கேட்கவும் இல்லை.
நடந்து விட்ட நிகழ்வுக்கு தனக்குள்ளேயே வருத்தப்பட்டார்.

மனைவியிடம் கோபப்பட வேண்டாம், சரி,
மனைவி, 'தன் குருநாதரிடம் எப்படி நடக்கவேண்டும்? எது நல்லது, எது தவறு?' 
என்பதையாவது ஸ்ரீ ராமானுஜர் சொல்லி திருத்தலாமே! அதுவும் அவர் செய்யவில்லை.

ராமானுஜர் கோபமும் படவில்லை, தானாக அறிவுரையும் சொல்லவில்லை. 

இதுவே வைஷ்ணவ குணம். 

இந்த குணம் ஸ்ரீ வைஷ்ணவரான  ராமானுஜரிடம் இருந்தது ஆச்சரியமில்லை...
இது சாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணின் அர்ச்ச அவதார குணமுமாகவும் இருக்கிறது.

ஸ்ரீ ராமானுஜருக்கு 'கோபம் எப்படி வராமல் போனது?'
ஸ்ரீ ராமானுஜர் "ஏன் சொல்லி திருத்தவில்லை?'

பொதுவாக யாருக்குமே, மற்றவர் அறிவுரை (advice) சொன்னால் பிடிக்காது. 
அறிவுரை சொன்னதற்காகவே, நம்மை விட்டு விலகி விடுவார்கள். 
விலகுவதால் இருவருக்கும் நஷ்டம் தானே ! 

தான் தவறு செய்தாலும், அதை தவறு என்று கூட உணராதவனிடம்,  அறிவுரை சொல்வதால், மேலும் உறவில் விரிசல் ஏற்படும். 

அறிவுரையை ஏற்று திருத்திக்கொள்வதை விட்டு விட்டு, அறிவுரை சொன்னவர் மேல் கோபப்பட்டு, அவர் பக்கமே இனி போக மாட்டான்.

தன் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி, மற்றவர்கள் இல்லாத போது, கோபம் வருகிறது.
நமக்கு கோபம் வருவதற்கு முக்கிய காரணமே இது தான்.

எதிர்பார்த்தது கிடைக்காததால், ஏற்படும் கோபத்தை, யாவரும் தவிர்க்க வேண்டும். 

நம் மனமே சில நேரங்களில், நமக்கு பிடிக்காததை செய்து விடுகிறது, 
அந்த சமயத்தில், நம்மை பார்த்து நமக்கே கோபம் ஏற்படும். 
இப்படி இருக்க, 
மற்றவர்களிடம் நாம் எதிர்பார்ப்பது கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு என்று தெரியும் போது, கோபப்படுவது அநாவசியம்.

இதனை அறிந்தவன், மற்றவர்கள் செயலை பார்த்து, கோபம் எப்பொழுதும் அடைய மாட்டான். 




பல வித மக்கள், உறவினர்கள் நமக்கு உண்டு.
ஒவ்வொருவர் முகமும் விதவிதம். ஒரே மாதிரியாக இல்லை. 

முகம் கூட ஒன்றாக இல்லை, என்று இருக்கும் 
போது நாம் நினைப்பது போல அனைவரும் இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது அவசியமில்லாதது.
 
ஒவ்வொருத்தருக்கும் ஒரு குணம், ஒரு எண்ணம் உண்டு. 

இதனை சம புத்தியுடன் பார்த்தாலே, நமக்கு யாரிடமும் கோபம் வராது. 

நமக்கு எதிராக இருந்தாலும், உலகம் பல விதமானது என்ற தெளிவு பிறக்கும்.

இந்த சம புத்தி, ஸ்ரீமந்  நாராயணனுக்கும் உள்ளது. 

தன்னை பார்க்க வரும் பக்தனை எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி பார்க்கிறார். 
இவன் என்னிடம் திடபக்தி செய்கிறானா? 
இவன் ஒழுக்கம் உள்ளவனா? 
நல்லவனா? 
என்று எதையும் இவர் எதிர்பார்ப்பதில்லை.



கோவிலுக்கு உள்ளே நுழையும் அனைவரையும் ஆசையோடு பார்க்கிறார். 

என்னை 'கல்' என்று பார்க்கிறானே? நான் இவனை மாமிச மலை என்றா பார்க்கிறேன்! 
ஒழுக்கம் இல்லாமல் வாழ்ந்து என்னிடம் வருகிறானே?! 
என்று ஒருபோதும் கோபப்படுவதில்லை பெருமாள்.

மேலும்
அறிவுரை சொல்லி உடனே திருத்தவும் முயற்சி செய்வது இல்லை. 

'நாம் ஏதாவது அறிவுரை என்று சொல்லி, அதன்படி நடக்க முடியாமல் போனால், இதையே காரணமாக கொண்டு, நம்மை விட்டு சென்று விடுவானோ'
என்ற கவலை பெருமாளுக்கு உண்டு.

'நம்மை விட்டு இவன் சென்று விட்டால், இவனுக்கு கிடைத்த ஸத்சங்கமும் இவனுக்கு போய் விடும். 
ஸத்சங்கம் போய் விட்டால், இவன் மீண்டும் ஸத்சங்கம் கிடைத்து வைகுண்டம் அடைய பல ஜென்மங்கள் ஆகி விடும். 
கிடைத்த ஸத்சங்கமே இவனுக்கு ஒழுக்கத்தையும், நம்மிடம் திடபக்தியையும் கொடுக்கும்'
என்ற காரணத்தால், பெருமாள் தன் பக்தனாக இருந்தாலும் உடனே அறிவுரை சொல்லி திருத்தாமல் இருக்கிறார். 

"இவன் நம்மிடம் வந்து கொண்டு இருப்பதே சீக்கிரமாக ஞானத்தை கொடுக்கும்" என்று இருக்கிறார்.

நாம் செய்யும் எந்த அபச்சாரத்தையும் சம நோக்குடன் பார்த்துக்கொண்டு, கோபப்பட்டு விடாமல், அறிவுரையும் செய்யாமல், நம்மை தன் கூடவே வைத்துக்கொள்ளும் நோக்கில் மட்டும் இருக்கிறார்.

நமக்கு அறிவுரை சொன்னால் உண்மையில் கேட்கும் மனம் வரும்வரை, பெருமாள் நமக்கு அறிவுரை வழங்க பொறுமையாய் தாயை போன்று இருக்கிறார்.

திட நம்பிக்கையுடன், உண்மையான சரணாகதி செய்யும் வரை நாம் செய்யும் அபசாரங்களை பொறுத்து கொள்கிறார்.

தவறு செய்பவனை, நாம் அறிவுரை மூலமோ, கோபம் கொண்டோ திருத்த நினைத்தால், பொதுவாக அவர்கள் நம்மை விட்டு விலகி விடுவர். அவர்களுக்கு நம்மை பிடிக்காமல் போய் விடும். 

இதனால் நஷ்டம் நமக்கும் தான்.

குருவே துணை.

No comments: