Followers

Search Here...

Sunday, 17 November 2019

கோவிலில் உள்ள பூஜை விதிகளை மாற்றலாமா? விக்ரகங்களை எப்படி பார்க்க வேண்டும்? "சிலையில் இறைவன் பிரவேசிக்க முடியாது" என்று சொல்பவன், "இறைவன் மிக பெரியவன்.. எல்லாம் வல்லவன்" என்ற தத்துவம் பேசுவது அறிவான பேச்சா? அலசுவோம்..



என்றுமே அழியாத வைகுண்டத்தில், நித்யவாசம் செய்யும் பரவாசுதேவன் நாராயணன்,
"ப்ரம்ம தேவனை" படைத்து, உலக ஸ்ருஷ்டி செய்ய "வேதத்தையும்" கொடுத்தார்.

ப்ரம்ம தேவன், முதன் முதலாக "சனகாதிகளை" ஸ்ருஷ்டி செய்தார்.
அவர்கள் உலக ஸ்ருஷ்டிக்கு உதவ மறுத்து, ஞான மார்க்கத்தில் சென்று விட,
தன் முதல் ஸ்ருஷ்டி மூலம் தன் விருப்பம் நிறைவேறவில்லையே என்று கோபப்பட, பிரம்மாவின் நெற்றி புருவ மத்தியில் இருந்து சம்ஹார மூர்த்தியாக, "ருத்ரன்", வெளிப்பட்டார்.. 




"படைக்கும்" தொழிலை தான் ஏற்றுள்ளதால்,
ருத்ரனுக்கு "சம்ஹார" தொழிலை கொடுத்து, அதற்கு நேரம் வரும்வரை யோகத்தில் இருக்க சொல்ல, ருத்ரன் தன் சிவகணங்களுடன் "கைலாசத்துக்கு" சென்று விட்டார்.

பூரணமான அவதாரமான, பரவாசுதேவன் நாராயணனே "க்ஷீராப்தி என்ற பாற்கடலை" ஸ்ருஷ்டி செய்து,
அங்கு விஷ்ணுவாக தன்னை அவதரித்து கொண்டு, "காக்கும் தொழிலை நான் செய்கிறேன்"
என்று மும்மூர்த்திகளில் தானும் ஒருவர் என்று தன்னை தானே அவதரித்து கொண்டார் பரவாசுதேவன்.

ப்ரம்ம தேவன், சொர்க்க லோகம், பூலோகம் படைக்க,
காஷ்யப ரிஷியால் "தேவர்கள், அசுரர்கள்"  படைக்கப்பட்டார்கள்..
ஸ்வாயம்பு மனுவால் "மனிதர்கள்" ஸ்ருஷ்டி செய்யப்பட்டார்கள்..

தேவர்களுக்கு தலைவனான இந்திரனுக்கு சகோதரனாக "உபேந்திரன்" என்று பெயருடன் பரமாத்மாவே அவதரித்து,
"தேவர்களிலும் தானும் ஒருவன்" என்று தன்னை காட்டி கொண்டு அவதரித்து விட்டார்..

அசுரர்களால், "வேதமும், பூலோகமும்" ஆபத்தை சந்திக்க, "மத்ஸ்ய, வராஹ" அவதாரம் செய்து வேதத்தையும், உலகையும் பிரளய ஜலத்தில் இருந்து மீட்டார்..

அசுரர்களால் தேவர்களுக்கு துன்பம் ஏற்படுவதை பார்த்து,
அவர்களுக்கு அம்ருதம் கிடைக்க, தன் முதுகை கொடுத்து மந்திர மலை விழாமல் இருக்க "கூர்ம" அவதாரம் செய்து அம்ருதம் கிடைக்க செய்தார்..

பூலோகத்தில் மனிதர்கள் "வேதம் சொல்லும் தர்மத்தை எப்படி நடைமுறையில் கடைபிடிப்பது?" என்று தவிக்க,
தானே "ராமபிரானாக" மனித அவதாரம் செய்து,
"நான் மனிதன்..தசரதனின் குமாரன்"
என்று யார் கேட்டாலும் சொல்லிக்கொண்டு,
நீண்ட காலங்கள் பூலோகத்தில் மனித ரூபத்துடனேயே வாழ்ந்து,
"எத்தனை துன்பங்கள், சந்தோஷங்கள் நமது வாழ்க்கையில் வந்தாலும், மனம் சஞ்சலம் அடையாமல், சோர்ந்து விடாமல், தர்மத்தை விட்டு விடாமல் வாழ முடியும்"
என்று வாழ்ந்து வழி காட்டினார் பரவாசுதேவன்..

"ஈஸ்வரன் மனிதனாக வந்தார்.. ஈஸ்வர தன்மையை முடிந்தவரை காட்டாமல் இருந்து விட்டாரே..
பரவாசுதேவன் தன் ஈஸ்வர தன்மையுடன் மனித அவதாரம் செய்தால் எப்படி இருப்பார்?"
என்று பக்தர்கள் ஆசைப்பட,
அடுத்த யுகமான துவாபர யுக முடிவில்,
"தான் ஈஸ்வரன்" என்று பிறந்தது முதலேயே காட்டி கொண்டு, பரவாசுதேவன் "வாசுதேவ ஸ்ரீ கிருஷ்ணராகவே" அவதரித்து,
அவதரித்தது முதல் அந்தர்தானம் ஆன வரை, ஆச்சர்யமாக லீலை செய்து, பக்தர்களுக்கு ஆனந்தத்தை அள்ளி கொடுத்தார்.
ஞானிகளுக்கு ஞான மார்க்கத்தை,
கர்மாவில் ஆர்வம் உள்ளவர்களுக்கு கர்ம மார்க்கத்தை,
சந்யாசிக்கு சந்யாஸ யோகத்தை,
பக்தனுக்கு பக்தி மார்க்கத்தை வழி காட்டி,
மனித குலத்துக்கு நிதியாக, "பகவத் கீதை" என்ற உபதேசத்தையும் செய்தார்.

மனிதனாகவே வாழ்ந்து காட்டிய போதும் ராம்பிரானை, புரிந்து கொள்ள முடியாமல் இருந்தனர் சிலர்.

மனிதனாக அவதரித்து ஈஸ்வரனாகவே வாழ்ந்து காட்டியும், கிருஷ்ண பரமாத்மாவை "மாயன்" என்று நினைத்தனர் சில அஞானிகள்.

இப்படி பல அவதாரங்கள், "ப்ரம்ம தேவனுக்காக, தேவர்களுக்காக, மனிதர்களுக்காக" அவதாரம் செய்தும்,
இன்னும் பல கோடி ஜீவன்கள்,
முக்தி அடையாமல், தன் ஈஸ்வர தன்மையை புரிந்து கொள்ள முடியாமல்,
தன்னை பற்றிய நினைவு கூட இல்லாமல், கோடிக்கணக்கான பிறவிகள் எடுத்து கொண்டே, இன்னும் பிறந்து கொண்டே இருக்க,
அனைவரையும் தன் திருவடிகளில் போட்டு கொள்ள பிடிவாதம் செய்து கொண்டு, தன் பெருமையை கூட கருதாமல், தன்னை அர்ச்சிக்கும் ஒரு சிலையாக அவதரித்து கொண்டு, பூலோகத்திற்கு வந்து விட்டார் பரவாசுதேவன்.




பரவாசுதேவன் அர்ச்ச அவதாரமாக உள்ள, சில இடங்களை இப்போது மனதால் தியானிப்போம்..
  • துவாரகையில் துவாரகா நாதனாக வந்து விட்டார்.
  • ப்ரபாச க்ஷேத்ரத்தில் புருஷோத்தமானாக வந்து விட்டார்.
  • புரி ஜெகன்நாத்தில் மரத்தால் ஆன அர்ச்சா ரூபமாக வந்து விட்டார்.
  • ஸ்ரீகூர்மத்தில் வராஹனாக வந்து விட்டார்.
  • அஹோபிலத்தில் நரசிம்மமாக வந்து விட்டார்.
  • காஞ்சிபுரத்தில் ஹஸ்தி (அத்தி) வரதனாக வந்து விட்டார்.
  • திருமலையிலே ஸ்ரீனிவாசனாக வந்து விட்டார்.
  • திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கிருஷ்ணனாக வந்து விட்டார்.
  • திருவிஹீந்திரபுரத்தில் தேவனாதனாக வந்து விட்டார்.
  • திருக்கோவிலூரில் த்ரிவிக்ரமனாக வந்து விட்டார்.
  • திருசித்ரகூடம் என்ற சிதம்பரத்தில் கோவிந்தராஜனாக வந்து விட்டார்.
  • திருக்கண்ணபுரத்தில் சௌரிராஜனாக வந்து விட்டார்,
  • குடந்தை என்ற கும்பகோணத்தில் சாரங்கபாணியாக (ஆரவாமுதனாக) வந்து விட்டார்.
  • திருநாங்கூரில் நர நாராயணனாக வந்து விட்டார்.
  • ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசாயியாக வந்து விட்டார்.
  • அழகர்கோவிலில் சுந்தரராஜனாக வந்து விட்டார்.
  • திருவனந்தபுரத்தில் பத்மநாபனாக வந்து விட்டார்.
  • பண்டரிபுரத்தில் பாண்டுரங்கநாக வந்து விட்டார்.
  • பத்ரிநாத்தில் நர நாராயணனாக வந்து விட்டார்.

இவ்வாறு,
108 திவ்ய தேசங்களிலும்,
மேலும்,
ஆங்காங்கு உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களிலும்,
நம் ஒவ்வொருவர் வீட்டில் படங்களாகவும், பூஜை அறையில் சின்ன சின்ன விக்ரஹமாகவும்,
"கோடிக்கணக்கான ரூபங்களுடன்" அர்ச்ச (சிலை) திருமேனியுடன் அவதாரம் செய்து,
பாரத பூமியில் தொட்ட இடங்களிலெல்லாம், எம்பெருமான் தன்னை அவதரித்து வியாபித்து கொண்டு விட்டார்.

பரவாசுதேவன், "விஷ்ணுவாகவும், ராமனாகவும், கண்ணனாகவும்" அவதரிக்க காரணம் இருந்தது..

இப்படி கோடிக்கணக்கான அர்ச்சா ரூபங்களுடன் எம்பெருமான் சிலையாக அவதரிக்க காரணம் என்ன?
  • மூப்பும், மரணமும் உண்டு என்ற நினைவே இல்லாமல்,
  • மோக்ஷம் அடையாமல் பிறந்து கொண்டே இருக்கிறோமே என்ற கவலையே இல்லாமல்,
  • வயிற்றை வளர்க்கவே வாழ்நாளை செலவு செய்யும் கோடிக்கணக்கான ஜீவனுக்காகவும்,
  • தர்ம பாதையை விட்டு, பாவங்களையே செய்து வாழும் ஜீவனுக்காகவும்,
  • தெய்வ நம்பிக்கை உடையவர்கள்,
  • நம்பிக்கையே இல்லாதவர்கள்,
  • தர்மத்தை விட்டு பாஷண்டிகளாக போனவர்கள்,
  • வேத தர்மத்தையே அறியாத மிலேச்சர்கள்
என்று உலகத்தில் உள்ள அனைவரையும், 'தன் திருவடிக்கு இழுத்து, அவர்கள் மனபோக்கை உயர்த்தி, ஆன்மீக வழியில் திருப்பி, மோக்ஷம் வரை அழைத்து சென்று விட வேண்டும்'
என்று பிடிவாதம் செய்து கொண்டு, இப்படி கோடிக்கணக்கான அரச்சா ரூபத்துடன் பூலோகத்தில் அவதரித்து விட்டார் எம்பெருமான்.

பரவாசுதேவன் செய்த அவதாரங்களில், நமக்காக செய்த அவதாரம் "அர்ச்சா அவதாரமே".
நம் வீட்டில் உள்ள குட்டி விக்ரஹத்தை "வெறும் சிலை" என்று நினைத்து ஏமாற கூடாது....
"நமக்காக பெருமாள் அந்த அர்ச்சா திருமேனியுடன் வந்து நம் வீட்டில் இருக்கிறார்" என்று பார்க்க வேண்டும்.

இப்படி காணும் இடமெல்லாம், அர்ச்சா ரூபத்துடன் அவதரித்துள்ள எம்பெருமானை போலவே, 
உபதேவதைகளும் ஆங்காங்கு அரச்சா ரூபத்துடன் அவதரித்து விட்டனர்..




பரவாசுதேவன் அர்ச்ச அவதாரம் செய்வதற்கு நோக்கம் ஒன்று தான்..
"ஜீவ கோடிகள் பிறவி கடலை கடக்க, தன் திருவடியில் சேர்ப்பதே" பரவாசுதேவனின் நோக்கம்.

இப்படி அர்ச்சா திருமேனியுடன் ஆங்காங்கு அவதரித்து இருக்கும் எம்பெருமான்,
தன்னை எந்த வகையிலும் ஒரு ஜீவன் நெருங்கினாலும், அந்த ஜீவனுக்கு மோக்ஷத்துக்கான வழியை காட்டி விடுகிறார்..

தன் வீட்டில் படத்தில் உள்ள பெருமாளுக்கோ,
தன் வீட்டில் விக்ரஹ திருமேனியுடன் உள்ள பெருமாளுக்கோ,
கோவிலில் விக்ரஹ திருமேனியுடன் உள்ள பெருமாளுக்கோ,
  • தன் கையால் நாம் ஒரு துளசி பறித்து கொடுத்து விட்டால் கூட,
  • ஒரு சிறிய நெய் தீபம் தப்பித்தவறி ஏற்றினால் கூட,
  • கோவிலில் உற்சவ சமயங்களில் பெருமாள் வீதி வழியாக புறப்பட்டு வரும் போது, எதிர்பாராமல் பார்க்க நேர்ந்தாலும் கூட,
  • ஏதோ வீட்டுக்கு சாமான் வாங்க, பெருமாள் வீற்று இருக்கும் கோவில் வாசலோடு வந்தால் கூட,
எப்படியோ ஒரு சம்பந்தம் இந்த ஜீவனுக்கு எம்பெருமான் சம்பந்தமாக ஏற்பட்டு விட்டால் கூட,
தன் மோக்ஷ வாசலை திறந்து விட்டு விட காத்து இருக்கிறார் எம்பெருமான்..

'மோக்ஷ அடையாமல் இருக்கும் ஜீவ கோடிகளை எப்படியாவது வளைத்து பிடித்து, தன் திருவடியில் சேர்த்து கொள்வதற்காக,
தானே ஆயிரக்கணக்கான அர்ச்சா திருமேனியை தரித்துக்கொண்டு, வந்து விட்டார்' பரவாசுதேவன் நாராயணன்.

முதல் அர்ச்ச அவதாரம், ப்ரம்ம தேவனுக்காக செய்தார் பரவாசுதேவன்.
பரவாசுதேவன், "ப்ரம்ம தேவனை" ஸ்ருஷ்டி செய்த பின்,
சத்ய லோகத்தில் தான் மட்டுமே இருப்பதை உணர்ந்தார்.
ப்ரம்ம தேவன்,
"தன்னை படைத்தவர் யார்?"
என்று தியானிக்க,
பரவாசுதேவன் அவருக்கு தியானத்தில் காட்சி கொடுத்து,
"உலக ஸ்ருஷ்டிக்காக தான் படைக்கப்பட்டதை" அறிந்து கொண்டார்..

வேதத்தை உபதேசம் பெற்ற ப்ரம்ம தேவன்,
"எம்பெருமானை தன் கைகளால் அர்ச்சிக்க ஆசைப்பட்டார்."

ப்ரம்ம தேவனுக்காக, அர்ச்சா திருமேனியுடன் "ரங்கநாதராக" ப்ரம்ம லோகத்தில் அவதரித்தார்.

ப்ரம்ம தேவன் அர்ச்சா ரூபத்துடன் தனக்காக அவதரித்த பெருமாளிடம்,
"அர்ச்சா திருமேனியுடன் உள்ள உங்களை (எம்பெருமானை) எப்படி பூஜை (அர்ச்சனை / திருவாராதனை) செய்ய வேண்டும்?"
என்று கேட்க,
சத்ய லோகத்தில், அர்ச்சா திருமேனியுடன் ரங்கநாதராக அவதரித்த பெருமாள் பேசலானார்,
"3 விதமான திருவாராதனையை அர்ச்சா திருமேனியுடன் இருக்கும் போது ஏற்று கொள்கிறேன்..


  1. 'புருஷ சூக்தம்' முதலிய வேத மந்திரங்களுடன் செய்யப்படும் 'வைதீகமான' திருவாராதனையை நான் ஏற்று கொள்கிறேன்.
  2. 'மந்த்ர ஆவாகனம்' செய்து முத்ராதானங்கள் மூலம், 'தாந்த்ரீகமான' முறையில்,  வைகானசம்/பாஞ்சராத்ரம் போன்ற ஆகம விதிப்படி செய்யப்படும் திருவாராதனையையும் ஏற்று கொள்கிறேன்.
  3. அனைவரும் என்னை திருவாராதனை செய்வதற்கு, அவரவர்கள் வீடுகளிலும், என்னை அர்ச்சா திருமேனியாகவோ, படமாகவோ வரைந்து கூட வைத்து கொண்டு,
    என் மீது ஆசையுடன் (பக்தியுடன்) எதை கொண்டு பூஜித்தாலும் அதை "புராணோக்தம் என்ற மிஸ்ரம்" என்ற முறையில் செய்யப்படும் திருவாராதனையாக ஏற்று கொள்கிறேன்.
அவர்கள் வழிபடும் அர்ச்சா மூர்த்தியில் (சிலையில்), படங்களில் நான்  ஆவிர்பவித்து, அவர்கள் பக்திக்கு ஏற்று பழகுகிறேன், அணுகிரஹம் செய்கிறேன்.

எந்த பக்தனுக்காக எந்த ரூபத்தில் அர்ச்சா அவதாரம் செய்தேனோ!! அந்த பக்தன் என்னை எந்த முறையில் (வைதீக, தாந்த்ரீக) திருவாராதனை செய்து ஆராதனை செய்தானோ!!
அதே ஆகம விதிப்படியே, எனக்கு மற்றவர்களும் அந்த அர்ச்சா மூர்த்திக்கு திருவாராதனை செய்வதை மகிழ்வுடன் ஏற்கிறேன். அந்த பக்தன் வழிபட்ட முறையில் என்னை வழிபடும் பிறருக்கும், அந்த பக்தனை நினைத்து கொண்டே அருள் செய்கிறேன்.




எந்த பக்தனுக்காக எப்படி அர்ச்ச அவதாரம் செய்தேனோ, அந்த பக்தன் எனக்கு செய்த திருவாராதனை முறையை, பிடிவாதத்தால் மாற்றி, மற்றவர்கள் செய்வதை ஏற்க மாட்டேன்"
என்று ப்ரம்ம தேவனுக்கு 'அர்ச்சா திருமேனியுடன் இருக்கும் போது, எப்படி திருவாராதனை செய்ய வேண்டும்' என்று சொன்னார்.

ஆலயங்களில் ஆகம விதிப்படி தான் பூஜை செய்ய வேண்டும்..

எந்த எந்த ஆகம முறையில், கோவில்களில் அர்ச்ச அவதார மூர்த்திக்கு முதன் முதலாக பூஜை செய்யப்பட்டதோ!! 
அந்த ஆகம விதிப்படியே திருவாராதனை தொடர்ந்து செய்யப்பட வேண்டும்..

கோவிலில் இருக்கும் அர்ச்சா திருமேனியுடன் உள்ள எம்பெருமானை, நாம் பிரதிஷ்டை செய்யவில்லை.. இதை நாம் மறந்து விட கூடாது..
யாரோ ஒரு ரிஷிக்கு,
யாரோ ஒரு தேவனுக்கு,
யாரோ ஒரு மனுஷ்யனுக்கு,
எம்பெருமான், எந்த காலத்திலோ அந்த கோவிலில் உள்ள அர்ச்சா மூர்த்திகளாக தரிசனம் கொடுத்துள்ளார்.
அர்ச்சா திருமேனியுடன் உள்ள எம்பெருமானை, நாம் பிரதிஷ்டை செய்யவில்லை.
அவர்களின் பக்தியால் தரிசித்த அர்ச்சா திருமேனியை, பிரதிஷ்டை செய்து பூஜித்து இருக்கிறார்கள்.
பிற்காலத்தில் அந்த மூர்த்திக்கு அரசர்களாலும், பக்தர்களாலும் பெரும் கோவில்கள் எழுப்பப்பட்டு இருக்கிறது.
எந்த காலத்தில் இந்த மூர்த்திகள் தோன்றியதோ? 
எந்த காலத்தில் இந்த மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதோ? 
நமக்கு தெரியாது...
சில கோவில்களில் உள்ள பெருமாள், எத்தனை யுகங்களாக இருகிறார்? என்று கூட சொல்ல முடியவில்லை.

அப்படி இருக்கும் போது, எந்த முறையில் திருவாராதனைகள் ஆரம்பிக்க பட்டதோ, அதே முறையில், திருவாராதனை தொடர்வதே சரி..
"எம்பெருமான் ஒரு பக்தனுக்காக ப்ரத்யக்ஷமாகி, அந்த பக்தன் செய்த திருவாராதனையை உகந்து ஏற்று இருக்கிறார்"
என்கிறபோது, பிற்காலத்தில் வந்த நாம், நம் இஷ்டத்துக்கு மாற்றுவது பெருமாளுக்கும் உகக்காது..
அப்படி திருவாராதனையை மாற்றுவது உண்மையான பக்தியே அல்ல.

தெய்வம் ரசிக்காத ஒரு மாற்றத்தை, நாம் செய்வது தான் பக்தியா?..

"தான் பிரதிஷ்டை செய்யாத அர்ச்சா மூர்த்தி" என்கிற போது,
காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் திருவாராதனை முறையை மாற்ற நாம் யார்?..

"பக்தி இல்லாதவன், பொறாமை கொண்டவன்.. வம்பு செய்பவன்" தானே, இப்படி செய்ய துணிவான்...

அர்ச்சா திருமேனியுடன் இருக்கும் எம்பெருமான், "கல் சிலை தானே" என்று நினைத்து, ஆகம விதியை மாற்ற நினைக்கிறார்கள்..



ரிஷிகளுக்காகவும், தேவர்களுக்காகவும் அர்ச்ச அவதாரம் ஏற்று ப்ரத்யக்ஷம் ஆன பெருமாள், காழ்ப்புணர்ச்சியால் செய்யப்படும் இது போன்ற செயல்களை கண்டு உகப்பதில்லை..

"பெருமாளுக்கு இது உகப்பதில்லை"
என்பதற்கு ஸ்ரீ ராமானுஜர் சம்பந்தமாகவே ஒரு நிகழ்ச்சி நடந்தது...
திருவனந்தபுரத்தில் உள்ள, பத்மநாப ஸ்வாமிக்கு தாந்த்ரீகமான திருவாராதனையே நடைபெறுகிறது.. 
அதிலும், ஆகம விதிப்படி வைகானச முறைப்படியோ, பாஞ்சராத்ர முறைப்படியோ திருவாராதனை செய்யாமல், வெறும் தாந்த்ரோக்தமான பூஜையே நடைபெறுவதை பார்த்த,
சாஷாத் ஆதிசேஷன் அவதாரமான, 
ஜகத் குருவான, 
சர்வ சாஸ்திரமும் அறிந்தவரான, 
ரங்கநாதரிடமே தன் அடியார்களுக்கெல்லாம் வைகுண்டம் கிடைக்க உரிமை வாங்கி இருந்த, 
யதிராஜர் "ஸ்ரீராமானுஜர்", இங்கு நடக்கும் 'ஆராதனை முறையை மாற்ற வேண்டும்' என்று நினைத்தார்.
அப்படி நினைத்த அதே ராத்திரியில், இவர் படுத்து இருந்த போது, எம்பெருமான் 'கட்டிலோடு கிளப்பி, ராமானுஜரை திருவனந்தபுரத்திலிருந்து 100KM தள்ளி இருக்கும் திருக்குறுங்குடியில் இறக்கி விட்டு விட்டார்' பெருமாள்..
திருவனந்தபுரத்தில் படுத்த, ராமானுஜர் திருக்குறுங்குடியில் எழுந்தார்..
அதே போல,
ராமானுஜர், ஒரிசாவில் உள்ள "புரிஜெகன்னாத்தில் உள்ள கிருஷ்ண, பலராம, சுபத்ராவுக்கு அங்கு செய்யப்படும் ஆராதனை முறையை மாற்றி, பாஞ்சராத்ரம் முறையில் திருவாராதனை செய்யலாம்" என்று நினைத்த போது,
மீண்டும் அங்கிருந்து 'இரவோடு இரவாக, ராமானுஜரை
280KM தள்ளி இருக்கும் ஸ்ரீகூர்மத்தில் இறக்கி விட்டு விட்டார்' எம்பெருமான்.
"காலம் காலமாக நடக்கும் திருவாராதனை முறையை, பக்தன் என்ற காரணத்தை காட்டி, நாம் மாற்ற நினைக்க கூடாது"
என்று ராமானுஜர் உணர்ந்தார்..
"எம்பெருமானுக்கு இது ஏற்பு இல்லை" என்றும் உணர்ந்தார்..




திருவாராதனையை மாற்ற ராமானுஜருக்கே "எம்பெருமான் அனுமதி தரவில்லை" என்று கவனிக்கும் போது,
காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் திருவாராதனை முறையை மாற்ற, நாம் யார்?

திருவாராதனையை மாற்ற நமக்கு எந்த உரிமையும் கிடையாது..

பெருமாளுக்கும் இது போன்ற செயல்களில் உகப்பு ஏற்படுவதில்லை என்று தெரிகிறது..

மூன்று விதமான பிரதிஷ்டைகள் அர்ச்ச அவதார மூர்த்திகளுக்கு சொல்லப்படுகிறது ..

  • ரிஷி பிரதிஷ்டை
  • தேவ பிரதிஷ்டை
  • மனுஷ்ய பிரதிஷ்டை
சில கோவில்களில் உள்ள மூல விக்ரஹங்கள், ரிஷிகளுக்காக, தேவர்களுக்காக ப்ரத்யக்ஷம் ஆகி, பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சில கோவில்களில் உள்ள அர்ச்சா திருமேனிகள் மகான்கள், பக்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ரிஷிகளுக்காக, தேவர்களுக்காக, எம்பெருமான் எந்த காலத்தில் அர்ச்சா திருமேனியுடன், என்ன காரணத்துக்காக இவர்களுக்கு காட்சி கொடுத்தாரோ, நமக்கு புரியாதது..
அது எந்த காலமோ? நமக்கு தெரியாது..

ஒன்று நிச்சயமாகிறது... 
நாம் இந்த மூர்த்தியை பிரதிஷ்டை செய்யவில்லை.

நாம் கோவிலில் உள்ள மூர்த்தியை பிரதிஷ்டை செய்யவில்லை என்கிறபோது,
அந்த மூர்த்திக்கு நடைபெறும் திருவாராதனை முறையை மாற்ற நமக்கு எந்த உரிமையும் இல்லை..

'பக்தியால் செய்யப்படும் எந்த பூஜையும் ஏற்று கொள்கிறார் பகவான்' என்று தன் பக்தியை காரணமாக காட்டி "அப்படி தான் திருவாராதனை முறையை மாற்றுவேன்" என்று பிடிவாதம் செய்ய கூடாது.

யாரோ ஒரு பக்தனுக்கு ப்ரத்யக்ஷமான அர்ச்சா திருமேனிக்கு நடக்கும் திருவாராதனையை மாற்ற, நமக்கு அனுமதி இல்லையே தவிர,
உண்மையான பக்தி இருந்தால், வேறு மாதிரி திருவாராதனை செய்ய ஆசை இருந்தால்,
திருப்பதி ஸ்ரீனிவாசனை போலவே அர்ச்சா மூர்த்தியை தாராளமாக செய்து கொண்டு,
ஸ்ரீ ரங்க கோவிலை விட பெரிய கோவிலை தாராளமாக கட்டி கொண்டு, 
அந்த பக்தனே பக்தியுடன் பிரதிஷ்டை செய்து, 
வைதீக திருவாராதனையும் வேண்டாம்.. ஆகம முறையிலும் திருவாராதனை செய்ய வேண்டாம்.. தன் இஷ்டத்துக்கு தன் ஆசைக்கே பூஜை செய்யட்டும். 
அப்படிப்பட்ட பூஜை செய்தாலும் பெருமாள் அந்த பக்தனுக்காக ஏற்று கொள்கிறார்..
யார் வேண்டாம் என்றது?!!

ஆனால், யாரோ ஒரு பக்தன் பிரதிஷ்டை செய்த மூர்த்தியின் 'திருவாராதனை முறையை மாற்றுவேன்' என்று தெய்வபக்தி உள்ளது போல பேசுபவர்கள், தாராளமாக தாங்களே ஒரு பெரிய கோவில் கட்டி, தாங்களே ஒரு பெருமாளை பிரதிஷ்டை செய்து வழிபடலாமே..
எந்த பக்தனோ பிரதிஷ்டை செய்து, காலம் காலமாக நடக்கும் திருவாராதனை ஆகம பூஜையை மாற்ற நமக்கு எந்த உரிமையும் கிடையாது.
அது பக்தியும் இல்லை.
அதனால் பெருமாள் உகப்பதும் இல்லை..
இப்படி பேசுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள். 

நாமே செய்து கொள்ளும் சிலையில், படங்களில் தெய்வம் தன்னை அவதரித்து கொள்வாரா?
நமக்கு உண்மையாக பக்தி இருந்தால், "கல்லிலும், படத்திலும் கூட" தன்னை பக்தனுக்காக அவதரித்து கொள்கிறார்.

"இது சிலை தானே" என்ற எண்ணமே பக்தனுக்கு வர கூடாது..
"அர்ச்சா திருமேனியுடன் நமக்கு காட்சி கொடுக்கவே, நம்மிடம் பேசவே அவதரித்து உள்ளார்" என்றே பார்க்க வேண்டும்.

"சர்வ வல்லமை கொண்டவர் பரமாத்மா" என்று சொல்லிவிட்டு,
"பகவான் என்று ஆசையாக பார்க்கும் அர்ச்சா திருமேனியில் வர முடியுமா?" என்று நினைப்பதே அறிவீனம்.

"அர்ச்சா (சிலை) திருமேனியில், நம் பக்திக்காக பகவான் பிரவேசித்து விடுகிறார்" என்று நம்ப முடியாது போனால்,
"சதை எலும்பு ரத்த திருமேனியில் எப்படி ஜீவன் பிரவேசித்தான்?" என்று யோசிக்க வேண்டாமா?

ஜீவன் போய் விட்டால், மிச்சப்படுவது மாமிச உடல் தானே!!
ஜீவன் எப்படி ஒரு மாமிசத்தில் பிரவேசித்து இருக்கிறான்? 
யோசிக்க வேண்டாமா?




ஒரு சாதாரண ஜீவன் ஒரு மாமிச உடலில் பிரவேசிக்க முடியுமென்றால்,
ஜீவனை படைத்த பரமாத்மா நாராயணன், அந்த ஜீவன் பக்தியுடன் ஒரு கல்லில் தன்னை ஆவிர்பவிக்க சொன்னால், வர இயலாதா?..

நம் பக்தியை தானே எதிர்பார்க்கிறார் பகவான்.
1% பக்தி செய்தாலும், அதற்கு ஏற்றபடி நம்மிடம் பழகுகிறாரே..
கனவில் காட்சி கொடுக்கிறாரே..
யார் போலவோ வந்து, நம் மன கலக்கத்தை போக்குகிறாரே..
பக்தி உயர உயர, அர்ச்சா திருமேனியாக இருந்தாலும், நம் உள்ளுணர்வோடு உறவாடுகிறார்.
உள்ளிருந்து கொண்டே பேசுகிறார்.
பக்தி உயர உயர, நம்மிடம் பேசுகிறார், காட்சி கொடுக்கிறார்..
பக்தி உயர உயர, மரண காலத்தில் உலக நினைவுகள் எழும்பாமல் மரண வேதனையை உணர விடாமல் தன் தரிசனத்தை கொடுத்து, வைகுண்டம் வரை அழைத்து சென்று விடுகிறார்.

நாம் தெய்வத்திடம் வைக்கும் உண்மையான அன்பை கொண்டே "தெய்வ அணுகிரஹம்" நிர்ணயிக்கப்படுகிறது.

ராமானுஜர் காலத்தில், கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டையில் டெல்லியை ஆண்ட சுல்தான் முற்றுகையிட்டு, கோவிலை இடித்து, அங்கிருந்த உற்சவ மூர்த்தியை எடுத்து கொண்டு சென்று விட்டான்.
"சிலை தானே" என்று பார்த்தான்.. சிலையாகவே இருந்து விட்டார்.
பல வருடங்கள் கழித்து, சோழ அரசன் குலோத்துங்கனின் (கிருமி கண்ட சோழன்) தனிப்பட்ட கோபத்தால், ராமானுஜர் ஸ்ரீ ரங்கத்தை விட்டு கிளம்பி, மேல்கோட்டை வந்த போது, "பெருமாளை காணவில்லையே" என்று கதற,
"தான் டில்லியில் இருக்கிறேன்.. வந்து கூட்டி செல்லுங்கள்" என்று பெருமாள் கனவில் பேச, மீட்டு கொண்டு மீண்டும் அதே கோவிலில் பிரதிஷ்டை செய்து விட்டார்..
"சிலை தானே" என்று நினைத்த சுல்தானுக்கு, சிலையாக இருந்து விட்ட எம்பெருமான்,
"அர்ச்சா திருமேனியில் பெருமாள் இருக்கிறார்" என்றே பார்க்கும் அடியார்களுக்கு, செவி சாய்கிறார்..

ராமானுஜர் காலத்துக்கு பின், 200 வருடங்கள் கழித்து, கில்ஜி காலத்தில் ஸ்ரீரங்கம் வரை சுல்தான்கள் நுழைந்து விட, ஆழ்வார்கள், ராமானுஜர் போன்றோர் வழிபட்ட உற்சவ மூர்த்தியான ரங்கநாதரை மாலிக் காபூர் தூக்கி கொண்டு சென்று விட்டான்.
பிறகு டில்லி சென்று ரங்கநாதரை மீட்டும், இஸ்லாமிய கலவரத்தால் மீண்டும் ரங்கநாதருக்கு அபாயம் ஏற்படுமோ என்று அஞ்சி, 
80 வருடங்கள், மேலூர், திருநெல்வேலி, கேரளம், திருமலை என்று பல இடங்களுக்கு எடுத்து சென்று பாதுகாத்தனர்..

இந்த சமயத்தில் உற்சவ மூர்த்தி இல்லாமல் இருக்க கூடாது என்று வேறொரு மூர்த்தியை ஆவாஹனம் செய்து, பாஞ்சராத்ர முறைப்படி ஆராதனை செய்து வந்தனர்..
விஜயநகர சாம்ராஜ்யம் ஏற்பட்டு, இஸ்லாமிய கலவரம் அடக்கப்பட்ட பின், மீண்டும் 80 வருடங்கள் கழித்து, ஏற்கனவே இருந்த அர்ச்ச மூர்த்தியான ரங்கநாதர் ஸ்ரீ ரங்கம் வந்து விட்டார்..

பழைய மூர்த்தி திரும்ப கிடைத்தால், புது மூர்த்தியுடன் சேர்த்து பூஜை செய்ய வேண்டுமே தவிர,
எக்காரணம் கொண்டும் திருவாராதனை செய்யாமல் இருக்க கூடாது.

இன்று வரை,
ராமானுஜரிடம் பேசிய, ஆழ்வார்கள் கண்ட அதே பழைய உற்சவ பெருமாளுக்கும், புது உற்சவ பெருமாளுக்கும் திருவாராதனை ஸ்ரீரங்கத்தில் நடைபெறுகிறது.

எப்படி திருவாராதனை முறையை மாற்ற நமக்கு உரிமை இல்லையோ, அதே போல, மூர்த்தியை மாற்றவும் நமக்கு உரிமை இல்லை..

"புதிய ரங்கநாத பெருமாள் 80 வருடமாக இருக்கிறாரே" என்று அங்கு இருப்பவர்கள் மீண்டும் ஆழ்வார்கள், ராமானுஜர் கண்ட பழைய பெருமாள் வந்த பின், "பழைய ரங்கநாத பெருமாள் தானே இவர்" என்று குளத்தில் போட்டு விடவில்லை..

இவருக்கும் சேர்த்து தான் பூஜை செய்கிறார்களே தவிர, வீண் பிடிவாதம் செய்து, ஆழ்வார்கள் அனுபவித்த பெருமாளை தூக்கி குளத்தில் வைக்கவில்லை..
கலவரத்தால் சில சமயங்களில் உற்சவரோ, மூலவரோ பூமியில், குளங்களில் மறைக்கப்படலாம், உடைக்க கூட படலாம்..
நம் அஜாக்கிரதை காரணமாக, அர்ச்சா திருமேனிகள் உடையவும் செய்யலாம்,
ஆனால் மீண்டும் அந்த அர்ச்சா திருமேனிகள் நமக்கு கிடைத்தால், அதை மீண்டும் புதைப்பதோ, குளத்தில் போடுவதோ பக்தியே இல்லை.. வாதத்துக்கு மருந்து உண்டு, வீண் பிடிவாதத்துக்கு மருந்தே இல்லை..

திருவாராதனை முறையை மாற்ற கூடாது என்பது ஒருபுறமிருக்க, முதன் முதலாக ஒரு பக்தனுக்காக ஆவிர்பவித்த பெருமாளை எக்காரணம் கொண்டும் பூஜை இல்லாமல் அவமதிக்க கூடாது..




பல கோவில்களில், இன்றுள்ள உற்சவ திருமேனிகள், அபிஷேகம் செய்து அபிஷேகம் செய்து, பல ஆயிரம் வருடங்கள் ஆகி, முகமே உருக்குலைந்து போன நிலையில் உள்ளது.
அதற்காக "அந்த பெருமாளை தூக்கி எறிந்து விட்டு புதிய உற்சவரை யாரும் ஏற்பாடு செய்யவில்லை" என்பதை கவனிக்க வேண்டும்.

"எத்தனையோ கோவில் பணிகள், கும்பாபிஷேகம் செய்து  திருமேனிகள் இப்படி உருக்குலைந்து இருக்கிறதே, புதிதாக உற்சவர் செய்து மாற்றி விடலாமா? என்று முடிவு செய்ய எத்தனை நேரம் ஆகி இருக்கும்.??"
ஆனால், எந்த ஒரு ஆச்சாரியரும், மகான்களும் இது போன்ற மாற்றத்தை செய்யவில்லையே..  
நாம் கவனிக்க வேண்டாமா!!

ஆயிரம் சிலைகள் ரங்கநாதரை போன்றே செய்து விடலாம்.. 
ஆனால்,
ராமானுஜர் பார்த்த, ஆழ்வார்கள் பார்த்த, ப்ரம்ம தேவனுக்கு தரிசனம் கொடுத்த பெருமாளை தரிசிப்பது போல ஆகுமா?

"பல ஆயிரம் வருடங்கள் ஆனதால், பெருமாள் திரு உருவம் உருக்குலைந்து விட்டது என்பதற்காக, ஆழ்வார்கள் கண்ட மூர்த்தியை மாற்ற  நினைக்க முடியுமா ஒரு உண்மையான பக்தனால்?..
நினைத்து பார்க்க வேண்டும்..

80 வருடங்கள் உற்சவ மூர்த்தியான ரங்கநாதர் இல்லாத போது, வேறொரு உற்சவ ரங்கநாதரை ஆவாஹனம் செய்து வழிபட்டனர் வைஷ்ணவர்கள்.
அதே சமயத்தில் தான்,
மதுரையில் உள்ள மீனாட்சி கோவிலில், சிவலிங்கமாக மூலவராக இருக்கும் சுந்தரேஸ்வரரையும் இடிக்க வந்தான் 'அலாவுதீன் கில்ஜி'யின் படைத்தளபதி 'மாலிக் காபூர்'..
அந்த இடத்தில் பெரிய சுவர் எழுப்பி, வேறொரு லிங்கத்தை வைத்து விட்டனர் அங்கிருந்த சிவாச்சாரியார்கள்.
'மாலிக் காபூர்' செருப்பு கால்களுடன் உள்ளே புகுந்து, மூலவராக இருந்த சிவலிங்கத்தை ஈட்டியால் குத்தி கீழே தள்ளி, மதுரையை கொள்ளை அடித்து சென்றான்..
இன்றும் அவன் இடித்து சென்ற சிவலிங்கம் சாட்சியாக உள்ளது.

80 வருடங்கள் மூலவர் இல்லாமல், முஸ்லீம் கலவர சமயத்தில், மீனாட்சி கோவில் மூடப்பட்டு இருந்தது..

"அர்ச்சா அவதாரம் செய்த தெய்வங்கள், யாரோ ஒரு பக்தனால், ரிஷியால், தேவனால் வழிபடப்பட்டு தரிசனம் தந்த திருமேனிகள்..
அந்த பக்தர்கள் பார்த்த திருமேனியை நாமும் பார்க்க முடிந்ததே" 
என்று நம் பாக்கியத்தை நினைக்க வேண்டும்..

ஏதோ ஒரு காலத்தில், ஏதோ ஒரு பக்தனுக்கு காட்சி கொடுத்த தெய்வங்களின் திருமேனியை, அலட்சியம் செய்ய கூடாது.. 
குளத்தில் வைத்தோ, பூஜை செய்யாமலோ இருக்கவே கூடாது..

தெரிந்தே பாபங்கள் செய்ய கூடாது..
உதாரணத்திற்கு,
ப்ரம்ம தேவனால் காஞ்சியில் அஸ்வமேத யாகம் செய்யப்பட்டு, அவருக்காக காஞ்சியில் அர்ச்சா திருமேனியுடன் வெளிப்பட்டார் அத்தி வரதர்..

ஆழ்வார் காலத்திலோ, 
ராமானுஜர் காலத்திலோ, 
தேசிகர் காலத்திலோ, நடைபெறாத ஒரு வழக்கத்தை, 
ஆகம விதி என்று சொல்லி கடந்த 300 வருடங்களாக குளத்தில் வைத்து விட்டனர் ஆதி அத்தி வரதரை.

ஆகம விதி என்று வீம்பு செய்து, 40 வருடம் ப்ரம்ம தேவன், ராமானுஜர், ஆழ்வார்கள், தேசிகர் வழிபட்ட மூல மூர்த்தியை, இன்று குளத்தில் வைத்து இருக்கின்றனர்.
40 வருடங்கள் பூஜையும் இல்லாமல் செய்து விட்டனர்.




ஸ்ரீரங்கம், மீனாட்சி கோவில் பூஜைகள் 80 வருடங்கள் தடைபட்ட காலத்தில், காஞ்சிபுரம் வழியாக வந்த இஸ்லாமியர்களுக்கு பயந்து, மூலவரை காப்பாற்ற குளத்தில் வைத்து இருந்த பழக்கத்தை, 1947வரை வேறு வழி இல்லாமல் கடைபிடித்து வந்த வைஷ்ணவர்கள் (வைகானச பூஜை செய்யும் வடகலை) இந்த மூட பழக்கத்தை ஆகம விதி என்று நினைத்து,
ப்ரம்ம தேவன், ராமானுஜர், ஆழ்வார்கள், தேசிகர் பார்த்த அத்திவரதர் திருமேனியை
"40 வருடங்கள், ஆழ்வார்கள்,  ராமானுஜர், தேசிகர் கண்ட அத்தி வரதரை குளத்தில் வைப்போம்" என்று பிடிவாதம் செய்து வைத்து விட்டனர்..

ராமானுஜர் காலத்தில் இல்லாத வழக்கத்தை,
தேசிகர் அறியாத வழக்கத்தை,
ஆழ்வார்கள் ஏற்காத ஒரு வழக்கத்தை,
ப்ரம்ம தேவன் வெறுக்கும் ஒரு வழக்கத்தை,
"நம் அத்தி வரதரை இப்படி 40 வருடங்கள் குளத்தில் வைக்கிறோமே"
என்ற நினைவு இல்லாமல்,
ஆகம விதி என்ற பெயரில் இல்லாத வழக்கத்தை, இன்று செய்து கடைபிடிக்கின்றனர்..
இதற்கு அறியாமையே காரணம்.

"செல்லப்பிள்ளை" சுல்தான் கண்களுக்கு சிலையாக தான் தெரிந்தார்..
அவனுக்கு சிலையாகவே இருந்து விட்டார் பெருமாள்..
'பெருமாளை காணவில்லையே' என்று ராமானுஜர் போன்ற ஒரு பக்தர் கதற, சிலையாக இருந்த பெருமாள், பக்தன் வேதனைப்பட கூடாது என்று மீண்டும் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார்..

"40 வருடம் குளத்தில் வைக்கிறோமே, பெருமாளுக்கு மூச்சு முட்டுமே!!
ராமானுஜர் காலத்தில் இது போன்ற வழக்கம் இல்லையே!!
தேசிகர் காலத்தில் இந்த பழக்கம் இல்லையே!!"
என்ற உணர்ச்சியே இல்லாமல், செய்யப்படும் இந்த குருட்டு வழக்கத்தை மாற்ற, பெருமாளுக்காக கதறும் நெஞ்சங்களே இன்று தேவை..
"ப்ரம்ம தேவன் கண்ட பெருமாள்" இன்று குளத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்.. 
அத்தி வரதரை இப்படி இருப்பதை ப்ரம்ம தேவனும் ஏற்க மாட்டார். ராமானுஜரும் ஏற்க மாட்டார். 
தேசிகரும் ஏற்க மாட்டார்.
எந்த பக்தனும் ஏற்க மாட்டான்.

"தன்னை சிலை" என்று குளத்தில் வைக்க, சிலையாகவே இருந்து விட்டார்..நம் அத்தி வரதர்.
"அவர் இனியும் குளத்தில் வைக்கப்பட கூடாது" என்று கதற ராமானுஜரை போன்ற பக்தர்களால் மட்டுமே இயலும்..

கடலில் இருந்து கிடைத்த உடுப்பி கிருஷ்ணரை, எடுத்து பூஜை செய்யும் பழக்கம் உள்ள நம் தர்மத்தில்,
யாகத்தில் வந்த பெருமாளை, தேசிகர் காலம் வரை நடைபெறாத ஒரு வழக்கத்தை, கையில் எடுத்து கொண்டு, 40 வருடங்கள் குளத்தில் வைக்கும் வினோதம் நடைபெறுகிறதே !! 
தெய்வம் தான் பதில் சொல்ல வேண்டும்.

நாம் செய்யும் உண்மையான பிரார்த்தனைக்கு பகவான் செவி சாய்க்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சி சமயத்தில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு வீதி புறப்பாடு நடைபெற்ற போது, கடும் வெயிலில் பெருமாள் வந்து கொண்டிருந்தார்..
பெருமாளுக்கு இரண்டு பக்கமும், சாமரம் வீசிக்கொண்டு வந்தனர் பக்தர்கள்.
அந்த சமயத்தில் கலெக்டர் அந்த வீதி வழியாக வர நேர்ந்த போது, தனக்கு கீழ் வேலை பார்க்கும் ஒரு வைஷ்ணவரை பார்த்து,
"ஏன் பொம்மை சிலைக்கு விசிறிக்கொண்டு இருக்கிறார்கள்.. வெயிலில் விசிறாமல் போனால், சிலைக்கு வியர்க்குமோ?"
என்று கிண்டலாக சிரித்தார்..
அவருக்கு கீழ் வேலை பார்த்த அவர் பரம பக்தர்..
கலெக்டர் இப்படி பேசியதும் மனம் வருந்தினார்.
அர்ச்சா திருமேனியை "விக்ரகம்" என்று பார்க்காதவர் அவர்.
"நமக்காக அர்ச்சா திருமேனி கொண்டு பெருமாள் அவதரித்து இருக்கிறார்" என்ற திடநம்பிக்கை கொண்டவர்.
இப்படி கேலியாக பேசியும் கோபப்படாமல், தைரியமாக கலக்டரை பார்த்து, "அவருக்கு வியர்க்கும்" என்று சொல்லி விட்டார்.

"சிலை தானே" என்று பார்த்த அவனுக்கு "சிலையாகவே இருந்து விட்டு போவோம்" என்று இருந்த பெருமாள், இப்படி வைஷ்ணவர் சொல்ல,
"சரி.. பரிக்ஷை செய்து பார்த்து விடுவோம்.."
என்று சாமரம் வீசுவதை நிறுத்த சொல்லி விட்டார் கலெக்டர்.




அருகில் சென்று பெருமாளை பார்க்க, "சிலையில் வியர்வை துளிகள் வழிந்தோடியது".
ஆச்சரியப்பட்டு அந்த இடத்தை விட்டு அமைதியாக சென்று விட்டார் பிரிட்டிஷ் கலெக்டர்.

பக்தன் ஆசைப்பட்டால், பெருமாள் செவி சாய்க்கிறார்..
"சிலை என்று பார்ப்பவருக்கு" சிலையாகவே இருக்கிறார்..

1200 வருடங்கள் பாரத பூமியை பிடித்து, கோவிலை இடித்து, விக்ரஹங்களை உடைத்து, ஹிந்து தர்மத்தை ஒழித்து விடுவேன் என்று பல முயற்சிகள் செய்தும், பக்தர்களுக்காக தன்னை மீண்டும் மீண்டும் ஆவிர்பவித்து கொள்கிறார்.

அன்று கோவிலை இடித்த கில்ஜி, துக்ளக், லோதி, முகலாயன், கிறிஸ்தவன் இன்று இல்லை.
ஆனால்,
தற்காலிகமாக தன்னை மறைத்து கொண்ட பெருமாள், இன்று உலகம் முழுவதும் மீண்டும் வியாபித்து இருக்கிறார்.

நாம் கோவிலுக்கு சென்று காணும் அர்ச்ச திருமேனிகள், எந்த ரிஷிக்காக வந்தாரோ நமக்கு தெரியாது...
அந்த இடங்களில் அவர் வழிபட்ட திருவாராதனையை ஏற்ற தெய்வங்கள் இன்று வரை பிரசன்னமாக இருந்து, நம் குறைகளை தன் தரிசனத்தாலேயே போக்கி, சரவ் மங்களம் கிடைக்க செய்கின்றனர்..

இருக்கும் திருவாராதனை முறைகளை மாற்றி, புதிதாக திருவாராதனை முறைகளை மாற்றி அதையே ஆகம விதி என்று மாற்றி செய்வது, பக்தி இல்லை.. பிடிவாதமே...

மனிதனின் மாமிச உடலுக்குள் ஒரு ஜீவனே பிரவேசிக்கும் போது, 
எங்கும் நிறைந்த பரவாசுதேவன், எல்லாம் வல்ல பரவாசுதேவன், 
நம் பக்திக்காக, நாம் ஆசைப்படும் ரூபத்தில், 
நாம் ஆசைப்படும் கல்லில் கூட பிரவேசித்து அணுகிரஹம் செய்து விடுவார்..

நமக்கு 'பக்தியே' முக்கியம்..

நம் துன்பங்கள் அனைத்தும் பனி போல விலக, பரவாசுதேவன் நாராயணனையே அடிபணிவோம்..

எந்த துன்பத்தையும் போக்க வல்லவர் அவர்.

"கோவிந்தா" என்று பக்தியுடன் கூப்பிட்டாலேயே, கருணையை நம் மீது பொழிந்து விடுவார்..

எம்பெருமானை சரண் அடைந்தவனுக்கு கவலை ஒருபோதும் இல்லை.

கர்ம வினையால் நமக்கு துக்கம் வருவது போல வந்தாலும், அது நம்மை தாக்குவதற்கு முன்னரே துக்கங்கள் பனி போல நம்மை விட்டு விலகி விடும்..

பரவாசுதேவனின் பக்தி ஒன்றே நம்மை காப்பாற்றும்..
நம் பாரத நாட்டை காப்பாற்றியதும் பரவாசுதேவன் நாராயணனே.
உத்தமர் காந்தி தன் உயிராக வைத்து இருந்ததும் "ராம" நாமமே.
"நான் கருங்கல் கொண்டு செய்த தூணை பார்த்து, நாராயணன் இருக்கிறார் என்று எப்படியடா சொல்கிறாய்?" என்று கேட்ட ஹிரண்யகசிபுவுக்கு தூண் தூணாக தான் தெரிந்தது...

"தூணிலும் நாராயணன் பிரவேசித்து இருக்கிறார்" என்று பார்த்த பிரகலாதனின் பக்திக்கு, பரவாசுதேவன் தன்னையே தூணில் ஆவிர்பவித்து கொண்டு விட்டார்..

தூண் தூண் தான்..
சிலை சிலை தான்..
"எல்லாம் வல்ல பரவாசுதேவன், இந்த சிலையில் வர முடியும் என்று பக்தன் பார்த்தால், அந்த சிலையிலும் வந்து விடுகிறார்" நாராயணன்.
ஹிரண்யகசிபு கட்டிய தூணில், பிரகலாதன் என்ற பக்தன் "தன்னை நினைக்கிறான்" என்றதும், அதே கல் தூணில், பெருமாள் நரசிம்மராக வெளிப்பட்டார். 

"சிலை சிலை" என்று பார்க்கும் வரை, நமக்கு இறை அருள் கிடைக்கவே கிடைக்காது.

"சிலையில் இறைவன் பிரவேசிக்க முடியாது" என்று சொல்பவன், நினைப்பவன், "இறைவன் மிக பெரியவன்.. எல்லாம் வல்லவன்" என்ற தத்துவத்தையே மறுக்கிறான்.

த்ரேதா யுகத்தில், துவாபர யூகத்தில் பரவாசுதேவன் "ராமராகவும், கிருஷ்ணராகவும் அவதாரம் செய்த போது" நாம் கண்டோமோ தெரியாது..
பாற்கடலில் பரவாசுதேவன், விஷ்ணுவாக இருந்தாலும், நம்மால் சென்று பார்க்க முடியாது.. 
அங்கு சென்று பார்க்க தேவர்களாலும், ரிஷிகளாலும், ப்ரம்ம தேவனாலும், ருத்ரனாலுமே சாத்தியம்..

சரி "வைகுண்டம் சென்று பரவாசுதேவனை பார்த்து விடலாம்" என்றால், மோக்ஷம் அடையாத வரை அந்த தரிசனம் நமக்கு கிடைக்க போவதில்லை..




இப்படி மற்ற அவதாரங்கள், நமக்கு எட்டா கனியாக இருக்க, பரவாசுதேவன் நமக்காக அர்ச்சா திருமேனி கொண்டு ஆயிரக்கணக்கான ரூபங்களுடன் கோவிலில், வீடுகளில் அவதரிக்கும் போது,
"அவரை சிலை என்று பார்க்காமல், பரமாத்மா என்று பார்க்க ஆசை படுவோம்.."
நம் ஆசையே, பக்திக்கு விதையாகட்டும்..
நம் பக்தி (அன்பு) மூலம் தெய்வ அணுகிரஹம் நமக்கு கிடைக்கட்டும்.

வாழ்க நம் கோவில்கள்.
வாழ்க நம் வீட்டில் உள்ள அர்ச்ச அவதார திருமேனிகள்..
வாழ்க நம் தேசத்தில் வாழும் மகாத்மாக்கள். 


Wednesday, 13 November 2019

4000 திவ்ய பிரபந்தத்தில் வேதம் எப்படி அடங்கியது? எந்த காரணத்தால் இப்படி சொன்னார்கள்? தமிழ் மொழியில் சொல்லப்பட்ட 4000த்தை "தமிழ் மறை" என்று ஏன் சொன்னார்கள்?

"பரமாத்மாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற ஆசையுள்ள நமக்கு, வள்ளலாக வந்தார்கள் "ஆழ்வார்கள்"..

கடல் போன்றது "வேதம்'..




வேதம், "பகவானை பற்றி மட்டும் சொல்லவில்லை, உபதேவதைகள் பற்றியும், உலக ஸ்ருஷ்டி ஆரம்பித்து, உலகத்தில் அர்த்தங்களை பெறுவதற்கான அனைத்து கலைகளையும் பற்றி சொல்கிறது..."


"4 வேதங்கள் மட்டும் வேதத்தில் அடக்கம்" என்று நினைத்து விட கூடாது...

"அர்த்தங்களை (wealth) பெறுவதற்கு பல விஷயங்களையும் சொல்கிறது" வேதம்...

  • ஆயுர்வேதம் (medicine)
  • ஸ்தாபத்யம் (engineering)
  • காந்தர்வ வேதம் (music)
  • தனுர் வேதம்(army)
  • சிக்ஷை (expert in phonetics, phonology, pronunciation)
  • கல்பம் (expert in knowing  procedures for Vedic rituals and rituals associated with major life events such as birth, wedding and death in family, as well as discussing the personal conduct and proper duties of an individual in different stages of his life)
  • வியாகரணம் (expert in grammers and linguistic analysis)
  • நிருக்தம் (expert interpretation of words and to help establish the proper meaning of the words)
  • சந்தஸ் (expert in poetic metres)
  • ஜோதிஸம் (expert in knowing Auspicious time for rituals and expert in astrology and astronomy.)
  • ஸ்ம்ருதி,
  • இதிகாசம் (knowledge about history),
  • புராணம் (knowledge about very old history) இவைகளும்,
  • காவியம்,
  • நாடகம்,
  • அலங்காரம்
  • யோகம் (expert in meditation, contemplation and liberation)
  • ஸாங்க்யம் (Expert in consciousness and matter)
  • நியாயம் (Expert in exploring sources of knowledge)
  • சௌகதம்
  • ஆர்ஹதம்
  • மீமாம்ஸா (expert in correct conduct, both ethical and liturgical)
  • பாசுபதம்
  • பாஞ்சராத்ரம் (expert in Agama rules and guiding five observances every day to lord narayana)

என்று பல வேதத்தில் அடக்கம்.

"கடல் போன்ற வேதத்தை ஒருவன் முழுமையாக படித்து, உபதேவதைகள், அர்த்தங்களை (wealth) பற்றி சொல்லும் வேத பாகங்களை தள்ளி விட்டு, குறிப்பாக பரமாத்மாவை பற்றி வேதம் என்ன சொல்கிறது?" என்று தெரிந்து கொள்வதற்கு கலியுகத்தில் நமக்கு ஆயுசு போதாது....

"பரமாத்மாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற ஆசையுள்ள நமக்கு, வள்ளலாக வந்தார்கள் "ஆழ்வார்கள்"..
ஆழ்வார்கள், "வேதத்தின் சாரத்தை, இதிகாச, புராணங்களின் சாரத்தை (essence) நமக்கு 4000 திவ்ய பிரபந்தமாக கொடுத்து விட்டார்கள்."

பகவானை பற்றி அறிய, 'வேதம் முழுவதையும் படிக்க முடியாத நமக்கு, பகவானை பற்றி வேதம் சொல்லும் விஷயத்தை' அப்படியே தமிழில், கொடுத்து விட்டார்கள் ஆழ்வார்கள்.

வேதம் என்ற "பழத்தை" பிழிந்து,
அர்த்தவாதங்கள் சொல்லும் வேத மந்திரங்களை "சக்கை" என்று தள்ளி விட்டு,
பரமாத்மாவை பற்றி மட்டுமே சொல்லும் வேத மந்திரங்களை "சாறு" போல எடுத்து,
4000 திவ்ய ப்ரபந்தமாக "தமிழில்"  நமக்கு சிரமப்படாமல் அருந்தி சுவைப்பதற்கு கொடுத்து விட்டார்கள் ஆழ்வார்கள்.
"பகவானை பற்றி அறிந்து கொள்ள, 
வேதம் முழுக்க படிக்க அவசியமில்லை, 4000 திவ்ய பிரபந்தங்களே போதும்"
என்ற அளவுக்கு தமிழ் மக்களுக்கு பெரும் நிதியாக கொடுத்து விட்டார்களே ஆழ்வார்கள்..

"4000 திவ்ய ப்ரபந்தம் புரிந்து கொண்டால், பகவானை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த ரகசியம் தெரிந்த தமிழன் திவ்ய ப்ரபந்ததை விடுவானா?.. "




பிரபந்தங்கள் தமிழனின் பொக்கிஷமாயிற்றே... தமிழ் மொழியாயிற்றே..

வேதம் "கடல் போன்றது" என்று எடுத்துக்காட்டாக சொல்வதற்கு காரணம் உண்டு..

கடல் தண்ணீரில் "உப்பு" கலந்து இருக்கும்..
பல ஜீவராசிகள் அதை சார்ந்து இருக்கிறது...
மனிதர்களாகிய நமக்கோ, கடல் முழுக்க நீர் இருந்தாலும், அதில் ஒரு சொட்டு நீர் கூட தாகத்தை தணிக்காது...
மனிதனும் நீரை நம்பி தான் வாழ்கிறான்.




மனிதனுக்கு நீர் கொடுப்பதற்காக அந்த கடலின் மேல், மேகங்கள் சென்று, அது தன் சாமர்த்தியத்தால், கடலில் உள்ள உப்பை மட்டும் விலக்கி விட்டு, நல்ல தண்ணீரை மட்டும் உறிஞ்சிக்கொள்கிறது...

கர்ப்பம் தரித்த பெண் போல, கார்மேகமாக நகர்ந்து நகர்ந்து, நம் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் வந்து, அம்ருதம் போன்ற மழையை பொழிந்து நம் தாகத்தை தீர்த்து விடுகிறது...
கடல் நீரில் (வேதம்) உள்ள
உப்பை (அர்த்தவாதங்களை) விலக்கி,
சுவையான நீரை மட்டும் (பகவானை பற்றி மட்டுமே)  எடுக்க தெரிந்த மேகங்கள் போல நமக்கு 'ஆழ்வார்கள்' கிடைத்தார்கள்.

வேதத்தில், சாரம் இல்லாத  சாஸ்திரங்களை விலக்கி, சாரத்தை மட்டும் எடுக்கும் சக்தி நமக்கு கிடையாது..

எம்பெருமான் அருள் பெற்ற, அருள் பெற்றதால் ஞானத்தை அடைந்த
ஆழ்வார்கள்,
12 கருமேகங்களாக நம் தமிழகத்தில் உதித்து,
வேத நாயகனான நாராயணனின் பரத்துவத்தை, குணங்களை சொல்லும் வேத பாகங்களை, "மேகம்" சுத்தமான நீரை மட்டும் உறிஞ்சுவது போல உறிஞ்சி,
நம்மை போன்ற சாமானிய ஜனங்களும் "கோவிந்தனின் நாமத்தை, அவர் மகிமையை, அவர் குணங்களை, அவர் கருணையை அறிந்து கொள்ளும்" படியாக,
"4000 திவ்ய ப்ரபந்தங்கள்" என்ற அம்ருத மழையாக பொழிந்து விட்டனர்..

அதனால்,

  1. பெரியாழ்வார் அருளிய "திருப்பல்லாண்டு, திருமொழி"
  2. ஆண்டாள் அருளிய "திருப்பாவை, நாச்சியார் திருமொழி"
  3. குலசேகராழ்வார் அருளிய "பெருமாள் திருமொழி"
  4. திருமழிசையாழ்வார் அருளிய "திருச்சந்தவிருத்தம்", "நான்முகன் திருவந்தாதி"
  5. தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய "திருமாலை, திருப்பள்ளி எழுச்சி"
  6. திருப்பாணாழ்வார் அருளிய "அமலனாதிபிரான்"
  7. மதுரகவியாழ்வார் அருளிய "கண்ணிநுண்சிறுத்தாம்பு"
  8. திருமங்கையாழ்வார் அருளிய "பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்"
  9. பொய்கை ஆழ்வார் அருளிய "முதல் திருவந்தாதி"
  10. பூதத்தாழ்வார் அருளிய "இரண்டாம் திருவந்தாதி"
  11. பேயாழ்வார் அருளிய "மூன்றாம் திருவந்தாதி"
  12. நம்மாழ்வார் அருளிய "திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி"
    திருவரங்கத்தமுதனார் அருளிய "இராமானுச நூற்றந்தாதி"

ஆகிய 4000த்தில் சொல்லப்பட்டு இருக்கும் அனைத்தும், வேதத்தின் சாரமான "பரமாத்மாவின் குணங்களையே, தத்துவத்தையே பேசுகிறது"...

சர்வ சாஸ்திரங்களும் 4000த்தில் அடங்கி விடுகிறது.
நம்மாழ்வார் "ரிக், யஜுர், சாம, அதர்வண" ஆகிய 4 வேதங்களின் சாரத்தை பிழிந்து,
"திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி" என்ற "தமிழ் மறை"களாக நமக்கு கொடுத்தார்.

திருமங்கையாழ்வார், "சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிஸம்" ஆகிய 6 சாஸ்திரங்களின் சாரமாக,
"பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்" என்ற "தமிழ் சாஸ்திரங்களாக" நமக்கு கொடுத்தார்.




ஆறு சாஸ்திரத்தின் சாரமும், பெரிய திருமொழியில் இருப்பதை நாம் காணலாம். 
திவ்ய தேசம் பற்றி சொல்லும் போது, அந்த திவ்ய தேசத்தில் உள்ள வீதிகளை வர்ணிக்கும் போதே, தான் கற்ற சாஸ்திர ஞானத்தை பிரபந்தத்தில் காட்டி விடுகிறார்.
நாம் உலக விஷயமான சாஸ்திரங்களை கற்றாலும், அதன் மூலமாகவும் நமக்கு மேலும் பகவத் பக்தி ஏற்பட செயது கொள்ள வேண்டும் என்று காட்டுகிறார் திருமங்கையாழ்வார்.

தான் கற்ற 6 சாஸ்திரங்களையும் திருமங்கையாழ்வார், உலக விஷயங்களுக்கு பயன்படுத்தாமல், எம்பெருமானுக்கே பயன்படுத்தினார்.

உலக சாஸ்திரங்களை கற்றாலும், அதன் மூலம் பகவத் பக்தியை உயர்த்தி கொள்ளவே நாம் முயற்சிக்க வேண்டும் என்று காட்டுகிறார்.. திருமங்கையாழ்வார்.

அது போல, 2 இதிகாசங்கள், புராணங்களும் 4000த்தில் அடங்கி விடுகிறது..

ஸ்ரீ ராமாயணத்தை ராமபிரானை பற்றி அறிய, குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழியே போதுமானது...
வால்மீகி ராமாயணத்தின் சாரமாக, நமக்கு ராமபிரானின் குணத்தை நமக்கு காட்டுகிறார்..

"பாகவதம்" போன்ற சாத்வீக புராணங்களின் சாரமாக, பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் நாச்சியார் போன்றவர்கள் அருளிய பிரபந்தங்களே நமக்கு பகவத் பக்தி அனுபவத்தை கொடுத்து விடுகிறது..

"விஷ்ணு தர்மத்தை" அறிய, தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய திருமாலை, திருப்பள்ளி எழுச்சி போன்றவைகளே அந்த சாரத்தை நமக்கு தந்து விடுகிறது..

இப்படி "மோக்ஷத்துக்கு வழி சொல்லும் புராணங்கள், இதிகாசங்கள், சாஸ்திரங்கள், 4 வேதம் உட்பட அனைத்தும்" 4000 திவ்ய பிரபந்தத்தில் அடங்கி விடுகிறது..

தமிழர்களுக்கு "பொக்கிஷம்" அல்லவா திவ்ய பிரபந்தங்கள்..
அர்த்தங்கள் பொதிந்த, பக்தியை தரக்கூடிய, 'தமிழ் மறை' அல்லவா திவ்ய பிரபந்தங்கள்..

4 வேதங்களையும், புராணங்களையும், சாஸ்திரங்களையும் முழுவதாக படித்து இருந்தவர்களால் தானே, இவையெல்லாம் 4000த்தில் அடங்கி இருப்பதாக சொல்லி இருக்க முடியும்!!..

4000த்தில் இவையாவும் அடங்கி உள்ளது!! என்று சொன்னவர்கள் யார்? என்றும் நாம் கவனிக்க வேண்டாமா?

சர்வ சாஸ்திரங்களும் 4000த்தில் அடங்கி விடுகிறது என்று  யார் சொன்னார்கள்? 
என்று கவனிக்கும் போது தான், திவ்ய பிரபந்தத்தின் பெருமை நமக்கு புரியும்..

சம்ஸ்க்ரிதம் தெரியாதவன், இதையாவது தெரிந்துகொள்ளட்டும் என்று கொடுக்கப்பட்ட சாதாரண புத்தகம் இல்லையே, 4000 பிரபந்தங்கள்...
வெறுமனே தமிழ் கற்று கொள்வதற்காக, ஏற்பட்ட நூல் இல்லையே 4000 பிரபந்தங்கள்...
சர்வ சாஸ்திரமும், வேதமும், புராணங்கள், இதிகாசங்கள் உட்பட அனைத்தும் கரைகண்ட,
பெரியவாச்சான் பிள்ளை, தேசிகர், ராமானுஜர் போன்ற ஆச்சாரியர்கள் வாக்கியத்தால் நமக்கு 4000த்தின் பெருமை தெரிகிறது..

சர்வ சாஸ்திரமும் கரை கண்ட பெரியவாச்சான் பிள்ளை, போன்ற மகான்கள், கடைசியாக '4000த்தை கையில் எடுக்கும் போது, அதில் உள்ள பிரபந்தங்களோடு வேத சாஸ்திரங்களை, புராண, இதிஹாசங்களை காட்டி விளக்கம் கொடுக்கும் போது, நமக்கு 4000த்தின் பெருமை தெரிகிறது..'

தேசிகர் போன்று சாஸ்திரத்தில் கரை கண்டவர் கிடையாது...
அவர் சம காலத்தில் சிம்மமாக இருந்த மகா பண்டிதர்கள் எல்லாம், இவர் வித்வத்தை பார்த்து பெருமதிப்பு கொண்டிருந்தனர்..

சர்வ சாஸ்திரமும் அறிந்த தேசிகர், கடைசியில் 4000த்தை கையில் எடுத்து வாசிக்க வாசிக்க, "தெளியாத மறை நிலமெல்லாம் தெளிகிறது" என்று சொல்கிறார்..

யார் இப்படி சொல்கிறார்? என்பதை கவனிக்க வேண்டும்..
"தான் கற்ற வேதங்களில், புரியாத சில வாக்கியங்கள், 4000 திவ்ய பிரபந்தத்தை படிப்பதால், புரிந்து விடுகிறது என்று யார் சொல்கிறார்? என்று பார்க்க வேண்டும்..
அப்பொழுது தான், நமக்கு 4000த்தின் மகத்துவம் புரியும்.

"தான் வேத சாஸ்திரம் படித்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள இயலாத இடங்களை கூட 4000 திவ்ய பிரபந்தத்தில் பார்க்கிறேன்" என்று சொல்கிறார் தேசிகர்..

அற்புதமான திவ்ய பிரபந்தத்தை, தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்..

இதன் உண்மையான ஆழ்ந்த அர்த்தங்களை, ஞானத்தில் உயர்ந்த, பரமாத்மாவிடம் திட பக்தி உள்ள, மகான்களிடம் கேட்டு மனதில் உள்வாங்கி, அனுபவிக்க வேண்டும்..  




திவ்ய பிரபந்தங்களே நமக்கு பரமாத்மாவை பற்றிய ஞானத்தை, பக்தியை தரும்.
தமிழனாக பிறந்ததற்கு பெருமை படுவோம்.

வாழ்க 4000 திவ்ய பிரபந்தம்.
வாழ்க ஆழ்வார்கள்.   வாழ்க நாயன்மார்கள். 
வாழ்க நம் பாரத மண்ணில் உதிக்கும் மகான்கள்.