பரகால நாயகி, வயலாலி மணவாளனோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள்.
நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா
நாணினார் போல் இறையே
நயங்கள் பின்னும் செய்வளவில்
என் மனமும் கண்ணும் ஓடி
எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய
இப்பால் கைவளையும் மேகலையும் காணேன்
கண்டேன் கனம் மகர குழை இரண்டும்
நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில்? என்றேற்கு
இது வன்றோ எழில் ஆலி, என்றார் தாமே
- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)
தன்னுடைய 'நாயகன்' தான் இவர்! என்று தெரிந்தும், வயலாலி மணவாளன் கோதண்ட ராமராக வந்திருப்பதால், அவரை கண்டு அஞ்சி, பரகாலநாயகி அவரை பார்க்காமல் நின்றாள்.
"பரகால நாயகி தன்னை பார்ப்பாள்" என்று தான் வயலாலி மணவாளன் வீதி உலாவே வந்திருந்தார்.
தன்னை பார்க்காமல் முகத்தை திரும்பி கொண்டு இவள் இருப்பதை பார்த்து விட்டு, 'இந்த கோதண்டம் தான் இவளை தடுக்கிறது போலும். இவள் ஒரு கோபிகையாயிற்றே! கண்ணனாக வந்தால் தானே இவள் நம்மை பார்ப்பாள்" என்று தீர்மானித்து 'இந்த வேஷம் வேண்டாம்!' என்று கோதண்டத்தை வைத்து விட்டு, கண்ணனாக அலங்காரம் செய்து கொண்டார்.
ராகத்தை, தமிழில் "பண்" என்று அழைக்கிறோம்.
காலையில் மனதில் இன்பம் உண்டாக, "நைவளம்" (கம்பீர நாட்டை) என்ற பண் இசைப்பார்கள்.
நண்பகலில் மனதில் இன்பம் உண்டாக "பாலை" என்ற பண் இசைப்பார்கள்.
மாலையில் மனதில் இன்பம் உண்டாக "ஆம்பல்" என்ற பண் இசைப்பார்கள்.
இரவில் அச்சம் ஏற்படாமல் இருக்க, "குறிஞ்சி" (ஹரிகாம்போதி) என்ற பண் இசைப்பார்கள்.
அது போல,
படுமலைப்பாலை (கரகரப்ரியா), காந்தார பஞ்சமம் (கேதார கௌளம்), இந்தளம் (ஆனந்தபைரவி), அரும்பாலை (கல்யாணி), இளிப்பண் (சுத்த தன்யாசி), கொல்லி (சுத்த சாவேரி) போன்று பல ராகங்கள் (பண்) உள்ளன.
ஒவ்வொரு ராகத்துக்கும் அதற்குரிய தேவதைகள் இருக்கிறார்கள்.
கண்ணன் 'வேணுகானம் செய்யலாம்' என்று குழல் எடுத்து விட்டால், உடனேயே அனைத்து தேவதைகளும் 'இன்று நம்மை கூப்பிடுவாரா? நம்மை கூப்பிடுவாரா?' என்று காத்து கொண்டிருப்பார்கள்.
கண்ணன் பொழுது போவதற்காக பாட மாட்டானாம்.
ஒரு ராகத்தை எடுத்து பாடினால், ஒரு அர்த்ததோடு தான் பாடுவானாம்.
'கல்யாணி' என்று ஒரு கோபிகை. அவளை பார்க்க அன்று கண்ணன் ஆசைப்பட்டால், உடனே "கல்யாணி" என்ற ராகத்தை பாடுவான்.
'வசந்தா' என்று ஒரு கோபிகை. அவளை பார்க்க அன்று கண்ணன் ஆசைப்பட்டால், உடனே "வசந்தா" என்ற ராகத்தை பாடுவான்.
கண்ணன் வேணுகானம் செய்யும் போதே, 'இன்று தன்னை தான் அழைக்கிறான்' என்று அந்தந்த கோபிகைக்கு தெரியுமாம்.
இப்படி வேணுகானம் செய்தே அந்தந்த கோபிகையை அழைக்கும் கண்ணன், "இந்த பரகால நாயகி தன்னை பார்க்காமல் இருக்கிறாளே! இவள் பார்க்கத்தானே நான் வந்துள்ளேன்"
என்று நினைத்தார்.
இந்த கோபிகை "நைவளம்" என்ற ராகத்தை மிகவும் விரும்பி கேட்பாள்.
அவளை கடைகண்ணால் பார்த்து கொண்டே, அவளுக்கு மிகவும் பிடித்தமான 'நைவளம்" என்ற ராகத்தை தானே கண்ணனாக இருந்து வேணுகானம் செய்தார்.
வேணுகானம் செய்வதை கேட்ட பரகாலநாயகி (கோபிகை) வந்திருப்பது 'கண்ணன்' என்று அறிந்தும் "பார்க்க கூடாது" என்று கொஞ்சம் ராங்கி செய்தாள்.
'வந்திருப்பது கண்ணன் தானே! பிறகு ஏன் இவளுக்கு இத்தனை ராங்கி?' என்று கேட்டால்,
"முதலிலேயே கண்ணனாக வந்திருக்கலாமே இவர். கோதண்ட ராமனாக வந்து அச்சத்தை கொடுத்தாரே! முதலில் ராங்கி செய்தது இவர் தானே" என்று பரகாலநாயகி திருப்பி கேட்டாள்.
வேணுகானம் இவளை மயக்கினாலும், தலையை கூட ஆட்டக்கூடாது! என்று அழுத்தமாக பெருமாளை பார்க்காமல் நின்று கொண்டிருந்தாள் பரகாலநாயகி
"இவளுக்கு பிடித்தமான ராகத்தை இசைக்கிறேன். கொஞ்சம் சிரிக்கலாம்! யார் குழல் ஊதினார்? என்று தலை நிமிர்ந்தாவது பார்க்கலாம்! குறைந்தபட்சம், ராகத்தை கேட்டு கொஞ்சம் தலையையாவது அசைத்து ரசிக்கலாம்!
இப்படி எதுவுமே செய்யாமல் அழுத்தமாக இருக்கிறாளே!
நான் ஒரு ஆண் பிள்ளை. வலிய வந்து நாயகியான இவளை சமாதானம் செய்து பேச வந்தால், விருப்பம் இருந்தும் என்னை பார்க்க மாட்டேன் என்று பிடிவாதமாக நிற்கிறாளே!
(நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா) என்று பெருமாள் தன் முயற்சியில் தோல்வியுற்று சிறிது வெட்கப்பட்டவர் போல நின்று, (நாணினார் போல் இறையே)
பிறகு மீண்டும் (பின்னும்) இவளை எப்படியாவது சமாதானம் செய்தே தீர வேண்டும் என்று தீர்மானித்து மேலும் முயற்சிக்கிறார்.
"இப்போது நைவளத்தோடு, சேர்த்து கூடவே அழகான வார்த்தைகளையும் சேர்த்து பெருமாள் வேணுகானம் செய்ய (நயங்கள் செய்வளவில்), திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி தன் நிலையை தானே சொல்கிறாள்.
"இதுவரை இவரை பார்க்க கூடாது என்று பல்லை கடித்து கொண்டு இருந்த பரகாலநாயகியான நான், என்னை அறியாமலேயே என் மனது கண்ணனிடத்தில் ஓடி, என் கண்களும் அவரை நோக்கி ஓட (என் மனமும் கண்ணும் ஓடி), ஒரு காலை ஊன்றி, மற்றோரு காலை மாற்றி வைத்து இருக்கும் அந்த திருவடிக்கீழ் என் அங்கம் படும்படியாக சேவித்தேன். (எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய)
திருவடி ஸ்பரிசித்த ஆனந்தத்தால் தலை நிமிர்ந்தேன்..
'முன்பு பெருமாள் கிடைக்கவில்லையே!' என்ற விரகத்தில் உடல் மெலிந்து என் கை வளையல் தானாக அவிழ்ந்தது,
இப்பொழுது, இவரை ஸ்பரிசித்த ஆனந்தத்தால் உடல் பூரிப்பு அடைந்து புஷ்டியாகி விட, நான் அணிந்திருந்த வலையலும், இடுப்பில் அணிந்திருக்கும் ஒட்டியானமும் இப்பொழுது உடல் பூரிப்பினால் உடைந்து தானாக நழுவி விழுந்தது (இப்பால் கைவளையும் மேகலையும் காணேன்)
இப்படி பூரிப்போடு தலை நிமிர்ந்து பார்த்த போது, அவருடைய இரண்டு காதுகளில் மகர குண்டலங்கள் அசைவதை பார்த்ததும் மனம் மயங்கி விட்டது.
உடனே பெருமாள் என்னிடமுள்ள பிரியத்தால், நான்கு கைகளாலும் என்னை தூக்கி விட்டார்.
ஒரு கையால் என் நெற்றியில் இருந்த வியர்வையை துடைத்து விட்டு, மறு கையால் என் மார்பை தடவி கொடுத்து, மற்றொரு கையால் அவிழ்ந்த கேசத்தை முடிந்து விட்டு, நான்காவது கையால் என்னை ஆசுவாசப்படுத்தி தூக்கி, அவர் எதிரே நிற்க வைத்து கொண்டார் (கண்டேன் கனம் மகர குழை இரண்டும் நான்கு தோளும்).
என்ன நடக்கிறது? என்று புரியாத மயக்கத்தில் இருந்து பரகால நாயகியாகிய நான்,
இது எந்த திவ்ய தேசம்? நாம் எங்கு இருக்கிறோம்? எந்த ஊர் பெருமாள் இவர்? என்று நினைத்து, அவரிடமே, 'என்னிடம் இத்தனை ப்ரியம் வைத்துள்ளீர்களே! உங்கள் கோவில் எவ்வளவு தூரம் இருக்கிறது?' (எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில்? என்றேற்கு) என்று கேட்க,
இந்த ஊர் நம் இருவருக்கும் சொந்த ஊர் ஆயிற்றே! இது தானே திருவாலி திருநகரி திவ்ய தேசம். (இது வன்றோ எழில் ஆலி, என்றார் தாமே) என்றார் பெருமாள்.
இப்படி வயலாலி மணவாளனுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள் பரகால நாயகி.