சந்தியாவந்தனத்தில், சூரியனுக்கும் ஆத்மாவாக (நமக்கும்) இருக்கும் பரமாத்மாவை பார்த்து, மாலையில் "இமம் மே வருண" என்று சொல்வோம்.
திருமங்கையாழ்வார்,
"அனலுருவாய் பெருமாள் இருக்கிறார்" என்று சொல்லி, பிறகு,
"வருண" என்ற வடசொல்லுக்கு ஈடாக "புனலுருவாய் பெருமாள் இருக்கிறார்" என்கிறார்.
அனல் உருவாய் - என்றால் "அக்னி போன்று பரமாத்மா இருக்கிறார்" என்று அர்த்தம்.
"தீ" எப்பொழுதுமே மேல் நோக்கியே செல்லும். மற்றவர்கள் தொட முடியாதபடி இருக்கும். தீக்கு அருகில் சென்றால் விழுங்கி விடும்.
அது போல,
பெருமாளும் தேவர்களுக்கெல்லாம் தேவனாக, அவரை எவரும் தொட முடியாதபடி உயர இருக்கிறார். பெருமாள் பக்கத்தில் சென்றால், அப்படியே விழுங்கி விடுவார்.
இப்படி யாருக்கும் எட்டாதபடி அனலுருவாய் இருக்கும் பெருமாள், புனலுருவாயும் இருக்கிறார்.
புனல் உருவாய் - என்றால் "தண்ணீர் போன்று பரமாத்மா இருக்கிறார்" என்று அர்த்தம்.
தண்ணீர் எப்பொழுதுமே கீழ் நோக்கியே செல்லும். மற்றவர்களுக்கு கிடைக்கும்படி நிலத்திற்கு தானே வரும்.
அது போல,
பெருமாள் நிஜத்தில் அனலுருவாய் எங்கோ உயரத்தில் இருந்தாலும், "தானே இறங்கி ராமனாக, கண்ணனாக மனிதனை போன்று அவதாரம் செய்து, கோவிலில் அரச்ச அவதாரம் செய்து, நம்முடன் சமமாக பழகி, தானே வலிய வந்து கிடைக்கிறார்" என்கிறார்.
மாலையில் "இமம் மே வருண..." என்று சொல்லுமிடத்தில், "புனலுருவாய்" என்ற சொல்லின் அர்த்தத்தை நினைத்து சொல்லும் போது, பெருமாள் எத்தனை கருணையோடு நாம் காணும்படியாக கோவிலில், நம் வீட்டில் விக்ரக ரூபமாக அவதரித்து நிற்கிறார் என்பது புரியும்.
"அனலுருவாய்" என்று சொல்லும் போது, பெருமாளின் பர-தத்துவம், கம்பீரம் வெளிப்படுகிறது.
"புனலுருவாய்" என்று சொல்லும் போது, பெருமாளின் கருணை வெளிப்படுகிறது.
"பெருமாள் தன்னையும் அவருடைய நாயகிகளோடு சேர்த்து கொண்டாரே!" என்று பேரின்பத்தில் பாடுகிறார்.
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை
அலைகடலை கடைந்து
அடைத்த அம்மான் தன்னை
குன்றாத வலி
அரக்கர் கோனை மாள
கொடுஞ்சிலைவாய்
சரம் துரந்து
குலம் களைந்து வென்றானை,
குன்றெடுத்த தோளினானை
விரி திரை நீர் விண்ணகரம் மருவி
நாளும் நின்றானை, தண்குடந்தை கிடந்த மாலை
நெடியானை அடிநாயேன் நினைந்திட்டேனே
- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)
அன்று, நீளா என்ற நப்பினைக்காக (கோபிகைக்கு) 7 காளையை அடக்கி, அவள் துயரத்தை போக்கிய தலைவனே!
(அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை)
மஹாலக்ஷ்மியை அடைவதற்காக அலை எறிகின்ற பாற்கடலை கடைந்தவரே !
(அலைகடலை கடைந்து)
சீதாதேவியை மீட்பதற்காக, இலங்கைக்கு பாலம் அமைத்து, செல்வத்தில், படை பலத்தில் குறைவில்லாத வலிமையான ராக்ஷஸ அதிபதி ராவணனை தன்னுடைய தீர்க்கமான கோதண்டத்தில், அம்புகளைத் தொடுத்துப் பிரயோகித்து அரக்கர் குலத்தையே நிர்மூலமாக்கி வெற்றி பெற்றவரே (அடைத்த அம்மான் தன்னை குன்றாத வலி அரக்கர் கோனை மாள கொடுஞ்சிலைவாய் சரம் துரந்து குலம் களைந்து வென்றானை)
கோபிகைகள் மேல் ஒரு தூரல் கூட விழ கூடாதென்று, கோவர்த்தன மலையையே தன் கையால் குடையாக எடுத்தவரே! (குன்றெடுத்த தோளினானை)
இப்படி நீங்கள் செய்த ஒவ்வொரு காரியத்தை கவனிக்கும் போது, நீங்கள் ஒவ்வொரு நாயகிக்கும் பரிந்து கொண்டு அவரகளுக்கு வேண்டிய ரக்ஷணத்தை செய்கிறீர்கள் என்று தெரிகிறதே!
'நானும் ஒரு நாயகி இருக்கிறேன்' என்று தெரிந்து கொண்டு, பரந்த அலைகளையுடைய பொய்கைகள் நிரம்பிய திருவிண்ணகரிலே, அந்த நாயகியில் என்னையும் ஒருவளாக சேர்த்து கொண்டு, ஸர்வோத்தமருமான ஒப்பிலியப்பனாக நிற்கிறாரே! குடந்தையில் ஆராவமுதனாக எனக்காக படுத்து இருக்கிறாரே!
நான் அல்பமானவள். 'என்னையெல்லாம்இப்படி மதிக்கிறாரே பெருமாள்' என்று நினைத்தேன். அந்த நினைவிலேயே பேரின்பம் பெற்றேன். (விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை, தண்குடந்தை கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட்டேனே)
திருநெடுந்தாண்டாகம் என்பது ஆச்சர்யமான பிரபந்தம். மிகவும் ரசமானது.
இப்படி 9 பாசுரங்கள் திருமங்கையாழ்வார் பரகால நாயகியாக ஆகி, பெருமாளை தன் இதயத்தில் பூட்டி விட்டார்.
இவர் எப்பொழுது வருவார்? என்று பல நாட்கள் விரகத்தில் இருக்கும் போது, ஒரு நாள் இப்படி என்னை பார்க்க வருவார்.
இவர் வந்ததுமே, விரகம் தீர்ந்து போய்விடும்., அவரிடம் சிரித்து பழகுவேன்.
உடனே மீண்டும் அழ விட்டு, எங்கோ போய் விடுகிறார்.
இன்று வரட்டும்.
ப்ரணய கலகம் செய்து, அழுது கொண்டே இருக்கலாம் என்று தீர்மானித்து இருக்கிறேன்" என்றாள்.
"இப்போது பெருமாள் கிடைக்காமல் அழுகிறேன்.
இவர் வந்தாலும், கூடவே இருக்காமல், மீண்டும் கிளம்பி சென்று விடுகிறார். எப்படி இருந்தாலும் நான் அழத்தானே போகிறேன்.
ஒரே ஒரு பெண்ணை மீட்பதற்காக, இலங்கைக்கு சென்று, ஊரையே அலற அடித்து, மதில் சுவற்றை சிதற அடித்து, அந்த ராவணனை கொன்று போட்டாரே! அந்த சீதையிடம் தான் அவருக்கு எத்தனை ப்ரியம்!! (தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாள சென்று)
அது போல,
பூலோகத்தை பலி சக்கரவர்த்தி பிடித்து விட, பூமி பிராட்டியை மீட்பதற்காக, பூமியோடு சேர்த்து ப்ரம்ம லோகம் வரை அடியெடுத்து வைத்து மீட்டாரே!
அந்த பூமி பிராட்டியிடம் எத்தனை ப்ரியம் இருந்தால், அப்படி த்ரிவிக்ரமனாய் அளந்திருப்பார். (உலக மூன்றினையும் திரிந்து)
பாரத யுத்தம் செய்ததே இவர் தான். 'சமாதானம் செய்கிறேன்' என்று தூது சென்று, யுத்தத்தை கிளப்பி விட்டதே இவர் தான்
பார்த்தசாரதியாக இருந்து தேரோட்டி, பாரத யுத்தம் செய்ததே இவர் தான் (திரிந்து ஓர் தேரால் மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த)
ஏன் இப்படி இருக்கிறார்?
அவரால் ஒன்றுமே செய்யாமல், ஆதிசேஷன் மேல் படுத்து கொண்டு இருக்கவே முடியாது.
ராமாயண யுத்தம் அப்படி போட்டாரல்லவா! அதோடு நிறுத்தி கொள்ள மாட்டாரோ?
யுகத்துக்கு யுகம் சண்டை போடுகிறார்.
இப்படி தானாகவே பல வேலைகளை தானே இழுத்து கொண்டு, என்னிடம் 'நேரம் ஒதுக்க முடியவில்லை' என்கிறார்.
இன்று வரட்டும். பார்த்து கொள்கிறேன்.
அவர் எப்பொழுது வருவார்? எப்பொழுது வருவார்? என்று எதிர்பார்த்து தாபத்தோடு காத்து இருந்தால், திடீரென்று வருவார்.
இவர் வந்துவிட்டார் என்றதுமே, இருந்த தாபம் தீர்ந்து போவதால், சிரித்து பேசுவேன்.
"சரி தான். இவள் நாம் இல்லாமல் போனாலும், சாதாரணமாக தான் இருக்கிறாள் போல" என்று நினைத்து கொண்டு, மீண்டும் ஏதோ ஒரு வேலையை தானே ஏற்படுத்திக்கொண்டு கிளம்பி விடுகிறார்.
மீண்டும் அழுகை தான் எனக்கு மிச்சமாகிறது.
ஒரு நாள் சிரிப்பு, பிறகு மீண்டும் ஆயிரம் நாளும் அழுது கொண்டே தானே இருக்கிறேன்!
சரியான முரடன் இவர் !
இப்பொழுது இவர் வரும்போது, நான் சிரித்து கொண்டு பேச போவதில்லை.
இவரிடம் முகம் கொடுக்காமல், நான் இவர் இல்லாமல் எப்படி அழுதேன் என்று காட்டத்தான் போகிறேன். (புலலி எய்தி)
தோழீ!! நான் அழும்போது, என்னிடம் பரிவு காட்டி பேச அருகில் வருவார்.
மலைபோன்ற, பெரிய யானை போன்ற பெருமானை, இனி தப்பிக்க முடியாதபடி, என் மார்போடு கட்டி பூட்டி கொண்டு விடுவேன். (வரை உருவின் மா களிற்றை தோழீ, என்றன் பொன் இலங்கு முலை குவட்டில் பூட்டிக் கொண்டு போகாமை வல்லேனாய்)
இப்படி சுதந்திரமாக இருக்க விடாமல் இவரை செய்கிறேனே!' என்று அப்பொழுதும் அழுவேன்.
முன்பு விரகத்தில், 'பெருமாள் கிடைக்கவில்லையே' என்று அழுதேன்.
இப்பொழுது 'பெருமாள் என் நெஞ்சில் இருக்கிறார்' என்பதால் கிடைக்கும் பேரின்பத்தில் அழுவேன்" (என்னில் அங்கமெல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே) என்று பரகாலநாயகி, பெருமாள் தன்னிடமே கிடைத்து விட்டதாக சொல்லி சமாதானம் அடைகிறாள்.
பெருமாள் தன் இதயத்தில் நிரந்தரமாக தங்கி விட்டார் என்று நிலையில், திருமங்கையாழ்வார், பாசுரத்தை முடிக்கிறார்.
பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.
செங்கால மடநாராய்
இன்றே சென்று
திருக்கண்ணபுரம் புக்கு
என் செங்கண் மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்
இது ஒப்பது எமக்கு இன்பமில்லை
நாளும் பைங்கான மீதெல்லாம் உனதேயாக
பழனமீன் கவர்ந்து உண்ண தருவன்
தந்தால் இங்கே வந்து இனிதிருந்து
உன் பெடையும் நீயும் இரு நிலத்தில்
இனிது இன்பம் எய்தலாமே
- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)
கொக்கில் ஒரு இனம் 'நாரை'. வெண்மையாக இருக்கும் நாரைக்கு கால் சிவப்பாக இருக்கும்.
ஒருநாள், மோகமுள்ள பக்ஷி ஒன்று (மடநாராய்) திருக்கண்ணபுரம் நோக்கி பறந்து சென்று கொண்டிருப்பதை பார்க்கிறாள் பரகால நாயகி.
அது உணவுக்காக கடலை நோக்கி தான் செல்கிறது என்று அறிந்து கொண்டாள்.
"திருக்கண்ணபுரத்தில் ஒப்பிலியப்பன் நிற்கிறாரே! அவரிடம் தனக்காக தூது செல்ல, அந்த நாரையை அழைக்கலாமா?" என்று நினைத்தாள் பரகால நாயகி.
"சிவந்த கால்களையுடைய நாரையே! நீ கடலுக்கு சென்று மீன் தேட வேண்டாம்.
நீ அதற்கு பதில் இன்றே திருக்கண்ணபுரம் செல்லேன்!
அங்கு மீன் போன்ற கண்களை உடைய சவுரிராஜன் இருக்கிறார். என் சித்தத்தை மயக்கிய செங்கண் மாலுக்கு, என் காதலருக்கு, என் துணைவருக்கு, 'இப்படிஒருவள் உங்களுக்காக தவித்து, காத்து இருக்கிறாள்' என்று சொல்வாயாகில், அதை விட ஒரு பேருதவி ஒன்றும் இருக்க முடியாது. அதை விட பேரின்பம் ஒன்று கிடையாது எனக்கு" (செங்கால மடநாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு என் செங்கண் மாலுக்கு என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பமில்லை) என்றாள் பரகாலநாயகி
"நான் எனக்கு உணவான மீனை சாப்பிடுவதற்காக கடலுக்கு செல்லும் போது, உனக்கு தூது செல்லுமாறு அழைக்கிறாயே! உனக்கு உதவி செய்தாலும், அங்கே எனக்கு யார் சாப்பிட கொடுப்பார்கள்?" என்று நாரை கேட்க,
"கவலையே படாதே! நீ அவரிடம் என்னை பற்றி சொல்லிவிட்டு, திரும்பி இங்கே வா. பெருமாளிடம் தூது சென்ற நீ, எனக்கு உறவினன் ஆகிறாய்!
உனக்காக சோலையாக இருக்கும் என்னுடைய தோட்டம் முழுக்க திறந்து விடுகிறேன். தோட்டம் முழுவதும் உனக்குத்தான். உனக்கு விருந்து வைக்கிறேன்.
அதில் உள்ள பெரிய குளத்தில் துள்ளி விளையாடும் மீன்களை நானே உனக்கு உண்ண தருவேன். உங்களை விரட்டவே மாட்டேன் (நாளும் பைங்கான மீதெல்லாம் உனதேயாக பழனமீன் கவர்ந்து உண்ண தருவன்)
நீ மட்டுமல்ல, உன்னோடு உன் காதலியான பெண் நாரையையும் அழைத்து கொண்டு வா.
இந்த பெரிய தோட்டத்திலேயே நீங்கள் இருவரும் விளையாடி மகிழலாம்.
(தந்தால் இங்கே வந்து இனிதிருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே)
என்று நாரையிடம் தூது விடுகிறாள் பரகாலநாயகி.
திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி, நீயும் உன் பேடையும் என்று நாரையையும், முந்தைய பாசுரத்தில் இதே போல வண்டையும் சொல்கிறார்.
ஆசாரியனையும், அவருடைய தர்ம பத்னியையும் சொல்கிறார் என்பது தத்துவம்.
ஆசாரியன் தான், நமக்காக 'பெருமாளிடம் சென்று சிபாரிசு செய்கிறார்'.
அப்படி பேருதவி செய்த குருவுக்கு, நாம் என்ன பதில் செய்து விட முடியும்?
தனக்காக தூது சென்று, பெருமாளிடம் நம்மை பற்றி சொன்ன நாரைக்கு தன் இடத்தையே கொடுத்து, அவருக்கு பிடித்த உணவை கொடுப்பது போல, குருவுக்கும், அவர் தர்ம பத்னிக்கும் சேவை செய்யவேண்டும் என்பதே தாத்பரியம்.
பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.
தேன் மருவு பொழில் இடத்து மலர்ந்த போது
தேன் அதனை வாய்மடுத்து
உன் பெடையும் நீயும்,
பூமருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த
அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,
ஆமருவி நிரை மேய்த்த அமரர் கோமான்
அணியழுந்தூர் நின்றானுக்கு
இன்றே சென்று,
நீ மருவி
அஞ்சாதே நின்று
ஓர் மாது நின் நயந்தாள்
என்று இறையே இயம்பி காணே
- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையழ்வார்)
பரகால நாயகியை ஆட்கொண்ட பிறகு, 'ஸ்ரீரங்கம் செல்கிறேன்' என்று சொல்லி விட்டு சென்று விட்டார் பெருமாள்.
பரகால நாயகி, 'வருவாரா?' என்று காத்து கிடக்கிறாள்.
வெகு நாட்கள் ஆகி விட்டது. 'என்னை மறந்து விட்டாரா?' என்று நினைக்கிறாள்.
தன் காதலனோடு சேர முடியாமல் தவிக்கும் பரகால நாயகி, ஒருசமயம் நந்தவனத்தில் (பொழில் இடத்து) தேன் நிரம்பி இருக்கும் (தேன் மருவு) மலர்ந்த பூக்களில் உள்ள (மலர்ந்த போது) தேனை வாய் முழுவதும் எடுத்து ஒரு ஆண் வண்டு தன் காதலியியுடன் சேர்ந்து குடிப்பதை பார்க்கிறாள் (தேன் அதனை வாய்மடுத்து).
தன் காதலனோடு சேர்ந்து தேன் குடித்து, அந்த பூவின் இதழ்களிலேயே படுத்து விளையாடும், ஆண் வண்டையும், அதன் காதலியையும் பார்த்து, தனக்காக தூது செல்லுமாறு கேட்கிறாள் பரகால நாயகி.
"பூக்களின் இதழில் உன் பேடையோடு விளையாடி, புள்ளிகள் ஏற்பட்டு இருக்கும் வண்டே!
எம்பெருமாள் இங்கு இல்லை. எம்பெருமானிடம் என்னை பற்றி சொல்லேன்!
என்னை அவருடன் சேர்க்க, எனக்காக தூது செல்வாயா?
நீ எனக்கு இந்த உதவி செய்தால், உன்னுடைய ஆறு சிறு கால்களிலும் விழுந்து தொழுவேன் (உன் பெடையும் நீயும், பூமருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை)
மேலும்,
திருவரங்கம் செல்கிறேன்! என்று சொல்லி சென்றவர். தேவாதிதேவனான அவர், இப்பொழுது (மாயவரம் அருகில்) தேரழுந்தூர் என்ற திவ்ய தேசத்தில் இருக்கிறார் என்று கேள்வி படுகிறேன்.' என்றாள்.
அந்த ஜோடி வண்டு, "உன்னையும் அவரோடு சேர்த்து வைக்கிறேன். அவர் அடையாளம் சொல்லேன்" என்று கேட்க,
"முப்பத்து முக்கோடி தேவர்களையும் மேய்க்கும் என் நாதன்,
அந்த பசு மாடுகளை எல்லாம் கூட்டிக்கொண்டு, காவிரி தீரத்தில் வந்து மாடு மேய்க்க ஆசைப்பட்டு, அங்கு சென்று இருப்பதாக கேள்விப்படுகிறேன்" என்றாள் பரகால நாயகி.
'மாடு மேய்ப்பதில் ஏன் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது?' என்று வண்டு கேட்க,
"தேவர்களுக்கு அம்ருதம் கிடைக்க கூர்ம அவதாரம் செய்து முதுகை கொடுத்தார். அசுரர்கள் அம்ருதத்தை தூக்கி சென்று விட, அவர்களுக்காக மோகினி வேடம் போட்டு அம்ருதத்தை வாங்கி தந்தார்.
"தன்னிடம் என்ன கிடைக்கும் என்று பார்த்தார்களே தவிர, தனக்கு பெருமாள் தான் வேண்டும் என்று கேட்பவர்கள் குறைச்சல் தானே என்று நினைத்த இவர், தேவர்களை மேய்த்ததோடு, மாடுகளையும் மேய்க்கலாம் என்று வர, இந்த மாடுகளோ, தனக்கு போட்ட புல்லையும் உண்ணாமல், பெருமாள் திருவடியே போதுமென்று, இவர் பாதத்தையே நக்கி கொடுக்க, "பெருமாள் தான் வேண்டும்" என்று நினைக்கும் மாட்டின் மீது இவருக்கு பிரியம் ஏற்பட்டுவிட்டது' என்றாள்.
'அவர் அடையாளம் என்ன?' என்று வண்டு கேட்க,
"பசுமாட்டை தனக்கு பின்னால் நிறுத்தி கொண்டு, அதன் மீது ஒரு கையை போட்டு கட்டிக்கொண்டு (ஆமருவி), மற்றொரு கையில் சுருள் கோல் வைத்து கொண்டு, திருவழுந்தூர் என்ற தெரழுந்தூரில் நின்று கொண்டிருப்பார் (நிரை மேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக்கு). அது தான் அவரது அடையாளம்" என்றாள் பரகால நாயகி.
"சரி. இரண்டு நாள் கழித்து செல்லவா?" என்று வண்டு கேட்க,
"நீ சொல்வதால் போகிறேன். ஆனால் பயமாக இருக்கிறதே!" என்று சொல்ல,
"நீ அஞ்சவே வேண்டாம். அவர் மிகவும் சாந்த ஸ்வபாவம் உடையவர் (நீ மருவி அஞ்சாதே). தைரியமாக அவரை ஒரு சுற்று சுற்றிவிட்டு, 'உங்களை எதிர்பார்த்து ஒரு மாது காத்து கொண்டு இருக்கிறாளே!" என்று மட்டும் சொல்லி விட்டு, அவர் முகத்தை கவனித்து விட்டு வா" (நின்று ஓர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பி காணே) என்று சொன்னாள்,
"மாது என்று மட்டும் சொன்னால் போதுமா? அவரிடம், பரகால நாயகி என்று உங்கள் பெயரை சொல்லவேண்டாமா?" என்று கேட்க,
"எனக்கு தரிசனம் கொடுத்து, என்னை கட்டிக்கொண்டு, என்னை அழ விட்டு சென்றார். அவரிடம் "ஒரு மாது" என்று சொன்னாலேயே என்னை பற்றி தான் நினைவுக்கு வரும்" என்று சொல்ல,
"அவரின் முகத்தை கவனி என்று சொன்னாயே?" என்று வண்டு கேட்க,
"நீ என்னை பற்றி சொன்னதுமே
அவளா! என்று என்னை அலட்சியமாக நினைக்கிறாரா? அல்லது
யாரை சொல்கிறாய் என்று தெரியவில்லையே! என்று நினைக்கிறாரா?
அல்லது
அப்படியா! என்று கருணையோடு கேட்கிறாரா?
என்று கவனித்து எனக்கு சொல்.
அவர் அப்படியா! என்று என்னை பற்றி நினைவோடு கேட்டால், அவர் என் மீது கருணை வைத்து இருக்கிறார் என்று அறிந்து கொள்வேன்" என்றாள் பரகால நாயகி.